Pages

Sunday, May 14, 2017

14.05.17 இந்த வார நாட் குறிப்பு

14.05.17 இந்த வார நாட் குறிப்பு

ஒவ்வொரு வாரமும் எனக்கேற்படும் அனுபவங்களைப் பற்றி என்னுடைய கருத்துக்களையும் பதிய வேண்டும் என்றுதான் இந்தப் பகுதியை ஆரம்பித்தேன். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒவ்வொரு வாரமும் எழுதுவதற்கு என்னால் நேரம் ஒதுக்க முடிவதில்லை.

இதன் பின்னணியைப் பற்றி ஒரு சில வரிகள்:

சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முழு நேரகுழந்தை கவனிப்பு.’ (Baby Sitting). அது போக கிடைக்கும் சிறிது நேரத்தில் என்னுடைய கவனத்தை எனக்குப் பிடித்த ஒரு சில விஷயங்களில் சிதறவிட்டு விடுகிறேன். கீ போர்ட் வாசிக்கக் கற்றுக் கொள்வது, புத்தகங்கள் வாசிப்பது, கதை, கட்டுரை எழுதுவது, இந்திய பங்குச் சந்தையில் வாங்கி விற்பது, உடற் பயிற்சி.. இப்படியாக பல மரம் பார்த்தவனாக இருப்பதால் ஒரு மரத்தையும் முழுமையாக வெட்ட முடியாமல் நிற்கிறேன்.

ஒரு குறு நாவல் தமிழில் எழுதி முடித்திருக்கிறேன். இன்னமும் வரைவு வடிவத்தில்தான் இருக்கிறது. ஒரு முறையாவது சரி பார்த்த பிறகு நண்பர்களுக்கு அந்த நாவலை அறிமுகப்படுத்தலாம் என்று எண்ணம்.

47 ஆண்டுகளுக்கு பிறகு நான் கல்லூரியில் படித்த கெமிஸ்ட்ரியை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன். எடுத்துக் கொண்ட தலைப்பு: “அணுவுக்குள்ளே” (Inside the Atom). Quantum Mechanics இப்பவும் எனக்குப் புரியவில்லை. அணுவைப் பற்றி நடு நிலைப் பள்ளி மாணவர்களுக்காக ஒரு புத்தகம் ஆங்கிலத்தில் எழுதலாமா என்றும் எண்ணம்.

பவர் பாண்டி படம் பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது. ஆர்ப்பாட்டம் அதிகமில்லாத மனதைத் தொடும் படம். ஒரு நல்ல படத்தைக் கொடுத்ததற்கு தனுஷுக்கு வாழ்த்துக்கள்.

கடந்த வார இறுதியில் தென்னிந்திய நொறுக்குத் தீனிகள் வாங்க வேண்டும் என்று அருகாமையிலிருக்கும் (சுமார் ஐந்தரை கி.மீ தூரம்) இந்தியன் ஸ்டோர்ஸுக்கு சைக்கிள் மிதித்து சென்று வந்த பிறகு முதுகுத் தண்டின் கீழ் புறம் பிடித்துக் கொண்டதில் இரண்டு நாள் முழு நேர ஓய்வு. நான் வாங்கி வந்த தின் பண்டங்களுக்காக டாக்டருக்கு ஐம்பது டாலர்கள் தண்டம் கட்டும் படியாகி விட்டது. என்ன செய்வது நாக்கைக் கட்டுப் படுத்த முடியவில்லை.
சென்ற வாரம் The Fourth Industrial Revolution என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரைக்கு பலர் பாராட்டு தெரிவித்திருப்பது எழுத்தாளன் என்ற முறையில் திருப்தி. சந்தோஷம்.

கடந்த வாரம் படித்த செய்திகளில் என்னை ஈர்த்தவை சில.

