11.03.2021 வேளாண்மை மேம்பாட்டில் என்னுடைய பங்கு
நேற்று
முகநூலில் யாரோ ஒருவரின் பக்கத்தில் மத்திய அமைச்சர் திரு கட்கரி அவர்கள் சிறு, குறு
தொழில்களின் வளர்ச்சிக்காக அவர் எடுத்த ஒரு சில முயற்சிகளை பாராளுமன்றத்தில் விவரித்துக்
கொண்டிருந்ததைப் பார்த்தேன். வித்தியாசமாக யோசித்துப் பார்த்தால் பல நேரங்களில் பல
சாதனைகளைச் செய்யலாம் என்பதை அமைச்சருடைய பேச்சு எனக்கு நினைவூட்டியது. ஹிந்தியில்
அமைச்சர் பேசியது, வார்த்தைக்கு வார்த்தை எனக்குப் புரியாவிட்டாலும், மிகவும் சுவாரசியமாக
இருந்தது. ஆனால், அவரது முழுப் பேச்சையும் கேட்பதற்குள் நான் அப்படியே தூங்கிவிட்டேன்.
தூங்கி விழித்த பிறகு ஏனோ அந்த வீடியோ எனக்கு மீண்டும் கிடைக்கவில்லை.
என்னுடைய
நினைவுகள் என்னுடைய ஒரு முக்கியமான பழைய அனுபவத்துக்கு ஓடிச் சென்றன.
1986-87-ஆம்
ஆண்டு
நான்
கௌஹாத்தியில் ஒரு பொதுத்துறை வங்கியில் பிராந்திய மேலாளராக அசாம் மற்றும் வடக்கு வங்காளம்
பகுதியில் இருந்த சுமார் 22 கிளைகளுக்கு பொறுப்பாளராக இருந்த சமயம்.
அதே
நேரத்தில் கௌஹாத்தியை தலைமையிடமாகக் கொண்டு நெராமேக் (NERAMAC – NORTHEASTERN REGIONAL
AGRICULTURAL MARKETING CORPORATION) என்ற மத்திய அரசாங்கத்தின் ஒரு புதிய நிறுவனத்துக்கு
கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தலைவராகவும் மேலாண் இயக்குனராகவும் பதவியேற்றார். அவர் பதவியேற்ற
ஒரு சில வாரங்களிலேயே எனக்கு அவருடன் தொடர்பு ஏற்பட்டது. இருவருக்கும் விரைவில் நல்ல
புரிதலும் ஏற்பட்டது. எங்கள் வங்கியிலே நெராமாக்கின் கணக்கும் துவக்கப்பட்டது. எங்கள்
கௌஹாத்தி கிளை மேலாளரும் ஒரு கேரளாக்காரர். அதனால், அவருக்கும் அந்த அதிகாரியுடன் நல்ல
தொடர்பும் நட்பும் ஏற்பட்டு விட்டது. எங்கள் கௌஹாத்தி கிளையின் மிகப் பெரிய கணக்காக
நெராமேக்கின் கணக்கு இருந்தது மற்ற பல வங்கிகளுக்குப் பொறாமையாக இருந்தது.
நெராமேக்கின்
முக்கியமான குறிக்கோள் வடகிழக்கு மானிலங்களின் வேளாண் விளைபொருட்களுக்கு நல்ல ஒரு சந்தையை
உருவாக்கிக் கொடுப்பது. வடகிழக்கு மானிலங்கள் பொதுவாக நீர்வளம் நிறைந்த ஒரு பகுதி.
அங்கே எது போட்டாலும் தானாக விளையும் என்ற நிலை. பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய
பகுதி. பெரும்பாலானவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் விவசாயிகள், கூலி வேலையாட்கள்.
அவர்களில் பலர் வங்க தேசத்திலிருந்து ஓடி வந்த அகதிகள். அவர்களின் விவசாய உற்பத்திப்
பொருட்களை பல இடைத்தரகர்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கிக்கொண்டு பெரிய சந்தையில் பல
மடங்கு அதிக விலையில் விற்று வந்தனர்.
உதாரணத்துக்கு,
அன்றைய நிலைமையில் …
அசாமின் டின்சுகியாவில் ஆரஞ்சுத் தோட்டங்களில்
ஒரு ஆரஞ்சுப்பழம் சுமார் 20 அல்லது 30 பைசா. அதே ஆரஞ்சு அசாம் தலை நகரில் 2 ரூபாய்.
