Pages

Sunday, May 21, 2017

19.05.17 கடந்த வார நாட்குறிப்பு: ஓசியில் படிக்க வேண்டிய ஒரு கற்பனை பத்திரிகைக் குறிப்பு

19.05.17 கடந்த வார நாட்குறிப்பு: ஓசியில் படிக்க வேண்டிய ஒரு கற்பனை பத்திரிகைக் குறிப்பு

என்னுடைய முந்தைய பதிவில் வேறொரு முக்கியமான விஷயம் பற்றி தனியாக எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தேன். அது இதுதான். துக்ளக் பத்திரிகையில் முன்னெல்லாம் அடிக்கடி வந்து கொண்டிருந்த ‘ஓசியில் படிக்க வேண்டிய ஒரே (கற்பனைப்) பத்திரிகை’யில் வரும் செய்தி வகையைச் சேர்ந்தது இது.

மோடி அவர்கள் தனது முக்கிய மெய்காப்பாளரை தனியாக அழைக்கிறார்.

“எனக்கு ஒரு இடத்துக்குப் போக வேண்டும். இந்த விஷயம் உன்னைத் தவிர யாருக்கும் தெரியக்கூடாது. நீயே வண்டியை ஓட்ட வேண்டும்.”

“ஐயா, நீங்க எது சொன்னாலும்  நான் செய்யத் தயார். ஆனா, இப்படி தனியா பாதுகாப்பு இல்லாமல் போய் ஏதேனும் தப்புத் தண்டா நடந்ததுன்னா…,” மெய்காப்பாளருகே கால்கள் நடுங்கின.

உடனே ஒரு தனது லெட்டர் பேடை எடுத்து மடமடவென்று மோடி எழுதுகிறார். “இந்தா, இதை வச்சுக்கோ. எது நடந்தாலும் அதற்கு  நான் மட்டுமே பொறுப்புன்னு அதிலே எழுதியிருக்கிறேன்,” என்று கூறி அந்த கடிதத்தைக் கொடுக்கிறார்.

“நடு இரவுக்குப் பிறகு கிளம்பணும். உன்னுடைய காரை ரெடி பண்ணி வச்சுக்க…”

“என்னுடையா காரா,” மெய்காப்பாளார் தயங்குகிறார். அவரால் வேறு எதுவும் பேச முடியவில்லை.

நடு இரவு தாண்டி விட்டது. மெய்காப்பாளர் தன் காரை மோடி அவர்களின் வீட்டிற்கு பின் வாசலில் தயார் நிலையில் வைத்து காத்திருக்கிறார். சிறிது நேரத்தில் மோடி அவர்கள் கீழே இறங்கி வருகிறார். அவருடன் அமித் ஷாவும் வருகிறார். மெய்காப்பாளருக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. ஏதோ ஒரு பெரிய விபத்து நடக்கப் போகிறது என்பது போல ஒரு நடுக்கம்.

வண்டி டில்லியைத் தாண்டி வெளியே ஒதுக்குப் புற ஒரு கிராமத்தில் ஒரு பண்ணை வீடு முன்னே போய் நிற்கிறது. அங்கே இன்னொரு பெரிய கார் ஏற்கெனவே நின்று கொண்டிருக்கிறது. 

மோடியும் அமித் ஷாவும் காரை விட்டிறங்கி வீட்டுக்குள்ளே போகிறார்கள்.
வீட்டினுள்ளே சோனியா காந்தி அவர்களும், ராகுல் காந்தி அவர்களும் மோடிக்காக காத்திருக்கிறார்கள். எல்லோரும் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிக் கொள்கிறார்கள்.

“தனியாக சந்திக்கணும்னு உங்ககிட்டேர்ந்து ஃபோன் வந்தவுடன் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டோம்,” என்றார் ராகுல் காந்தி.

“ஒரு முக்கியமான விஷயம். அதை நேரடிய பேசிடலாம்னு நினைச்சேன்,” என்றார் மோடி. சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்துவிட்டு அமித் ஷாவுக்கு கண் சாடையால் ஏதோ சொல்கிறார்.

“சரி, நேரே விஷயத்துக்கு வந்து விடுகிறேன் … இந்த மானிலக் கட்சிகள், ஜாதிக் கட்சிகள், சமூகக் கட்சிகள், சுயேச்சைகளுடைய தொந்திரவு தாங்க முடியலை. அவங்களோட தினப்படி ப்ளாக்மெயில் தாங்க முடியலை. அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதைப் பத்திதான்…,” என்றார் அமித் ஷா.

“உங்க பிரச்சினை எவ்வளவோ தேவலை. யாரோ ஒருத்தர்தான் மிரட்டிக்கிட்டிருக்காரு. நாங்க அந்த வலியை ஒரு பத்து வருஷமா எப்படி தாங்கிக்கிட்டு தினம் செத்திருக்கோம் தெரியுமா? பாவம் சிங் சார். அந்தக் கட்சிங்களால எங்களுக்கு வெறும் கெட்ட பெயர்தான். எல்லாத்துலேயும் ஊழல். பொறுத்துக்கறதைத் தவிர வேற ஒண்ணும் செய்ய முடியலை,” என்றார் ராகுல்.

