08.05.17 நாட் குறிப்பு (இரண்டாம் பகுதி)
இரண்டாவது விஷயம்…கொஞ்சம் சர்ச்சைக்குரியதுதான்…ஆனாலும்
மனதில் பட்டதையே பேசியும், எழுதியும் பழகி விட்டதால் இந்த இரண்டாவது விஷயத்தையும் சொல்லி
விடுகிறேன்.
‘தப்பு பண்ணினா சாமி கண்ணைக் குத்தும்.’
பல வீடுகளில் பெற்றோர்கள், பெரியவர்கள் சிறு குழந்தைகளுக்கு கூறும் ஒரு வாக்கியம்.
சாமி, அதாவது கடவுள், பயப்பட வேண்டியவர்,
தவறு செய்தால் தண்டனை கொடுப்பார், ஒரு மேலதிகாரி போல நம்மை 24 மணி நேரமும் நம்மை கவனித்துக்
கொண்டிருக்கிறார், அவரை திருப்திப் படுத்தவில்லையென்றால் தண்டனைதான் என்ற பயம் … கடவுளைப்
பற்றி இப்படி பல எதிர்மறைக் கருத்துக்கள் சிறு வயதிலேயே ஏற்பட இது ஒரு காரணமாகிறது
என்று தோன்றுகிறது. கடவுள் மீது பக்திக்குப் பதிலாக அதிகமாக பயமே மேலோங்கி நிற்க காரணமாகிறது.
பக்தியே பயத்தினால் கூட ஏற்படுகிறது எனலாம்.
ஒரு சிறு குழந்தைக்கு உண்மையான அறிவு
வளர, வளர – அப்படி வளரும் ஒரு சூழ்னிலை இருந்தால் – கடவுள் மீதுள்ள பயம் நீங்குகிறது.
பக்தி வளர்கிறது.
ஒரு குழந்தையை வெறும் பயத்தின் அடிப்படையிலேயே
வளர்ப்பது சரிதானா? ‘சாமி கண்ணைக் குத்தும்’ என்பதற்கு உண்மையான விளக்கத்தை ஒரு சிறு
குழந்தைக்குச் சொல்லிக் கொடுத்து புரிய வைக்க முடியுமா? நமது புராணக் கதைகளில் கடவுள்
பக்தியால் ஏற்படும் நல்ல பலன்களை விளக்கும் கதைகளுக்கும் மேலாக அவரை பயப்பட வேண்டிய
ஒரு நபராகச் சித்தரிக்கும் கதைகள் ஏராளம். இந்தக் கதைகளை சிறுவர், சிறுமியர்களுக்குச்
சொல்லும் பொழுது நமக்கே பல இடங்களில் நெருடுகிறது. அதுவும், இந்தக் காலத்துக் குழந்தைகள்
கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி மாளாது. முந்தைய காலத்தில், பெற்றோர்கள் ஒன்று
சொன்னால் குழந்தைகள் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையே பொதுவாக அதிகம் இருந்திருக்க வேண்டும்.
ஆனால், இன்றோ யூடியூபிலோ, கூகுள் தேடலிலோ போய் உடனேயே பார்க்கச் சொல்கிறார்கள். பல ஐந்து வயதுக் குழந்தைகளுக்கு பெற்றோரின் தொலைபேசி
எண்ணோ, வீட்டு விலாசமோ தெரிவதில்லை. ஆனால், பெற்றோரின் ஐபேட், கம்ப்யூட்டர் இவற்றின்
‘லாகின்’ பாஸ்வேர்டு நிச்சயமாகத் தெரிந்திருக்கிறது. செல்ஃபோனை எப்படி இயக்குவது என்று
தெரிந்திருக்கிறது. ஆங்கிலத்தில் எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியாத குழந்தைகள் கூட
யூடியூபில் தனக்கு வேண்டிய வீடியோக்களைத் தேடக் கற்றுக் கொண்டிருக்கின்றனர்.
