Pages

Friday, May 04, 2018

02.05.18 கோடை வந்து விட்டது


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் ஏப்ரல் வந்து விட்டால் போதும். செய்தித் தாள்களில் நாம் வழக்கமாக காண்பது:

1.     ஏர்கண்டிஷனர்கள் விளம்பரங்கள்
2.     ஐ. ஏ. எஸ்/ஐ. ஐ. டி/ஐ. ஐ. எம், மற்றும் சமீபத்தில் கட்டாயமாகிவிட்ட நீட் தேர்வுகளுக்கு கோச்சிங் வகுப்புகளுக்கான விளம்பரங்கள்
3.     பெரிய மெட்ரிக் பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்களில் எத்தனை பேர் பொதுத் தேர்வுகளில் நூற்றுக்கு நூறு எடுத்தார்கள் என்பதை பறைசாற்றும் விளம்பரங்கள்.

ஒரு காலத்தில் சொகுசுப் பொருளாகப் பார்க்கப்பட்டு  மேல்தட்டு மக்களே பயப்படும் அளவுக்கு வரி விதிக்கப்பட்ட ஏர்கண்டிஷனர்கள் இன்று அத்தியாவசியத் தேவையாகி விட்டன. மார்க்கெட்டில் கடும் போட்டி. பல வித யுத்திகளை – வட்டியில்லாத கடன் வசதி, அதிரடி விலை குறைப்பு, போனஸ் கூப்பன்கள், கியாரண்டி இப்படி பல – கையாண்டு பொருளை விற்க வேண்டியிருக்கிறது. செய்தித் தாள்களில் பல முழுப் பக்கங்களை இந்த விளம்பரங்கள் ஆக்ரமிக்கின்றன.

இன்றயை ஆங்கில ‘தி ஹிந்து’வில் முதல் இரண்டு பக்கங்களை ஆகாஷ் மெடிக்கல்/ஐ.ஐ.டி/ஜே.ஈ.ஈ குழுமமும் மற்றொரு முழு பக்கத்தை ஸ்ரீசைதன்யா குழுமமும், கடைசி முழுப் பக்கத்தை நாராயணா குழுமமும் எடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த விளம்பரங்களுக்கு லட்சக் கணக்கில் பணம் செலவாகும் என்பது எல்லோருக்கும் தெரியும். இது போல இன்னும் எத்தனை செய்தித் தாள்களில் வந்திருக்கிறதோ தெரியவில்லை. யாரிடமிருந்து இந்த விளம்பரங்களின் செலவை இந்த நிறுவனங்கள் வசூலிக்கப் போகின்றன? எத்தனை பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளைச் இந்த கோச்சிங் வகுப்புகளில் பல்லாயிரக் கணக்கில் பணம் அடைத்து சேர்ப்பதற்கு வசதியிருக்கும்? வசதியில்லாத மாணவர்கள் என்ன செய்வார்கள்?

என்னுடைய கவலை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைப் பற்றியது.

அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் என்னதான் செய்கிறார்கள்? அவர்களில் பலர் தனியார் பள்ளிகளில் சென்று அந்தப் பள்ளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு இதே தேர்வுகளுக்குக் கோச்சிங் வகுப்புகள் நடத்துகிறார்கள் அல்லது மாலை நேர டியூஷன் வகுப்புகள் நடத்துகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை.

அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் நினைத்தால் நன்றாகப் படிக்கும் ஏழை மாணவர்களை இந்தத் தேர்வுகளுக்கு தயார் செய்ய முடியாதா? அல்லது அவர்களுக்கு அந்த சுதந்திரம் இல்லையா? அரசாங்கத்தால் எத்தனை கோச்சிங் மையங்களைத் தொடங்க முடியும்? அப்படியே துவக்கினாலும் காலப் போக்கில் சரிவர செயல்படுமா? அல்லது இன்றைய அரசுப் பள்ளிகளைப் போல செயல்படுமா?

இன்று இரண்டாம் வகுப்பிலிருந்தே கோச்சிங், டியூஷன் என்று போய்க் கொண்டிருக்கிறது. இதில் மாணவர்களுக்குத் தான் அழுத்தம் அதிகமாகிறது. இருந்தாலும் போட்டி நிறைந்த இன்றைய உலகத்தில் வேறு வழி என்ன இருக்கிறது? குழந்தை பிறந்த நேரத்திலிருந்தே பெற்றோர்கள் அவர்களை மருத்துவர்களாக்க வேண்டும், பொறியியல் வல்லுனர்களாக்க வேண்டும், பெரிய ஐ. ஏ. எஸ் அதிகாரிகளாக்க வேண்டும், வெளி நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கனவை வளர்த்துக் கொள்கிறார்கள்.
            
        இதில் ‘மத்யமர்’ பிரிவில் ஒரு உறுப்பினராக இருக்கும் என்னால் என்ன செய்ய முடியும் என்பதையே ஒன்றிரண்டு நாட்களாக யோசித்து வரும் எனக்கு ஒரு உள்கருத்து தோன்றியது. அதைப் பற்றி நாளை எழுதுகிறேன்.  

1 comment:

  1. அக்கறையாக அலசி இருக்கிறீர்கள். கட்டாயம் வழி கண்டு பிடிப்பீர்கள் என்று நம்புகிறேன். வணக்கம்.

    ReplyDelete