Pages

Friday, May 04, 2018

02.05.18 கோடை வந்து விட்டது: உன்னால் முடியும் தம்பி, தம்பி


கொஞ்சம் பொறுமையாகப் படியுங்கள்.

2007 ஜூன் மாதம். வெளிநாட்டில் வேலை பார்த்தது போதும் என்ற நினைப்போடு மீதமுள்ள காலத்தை ஒரு கிராமப்புற ஊரில் ஏதேனும் ஒரு சமூக சேவையில் ஓட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு இரண்டே இரண்டு சூட்கேசுகளுடன் தென்காசியில் வந்திறங்கினேன். மனைவியின் நெருங்கிய ஒரு பேச்சுலர் ஆடிட்டர் சொந்தக்காரரைத் தவிர தென்காசியில் யாருடனும் அறிமுகம் கிடையாது.

முதன் முதலாக தென்காசியில் ஒரு பெரிய மெட்ரிக் பள்ளியின் முதல்வரை எனக்கு அந்த சொந்தக்காரர் அறிமுகம் செய்து வைத்தார். ஒரு பொதுத்துறை வங்கியில் பெரிய பதவியை வகித்திருந்து, பின்னர் ஒரு வெளி நாட்டிலும் வேலை பார்த்து திரும்பியிருந்த காரணத்தினாலும், ஆங்கிலத்தில் ஓரளவு சரளமாக பேச முடியும் என்ற காரணத்தாலும், மாணவர்களின் நலனில் அதிக அக்கறை காட்டியதாலும் என்னை அந்தப் பள்ளியின் மாணவர்களுடன் ‘பெர்சனாலிடியை வளர்த்துக் கொள்வது எப்படி?’ என்ற தலைப்பில் வாரம் ஒரு முறை கலந்துரையாட அந்த பள்ளி முதல்வர் விழைந்தார்.

பேச்சோடு பேச்சாக தென்காசியில் ஐ. ஐ. டி கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பதற்கு ஆண்டு தோறும் நடந்து வரும் தேர்வுக்கு கோச்சிங் செய்வதற்கு ஒரு சரியான அமைப்பு தென்காசியில் இல்லை என்றும், அப்படி ஒரு அமைப்பை உருவாக்கினால் தன் பள்ளியிலிருந்தே குறைந்தது ஒரு இருபது இருபத்தைந்து மாணவர்களை அந்த அமைப்பின் வகுப்புகளில் சேர்வதற்கு தன்னால் உறுதி செய்ய முடியும் என்றும் நம்பிக்கையோடு கூறினார்கள்.

உடனேயே அதற்கான முயற்சியில் இறங்கினேன். திருநெல்வேலி சுற்று வட்டாரத்தில் இருந்த என்னுடைய பழைய நண்பர்கள், பழைய கல்லூரி விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் நல்லெண்ணம் கொண்ட பள்ளி ஆசிரியர்கள் இப்படி பலரைத் தொடர்பு கொண்டேன். லாப நோக்கில்லாத என்னுடைய முயற்ச்சிக்கு ஒத்துழைக்க அவர்களில் பலரும் தயாரானார்கள். ஒரு நல்ல முயற்சி, அதுவும் கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக என்பதனால் பாடம் எடுத்தால் ஃபீஸ் எவ்வளவு கிடைக்கும் என்பதைப் பற்றி அவர்கள் எவரும் கவலைப் படவில்லை.

ப்ராஜெக்ட் ரிப்போர்ட் தயார். தென்காசி, திருநெல்வேலி, திருச்செந்தூர், தூத்துக்குடி, மதுரை இப்படிப் பல இடங்களிலிருந்து மூத்த கல்லூரி விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பள்ளியாசிரியர்கள் என்று ஒரு 12 பேர் கொண்ட ஒரு டீம் கோச்சிங் வகுப்புகள் நடத்தத் தயார். ஒரு ஆசிரியருக்கு ஒரு வகுப்புக்கு ரூபாய் 250 மற்றும் போக வர பஸ், டிரெயின் சார்ஜ் செலவு அவ்வளவுதான் செலவு. வகுப்புகள் நடத்த இடம் இலவசமாகக் கொடுக்க ஒருவர் தயாராக இருந்தார். ஒவ்வொரு வார இறுதியிலும் வகுப்புகள். ஒரு மாணவரின் சேர்க்கைக்கு ஆண்டுக்கு கட்டணம் ரூபாய் 6000; இரண்டு ஆண்டுகளுக்கு வகுப்புகள். வெறும் 12000 ரூபாயில் தரமான கோச்சிங்.

நான் தொடர்பிலிருந்த பள்ளியின் மாணவர்களுக்கு கௌன்சலிங் செய்வதற்காக என்னுடைய நெருங்கிய நண்பர், ஐ. ஐ. டியில் எம். டெக் படித்து திருவனந்தபுரம் இஸ்ரோவில் ஜெனரல் மேனேஜர் பதவியில் இருந்த ஒரு நண்பரும் அவருடைய மூத்த அதிகாரி ஒருவரும் (அவரும் ஐ. ஐ. டியில் படித்துப் பட்டம் பெற்றவர்) எனக்காக சிரமம் பார்க்காமல் தென்காசி வரை வந்து மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

2007-ல் தென்காசியில் பெரும்பாலான மாணவர்களுக்கு ஐ. ஐ. டி, ஐ. ஐ. எம் போன்ற கல்வி நிறுவனங்களைப் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம். தென்காசியிலிருந்த மற்ற பள்ளி மாணவர்களுக்காகவும் தனியாக நான் கௌன்சலிங் வகுப்புகள் தினப்படி நடத்தினேன்.

