Pages

Friday, July 27, 2018

27.07.18 என்னால் ஏன் சுருக்கமாக எழுத முடிவதில்லை! ஒரு தன்னிலை விளக்கம்


27.07.18 என்னால் ஏன் சுருக்கமாக எழுத முடிவதில்லை! ஒரு தன்னிலை விளக்கம்

“விஷப் பரிட்சை” என்ற தலைப்பில் கோடைகால பள்ளி விடுமுறை நாட்களில் என் பேரன் பேத்தியுடன் ஃபீனிக்சில் நான் கழித்த இரண்டு மாதங்களைப் பற்றி 5 பாகங்களாக நேற்றோடு எழுதி முடித்திருந்தேன்.

என்னுடைய பதிவு வழக்கத்துக்கும் மேலாக பலருடைய கவனத்தையும் கருத்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்றிருந்தது. ஒரே ஒருவர் மட்டும் பதிவு நன்றாக இருந்ததாகவும் ஆனால் மிக நீளமாக இருந்ததாகவும் கருத்து தெரிவித்திருந்தார். அவர்களுடைய கருத்துக்கு நன்றி.

“இந்த ஆண்டு இரண்டு மாத பள்ளி கோடை விடுமுறை காலத்தில் பேரன் பேத்தியை நான் கவனித்துக் கொள்கிறேன், அதனால் வழக்கமாக நடக்கும் கோடை கேம்புக்கு அவர்கள் போக வேண்டாம், விடுமுறையை சந்தோஷமாக வீட்டிலேயே கழிக்கட்டும் என்று நான் சொல்லி விட்டதால் மே கடைசி முதல் ஜூலை கடைசி வரை நாங்கள் ஃபீனிக்ஸில் குழந்தைகளுடன் இருந்தோம். நேரத்தை கொஞ்சம் பயனுள்ளதாக செலவழிக்கட்டுமே என்று அவர்களுக்கு தமிழ் எழுதவும் வாசிக்கவும் கற்றுக் கொடுத்தேன். பல ஸ்லோகங்களைக் கற்றுக் கொடுத்தேன். தினமும் கீபோர்டு பயிற்சி செய்ய வைத்தேன். அவர்கள் பல வகைகளில் முரண்டு பண்ணினாலும் மிகவும் கண்டிப்போடு இவற்றையெல்லாம் செய்ய வைத்தேன். இப்பொழுது ஓரளவு தமிழ் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். பல ஸ்லோகங்களை மனப்பாடமாகச் சொல்கிறார்கள். இப்பொழுது கோடை விடுமுறை முடிந்து விட்டது. பள்ளிக்குச் செல்லத் தொடங்கி விட்டார்கள். இதே பணியை இன்னும் மூன்று வாரங்களுக்கு என் பையன் வீட்டு பேரக் குழந்தைகளுக்கும் நான் செய்ய வேண்டியிருக்கிறது.”

இவ்வளவுதான் நான் 5 பகுதிகளாக விலாவாரியாக எழுதியதன் சாராம்சம்.
103 வார்த்தைகளில் எழுதி முடிக்க வேண்டியதை நான் ஐந்து பாகங்களாக சில ஆயிரம் வார்த்தைகளில் எழுதி முடித்திருக்கிறேன்.

என்னுடைய பதிவை இந்த 103 வார்த்தைகளில் எழுதியிருந்தால் எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது.

இன்டெர்னெட் தயவினால் இன்று பலரும் பத்திரிகையாளராக மாறியிருக்கியிருக்கிறார்கள்.  

ஆனால், பதிவாக எழுதுபவர்களில் – எழுத்தாளர்களில் – இரண்டு வகை. ஒரு சிலர் ரத்தினச் சுருக்கமாக தாங்கள் எழுத வந்ததை ஒரு சில வரிகளில் சொல்லி முடித்து விடுவார்கள். இன்னும் சிலர், விலாவாரியாக எழுதுவார்கள்.
சுருக்கமாக எழுதுபவர்களின் எழுத்துக்கள் சப்பென்று முடிவதுமுண்டு. விலாவாரியாக எழுதுபவர்களின் எழுத்துக்கள் சலிப்பை உண்டாக்குவதுமுண்டு.

என்னுடைய எழுத்துக்கள் சப்பென்று இருக்கிறதா அல்லது சலிப்புட்டுகின்றதா என்பதை வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.

சிறிய வயதிலிருந்தே நாவல்களையும் ­– தமிழிலும், ஆங்கிலத்திலும் - தமிழ் பத்திரிகைகளில் வெளி வந்த தொடர்கதைகளையும் மிகவும் விரும்பிப் படித்தவன் நான். ஒரு சிறிய நூற்கண்டை வைத்துக் கொண்டு முழ நீளச் சேலையை உருவாக்கியவர்களை விரும்பிப் படித்திருக்கிறேன். என்னை அறியாமலேயே என்னுள் சிறு கதைகளை விட நீண்ட கதைகளை, தொடர் கதைகளை விரும்பியிருக்கிறேன் என்று தோன்றுகிறது.

நான் முறையாக எழுத்தாளனான போது என்னுடைய முதல் முயற்சி ஆங்கிலத்தில் ஒரு சிறுகதைப் புத்தகமே. SHORT STORIES FOR YOUNG READERS – BOOK 1 ஆங்கிலத்தில் 7 கதைகளைக் கொண்டது. ஒவ்வொரு கதையும் சுமார் 1500-2000 வார்த்தைகளுக்குள் அடங்கியது. ஒரு சில பள்ளிகளில் இந்தப் புத்தகத்தையும் என்னுடைய இன்னும் இரண்டு சிறு கதைப் புத்தகங்களையும் பள்ளி மாணவர்களுக்காக வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், என்னுடைய இயல்பான அணுகுமுறை என்னை விட்டுப் போகவில்லை. என்னுடைய இரண்டாவது முயற்சி சுமார் 400 பக்கங்கள் கொண்ட ஒரு ஆங்கில நாவல்: WHAT IF OUR DREAMS COME TRUE! AN UNCOMMON MEETING WITH LORD SIVA.

இப்படி சிறு கதைகளையும் நீண்ட கதைகளையும் மாறி மாறி முயற்சி செய்து வருகிறேன்.

இன்னொரு விஷயம்.

