Pages

Thursday, December 02, 2021

நானும் ஆங்கிலமும்




ஆங்கிலத்தில் என் ஈடுபாட்டின் துவக்கம்

    எனக்கு ஆங்கிலத்தில் ஒரு ஈடுபாடு எட்டாம் அல்லது ஒன்பதாம் வகுப்பில் தொடங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். நான் நெல்லையில் ஷாஃப்ட்டர் உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் சமயம் எங்கள் சமஸ்கிருத ஆசிரியர் திரு. வெங்கடராம ஷாஸ்த்ரிகள் அவர்களின் மகன் ராமசுப்பிரமணியன் எனக்கு அறிமுகமானார். சுருக்கமாக எல்லோரும் அவரை ஆர். வி என்றழைப்பார்கள். அவர் என்னை விட இரண்டு மூன்று ஆண்டுகள் சீனியர் என்று நினைவு. நாங்கள் அடிக்கடி நெல்லை டவுண் மார்க்கெட் பகுதியில் காய்கறி மார்க்கெட்டின் மாடியில் அமைந்திருந்த அரசு பொது நூலகத்தில் சந்தித்துக்கொள்வோம்.

    டவுணில் கீழரத வீதியில் அமைந்திருந்த சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துடன் இணைந்திருந்த பொது நூலகத்தில் பொதுவாகத் தமிழ் புத்தகங்கள் மட்டுமே கிடைக்கும். அங்கிருந்த பல துப்பறியும் மர்ம நாவல்களையெல்லாம் படித்தாகி விட்டது. அதனால், ஆங்கிலப் புத்தகங்களைத் தேடி அரசு பொது நூலகத்துக்கு வருவேன். அங்கேதான் ஆர். வியைச் சந்தித்தேன். அவர் தான் எனக்கு முதன் முதலாக ஆங்கிலத்தில் ஏர்ள் ஸ்டேன்லி கார்ட்னர் (Earl Stanley Gardner) எழுதிய பெரி மேசன் (Perry Mason) நாவல்களை அறிமுகப்படுத்தினார். ஐ. ஏ. எஸ் தேர்வுகளுக்காக ஆர். வி தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்த சமயம் அது. அவரேதான் எனக்கு Wilfred Funk எழுதிய Thirty Days to a More Powerful Vocabulary என்ற புத்தகத்தையும் அறிமுகப்படுத்தினார். பெரி மேசன் துப்பறியும் நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது. தொடர்ந்து பொது நூலகத்தில் இருந்த எல்லா பெரி மேசன் நாவல்களையும் படிக்கத் தொடங்கினேன். வில்ஃப்ரெட் ஃபங்கின் புத்தகம் எனக்கு பல புதிய வார்த்தைகளையும் அதன் பிரயோகத்தையும் அறிமுகப்படுத்தியது.

    அந்தத் தாக்கத்தினால் நானும் சொந்தமாக என்னுடைய ஆங்கிலப் பாடங்களை எழுதத் தொடங்கினேன். ஆங்கிலத் தேர்வுகளில் என் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி விடைகளை எழுதினேன். ஆசிரியர் வகுப்பில் போர்டில் எழுதிப் போட்ட விடைகளைத் தவிர்த்தேன். அதனால், என்னுடைய ஆங்கிலப் பாட விடைத்தாளில் பல தவறுகள் இருப்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டினார். அவர் எழுதிப்போட்ட விடைகளை எழுதாததற்கு என்னைக் கண்டித்தார். ஆனால், விடைத் தாள்களை என்னிடம் தனியாகக் கடைசியாகக் கொடுக்கும்போது மட்டும் என்னைப் பாராட்டத் தவறியதில்லை. நான் சொந்தமாக ஆங்கிலத்தில் எழுதுவதையே அவர் விரும்புவது போல எனக்குத் தோன்றியது. அதனால், ஆங்கிலப் பாடத்துக்கு சொந்தமாக விடைகளை அளிப்பதை என் கல்லூரி நாட்களிலும் தொடர்ந்தேன். வழிகாட்டுப் புத்தகங்களைத் தவிர்த்தேன். சொந்தமாக எழுதும்போது பல தவறுகள் இருந்ததால் ஆங்கிலப் பாடத்தில் எனக்குக் குறைவான மதிப்பெண்களே கிடைத்து வந்தது.

