Total Pageviews

Showing posts with label Personal Diary. Show all posts
Showing posts with label Personal Diary. Show all posts

Wednesday, August 22, 2018

23.08.18 மீண்டும் அமெரிக்காவுக்கு ‘டாட்டா’


23.08.18 மீண்டும் அமெரிக்காவுக்கு ‘டாட்டா’

சரியாக ஐந்து மாதங்கள் கழித்து இரட்டை மனதோடு அமெரிக்காவிடமிருந்து மீண்டும் விடை பெறுகிறேன். நம் இடத்துக்குத் திரும்புகிறோம் என்பதில் ஒரு பக்கம் மகிழ்ச்சி. அப்படி என்னதான் நம்மூரில் இருக்கிறதோ? சுகமாகக் கழிந்த ஐந்து மாத அமெரிக்க வாழ்க்கையை விட்டுவிட்டுப் போகிறோம் என்பதில் இன்னொரு பக்கம் தவிப்பு. அப்படி என்னதான் அமெரிக்க வாழ்க்கையில் இருக்கிறது?

ஆண்டு தோறும் இதே கேள்விகளுடன் அமெரிக்காவுக்குப் வருகிறோம். அமெரிக்காவிலிருந்து திரும்புகிறோம். சமயத்தில் சலிப்பாகவும் இருக்கிறது. எங்கள் குழந்தைகள் வளர்ந்து வரும் பருவத்தில் அவர்களுக்கு அமெரிக்க கனவை ஊட்டி இருவரையும் அங்கேயே குடியேற வைத்த பின்பு நாங்கள் மட்டும் இந்தியாவிலேயே இருப்போம் என்று எப்படி அடம் பிடிப்பது?

பசுமையான சுற்றுப் புறம். நல்ல பருவனிலை. பிக்கல் பிடுங்கல் இல்லாத நாட்கள். எல்லாவற்றிற்கும் மேலாக சிறு குழந்தைகளுடன் அன்னியோன்னியம். இது அமெரிக்க வாழ்க்கையின் சாராம்சம்.

பிக்கல் பிடுங்கல் எல்லாம் இந்தியாவிலிருந்து வந்ததுதான். ஆக்சிஸ் வங்கியுடன் வங்கிக் கணக்கு சம்பந்தமான போராட்டங்கள், இறுதி நாளுக்கு முன் வருமான வரித் தாக்கலுக்காக பிசியான ஆடிட்டருடன் தொடர்ந்து விரட்டல், தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி சம்பந்தமான உப்புப் பெறாத சின்ன விஷயங்களுக்குத் தேவையில்லாத விளக்கங்கள், இப்படிச் சில.

இதெல்லாவற்றுக்கும் மேலாக ஒன்று மாற்றி ஒன்றாக ரத்த அழுத்தத்தை ஏற்றும் இந்தியாவிலிருந்து வரும் திக், திக் செய்திகள் … அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிடும் அறிக்கைகள் எல்லாம் தினப்படி வாழ்க்கையைப் பாதிப்பதில்லை. இங்கே வாழ்க்கை சீராக ஓடுகிறது. இந்தியாவில் …?

ஒரு பக்கம் தண்ணீர் சூழ்ந்து எல்லாவற்றையும் அழித்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் இன்னமும் வறண்டு கிடக்கிறது.

மோடி நின்றால் குற்றம், நடந்தால் குற்றம், எழுந்தால் குற்றம்… எல்லாவற்றுக்கும் மோடிதான் பதில் சொல்ல வேண்டும்

ஒரு பக்கம் விவசாயிகளும் நடுத்தர மக்களும் தவித்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் வங்கிகளை ஏமாற்றிய பெரிய பண முதலைகள் வெளி நாட்டில் போய் பதுங்கிக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பாராளுமன்றம் ஒரு விவாத மேடையா அல்லது அரசியல் கட்சி மேடையா, குத்துச் சண்டை அரங்கமா என்ற சந்தேகம் பல நேரங்களில் வருகிறது.

பெரும்பான்மை சமூகத்தினர்தான் எல்லாவற்றுக்கும் பயப்பட வேண்டியிருக்கிறது. சிறுபான்மையினரை தொட முடியாது. ஷாக் அடிக்கும்.

தமிழ்நாட்டுக் கோவில்கள் பெரிய சுரண்டல் சுரங்கங்களாகி விட்டன.

பல மானிலங்களில் ஒன்றிரண்டு பெரிய அரசியல் கட்சிகள். ஒன்றிரண்டு சிறிய கட்சிகள். தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்தால் கட்சி. போராட்டங்களுக்காகவே ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன போல.

தமிழகத்தில் எதைத் தொட்டாலும் போராட்டம். தெரியாமல் கூட எந்த ஒரு வளர்ச்சித் திட்டமும் தமிழகத்துக்கு வந்து விடக்கூடாது என்பதில் எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு அரசியல் செய்கிறார்கள்.

தேசிய அளவில் தொலை நோக்குத் திட்டத்துடன் எது செய்தாலும் எதிர்ப்பு. திரு மன்மோகன் சிங் நிதித் துறை அமைச்சராக இருந்த போதே எதிர்த்தவர்கள்தான். இன்று மோடியின் திட்டங்களையும் எதிர்க்கிறார்கள்.

நூற்றுக்கணக்கான கோடிகள் அளவுக்கு பணம் அங்கங்கே பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

அடுக்கிக் கொண்டே போகலாம் போலிருக்கிறது. இது ஒன்றொன்றும் சராசரி மனிதனின் தினப்படி வாழ்க்கையை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது.

அமெரிக்காவிலிருந்து திரும்பும் பொழுது எதை முக்கியமாக தொலைக்கப் போகிறேன்?

எந்த மாற்றமுமில்லாத இயந்திரத் தனமான தினப்படி வாழ்க்கையின் நேரங்களைத் தொலைக்கப் போகிறேன்.