மனிதன் ஒரு காரியத்தை செய்வதற்கு இரண்டு
முக்கிய உந்துகோல்கள் இருப்பதாக மனோதத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.
முதலாவது, ஒரு காரியத்தை செய்வதால் வரும்
நல்ல பலன்களை எதிர்பார்த்து அதை அனுபவிப்பதாக கற்பனை செய்துகொள்வதால் ஏற்படும் மகிழ்ச்சி.
இரண்டாவது ஒரு காரியத்தை செய்வதால் ஏற்படும்
தீய பலன்கள் தன்னை எப்படி பாதிக்கும் என்பதைப் பற்றிய மனதில் ஏற்படும் ஒரு பயம்.
பொதுவாக, தீய பலன்களால் ஏற்படக்கூடும்
வலியின் காரணமாகவே பலரும் இன்னமும் தீய காரியங்களைச் செய்யப் அதிகமாக பயப்படுகிறார்கள். நல்ல காரியங்களால் ஏற்படும் நன்மைகள் நம்மை அதிகமாக
உந்துவதில்லை. இன்னமும் பலர் கொடியவர்களாக மாறாமல் இருப்பதற்கு பயமே அதிக காரணம். யாரும்
கவனிக்க மாட்டார்கள் என்று தோன்றினால் பலர் சிறிய பெரிய தவறுகளைச் செய்வதற்கு தயங்க
மாட்டார்கள். இந்த நிலைக்கு ஒரு முக்கியக் காரணம் சிறு வயதிலிருந்தே நமக்கு பயத்தைக்
கொடுத்து வளர்த்ததுதான் என்று நம்புகிறேன்.
மாறாக, பயத்துக்குப் பதிலாக கடவுள் பக்தியால்
ஏற்படும் நல்ல பலன்களை கதைகளாகச் சொல்லியும், அன்பு, பக்தி இவற்றால் ஏற்படும் நன்மைகளையும்
கதைகளாக விளக்கிச் சொல்லியும் வளர்த்தால் அவர்கள் பெரியவர்களாகும் பொழுது பயத்தின்
அடிப்படையில் ஒரு காரியத்தைச் செய்யாமல் நல்ல பலன்களால் ஏற்படப் போகும் மகிழ்ச்சியின்
அடிப்படையில் காரியத்தைச் செய்யத் துவங்கும் வாய்ப்புகள் அதிகம். பெற்றொர்களும் ஒரு
முன் மாதிரியாக இருக்க வேண்டும். இது மிக மிக அவசியம். அவர்களுக்கு இதற்கு நேரமும்,
பொறுமையும் இருக்கின்றதா? உபதேசிப்பதற்கு தன்னலமில்லாத நல்ல குரு வேண்டும். கிடைப்பார்களா?
இன்றைக்கு, பல நடுத்தரப் பெற்றொர்கள்
குழந்தைகளுக்கு புராணக் கதைகளைப் பற்றி அதிகமாகச் சொல்வதில்லை என்று நினைக்கிறேன்.
‘சாமி கண்ணைக் குத்தும்,’ போன்ற டயலாக்குகளும் ரொம்பக் கம்மி என்றும் நினைக்கிறேன்.
முன்பு, கோவிலுக்கு செல்லுதல், பூஜை, ஆராதனை, தியானம் செய்தல், கடவுளைக் கும்பிடுதல்,
எல்லாக் காரியங்களிலும், நிகழ்ச்சிகளிலும் கடவுளையும் ஒரு பங்காகக் கருதி செய்தல்,
போன்றவற்றை விளையாட்டுப் போல சிறு வயதில் செய்து வந்திருக்கிறோம். இன்று அவை ஒரு விளையாட்டாகவே
(பொழுது போக்காகவே) மாறி விட்டன என்று தோன்றுகிறது.
இந்த மாற்றம் நல்லதுக்குத்தானா என்று
இன்று தெரியவில்லை. காலம்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், இந்த மாற்றங்களைத் தவிர்க்கவும்
முடியாது.
கடைசி விஷயம்….
*****
No comments:
Post a Comment