    அங்கங்கே நான் படித்த படைப்புகளின் தாக்கத்தை மனதில் கொண்டு பள்ளியின் ஆண்டு மலரில் கட்டுரைகள் சொந்தமாக எழுதினேன். அவை வெளியானதில் எனக்கு மிகவும் பெருமை. ஆசிரியர்களும் பாராட்டினார்கள். ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் தெருவில் வசித்த என்னை விட வயதில் சிறியவனான முத்துசாமி என்ற நண்பனுக்காகவும் ஒரு கட்டுரையை எழுதிக்கொடுத்தேன். I became a ghost writer then. அந்தச் சின்ன சம்பவத்தை சமீபத்தில் ஒரு நாள் முத்துசாமியுடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டபோது நினைவுபடுத்தினான்.

    மேலும் மேலும் புதிய ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினேன். ஏர்ள் ஸ்டேன்லி கார்டனருக்கு அடுத்ததாக அகதா க்றிஸ்டி, ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் போன்றவர்களின் கதைககளைப் படித்தேன்.

    இடையில் ஆர். வி காவல் துறையில் ஐ. பி. எஸ்-சில் (IPS) தேர்வாகியிருந்தார். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு Deputy Inspector General -ஆக பணி ஓய்வு பெற்றார். ஆனால், அவர் ஐ. பி. எஸ்-சில் சேர்ந்த பிறகு அவருடன் எனக்குத் தொடர்பு அற்றுப்போய் விட்டது.

ஆங்கிலத்தில் என்னுடைய ஆர்வம் கூடுகிறது

    கல்லூரியில் படிக்கும் காலத்தில் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆங்கிலப் பாடப் புத்தகங்களே எனக்கு ஆங்கிலத்தில் ஆர்வத்தை இன்னும் கூட்டியது. ஆங்கிலப் பாடங்களை நடத்திய விரிவுரையாளர்களும் என்னுடைய ஆர்வத்தைக் கூட்டும்படியாக சொல்லிக் கொடுத்தார்கள். அவர்களில் எனக்கு நினைவில் நிற்பவர்கள் திரு. தேவதாஸ் என்பவரும் திரு. அருளானந்தம் என்பவரும். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் எனக்குப் பாடமாக இருந்தன. அந்த நாடகங்களை விரிவுரையாளர்கள் வாசித்துக் காட்டி விளக்கம் சொன்ன விதம் என்னை ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் மீது ஒரு பெரிய ஈடுபாட்டை உண்டாக்கியது. அதனால், என்னுடைய பாடத்தில் இல்லாத பல ஷேக்ஸ்பியர் நாடகங்களை வாசிக்கத் தொடங்கினேன். முக்கியமாக, Twelfth Night, Midsummer Night’s Dream, Othello, Hamlet, Merchant of Venice, King Lear போன்ற பல நாடகங்களின் தொகுப்பைப் புரிந்தாலும் புரியாவிட்டாலும் படித்தேன். ஆங்கிலத்தின் மீது எனக்குத் தொடர்ந்து ஈடுபாடு கூடிக்கொண்டே போனது.

    அதே போல பெர்னார்டு ஷா எழுதிய பிக்மாலியன் என்ற ஆங்கில நாடகம் எனக்குப் பாடமாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த நாடகங்களில் அதுவும் ஒன்று. ஜேன் ஆஸ்டினின் Pride and Prejudice என்ற கதையும் பாடமாக இருந்தது. ஏதோ ஒரு வருடம் பல பிரபல ஆங்கில எழுத்தாளர்களின் கட்டுரைகளின் தொகுப்பு ஒரு பாடப் புத்தகமாக இருந்தது. அதில் J. B. Priestly, Aldos Huxley, P. G Woodhouse, Bertrand Russel, H. G. Wells போன்ற பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள் என்னை ஈர்த்தன. Sesame and Lillies என்ற நூலை எழுதிய John Ruskin அவர்களின் எழுத்துக்கள் என்னைப் பலமாகப் பாதித்தன. என்னுடைய ஆங்கிலப் படைப்புகளிலும் அவரைப் போலவே பல வரிகளை தொடர் வரிகளாக, நீளமாக எழுதி வரும் பழக்கம் தொற்றிக் கொண்டது. அதை இன்றும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. S. T Coleridge எழுதிய A sight to dream of, not tell என்ற முக்கியமான வரிகள் அடங்கிய Christable, John Milton எழுதிய Paradise Lost, William Wordsworthu எழுதிய Daffodils போன்ற கவிதைகள் என் கவனத்தைக் கவிதைகள் பக்கமாகவும் திருப்பி விட்டன.