குழந்தைகளோடும் பேரக் குழந்தைகளோடும் இருந்தாலும் ஒரு வெறுமையை, தனிமையை பல நேரங்களில் உணர்ந்ததைத் தொலைத்து விட்டு வரப் போகிறேன். இந்தியாவிலும் நான் ஒரு தீவுதான். இருந்தும் என் தீவுக்கு பலர் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். இந்தத் தீவும் மிதந்து ஊர்ந்து கொண்டேயிருக்கும்.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஒரு தனி மனிதனாக சிறு குழந்தைகளை கவனித்துக் கொண்ட நேரங்களை – இனிமையான நினைவுகளையல்ல – தொலைத்து விட்டு வரப் போகிறேன்.

இறுதியாக, எது எப்படியிருந்தாலும் இந்த முறை என்னுடைய அமெரிக்க விஜயத்தின் போது என் பேரக் குழந்தைகளான சிறு குழந்தைகளை புரிந்துகொள்ள முயற்சி செய்திருக்கிறேன். இதைப் பற்றித் தனியாகத் தான் எழுத வேண்டும்.

இந்தியாவில் காலடி எடுத்து வைக்கும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். வந்தே மாதரம்.


Saturday, July 21, 2018

22.07.18 விஷப் பரிட்சை – பாகம் 1


22.07.18 விஷப் பரிட்சை – பாகம் 1

கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் முகநூலிலிருந்தும் என்னுடைய வலைதளத்திலிருந்தும் நான் காணாமல் போயிருந்தேன். என்ன, உடல் நலம் சரியில்லையா என்று கூட ஒரு சிலர் விசாரித்திருந்தார்கள். நல்ல காலம் அப்படியெல்லாம் இல்லை. நான் காணாமல் போன கதைதான் இந்தப் பதிவு.

விரும்பியோ விரும்பாமலோ அமெரிக்காவின் க்ரீன் கார்டை வாங்கிக் கொண்ட காரணத்தினால் நானும் என் மனைவியும் ஆண்டு தோறும் இங்கே வருவது ஒரு கட்டாயமாகி விட்டது. பொதுவாக குளிர்காலத்தை ஃபீனிக்சிலும் கோடை காலத்தை சிக்காகோவிலும் என்றுதான் கழித்து வந்தோம். ஜூலை – டிசம்பர் பொதுவாக இந்தியாவில்.

ஃபீனிக்ஸ் ஒரு பாலைவன நகரம். பாலைவனத்தைச் சோலைவனமாக மாற்றியிருந்தாலும் 1100F சூட்டில் வானத்துக்கு கூரை போட இவர்களால் முடியவில்லை. ஃபீனிக்சில் பள்ளிகளில் ஒரு பழக்கமென்னவென்றால், ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு சிறிய - ஒரு முழு வாரம் - ப்ரேக் கொடுத்து விடுகிறார்கள். மார்ச்சில் ஸ்ப்ரிங்க் ப்ரேக், அக்டோபரில் ஃபால் ப்ரேக், டிசம்பரில் வின்டர் ப்ரேக். கோடையில் மே கடைசி முதல் ஜூலை கடைசி வரை மட்டும் நீண்ட ப்ரேக் - முழு இரண்டு மாதம்.

சிறிய விடுமுறைகளுக்கு குழந்தைகளின் பெற்றோர்கள் எப்படியோ அங்கே இங்கே கூட்டிக்கொண்டு போயும் மாறி மாறி வீட்டிலிருந்து வேலை பார்த்தும் சமாளித்து விடுகிறார்கள். ஆனால்…

கோடை காலத்தில் ஃபீனிக்சில் என் மகள் வழி பேரன் பேத்தி இருவரும் பள்ளிச் சிறுவர்களுக்காக நடக்கும் முழுநேரக் கோடை காம்புக்குப் போய் விடுகிறார்கள். அவர்கள் அப்பா/அம்மா அலுவலகத்துக்குப் போகும் பொழுது காம்பில் விட்டு விட்டு போவார்கள். திரும்பும் பொழுது கூட்டிக்கொண்டு வந்து விடுவார்கள்.

இந்த காம்புகளில் சிறுவர்களை அவர்கள் வயதுக்கேற்ப பலவிதமாக ஈடுபடுத்தி விடுகிறார்கள். நிறைய கற்றுக் கொடுக்கவும் செய்கிறார்கள். ஆனால், என்னுடைய பேரன் பேத்தியைப் பொருத்த வரை காம்ப் என்றால் போர். ஒவ்வொரு நாளும் முனகிக் கொண்டு மனமில்லாமலே இந்த கோடைக் காம்புக்குப் போய் வந்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த வலியை அவர்கள் பொறுத்துக் கொண்டாக வேண்டும்.

என் பேரன் பேத்தி மேல் இருந்த (கண்மூடித்தனமான) ஒரு பாசத்தில் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு நாங்கள் அவர்கள் கூட நேரத்தை செலவிடுகிறோம். அதனால் கோடை காம்புக்குப் போக வேண்டாம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தேன். குழந்தைகளுக்கு ஏகக் குஷி.

வரப் போகும் அபாயத்தையும் என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பதையும் நான் புரிந்து கொள்ளாமல் கொடுத்த வாக்குறுதி என்னை இரண்டு மாதத்துக்குக் கட்டிப் போட்டு விட்டது.

என்னுடைய குணத்தையும் முழுவதுமாக புரிந்து கொள்ளாமல் குழந்தைகளும் என்னை நம்பி என்னுடன் கோடை நேரத்தை செலவிட ஒத்துக் கொண்டு விட்டனர்.

விஷப் பரிட்சை ஆரம்பித்து விட்டது.

கோடையில் அதிகாலை நேரத்தைத் தவிர எந்த நேரத்திலும் வெளியே போக முடியாது. அனல் பறக்கும். உலர்ந்த பருவனிலை. வீட்டுக்குள்ளேயே அடங்கியிருக்க வேண்டும். 9 மற்றும் 6 வயது கொண்ட ஹைப்பர் ஆக்டிவ் பேரன் பேத்தியை சமாளித்தாக வேண்டும்.