முதலாவது,

செய்தி: Uttar Pradesh government considering 'no school bag' Saturdays in schools
உத்திரப் பிரதேசத்தில் பள்ளிகளில் சனிக் கிழமையன்று புத்தகச் சுமையை பள்ளிக்குத் தூக்கிப் போக வேண்டிய அவசியமில்லாத ஒரு முறையை அறிமுகப் படுத்த இருக்கிறார்களாம். நல்லதுதான். பல மெட்ரிக் பள்ளிகளில் வாரம் ஒரு நாள் co-curricular activities-க்கு ஒதுக்கியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அன்று, வழக்கமான பாடங்களைத் தவிர்த்து இசை, பாட்டு, நடனம், யோகா, கராத்தே, மற்ற விளையாட்டுக்கள் போன்றவற்றில் மாணாக்கர்களை ஈடுபடுத்துகிறார்கள். அரசுப் பள்ளிகளிலும் இந்த முறை இருக்கிறதா என்று தெரியவில்லை. இன்றைய மாணவர்களுக்கு, சிறிய வகுப்புகளிலிருந்தே critical thinking, analytical ability, communication skill, interpersonal skill, language skill, creative thinking போன்ற திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து. அதே போல சிறு வயதிலிருந்தே இன்டெர்னெட்டிலிருந்து தகவல்கள் சேகரித்து அதை ஒரு சிறிய presentation –ஆகக் கொடுக்கப் பழக்க வேண்டும். தான் கற்றுக் கொண்ட விஷயங்களைப் பற்றி எடுத்துச் சொல்ல பழக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு சொந்த முனைப்பு வளரும்.

இரண்டாவது,
செய்தி: Now, each block to get generic med store
ஒவ்வொரு கிராம வட்டாரத்திலும் ஜெனரிக் மருந்துக் கடைகளை மத்திய அரசு திறக்க உத்தேசித்திருக்கிறது. ஒரு புதிய மருந்தை ஆராய்ந்து கண்டு பிடித்து, அதை பரிசோதனைக்குள்ளாக்கி, அரசாங்க அங்கீகாரம் பெற்று சந்தைக்கு கொண்டு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகின்றன. பல  நூறு கோடி டாலர் கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு மருந்து தயாரிக்கும் கம்பெனி இவ்வளவு செலவு செய்து ஒரு மருந்தைக் கொண்டுவந்த பின்பு செலவு செய்த பணத்தையும் அதன் மேல் தனக்கு வேண்டிய லாபத்தையும் சம்பாதிக்காமல் என்ன செய்யும்? அதில் தவறு எப்படிக் காண முடியும்? இருந்தாலும், லட்சக்கணக்கான மக்கள் அந்த மருந்தை பயன்படுத்தும் பொழுது முதலீடு செய்த பணத்தையும் லாபத்தையும் நிச்சயமாக ஒரு சில ஆண்டுகளில் மீட்டு விடலாம். அதன் பிறகு எல்லாமே லாபம்தான். அப்படிப்பட்ட சமயத்திலாவது மருந்து விலையைக் குறைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதில் ஒவ்வொரு கம்பெனியும் அதே ஃபார்முலாவைப் பயன்படுத்தி வெவ்வேறு பெயர்களில் மார்க்கெட்டிங் செய்யும் பொழுது நிறைய லாபம் அடைய முயற்சிக்கிறார்கள். ஜெனரிக்கான மருந்துகளை விற்றால் அவ்வளவு லாபம் கிடைக்காது. பொது மக்களுக்காக வட்டாரம் தோறும் ஒரு ஜெனரிக் மருந்துக் கடையை ஆரம்பிக்கும் முயற்சி வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்றே தோன்றுகிறது. ஆனால், அரசே வியாபாரம் செய்யத் துவங்கினால் உருப்படாது.

அடுத்தது,
செய்தி: தமிழக மின்சார வாரியத்துக்கு மத்திய ஊரக மின்மயமாக்கல் கழகம் ரூ.85 ஆயிரம் கோடி நிதி உதவி அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்
தடங்கலில்லாமல் எல்லா இடங்களிலும் மின்சார வசதி கிடைக்க வேண்டும். மின்சாரம் இல்லாமல் இன்றைக்கு எதுவுமே இயங்க முடியாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நிலவிய மின் கட்டுப்பாடு, மின் தடை வரலாறு காணாத அளவு இருந்தது. பலர் கடும் தொல்லைக்கு ஆளாகினர். புதிய தொழில்கள் வேறு மானிலங்களுக்குச் சென்று விட்டன. தொழிலதிபர்கள் தமிழ் நாட்டைத் தவிர்ப்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. எப்பொழுதும் மத்திய அரசாங்கத்துடன் மோதல் போக்கையே கடைபிடித்து வந்ததால் தமிழ் நாட்டுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மத்திய அரசின் உதய் திட்டத்தில் பல மானிலங்கள் சேர்ந்த பின்னும் தமிழ்நாடு முரண்டு பண்ணியது. சமீபத்தில் தான் சேர்ந்து கொண்டது. வரும் காலத்திலாவது தமிழ் நாட்டில் மின் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க வேண்டும். 85000 கோடி ரூபாய் கடன் எப்படி உதவப் போகிறது என்று பார்ப்போம்.