சோனியா அமைதியாக, ஆனால், கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார். மோடி அதிரடியாக ஏதோ செய்யப் போகிறார் என்பது மட்டும் நிச்சயமாக அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

“மானிலக் கட்சிகள், ஜாதிக் கட்சிகள், சுயேச்சைகள் எல்லாரையும் ஒழிச்சுக் கட்டிடணும்னு முடிவுக்கு வந்திருக்கிறோம், நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எங்களுக்குத் தெரியணும்,” என்றார் அமித் ஷா.

“எங்களுக்கும் ஆசைதான். ஆனா, அவங்கள்ளாம் இல்லாம எங்களுக்கு இப்பல்லாம் ஓட்டு விழறதில்லையே. அவங்களை நம்பித்தானே நாங்களே தேர்தல்ல இறங்கறோம். எங்க கட்சியை மட்டும் எடுத்துக்கிட்டா எங்களுக்கேளேயே பல கட்சிகள் எங்களை ஆட்டிப் படைக்கின்றன. நீங்க என்ன ஐடியா வச்சிருக்கீங்க,” என்றார் ராகுல்.

“சரி, வெளிப்படையாகவே பேசிடறேன். இப்ப இருக்கற பார்லிமெண்ட்டைக் கலைச்சிடறோம். எல்லா மானில அரசாங்கங்களையும் ஒரே நேரத்தில வீட்டுக்குப் போகச் சொல்லிடறோம். ஒரே ஒரு கையெழுத்து மட்டும் வாங்கிட்டா போறும்.”

ஒரு பெரிய அணுகுண்டைத் தூக்கிப் விட்டெறிஞ்ச மாதிரி சோனியாவுக்கும், ராகுலுக்கும் பூமி கீழே அதிர்ந்தது.

“அய்யய்யோ … எங்களுக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச பவரும் போயிடுமே … இப்ப தேர்தல் வந்தா … ஏற்கெனவே எங்க பாத்தாலும் ‘மோடி, மோடி’ன்னு பாட்டுப் பாடறாங்க …” என்று முதன் முதலாகப் பதறிப் பேசினார் சோனியா.

“அதுதான் இல்லை. இந்த ஒரு மூவிலே ஒரே நேரத்தில ரெண்டு மாங்காயைத் தட்டறோம்,” என்றார் அமித் ஷா.

“எப்படி?” என்றார் ராகுல்.

“இப்ப, மத்திய அரசாங்கத்தையும், எல்லா மானில அரசாங்கங்களையும் கலைச்சுட்டு எல்லா இடங்களுக்கும் உடனேயே தேர்தல் வைக்கப்போறோம்,”

“திரும்பவும் தேர்தலா? ஏற்கெனவே எங்க கஜானா காலியாகிக்கிட்டிருக்கு. மோடி வேற ஆயிரம், ஐனூறு ரூபாய் நோட்டையெல்லாம் செல்லாததாக்கி பல இடங்கள்லே ரெய்டு நடத்தி பதுக்கி வச்ச பணத்தையெல்லாம் முடக்கி வச்சிட்டாரு.”

“அதைப் பத்தி, நீங்க கவலைப் படவேண்டாம். தேர்தலுக்கு செலவையெல்லாம் நாங்க பாத்துக்கிறோம்,”

“நீங்களேவா….”

“அதாவது, அரசாங்கமே பாத்துக்கும்னு சொல்ல வர்றோம்,”

“ஓ … தேர்தல் நடத்திறதுலே எங்களுக்கென்ன லாபம்?”

“நாங்க என்ன பண்ணப் போறோம், வர்ற தேர்தல்ல தனியாகவே நிக்கப் போறோம். யாரு கூடவும் கூட்டணி கிடையாது. நீங்களும் அது மாதிரி தனியாகவே நிக்கணும்,”

“ஐயய்யோ, எதுக்கு இந்த விஷப் பரிட்சை?”

“தனித்தனியா நின்னா நம்ம ரெண்டு கட்சிக்கும் உண்மையான என்ன பலம் இருக்குன்னு தெரிஞ்சு போகும். நம்ம ரெண்டு கட்சியில யாருக்கு அதிக சீட் கிடைச்சிருக்கோ அவங்க ஆட்சி அமைக்கட்டும். நீங்க ஜெயிச்சுட்டீங்கன்னா ஆட்சி அமைக்கறதுக்கு நாங்க உங்களை சப்போர்ட் பண்றோம். நாங்க ஜெயிச்சா நீங்க எங்களை சப்போர்ட் பண்ணுங்க.”