நான் ஒரு ‘பிக் பாஸ்’ சும்மா விடுவேனா? என்ன நடந்தது? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(ஓரு இருநூறு முன்னூறு வார்த்தைகளைக் கூடத் தொடர்ந்து படிப்பதற்கு பலருக்கும் இன்று பொறுமையில்லாததால் இத்துடன் நிறுத்திக் கொண்டு நாளை மீண்டும் தொடர்கிறேன்.)

Wednesday, December 13, 2017

14.12.17 - இன்றைய சிந்தனை - கஷ்டமும் நஷ்டமும்

14.12.17 இன்றய சிந்தனை

அவ்வப்பொழுது மகிழ்ச்சியான சம்பவங்கள் நடப்பதும் கஷ்ட நஷ்டங்கள் வருவதும் எல்லோருடைய வாழ்க்கையிலும் சகஜமாக நடப்பதுதான். 

ஒரு சில நல்ல காரியங்கள் நமக்கு நடக்கும் பொழுது நாம் யாரும் ‘இது ஏன் எனக்கு வந்து சேர்ந்தது?’ என்று பொதுவாகக் கேட்பதில்லை. எந்த விதத்தில் அதற்கு நாம் தகுதியானோம், அல்லது அதைப் பெற்று மகிழ்வதற்கு நாம் என்ன செய்தோம் என்று யோசிப்பதில்லை.

ஆனால், அதே சமயம் ஒரு பொருளை இழந்து விட்டாலோ – பல சமயம் அது ஒரு சிறிய அற்பப் பொருளாக இருந்தால் கூட – மிகவும் மனம் வருத்தப் படுகிறோம். சமயத்தில் ஒடிந்து போய் விடுகிறோம். பலரை குறை சொல்கிறோம். நம்மையே நொந்து கொள்கிறோம். ஏன், இறைவனிடத்தில் கூடக் குற்றம் காண்கிறோம்.

ஒரு பொருளை இழக்கும் பொழுது அது நம் கையை விட்டுப் போக வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால், போய் விட்டது. விட்டுத் தொலைவோம் என்ற எண்ணம் பொதுவாக வருவதில்லை.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு பத்ரினாத் சென்றிருந்த சமயம் வரும் வழியில் ரிஷிகேசத்தில் ஒரு கடையில் விலை உயர்ந்த ஒருமுக ருத்ராட்சம் ஒன்று வாங்கினேன். அதை எப்பொழுதும் கழுத்தில் அணிந்திருந்தால் அதன் காந்த சக்தியால் பல நோய்கள் நம்மை அணுகாது என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அந்த ருத்ராட்சத்தின் தரத்துக்கு உத்திரவாதமும் அந்த கடைக்காரர் எழுத்து மூலம் கொடுத்திருந்தார்.

ஒரு சில நாட்களுக்கு முன்புதான் திடீரென்று நான் கவனித்தேன். என் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றில் கட்டிய வெள்ளிக் கம்பியிலிருந்து அந்த ருத்ராட்சம் எங்கோ விழுந்து விட்டிருக்கிறது. எப்பொழுது என்று தெரியவில்லை.  அதற்கு ஒன்றிரண்டு நாட்கள் முன்பு வரை அந்த ருத்ராட்சம் கழுத்தில் இருந்ததைப் பார்த்த ஞாபகம் இருந்தது. நான் வழக்கமாக கழட்டி வைக்கும் இடத்திலெல்லாம் தேடிப் பார்த்தேன். அந்த ஒன்றிரண்டு நாட்களுக்கு நான் சென்ற இடங்களிலெல்லாம் கேட்டுப் பார்த்தேன்.

எங்கும் கிடைக்கவில்லை.

திடீரென்று எனக்குத் தோன்றியது. பத்ரினாத்துக்குப் போகும் பொழுது ருத்ராட்சம் வாங்கி அணிய வேண்டும் என்று எந்த நினைப்பும் எனக்குத் தோன்றியதில்லை. எதேச்சையாக வாங்கியதுதான். நவரத்ன கற்கள் வாங்கலாம் என்ற எண்ணத்துடன் அந்தக் கடைக்குப் போன பொழுது சரியான நவரத்ன கல் எதுவும் எங்களுக்குக் கிடைக்காத பொழுது எதேச்சையாக ருத்ராட்சத்தை வாங்கினேன்.

அந்த ருத்ராட்சம் எனக்கு வர வேண்டிய வேளை… வந்தது.

இப்பொழுது என்னை விட்டுப் போக வேண்டிய வேளை. ..போய் விட்டது.
அது என் கழுத்தில் இருக்கும் வரை எனக்கு என்ன நன்மை செய்ய முடியுமோ அதைச் செய்தது. அதனுடன் நான் பிறக்கவில்லை. அதனுடன் நான் போகப் போவதுமில்லை.

இடையில் வந்தது. இடையில் போய் விட்டது. ஒரு ரயில் பயண நண்பர் போல.
‘விடு’ என்று விட்டு விட்டேன். இப்பொழுது மனதில் எந்த சலனமுமில்லை. எந்த சங்கடமுமில்லை.

கடந்த சில வருடங்களில் இது போல ஒரு சில நஷ்டங்களை – பெரியதும் சிறியதுமாக - நான் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஏனோ எனக்கு இதே போல எண்ணங்கள்தான் வந்திருக்கின்றன. பெரிய மன வருத்தம் எதுவும் என்னிடம் தங்கவில்லை. இறைவனுக்கு நன்றி.


(காஞ்சிப் பெரியவருடன் ஒருவருக்கு நேர்ந்த அனுபவத்தைப் பற்றி இன்று முகநூலில் ஒருவர் எழுதியதைப் படித்ததன் தாக்கம் இந்தப் பதிவு.)

Sunday, October 15, 2017

15.10.17 தென்காசியிலிருந்து ஒரு முதல் தகவல் அறிக்கை

15.10.17 தென்காசியிலிருந்து ஒரு முதல் தகவல் அறிக்கை

காலத்தின் கட்டாயத்தால் சுமார் பத்து மாதங்கள் அமெரிக்காவில் ஓட்டிவிட்டு தென்காசிக்குத் திரும்பியவுடன் அன்றாடத் தேவைகளுக்காக மார்க்கெட்டுக்கு விசிட் அடித்ததில் நான் கற்றுக் கொண்டவை இதோ.