நான் விரும்பிப் படிக்கும் பல எழுத்தாளர்கள் தங்கள் கதைகளில் பல புதிய தகவல்களைக் கொடுத்து எழுதியிருப்பார்கள். வர்ணனைகள் நிறைய இருக்கும். உதாரணத்துக்கு, ஒருவர் எக்மோர் ரயில் நிலையத்திற்குள் நுழைவதை எழுதினால் அந்த ரயில் நிலையத்தைப் பற்றி, அங்கே வேலை பார்ப்பவர்களைப் பற்றி, ரயில் பெட்டிகளைப் பற்றி, பயணிகளைப் பற்றி, ஒருவர் நுழையும் நேரத்தில் ரயில் நிலையத்தில் நிலைமை எப்படி இருந்தது, இப்படிப் பல உண்மையான தகவல்களை எழுதியிருப்பார்.

அதே சமயத்தில் தமிழில் ஒரு சில கதாசிரியர்கள் இதே எக்மோர் ரயில் நிலையத்தைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமலேயே ‘சென்னை எக்மோரிலிருந்து ஜோலார்பேட்டைக்கு ரயில் கிளம்பத் தயாராக இருந்தது,’ என்று கூட எழுதியிருக்கிறார்கள். இன்னும் சிலர் ஒரு சிலவற்றைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமலேயே ஏதோ நேரிலேயேப் பார்த்தது போல கதை விட்டிருப்பார்கள். இப்படிப் பட்ட எழுத்தாளர்களை நான் விரும்பியதில்லை.

பல ஆங்கில எழுத்தாளர்கள் நிறைய ஆராய்ச்சிகள் செய்து தங்கள் கதைகளை, கட்டுரைகளை, புத்தகங்களை எழுதுகிறார்கள். பல நுண்ணியத் தகவல்களைத் திரட்டிக் கொடுத்திருப்பார்கள். அந்தத் தகவல்களை நான் விரும்பிப் படிப்பேன். புத்தகத்தைச் சீக்கிரமாக படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக பலரைப் போல அந்தப் பகுதிகளை விட்டுவிட்டு படிக்க மாட்டேன். அவர்கள் எழுதியதைப் படிக்கும் பொழுது என்னுள்ளே அவர்கள் விவரித்ததைப் போலவே ஒரு வீடியோ ஒடிக்கொண்டிருக்கும். ஏதோ நானே நேரில் பார்ப்பது போல.

இந்த பாதிப்பு என்னையும் என் எழுத்துக்களில் தாக்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். முடிந்த அளவு என்னுடைய எழுத்துக்களைச் சுருக்குவதற்கு முயற்சி செய்தாலும் அதை ‘precis writing’ போல எழுதுவது எனக்குப் பிடிக்காது. ஓரு சில தகவல்களைச் சேர்த்தால் சுவாரசியமாக இருக்கும் என்று நான் நினைத்து சேர்ப்பதுண்டு. அப்படித்தான் என்னுடைய WHAT IF OUR DREAMS COME TRUE! AN UNCOMMON MEETING WITH LORD SIVA புத்தகத்தை எழுதி முடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக் கொண்டேன்.  நானே நேராகப் போய் பல சிறிய ஊர்களைப் பார்த்து தகவல்களைத் திரட்டி எழுதியிருந்தேன்.

என்னுடைய ஆத்ம திருப்திக்காகத்தான் எழுதி வருகிறேன். வியாபார அணுகுமுறை தெரியாது. தெரிந்திருந்தால் என்னுடைய புத்தகங்கள் இன்று லட்சக்கணக்கான பிரதிகள் விற்றிருக்கும். என்னுடைய எழுத்துக்களின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையினால் இப்படிச் சொல்கிறேன். அகம்பாவாத்தினால் அல்ல. என்னுடைய புத்தகங்களை ஒரு சிலரே படித்திருந்தாலும் என் எழுத்துக்களை மிகவும் பாராட்டியிருக்கிறார்கள்.  

எப்படி இருந்தும் என் முக நூல் பதிவுகளையும் என்னுடைய இணையதளத்தின் பதிவுகளையும் என் நூல்களையும் படித்தவர்களுக்கும் கருத்து சொன்னவர்களுக்கும் மீண்டும் நன்றி சொல்கிறேன்.

என்னுடைய புத்தகங்கள் பல www.pothi.com என்ற இணையதளத்தில் விலைக்குக்  கிடைக்கும்.

வணக்கம்.

டீ. என். நீலகண்டன்

Wednesday, July 25, 2018

26.07.18 விஷப் பரிட்சை – பாகம் 5 – இறுதி பாகம்


26.07.18 விஷப் பரிட்சை – பாகம் 5 – இறுதி பாகம்

மாடல் பரிட்சையை எழுதி விட்டு இறுதித் தேர்வுக்குக் காத்திருக்கும் மாணவனின் நிலையில் இன்று நான் இருக்கிறேன். அடுத்த ஒரு சில தினங்களில் இதே வேலையை என் பையன் வீட்டில் தொடர வேண்டும். ஏனென்றால், அங்கேயுள்ள என் பேரனுக்கு ஆகஸ்டு மூன்றாம் வாரம் வரை விடுமுறை. இரண்டாம் பேரனுக்கு ‘டயப்பர்’ மாற்ற வேண்டியிருக்கும். இன்னும் Play School-க்குப் போகத் தொடங்கவில்லை. நாங்கள் ஏற்கெனவே ஒத்துக் கொண்டது. அங்கே ஃபீனிக்ஸ் போல் இல்லாமல் எல்லாமே எதிராக இருக்கும். நடுவில் இந்தியாவுக்கே திரும்ப வேண்டியிருக்கலாம். ஒரு நிச்சயமற்ற காலக் கட்டத்தில் நான் இருக்கிறேன்.

ஃபீனிக்சில் என் பேரன் பேத்தியை இரண்டு மாதங்களாக வீட்டிலேயே வைத்துக் கொண்டு – அதிலும் ஒரு மாதம் மனைவியில்லாமல் நான் தனியாகவே – கோடை விடுமுறையைக் கழித்ததில் எனக்கு என்ன கிடைத்தது?

கத்தல், கண்டிப்பு, மிரட்டல், கெஞ்சல், தாஜா செய்தல், கதையளப்பு, என்று என்னுடைய அணுகுமுறையை மாற்றி மாற்றி செய்து வந்ததில் ரத்தக் கொதிப்பு ஏறி ஏறி இறங்கி வந்தது. (I am only saying this figuratively; not in the physical sense.)

