Pages

Sunday, October 15, 2017

15.10.17 தென்காசியிலிருந்து ஒரு முதல் தகவல் அறிக்கை

15.10.17 தென்காசியிலிருந்து ஒரு முதல் தகவல் அறிக்கை

காலத்தின் கட்டாயத்தால் சுமார் பத்து மாதங்கள் அமெரிக்காவில் ஓட்டிவிட்டு தென்காசிக்குத் திரும்பியவுடன் அன்றாடத் தேவைகளுக்காக மார்க்கெட்டுக்கு விசிட் அடித்ததில் நான் கற்றுக் கொண்டவை இதோ.

அதற்கு முன்…

கடந்த பத்து மாதங்களில் என்னை பாதிக்காதவை என்று பட்டியலிட்டால்.. .
     1.      நவம்பர் 2016-ல் அதிக மதிப்புள்ள ரூபாய் தாள்கள் செல்லாததாகியது
  2.     மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணமடைந்த நாளையொட்டி எங்களுடைய அமெரிக்கப் பயணமே நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டாலும் அதற்குப் பிறகு நடந்த பல சுவாரசியமான திடீர் திருப்பங்கள், திகில்கள், நகைச்சுவைகள் கலந்த பல அரசியல் நாடகங்கள்
     3.     ஜி. எஸ். டி அறிமுகப்படுத்தப் பட்டதால் ஏற்பட்ட பல குழப்பங்கள்
  4.     பல சேவைகளுக்கு ஆதார் இணைப்பு வேண்டுமா, வேண்டாமா என்ற கவலைகள்
   5.     நடிகர் கமலஹாசனும் ரஜினிகாந்த்தும் அரசியலுக்கு வருவார்களா, வர மாட்டார்களா, அவர்கள் வந்து விட்டால் இனி தமிழ்நாட்டில் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து போய்விடுமா – இப்படி மக்களுக்கு கவலைகள் இருக்கிறதோ இல்லையோ, ஊடகங்களுக்கு நிறைய கவலை.
  6.     எல்லா பத்திரிகைகளிலும் எதிரொலித்த கொசு, டெங்கு பற்றிய பயமுறுத்தல்
      7.     நீட் தேர்வு பற்றிய சர்ச்சைகள், போராட்டங்கள்
    8.     திருமதி சசிகலாவை யார் யார் சந்தித்தார்கள் போன்ற சுவாரசியமான தகவல்கள்
    9.     முக்கோண அரசியல் கட்சி இப்பொழுது இரு கோணமாக வளைந்து நிற்பது
    10.  மழையில்லை, தண்ணீரில்லை, மின் வெட்டு, கொசு, குப்பைகள், விலை உயர்வு, ஃபோன் கனெக்ஷன், இன்டெர்னெட் கனெக்ஷன் சரியில்லை, கேபிள் டீ வியில் பல சேனல்கள் சரியாகத் தெரியவில்லை போன்ற புகார்கள்

இப்படி பல. அமெரிக்காவில் கழித்த பத்து மாதங்களில் ஒரு தாயின் வயிற்றில் இன்குபேட்டரில் பாதுகாப்பாக இருப்பது போல எந்தக் கவலையுமற்று இருந்தோம்.

சரி, இங்கே இப்பொழுதுள்ள ரியாலிடி செக்...