அதற்கு முன்…

கடந்த பத்து மாதங்களில் என்னை பாதிக்காதவை என்று பட்டியலிட்டால்.. .
     1.      நவம்பர் 2016-ல் அதிக மதிப்புள்ள ரூபாய் தாள்கள் செல்லாததாகியது
  2.     மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணமடைந்த நாளையொட்டி எங்களுடைய அமெரிக்கப் பயணமே நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டாலும் அதற்குப் பிறகு நடந்த பல சுவாரசியமான திடீர் திருப்பங்கள், திகில்கள், நகைச்சுவைகள் கலந்த பல அரசியல் நாடகங்கள்
     3.     ஜி. எஸ். டி அறிமுகப்படுத்தப் பட்டதால் ஏற்பட்ட பல குழப்பங்கள்
  4.     பல சேவைகளுக்கு ஆதார் இணைப்பு வேண்டுமா, வேண்டாமா என்ற கவலைகள்
   5.     நடிகர் கமலஹாசனும் ரஜினிகாந்த்தும் அரசியலுக்கு வருவார்களா, வர மாட்டார்களா, அவர்கள் வந்து விட்டால் இனி தமிழ்நாட்டில் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து போய்விடுமா – இப்படி மக்களுக்கு கவலைகள் இருக்கிறதோ இல்லையோ, ஊடகங்களுக்கு நிறைய கவலை.
  6.     எல்லா பத்திரிகைகளிலும் எதிரொலித்த கொசு, டெங்கு பற்றிய பயமுறுத்தல்
      7.     நீட் தேர்வு பற்றிய சர்ச்சைகள், போராட்டங்கள்
    8.     திருமதி சசிகலாவை யார் யார் சந்தித்தார்கள் போன்ற சுவாரசியமான தகவல்கள்
    9.     முக்கோண அரசியல் கட்சி இப்பொழுது இரு கோணமாக வளைந்து நிற்பது
    10.  மழையில்லை, தண்ணீரில்லை, மின் வெட்டு, கொசு, குப்பைகள், விலை உயர்வு, ஃபோன் கனெக்ஷன், இன்டெர்னெட் கனெக்ஷன் சரியில்லை, கேபிள் டீ வியில் பல சேனல்கள் சரியாகத் தெரியவில்லை போன்ற புகார்கள்

இப்படி பல. அமெரிக்காவில் கழித்த பத்து மாதங்களில் ஒரு தாயின் வயிற்றில் இன்குபேட்டரில் பாதுகாப்பாக இருப்பது போல எந்தக் கவலையுமற்று இருந்தோம்.

சரி, இங்கே இப்பொழுதுள்ள ரியாலிடி செக்...

கடந்த இரண்டு நாட்களில் நான் தெரிந்து கொண்டது…
     1.     நாங்கள் வழக்கமாக வாங்கும் பலசரக்குக் கடையில் எந்த மாற்றமுமின்றி முன் போல பணம் பரிமாற்றம் மூலம் மட்டுமே வியாபாரம் நடந்து வருகிறது. டெபிட், கிரெடிட் கார்ட் தேய்ப்பதற்கான வசதி கூட ஏற்படுத்திக் கொள்ளவில்லை. கேட்டால், இந்த ஊருக்கு அதெல்லாம் சரிப்படாது சார் என்றார் கடைக்காரர். எல்லோர் கையிலும் 500 ரூபாய் நோட்டுத் தாள்கள் புரண்டு கொண்டிருக்கிறது. எல்லா சில்லரை வியாபாரிகளும் பொதுவாகப் பணமாகத்தான் வாங்கிக் கொள்கிறார்கள்.
    2.     ஒரு சில மக்களே ஜி. எஸ். டியை வரவேற்கிறார்கள். பெரும்பாலும் பில் இல்லாமல் வரி கொடுக்காமலே பொருட்களை வாங்கிப் பழகி விட்டதால் இன்று வரி போட்டால் ஆத்திரப்படுகிறார்கள். கறுப்புப் பணப் புழக்கத்தை ஊக்குவிக்கும் பழைய முறையே பலருக்கும் பிடித்திருக்கிறது.
  3.     ஒரு தெரிந்த ஆட்டோக்காரர் சொன்னார், ‘எப்ப நோட்டுக்களை செல்லாததாக்கினாங்களோ அப்பதிலிருந்தே எங்க வியாபாரம் படுத்துடிச்சு, சார்’ என்று. ‘ஏன்யா, அதுக்கும் நீ ஆட்டோ ஓட்டுறதுக்கும் என்ன சம்பந்தம்,’ என்று கேட்டால் எனக்கு பொருளாதாரம் சொல்லிக் கொடுக்கிறார்.
     4.     நிலம், வீட்டு மனைகள், வீடுகள் வாங்கி விற்பது படுத்து விட்டது. விலையும் குறைந்திருக்கிறது. வாங்குவதற்கும், விற்பதற்கும் யோசிக்கிறார்கள். கறுப்புப் பணம் இல்லாமல் வாங்குவதும் விற்பதும் இன்றும் முடியாதே. ஒரு வியாபாரி சொன்னது, ‘வெள்ளை சட்டை, கரை வேட்டியோட சுத்தினவங்க எல்லாருடைய கொட்டமும் கொஞ்சம் அடங்கியிருக்கு சார்.’
   5.     இன்னொரு வியாபாரி சொன்னது, ‘சார், முன்னெல்லாம் எங்க கடை முன்னால பில் இல்லாம லாரிகளில் சரக்கு வந்தா ஏதோ பெயருக்கு ஃபைன் போடுவாங்க, கொஞ்சம் கையில பணம் வாங்கிப்பாங்க. அவ்வளவுதான். இப்பல்லாம், பில் இல்லாம பிடிச்சாங்கன்னா, லாரியோட அதிகாரிங்க கொண்டு போயிடறாங்க.’ பில் இல்லாமல் வியாபாரம் செய்வதற்கு இப்பொழுது வியாபாரிகளிடையே கொஞ்சம் பயம் இருக்கிறது.
     6.     நல்ல தரமான அரிசி 10 மாதம் முன்பு கிலோவுக்கு 56 ருபாய் கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தோம். இன்று அதே அரிசி 60 ரூபாய். 8% விலை உயர்வு. பல பொருட்களின் விலையேற்ற இறக்கங்கள் குறிப்பிடும் படியாக இல்லை.
   7.     தினந்தோறும் வீட்டுக்குப் பால் கொடுப்பவர் இப்பொழுது பசும்பால் மட்டுமே கொடுக்கிறார். எருமை வைத்து கட்டுப்படியாவதில்லையாம்.
     8.     பி. எஸ். என். எல் ஊழியர்கள் ஒரே நாளில் என்னுடைய வீட்டு தொலைபேசி, இன்டெர்னெட் வசதியை மீண்டும் ஏற்படுத்திக் கொடுத்து விட்டார்கள். புகாருக்கு உடனே கவனம் கொடுத்த பி. எஸ். என்.எல்-லை பாராட்டியே ஆக வேண்டும். பல தனியார் நிறுவனங்களின் போட்டி இருப்பதால் பொதுவாகவே அவர்களது செயல்களில் வேகம் தெரிகிறது. 4-ஜி சேவையில் ரிலையன்ஸ் ஜியோவுடன் பி. எஸ். என். எல் போட்டி போட்டு 420 ரூபாய்க்கு 90 நாட்களுக்கு சிம் கார்டு கொடுக்கிறார்கள் என்று டீலர் சொல்கிறார்.
    9.     வீட்டுக் குழாயில் தண்ணீர் ஆறு மாதத்துக்கும் மேல் வருவதில்லையாம். மாதா மாதம் குடி நீர் கட்டணம் மட்டும் சரியாக வாங்கிக் கொள்கிறார்கள். நுகர்வோர் கோர்ட்டுக்குப் போக வேண்டியதுதான் என்று நினைக்கிறேன்.
   10.  டெங்குக் காய்ச்சலுக்கென்று வீடு வீடாக நிலவேம்புக் கஷாயம் கொண்டு வந்து கொடுத்தார்கள். மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டுமாம். ஆனால், விடுமுறை என்பதினாலோ என்னவோ நேற்று பஞ்சாயத்து அதிகாரிகளைக் காணோம்.