    முன்னம் ஆர். வி அவர்கள் சொன்னதை நினைவில் வைத்து Arthur Conon Doyle எழுதிய The Hound of the Baskervilles போன்ற ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் நாவல்களை கல்லூரி நூலகத்தில் படித்திருக்கிறேன். அதே போல இங்கிலாந்தின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் எழுதிய இரண்டாம் உலகப் போரின் நினைவுகள் அடங்கிய பல பகுதிகளைக் கொண்ட புத்தகத்தைப் படித்தேன்.

என்னுடைய பிரத்யேக அகராதி

    பாளையங்கோட்டையில் கல்லூரியில் படிக்கும் சமயம் ஒரு பெரிய தடியான நோட்டுப் புத்தகத்தில் நான் படித்த புத்தகங்களிலிருந்து நான் கண்ட புதிய வார்த்தைகளையும் அதன் அர்த்தங்களையும் எழுதத் தொடங்கினேன். அந்த நோட்டுப் புத்தகத்தையும் பின்னால் நான் சென்ற இடங்களுக்கெல்லாம் எடுத்துச் சென்றிருக்கிறேன். எனக்கு அது ஒரு குட்டி அகராதி போல என்னுடனேயே பல ஆண்டுகள் இருந்து வந்தது. பின்னர் ஒரு சமயம் அந்த நோட்டுப் புத்தகம் சென்னையில் வெள்ளம் வீட்டிற்குள் புகுந்ததில் அழிந்து போய் விட்டது.

ஆங்கிலப் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டேன்

    கல்லூரியில் படிக்கும் சமயம் ஆங்கிலத்தில் பேசவும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. என்னையும், நெல்லை வடிவேலு மற்றும் இன்னொரு சக மாணவனையும் (பெயர் நினைவில்லை) பல போட்டிகளுக்கு கல்லூரியின் முதல்வர் திரு. வேதசிரோன்மணி அனுப்பி வைத்தார். அதனால், பல பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டேன். அதில் கல்லூரிக்கும் சரி, எனக்கும் சரி பல பரிசுகள் கிடைத்திருக்கின்றன.

    முக்கியமாக பாளையங்கோட்டை ரோட்டரி கிளப் நடத்திய விவசாயம் தொடர்பான தலைப்பில் நடந்த ஒரு போட்டியில் நான் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றேன். எனக்கு ஏழெட்டு புத்தகங்கள் பரிசாகக் கிடைத்தன. அதில் முக்கியமாக ஜவஹர்லால் நேரு எழுதிய Discovery of India, H. G Wells எழுதிய Time Machine, ஷேக்ஸ்பியரின் ஒரு நாடகம் போன்ற புத்தகங்கள் இருந்தன.  அந்தக் காலத்தில் அந்தப் புத்தகங்களையெல்லாம் படிக்கும்போது எனக்குப் பிரமிப்பாக இருந்தது. அந்தப் போட்டியில் நான் பேசியது பின்னால் இந்தியன் வங்கியில் சேரும் சமயம் நான் விவசாயத்தைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையைப் பற்றிய ஒரு நல்ல அபிப்பிராயத்தை நேர்காணல் உறுப்பினர்களிடையே ஏற்படுத்தியிருந்தது. நேர்காணல் உறுப்பினர்கள் நான் எழுதிய கட்டுரையை ஒட்டியே ஒரு சில கேள்விகளைக் கேட்டபோது என் கட்டுரையை ஆழமாகப் படித்திருக்கிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்தியது. அது ஏதேச்சையாக எனக்குக் கிடைத்த இன்ப அதிர்ச்சி.

    மதுரை காமராஜ் பல்கலையில் இன்னொரு முக்கியமான பேச்சுப் போட்டிக்கு என்னை அனுப்பினார்கள். மதுரா கல்லூரியில் வைத்துப் போட்டி நடந்தது. நான் நன்றாகப் பேசியிருந்தும் பெண் போட்டியாளர் என்ற ஒரே காரணத்துக்காக இன்னொரு பேச்சாளருக்குப் பரிசு கொடுத்தார்கள். அரசல் புரசலாக எனக்கு இது தெரிய வந்தது.

