Total Pageviews

Showing posts with label Kelvikkena Pathil. Show all posts
Showing posts with label Kelvikkena Pathil. Show all posts

Monday, August 21, 2017

21.08.17 கடந்த வார நாட்குறிப்பு

21.08.17 கடந்த வார நாட்குறிப்பு

மீண்டும் தொடர்ந்து முகநூலில் எழுத வேண்டும் என்று ஆவல். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆங்கிலத்தில் இரண்டு பொது அறிவுப் புத்தகங்கள் எழுதுவதில் மூழ்கியிருந்தேன். அதனால் வேறு எதைப் பற்றியும் எழுதத் தோன்றவில்லை.

பொழுது போக்குக்கு முன்னெல்லாம் தமிழ் திரைப் படங்களையும், ஆங்கிலத் தொடர்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், கடந்த சில மாதங்களாக தமிழக மற்றும் தேசிய அரசியல்வாதிகளும் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களும் திரைப் படங்களைத் தோற்கடித்து நமக்கு கேளிக்கை பொழுதுபோக்குக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், ஒரு நாளைக்கு மூன்று முறை செய்தி சுருக்கங்களைப் பார்த்து விடுவேன். அரசியல் பற்றி நிறைய எழுதலாம். கமலஹாசன் சொல்வது போல நானெல்லாம் எப்பொழுதோ அரசியலுக்கு வந்தாகி விட்டது. வெளிப்படையாக கருத்துக்களை எழுதுவதும் பேசுவதுமில்லை. அவ்வளவுதான்.

பொதுவாக, எல்லா வாரமும் ரங்கராஜ் பாண்டேயின் ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சியைப் பார்த்து விடுவேன். பல அரசியல்வாதிகள் பாண்டேயின் கிடுக்கிப் பிடி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் உளறுவதும். சமாளிப்பதும், வழிவதும் நல்ல கேளிக்கையாக இருக்கிறது. ஆனால், என்னவோ கமலஹாசனுடனும், பார்த்திபனுடனும் பேசும் பொழுது மட்டும் பாண்டே ரொம்பவும் பவ்யமாகவே நடந்து கொண்டார். அதே போல, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன் பேசும் பொழுது பாண்டேயின் ஆங்கிலப் புலமை பொங்கி வழிந்து கொண்டிருந்தது. இருந்தும் பாண்டே அடக்கியே வாசித்தார். அவர் பேசும் தமிழில் ல, ழ, ள- வை பிழிந்தெடுக்கிறார்.

எனக்குப் பிடித்த இந்த ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சியை ஏனோ நேற்று (20.08.17) முதல் யூடியூபிலிருந்து அமெரிக்காவுக்கு கிடைக்காமல் செய்து விட்டார்கள். எனக்கு மிகவும் வருத்தம். இந்தியத் தொலைக்காட்சிகளை இங்கே பார்க்கும் வசதியை எனக்கு நான் ஏற்படுத்திக்கொள்ளவில்லை.
அதே போல பான்டேயின் மக்கள் அரங்கம் (தந்தி டீ.வி) நிகழ்ச்சியையும் யூடியூபில் பார்த்து விடுவேன். இதையும் நிறுத்திவிடுவார்களோ என்னவோ?
கருத்தரங்கம் என்ற பெயரில் ஆங்கிலம் மற்றும் தமிழ் தொலைக்காட்சிகளில் காட்டப்படும் காட்டுக் கூப்பாடுகளை நான் பார்ப்பதில்லை. அதுதான், முக்கியமாக க்ளிப்பிங்களை முக நூலில் பலர் பதிவு செய்து விடுகிறார்களே!

ஒரு விசேஷ நாள் வந்து விட்டால் போதும். எல்லாத் தொலைக்காட்சிகளிலும் ஒரு பட்டி மன்றத்தை வைத்து விடுகிறார்கள். அரங்கம் நிறைந்து வழிகிறது எல்லா பட்டி மன்றங்களிலும். அல்லது நிரம்பி வழிவது போல காட்டுகிறார்களா என்று  தெரியவில்லை. இந்த பட்டி மன்றங்களில் நடுவர்கள் படுத்தும் பாடு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. நடு நடுவில் புகுந்து அவர்கள் செய்யும் வியாக்கானம் தாங்க முடியவில்லை. இந்தப் பழக்கம் எப்பொழுதிலிருந்து என்று புரியவில்லை. ஆனால், எல்லோரும் காமெடியாகப் பேச வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

ஐஃபோன் கையடக்கமாக இருப்பதால் அடிக்கடி முகநூல் பார்ப்பதற்கு வசதியாக  இருக்கிறது. இப்பொழுது முகநூலில் மிகவும் பாப்புலராக இருப்பது ‘ஸ்மூல்’ என்ற செயலிதான் என்று நினைக்கிறேன். பல பாடக பாடகிகள் நன்றாகவே பாடுகிறார்கள். பழைய எம். எஸ். வி பாடல்களானால் கேட்பேன். மற்ற பாடல்களை கேட்பதற்கு ஏனோ மனம் நாடுவதில்லை.

பலர் எங்கெல்லாமோ தேடிப் பிடித்து செய்திகளையும், வீடியோக்களையும் முக நூலில் பதிவிடுகிறார்கள். சமூக வலை என்பது எவ்வளவு வீச்சு உள்ளது என்பது நன்கு புரிகிறது.

தேசிய பங்குச் சந்தை பத்தாயிரத்தைத் தொட்டுவிட்டு இப்பொழுது பல நாட்களாக ஊசலாடிக்கொண்டிருக்கிறது. கை வைப்பதற்குப் பயமாக இருக்கிறது. முன்னே அடி வாங்கியது நன்றாக நினைவிருக்கிறது.

ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று பக்கத்திலிருந்த ஆஞ்சனேயர் கோவிலில் சத்சங்கத்தில் ஒரு பஜனைப் பாடலை  நான் பாடியது மனதுக்கு நிறைவாக இருந்தது.


நாளை மீண்டும் எழுத முயற்சிக்கிறேன். வணக்கம்.