கோடை விடுமுறை நாட்கள் முழுவதும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது இதுதான் முதல் முறை. பள்ளிக்குப் போகும் நாட்களில் குழந்தைகள் ‘பிசி’யாக இருப்பார்கள். ஒரு சில நிமிடங்களுக்கு மேல் அவர்களுடன் நேரம் செலவிட முடியாது. மாலை நேரங்களில் மாறி மாறி ஏதேனும் விசேஷ வகுப்புகளுக்கு – நீச்சல், டேக் வான் டோ, சாக்கர்/கால் பந்து விளையாட்டு, கீ போர்டு வகுப்புகள் என்று பல – பெற்றோர்கள் கூட்டிக் கொண்டு போய் விடுவார்கள். திரும்பி வரும் சமயம் அகோரப் பசியில் வருவார்கள். முரண்டு பண்ணி சாப்பிடுவார்கள். பின்னர் முரண்டு பண்ணி தூங்கப் போய்விடுவார்கள். வார இறுதியில், பிறந்த நாள் பார்ட்டி, அல்லது ஏதேனும் ஒரு நண்பர் வீட்டில் கொட்டம், அல்லது விருந்தினர் இப்படி ஓடிப் போய்விடும். பெற்றோர்கள் வீட்டில் இருக்கும் சமயம் குழந்தைகள் நம்மை எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள். எல்லா யுத்தமும் சமரசமும் பெற்றோர்களுடன் தான்.

அதனால், இந்தக் கோடை விடுமுறையில் இரண்டு மாதம் பகல் பொழுது முழுவதும் (மாலை 5 மணி வரை) எங்களுடைய கட்டுப்பாட்டில் குழந்தைகள் இருந்த பொழுது அவர்களுடன் இன்னும் நெருக்கமாக இருப்பதை நான் உணர்ந்தேன். பல நேரங்களில் விரக்தியின் உச்சத்துக்கு அவர்கள் என்னை எடுத்துச் சென்றாலும், “எங்களுக்கு கேம்ப் வேண்டாம், அடுத்த ஆண்டும் கோடை விடுமுறையில் வருவீர்களா,” என்று குழந்தைகள் கேட்டால் “கண்டிப்பாக வருவேன்,” என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அவர்கள் கேட்க மாட்டார்களா என்று ஒரு ஏக்கமும் மனதில் நிற்கிறது.

குழந்தைகள் மென்மையானவர்கள், எளிதில் காயப்படக் கூடியவர்கள், நெளிந்து கொடுப்பவர்கள், எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் மறந்து விடுபவர்கள், வன்மம் அற்றவர்கள், பெரியவர்களை நம்பி இருப்பவர்கள். அவர்களை மென்மையாகத் தான் அணுக வேண்டும். இதை நான் இன்னமும் கற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவு.

என்னைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? தெரியவில்லை. அவர்களுக்கு கோடை கேம்புக்கு போகக் கூடாது. அது மட்டும் தான் குறிக்கோள்.

இந்தக் கோடை விடுமுறையை அவர்கள் விருப்பப்படி விட்டிருக்க வேண்டுமோ, அவர்களை இப்படி ஆட்டிப் படைத்திருக்க வேண்டாமோ, நான் மிகக் குரூரமாக, கடுமையாக இருந்திருக்க வேண்டாமோ என்றெல்லாம் மனதில் தோன்றுகிறது.

நான் ஒரு சர்வாதிகாரி என்பதை எனக்கு அவர்கள் மீண்டும் மீண்டும் காட்டிக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் மீது எனக்கிருந்த பாசத்தை அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்களா, தெரியாது.

வளரும் பருவத்தில் தான் ஒரு சில புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும், நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ள முடியும், அதனால்தான் கண்டிப்பாக இருந்திருக்கிறேன் என்பதை அவர்களுக்குச் சொல்லிக் காட்டியும் புரிந்து கொண்டிருப்பார்களா என்று தெரியவில்லை. விளையாட்டுத் தனமாகவே இருக்கிறார்கள். நாளா வட்டத்தில் மாறுவார்கள் என்று நம்புகிறேன்.

அடிப்படையில் குழந்தைகள் எல்லோருமே நல்லவர்கள். ஏன், நான் கூட என் குழந்தைப் பருவத்துக்கு முடிந்தால் போக விருப்பப்படுகிறேன். ஒரு குழந்தையாகவே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் நினைக்கிறேன். என் உள்ளேயும் ஒரு குழந்தை இருக்கிறது. நானும் பல நேரங்களில் குழந்தைத்தனமாக நடந்து கொண்டிருக்கிறேன்.

குழந்தை வளர்ப்பு பற்றிய பல புத்தகங்களை நான் படித்து எனக்கென்று ஒரு சில கருத்துக்களையும் வளர்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த கர்வம் எனக்கு இருக்கிறது.

ஆனால், நடைமுறை என்று வரும் பொழுது நான் எப்படி வளர்க்கப் பட்டேனோ, எந்த கண்டிஷன்களுக்கு பழக்கப்படுத்தப்பட்டேனோ அப்படியே மனதளவில் வளர்ந்த பிறகும் நடந்து கொள்கிறேன். சிறு வயதிலிருந்து – என் பெற்றோர்கள், முதியவர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பள்ளியின் ஆசிரியர்கள், நான் கற்ற கல்வி, மற்றவர்கள் என்னை நோக்கிய விதம், - இப்படி எல்லோருமே என்னை பாதித்திருக்கிறார்கள். என்னுடைய இன்றைய பெர்சனாலிடியை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தப் பாதிப்பில் உருவானவன் தான் இன்றைய ‘நான்.’ ஆனால், சிறு வயதில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை. நான் மாறவேயில்லை.
வயதில் பெரியவன் என்ற முறையில் நானும் சிறுவர்களை அது போன்ற கண்டிஷன்களுக்கு தள்ளக் கூடாதல்லவா?

நான் யார் என்பதைக் காட்டிய கண்ணாடி இந்த சிறு குழந்தைகள். என்னை நான் அறிந்து கொள்ள உதவிய கருவிகள். 

இந்த என்னுடைய ‘நானை’ நான் விரும்பவில்லை. வெறுக்கிறேன். மாற வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த என்னுடைய ‘நானி’லிருந்து விடுபட வேண்டும். அதுதான் என் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டும். அஹங்காரத்திலிருந்து விடுபட வேண்டும். எப்படி என்றுதான் புரியவில்லை. இறையருளாலேயே இந்த மாற்றம் வரும் என்றும் நம்புகிறேன்.

