Pages

Monday, April 12, 2021

12.04.2021 “ஸாரி”

 12.04.2021 “ஸாரி”

வாழ்க்கையில் தவறு செய்வது மனித இயல்பு. அதில் மற்றவர்கள் காயப்படும்போது அதை உணர்ந்து அதற்காக வருந்துவது மேன்மையானது. நாம் காயப்படும்பொழுது நம்மை காயப்படுத்தியவர்களை உண்மையாகவே மன்னிப்பது தெய்வீகத் தன்மை.

தவறுகளே செய்யாதவர்கள் கிடையாது. அப்படித் தவறுகள் செய்யும்பொழுது தவறு செய்துவிட்டோம் என்பதை ஏற்றுக்கொள்வது நமக்கும் மற்றவர்க்கும் நல்லது. நாம் தவறு செய்யும்போது மற்றவர்கள் காயப்பட்டிருப்பார்களெனில் அதை உணர்வது அவசியம். நமது அஹங்காரம் அதற்குத் தடையாக இருக்கும். தவறை எளிதில் ஒத்துக்கொள்ள மாட்டோம். மற்றவர்கள் காயப்பட்டிருப்பதை உணரவும் மாட்டோம். அதற்கும் முதிர்ச்சி வேண்டும். அப்படி நமது சொல்லால், செயலால் மற்றவர்கள் காயப்பட்டிருக்கிறார்கள் என்று உணர்ந்தவுடனேயே ஒருவர் செய்யக்கூடிய குறைந்த பட்சக் காரியம் காயப்பட்டவரிடம் மன்னிப்புக் கேட்பதுதான்.

மீண்டும் ஒரு சொந்த அனுபவத்தையே எழுதுகிறேன்.

நான் வங்கியில் வேலை பார்த்து வந்தபோது சென்னையில் ஒரு கிளையில் மேலாளராக பணி புரிந்து வந்த சமயம். 1980-களின் ஆரம்ப ஆண்டுகள். ஒரு நாள் கிளையின் பரபரப்பான காலை நேரம். பல வாடிக்கையாளர்களின் கூட்டம் கிளை முழுவதும் அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டிருந்தது.

கிளையில் பல பணியாளர்கள் பெண்கள். பெண் ஊழியர்கள் பொதுவாக வாடிக்கையாளர்களை நன்றாகவே கவனித்துக்கொள்வார்கள். வேலையிலும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். தேவையில்லாத வெட்டிப்பேச்சு இருக்காது. தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பார்கள். வேலை முடிந்து விட்டால் வீட்டிற்குக் கிளம்பி விடுவார்கள். மேலதிகாரியிடம் பொதுவாக இணக்கமாகவே இருப்பார்கள். கொஞ்சம் அதிக சலுகைகளை எடுத்துக்கொண்டாலும் வேலையில் குறியாக இருப்பார்கள்.

இதுதான் என்னுடைய பொதுவான அனுபவம்.

இருந்தும் …

அந்தக் கிளையில் ஒரு பெண் ஊழியர் வேறு ஒரு கிளையிலிருந்து மாற்றலாகிப் புதியதாகச் சேர்ந்திருந்தார். வேலையில் கெட்டிக்காரர். சுறுசுறுப்பாக வேலைகளை ‘மட மட’ வென்று முடித்து விடுவார். என்ன, அவரிடம் நாம் எதுவும் பேச முடியாது. தூக்கி எறிந்து பேசி விடுவார். ஒரு காரியத்தை செய்ய முடியாது என்றால் முடியாதுதான். ஆம், மேலதிகாரியின் உத்தரவை அவர் விருப்பப்பட்டால் மட்டுமே செய்வார்.

ஒரு சமயம் அவர் செய்து முடிக்க வேண்டிய ஒரு காரியத்தை செய்து முடிக்கவில்லை. எனக்கு அதிகாரிகளிடமிருந்து புகார் வந்திருந்தது. அவர்கள் சொல்லியும் கேட்கவில்லை. அவர் அந்த வேலையை முடிக்காததால் வேறு சில வேலைகள் தொங்கலில் நின்றன.

அந்தக் காலை வேளையில் பரபரப்பான சூழ்னிலையில் என்னிடம் மீண்டும் புகார் வந்த போது என்னால் பொறுக்க முடியவில்லை. நேராக அந்தப் பெண் ஊழியரிடம் போய் ஏன் அந்த வேலையை நீங்கள் முடிக்கவில்லை என்று கேட்டு விட்டேன்.

அந்தப் பெண் ஊழியரும் வெகு காட்டமாக அந்த வேலையை தன்னால் செய்ய முடியாது என்று முகத்தில் அறைந்த மாதிரி பதில் கொடுத்தார். நான் அசந்து விட்டேன்.