திரிபுராவில் ஒரு கிலோ இஞ்சி சுமார்
50 பைசா. பெரிய நகரங்களில் 2 அல்லது மூன்று ரூபாய். அதே போல தேங்காய் ஒன்றுக்கு 50
பைசா. நகரங்களில் 2 ரூபாய்.
அசாமின் வடகோடியில் திக்பாய் என்ற இடத்தில்
தேயிலைத் தோட்டங்களில் தேயிலை சீசன் முடிவடைந்த நிலையில் வெறும் களையாக வளரும் சிட்ரனெலா
புல்லிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் அங்கே கிலோவுக்கும் 20 அல்லது முப்பது ரூபாய்.
அதே சிட்ரனெலா எண்ணெயை மும்பையில் பெரிய பெரிய நிறுவனங்கள் சுமார் 200 ரூபாய்க்கு இடைத்
தரகர்களிடமிருந்து வாங்கி வந்தனர்.
இப்படிப் பல.
அதனால் விவசாயிகளுக்கு அவர்கள் நிலத்தின்
விளைச்சலுக்குச் சரியான விலை கிடைக்காத நிலையிலும், இடைத்தரகர்களிடமிருந்து பெற்றுக்
கொண்ட தொடர் கடன்களால் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் இடைத்தரகர்கள் சொல்லும்
விலைக்கு தங்கள் விளைபொருட்களை விற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
தகாத இந்த உறவுமுறையை மாற்ற வேண்டும்
என்று நெராமேக்கின் மேலாண் இயக்குனர் விரும்பினார். “உங்கள் வங்கி எப்படி இதற்கு உதவி
செய்ய முடியும்?” என்று கேட்டார். அதிர்ஷ்ட வசமாக எங்கள் கௌஹாத்தி மேலாளர் வேளாண் கல்வியில்
ஒரு பட்டதாரி. என்ன செய்யலாம் என்பதை நானும் கௌஹாத்தி வங்கி மேலாளரும் பல முறை விவாதித்து
ஒரு திட்டத்தை நெராமேக் இயக்குனரிடம் விவரித்தோம்.
அதன்படி …
1.
முதலில்
திக்பாயில் கிடைக்கும் சிட்ரனெலா எண்ணெய் விவகாரத்தை எடுத்துக் கொள்வது.
2.
நெராமேக்
நிறுவனம் அங்கேயுள்ள விவசாயிகளிடமிருந்து சிட்ரனெலா எண்ணையை கிலோவுக்கு சுமார்
50-60-க்கு வாங்கிக்கொள்ள வேண்டியது. அதை அவர்களே மும்பைக்கு எடுத்துச் சென்று சந்தை
விலைக்கு விற்றுக்கொள்ள வேண்டியது.
3. எண்ணெய் கொள்முதலை திக்பாய்க்கு அருகேயுள்ள
கிராமங்களுக்கே சென்று செய்வது. விலைக்கான தொகையை அங்கேயே எங்கள் வங்கி அதிகாரிகள்
மூலம் வினியோகித்து விடுவது. இதைத்தான் இடைத்தரகர்களும் செய்து வந்தார்கள். மேலும்,
அந்தக் காலத்தில் ஒரு வங்கிக் கிளைக்கும் இன்னொரு கிளைக்கும் வெகுதூரம் செல்ல வேண்டிய
நிலை இருந்ததால் விவசாயிகளால் தங்கள் வேலையை விட்டு விட்டு பணத்துக்காக அலைய முடியாது.
போக்குவரத்து வசதிகளும் மிகக் குறைவு.
4. நெராமேக் நிறுவனத்துக்கு சிட்ரனெலா எண்ணெயை
விற்கும் விவசாயிகளுக்கு ஒவ்வொருவரின் உற்பத்தி செய்யும் அளவைப் பொருத்து 5 முதல்
10 ஆயிரம் வரை எங்கள் வங்கி குறைந்த வட்டியில் கடன் கொடுத்து அவர்களை இடைத்தரகர்களின்
கடனிலிருந்து மீட்டு விடுவது. ஒவ்வொரு முறை சிட்ரனெலா எண்ணெய் நெராமேக் நிறுவனத்துக்கு
விற்கும்போது அந்தப் பணத்திலிருந்து ஒரு சிறிய தொகையை வங்கிக் கடனுக்காக கழித்துக்
கொள்வது.
5. விவசாயி, எங்கள் வங்கி, நெராமாக் நிறுவனம்
மூவரும் இதற்கான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வது.
