30.09.17 நவராத்திரியும் நானும்
நவராத்திரி
கொலுவில் மட்டும் என்றில்லை, பொதுவாக எந்த பூஜைகளிலும் முன்பெல்லாம் நான் அதிக ஈடுபாடு
காட்டியது கிடையாது. நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது எங்கள் வீட்டிலும் கொலு வைத்தது
உண்டு. எங்கள் அம்மாவுக்கு கொலு, பஜனை, பாட்டு, கச்சேரி இதிலெல்லாம் நிறைய ஆர்வம் உண்டு.
ஒரு காலக் கட்டத்தில் எங்கள் வீட்டில் கொலு வைப்பதும் நின்று போய் விட்டது. ஆனால்,
திருமணமான பின்பு என் வீட்டிலும் இதுவரை கொலு வைத்ததில்லை.
அடிக்கடி
மாற்றல் நடக்கும் வங்கி வேலையில் இருந்ததால் நவராத்திரி நேரத்தில் பல ஊர்களில் இருந்திருக்கிறோம்.
அசாம் கௌஹாத்தியில் இருந்த சமயம் பல துர்கா பூஜா பந்தல்களுக்குப் போய் வந்த ஞாபகம்
இருக்கிறது.
நவராத்திரி
பூஜையில் முழு ஈடுபாடு ஏற்பட்டது ஸ்ரீஅம்மா பகவானின் இயக்கத்தில் இருந்த சமயத்தில்தான்.
நவராத்திரிக்கு முன்பு அமாவாசையன்று பித்ரு
ப்ரீதி பூஜையோடு தொடங்கும். முதல் மூன்று நாட்களுக்கு துர்கா பூஜாவாகவும், இரண்டாவது
மூன்று நாட்களுக்கு லக்ஷ்மி பூஜாவாகவும், மூன்றாவது மூன்று நாட்களுக்கு சரஸ்வதி பூஜாவாகவும்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முக்கிய சங்கல்பத்தோடு
சிறப்பாக பூஜைகள் செய்து வந்தோம். பூஜைகளை ஒவ்வொரு குடும்பத்தினரும் தனித்தனியே, ஆனால்
கூட்டாக ஒரே இடத்தில் வைத்து, செய்வார்கள். வேதத்தின் ஒரு சில பகுதிகளையாவது இன்று
நான் தெரிந்து வைத்திருப்பதற்கு ஸ்ரீஅம்மா பகவானுடன் நாங்கள் கொண்ட தொடர்பின் பாதிப்பே
காரணம். அந்த நாட்களில் பூஜை முறைகளை ஓரளவு நன்றாகக் கற்றுக்கொண்டிருந்தேன்.
தென்காசியில்
நாங்கள் வசிக்கும் பகுதியில் பல வீடுகளில் கொலு வைப்பார்கள். வெற்றிலை பாக்கு வாங்கிக்
கொள்வதற்கு பல வீடுகளிலிருந்து என் மனைவிக்கு அழைப்பு வரும். கடந்த பத்து ஆண்டுகளில்,
என் நினைவு சரியாக இருந்தால், இரண்டே இரண்டு முறை மட்டும் கொலு வைத்திருந்த வீடுகளுக்குச்
சென்றிருக்கிறேன். ஒரு முறை கொலுவில் பாடியிருக்கிறேன். மற்றபடி என் மனைவி கொண்டு வரும்
சுண்டல்களை ரசித்து உண்டதைத் தவிர நான் தீவிரமாக நவராத்திரி பண்டிகையில் என்னை ஈடுபடுத்திக்கொண்டதில்லை.
ஆனால்,
இசையில் ஈடுபாடு இருந்ததால், நவராத்திரி சமயத்தில் மூன்று முறை தென்காசியில் பல மாணவ,
மாணவிகளை இணைத்து அவர்களுக்கு ஒரு இசையாசிரியர் மூலமாக பல பாடல்களைச் சொல்லிக் கொடுத்து
அவர்களை மேடையேற்றி ஒரு குழுவாக பாட வைத்த அனுபவம் மிகவும் இனிமையான, மனதுக்கு நிறைவு
கொடுத்த அனுபவம். நாங்கள் வசித்த பகுதியில்
இயங்கி வந்த ஒரு மகளிர் மன்ற உறுப்பினர்களையும் இதே போல பயிற்சி மேற்கொள்ள வைத்து அவர்களையும்
அதே நிகழ்ச்சிகளில் மேடையேற்றியிருக்கிறேன்.