நான் வாங்கிய முதல் ஆங்கில அகராதி

    பின்னர் 1970-ல் இந்தியன் வங்கியில் சேர்ந்த பிறகு குன்னூர் கிளையில் என் முதல் மாதச் சம்பளத்தைக் கையில் பெற்றவுடன் நான் செய்த முதல் காரியம் எங்கள் வங்கிக்கு அருகே இருந்த ஒரு புத்தகக் கடையில் ஆக்ஸ்ஃபோர்டு பிரசுரத்தின் ஆங்கில அகராதி ஒன்றை எனக்கே எனக்காக முப்பது ரூபாய்க்கு வாங்கி அதன் முதல் பக்கத்தில் “This is for improving my English” என்று எழுதி நானே கையெழுத்து போட்டுக்கொண்டது. அந்த அகராதி இருபது வருடங்களுக்கும் மேலாக என்னுடனேயே பல இடங்களுக்கும் பயணம் செய்திருக்கிறது. துரதிருஷ்டவசமாக அதுவும் சென்னை வெள்ளத்தில் சேதமடைந்து விட்டது.

ஆங்கிலத்தை வளர்ப்பதற்கு புத்தகங்கள் படிப்பது அவசியம்

    வங்கியில் சேர்ந்த பிறகு வேலைப் பளுவுக்கு நடுவேயும் பல ஆங்கில நாவல்களைத் தொடர்ந்து படித்து வந்தேன். Nevil Shute, Arthur Haily, Irving Wallace, Ayn Rand, Robert Ludlum, Leon Uris, Frederick Forsyth போன்ற பல ஆங்கில எழுத்தாளர்களின் கிட்டத்தட்ட எல்லாப் புத்தகங்களையும் படித்திருக்கிறேன். பின்னர் வந்த காலங்களில் இன்று வரை Jeffrey Archer, Michael Crighton, Alistair Maclean, Clive Cussler, David Baldacci இப்படிப் பல எழுத்தாளர்களின் மர்ம நாவல்களைப் படித்திருக்கிறேன். ஒரு சில எழுத்தாளர்கள் பெயர்கள் விடுபட்டிருக்கலாம்.

    அப்படியாகப் பல புத்தகங்களைத் தொடர்ந்து படித்து வந்ததினால் ஆங்கிலத்துடன் என்னுடைய தொடர்பு தொடர்ந்து இருந்து வந்தது. ஆங்கிலத்தில் என்னால் நன்றாகப் பேச முடிந்திருந்தாலும் அலுவல் காரணமாகத் தமிழ், ஹிந்தி மொழிக்கலப்புடன் பேசிப் பேசி வந்ததில் என்னுடைய ஆங்கிலப் புலமை கொஞ்சம் கொஞ்சமாக மங்கிப்போனது உண்மைதான்.

நான் ஆங்கிலப் பேச்சாளரானேன்

    பின்னர் 2006-ல் நான் துபாயிலிருந்து பணி ஓய்வு பெற்று தென்காசியில் குடிபுகுந்த பின்பு பாரத் மாண்டிசோரி பள்ளியில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக Personality Development பற்றிப் பேசச் சொன்னார்கள். அப்பொழுதுதான் என்னால் ஒரு பேச்சாளராகவும் மாற முடியும் என்பதைத் தெரிந்துகொண்டேன். பேச வேண்டியதைப் பற்றி முன் கூட்டியே என்னைத் தயார் செய்துகொண்டு நூற்றுக்கும் மேலான மாணவர்கள் முன்பு மைக்கைப் பிடித்து என்னால் பேச முடிந்தது. பாரத்தின் முதல்வரும் ஆசிரியர்களும் என்னுடையப் பேச்சை பாராட்டத் தொடங்கவே தொடர்ந்து அந்தப் பள்ளியிலும் வேறு சில பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் Personality Development, Motivation போன்றவற்றைப் பற்றி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் பாடம் நடத்தியிருக்கிறேன்.  நாளாவட்டத்தில் எந்த முன் தயாரிப்பும் இல்லாமல் பேசத் தொடங்கினேன். மேடையில் ஏறி நின்று ஓரு பெரிய கூட்டத்தைக் கண்டால் சாதாரணமாக வரக்கூடிய பயம் எனக்குப் பொதுவாக என்றுமே இருந்ததில்லை.

    தொடர்ந்து என்னுடைய ஆங்கிலப் பேச்சுக்களுக்காக Personality Development, Motivation, Communication Skills, Leadership Development பற்றிய நூல்களை இன்றும் தொடர்ந்து படித்து வருகிறேன்.