கிளையில் ஒன்றிரண்டு பேரைத் தவிர எல்லோருமே இளைஞர்கள். சராசரி வயது முப்பது இருக்கலாம். இள ரத்தம். பலரும் சீக்கிரமே உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். நானும் அதற்கு விதி விலக்கல்ல.

எனக்கும் கோபம் தலைக்கு மேல் ஏறியது. கோபத்தில் கடுமையாக ஆங்கிலத்தில் அவரிடம் மட மடவென்று பேசித் தீர்த்தேன். என்னுடைய குரல் ஓங்கியிருந்தது. எல்லா வாடிக்கையாளர்கள், மற்ற ஊழியர்கள், அதிகாரிகள் எல்லோரும் கவனிக்க வங்கிக் கிளையின் விசாலமான மெயின் ஹாலில் நட்ட நடுவில் நின்றுகொண்டு கோபம் அடங்காமல் தொடர்ந்து பல நிமிடங்கள் கிளையில் மற்ற அலுவலர்களுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்ற நினைப்பில் என்னுடைய கோபத்தை வெளிக்காட்டி எல்லோர் காதிலும் விழும்படியாகக் கத்தித் தீர்த்தேன். மேலதிகாரிகளின் நியாயமான உத்தரவுகளை யார் மதிக்காவிட்டாலும் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்தினேன்.

கிளை முழுவதும் திடீரென்று ஒரு மயான அமைதி.

பத்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நான் அப்படிக் கத்தியிருப்பேன் என்று நினைக்கிறேன்.

இந்த சமயத்தில் இன்னொரு விஷயத்தை இங்கே நான் சொல்ல வேண்டும். அந்தக் காலங்களில் வங்கி ஊழியர்களின், அதிகாரிகளின் யூனியன் மிக மிக அதிகாரம் கொண்டதாக இருந்தது. பொதுவாக, ஒரு சில இடங்களைத் தவிர, யூனியனைக் கண்டு பயந்து பயந்து வேலை பார்த்த சமயம். யூனியனில் நிறைய ஈடுபாடு கொண்டிருந்தவர்களைக் கையில் போட்டுக்கொண்டால்தான் அலுவலர்களிடம் வேலை வாங்க முடியும். அவர்களை முறைத்துக்கொள்ளப் பொதுவாக எந்த அதிகாரியுமே தயங்கினர். சமயத்தில் சிறு சிறு விஷயங்கள் கூடப் பெரிதாகி வேலை நிறுத்தம் வரைப் போய்விடும். வேலை நிறுத்தம் நடந்தால் பிரச்சினை மேலதிகாரிகளுக்குப் போய்விடும். அவர்கள் அதை விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்களும் அதே யூனியன் அதிகாரிகளிடம் சமரசத்துக்குத் தாஜா செய்யவேண்டியிருக்கும். மேலதிகாரிகளும் யூனியன் தலைவர்களுடன் மோதல் போக்கை விரும்பியதில்லை.

அப்படிப்பட்ட ஒரு சூழ்னிலையில் நான் என்னுடைய கோபத்தை அப்படி உரக்க எல்லோர் முன்னிலையிலும் வெளிப்படுத்தியது கிளையில் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

புயலுக்கு முன்னேயும் அமைதி. அதிர்ச்சியில் அமைதி.

நான் நிதானப்பட்டவுடன் என் அறைக்குத் திரும்பி விட்டேன். அடுத்த ஒன்றிரண்டு மணி நேரம் கிளை வேலைகள் ஏதோ எதுவுமே நடக்காதது போல ஓடியது.

மதிய உணவு இடைவேளை வந்தது. நான் என் அறையில் இருந்தேன். திடீரென்று கிளையின் எல்லா ஊழியர்களும் ஒவ்வொருவராக என் அறையில் கூடத் தொடங்கினர்.

எனக்குப் புரிந்து விட்டது என்ன நடக்கப் போகிறது என்று.

அதே சமயம் அன்றைய சமாச்சாரத்தை நினைத்து ஒரு வருத்தம் என் மனதிலும் ஏற்கெனவே தோன்றியிருந்தது. அந்த ஊழியரின் தவறாகவே இருந்தாலும் நான் அந்தப் பெண் ஊழியரிடம் அவ்வளவுக் கடுமையாகக் கோபமாகப் பேசியது தவறு என்ற நினைப்பு இருந்தது. “சரி, மாலை வேளையில் தனியாக அந்த ஊழியரைக் கூப்பிட்டுப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்” என்ற நினைப்பில் இருந்தேன்.