இந்த நிகழ்ச்சிகளுக்கு மிருதங்கம், வயலின் பக்க வாத்தியத்துடன் நடத்திக் கொடுத்தது
கலந்து கொண்ட சிறுவர், சிறுமிகளுக்கும், மகளிர் மன்ற உறுப்பினர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி,
இந்த நிகழ்ச்சிகளுக்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளின்
ஒன்றிரண்டு வீடியோக்களை ‘மேலகரம் வீடியோ’ என்று தேடினால் யூடியூபில் காணலாம்.
2016-ல்,
திருவள்ளுவர் கழகத்துடன் இணைந்து இரண்டு இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தோம்.
இந்த ஆண்டு நாங்கள் ஊரில் இல்லாவிட்டாலும்
எங்களது ஏற்பாட்டில் ஒரே ஒரு கர்னாடக சங்கீத நிகழ்ச்சி மட்டும் அதே திருவள்ளுவர் கழக
நவராத்திரி நிகழ்ச்சிகளில் நடந்தது.
2016-ல்
ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டது. 2015 நவராத்திரியின் போது அமெரிக்காவில் என் மகள் தன்
குழந்தைகளை ஒரு சில வீடுகளுக்கு நவராத்திரியின் போது கொலு பார்ப்பதற்குக் கூட்டிக்கொண்டு
போயிருந்திருக்கிறாள். பள பளக்கும் விளக்கொளியில் கொலுவின் அழகு, பல இனிய குரல்களின் பாட்டுக்கள், பல விருந்தினர்கள்
குடும்பத்தோடு வந்து போவது, புதுப் புது ஆடைகள் இவற்றைக் கண்டு மயங்கிய என் பேரக் குழந்தைகள்
அடுத்த ஆண்டு ‘நம் வீட்டிலும் கொலு வைக்க வேண்டும்’ என்று வற்புறுத்தியதால் என் மகளும்
2016-ல் தன் வீட்டில் கொலு வைக்கத் தொடங்கினாள்.
அதற்குத்
தோதாக ஜூன் 2016-ல் இந்தியா வந்த என் மகள் கொலுவுக்குத் தேவையான பல பொம்மைகளை பலவித
சைஸில் அள்ளிக்கொண்டு சென்று விட்டாள். 2016-ல் என் மகள் வீட்டில் வைத்த கொலுவை புகைப்படத்தில்
தான் எங்களால் பார்க்க முடிந்தது.
இந்த
ஆண்டு கொலுவுக்காக சிகாகோவில் என் மகன் வீட்டிலிருந்து ஃபீனிக்ஸில் என் மகள் வீட்டுக்கு
ஒரு பறக்கும் இரண்டு வார ‘விசிட்’ அடித்தோம். பொதுவாக கொலுவில் ஆர்வம் காட்டியிராத
நானும் ‘எப்படித்தான் இங்கே நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள் பார்க்கலாம்’ என்று எண்ணத்தோடு
கலந்து கொண்டேன்.
1998-2006-ல்
ஸ்ரீஅம்மா பகவான் பூஜைகளில் கலந்து கொண்ட அனுபவத்தில் கொலுவின் ஆரம்ப அலங்காரங்களை
என் மனைவியின் உதவியுடன் நான் செய்து முடித்தேன். ஓரளவு நன்றாகவே வந்திருந்தது. எனக்கே
ஆச்சரியம். ‘ஃபைன் டியூனிங்’ மனைவியும் என் மகளும் கவனித்துக் கொண்டார்கள்.
கொலுப்
பொம்மைகளை எல்லாம் இறக்கி வைத்த பின்னர் பேரக் குழந்தைகளுக்கு ஒரே ஆர்வம். நான் தான்
இதைச் செய்வேன், இங்கே வைப்பேன் என்று அவர்களுக்குள் போட்டி, சண்டை. பொம்மைகளை உடைத்து
விடாமல் இருக்க வேண்டுமே என்று எங்களுக்கோ பதற்றம். ஒரு மாதிரியாக அவர்களை சமாளித்து
என் மகள் கொலுப் பொம்மைகளை தட்டுகளில் அடுக்கி மற்ற சில அலங்காரங்களைச் செய்து மெருகூட்டி
நவராத்திரிக்கு கொலுவைத் தயார் செய்துவிட்டாள்.