ஆங்கிலத்தில் சொல்லிக்கொடுக்கத் துவங்கினேன்

    இதற்கிடையில் திரு. ராமகிருஷ்ணன் என்ற என் மனைவியின் நெருங்கிய உறவினர் ஆங்கிலத்தில் பேசுவது எப்படி என்று மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் விதத்தை எனக்குச் சொல்லிக்கொடுத்தார். அவர் பல காலமாக அதைத் தன் தொழிலாகச் செய்து வந்தார். தன்னிடம் இருந்த ஒரு சில பயிற்சிப் புத்தகங்களையும் எனக்குக் கொடுத்து பள்ளிகளுக்குச் சென்று ஆங்கிலத்தில் பேசுவதற்குச் சொல்லிக்கொடுக்க ஊக்குவித்தார். ஆரம்பத்தில் எனக்கு அது பற்றிய பல சந்தேகங்கள் இருந்தாலும் அவருடைய உந்துதலால் பல பள்ளிகளில் பல ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி வகுப்புகளை நடத்தியிருக்கிறேன்.  இருநூறுக்கும் மேலான ஆசிரியர்களும் முன்னூறுக்கும் மேலான மாணவர்களும் அந்தப் பயிற்சியை என்னிடம் எஎடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தேன்

    பணி ஓய்வு பெற்று அமெரிக்காவுக்கு அடிக்கடி சென்று வந்த சமயத்தில்தான் இண்டெர்னெட்டில் என் வலைப்பக்கத்தில் (Blogging) எழுதும் பழக்கம் ஆரம்பித்தது. எனக்கென்று தனியாக ஒரு வலைப் பக்கத்தை பதிவு செய்துகொண்டேன். அதில் தொடர்ந்து எழுத ஆரம்பித்ததில் என்னுடைய எழுத்திலும் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது.

என் முதல் புத்தகம்

  


 
தென்காசியில் வசித்து வந்த சமயத்தில்தான் ஆங்கிலத்தில் ஒரு முழு நாவலை எழுத ஒரு மையக் கருத்தும் பிறந்தது. அதே சமயம் சிறுகதைகளும் எழுத ஆரம்பித்திருந்தேன். ஏழு சிறுகதைகள் அடங்கிய ஒரு புத்தகத்தை வடிவமைத்து பாரத் மாண்டிசோரி பள்ளியில் உதவி முதல்வராக இருந்த திருமதி. உஷா ரமேஷ் அவர்களிடம் கொடுத்தேன். அவர் அதைப் படித்து விட்டு என்னுடைய கதைகளையும், நான் எழுதிய விதத்தையும் வெகுவாகப் பாராட்டினார். அதை ஒரு புத்தகமாக வெளியிடலாம் என்ற யோசனையையும் கொடுத்தார். பள்ளியின் முதல்வரான திருமதி. காந்திமதிக்கும் என்னுடைய எழுத்துக்களும், கருத்துக்களும், எழுதிய விதமும் பிடித்திருந்தது. புத்தகத்தை வெளியிட்டால் பள்ளியில் என்னுடைய புத்தகத்தை ஒரு Nondetailed book-ஆகத் தன் மாணவர்களைப் படிக்க வைப்பதாகச் சொன்னார். குற்றாலத்தில் பராசக்தி மகளிர் கல்லூரியில் 
டாக்டர் திருமதி. ராஜேஸ்வரி முதல்வராகப் பதவியேற்ற சமயம் அது. அவர்களிடமும் என் புத்தக வரைவைக் காட்டினேன். அவரும் படித்து விட்டு என்னுடைய கதைகள் மிகவும் நன்றாக இருப்பதாகப் பாராட்டினார். அவரையே என்னுடைய புத்தகத்துக்கு முன்னுரை எழுதிக்கொடுக்கக் கேட்டேன். உடனேயே ஒப்புக்கொண்டு முன்னுரை எழுதிக்கொடுத்தார்.

    2011-ஆம் ஆண்டு தென்காசி மேலகரம் சமுதாய நலக்கூடத்தில் ஒரு நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்புப் புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தகத்தின் தலைப்பு “Short Stories for Young Readers: Book 1” என்னுடைய முதல் புத்தகத்தின் ஒரு சில கதைகளை திரு. ராமகிருஷ்ணனும் படித்துப் பார்த்து அதை எப்படி எடிட் செய்யலாம் என்ற தனது வலிமையான கருத்துக்களைக் கொடுத்திருந்தார். அந்தப் புத்தகத்தின் சுமார் 150 பிரதிகளை பாரத் மாண்டிசோரி பள்ளி தனது ஏழாவதோ எட்டாவதோ படிக்கும் மாணவர்களுக்காக வாங்கிக் கொண்டது. மேலும் புதிய புத்தகங்களை உருவாக்குமாறும் அவர்கள் என்னைக் கேட்டுக்கொண்டனர்.

மேலும் புத்தகங்கள் வெளியிட்டேன்

    நான் சிறுகதைப் புத்தகங்கள் வெளியிட்டதில் பாரத் மாண்டிசோரி முதல்வர் திருமதி. காந்திமதி கொடுத்த ஊக்கத்தின் பங்கு மிகப் பெரியதுஅதே போல என்னுடைய ஒவ்வொரு புத்தகத்தையும் முழுமையாகப் படித்து தனது கருத்துக்களை எனக்குத் தெரிவித்த திருமதி. உஷா அவர்களுடைய உதவி என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டியது. என்னுடைய முதலாவது சிறுகதைப் புத்தகத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து மேலும் இரண்டு புத்தகங்கள் “Short Stories for Success for Young Readers: A New Lexicon Unfolded” மற்றும் “Short Stories for Young Readers: for Personality Development – Book 1” என்ற தலைப்பில் எழுதி வெளியிட்டேன். பாரத் மாண்டிசோரிப் பள்ளி என்னுடைய எல்லா சிறுகதைப் புத்தகங்களையும் ஆண்டு தோறும் தங்கள் பள்ளி மாணவர்களுக்காக வாங்கி வருகிறார்கள்.

    பாரத் பள்ளியைப் போலவே தென்காசியில் எம். கே. வி கே மெட்ரிக் மேல்னிலைப் பள்ளி, சுரண்டை ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிக் மேல்னிலைப் பள்ளியும் என்னுடைய புத்தகங்களை ஓரிரு ஆண்டுகளுக்கு வாங்கிக்கொண்டார்கள். விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கோவில்பட்டி மாவட்டங்களில் முப்பதுக்கும் மேல் பள்ளிகளில் என்னுடைய புத்தகத்தை தங்கள் நூலகங்களுக்காக வாங்கிக் கொண்டார்கள்.

என் முழு நீள நாவல்கள்

    2011-ல் என்னுடைய சிறுகதைப் புத்தகம் எழுதிவரும் போது ஒரு முழு நீள ஆங்கில நாவல் எழுதும் ஒரு கருவும் என்னுள் உருவாகியிருந்தது. தாமிரபரணி ஆற்றங்கரையில் நடைபெறுவதாக என் கற்பனையில் உதித்ததுதான் What if Our Dreams Come True! An Uncommon Meeting with Lord Siva. எழுதி முடிக்க இரண்டு வருடங்கள் ஆகின. இந்தப் புத்தகத்தை பங்களூரில் Pothi.com இணையதளத்தில் அச்சு வடிவத்தில் வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து Lonely மற்றும் The Path என்ற தலைப்பில் இரண்டு ஆங்கில நாவல்களை வெளியிட்டேன். 2020-ல் Lonely II என்ற இன்னொரு நாவலை அமேசானில் வெளியிட்டேன்.

என் பொது அறிவுப் புத்தகங்கள்

    இடையில் என் கவனம் மாணவர்களின் நலனுக்காக பொது அறிவுப் புத்தகங்களை எழுதுவது பக்கம் திரும்பியது. நான் தென்காசியில் குடிபுகுந்த பிறகு மாணவர்களுக்காக பொது அறிவு சம்பந்தமான வினாடி-வினாப் போட்டிகள் நடத்தி வந்தேன். அந்தப் போட்டிகளுக்கு மாணவர்கள் தங்களைத் தயார் செய்து கொள்வதற்கு ஒரு வழிகாட்டிப் புத்தகம் இருந்தால் மாணவர்கள் இன்னும் சிறப்பாகப் போட்டியில் கலந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று நினைத்தேன். அந்த எண்ணத்தைத் தொடர்ந்து I want to know about … India, its States, and Important Cities என்ற தலைப்பில் இந்தியாவைப் பற்றிய பல புகைப்படங்கள் அடங்கிய புத்தகத்தை ஐந்து பகுதிகளாக வெளியிட்டேன். பின்னர், “Solar System,’ மற்றும் “Fundamentals of chemistry, Atom, and what is inside the Atom” என்ற தலைப்புகளில் இரண்டு புத்தகங்கள் தயாரித்து வெளியிட்டேன். 2020-21-ல் “Human Body and Health” என்ற தலைப்பில் இன்னொரு புத்தகம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