இன்னும் ஆறு மாதம் ஓட்டியாக வேண்டும். பல உருப்படியான திட்டங்களோடு வந்திருக்கிறேன். நவம்பர் 14-ஆம் தேதி அரசுப் பள்ளிகளுக்காக ஒரு வினாடி-வினா போட்டியும், நவம்பர் 18-ஆம் தேதி மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்காக இன்னொரு வினாடி-வினா போட்டியும் எங்கள் அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்திருக்கிறோம். இன்னும் சில திட்டங்கள் மனதில் உள்ளன. இறைவன் அருளால் நிறைவேறும் என்ற நம்பிக்கையிருக்கிறது.

வாழ்க தென்காசி, வளர்க தமிழகம். ஜெய் ஹிந்த்!


Monday, October 09, 2017

10.10.17 மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நாமும் ஒரு கருவியாக இருத்தல்

மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நாமும் ஒரு கருவியாக இருத்தல் ஒரு உயர்ந்த குணம் என்பதை எல்லோரும் சொல்வார்கள். ஆனால், நம் எல்லோராலும் அப்படி இருக்க முடிகிறதா? இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. நானும் பல முறை முயன்று பார்த்திருக்கிறேன். என்னாலும் முடியவில்லை. ஏன் என்று ஆராய்ந்து பார்த்து வருகிறேன்.

முதலில் நான் மகிழ்ச்சியாக இருந்தால்தான் என்னாலும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்படியாக இருக்க முடியும். நானே ஏதோ ஒரு வித வருத்தத்தில், ஏமாற்றத்தில், மன அழுத்தத்தில், குற்ற உணர்ச்சியில் இருந்தால் என்னால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும். அவ்வப்பொழுது வரும் கொஞ்சம் மகிழ்ச்சியை நான் குறிப்பிடவில்லை. வருத்தமும் அப்படித்தானே! அவ்வப்பொழுது வரும், போகும். அதை நாம் ஒப்புக் கொள்வதில்லை. மூழ்கி விடுகிறோம்.

நான் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது மற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் ஒரு கருவியாக இருப்பதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. அந்த நேரங்களில் மற்றவர்கள் மகிழ்ச்சிக்காக நான் முயன்று எதையும் செய்யத் தேவையில்லை. என்னுடைய சொல்லும், செயலும் மற்றவர்களுக்குத் தானாகவே மகிழ்ச்சியைக் கொடுப்பதாக இருக்கும்.

ஆனால், நானே ஏதோ ஒரு காரணத்துக்காக வருத்தமாக இருந்தால் அந்த நேரத்தில் என்னுடைய சொல்லும் செயலும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க முடியாது. பல நேரங்களில் அவர்களுக்கும் வருத்தத்தைத் தான் கொடுக்கும்.

அதனால் நான் மகிழ்ச்சியாக இருப்பது மிக முக்கியம். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது? நான் செய்யக்கூடியது எல்லாமே எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமா? நேற்று எனக்குப் பிடித்த ஒரு பாட்டை கேட்டேன். மகிழ்ச்சியாக இருந்தது. இன்றும் அதே பாட்டைக் கேட்டால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்குமா? தெரியாது. இது ஒரு பிரச்சினை.

எந்த ஒரு காரியமும் எல்லா நேரங்களிலும் எனக்கு மகிழ்ச்சி கொடுக்கும் என்று எந்த உத்திரவாதமும் கிடையாது. என்னுடைய மகிழ்ச்சி பல விஷயங்களைப் பொறுத்திருக்கிறது. நேரம், இடம், சூழல், மனம் இப்படி பல விஷயங்கள் நமது மகிழ்ச்சியைத் தீர்மானிக்கின்றன.

அப்படியானால், என்னால் எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருக்க முடியாதா?

முடியும்.

எப்படி?