6. இந்தத் திட்டத்தில் பயன்பெறும் ஒவ்வொரு
விவசாயிக்கும் எங்கள் திக்பாய் கிளையில் கணக்கு திறந்து கொடுப்பது. வாரத்தில் ஒரு நாள்
எங்கள் வங்கி ஊழியர்களே அந்த கிராமத்துக்குச் சென்று அந்த விவசாயிகளின் வங்கித் தேவைகளை
நிறைவேற்றி வைப்பது.
7. பரீட்சார்த்தமாக திக்பாய் அருகே ஒரே ஒரு
கிராமத்தில் முயற்சி செய்து பார்ப்பது.
நெராமேக்
மேலாண் இயக்குனருக்கு எங்கள் திட்டம் மிகவும் பிடித்துப்போய் விட்டது. உடனே செயல்படுத்த
விரும்பினார்.
இந்த
இடத்தில், வடகிழக்கு மானிலங்களின் அன்றைய நிலையைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.
குறிப்பாக அசாமில்.
1985-86-காலங்களில்தான்
அசாமில் தீவிரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் ஒடுக்குவதற்கு, அன்றைய பிரதமர் ராஜீவ்
காந்தி அவர்கள் ‘ஆசு’ (AASU) என்ற அசாம் மாணவர்களின் இயக்கத்தோடு ஒரு புரிதல் ஒப்பந்தம்
செய்துகொண்டு பொதுத் தேர்தலை நடத்தினார். ‘ஆசு’ என்ற இயக்கம் அசாம் கண பரிஷத் என்ற
அரசியல் கட்சியாக மாறி அசாமில் ஆட்சியைப் பிடித்திருந்தது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ்
கட்சி தோல்வியடைந்தது. இருந்தும், பிரதமர் ராஜீவ் காந்தி வடகிழக்கு மானிலங்களின் வளர்ச்சிக்காக
பல புதிய திட்டங்களை அறிவித்து, தேர்தலில் தோல்வியுற்றாலும் எதிர்கட்சியால் ஆட்சி செய்யப்பட்ட
அசாம் அரசுக்குப் பலவிதங்களிலும் உதவி புரியத் தயாராக இருந்தார். பல ஆண்டுகளுக்குப்
பிறகு, அசாமில் கொஞ்சம் கொஞ்சமாக அமைதி திரும்பிக் கொண்டிருந்தது.
அப்படிப்பட்ட
பதட்டமான சூழ்னிலைகளில் ஒவ்வொரு முறையும் வங்கி அதிகாரிகள் கையில் நிறைய பணத்தை எடுத்துக்கொண்டு நெராமேக் அதிகாரிகளுடன் எளிதில் அணுக முடியாத,
தொலைவிலுள்ள சிறிய கிராமங்களுக்குச் சென்று விவசாயிகள் கையில் ஒப்படைப்பது என்பது மிகவும்
ஆபத்தாக கருதப்பட்ட சமயம் அது. இந்த பொறுப்பை நெராமக் அதிகாரிகளிடம் ஒப்படைப்பது வங்கிகளின்
விதிமுறைக்கு மீறியது.
இருந்தும்,
இந்தத் திட்டத்துக்கு கௌஹாத்தி மற்றும் திக்பாய் கிளை மேலாளர்களிடம் கலந்தாலோசித்து,
வங்கி ஊழியர்களின் யூனியனிடமும் சம்மதம் பெற்று ஒத்துக்கொண்டேன்.
நெராமேக்
அதிகாரிகள் மூலம் நாங்கள் செல்ல இருந்த கிராமத்து மக்களுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது.
நெராமக்
மேலாண் இயக்குனர் அசாம் அரசின் காவல்துறையுடன் பேசி எங்கள் எல்லோருக்கும் பாதுகாப்புக்கு
ஏற்பாடு செய்தார்.
நாங்கள்
நிச்சயித்திருந்த தேதியன்று அதிகாலையிலேயே கௌஹாத்தியிலிருந்து காரில் நான், கௌஹாத்தி
கிளை மேலாளர், நெராமக் மேலாண் அதிகாரி மூவரும் திக்பாய் நோக்கி கிளம்பினோம். எங்களுக்கு
முன்னேயே நெராமேக்கின் வேறு பல அதிகாரிகள் திக்பாய்க்கு சென்று விட்டார்கள்.
நாங்கள்
கிளம்புவதற்கு முந்தின நாள் எனக்கு அலுவலகத்தில் யாரிடமிருந்தோ ஃபோன் வந்தது. எங்களின்
முயற்சி மிக ஆபத்தானது. அதனால் அதனை கைவிட வேண்டும் என்றும் அதையும் மீறினால் நடப்பதற்கு
யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள் என்றும் ஃபோனில் பேசிய ஒரு குரல் எனக்குத் தெரிவித்தது.