பயணம் தொடர்கிறது

    அப்படியாக என்னுடைய ஓய்வு நேரங்களை பயனுள்ளதாகச் செலவிட முயற்சி செய்து வந்திருக்கிறேன். இந்தப் பகுதியை எழுதும் இந்த நேரம் என்னுடைய வயது 73-ஐத் தாண்டியிருக்கிறது. வயதான காலத்தில் வாழ்க்கையில் ஒரு பிடிமானம் கிடைப்பதற்கு இதுபோன்ற முயற்சிகள் உதவி வருகின்றன. என்னுடைய வாழ்க்கை வீணாக வெறும் பொழுதுபோக்கில் மட்டும் செலவிடப்படவில்லை என்ற ஒரு மன நிம்மதியும் ஏற்பட்டு வருகிறது.

    இருந்தும் ஆங்கிலத்தில் நான் ஒன்றும் பெரிய மேதாவி அல்லது திறமைசாலி என்று சொல்லிக்கொள்ள முடியாது என்பதுதான் உண்மை. ஏதோ, ஆங்கிலத்தின் மேல் எனக்கு இருக்கும் ஒரு மோகத்தால் தொடர்ந்து முயன்று வருகிறேன்.

முக்கியமான ரகசியம்

    ஒரு முக்கியமான ரகசியம் என்னவென்றால், இன்றும் ஆங்கிலத்தில் எனக்கு இலக்கணம் தெரியாது, பிடிக்கவும் பிடிக்காது. இலக்கணத்தில் எனக்கு சந்தேகம் வந்தால் ஒன்று என் மனைவியிடம் கேட்பேன் அல்லது இண்டெர்னெட்டில் தேடுவேன். ஆங்கிலத்தில் பேசுவதற்கு மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும்போது முதலிலேயே நிபந்தனை போட்டு விடுவேன் “இலக்கணம் சம்பந்தமாக என்னிடம் கேள்விகள் கேட்கக் கூடாது. அது எனக்குத் தெரியவும் தெரியாது,” என்று. ஒரு மொழியைப் பேசுவதற்கு இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்பது எனது நம்பிக்கை. நாம் எல்லோரும் தமிழில் பேசக் கற்ற பிறகுதான் பின்னர் பள்ளியில் தமிழ் இலக்கணத்தைப் பற்றி ஒரளவு தெரிந்து கொண்டிருப்போம்.  அமெரிக்காவில் வசிக்கும் என் மூன்று வயதுப் பேரன் ஆங்கிலத்தில் பிளந்து தள்ளியிருக்கிறான். இவ்வளவுக்கும் ஐந்து வயது வரை அவன் பள்ளிக்குப் போகவில்லை. வீட்டில் தன் அண்ணனுடன் பேசிப் பேசியே ஆங்கிலத்தில் பேசக் கற்றுக்கொண்டான்.

நன்றியுரை

    ஆங்கிலத்தில் எனது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் தூண்டிய (மறைந்த) திரு. ஆர். வி (ஐ. பி. எஸ்) அவர்களுக்கும், என்னைப் பல அங்கிலப் பேச்சுப் போட்டிகளுக்கு அனுப்பி ஊக்குவித்த ஜான்ஸ் கல்லூரி முன்னாள் முதல்வர் (மறைந்த) திரு. வேதசிரோன்மணி அவர்களுக்கும், என்னை ஒரு பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் அறிமுகப்படுத்தி ஊக்குவித்த பாரத் முதல்வர் திருமதி. காந்திமதி, உதவி முதல்வர் திருமதி உஷா, தாளாளர் திரு. மோகனகிருஷ்ணன் அவர்களுக்கும், என்னை ஒரு ஆங்கில ஆசிரியராகக் காண்பித்த (மறைந்த) திரு. ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனக்கு இன்றும் மானசீக நண்பர்களாக இருக்கும் பல ஆங்கில எழுத்தாளர்களுக்கும் நன்றி. 

&&&&&

No comments:

Post a Comment