Pages

Thursday, October 19, 2017

18.10.2017 டெங்கும் நிலவேம்பு கஷாயமும்

18.10.2017 டெங்கும் நிலவேம்பு கஷாயமும்

தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதால் மாசு படிகிறது என்று சொல்லி அதற்கு சில இடங்களில் தடையும் பல இடங்களில் பட்டாசுகளைத் தவிர்க்கச் சொல்லி அறிவிப்புகளும் அறிவுரைகளும் பலத்த ஓசையுடன் வந்து கொண்டிருந்த நேரத்தில் ஒசைப்படாமல் இன்னொரு பக்கத்தில் ஒரு பெரிய சரவெடியை எடுத்து வீசியிருக்கிறார்கள். நிலவேம்பு கஷாயத்தால் டெங்கு வியாதி குணமாகும் என்பதற்கு விஞ்ஞான ரீதியாக எந்த நிரூபணமுமில்லை என்ற அறிக்கைதான் அந்த வெடி.

இது நாள் வரை ஊடகங்களில் படித்த செய்தியிலிருந்து நான் தெரிந்து கொண்டது டெங்கு வியாதிக்கு அலோப்பத்தியில் சரியான சிகிச்சை கிடைப்பதில்லை என்பதுதான். மேலும் நிலவேம்பு கஷாயம் மூன்று நாள் தொடர்ந்து சாப்பிட்டாலும், பப்பாளி இலையின் சாரைக் குடித்தாலும் டெங்கு பலருக்கு குணமாகியிருக்கிறது என்பதும் ஊடகங்களிலிருந்து தெரிகிறது. எனக்குத் தெரிந்த ஒருவர் கூட பப்பாளி இலைச் சாறு சாப்பிட்ட பின் டெங்குலிருந்து மீண்டிருக்கிறார்.

இன்று ‘தி ஹிந்து’ ஆங்கிலப் பத்திரிகையில் தலையங்கமே எழுதிவிட்டார்கள். விஞ்ஞான ரீதியாக நிரூபணமாகும் வரை நிலவேம்பு கஷாயம் சாப்பிடுவதை அரசாங்கமே ஊக்குவிப்பது சரியாக இருக்காதென்று. பத்திரிகைகளிலும் இதே போன்று செய்திகள்.

எனக்கு என்ன சந்தேகம் என்றால் அலோப்பதி மருத்துவ முறை போல ஆயுர்வேதத்திலோ, சித்தா யுனானி மருத்துவத்திலோ ஆராய்ச்சி அறிக்கைகள் அதிகம் கிடையாது. அவை வழி வழியாக வந்த மருத்துவ முறைகள். இருந்தும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மூலிகைகளைப் பற்றி உண்மையாகத் தெரிந்தவர்கள் வெகு சிலரே என்பது உண்மைதான். இருந்தும் ஆயுர்வேதத்தையும், சித்தா, யுனானி மருத்துவ முறைகளையும் இந்திய அரசாங்கமே அங்கீகரித்திருக்கிறது.

இப்பொழுது திடீரென்று மூலிகை மருந்தான நிலவேம்பு கஷாயத்தைப் பற்றி எதிர்மறையாக அறிக்கைகள் வரவேண்டிய காரணம் என்ன? அது வெறும் ‘நம்பிக்கையில்’ (Faith) சாப்பிடக்கூடிய மருந்து, வெறும் placebo effect என்று சொல்ல வேண்டிய அவசியமென்ன? ஏன் அலோப்பதியில் ப்ளேசிபோ எஃபெக்ட்டில் சிலருக்கு சில வியாதிகள் குணமாவதில்லையா? அல்லது அலோப்பதியில் மருந்து சாப்பிட்டால் டெங்கு சரியாகிவிடும் என்று ஏதேனும் உத்திரவாதம் இருக்கிறதா? அல்லது அலோப்பதியில்தான் டெங்குக்கு உத்திரவாதமான மருந்து இருக்கிறதா?

டெங்குக்கு முறையான சிகிச்சையென்று எதுவுமில்லை, அசெடாமினொஃபென் (டைலினால்) என்ற ஒரு வலி நிவாரண மருந்து மட்டுமே தற்போது கொடுக்கப்படலாம் என்று மேயோ க்ளினிக்கின் வலைப் பதிவு சொல்கிறது. (https://www.mayoclinic.org/diseases-conditions/dengue-fever/diagnosis-treatment/drc-20353084)

போலி மருந்துகளைக் கண்டு ஏமாறக்கூடாதுதான். ஒன்றுமறியாத மக்களை போலி நிலவேம்பு கஷாயம் கொண்டு ஏமாற்றுவது தவறுதான். தண்டிக்க வேண்டியதுதான். இருந்தும் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் டெங்கு பயம் இருக்கும் இந்த நேரத்தில் ஏதோ இன்று பலரும் நம்பும் நிலவேம்புக் கஷாயம் என்ற ஒரு மருந்தைப் பற்றி விஞ்ஞான ரீதியாக முழுவதுமாக விளக்காமல் எதிர்மறையான ஒரு அறிக்கை வருவதற்கான பின்புலம் என்ன?

மருத்துவத் துறையில்  ஏங்கேயோ ஏதோ நடக்கிறது என்கிற ஒரு தோற்றத்தை இன்றைய அறிவிப்புகளும் அறிக்கைகளும் உண்டாக்குகின்றனவோ என்று சந்தேகம் வருகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


No comments:

Post a Comment