26.09.17 என் பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி
என்
முகநூல் பக்கம் முழுவதும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் இன்று. நெருங்கிய நண்பர்கள் என்று மட்டுமில்லாமல் முகநூல்
நண்பர்களாக இருக்கும் நூற்றுக்கணக்கான நண்பர்களிடமிருந்தும் வாழ்த்துக்கள். இவர்களில்
பெரும்பாலானவர்களுடன் எனக்கு நேரடிப் பரிச்சியம் கிடையாது. இருந்தும் அத்தனை வாழ்த்துச்
செய்திகள்.
முகநூலில்
சேரும் வரை பொதுவாக என்னுடைய பிறந்த நாளைக் கூட பல முறை நான் மறந்து விடுவது உண்டு.
அதனால், நானும் பொதுவாக மற்றவர்களின் பிறந்த நாளுக்கு (அதற்கு மட்டுமென்று இல்லை, திருமண
ஆண்டு நிறைவு நாள் போன்ற மற்ற தினங்களுக்கும் சேர்த்து) வாழ்த்துச் சொல்ல மறந்து விடுவேன்.
என் மனைவியின் பிறந்த நாளுக்கே அவளாக என்னிடம் நினைவு படுத்தும் வர பல முறை மறந்திருக்கிறேன்.
இருந்தும் இத்தனை பிறந்த நாள் வாழ்த்துக்கள் வந்திருப்பது ஒரு வகையில் மனதுக்கு நிறைவு
கிடைக்கிறது. முகநூலில் இணைந்திருப்பதில் இது ஒரு நல்ல அனுபவம்.
எனக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த எல்லா
நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. தெரிவிக்காவிட்டாலும் என்னுடைய நட்பு வட்டத்தில் இருக்கும்
முகநூல் அன்பர்களுக்கும் என்னுடைய நன்றி.
வாழ்க்கையில்
சிறு பிராயத்திலிருந்து வயது ஏற ஏற நமது தனிமை கூடிக்கொண்டே இருக்கிறது. நட்பு வட்டம்
குறுகிக்கொண்டே இருக்கிறது. பல நேரங்களில் நமது வாழ்க்கையைத் தனியாகத்தான் நடத்திச்
செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்ற உணர்வும் வருகிறது. அறுபது வயது தாண்டிய
பிறகு பல நேரங்களில் தனிமை வாட்டுகிறது. எல்லோரும் சூழ்ந்திருந்தால் கூட ஒரு தனிமை
உணர்வு அவ்வப்பொழுது தாக்குகிறது. ஒரு நல்ல துணை நண்பர் இல்லையே என்ற ஒரு ஏக்கம் வருகிறது.
ஒரு
வகையில் முகநூல் இந்த ஏக்கத்தைக் குறைக்கிறது என்றே நினைக்கிறேன். அதனாலேயே பலர் முகநூலில் மிகவும் ஆழ்ந்து
இருக்கிறார்கள் என்றும் நினைக்கிறேன். இன்றைக்கு நானும் அப்படித்தான். என்னுடைய பொழுதுபோக்குக்கு
எங்கும் போக வேண்டிய தேவையில்லை. ஒரு நாளைக்கு மூன்று முறை முகநூல் பக்கம் வருகிறேன்.
பல முகநூல் நண்பர்கள் இடும் பதிவு படிப்பதற்கும், பார்ப்பதற்கும் சுவையாக இருக்கிறது.
சில சமயம் எனது சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கிறது. உடன்பட்டோ அல்லது மறுத்தோ கருத்துக்
கூறத் தூண்டுகிறது. கூடியவரை அரசியலைப் பற்றியக் கருத்துக்களைக் கூறுவதை தவிர்த்து
வருகிறேன்.
அதே
சமயம் முறையாக ஒரு எழுத்தாளனாக என்னை மாற்றிக்கொண்டு விட்ட பிறகு ஏதேனும் எழுதினால்
அதை உடனே எத்தனை பேர் படிக்கிறார்கள் என்ற ஆர்வமும் கூடுகிறது. நட்பு வட்டத்தில் தங்கள்
கருத்துக்களைச் சொன்னால் கொஞ்சம் திருப்தி ஏற்படுகிறது.
ஆனால்,
இன்று பலரும் எழுதத் தொடங்கி விட்டார்கள். அதுவும் முக்கியமாக முகநூலில் அல்லது வலையில்.
நன்றாகவே எழுதுகிறார்கள். இது இன்டெர்நெட்டினால்
வந்த பயன் எல்லாவற்றையும் முழுவதுமாகப் படிப்பதற்குத் தான் நேரம் கிடைப்பது கடினமாக
இருக்கிறது.
நான்
எழுதியவற்றுக்குக் கருத்துக்கள் தெரிவிக்கும் எல்லா முகநூல் நண்பர்களுக்கும் இந்தத்
தருணத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். தொடர்ந்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
நான் எழுதுவதோடு நீங்கள் ஒத்துப் போக வேண்டும் என்ற எந்த கட்டாயமுமில்லை. நான் எழுதுவது
உங்களுக்கு ரசிக்காவிட்டாலும் பரவாயில்லை. கண்டிப்பாக உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
அதுதான் என்னைப் போன்ற இளம் எழுத்தாளர்களை இன்னம் எழுத ஊக்குவிக்கிறது.
69-ஐ
இன்று கடந்த எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அன்புள்ளங்களுக்கு மீண்டும்
ஒரு முறை நன்றி சொல்லிக்கொள்கிறேன். இனி இருக்கும் காலம் வரை வாழ்க்கையைப் பயனுள்ளதாகச்
செலவிட இறைவனின் அருள் வேண்டி பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
வணக்கம்.
வாழ்த்துக்கள்.
இறுதியாக,
நான் ஆங்கிலத்தில் எழுதிய LONELY என்ற நூலைப்
படித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த நூலுக்கு நெருங்கிய ஒரு சில நண்பர்களிடமிருந்து
நல்ல ரிவியூ கிடைத்திருக்கிறது. இந்த நூல் www.pothi.com
என்ற வலையில் கிடைக்கிறது. அச்சு வடிவத்திலும் ஈ-புத்தகமாகவும் கிடைக்கிறது. படித்துப்
பார்த்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
https://pothi.com/pothi/book/ebook-t-n-neelakantan-lonely
https://pothi.com/pothi/book/t-n-neelakantan-m-sc-lonely
No comments:
Post a Comment