கொலுவுக்கு
ஒரு இருபது முப்பது வீடுகளிலிருந்து அழைப்பு. ஒரு நாள் எங்கள் வீட்டிலிருந்தும் எல்லோருக்கும்
அழைப்பு இருந்தது. இங்கே ஃபீனிக்ஸில் பரந்து விரிந்திருக்கும் சேண்ட்லர் என்ற பகுதி
ஒரு மினி மைலாப்பூர் போல. ஏகப்பட்ட தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் (முக்கியமாக இன்டெல்
– யாரைக் கேட்டாலும் இன்டெல்லில் வேலை செய்வதாகச் சொல்வார்கள்) மூலைக்கு மூலை இருப்பதால்
ஒரே தமிழ், தெலுங்கு, கன்னட, கேரள இளைஞர்கள், இளைஞிகளின் குடியிருப்புகள். தாய் மொழியில்
பேச வராத பல குழந்தைகளும் கர்னாடக சங்கீதத்தை மட்டும் ஆங்கிலத்தில் பாட்டை எழுதி வைத்துக்கொண்டு
ர, ல, ழ, ள- வை சரியாகவே உச்சரித்து (கொஞ்சம் மழலைக் குரலோடு) நன்றாகவே பாடுகிறார்கள்.
பரத நாட்டியம், மிருதங்கம், வீணை, கீ போர்டு எல்லாம் கற்று வருகிறார்கள். ஒரு சிறு
பெண் ஹிந்துஸ்தானியை ஒரு கை தேர்ந்த பாடகி போல கைகளை ஆட்டி ஆட்டிப் பாடினாள். எல்லா
வீடுகளிலும் கொலுவை அலங்கரித்திருக்கும் பாணி மிகவும் ஈர்ப்பதாக இருந்தது.
எல்லோர்
வீட்டிலும் இரவு முழு உணவு தயார் நிலையில் வைத்திருந்தார்கள். சுண்டல் ஒரு சில வீடுகளில்
மட்டும்தான். எல்லோர் வீட்டிலேயும் கொஞ்சமாவது சாப்பிட வேண்டும். வெள்ளி, சனி, ஞாயிறன்று மாலை ஐந்து முதல் இரவு பத்து வரை ஒவ்வொரு
வீடாக சுற்றி வந்தது ஒரு இனிமையான அனுபவம். எல்லா இடங்களிலும் விருந்தாளிகளுக்கு நல்ல
வரவேற்பு. எல்லோரிடமும் ஒரு நட்பு உணர்வு. விருந்தோம்பல்.
இரண்டு
வீடுகளில் ஒரு விசேஷ பூஜை ஏற்பாட்டுக்குச் சென்றிருந்தோம். இங்கே ‘ஆத்ம வேத கண’ என்ற
பெயரில் ஒரு சேவை நிறுவனத்தின் உறுப்பினர்கள் அழைப்பு கொடுத்த வீடுகளுக்குச் சென்று
வேதத்தை ஓதுகிறார்கள். வேதம் ஓதுவதில் ஆண், பெண் வித்தியாசம் இல்லை. ஆண், பெண் இரு
பாலாருக்கும் வேதம் கற்றுக் கொடுக்கிறார்கள். நன்றாக ஸ்பஷ்டமாக அவர்கள் வேதம் படிப்பதைக்
கேட்பதற்கு மனதுக்கு நிறைவாக இருக்கிறது. ஒன்பது இரவுகளை குறிக்கும் விதமாக ஒன்பது
சுக்தங்களைப் படிக்கிறார்கள். பூஜையை வீட்டுக்குரியவரை வைத்தே செய்ய வைக்கிறார்கள்.
சுருக்கமாகவும் இருந்தது. ஒரு நல்ல உணர்வை கொடுப்பதாகவும் இருந்தது. ஒரு சிறிய வீடியோ
இணைத்திருக்கிறேன்.
அப்படியாக,
இந்த ஆண்டு நவராத்திரி இனிமையாக ஒரு புது அனுபவமாக அமைந்தது. என் மகள், மருமகன், அவர்கள்
குழந்தைகளுக்கு நன்றி.
No comments:
Post a Comment