Pages

Tuesday, May 08, 2018

08.05.18 அமெரிக்காவின் “காஸ்ட்கோ” ஸ்டோர்




அமெரிக்காவுக்கு குழந்தைகளை படிப்பதற்கும் வேலை பார்ப்பதற்கும் அனுப்பி விட்டு அவ்வப்பொழுது அவர்களை பார்ப்பதற்கும் அவர்களுடன் அமெரிக்காவை சுற்றிப் பார்க்க விரும்பும் பெற்றோர்கள் இங்குள்ள இரண்டு பெரிய ஸ்டோர்களைப் பற்றி கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருப்பார்கள். ஒன்று ஐகியா (IKEA), மற்றது காஸ்ட்கோ (COSTCO). ஐகியா இப்பொழுது இந்தியாவுக்கும் வந்து விட்டது. மற்றது இன்னும் வரவில்லை. மற்ற ராட்சச ஸ்டோர்களான வால் மார்ட் பற்றி இப்பொழுது பொதுவாக இந்தியாவில் எல்லோருக்கும் தெரியும்.

“காஸ்ட் கோ” ஸ்டோரை நான் “காஸ்ட்கோ” அம்மாச்சி கோவில் என்றே அழைத்து வருகிறேன். அமெரிக்கா வந்து விட்டு “காஸ்ட்கோ” அம்மாச்சி கோவிலுக்கு போகாமல் இந்தியா திரும்புவது என்பது பெரிய பாவம். வாரம் தோறும் வெள்ளி/சனிக்கிழமை ஏதோ ஒரு கோவிலுக்கு போய் வருவது போல சனி/ஞாயிறு அன்று “காஸ்ட்கோ” அம்மாச்சி கோவிலுக்குப் போவது இங்கு வாழும் இந்தியர்களுக்கு மட்டுமல்ல அமெரிக்கர்களுக்கும் (சர்ச்சுக்குப் போவது போல) ஓரு வாராந்திர வழக்கம்.

“காஸ்ட்கோ” வைப் பற்றி தெரியாவதவர்களுக்காக இந்த அறிமுகம்.

“காஸ்ட்கோ” ஒரு ராட்சச ஸ்டோர். அமெரிக்காவின் எல்லா பெரிய ஊர்களிலும் இதன் ஒரு கிளை கண்டிப்பாக இருக்கும். இங்கு சாதாரணமாக ஒரு அமெரிக்க வாழ்க்கைக்கு, குடும்பத்துக்குத் தேவையான எல்லா பொருட்களும் கிடைக்கும். பல இந்தியர்களும், ஆசியாவைச் சேர்ந்தவர்களும் இங்கே பொருட்களை பெரிய அளவில் வாங்க ஆரம்பித்ததால் இப்பொழுது அவர்களுக்குத் தேவையான பொருட்கள் கூட விற்க ஆரம்பித்து விட்டார்கள். உதாரணத்துக்கு: இந்தியன் பாஸ்மதி அரிசி, தால் மக்கனி, (மெக்சிகன்) ரெடிமேட் சப்பாத்தி (டாட்டியா) இப்படிச் சில.
      ·         பொதுவாக நல்ல தரம் வாய்ந்த பொருட்களை மட்டுமே இங்கே விற்கிறார்கள். என்ன, எல்லா பொருட்களையும் பெரிய பெரிய பாக்கெட்டுகளில் அல்லது பல்க்காக ஒரு சில மாதங்களுக்கு வருவது போல விற்கிறார்கள்.
       ·         எல்லாப் பொருட்களின் விலையும் வெளி விலையை விட குறைவு. பொருட்களை விற்பவர்களிடம் தரம் பார்த்து மிக அதிக மொத்த அளவில் காஸ்ட்கோ வாங்குவதால் அவர்களுக்கு வெளியிடங்களை விட அடக்க விலை குறைவாகவே இருக்கிறது. காஸ்ட்கோ வாடிக்கையாளர்களுக்கு நல்ல லாபம்.
     ·         முக்கியமாக, வாங்கிய பொருள் பிடிக்காவிட்டால் (உணவுப் பொருட்களைத் தவிர்த்து) மூன்று மாதங்களுக்குள் திருப்பிக் கொடுத்து முழுப் பணத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். என்னுடைய ஒரு வாட்சை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பிக் கொடுத்து முழுப் பணத்தையும் திரும்பப் பெற்றிருக்கிறேன்) முகம் சுளிக்க மாட்டார்கள். ஏன் என்று கேள்வி கேட்க மாட்டார்கள். இந்த வசதியை ஒரு சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் உண்மை.
         ·         ஸ்டோர் அமைத்திருக்கும் விதம், பொருட்களை அடுக்கியிருக்கும் விதம் எல்லாமே ‘என்னை வாங்கு, வாங்கு’ என்று அழைப்பது போல இருக்கும்.
     ·         காஸ்ட்கோவின் உறுப்பினர்களாக சேருபவர்கள் மட்டுமே இங்கே பொருட்களை வாங்க முடியும். உறுப்பினர் அட்டையைக் காட்டினால்தான் உள்ளேயே விடுவார்கள். வருஷாந்திர உறுப்பினர் கட்டணம் உண்டு. ஒரு சில உறுப்பினர் வகையினருக்கு ‘கேஷ் பேக்’ எனப்படும் ‘வாங்கிய பொருளின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திருப்பிக் கொடுப்பது’ உண்டு. பதிவாக இங்கே பொருளை வாங்குவோர்க்கு இந்தக் ‘கேஷ் பேக்’ உறுப்பினர் கட்டணத்தை சரி செய்து விடும்.
        ·         காஸ்ட்கோவுக்கு வரும் நூற்றுக் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு வசதியாக கார் பார்க்கிங் வசதி உண்டு.

ஒரே ஒரு குறை. இந்த ஸ்டோருக்குள் போனால் தேவையோ இல்லையோ பல பொருட்களை வாங்கிக் குவிக்கும் (கெட்ட) பழக்கம் பொதுவாக எல்லோருக்கும் வந்து விடுகிறது.

இருந்தும் காஸ்ட்கோவின் வியாபார ‘மாடல்’ பொதுவாக வாடிக்கையாளர்களுக்கு நல்ல பயனுள்ளதாகவே இருக்கிறது. அடுத்த முறை அமெரிககா வரும் பொழுது இதுவரை காஸ்ட்கோவுக்கு போனதில்லையென்றால் கண்டிப்பாகப் போய் வாருங்கள். உங்களுடைய திருப்திக்கு உத்திரவாதம்.

காஸ்ட்கோவின் வியாபார மாடலை என்னுடைய WHAT IF OUR DREAMS COME TRUE: AN UNCOMMON MEETING WITH LORD SIVA என்ற நாவலில் ஒரு இடத்தில் கதையின் ஒரு பாகமாக பயன்படுத்தியிருக்கிறேன்.

No comments:

Post a Comment