நானே அந்த மகிழ்ச்சியாக இருந்தால்…அது எனக்குத் தெரிந்திருந்தால்…
ஒரு விளக்கொளிக்கு தான் ஒளி வீசுகிறோம் என்ற நினைப்பு இருக்குமா? அந்த ஒளி விளக்கு தான் தான் என்ற விழிப்புணர்வு வேண்டும். அந்த விழிப்புணர்வு எப்பொழுது வரும்? தானாகவே வருமா அல்லது நாம் அதைத் தேட வேண்டுமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


(ஸ்ரீ ஆதி சங்கரர் எழுதிய நிர்வாண ஷட்கம் பாடலை சமீபத்தில் இன்னொருவர் பாடக் கேட்டு, மனம் லயித்து ஈர்ர்க்கப்படு ‘சிதானந்த ரூப சிவோஹம் சிவோஹம்’ என்ற அந்தப் பாடலையும் அதன் அர்த்தத்தையும் கற்றுக்கொண்டு வருகிறேன். தினமும் ஒரு முறையாவது அந்தப் பாடலைக் கேட்டு விடுவேன். அதனுடைய தாக்கம் தான் இந்தப் பதிவு.)

08.10.17 நானும் ஹிந்தி திரைப்படப் பாடல்களும்

08.10.17 நானும் ஹிந்தி திரைப்படப் பாடல்களும்
            
     வயதாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இருக்கும் அடையாளங்களில் அடிக்கடி பழைய நிகழ்ச்சிகளையும் அனுபவங்களையும் அசை போடுவதும் ஒன்று என்று நினைக்கிறேன். ஏதேனும் ஒன்று அந்த நினைவுகளை எதிர்பாராமல் தூண்டிவிடும்.
            
                         நேற்று எதேச்சையாக முக நூலில் ஒரு நண்பர் ‘ஆர்ஸு’ என்ற ராஜேந்திரக் குமார் – சாதனா நடித்த படத்திலிருந்து ‘ஹஜி ரூட்கர் அப் கஹான் ஜாயியேகா’ என்ற லதா மங்கேஷ்கரின் பாடலை பதிவு செய்திருந்ததைக் கேட்டு நினைவுகள் ராக்கெட் வேகத்தில் திருநெல்வேலியில் ரத்னா தியேட்டரில் இந்தப் படம் 1965-ல் திரையிடப்பட்ட காலத்தை நோக்கி விரைந்தது.
            
                          அன்றைய காலங்களில் ஒரு சில குறிப்பிட்ட பிரபல ஹிந்திப் படங்கள் மட்டுமே திருநெல்வேலியில் திரையிடப்படும். அது போன்று திரைக்கு வந்த படங்களில் ‘ஆர்ஸூ’-வும் ஒன்று. திரைக்கு வந்த ஹிந்திப் படங்களும் அதிக பட்சம் ஒரு வாரம் ஓடும். ‘ஆர்ஸூ’ படத்தில் எனக்குப் பிடித்த சங்கர் – ஜெய்கிஷன் இசை. ஒரு வாரமே ஓடிய இந்தப் படத்தை நான் (எனது இன்னொரு கல்லூரித் தோழரும் கூட) ஐந்து முறை பார்த்திருக்கிறேன். ஆர்ஸூவில் ஒவ்வொரு பாட்டும் ஹிட். மனதைத் தொடும். கொஞ்சம் காதல் உணர்ச்சி இருந்தால் மனதைப் பிசையும். (இன்று அதே ‘ஹஜீ ரூட்கர்’ என்ற அருமையான பாடலைப் படமாக்கப் பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தால் எவ்வளவு கேவலமாக இருந்திருக்கிறது என்ற நினைப்பு மேலோங்கி நிற்கிறது. நடிகர் நடிகையர் அங்கே இங்கே ஒன்றிரண்டு அடி நகருகிறார்கள். வயலினும் சித்தாரும் ஒலிக்கும் பொழுது பியானோவைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். மேற்குடி மக்களின் தாம்பீக வாழ்க்கை. வாயில் பைப். அவ்வளவு தான்.)
            
                             என் மனம் உடனே ‘பீகி ராத்’ என்ற இன்னொரு ஹிந்திப் படத்துக்குத் தாவியது. இதில் ரோஷன் அவர்களின் இசை. ஒவ்வொரு பாடலும் ஹிட். இதில் இறுதியாக வரும் ‘தில் ஜோ ந கஹ சகா’ என்ற பாடலுக்காகவே திருநெல்வேலி ராயல் தியேட்டரில் ஓடிய ஏழு நாட்களில் ஐந்து முறை பார்த்திருக்கிறேன்.
            
                           இன்னொரு படத்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமென்றால் அது 1964-ல் வெளி வந்த ராஜ் கபூரின் ‘சங்கம்.’ என் நினைவுப் படி அந்தக் காலத்தில் மிக அதிக நாட்கள் திருநெல்வேலியில்  ஓடிய படம் இது தான். சுமார் ஒரு மாதம் ஓடியது. இந்தப் படத்தையும் அதன் பாட்டுக்களுக்காகவே பல முறை – எத்தனை முறையென்று நினைவில்லை – பார்த்திருக்கிறேன்.

             இந்தப் படம் லக்ஷ்மி தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த போது எனக்கு முக்கியமான தேர்வுகள் கல்லூரியில் ஆரம்பித்திருந்ததாக நினைவு. முதல் தேர்வு ஆங்கிலம். தேர்வுக்கு முந்தின நாள் ஐயப்பனுக்கு விசேஷமான நாள். எங்கள் வீட்டின் பின்புறம் ஒரு ஐயப்பன் கோவில். மாலை மூன்று நான்கு மணிக்கெல்லாம் கோவிலில் விசேஷத்தை முன்னிட்டு ஒலிப்பெருக்கியில் பாடல்கள் ஒலி பரப்பத் தொடங்கி விட்டனர்.