நான் இதுவரை 5 பாகங்களாக என் அனுபவங்களை எழுதியதைப் பொறுமையாக படித்தவர்களுக்கும், தங்கள் கருத்துக்களை தெரிவித்தவர்களுக்கும் நன்றி. இறைவன் எல்லோரையும் காப்பானாக.

நன்றி. மீண்டும் சந்திப்போம்.


Tuesday, July 24, 2018

25.07.18 விஷப் பரிட்சை – பாகம் 4


25.07.18 விஷப் பரிட்சை – பாகம் 4

எனக்கு சிறு வயதிலிருந்தே ஆங்கிலத்தில் ஈடுபாடு நிறைய இருந்ததால் நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் படித்தேன். கட்டுரைகள் எழுதினேன். பேசினேன். இன்று ஆங்கிலத்தில்  நான் ஒரு எழுத்தாளர். ஆசிரியர். பேச்சாளர். (என்ன கர்வம் பாரு இவனுக்கு என்று யாரோ சொல்வது எனக்குக் கேட்கிறது)

ஆனால், எனக்கு ஒரு குறை இருந்தது (அப்பாடா… திருஷ்டிப் பரிகாரம்)

சிறு வயது முதலே வெளிநாட்டவர்கள் பேசும் ஆங்கிலம் எனக்குப் புரியவே புரியாது. ஆங்கிலப் படங்கள் நிறைய பார்த்தாலும் எனக்கு அவர்கள் பேசும் ‘டயலாக்’ புரியாது. ஏன் என்று இன்று வரை எனக்குப் புரியவில்லை. இன்றும் நிறைய ஆங்கிலப் படங்கள் பார்க்கிறேன். ஆனால், ‘சப்டைட்டில்’ போடவில்லையென்றால் ‘டயலாக்’ புரியாது. இந்தக் குறையைப் போக்க எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை. காது வேறு இப்பொழுது கொஞ்சம் மந்தமாகி விட்டது. (இப்ப ஒரு சாக்கு கிடைத்தது) கடைசியில் என் முயற்சிகளை விட்டு விட்டேன்.

என்னுடைய இந்தக் குறையினால் எனக்கு ஒரு பெரும் இடைஞ்சல் இருந்தது. என் பேரன் பேத்திகள் ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள். தமிழ் ஓரளவு புரிந்தாலும், அவர்கள் பேசுவது என்னவோ ஆங்கிலம் தான். இதற்கு முன்பு அவர்களை தமிழில் பேச வைக்க எடுத்த முயற்சிகள் எல்லாம் தோற்றுப் போய்விட்டன. அவர்கள் என்னுடன் பேசும் பொழுது அவர்களின் “ஆக்சென்ட்” எனக்குப் புரிவதில்லை. ஒரு முறைக்குப் பல முறை மீண்டும் மீண்டும் அவர்களை சொல்லச் சொல்லியே அவர்கள் சொல்ல வந்ததை புரிந்து கொள்கிறேன்.

“Thatha, you read English, write English, speak English … but you don’t understand English.” என்னுடைய பேரனின் பிரபல கமெண்ட்.  

அதனால் என்னுடைய முயற்சியை இந்த முறை மாற்றிக் கொண்டேன். தமிழில் எழுதவும், எழுதியதை உரக்க வாசிக்கவும் கற்றுக் கொண்டார்களேயானால் அவர்கள் கூடிய விரைவில் பேசவும் தொடங்குவார்கள் என்று நம்பினேன்.

Vocalization is very important while trying to learn to speak a language.

அதனால் இந்த விடுமுறையின் போது தமிழ் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடுக்க ‘அ, ஆ’ வன்னாவிலிருந்து முறையாக ஆரம்பித்தேன். முதலில் எழுத்துக்கள். பின்னர் வார்த்தைகள். பின்னர் வாக்கியங்கள்.

“தமிழில் 247 எழுத்துக்களா? ஐயோ… ஆங்கிலத்தில் வெறும் 26 எழுத்துக்கள் …”பேரனும் பேத்தியும் சலித்துக் கொண்டார்கள்.

தினமும் அரை மணி நேரம் ஸ்லோகங்கள் கற்றுக் கொள்வது, அரை மணி நேரம் தமிழ் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொள்வது, அரை மணி நேரம் கீ போர்டு பயிற்சி செய்வது என்று பொது ஒப்பந்தம். ஒழுங்காக ப்ரேக்ஃபஸ்ட், லஞ்ச் சாப்பிட வேண்டும். இதை முறையாகச் செய்தால் மதியம் 1.30 முதல் 3.30 வரை (அது தான் நான் தினமும் தூங்கும் நேரம். என் தூக்கம் கெடக் கூடாது என்பதில் நான் குறியாக இருந்தேன்.) அவர்கள் ஐ-பேட்/ஐ-ஃபோன்/யூடியூப் பார்க்கலாம். அல்லது பக்கத்து வீட்டு நண்பனுடன் விளையாடலாம். இது கண்டிஷன். இல்லாவிட்டால் அதைத் துறக்க வேண்டி வரும்.

தினமும் பாரதப் போர் நடந்தது. நேரக் கட்டுப்பாட்டுக்குள் குழந்தைகள் வரவே மாட்டார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் எதை இழக்க வேண்டியிருக்கும் என்பதை ஞாபகப்படுத்தியே அவர்களிடம் காரியம் செய்ய வைக்க வேண்டியிருந்தது.

இதற்கிடையில் என் மாமியாருக்குத் திடீரென்று உடல் நலமில்லாமல் மருத்துவ மனையில் ‘இன்டென்சிவ் கேரி’ல் சேர்க்கப் பட்டதால் மனைவி இந்தியாவுக்குப் பறக்க நேரிட்டது.

தனி ஆவர்த்தனம் பண்ண வேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். ஒரு ஆசிரியராக, ஒரு தாயாக, ஒரு பாதுகாவலனாக, ஒரு காவல்காரனாக … தொப்பியை அடிக்கடி மாற்ற வேண்டியிருந்தது.  நேரத்துக்குத் தகுந்தாற் போல் என்னுடைய அணுகுமுறையையும் குரலையும் கண்டிப்பையையும் மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. நானும் நிறைய விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது.

