வாரா வாரம் எழுத வேண்டும் என்று தொடங்கியதை
என்னால் கடைபிடிக்க முடியவில்லை. தவிர்க்க
முடியாத காரணங்களால் நேரம் ஒதுக்க முடியவில்லை.
ஆனால், இந்த வாரம் மூன்று விஷயங்களைப்
பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. நேரத்தை இழுத்துப் பிடித்து துவக்கியிருக்கிறேன்.
முதலாவது…
உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க வேண்டும்
என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமானது என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது. ஆனால்,
இன்றைய சூழ்நிலையில் பொதுவாக பலருக்கு இது முடிவதில்லை என்பதுதான் உண்மை.
காலங்கள் மாறி விட்டன. வாழ்க்கைத் தேவைகள்
அதிகரித்து விட்டன. பல வீடுகளில் கணவன், மனைவி இரண்டு பேரும் வேலைக்குப் போய் பணம்
சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். வசதிகள் பெருகி விட்டன. வசதிகளை பெருக்கிக்
கொண்ட பிறகு பின்வாங்க முடிவதில்லை. காலை எழுந்ததிலிருந்து இரவு படுக்கப் போகும் வரை
சுறுசுறுப்பாக இயங்க வேண்டியிருக்கிறது. கலாச்சாரம், சமுகம், உறவுகள் எல்லாம் ரொம்பவும்
சிக்கலாகி விட்டன. தொழில் நுட்பங்கள் வளர்ந்து நம்மை இயந்திரத்தனமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன.
நம்மால் நமது உடம்பை கவனித்துக்கொள்ள சரியாக நேரம் ஒதுக்க முடியவில்லை.
இன்னொரு புறம், வியாதிகள் பெருகிவிட்டன.
மருத்துவர்களுக்கு இன்னமும் பல விஷயங்களைப் பற்றிய விவரம் மிகக் குறைவாகவேத் தெரிந்திருக்கிறது.
The medical professionals know less and less about more and more things. உடல் உபாதையைப்
பற்றிய ஒரு முழுமையான அணுகுமுறை மருத்துவர்களிடம் இல்லை. ஒவ்வொன்றுக்கு ஒரு நிபுணரைப்
பார்க்க வேண்டியிருக்கிறது. எதற்குமே பரிசோதனைக் கூடத்திலிருந்து வரும் ரிப்போர்ட்டுகளையே
அதிகமாக நம்புகின்றனர்.
மற்றொரு புறம், நாம் உண்ணும் உணவின் நச்சுத்தன்மை
என்றைக்குமில்லாத அளவு பெருகி விட்டது. நாம் சுவாசிக்கும் காற்றும், குடிக்கும் தண்ணீரும் அப்படியே. சரியான
நேரத்தில் சாப்பிட முடியவில்லை. சாப்பிடும் பொழுது கூட நிம்மதியாக உணவை மென்று, ரசித்துத்
தின்ன முடியவில்லை. மனதில் பல கவலைகள். சுமைகள். எண்ண ஓட்டங்கள். சிறு குழந்தைகளுக்கு
அவர்கள் கூட உட்கார்ந்திருந்து கதை சொல்லி, பாட்டுப் பாடி, நயமாகப் பேசி உணவை உண்ண
வைப்பதற்கு வீட்டில் பெற்றோர்களுக்கு நேரமில்லை.
ஒரு ஐ-பேட், அல்லது ஐ-ஃபோனைக் கையில் கொடுத்து விடுகிறார்கள். அல்லது டீ. வியை
ஆன் செய்து விடுகிறார்கள். உணவு உள்ளே போவது கூடத் தெரியாமல் அந்தக் குழந்தைகள் சாப்பிடுகின்றனர்.
பல சிறு குழந்தைகளுக்கு மாலையில் விளையாடுவதற்கு
நேரமில்லை. விசேஷ வகுப்புகள். டியூஷன் வகுப்புகள். அப்படி எதுவுமில்லையென்றால் சினிமாவும்,
வீடியோ விளையாட்டுக்களும் ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
வயோதிகர்களுக்கு, பணியிலிருந்து ஓய்வு
பெற்ற பின்பு நிம்மதியாகக் குழந்தைகளுடன் இருந்தோம் என்பதில்லை. எல்லாம் தனிக் குடித்தனமாகி
விட்டன. God bless the nuclear families. அவ்வப்பொழுது சேர்ந்து இருந்தாலும் அடுப்படியில்
செய்கிற வேலையைத் தவிர அல்லது கைக் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கு மேல் வேறு எதிலும்
தலையிட முடிவதில்லை. முதியவர்களுக்கு முன்னம் இருந்த தனித்துவம், அடையாளம் எதுவுமில்லாமல்
மனச் சுமையுடன் இன்டெர்னெட் பார்ப்பதிலும், வீணான தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதிலும்
பொழுதைக் கழிக்கிறார்கள்.