     எனக்கோ பின் புலத்தில் இசை ஓடிக் கொண்டிருந்தால் படிப்பதில் கவனம் செலுத்த முடியாது. பாடல்கள் நிற்பதாகத் தெரியவில்லை. பார்த்தேன். திடீரென்று யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் நேரே லக்ஷ்மி தியேட்டரை நோக்கி நடந்தேன். சங்கம் படம். அந்தக் காலத்து தரை டிக்கெட் – 31 பைசா – கிடைத்தது. அந்த வகுப்பு டிக்கெட்டுக்கு எங்கள் நண்பர்களிடையே வைத்த பெயர் ‘சுண்டல்’. 31 பைசாவை சுண்டிவிட்டு டிக்கெட் வாங்கி ‘தோஸ்த் தோஸ்த் நா ரஹா’ பாடல் வரை படம் பார்த்து விட்டு வீடு வந்து சேர்ந்தேன். பின்பு இரவு 12 மணி வரை தேர்வுக்குப் படித்தேன். அடுத்த நாள் தேர்வும் நன்றாகவே எழுதியிருந்தேன். பொதுவாக பாட சம்பந்தமாக நான் மெத்தனமாக இருக்க மாட்டேன் என்று வீட்டில் தெரியும். அதனால் என்னை எதுவும் குற்றம் சொன்னதில்லை.  இறுதித் தேர்வுக்கு முந்தின நாள் துணிச்சலாக திரைப்படம் பார்த்த மேதாவிகளில் நானும் ஒருத்தன்.

    அது போன்று ‘ராஜ்குமாரி’ என்று ஒரு படம் வந்தது. அதிலும் சங்கர் ஜெய்கிஷன் இசை. (உண்மையில் சங்கரின் இசை). குப்பைப் படம். ஆனாலும், ‘ஆஜா, ஆயே பஹார் தில் ஹை’ என்ற பாட்டுக்காக அந்தப் படத்தைப் பார்த்தேன்.


      திடீரென்று நினைவுகள் அறுந்து விட்டன……..

Saturday, September 30, 2017

30.09.17 நவராத்திரியும் நானும்

30.09.17 நவராத்திரியும் நானும்

நவராத்திரி கொலுவில் மட்டும் என்றில்லை, பொதுவாக எந்த பூஜைகளிலும் முன்பெல்லாம் நான் அதிக ஈடுபாடு காட்டியது கிடையாது. நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது எங்கள் வீட்டிலும் கொலு வைத்தது உண்டு. எங்கள் அம்மாவுக்கு கொலு, பஜனை, பாட்டு, கச்சேரி இதிலெல்லாம் நிறைய ஆர்வம் உண்டு. ஒரு காலக் கட்டத்தில் எங்கள் வீட்டில் கொலு வைப்பதும் நின்று போய் விட்டது. ஆனால், திருமணமான பின்பு என் வீட்டிலும் இதுவரை கொலு வைத்ததில்லை.

அடிக்கடி மாற்றல் நடக்கும் வங்கி வேலையில் இருந்ததால் நவராத்திரி நேரத்தில் பல ஊர்களில் இருந்திருக்கிறோம். அசாம் கௌஹாத்தியில் இருந்த சமயம் பல துர்கா பூஜா பந்தல்களுக்குப் போய் வந்த ஞாபகம் இருக்கிறது.

நவராத்திரி பூஜையில் முழு ஈடுபாடு ஏற்பட்டது ஸ்ரீஅம்மா பகவானின் இயக்கத்தில் இருந்த சமயத்தில்தான்.  நவராத்திரிக்கு முன்பு அமாவாசையன்று பித்ரு ப்ரீதி பூஜையோடு தொடங்கும். முதல் மூன்று நாட்களுக்கு துர்கா பூஜாவாகவும், இரண்டாவது மூன்று நாட்களுக்கு லக்ஷ்மி பூஜாவாகவும், மூன்றாவது மூன்று நாட்களுக்கு சரஸ்வதி பூஜாவாகவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு  முக்கிய சங்கல்பத்தோடு சிறப்பாக பூஜைகள் செய்து வந்தோம். பூஜைகளை ஒவ்வொரு குடும்பத்தினரும் தனித்தனியே, ஆனால் கூட்டாக ஒரே இடத்தில் வைத்து, செய்வார்கள். வேதத்தின் ஒரு சில பகுதிகளையாவது இன்று நான் தெரிந்து வைத்திருப்பதற்கு ஸ்ரீஅம்மா பகவானுடன் நாங்கள் கொண்ட தொடர்பின் பாதிப்பே காரணம். அந்த நாட்களில் பூஜை முறைகளை ஓரளவு நன்றாகக் கற்றுக்கொண்டிருந்தேன்.

தென்காசியில் நாங்கள் வசிக்கும் பகுதியில் பல வீடுகளில் கொலு வைப்பார்கள். வெற்றிலை பாக்கு வாங்கிக் கொள்வதற்கு பல வீடுகளிலிருந்து என் மனைவிக்கு அழைப்பு வரும். கடந்த பத்து ஆண்டுகளில், என் நினைவு சரியாக இருந்தால், இரண்டே இரண்டு முறை மட்டும் கொலு வைத்திருந்த வீடுகளுக்குச் சென்றிருக்கிறேன். ஒரு முறை கொலுவில் பாடியிருக்கிறேன். மற்றபடி என் மனைவி கொண்டு வரும் சுண்டல்களை ரசித்து உண்டதைத் தவிர நான் தீவிரமாக நவராத்திரி பண்டிகையில் என்னை ஈடுபடுத்திக்கொண்டதில்லை.  

ஆனால், இசையில் ஈடுபாடு இருந்ததால், நவராத்திரி சமயத்தில் மூன்று முறை தென்காசியில் பல மாணவ, மாணவிகளை இணைத்து அவர்களுக்கு ஒரு இசையாசிரியர் மூலமாக பல பாடல்களைச் சொல்லிக் கொடுத்து அவர்களை மேடையேற்றி ஒரு குழுவாக பாட வைத்த அனுபவம் மிகவும் இனிமையான, மனதுக்கு நிறைவு கொடுத்த அனுபவம்.  நாங்கள் வசித்த பகுதியில் இயங்கி வந்த ஒரு மகளிர் மன்ற உறுப்பினர்களையும் இதே போல பயிற்சி மேற்கொள்ள வைத்து அவர்களையும் அதே நிகழ்ச்சிகளில்  மேடையேற்றியிருக்கிறேன். இந்த நிகழ்ச்சிகளுக்கு மிருதங்கம், வயலின் பக்க வாத்தியத்துடன் நடத்திக் கொடுத்தது கலந்து கொண்ட சிறுவர், சிறுமிகளுக்கும், மகளிர் மன்ற உறுப்பினர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி, இந்த நிகழ்ச்சிகளுக்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளின் ஒன்றிரண்டு வீடியோக்களை ‘மேலகரம் வீடியோ’ என்று தேடினால் யூடியூபில் காணலாம்.