“அப்ப, ஏகப்பட்ட ஜாதிக் கட்சிங்க, மானிலக் கட்சிங்க, சுயேச்சைங்க எல்லாம் என்னாகும்?”

“தேர்தல் வந்து ஆட்சி அமைச்ச உடனே ஒரு சட்டம் கொண்டு வந்து விடுவோம். ஒரு பத்து சதவிகிதமாவது ஓட்டு வாங்கலைன்னா அந்தக் கட்சியையெல்லாம் செல்லாதுன்னு … அதுகளை கலைச்சிடணும்னு.”

“ம்ம்,” அதற்கு மேல் இந்த விபரீத திட்டத்தின் விளைவுகளை ராகுலுக்கும் சோனியாவுக்கும் உடனே புரிந்துகொள்ள முடியவில்லை. ‘இதில என்ன விஷமம் இருக்குன்னு’ ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள்,

மீண்டும் அமித் ஷாவே சொல்கிறார்,”இதனால என்ன ஆகும்னா, மத்த கட்சிங்க எல்லாம் ஒண்ணு உங்க கட்சியோடையோ அல்லது எங்க கட்சியோடையோ இணைஞ்சுடுவாங்க. எப்படி நடந்தாலும் அதுக்கு நாங்க தயாரா இருக்கோம். எல்லாக் கட்சிகளும் உங்களோடையோ அல்லது எங்களோடையோ சேர்ந்ததுக்கப்புறம் யாருக்கு மெஜாரிட்டி இருக்கோ அவங்க ஆட்சி அமைக்கலாம்.  இதனோட முக்கிய விளைவு நாட்டில இந்தக் குட்டிக் குட்டிக் கட்சிகள்லாம் உங்களையும் எங்களையும் மிரட்டற வேலையெல்லாம் முடிஞ்சு போயிடும். யாருடைய தயவுமில்லாமல் நீங்களோ அல்லது நாங்களோ மாத்தி மாத்தி ஆட்சிக்கு வரலாம். உங்களுக்கும் இது நல்லதுதானே…ஒரு ஆட்சியில இருக்கிற ஓட்டைகளைக் காட்டி அடுத்த கட்சி பவருக்கு வந்திடலாம். ரெண்டு பேருக்கும் கொள்கைகள் என்னவோ ஒரே மாதிரிதானே இருக்கு. நாட்டில அதிக பட்சம் மூணு கட்சிதான் இருக்கும். உங்களுக்கும் நல்லதுதானே,”

“எங்கம்மா பிரதம மந்திரியாக முடியாதே?”

“ஏன் முடியாது. அதுக்கு நாங்க ஆட்சேபிக்க மாட்டோம். அவங்கதான் இந்திய அன்னையாகி எவ்வளவோ வருஷமாயிடுச்சே … அவங்க இப்ப அக்மார்க் அசல் இந்தியன்தானே?”

“அப்ப முன்ன சொன்னதெல்லாம்?”

“என்ன ராகுல் … உங்களுக்கு எல்லாமே விளக்கமாச் சொல்லணுமா … பாருங்க … உங்க ஆட்சில நீங்க கொண்டு வந்த எத்தனையோ சட்ட திட்டங்களை நாங்க ஏத்து நடத்தலையா? முன்னால அதையெல்லாம் நாங்க எதிர்த்தாலும், இப்ப அதையே நாங்க எங்களுடைய கொள்கையா வச்சுக்கலையா … அதை மாதிரிதானே?”

கொஞ்சம் யோசித்து விட்டு சோனியா அவர்கள் புன்முறுவலித்தார். முதன் முதலாக வாய் திறந்தார். “மோடிஜி, நீங்க எப்படி சூப்பர் திட்டம் போட்டு பிரதமர் ஆனீங்கன்னு இப்ப எனக்குப் புரியுது … என்ன ப்ரில்லியன்ட்  மூளை உங்களுக்கு … உங்ககிட்ட நான் நிறைய கத்துக்கறதுக்கு இருக்கு. உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்க ஐடியாவுக்கு எங்களுக்கு பரிபூர்ண சம்மதம்,” என்று ராகுலை கேட்காமலேயே அங்கே யார் தலைவர் என்பதை காட்டாமல் காட்டிக்கொண்டார் சோனியா.

‘ரொம்ப நன்றி. நீங்க இந்த ஐடியாவுக்கு சம்மதிப்பீங்கன்னு எனக்குத் தெரியும். இந்திய நாட்டுக்காக நீங்க என்னல்லாம் தியாகம் பண்ணியிருக்கீங்க. நீங்க நீடுழி வாழ்க,” என்றார் மோடி. இந்தப் பக்கம் யார் தலைவர் என்பது அமித் ஷாவுக்கு நன்றாகத் தெரியும்.


ட்ரிங், ட்ரிங் …………… அட சட் …………… சரியான நேரம் பார்த்து கனவு கலைந்து விட்டது.

1 comment: