Pages

Thursday, April 15, 2021

14.04.2021 நம்பிக்கைகள் (BELIEFS)

 14.04.2021 நம்பிக்கைகள் (BELIEFS)

சுயமுன்னேற்றத்துக்கு (SELF DEVELOPMENT) ஒருவரது நம்பிக்கைகள் மிக மிக முக்கியம். ஒருவர் தன்னைப் பற்றி, தன் திறமைகளைப் பற்றி, தன் எதிர்காலத்தைப் பற்றி, தன் அவமானங்களைப் பற்றி, தன்னுடைய வெற்றி தோல்விகளைப் பற்றி, இப்படிப் பலவற்றைப் பற்றியும் நாம் என்ன கருத்து, என்ன விதமான நம்பிக்கைகளை வைத்திருக்கிறார் என்பது அவரது முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் முக்கியமான காரணமாக இருக்கிறது.  

இதை எனது சொந்த அனுபவத்திலேயே கற்றுக்கொண்டிருக்கிறேன்.

நான் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். தந்தைக்குக் கிடைத்த வருமானம் வீட்டில் ஆறு வயிறுகளுக்குப் போதுமானதாக இல்லை. அதனால் எப்பொழுதுமே வீட்டில் பற்றாக்குறை பட்ஜெட்தான். எதுவும் நினைத்த மாத்திரத்தில் நடந்து விடாது. கிடைத்து விடாது.

பள்ளிக்கூட பருவங்களில் பல இளைஞர்களைப் போல நானும் கம்யூனிசக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன். அந்த வயதில் நான் பார்த்த அளவில் பல பணக்காரர்களின் சிந்தனைகள், நடத்தைகள், கொள்கைகள் மேல் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. பார்த்துப் பார்த்து செலவு பண்ண வேண்டிய கட்டாயத்தில் இருந்த எங்கள் குடும்பத்தையும் பல பணக்காரர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது பணக்காரர்கள் மீது எனக்குக் கோபம் அதிகமாகியது. எல்லா பணக்காரர்களுமே மோசமானவர்கள் என்ற கருத்து என் மனதில் பதிந்து விட்டது. அதனால் பணத்தின் மீதும் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. என்னிடம் பணம் இருந்திருந்தால் நானும் மற்ற பணக்காரர்கள் போலத் தானே நடந்துகொண்டிருப்பேன் என்று நினைத்துப் பார்ப்பேன். அதனால், பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை என்னை அறியாமல் என் மனதில் தீவிரமாகத் தோன்றவில்லை.

ஆனால், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று துடித்தேன். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த நான் முன்னேற வேண்டுமென்றால் நிறையப் படித்தால்தான் முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தேன். நிறையப் படித்தால் பெரிய பதவிகளை அடையலாம். புகழை அடையலாம். பட்டங்களை அடையலாம். செல்வாக்கை அடையலாம் என்று நம்பினேன். அதனால், என்னுடைய முழு கவனத்தையும் என் படிப்பின் மீது செலுத்தினேன். தந்தையின் விருப்பத்தையும் மீறி மேல்படிப்புக்குச் சென்று சொந்தக் காலிலேயே  நின்று படிப்பை முடித்தேன். படித்து முடிப்பதற்கு முன்பேயே வங்கியில் வேலை கிடைத்து விட்டது. அதுவும் அதிகாரியாக. வங்கியில் பெரிய பதவி அடைய முடியும் என்று நம்பினேன். அதைத்தான் பெரிய வெற்றியாகக் கருதினேன்.

வங்கிப் பணியில் பல முன்னேற்றங்களைக் கண்டேன். சாதாரண அதிகாரியாக சேர்ந்த நான் 25 ஆண்டுகளில் வங்கியின் துணைப் பொதுமேலாளர் பதவி வரை பார்த்து விட்டேன். சுமார் 25000 ஊழியர்கள் வேலை பார்க்கும் பொதுத்துறை வங்கியில் சுமார் 30 உயர்ந்த பதவிகளில் ஒன்று. பதவியோடு பல வசதிகள், நல்ல பெயர், செல்வாக்கு எல்லாம் வந்தது. ஆனால், செல்வம் மட்டும் என்னை விட்டு விலகியே நின்றது.

ஆம், பெரிய பதவியில் இருந்தாலும் என் கையில் பணம் மட்டும் இல்லை. வருகிற ஊதியம் எங்கள் நால்வருக்குப் போதுமானதாக இல்லை வங்கியில் இருந்த 25 ஆண்டுகளும் ஒவ்வொரு மாதமும் பழையபடியே துண்டு பட்ஜெட்தான். வங்கி வேலையில் நம்மை மயக்கி வலையில் சிக்கவைக்கும் சந்தர்ப்பங்களை கவனமாக ஒதுக்கி வாழ பகீரதப் பிரயத்தனம் செய்தேன்.  

தொடர்ந்துகொண்டிருந்த பணப் பற்றாக்குறையினால் வங்கி வேலையை உதறித்தள்ளி விடலாம் என்ற எண்ணம் தோன்றத் தொடங்கியது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். வங்கியில் உதவிப் பொதுமேலாளர் பதவியில் இருக்கும்போது என்னுடைய தாயாருக்கு உடல் நிலை மிகவும் மோசமாகப் போனது. மருத்துவமனையிலும் வீட்டிலும் என்று மாறி மாறி ஆறு மாதங்களை கழித்தார். அந்த சமயத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த என் தாயாரை வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு வர மருத்துவமனைக்குப் பணம் கட்ட வேண்டியிருந்தது. என் கையிலோ பணம் இல்லை. ஒரு பெரிய தேசிய வங்கியில் உதவிப்பொது மேலாளர் பதவி வகித்த என்னிடம் பத்தாயிரம் ரூபாய் கையில் இல்லை. என் வங்கியின் சேர்மனிடம் சென்று பத்தாயிரம் ரூபாய் கடன் கேட்டேன். அவமானமாகத்தான் இருந்தது. வேறு வழியில்லை. அவரும் பெரிய மனது பண்ணி வங்கியிலேயே எனக்கு பத்தாயிரம் ரூபாய் விசேஷக் கடனாகப் பெற்றுக்கொள்ள அனுமதி கொடுத்தார்.

என் குழந்தைகளும் வளர்ந்து கொண்டிருந்தனர். அவர்களை நிறையப் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். வெளிநாட்டுக்கு அனுப்பிப் படிக்க வைக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டேன். ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? பணம் வேண்டாமா? அதுதான் என் கையில் இல்லையே! என்னிடம் இருந்ததெல்லாம் வங்கிக்கடனால் கிடைத்த ஒரு வீடு மட்டுமே.

வங்கி வேலையில் எனக்கு எல்லா வசதிகளும் இருந்தன. பதவி, செல்வாக்கு, வசதியான நல்ல வீடு, ஓட்டியோடு கூடிய கார், தொலைபேசி, விமானத்தில் பயணம் செய்யும் சிறப்புரிமை, நட்சத்திர ஹோட்டல்களில் தங்கும் சலுகை, எங்கே போனாலும் ரயில் நிலையத்திலிருந்தோ அல்லது விமான நிலையத்திலிருந்தோ இறங்குவது முதல் மீண்டும் ஏறும் வரை என்னை கவனிப்பதற்கு வங்கி அதிகாரிகள், மேலாளர்கள்…

இப்படி எல்லா வசதிகள் இருந்தும், என் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்குத் தேவையான பண வசதி இல்லை என்ற போது எனக்கு வெறுப்பாக இருந்தது. பணம் மட்டும் எனக்கு ஏன் கிடைப்பதில்லை என்ற நினைப்பு என்னை வாட்டி எடுத்தது.

அந்த நேரம் பார்த்து உதவிப் பொதுமேலாளர் பதவியிலிருந்து துணைப் பொதுமேலாளர் பதவிக்கு தேர்வுகள் நடக்கும்போது என்னை ஏனோ விட்டு விட்டார்கள். வங்கியை விட்டு வெளியேறி என்னுடைய எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளலாம் என்ற நினைப்பு தலை தூக்கியது.  நாளாக, நாளாக, அந்த எண்ணம் வலுத்து வந்தது.

ஒரு சமயத்தில் வங்கி வேலையை உதறித் தள்ளிவிட்டேன். ஒரு சில தனியார் கம்பெனிகளில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன். எதுவும் சரியாக வரவில்லை.

அந்த நேரம் பார்த்து என் இளைய சகோதரன் துபாய்க்கு வரும்படி அழைத்தான். நானும் அங்கே சென்று பல முயற்சிகளுக்குப் பிறகு ஒரு பன்னாட்டு நிதி சேவை நிறுவனத்தில் முதலீடு மற்றும் உயிர் காப்பீட்டின் நிதி ஆலோசகராக பணியில் சேர்ந்தேன். நான் வகித்த பதவிகளுக்கும் அனுபவித்த வசதிகளுக்கும் இந்த வேலைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

இருந்தும் நியாயமாக, நாணயமாக பணம் சேர்க்க வேண்டும், என் குழந்தைகளை வெளிநாடு அனுப்பிப் படிக்க வைக்க வேண்டும் என்ற நினைப்பில் வெறித்தனமாக உழைத்தேன்.

என் உழைப்புக்கு ஓரளவு பலன் கிடைத்தது. இருந்தும் நான் தேடிய, எனக்குத் தேவைப்பட்ட அளவு பணம் என் கைக்கு வரவில்லை. எனக்கு ஏமாற்றம் தான். எனக்குப் புரியவில்லை. என்னிடம் நிதி, முதலீடுகளைப் பற்றிய அறிவு இருக்கிறது, பேச்சுத் திறமை இருக்கிறது, வாடிக்கையாளர்களை எப்படி அணுகுவது என்று தெரிந்திருக்கிறது. பல வாடிக்கையாளர்கள் என் மேல் பெரு மதிப்பு வைத்திருந்தனர். எல்லாம் இருந்தும் என்னால்  நான் ஆசைப்பட்ட அளவு பணம் சேர்க்க முடியவில்லை.

விரக்தியை என்னால் மறைக்க முடியவில்லை.

அப்படிப்பட்ட சூழ்னிலையில் ஒரு நாள் காலையில் துபாயில் என் அலுவலகத்தில் என் கிளை மேலாளர் – இரான் நாட்டைச் சேர்ந்தவர் - எதேச்சையாக என்னைக் கடந்து போகும்போது என்னிடம் பேச்சுக் கொடுத்தார்.

கிளை மேலாளர்: ‘நீங்கள் என்ன கார் ஓட்டுகிறீர்கள்?”

நான்: “நான் இப்பொழுது கார் ஓட்டுவதில்லை.”

கி. மே: “ஓ, அப்படியா, என்ன கார் ஓட்ட விரும்புகிறீர்கள்?”

நான் (கொஞ்சம் திமிராக): “நான் கார் ஓட்ட விரும்பவில்லை.”

துபாயில் என்னுடன் வேலை பார்த்த பெரும்பாலான ஆலோசகர்கள் சொந்தத்தில் ஒரு கார் வைத்திருந்தனர். மார்கெட்டிங், வாடிக்கையாளர் மீட்டிங் என்று பல இடங்களுக்கு அலைவதற்கு வசதியாக இருக்கும். மேலும், துபாயில் கார் வைத்திருப்பது செல்வத்தின் அடையாளம். அதிலும் என்ன மாதிரி கார் வைத்திருக்கிறோம் என்பது மிக முக்கியம்.

கி. மே: “ஏன், ஏன்?”

நான்: “சொந்தத்தில் கார் வைத்திருப்பதை வெறுக்கிறேன். மேலும் எனக்கு வேறு அவசியத் தேவைகள் இருக்கின்றன.”

கி. மே: “நீலகண்டன், என்னுடன் என் அறைக்கு வருகிறீர்களா?”

அது ஒரு வேண்டுகோள் இல்லை என்பது எனக்குத் தெரியும். அவருடன் அவர் அறைக்குச் சென்றேன். அறைக் கதவைச் சாத்தினார்.

கி. மே: “நீலகண்டன், இன்று நான் உங்களுடன் பேச்சை எடுத்தது எதேச்சையாக இல்லை. நான் சிறிது காலமாகவே உங்களை, உங்கள் தொழில் வளர்ச்சியைக் கவனித்து வருகிறேன். உங்களின் முந்தைய தொழில் வாழ்க்கையை ஓரளவு அறிவேன். நல்ல பெரிய பதவியில் இருந்திருக்கிறீர்கள். நிறையப் படித்திருக்கிறீர்கள். சந்தை நிலவரத்தைப் பற்றி, நிதி மேலாண்மையைப் பற்றி நிறையத் தெரிந்து கொண்டிருக்கிறீகள். நன்றாகப் பேசுகிறீர்கள். கடுமையாக உழைக்கிறீர்கள். எல்லாம் இருந்தும் ….”

அவர் முடிக்க நினைத்ததைப் பற்றி நானே மனதில் போட்டுக் குழம்பிக்கொண்டிருந்த சமயம் அது.

“எல்லாத் தகுதிகள் இருந்தும் என்னால் ஏன் அந்தத் தொழிலில் ஒரு சிலரைப் போல பெரிய வெற்றிகளை காண முடிவதில்லை?’

அவர் சொல்ல நினைத்ததை நானே சொல்லி முடித்து விட்டேன்.

கி. மே: “ஏன் என்ற காரணம் உங்களுக்கு புரியவில்லையா?” என்று ஆரம்பித்து என்னுடன் என்னுடைய சரித்திரத்தைப் பற்றி விவரமாக கேள்வி மேல் கேள்விகளாகத் துளைத்தெடுத்தார்.

