Total Pageviews

Wednesday, February 01, 2017

Kartchner Caverns - கார்ட்ச்னர் குகைகள்

31.01.17



இரண்டு  நாட்களுக்கு முன்பு கார்ட்ச்னர் குகைகளுக்குச் (KARTCHNER CAVERNS) சென்றிருந்தோம். அமெரிக்காவில் அரிசோனா மானிலத்தில் தலைநகரமான ஃபீனிக்ஸிலிருந்து சுமார் 150 மைல் தொலைவில் இந்த குகைகள் அமைந்திருக்கின்றன.

1974 நவம்பரில் கேரி டெனென் மற்றும் ரேண்டி டஃப்ட்ஸ் என்ற இருவர் வெட்ஸ்டோன் மலைப் பகுதிகளில் அமைந்திருந்த சுண்ணாம்புக்கல் மலைகளை ஆராய்ந்து கொண்டிருந்த போது ஒரு சிறிய துவாரத்தின் அடியே மலையில் ஒரு பெரிய பிளவு இருப்பதைக் கண்டார்கள். அந்த துவாரத்தின் வழியே சூடான  ஈரப்பசையோடு கூடிய காற்று வெளியேறிக்கொண்டிருந்தது. அங்கே ஒரு நிலத்தடி குகைப் பாதை இருக்க வேண்டும் என்று யூகித்துக்கொண்டார்கள். பல மணி நேரங்கள் அந்த குறுகிய நிலத்தடிப் பாதை வழியே ஊர்ந்தும், தவழ்ந்தும் சென்ற போது பழமையான பழுதுபடாத பரந்த ஒரு குகை இருப்பதை கண்டறிந்தார்கள்.  நான்கு ஆண்டுகள் தொடர்ந்து இந்தக் குகைகளை ரகசியமாக ஆராய்ந்த பின்னரே அந்த குகை அமைந்திருந்த மலையின் சொந்தக்காரரிடம் தங்கள் கண்டுபிடிப்பைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். இது போன்ற ஒரு பொக்கிஷத்தைப் நீண்ட காலம் பாதுகாக்க வேண்டுமென்றால் அந்த குகையை அரசாங்கம் எடுத்துக் கொண்டால்தான் முடியும் என்று தீர்மானித்து அரிசோனா மானில அரசு அதிகாரிகளிடம் பல முறை ரகசியமாகப் பேசினர். பின்னர் குகைகளை அரசு எடுத்து நடத்தும் திட்டம் பற்றி மானில ஆளுனருக்குத் தெரிவித்தனர். ஆளுனருக்கும் விருப்பம்தான். ஆனால், அவருக்கோ பல அரசியல் பிரச்சினைகள். அந்த ஆளுனர் நீக்கப்பட்ட பிறகு 1988-ல் மானிலத்தின் இரண்டு மக்கள் சபைகளும் ஒன்று கூடி ஒரே நாளில் அந்த குகையை அரசே எடுத்து நடத்தும் தீர்மானத்தை நிறைவேற்றினர். இருந்தும் நில சொந்தக்காரர்களான கார்ட்ச்னர் குடும்பத்துக்குச் சேர வேண்டிய நிலத்துக்கான விலையை கொடுப்பதற்குத் தேவையான நிதி வசதி அரசிடம் இல்லாததால் ஏப்ரல் 1988-ல் அந்த நிலம் குத்தகைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டது. நில சொந்தக்காரர்களுக்குச் சேர வேண்டிய தொகை கொஞ்சம் கொஞ்சமாக இந்த குகைகளைச் சுற்றிப் பார்க்க வரும் பயணிகளிடமிருந்து அனுமதிச் சீட்டு வசூலிலிருந்து கொடுப்பதாக ஒப்பந்தம் செய்து கொண்டனர். 10 ஆண்டுகளுக்கும் மேலான தீவிரமான திட்டமிடுதலுக்கும், கடுமையான உட்பணிகளுக்கும் பின்னர் பல சட்ட ரீதியான சிக்கல்களையும் எதிர்ப்புகளையும் கடந்து 28 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் நவம்பர் 1999-ல் குகைகளின் மேற்பகுதிகளுக்கு திறப்பு  விழா நடைபெற்றது. குகைகளின் ஆழ்ந்த உட்பகுதிகள் பின்னால் 2003-ல் திறந்து வைக்கபட்டன.  