ஆனால், பெரும் எதிர்பார்ப்புடன் ஆரம்பித்த முயற்சி பெரும் ஏமாற்றத்துடன் முடிந்தது. மாணவர்களிடமிருந்தும், பெற்றோர்களிடமிருந்தும் ஐ. ஐ. டி கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க நுழைவுத்தேர்வு எழுதுவதற்கு கோச்சிங் வகுப்புகளில் சேர எந்த வரவேற்பும் இல்லை. ஒரு மாதம் முடிந்தது. மொத்தம் மூன்றே மாணவர்கள் இறுதியாக வகுப்புகளில் சேர்வதற்குத் தயாராக இருந்தார்கள். என்னுடைய கன்னி முயற்சி பெரும் தோல்வியில் முடிந்தது.

ஆனால் தோல்வியிலும் ஒரு நல்லது நடந்தது. என்னுடைய எல். என். சேரிடபிள் டிரஸ்ட் உருவானதற்கு அந்தத் தோல்வியான முயற்சிதான் அடிக்கோல். நானும் என் மனைவியும் மட்டுமே இந்த டிரஸ்டின் டிரஸ்டிகள். எங்கள் டிரஸ்ட் ஆவணத்தின் முதல் குறிக்கோளே ஐ. ஐ. டி/ ஐ. ஐ. எம்/ ஐ. ஏ. எஸ்/ மருத்துவப் படிப்பு இப்படி பல நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்வதுதான். இன்று வரை எங்களது முதல் குறிக்கோள் நிறைவேறவில்லை.

வியாபாரத்தனமாக எங்களால் எதையும் யோசிக்க முடியாததால் இன்றைய மார்க்கெட்டில் இருக்கும் போட்டியுடன் நாங்கள் மோத முயற்சிக்கவில்லை.

சரி, இப்பொழுது விஷயத்துக்கு வருகிறேன்.

மத்யமர் என்பது நல்லெண்ணம் கொண்ட நடுத்தர வர்க மனிதர்களின் ஒரு சமூக வலைதள கூட்டமைப்பு. இந்த அமைப்பின் மேற்பார்வையில் ஐ. ஐ. டி/ ஐ. ஐ. எம்/ ஐ. ஏ. எஸ்/ நீட் - மருத்துவப் படிப்பு இப்படி பல  நுழைவுத்தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்ய ஒரு கோச்சிங் அமைப்பு ஏழையான, அரசுப் பள்ளிகளில் படிக்கும், கிராமப்புற மாணவர்களுக்காக ஆரம்பித்தால் என்ன?

அப்படி ஆரம்பிப்பதாக இருந்தால் ஒரு மாதத்துக்கு ஆயிரம் ரூபாய் விதம் 12 மாதங்களுக்கு 12000 ரூபாய் (அல்லது அதற்கு மேலும்) நன்கொடையாகத் தர நான் தயாராக இருக்கிறேன். ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இருக்கும் மத்யமரில் ஒரு 50 பேர் ஒன்று சேர்ந்தால் ஆண்டுக்கு குறைந்தது 6 லட்சம் ரூபாய் சேர்க்கலாம். பாடங்களைச் சொல்லிக் கொடுக்க நல்லெண்ணம் கொண்ட ஆசிரியர்களை, கல்லூரி விரிவுரையாளர்களை அணுகலாம். நினைத்தால் கண்டிப்பாக முடியும். ஏதேனும் ஒரு மாவட்டத்தில் முதலில் முயன்று பார்க்கலாம். கிராமப்புற, அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும். இலவசமாகத்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆனால், இலவசமாகக் கிடைக்கும் எதற்கும் மக்கள் மரியாதை கொடுப்பதில்லை. இதனால் குறைந்த கட்டணத்தில் – உதாரணத்துக்கு மாணவர் ஒருவருக்கு மாதம் நூறு ரூபாய் கட்டணம் என்ற கணக்கில் – இந்த வகுப்புகளை நடத்தலாம். சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் வியாபார ரீதியில் பணம் கொடுக்க வேண்டியிருக்காது.

ஒரு வேளை இந்த அமைப்பின் வரவு செலவுகளில் துண்டு விழுந்தால் மேலும் நன்கொடை உறுப்பினர்களிடமிருந்தோ அல்லது வெளியிலோ பெற்றுக் கொள்ளலாம். இந்த அமைப்பை ஒரு சேரிடபிள் டிரஸ்டாக பதிவு செய்து பொறுப்பான ஒரு சில மத்யமர் உறுப்பினர்கள் மேற்பார்வையில் நடத்தலாம். அது போன்ற டிரஸ்ட்டுக்கு 80 G வருமான வரி விலக்குக்கு விண்ணப்பிக்கலாம். (என்னுடைய டிரஸ்டுக்கும் நான் வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால், பொதுவாக என்னுடைய சொந்தச் செலவிலேயே என்னுடைய டிரஸ்டை நடத்துகிறேன்)

மேலும் இதைப் பற்றி விரிவாக யோசித்துப் பார்க்கலாம். என்ன சொல்கிறீர்கள்?

No comments:

Post a Comment