ஒரு தாயின் பொறுமை எவ்வளவு முக்கியம் என்பதை முதன் முறையாக உணர்ந்தேன். மனைவியில்லாமல் நாளைக் கழிப்பது எவ்வளவு கடினம் என்பதையும் உணர்ந்தேன். சமயத்தில் அழுகை வரும் எனக்கு.

என் பேரனின் பக்கத்து வீட்டு நண்பனுக்கு இது போல கட்டுப்பாடு எதுவும் இருக்கவில்லை போலும். அடிக்கடி வந்து வாசலில் ‘பெல்’லை அழுத்துவான். விளையாடுவதற்கு அழைப்பான்.

“நாம் ஒப்புக் கொண்ட வேலைகளை முடித்து விட்டு விளையாடு, ஐ-பேடு பாரு… என்ன வேண்டுமானாலும் செய்துகொள்… அதற்கு முன்… மூச்” நான் கண்டிப்போடு சொல்லி விடுவேன். எனக்கு குறிக்கோள் முக்கியம்.

“Tiger Mom” என்ற புத்தகத்தில் படித்திருக்கிறேன். “என்னுடைய வேலை உங்களை என் மீது அன்பு செலுத்த வைப்பதல்ல. என்னுடைய வேலை உங்களை சொந்தக் காலில் நிற்க வைப்பதுதான்” என்று அந்தத் தாய் தன் இரு மகள்களிடம் கண்டிப்பு காட்டி வளர்த்திருக்கிறார்.

“My job is not to make you love me; but to make you stand on your own legs.” எனக்கு மிகவும் பிடித்த வாசகம்.

என்னுடைய கண்டிப்பினாலும், எங்கே கேம்புக்கு அனுப்பி விடுவார்களோ என்ற பயத்திலும் குழந்தைகள் முனகியும் அழுதும் ஆர்ப்பாட்டம் செய்தும் தினமும் தமிழ் கற்றுக் கொண்டார்கள். ஸ்லோகங்கள் கற்றுக் கொண்டார்கள். அதிசயமாக தினமும் 15 நிமிடங்கள் கீபோர்டு வாசித்தார்கள். ஒழுங்காகச் சாப்பிட்டார்கள்.

என் பேரன் இப்பொழுது 247 தமிழ் எழுத்துக்களையும் தெரிந்து கொண்டிருக்கிறான். எழுத்துக் கூட்டி முதலில் வார்த்தைகளையும், பின்னர் வார்த்தைகளைக் கூட்டி வாக்கியங்களையும் வாய் விட்டுப் படிக்கத் தெரிந்து கொண்டிருக்கிறான். (கொஞ்சம் சிரமப் படுவான். கொஞ்சம் ‘ப்ராம்ப்டிங்’ செய்ய வேண்டியிருக்கும்.) இருந்தாலும் குறைந்த நாட்களில் பெரிய சாதனை. பேத்தி தமிழில் 30% எழுத்துக்களை மட்டுமே கற்றுக் கொண்டாள். கற்றுக்கொண்ட எழுத்துக்கள் அடங்கிய வார்த்தைகளை வாய்விட்டு படிக்கவும் செய்வாள்.

கோடை விடுமுறை ஆரம்பித்த நாட்களில் தாங்கள் செய்வதாக ஒப்புக்கொண்ட மற்ற விஷயங்களை நான் அதிகமாக வற்புறுத்தவில்லை.

I felt it was better to have a tall objective and achieve whatever you can rather than aim little and achieve nothing.

இப்பொழுது கோடை விடுமுறை முடிந்து திங்கள் முதல் பள்ளிக்குச் செல்ல தொடங்கி விட்டார்கள். இனி தலைவலி அம்மா அப்பாவுக்கு மட்டும். முழு ஒரு மாதம் தனியாக பகல் வேளையில் இரு ஹைப்பர்-ஆக்டிவ் குழந்தைகளை சமாளித்திருக்கிறேன். பல நாட்கள் எல்லோருக்கும் சமையல் செய்திருக்கிறேன். என் மனைவி இதே வேலைகளை அசால்டாக செய்து முடித்திருப்பாள்.

நானும் என் பொறுப்பு எப்படி முடிந்தது என்பதைப் பற்றி எழுதவும் அமர்ந்து விட்டேன்.

சரி, இதில் எனக்கு என்ன கிடைத்தது? What was in it for me?

அடுத்த பகுதியில் கண்டிப்பாக முடித்து விடுகிறேன்.


Monday, July 23, 2018

24.07.2018 விஷப் பரிட்சை – பாகம் 3


24.07.2018 விஷப் பரிட்சை – பாகம் 3

விஷப் பரிட்சை ஆரம்பமாகி விட்டது.

விடுமுறை ஆரம்பத்தில் ஃபீனிக்ஸில் வெளியே அவ்வளவு கடுமையான சூடில்லை. அதனால் காலை வேளையில் சைக்கிளில் பக்கத்து ஏரியாக்களில் சுற்றுவது என்று தீர்மானம் செய்தோம். சண்டிக் குதிரைகளுக்கு வெளியே சுற்ற விருப்பம். அதை சாக்கிட்டாவது காலையில் சீக்கிரம் எழுந்திருந்தால் சரி என்று முகத்தில் தண்ணீர் தெளிக்காத குறையாக காலை 06.30-க்கு குழந்தைகளை எழுப்பி விட்டு சைக்கிளில் வெளியே கிளம்பினேன். (விடுமுறையின் போது காலை ஒன்பது - பத்து மணிக்கு முன்னால் எழுந்திருக்கக் கூடாது என்பது அரசியல் சாசனத்தில் கூறப்படாத சட்டம் என்பது எல்லோருக்கும் தெரியும்.)

என் பேரனுடன் தனியாக ஒரு நாளும் அடுத்த நாள் பேத்தியுடனுன் என்றும் ஒரு ஒப்பந்தம்.

கண்டிஷன்: சீக்கிரம் எழுந்திருந்தால் தான்.