கடந்த இரண்டு நாட்களில் நான் தெரிந்து கொண்டது…
     1.     நாங்கள் வழக்கமாக வாங்கும் பலசரக்குக் கடையில் எந்த மாற்றமுமின்றி முன் போல பணம் பரிமாற்றம் மூலம் மட்டுமே வியாபாரம் நடந்து வருகிறது. டெபிட், கிரெடிட் கார்ட் தேய்ப்பதற்கான வசதி கூட ஏற்படுத்திக் கொள்ளவில்லை. கேட்டால், இந்த ஊருக்கு அதெல்லாம் சரிப்படாது சார் என்றார் கடைக்காரர். எல்லோர் கையிலும் 500 ரூபாய் நோட்டுத் தாள்கள் புரண்டு கொண்டிருக்கிறது. எல்லா சில்லரை வியாபாரிகளும் பொதுவாகப் பணமாகத்தான் வாங்கிக் கொள்கிறார்கள்.
    2.     ஒரு சில மக்களே ஜி. எஸ். டியை வரவேற்கிறார்கள். பெரும்பாலும் பில் இல்லாமல் வரி கொடுக்காமலே பொருட்களை வாங்கிப் பழகி விட்டதால் இன்று வரி போட்டால் ஆத்திரப்படுகிறார்கள். கறுப்புப் பணப் புழக்கத்தை ஊக்குவிக்கும் பழைய முறையே பலருக்கும் பிடித்திருக்கிறது.
  3.     ஒரு தெரிந்த ஆட்டோக்காரர் சொன்னார், ‘எப்ப நோட்டுக்களை செல்லாததாக்கினாங்களோ அப்பதிலிருந்தே எங்க வியாபாரம் படுத்துடிச்சு, சார்’ என்று. ‘ஏன்யா, அதுக்கும் நீ ஆட்டோ ஓட்டுறதுக்கும் என்ன சம்பந்தம்,’ என்று கேட்டால் எனக்கு பொருளாதாரம் சொல்லிக் கொடுக்கிறார்.
     4.     நிலம், வீட்டு மனைகள், வீடுகள் வாங்கி விற்பது படுத்து விட்டது. விலையும் குறைந்திருக்கிறது. வாங்குவதற்கும், விற்பதற்கும் யோசிக்கிறார்கள். கறுப்புப் பணம் இல்லாமல் வாங்குவதும் விற்பதும் இன்றும் முடியாதே. ஒரு வியாபாரி சொன்னது, ‘வெள்ளை சட்டை, கரை வேட்டியோட சுத்தினவங்க எல்லாருடைய கொட்டமும் கொஞ்சம் அடங்கியிருக்கு சார்.’
   5.     இன்னொரு வியாபாரி சொன்னது, ‘சார், முன்னெல்லாம் எங்க கடை முன்னால பில் இல்லாம லாரிகளில் சரக்கு வந்தா ஏதோ பெயருக்கு ஃபைன் போடுவாங்க, கொஞ்சம் கையில பணம் வாங்கிப்பாங்க. அவ்வளவுதான். இப்பல்லாம், பில் இல்லாம பிடிச்சாங்கன்னா, லாரியோட அதிகாரிங்க கொண்டு போயிடறாங்க.’ பில் இல்லாமல் வியாபாரம் செய்வதற்கு இப்பொழுது வியாபாரிகளிடையே கொஞ்சம் பயம் இருக்கிறது.
     6.     நல்ல தரமான அரிசி 10 மாதம் முன்பு கிலோவுக்கு 56 ருபாய் கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தோம். இன்று அதே அரிசி 60 ரூபாய். 8% விலை உயர்வு. பல பொருட்களின் விலையேற்ற இறக்கங்கள் குறிப்பிடும் படியாக இல்லை.
   7.     தினந்தோறும் வீட்டுக்குப் பால் கொடுப்பவர் இப்பொழுது பசும்பால் மட்டுமே கொடுக்கிறார். எருமை வைத்து கட்டுப்படியாவதில்லையாம்.
     8.     பி. எஸ். என். எல் ஊழியர்கள் ஒரே நாளில் என்னுடைய வீட்டு தொலைபேசி, இன்டெர்னெட் வசதியை மீண்டும் ஏற்படுத்திக் கொடுத்து விட்டார்கள். புகாருக்கு உடனே கவனம் கொடுத்த பி. எஸ். என்.எல்-லை பாராட்டியே ஆக வேண்டும். பல தனியார் நிறுவனங்களின் போட்டி இருப்பதால் பொதுவாகவே அவர்களது செயல்களில் வேகம் தெரிகிறது. 4-ஜி சேவையில் ரிலையன்ஸ் ஜியோவுடன் பி. எஸ். என். எல் போட்டி போட்டு 420 ரூபாய்க்கு 90 நாட்களுக்கு சிம் கார்டு கொடுக்கிறார்கள் என்று டீலர் சொல்கிறார்.
    9.     வீட்டுக் குழாயில் தண்ணீர் ஆறு மாதத்துக்கும் மேல் வருவதில்லையாம். மாதா மாதம் குடி நீர் கட்டணம் மட்டும் சரியாக வாங்கிக் கொள்கிறார்கள். நுகர்வோர் கோர்ட்டுக்குப் போக வேண்டியதுதான் என்று நினைக்கிறேன்.
   10.  டெங்குக் காய்ச்சலுக்கென்று வீடு வீடாக நிலவேம்புக் கஷாயம் கொண்டு வந்து கொடுத்தார்கள். மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டுமாம். ஆனால், விடுமுறை என்பதினாலோ என்னவோ நேற்று பஞ்சாயத்து அதிகாரிகளைக் காணோம்.

இன்னும் ஆறு மாதம் ஓட்டியாக வேண்டும். பல உருப்படியான திட்டங்களோடு வந்திருக்கிறேன். நவம்பர் 14-ஆம் தேதி அரசுப் பள்ளிகளுக்காக ஒரு வினாடி-வினா போட்டியும், நவம்பர் 18-ஆம் தேதி மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்காக இன்னொரு வினாடி-வினா போட்டியும் எங்கள் அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்திருக்கிறோம். இன்னும் சில திட்டங்கள் மனதில் உள்ளன. இறைவன் அருளால் நிறைவேறும் என்ற நம்பிக்கையிருக்கிறது.

வாழ்க தென்காசி, வளர்க தமிழகம். ஜெய் ஹிந்த்!


No comments:

Post a Comment