இன்னும் எவ்வளவோ சொல்லலாம்…
மேலே குறிப்பிட்ட ஒவ்வொன்றும் ஒருவருடைய
உடல் நலத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கின்றன. இதை யாரும் மறுக்க முடியாது.
இப்படிப்பட்ட சூழ்னிலையில் சில, பல நூறாண்டுகளுக்கு
முன்பு கையாளப்பட்ட வைத்திய முறைகள் இன்று சரிப்பட்டு வருமா என்று எனக்கு ஓரு சந்தேகம்
தொடர்ந்து இருக்கிறது. இன்டெர்னெட், யூடியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் இப்படி பல இடங்களிலும்
பல இயற்கை வைத்திய முறைகளைப் பற்றி விரிவாக எழுதுகிறார்கள். இவை எந்த அளவு ஒருவருக்கு
பலனளிக்கும் என்பது எனக்கு புரிவதில்லை. இயற்கையோடு இன்று இணைந்து வாழ்வது என்பது மிகக்
கடினம். எங்கும் நகர்மயமாக்கப்பட்டு விட்ட பிறகும், இயந்திரமயமாக்கப்பட்டு விட்ட பிறகும்,
நச்சுத் தன்மையை பரவ விட்ட பிறகும், வியாபாரமயமாக்கப்பட்டு விட்ட பிறகும் இந்த இயற்கை
வைத்தியம் எப்படி செயல்படும் என்பது எனக்குப் புரியவில்லை.
உடலும், மனமும் ஒரு நச்சுக்கூடமாகி விட்டது.
இயற்கை வைத்தியம் நல்லதுதான் பயன் தரக்
கூடியதுதான் என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது. எல்லா சத்துக்களும் கலந்த உணவை சாப்பிட வேண்டியதுதான்.
சரியான நேரத்தில், வேளா வேளைக்கு விரும்பி சாப்பிட வேண்டியதுதான். இயற்கையாக உள்ளூரிலேயே
விளையும் பொருட்களை சாப்பிட வேண்டியதுதான்.
ஆனால், நம்மால் முடிகிறதா?
நம்மில் பலருக்கும் உடற்பயிற்ச்சிக்கு
நேரம் ஒதுக்க முடிவதில்லை. உணவை மட்டும் பார்த்து பார்த்து சாப்பிட்டால் போதுமா? உடற்
பயிற்சி வேண்டாமா?
உண்மையில் சொல்லப் போனால் நமது உடம்புக்குத்
தேவையான எல்லா மருந்துகளையும், ரசாயனப் பொருட்களையும் நமது உடம்பே தயார் செய்து கொள்ளக்கூடியதாகத்தான்
உடம்பு படைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை தெரிந்த மற்றும் தெரியாத உடல் உபாதைகளுக்கான
மாற்றை நமது உடம்பே பார்த்துக்கொள்ளும். நமது உடலே ஒரு பெரிய ரசாயனத் தயாரிப்புக் கூடம்.
இது இயற்கை விதி.
ஆனால், நமது உடம்பே நச்சுக்கூடமான பிறகு
அதுதான் என்ன செய்ய முடியும்? உபாதைகள் தானாக நீங்கும் வரை பொறுத்துக் கொள்ளும் மன
நிலை எத்தனை பேருக்கு இருக்கிறது? எத்தனை பேரால் வலியைப் பொறுத்துக்கொள்ள முடிகிறது?
உடல் வியாதியை விட மனோ வியாதி பெரியதாக இருக்கிறதே?
இதையெல்லாம்
எழுதுவதால் எனக்கு இயற்கை வைத்தியத்தில் நம்பிக்கையில்லை என்று யாரும் எண்ண வேண்டாம்.
இன்டெர்னெட்டில், ஃபேஸ்புக்கில், வரும் பல வைத்திய முறைகளை முழு மனதோடு என்னுடைய ஒரு
சில உபாதைகளுக்கு முயற்சி செய்து பார்த்து வருகிறேன். ஆனாலும், (பலரைப் போல) சூழ்னிலைக்
கைதியான எனக்கு முழுப்பலன் இது வரை கிடைத்ததில்லை.
ஒன்று நிச்சயம். ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி
செய்ய நான் தவறுவதில்லை. விரும்பிய உணவை விரும்பி தேவையான அளவு சாப்பிட்டு வருகிறேன்.
எந்தக் கட்டுப்பாடும் எனக்கு நானே விதித்துக் கொண்டதில்லை. இருந்த ஒன்றிரண்டு கெட்ட
பழக்கங்களை என்றோ விட்டு விட்டேன். எதைச் செய்தாலும் விரும்பி செய்கிறேன். அவ்வப்பொழுது
மனம் துவண்டாலும் இறைவன் அருளால் மீண்டு வருகிறேன். தைரியத்தை கைவிடுவதில்லை. நம்பிக்கையை
கைவிடுவதில்லை. நடப்பதெல்லாம் ஏதோ ஒர் நன்மைக்கே என்று விட்டு விடுகிறேன்.
இனி, இரண்டாவது விஷயத்துக்கு வருவோம்…
*****
No comments:
Post a Comment