பேத்திக்கு இன்னமும் சைக்கிள்  நன்றாக ஓட்டத் தெரியாது. அதனால் முதல் இரண்டு மூன்று முறை அவள் சைக்கிள் சீட்டின் பின் பக்கத்தைப் பிடித்துக் கொண்டு அவளை பெடல் செய்யச் சொல்லி பாலன்ஸ் செய்து கொள்ளக் கற்றுக் கொடுத்தேன். முதுகு எனக்கு பெண்டு எடுக்கும். பின் அவள் வேகமாக பெடல் செய்தால்தான் பாலன்ஸ் கிடைக்கிறது என்பதினால் அவள் கூட ஓடத் தொடங்கினேன். எனக்கும் ஓட்டப் பயிற்சி.

70 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் எனக்கு 6 வயது சிறுமியை சைக்கிளில் பெடல் செய்யச் சொல்லி சைக்கிள் பின்னால் பி. டி. உஷா போலவா என்னால் ஓட முடியும்? இருந்தும் ஒரு சில நாள் ஓடினேன். ஒரு நாள் ஓடியதில்  முதுகில் கீழ்ப் பக்கம் நன்றாகப் பிடித்துக் கொண்டது.

ஃபட்…

சைக்கிள் ஓட்டுவது ஏறக் குறைய அன்றோடு நின்று விட்டது. சூரியனும் காலையிலேயே உக்ரமாகத் தொடங்கி விட்டான்.

ஒன்பது மணிக்கு ஸ்லோகம் கிளாஸ் என்று ஒத்துக் கொண்டோம். கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். குழந்தைகள் வருவது போல இல்லை. ஞாபகப்படுத்தியாகி விட்டது. பயனில்லை.

அஸ்திரத்தை உபயோகிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

“இன்னும் ஐந்து நிமிடங்களில் நீங்கள் வரவில்லையென்றால் மதியம் ஐ-பேட் டைம் கட்,” கோபமாக கத்திய பிறகு ஒரு வினாடி கூட தாமதிக்காமல் ஓடி வந்தார்கள்.

வினாயகருக்கு மூன்று ஸ்லோகங்கள், சரஸ்வதிக்கு மூன்று ஸ்லோகங்கள், சிவனுக்கு ஒன்று, சாந்தி மந்திரங்கள் கூட்டு வழிபாட்டுக்கு மூன்று, மஹாலக்ஷ்மியஷ்டகம், ஆஞ்சனேயர் ஸ்லோகங்கள் என்று படிப்படியாக வகுப்புகள் ஏறிக் கொண்டே போயின. ஸ்லோகங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னர் மூச்சுப் பயிற்சி, “ஓம்” –உடன் தியானப் பயிற்சி. ஸ்லோகங்கள் எல்லாமே வாய் வழியாக. எதையும் எழுதிக் கொடுக்கவில்லை. கேட்டு, திருப்பிச் சொல்லி, மனப்பாடம் செய்ய வேண்டும். நடு நடுவே விஷ்ணு சஹஸ்ர நாமத்தை பேரன் மனப்பாடம் செய்ய வேண்டும்.

“இன்னும் எவ்வளவு நேரம் ஸ்லோக கிளாஸ் நடக்கும்,” பேரனும் பேத்தியும் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.

“நான் எப்பொ முடிப்பேனோ அப்ப தான்,” என்னுடைய கண்டிப்பான பதில்.

“தா..த்…தா,” பெரிய முனகல் இரண்டு பேரிடமிருந்தும் ஒரே சமயத்தில் வரும். கோபத்தில் அவர்கள் கண்கள் சிவக்கும்.

“மூச்… மத்தியானம் ஐ-பேட் வேண்டுமா, வேண்டாமா?”

அமைதியாகி விடுவார்கள்.

அடிக்கடி தர்ம யுத்தம் நடக்கும். ஸ்லோகங்கள் சொல்லும் பொழுது மட்டும் அவர்கள் குரல் உள்ளேயே போய் விடும். “சத்தம் போட்டுச் சொல்லுங்க,” என்று நான் கத்த வேண்டியிருக்கும். என்னை நக்கல் செய்வதற்காகவே அவர்கள் வேண்டுமென்றே அடித் தொண்டையிலிருந்து கத்திச் சொல்வார்கள்.

தீடீரென்று ஒருத்தரைப் பார்த்து ஒருத்தர் சிரிப்பார்கள். அடுத்த சில நிமிடங்களுக்கு அவர்களை கட்டுப் படுத்த முடியாது.

எங்கள் வகுப்புகளில் நவ சுவையும் அடங்கியிருக்கும். முனகல், அழுகை, கத்தல், சிரிப்பு, கோபம், எரிச்சல், நையாண்டி, கெஞ்சல், மிரட்டல்…

“விருப்பமில்லா விட்டால் இன்றோடு ஸ்லோகக் கிளாசை நிறுத்தி விடுகிறேன்.”

“நோ… தாத்தா … we want to learn…”

இல்லையென்றால், தாத்தா ‘சம்மர் கேம்பு’க்கு அனுப்பி விட்டால் என்ன செய்வது என்ற பயம் அவர்கள் மனதின் அடித்தளத்தில் இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

மனிதன் இரண்டு காரணங்களுக்காகத்தான் நல்லவனாக இருக்க முயற்சி செய்கிறான். ஒன்று நல்ல பலன்களை எதிர்பார்த்து. இரண்டு. தண்டனைக்குப் பயந்து. ஆனால், நடைமுறையில் தண்டனைக்குப் பயந்து தான் நம்மில் பெரும்பாலோர் நல்லவனாக இருக்க முயற்சிக்கிறோம் என்பது நிதர்சனமான உண்மை. ஸ்ரீ தயானந்த் சுவாவிகளின் ‘தர்மத்தின் மதிப்புதான் என்ன?’ என்ற புத்தகத்தைப் படித்தால் தெரியும்.

இந்தக் கண்டிஷனிங்கை சிறு வயதிலிருந்தே பெற்றோர்களும், முதியவர்களும் (என்னையும் சேர்த்து) வளர்த்து விடுகிறார்கள். சரியாக நடந்து கொள்ளவில்லையென்றால் சாமி கண்ணைக் குத்தும். இப்படிச் சொல்லித் தானே நாம் சிறுவர்களை வளர்க்கிறோம். கட்டுப்படுத்துகிறோம்.

எனக்கு முற்றிலும் பிடிக்காத விஷயம் இது. ஆனால், நடைமுறையில் இதுதான் வொர்க் ஔட் ஆகிறது என்பதும் கசப்பான உண்மை.