நெராமேக் மேலாண் அதிகாரிக்கு உடனேயே ஃபோன் செய்து இதைச் சொன்னேன். “எனக்கும் அப்படி
ஒரு ஃபோன் கால் வந்தது. கவலைப்படாதீர்கள். தேவையான பாதுகாப்புக்கு நான் ஏற்பாடு செய்து
விட்டேன். இதெல்லாமே அந்த இடைத்தரகர்கள் செய்யும் நாசகார வேலைதான்.” என்று என்னை சமாதானப்
படுத்தினார்.
இருந்தும்
எங்களுக்குக் கொஞ்சம் நடுக்கம்தான். ஏனென்றால், அந்த சமயங்களில் ஒரு சில வங்கிக் கிளைகள்
தீவிரவாதிகளால் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. கௌஹாத்தியில் என் அலுவலகத்துக்கு எதிரேயே
இருந்த யூ. கோ வங்கியின் மேலாளர் பட்டப் பகலில் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போதே
இந்தக் கொள்ளைக்கு பலியாகியிருக்கிறார்.
ஒரு
மாதிரியாக துணிச்சலை வரவழைத்துக்கொண்டு கிளம்பிய நாங்கள் எங்கள் திக்பாய் கிளை சென்றடைந்து
அங்கிருந்து தேவையான பணத்தையும் எடுத்துக்கொண்டு நாங்கள் நிச்சயித்திருந்த கிராமத்தை
நோக்கி முன்னும் பின்னும் போலீஸ் படையுடனும் நெராமேக்கின் மற்ற அதிகாரிகள் மற்ற ஜீப்
போன்ற வண்டிகளிலும் வர அணி வகுத்துச் சென்றோம்.
கிராமத்தில்
நுழைந்து விட்டோம் என்று எங்களுக்குத் தெரிந்தது. நுழையும் இடத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக
சிட்ரனெலா எண்ணெய் எடுக்கும் கச்சா இயந்திரங்கள் கண்ணில் தென்பட்டன. முன்னால் சென்ற
நெராமக் வாகனத்தில் ஒலிபெருக்கி மூலமாக எங்கள் திட்டத்தைப் பற்றிய அறிவிப்பு செய்துகொண்டே
சென்றது. ஒரு சிறிய டிரக்கில் சிட்ரனெலா எண்ணையை சேகரிக்க இரண்டு மூன்று பெரிய டிரம்கள்
வைக்கப்பட்டு எங்களுடனேயே வந்து கொண்டிருந்தது.
கிராமத்தின்
மையமான இடத்துக்கு வந்து விட்டோம். கிராம அதிகாரியும் எங்களுடன் இருந்தார். போகும்
வழியில் பல எண்ணெய் பிழியும் கச்சா இயந்திரங்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தன. எல்லோரும்
எங்களை உற்று உற்று ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மைய
இடத்தில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒரு கிலோ எண்ணெய்க்கு
ஐம்பது ரூபாய் விலை கொடுத்து எடுத்துக் கொள்வதாக அறிவிப்பு தொடர்ந்து கொண்டிருந்தது.
நாங்கள்
காத்திருந்தோம். ஒன்றிரண்டு விவசாயிகள் மட்டும் துணிச்சலோடு எங்களிடம் வந்து பேசினார்கள்.
ஆனால், யாரும் எண்ணையை விற்க எடுத்து வரவில்லை.
சுமார்
ஒரு மணி நேரம் காத்திருந்தோம். ஒன்றிரண்டு விவசாயிகள் மெதுவாக எண்ணையோடு வந்தார்கள்.
நெராமேக் அதிகாரிகள் கையோடு அவர்களுக்கு பணத்தைக் கொடுத்தார்கள். விவசாயிகள் முகத்தில்
மகிழ்ச்சி. அவர்களுக்கு அவர்களின் கடன் தொல்லையைத் தீர்க்க வங்கியில் கடன் கொடுப்பதாகவும்
உறுதியளித்தோம்.
மேலும்
சிலர் எண்ணையுடன் வந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் எடுத்துச்சென்ற டிரம் நிரம்ப
ஆரம்பித்தது.
ஒரு
பதட்டமான சூழ்னிலை நிலவுவதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது.
சுமார்
இரண்டு மூன்று மணி நேரம் காத்திருப்புக்குப் பின் மெதுவாக அந்தி சாயத் தொடங்கியது.
காவல்துறையினரும் எங்களை அதற்கு மேல் காத்திருப்பதில் பலனில்லை என்பதை சாடைமாடையாகத்
தெரிவிக்கத் தொடங்கினர்.