மலைப்பகுதிகளில் அங்கங்கே ஓடும் நீரோடைகள் காற்றிலிருந்து கரியமில வாயுவை உட்கொண்டு சுமந்து செல்லும்பொழுது அமிலத்தன்மை உடைய தண்ணீராக மாறுகிறது. இந்த நீர் நிலத்தடியே கிடக்கும் சுண்ணாம்புக்கல் பாறைகள் மீது மோதி உராய்ந்து உராய்ந்து அவைகளை கரைக்கின்றன. ரசாயனக் கிரியைகளால் ஸ்டலக்டைட், ஸ்டலக்மைட் என்ற ரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி அங்கங்கே சேர்த்துவிடுகின்றன. இந்த சேமிப்புகள்தான் SPELEOTHEM என்றழைக்கப்படும் மிக அழகான உருவமைப்புகளை உண்டாக்குகின்றன. உறைந்த நீர் அப்படியே கூரையிலிருந்து தொங்குவது போல அங்கங்கே இந்த SPELEOTHEM தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு சில இடங்களில் ஒரு பெரிய ராட்சஸ் மரம் போன்ற உருவம் தாங்கி நிற்கின்றன. ஸ்டலக்டைட், மற்றும் ஸ்டலக்மைட் அடங்கிய SPELEOTHEM-ன் உருவமைப்புகள் மலையிடுக்களில் நீர் ஓடுவதையும், கசிவதையும், உறைவதையும், சொட்டுவதையும், தேங்குவதையும் பொறுத்து அமைகிறது. தொங்கிக் கொண்டிருக்கும் சில உருவமைப்புகள் ஒரு கண்ணாடிக் குழாய்க்குள்  நீர் தேங்கியிருப்பது போலவும்,  வேறு ஒரு சில உறைந்த, ஒளி புக முடியாத பனிக் கட்டிகள் போலவும் தோற்றமளிக்கின்றன.

இயற்கையின் தயாரிப்புகளான இந்த உருவமைப்புகள் அழகானவை. பிரமிப்பை ஏற்படுத்துபவை.  குகைக்குள் சில இடங்கள் பார்ப்பதற்கு திகிலையும் ஏற்படுத்துகின்றன. குகைக்குள்ளே புகைப்படம் எடுப்பதற்கு அனுமதியில்லை. அதனால் இணையதளத்தில் கிடைத்த படத்தை இங்கே பார்க்கலாம்.

எளிதில் உடையக்கூடிய, இன்னும் வளர்ந்து கொண்டிருக்கின்ற இந்த SPELEOTHEM உருவமைப்புகள் இப்பொழுது காணப்படும் நிலைக்கு வருவதற்கு பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் எடுத்திருக்கும் என்பதைக் கேட்பதற்கு பிரமிப்பாக இருக்கிறது. மேலும், இந்த உருவமைப்புகள் எங்கேனும் உடைந்து விட்டால் மேலும் வளர்ச்சியடையாது என்பதினால் இவைகளுக்கு பலத்த பாதுகாப்பு கொடுத்திருக்கின்றனர். பார்வையாளர்களைக் கூட்டிச் செல்ல 5-அடி அகலத்தில் நடை பாதை, இரண்டு பக்கமும் தடுப்புக் கம்பிகள், மிகக் குறைவான மின் விளக்குகள், பல அடுக்குகளில் இரும்புத் தடுப்புக் கதவுகள், குகைகளைப் பற்றி விளக்கம் கொடுக்க முன்னேயும் பின்னேயும் வன அதிகாரிகள்…இப்படிப் பல.

ராட்சஸ மரம் போல வளர்ந்து நிற்கும் SPELEOTHEM உருவங்கள் அடங்கிய பகுதிகளில் LIGHT AND SOUND SHOW-க்களில் செய்வது போல மின் விளக்குகளையும் பின்னணி இசையையும் அமைத்துக் காட்டி நம்மை பிரமிப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறார்கள்.