இப்படி பல போராட்டங்களுக்குப் பிறகு குழந்தைகள் இன்று அந்த ஸ்லோகங்கள் எல்லாவற்றையும் மனப்பாடமாக கூடியவரை ஸ்பஷ்டமாகச் சொல்கிறார்கள். என்னுடைய வித்யா கர்வம் என்னை சந்தோஷப்பட வைக்கிறது.

Does it mean, the end justifies the means? I just received the book titled” POSITIVE  DISCIPLINE By JANE NELSEN Ed. D from Amazon. Let me see what she says!

அவ்வளவு சீக்கிரம் என்னுடைய அனுபவங்களை எழுதி முடித்து விட முடியுமா? அடுத்தது தமிழ் கிளாஸ்.

இன்னும்   நாளை தொடரும்…

“நாளையாவது முடித்து விடுவீர்களா?” என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.

“ நான் எப்ப முடிப்பேனோ அப்பதான்” – அதே பதில்தான் உங்களுக்கும்.

Sunday, July 22, 2018

23.07.18 விஷப் பரிட்சை – பாகம் 2


23.07.18 விஷப் பரிட்சை – பாகம் 2

உறுதி கொடுத்தபடி கோடை விடுமுறைக்கு ஃபீனிக்ஸ் வந்தாகி விட்டது. விடுமுறையும் வந்து விட்டது.

மே கடைசி வாரம்.

எனக்கு எல்லாமே சிஸ்டமேடிக்காக இருக்க வேண்டும்.

என் பேரன் (வயது 9) பேத்தியுடன் (வயது 6) உட்கார்ந்து பேச்சு வார்த்தையைத் தொடங்கினேன். பேச்சு வார்த்தை மூலம் சிறுவர்கள் ஒத்துக் கொண்ட விஷயங்களில் அவர்கள் ஒத்துழைப்பு அதிகமாக இருக்கும் என்று படித்திருக்கிறேன்.

தியரியை ப்ராக்டிகலாக பரிசோதனை செய்ய நல்ல சந்தர்ப்பம்.

‘சரி, சொல்லுங்கள். இந்த விடுமுறையில் என்னென்ன செய்ய விரும்புகிறீர்கள், என்னென்ன செய்ய விரும்பவில்லை. யோசித்து ஒரு காகிதத்தில் எனக்கு எழுதிக் காட்டுங்கள். அதே போல நானும் நீங்கள் என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக் கூடாது என்று எழுதிக் காட்டுகிறேன். பின் இருவரும் பேசி ஒரு பொதுவான ஒப்பந்தத்துக்கு வருவோம். அதுபடி கண்டிப்பாக நடந்து கொள்வோம்.’

Management by consensus and agreement.

எதையும் வித்தியாசமாகச் செய்வதில் பசங்களுக்குக் ஒரு உற்சாகம்.
எழுதிக் கொண்டு வந்தார்கள். அவர்கள் பட்டியலிலிருந்து:

அவர்கள் செய்ய விரும்பியவை: ஐ-பேட் பார்ப்பது, பக்கத்து வீட்டு நண்பனுடன் விளையாடுவது, மற்ற விளையாட்டுக்கள், புத்தகம் படிப்பது, படம் வரைவது, புதியதாக ஏதேனும் கட்டுவது

அவர்கள் செய்ய விரும்பாதது: கணக்கு வீட்டுப் பாடம் செய்வது, கீ போர்டு வாசித்து பயிற்சி செய்வது, ஹோம்வொர்க்

நான் எதிர்பார்த்தபடியே அவர்கள் பட்டியல் அமைந்திருந்தது.

நான் எழுதிய பட்டியலிலிருந்து:

அவர்கள் என்ன செய்ய வேண்டும்: தமிழ் கற்றுக் கொள்வது, ஸ்லோகங்கள் கற்றுக் கொள்வது, சைக்கிளில் சுற்றுவது, தானாகவே யாரும் ஊட்டாமல் சாப்பிடுவது, காலை 6.30க்கு எழுந்திருப்பது, கீ போர்டு பயிற்சி செய்வது, தாத்தா/பாட்டியுடன் விளையாடுவது, சமையல் கற்றுக் கொள்வது, டிஷ் வாஷர் லோட் செய்வது, தோட்டத்தில் தண்ணீர் பீய்ச்சி விளையாடுவது, புத்தகம் படிப்பது, படம் வரைவது, கதைகள், கட்டுரைகள் எழுதுவது, வீட்டை சுத்தம் செய்வது, படிப்பு தொடர்பான வீடியோக்கள் பார்ப்பது, ஆராய்ச்சிக் கட்டுரை/ விஞ்ஞானக் கட்டுரைகள் தயாரிப்பது, தினப்படி டயரி எழுதுவது, நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொள்வது….

அப்பா! எழுதுவதற்கே மூச்சு வாங்குகிறது … இதைப் பின்பற்ற வேண்டுமென்றால்…

அவர்கள் என்ன செய்யக் கூடாது: எல்லாவற்றிற்கும் கத்துவது, அழுது முரண்டு செய்வது, தங்கையை சீண்டுவது, சோம்பேறித்தனமாக நேரத்தை ஓட்டுவது, மதியம் 1.30 முதல் 3.30 மணி நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் ஐ-பேட், ஐ-ஃபோன், கம்ப்யூட்டர் பார்ப்பது …

தமிழ் தெரிந்திருந்தால் ‘வந்திட்டாரய்யா … வந்திட்டார்’ என்று பசங்க கமெண்ட் அடித்திருப்பார்கள்.

பிறகு ஆரம்பித்தது … பேச்சு வார்த்தை … negotiations, hard bargaining, compromise 

நான் ஒரு ராணுவத் தளபதி என்பதை வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் நிருபித்துக் கொண்டிருந்தேன்.

பேச்சு வார்த்தையில் பேரனும் பேத்தியும் நிறைய சமரசம் செய்து கொண்டார்கள். இல்லையென்றால் கோடை காம்ப்தான் என்பது அவர்களுக்கு நன்றாகப் புரிந்திருந்தது.

They perfectly understood the rewards-punishments system, better than me. அவர்களது ஒரே குறிக்கோள் கேம்புக்குப் போகக் கூடாது. அதற்காக எந்த தியாகத்துக்கும் தயாராக இருந்தார்கள். பொதுவாக என்னுடைய பட்டியலில் எல்லாவற்றிற்கும் ஒத்துக் கொண்டார்கள்.