அடுத்ததாக
செய்தி: அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்..க்கு நிகராக புதிய பாடத் திட்டம் கே..செங்கோட்டையன் பேட்டி
அமைச்சரின் ஒப்புதல் படி இது வரை தமிழகத்தில் பாடத் திட்டங்கள் சி.பி.எஸ். பாடத் திட்டத்துக்கு நிகராக இருந்ததில்லை என்பதை தெளிவாக்குகிறது. அதாவது சி.பி.எஸ்.இயின் உயர்ந்த தரம் தமிழகத்தில் இல்லை என்பதை நேரடியாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இனியாவது சரி செய்தால் நல்லதுதான். இனி மேலாவது மாணவர்களின் முன்னேற்றத்துக்கு வழி செய்யும்.

இறுதியாக..
செய்தி: The lowdown on the directive to RBI on bad loans
பல வங்கிக் கடன்கள் வாராக் கடன்களாக மாறி வாராக் கடன்கள் அபாயகரமாக ஏறிக்கொண்டே இருக்கின்றன. 1990-களில் என்று ஞாபகம். இது போன்றே ஒரு நிலை நீடித்தது. வாராக் கடன்களால் பல வங்கிகள் திண்டாடிக் கொண்டிருந்தன. இந்த  வாராக் கடன்களால் பல வங்கி அதிகாரிகள் சி.பி.ஐ, கோர்ட், பணி நீக்கம், தண்டனை, ஜெயில் என்று அவதிப் பட்டிருக்கிறார்கள். கடன் கொடுப்பதற்கு அங்கீகாரம் கொடுக்கும் நியாயமான அதிகாரிகளுக்கு கொடுக்கும் கடன் திரும்ப வருமா, வராதா என்று என்றுமே ஒரு பதட்டம்தான்

Past performance is not a guarantee for future என்று மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கு விளம்பரத்தில் போடுகிறார்கள். அது போலத் தானே வங்கிக் கடன்களும். ஓரு மனிதரின், அல்லது ஒரு நிறுவனத்தின் பழைய ரெக்கார்டுகளைப் பார்த்து எதிர்காலத்தைப் பற்றி ஒரு கணிப்பும் செய்துதான் கடன் கொடுக்கிறார்கள். ஆனால், கணிப்பு தவறாகி விட்டால் அந்த அதிகாரியின் பாடு திண்டாட்டம்தான். கடன் கொடுப்பதில் பல அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பது எல்லோருக்கும் தெரியும்

இந்த வாராக் கடன்களைப் பற்றி நடுவில் கொஞ்ச காலம் அதிகமாக யாரும் பேசவில்லை. எல்லா வங்கிகளும் வாராக் கடன்களை கணிசமாக குறைத்து விட்டதாக பறைசாற்றிக் கொண்டார்கள். இப்பொழுது மீண்டும் அது பற்றிய பரபரப்பு தலை தூக்கியிருக்கிறது. ஐந்து லட்சம் ரூபாய் கடன் கொடுக்க அனுமதி கொடுக்கும் பொழுதே அப்பொழுதெல்லாம் கை நடுங்கும். இன்றைக்கு பல நூறு கோடி ரூபாய் கடன்கள் சர்வ சாதாரணமாகப் பேசப்படுகிறது

அன்றைக்கு consortium என்ற முறை இருந்தது. ஒரு நிறுவனத்துக்கு பல வங்கிகள் இணைந்து கடன் கொடுக்கும் பொழுது எல்லோரும் கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள். இந்த நல்ல வழி முறை இடையில் கைவிடப்பட்டது. ஒரு நிறுவனம் எத்தனை வங்கிகளிடம் வேண்டுமானாலும் கடன் கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை வந்தது. வங்கிகளின் வழிமுறைகளை  நான் மறந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இன்றைக்கு நடைமுறையில் என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. ஏதோ நல்லது நடந்தால் சரிதான்.

இறுதியாக..

அட, இன்னுமா முடிக்கவில்லை.


ஆமாம். ஒரே ஒரு கனவைப் பற்றி எழுத வேண்டியிருக்கிறது. அதைத் தனியாக இன்னும் ஒரு சில நாட்களில் எழுதுகிறேன்.

No comments:

Post a Comment