கார்ட்ச்னர் குகைகளைப் போல சிறிய அளவில் இன்னொரு குகையை MOUNT RUSHMORE என்ற இடத்தில் பார்த்திருக்கிறோம். எல்லாம் STALACLITE, STALAGMITE-களின் தொங்கும் தோட்டங்கள். அமெரிக்காவின் கென்டக்கி மானிலத்திலுள்ள உலகளவிலேயே மிகப் பெரிய MAMMOTH CAVES-ஐயும் பார்த்திருக்கிறேன். இயற்கையையும் அதன் அழகையும் பேணிக் காப்பதில் அமெரிக்கர்கள் வல்லுனர்கள். மிகச் சிறப்பாகப் பாதுகாக்கிறார்கள். அதே நேரத்தில் பார்வையாளர்களின் பாதுகாப்புக்காகவும் பல ஏற்பாடுகள் செய்கிறார்கள்.

உலகளவில் இது போன்ற பல குகைகள் பிரபலமானவை என்று படித்திருக்கிறேன்.

இந்தியாவிலும் இது போன்ற குகைகள் இருக்கின்றன. முக்கியமாக ஆந்திராவில் அரக்குப் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் போரா குகைகள் கார்ட்ச்னர் குகைகளைப் போல அமைந்திருக்கின்றன. போய்ப் பார்த்ததில்லை. கண்டிப்பாக போய்ப் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். இமயமலையில் காஷ்மீரில் இருக்கும் அமர்நாத் சிவலிங்கமும் இது போன்ற ஒரு பனி சூழ்ந்த ஸ்டல்கமைட்டின் உருவமைப்புதான் என்று கேள்விப்படுகிறேன். இந்துக்களுக்கு ஒரு முக்கியமான வழிபாட்டுத்தலமாக இருந்து வருகிறது. இன்னொன்று ஜம்முவுக்கு அருகே சிவகோரி என்ற இடத்தில் அமைந்திருக்கிற குகை. இதுவும் ஒரு வழிபாட்டுத் தலமாக அமைந்திருக்கிறது. சிவகோரியிலிருக்கும் இந்த குகையிலிருந்து அமர்நாத்துக்கு செல்வதற்கு மிகக் குறுகிய ஒரு குகைப் பாதை இருக்கிறது. அது இப்பொழுது மூடப்பட்டிருக்கிறது. மூன்று வருடங்கங்களுக்கு முன்பு சிவகோரி குகையைப் பார்த்திருக்கிறேன். அதே போல ஜம்முவில் வைஷ்ணவதேவி கோவிலுக்குச் செல்லும் வழியில் அர்த்குவாரி என்ற இடத்தில் தேவியின் கருவறையாக பாவித்து வரும் ஒரு சிறிய நிலத்தடி குகை இருக்கிறது. இந்த குகையில் நுழைந்து செல்வது ஒரு விசித்திரமான அனுபவம். தரையில் படுத்துக் கொண்டும், ஊர்ந்து கொண்டும், தவழ்ந்து கொண்டும்தான் இந்த குகைக்குள் செல்ல முடியும். உள்ளே நுழைந்த பிறகு ஒரு சில நேரம் ‘அடாடா, எப்படி குகையின் அடுத்த வாயிலுக்குப் போய்ச் சேர்வோம்’ என்ற பயமும் ஏற்படுகிறது. வைஷ்ணவதேவி கோவிலே ஒரு குகைக்குள்தான் அமைந்திருக்கிறது. முன்னாட்களில் தேவியை தரிசனம் செய்வதற்கு தவழ்ந்துதான் செல்லவேண்டும். இப்பொழுது அப்படியில்லை. நடந்தே செல்லலாம். குகையைப் பெரிதாக்கியிருக்கிறார்கள்.

இவற்றைத் தவிர பல குகைக் கோவில்கள் இந்தியாவில் பிரபலமானவை என்று உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். இவற்றில் பெரும்பாலானவை மனிதர்களால் குடையப்பட்டு அமைக்கப்பட்டவை.

அமெரிக்காவில் இருப்பது போன்ற பெரிய அளவு குகைகள் இந்தியாவில் இருப்பதாக எனக்குத் தகவல் இல்லை. உங்களுக்குத் தெரிந்திருந்தால் சொல்லுங்களேன்…  


No comments:

Post a Comment