“சரி, நீங்கள் ஒத்துக் கொண்டதை நிறைவேற்றா விட்டால் எதைத் துறப்பதற்குத் தயாராக இருப்பீர்கள்?” என்று என்னுடைய அடுத்த agreed solution to problem-க்குத் தாவினேன்.

Again, hard negotiation was involved.

“நாங்கள் ஒத்துக் கொண்டபடி செய்யாவிட்டால், எங்களுடைய ஐ-பேட் டைம், நண்பர்களுடன் விளையாடும் டைம், அடிக்கடி வெளியே போய் உணவு உண்பது – இவற்றை விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறோம்.”

சண்டிக் குதிரைகளை வழிக்குக் கொண்டு வரவேண்டுமே? இந்திய தத்துவப் படி சாம, தான, பேதத்தை உபயோகிப்பதைத் தவிர வேறு வழியில்லை. தண்டம் உபயோகிக்க முடியாது அமெரிக்காவில்.

பின் என்ன நடந்தது?

கொஞ்சம் பொறுங்கள்.  நாளை பார்க்கலாம்.


Saturday, July 21, 2018

22.07.18 விஷப் பரிட்சை – பாகம் 1


22.07.18 விஷப் பரிட்சை – பாகம் 1

கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் முகநூலிலிருந்தும் என்னுடைய வலைதளத்திலிருந்தும் நான் காணாமல் போயிருந்தேன். என்ன, உடல் நலம் சரியில்லையா என்று கூட ஒரு சிலர் விசாரித்திருந்தார்கள். நல்ல காலம் அப்படியெல்லாம் இல்லை. நான் காணாமல் போன கதைதான் இந்தப் பதிவு.

விரும்பியோ விரும்பாமலோ அமெரிக்காவின் க்ரீன் கார்டை வாங்கிக் கொண்ட காரணத்தினால் நானும் என் மனைவியும் ஆண்டு தோறும் இங்கே வருவது ஒரு கட்டாயமாகி விட்டது. பொதுவாக குளிர்காலத்தை ஃபீனிக்சிலும் கோடை காலத்தை சிக்காகோவிலும் என்றுதான் கழித்து வந்தோம். ஜூலை – டிசம்பர் பொதுவாக இந்தியாவில்.

ஃபீனிக்ஸ் ஒரு பாலைவன நகரம். பாலைவனத்தைச் சோலைவனமாக மாற்றியிருந்தாலும் 1100F சூட்டில் வானத்துக்கு கூரை போட இவர்களால் முடியவில்லை. ஃபீனிக்சில் பள்ளிகளில் ஒரு பழக்கமென்னவென்றால், ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு சிறிய - ஒரு முழு வாரம் - ப்ரேக் கொடுத்து விடுகிறார்கள். மார்ச்சில் ஸ்ப்ரிங்க் ப்ரேக், அக்டோபரில் ஃபால் ப்ரேக், டிசம்பரில் வின்டர் ப்ரேக். கோடையில் மே கடைசி முதல் ஜூலை கடைசி வரை மட்டும் நீண்ட ப்ரேக் - முழு இரண்டு மாதம்.

சிறிய விடுமுறைகளுக்கு குழந்தைகளின் பெற்றோர்கள் எப்படியோ அங்கே இங்கே கூட்டிக்கொண்டு போயும் மாறி மாறி வீட்டிலிருந்து வேலை பார்த்தும் சமாளித்து விடுகிறார்கள். ஆனால்…

கோடை காலத்தில் ஃபீனிக்சில் என் மகள் வழி பேரன் பேத்தி இருவரும் பள்ளிச் சிறுவர்களுக்காக நடக்கும் முழுநேரக் கோடை காம்புக்குப் போய் விடுகிறார்கள். அவர்கள் அப்பா/அம்மா அலுவலகத்துக்குப் போகும் பொழுது காம்பில் விட்டு விட்டு போவார்கள். திரும்பும் பொழுது கூட்டிக்கொண்டு வந்து விடுவார்கள்.

இந்த காம்புகளில் சிறுவர்களை அவர்கள் வயதுக்கேற்ப பலவிதமாக ஈடுபடுத்தி விடுகிறார்கள். நிறைய கற்றுக் கொடுக்கவும் செய்கிறார்கள். ஆனால், என்னுடைய பேரன் பேத்தியைப் பொருத்த வரை காம்ப் என்றால் போர். ஒவ்வொரு நாளும் முனகிக் கொண்டு மனமில்லாமலே இந்த கோடைக் காம்புக்குப் போய் வந்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த வலியை அவர்கள் பொறுத்துக் கொண்டாக வேண்டும்.

என் பேரன் பேத்தி மேல் இருந்த (கண்மூடித்தனமான) ஒரு பாசத்தில் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு நாங்கள் அவர்கள் கூட நேரத்தை செலவிடுகிறோம். அதனால் கோடை காம்புக்குப் போக வேண்டாம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தேன். குழந்தைகளுக்கு ஏகக் குஷி.

வரப் போகும் அபாயத்தையும் என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பதையும் நான் புரிந்து கொள்ளாமல் கொடுத்த வாக்குறுதி என்னை இரண்டு மாதத்துக்குக் கட்டிப் போட்டு விட்டது.

என்னுடைய குணத்தையும் முழுவதுமாக புரிந்து கொள்ளாமல் குழந்தைகளும் என்னை நம்பி என்னுடன் கோடை நேரத்தை செலவிட ஒத்துக் கொண்டு விட்டனர்.

விஷப் பரிட்சை ஆரம்பித்து விட்டது.

கோடையில் அதிகாலை நேரத்தைத் தவிர எந்த நேரத்திலும் வெளியே போக முடியாது. அனல் பறக்கும். உலர்ந்த பருவனிலை. வீட்டுக்குள்ளேயே அடங்கியிருக்க வேண்டும். 9 மற்றும் 6 வயது கொண்ட ஹைப்பர் ஆக்டிவ் பேரன் பேத்தியை சமாளித்தாக வேண்டும்.

நான் ஒரு ‘பிக் பாஸ்’ சும்மா விடுவேனா? என்ன நடந்தது? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(ஓரு இருநூறு முன்னூறு வார்த்தைகளைக் கூடத் தொடர்ந்து படிப்பதற்கு பலருக்கும் இன்று பொறுமையில்லாததால் இத்துடன் நிறுத்திக் கொண்டு நாளை மீண்டும் தொடர்கிறேன்.)