ஆனால், மதிய உணவு வேளையிலேயே எல்லா ஊழியர்களும் என் அறையில் என்னை சூழ்ந்து கொண்டவுடன் அவர்கள் எதற்காக என்னை சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன் என்பதைக் காட்டும் வகையில் அவர்கள் வாய் திறப்பதற்கு முன்னே நானாகவே முந்திக்கொண்டு அவர்களிடம், “நீங்கள் எதற்காக இங்கே கூடியிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். இன்று நடந்தது முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டிய ஒன்று. யார் மீது தவறாக இருந்தாலும் நடந்ததற்கு நான் உங்கள் எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அவரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நான் அவ்வளவுக் கடுமையாக எல்லோர் முன்னிலையிலும் அந்த ஊழியரைக் கடுமையான வார்த்தையில் பேசியிருக்க வேண்டாம். அவர்கள் மனம் புண்பட்டிருக்கும் என்பதை நான் உணர்கிறேன். அதனால், நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். சாரி. இனி உங்கள் இஷ்டம். என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ செய்யுங்கள்,” என்று கூறி முடித்தேன்.

மீண்டும் ஒரு மயான அமைதி.  என்னுடைய இந்த வார்த்தைகளை அவர்கள் எதிர்பார்க்கவில்லை போலும். ஒரு மேலதிகாரி வெளிப்படையாக எல்லோர் முன்னிலையிலும் ‘சாரி’ சொன்னதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை போலும்.

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, கிளை ஊழியரின் பிரதிநிதி, “ஸார், என்னவெல்லாமோ உங்களிடம் கேட்க வேண்டும் என்று உங்கள் அறைக்குள் வந்தோம். ஆனால், நீங்கள் இப்படி ஒரேயடியாகக் கீழிறங்கி மன்னிப்புக் கேட்டு விட்டீர்கள். நாங்கள் என்ன சொல்வது? இனிமேல், எங்களைத் திட்டுவதாக இருந்தால் தனியாக உங்கள் அறையில் கூப்பிட்டுத் திட்டுங்கள். கேட்டுக்கொள்கிறோம். இப்படிப் பலர் முன்னிலையில் திட்டாதீர்கள். அவ்வளவுதான்,” என்று கூறியபின் மற்றவர்களை அர்த்தத்தோடு ஒரு பார்வை பார்த்தார்.

எல்லோரும் அமைதியாகக் கலைந்து போய் விட்டனர்.

ஒரு பெரிய புயலை எதிர்பார்த்த எனக்கும் ஏமாற்றம்தான். புயலை எதிர்கொள்ள மனதளவில் என்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்தேன். ‘புஸ்’ என்றாகி விட்டது.

‘சாரி’ என்ற வார்த்தைக்கு அவ்வளவு மதிப்பு இருக்கிறது. உடனே இல்லாவிட்டாலும், என்றுமே நான் ‘சாரி’ சொல்வதற்குத் தயங்கியதில்லை. அது என் குழந்தைகளாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி. அது பல புயல்களைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது.

‘சாரி’ சொல்வதற்கு மனம் வேண்டும். யார் தவறு செய்தார்கள் என்பது முக்கியமில்லை. மனித உறவுகள் முக்கியம். உறவுகளைக் காப்பாற்ற ‘சாரி’ மிகவும் உதவும். மற்றவர்கள் மன்னிக்கிறார்கள், மன்னிக்கவில்லை அது ஒரு கணக்கே இல்லை. ‘சாரி’ என்ற வார்த்தை எதிராளியை நிராயுதபாணியாக்கி விடும் வல்லமை கொண்டது.

எதைக் கொண்டு வந்தோம். எதை எடுத்துக்கொண்டு போகப் போகிறோம். எதற்குப் பகை?

பின் குறிப்பு: அதே கிளையில்  நான் அந்தக் கிளையை விட்டு வந்த பிறகு அடுத்த கிளை மேலாளர் ஒரு யூனியன் பிரதிநிதியை கோபத்தில் “அறையை விட்டு வெளியே போ” என்று சொன்னதற்கு அந்தக் கிளையில் சுமார் பத்து நாட்களுக்கு வேலை நிறுத்தம் நடந்தது. யூனியன் தரப்பிலும், அதிகாரிகள் சங்கத்திலும் எதிர் எதிரான நிலைப்பாடுகளை எடுத்துப் பிரச்சினைப் பெரியதாகி வங்கியின் துணைப் பொதுமேலாளர் தலையிட்டுப் பிரச்சினையை இரண்டு பக்கமும் சுமுகமாக முடிக்க வேண்டியிருந்தது.

அந்தப் பொது மேலாளர், “முந்தைய கிளை மேலாளர் இதே போன்ற ஒரு சூழ்னிலையில் சாரி சொல்லி நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருந்தார் என்று கேள்விப்பட்டேன். அது ஏன் இப்பொழுது நடக்கவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன்,” என்று கூறியதாக மற்றவர்கள் சொல்லி நான் கேள்விப்பட்டேன்.

No comments:

Post a Comment