டிரம்மின்
கால் பங்கு அளவே நிரம்பியிருந்தது.
சரி,
இந்த முறை இவ்வளவு போதும் என்று நெராமேக்கின் மேலாண் இயக்குனர் தீர்மானித்தார். கிராம
அதிகாரிக்கும், மக்களுக்கும் நன்றி சொல்லி அந்த இடத்திலிருந்து விடைபெற்றோம்.
திக்பாய்
கிளையில் மீதமிருக்கும் பணத்தையும் ஒப்படைத்து விட்டு அன்றிரவே கௌஹாத்தி திரும்பினோம்.
ஆண்டவன்
கிருபையால் நாங்கள் பயந்தபடி எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.
இரண்டு
நாட்களுக்குப் பிறகு அந்த கிராமத்தில் சிட்ரனெலா எண்ணையின் விலை கிலோவுக்கு சுமார்
70 ரூபாயாக உயர்ந்திருப்பதாக தகவல் வந்தது.
“நம்
திட்டத்தின் முதல் குறிக்கோள் நிறைவேறி விட்டது. விவசாயிக்கு சிட்ரனெலா எண்ணெய்க்கு
கிடைக்கும் விலை கூடிவிட்டது. அதுவே ஒரு பெரிய வெற்றிதான்.” என்றார் நெராமக்கின் மேலாண்
இயக்குனர். “ஆனால், உங்களுக்குத் தெரியாது, எனக்கு பல மிரட்டல்கள் வந்து விட்டன இதுவரை.
நான் உங்களிடம் சொன்னால், நீங்கள் வயதில் இளையவர். பயந்து விடுவீர்கள் என்று நான் சொல்லவில்லை
… சரி, இப்போதைக்கு இப்படியே போகட்டும் … என்ன நடக்கிறதென்று பார்க்கலாம் … இடைத்தரகர்களுக்கு
இப்பொழுது புரிந்திருக்கும். விவசாயிகளுக்கு சரியான விலை கொடுக்கவில்லையென்றால் அதை
அதிக விலை கொடுத்து வாங்க இப்பொழுது நெராமேக் நிறுவனம் தயாராக இருக்கும் என்று .. கொஞ்சம்
பொறுத்திருந்து அடுத்து நாம் என்ன செய்யலாம் என்று பார்ப்போம்,” என்று முடித்தார்.
அதற்கு
மேல் வங்கியின் தரப்பிலும் நாங்கள் எதுவும் மேற்படி நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனென்றால்
நெராமேக் போன்ற அரசு நிறுவனம் உதவி இல்லாமல் நாங்களாக எதுவும் செய்வது கடினம்.
அடுத்த
ஒன்றிரண்டு மாதங்களில் இதே போன்ற ஒரு முயற்சியை திரிபுராவின் தலைநகரம் அகர்தலா அருகே
அன்னாசிப் பழம், இஞ்சி, தேங்காய், பலாப்பழம் போன்ற பயிர்களுக்கு எங்கள் வங்கியை ஈடுபடுத்தாமல்
நெராமேக் தரப்பிலேயே அதிகாரிகளைக் கொண்டு முயற்சி செய்து விவசாயிகளுக்கு அவர்களின்
உற்பத்திப் பொருட்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்கி சந்தையில் நெராமேக் தரப்பிலேயே
வியாபாரம் செய்ததாக அந்த மேலாண் இயக்குனர் எனக்குக் கூறினார். திரிபுராவில் எங்களுக்கும்
ஒரே ஒரு கிளை மட்டுமே இருந்ததால் என்னாலும் அவருடைய முயற்சிக்கு உறுதுணையாக நிற்க முடியவில்லை.
அசாமை விட திரிபுராவில் நிலைமை இன்னும் மோசம்.
நெராமேக்
நிறுவனத்துடன் இணைந்து விவசாயிகளுக்கு ஒரு நல்ல காரியத்தை செய்து கொடுத்ததில் எனக்கும்
என்னுடன் சேர்ந்து பயணித்த வங்கி அதிகாரிகளுக்கும் மிகவும் திருப்தி. பொதுவாக எதற்கும்
முரண்டு செய்யும் வங்கி ஊழியர்களுக்கும் மகிழ்ச்சி.
ஆனால்,
திக்பாய் அருகே ஒரு படை சூழ சென்று வந்த அனுபவத்தின் நினைவு இன்றும் – சுமார் 35 ஆண்டுகளுக்குப்
பிறகும் – நினைவில் பசுமையாக நிற்கிறது.
வாழ்க
வேளாண்மை!