இறுதியில் அவர் சொன்னதன் சாராம்சம் இதுதான்:

“நீலகண்டன். உங்களுக்குப் பணத்தின் தேவை நிறைய இருக்கிறது. ஆனால் நீங்கள் பணத்தை வெறுக்கிறீர்கள். பணக்காரர்களை வெறுக்கிறீர்கள். பணம் சம்பாதிப்பது பாவம் என்று நினைக்கிறீர்கள். ஒரு பொருளை அடையவேண்டுமானால் அதன் மீது தீராத பற்றுதல் இருக்க வேண்டும். காதல் கொண்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அது உங்களிடம் வரும். நீங்கள் பதவியை, புகழை, செல்வாக்கை, அதிகாரத்தை…இவற்றையெல்லாம் நேசித்திருக்கிறீர்கள். தீவிரமாக விரும்பியிருக்கிறீர்கள். அவையெல்லாம் உங்களை வந்தடைந்திருக்கின்றன. ஆனால், பணத்தை மட்டும் வெறுத்திருக்கிறீர்கள். அதனால் அதுவும் உங்களை விட்டு விலகிப் போயிருக்கிறது. நீங்கள் கடுமையாக உழைத்தாலும் உங்களை அடையாமல் கண்ணாமூச்சி காட்டுகிறது. பணத்தைப் பற்றிய கருத்துக்களை பணக்காரர்களைப் பற்றிய நம்பிக்கைகளை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள். பிறகு பாருங்கள் என்ன நடக்கிறது என்று?”

கனத்த இதயத்துடன் அவர் அறையை விட்டு வெளியேறினேன். அவர் சொன்னது என்னைப் புரட்டிப் போட்டது. என்னைத் தோலுரித்துக் காட்டியது போலிருந்தது. பணத்தைப் பற்றிய என்னுடைய நம்பிக்கைகள், கருத்துக்கள் எனக்கே எதிரியாகப் போய்விட்டது என்பதை என்னால் முதலில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

என் கிளை மேலாளருடன் நடந்த பேச்சுக்களைப் பற்றி அடுத்த சுமார் மூன்று மாதங்கள் மீண்டும் மீண்டும் என் மனதில் போட்டுக் குழம்பிக்கொண்டிருந்தேன். மெதுவாக, அவர் சொன்னதின் அர்த்தம் மனதில் ஒரு புது ஒளியைத் தோற்றுவித்தது. கொஞ்சமாக பணத்தைப் பற்றிய என்னுடைய கருத்துக்களை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தேன். என் தேவைகளுக்கு மட்டுமில்லாமல் நானும் ஒரு பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்திக்கொண்டேன்.

பணத்தைப் பற்றிய நம்பிக்கைகள், கருத்துக்கள் என்னுள் மாற மாற என்னுடைய நிதி நிலைமையும் முன்னேற்றத்தைக் காண ஆரம்பித்தது. நிறைய புதிய பெரிய வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள். என்னுடைய வியாபாரம் பெருகியது. நான் எதிர்பார்த்ததுக்கு மேலேயே பணம் சேர்க்க முடிந்தது. இன்று என்னுடைய சொந்தப் பணத்திலிருந்து தாராளமாக பல நல்ல காரியங்களுக்கு, ஏழைகளுக்கு, படிப்பதற்கு, மாணவர்கள் முன்னேற்றத்துக்கு என்று ஆண்டு தோறும் கவலைப்படாமல் செலவு செய்ய முடிகிறது.

எனக்கென்று தேவைப்படாவிட்டாலும் இன்று நான் பணத்தைத் தீவிரமாக காதலிக்கிறேன்.  நியாயமாக, நாணயமாக பணம் சேர்கிறது. பலருக்கும் பயன்படுகிறது. எனக்கு உண்மையைப் புலப்படுத்திய அந்தக் கம்பெனியின் கிளை மேலாளருக்கு என்றென்றும் நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

நம் எதிர்காலம், முன்னேற்றம் எல்லாம் நமது நம்பிக்கையில் தான் இருக்கிறது.

பி.கு: என்னுடைய சொந்த அனுபவத்தையே ஒரு கதையாக SHORT STORIES FOR YOUNG READERS: FOR PERSONALITY DEVELOPMENT - BOOK 1 என்ற என்னுடைய சிறுகதைத் தொகுப்பு நூலில் சேர்த்திருக்கிறேன். விருப்பப்பட்டவர்கள் www.pothi.com என்ற வலையில் வாங்கிப் படித்துப் பார்க்கலாம். தென்காசியில் ஒரு சில பள்ளிகளில் இந்தப் புத்தகத்தை பள்ளி மாணவர்களின் கூடுதல் வாசிப்புக்காகப் பயன்படுத்தி வருகிறார்கள்.