2016-ல், திருவள்ளுவர் கழகத்துடன் இணைந்து இரண்டு இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தோம். இந்த ஆண்டு  நாங்கள் ஊரில் இல்லாவிட்டாலும் எங்களது ஏற்பாட்டில் ஒரே ஒரு கர்னாடக சங்கீத நிகழ்ச்சி மட்டும் அதே திருவள்ளுவர் கழக நவராத்திரி நிகழ்ச்சிகளில் நடந்தது.

2016-ல் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டது. 2015 நவராத்திரியின் போது அமெரிக்காவில் என் மகள் தன் குழந்தைகளை ஒரு சில வீடுகளுக்கு நவராத்திரியின் போது கொலு பார்ப்பதற்குக் கூட்டிக்கொண்டு போயிருந்திருக்கிறாள். பள பளக்கும் விளக்கொளியில் கொலுவின் அழகு,  பல இனிய குரல்களின் பாட்டுக்கள், பல விருந்தினர்கள் குடும்பத்தோடு வந்து போவது, புதுப் புது ஆடைகள் இவற்றைக் கண்டு மயங்கிய என் பேரக் குழந்தைகள் அடுத்த ஆண்டு ‘நம் வீட்டிலும் கொலு வைக்க வேண்டும்’ என்று வற்புறுத்தியதால் என் மகளும் 2016-ல் தன் வீட்டில் கொலு வைக்கத் தொடங்கினாள்.

அதற்குத் தோதாக ஜூன் 2016-ல் இந்தியா வந்த என் மகள் கொலுவுக்குத் தேவையான பல பொம்மைகளை பலவித சைஸில் அள்ளிக்கொண்டு சென்று விட்டாள். 2016-ல் என் மகள் வீட்டில் வைத்த கொலுவை புகைப்படத்தில் தான் எங்களால் பார்க்க முடிந்தது.

இந்த ஆண்டு கொலுவுக்காக சிகாகோவில் என் மகன் வீட்டிலிருந்து ஃபீனிக்ஸில் என் மகள் வீட்டுக்கு ஒரு பறக்கும் இரண்டு வார ‘விசிட்’ அடித்தோம். பொதுவாக கொலுவில் ஆர்வம் காட்டியிராத நானும் ‘எப்படித்தான் இங்கே நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள் பார்க்கலாம்’ என்று எண்ணத்தோடு கலந்து கொண்டேன்.

1998-2006-ல் ஸ்ரீஅம்மா பகவான் பூஜைகளில் கலந்து கொண்ட அனுபவத்தில் கொலுவின் ஆரம்ப அலங்காரங்களை என் மனைவியின் உதவியுடன் நான் செய்து முடித்தேன். ஓரளவு நன்றாகவே வந்திருந்தது. எனக்கே ஆச்சரியம். ‘ஃபைன் டியூனிங்’ மனைவியும் என் மகளும் கவனித்துக் கொண்டார்கள்.

கொலுப் பொம்மைகளை எல்லாம் இறக்கி வைத்த பின்னர் பேரக் குழந்தைகளுக்கு ஒரே ஆர்வம். நான் தான் இதைச் செய்வேன், இங்கே வைப்பேன் என்று அவர்களுக்குள் போட்டி, சண்டை. பொம்மைகளை உடைத்து விடாமல் இருக்க வேண்டுமே என்று எங்களுக்கோ பதற்றம். ஒரு மாதிரியாக அவர்களை சமாளித்து என் மகள் கொலுப் பொம்மைகளை தட்டுகளில் அடுக்கி மற்ற சில அலங்காரங்களைச் செய்து மெருகூட்டி நவராத்திரிக்கு கொலுவைத் தயார் செய்துவிட்டாள்.

கொலுவுக்கு ஒரு இருபது முப்பது வீடுகளிலிருந்து அழைப்பு. ஒரு நாள் எங்கள் வீட்டிலிருந்தும் எல்லோருக்கும் அழைப்பு இருந்தது. இங்கே ஃபீனிக்ஸில் பரந்து விரிந்திருக்கும் சேண்ட்லர் என்ற பகுதி ஒரு மினி மைலாப்பூர் போல. ஏகப்பட்ட தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் (முக்கியமாக இன்டெல் – யாரைக் கேட்டாலும் இன்டெல்லில் வேலை செய்வதாகச் சொல்வார்கள்) மூலைக்கு மூலை இருப்பதால் ஒரே தமிழ், தெலுங்கு, கன்னட, கேரள இளைஞர்கள், இளைஞிகளின் குடியிருப்புகள். தாய் மொழியில் பேச வராத பல குழந்தைகளும் கர்னாடக சங்கீதத்தை மட்டும் ஆங்கிலத்தில் பாட்டை எழுதி வைத்துக்கொண்டு ர, ல, ழ, ள- வை சரியாகவே உச்சரித்து (கொஞ்சம் மழலைக் குரலோடு) நன்றாகவே பாடுகிறார்கள். பரத நாட்டியம், மிருதங்கம், வீணை, கீ போர்டு எல்லாம் கற்று வருகிறார்கள். ஒரு சிறு பெண் ஹிந்துஸ்தானியை ஒரு கை தேர்ந்த பாடகி போல கைகளை ஆட்டி ஆட்டிப் பாடினாள். எல்லா வீடுகளிலும் கொலுவை அலங்கரித்திருக்கும் பாணி மிகவும் ஈர்ப்பதாக இருந்தது.

எல்லோர் வீட்டிலும் இரவு முழு உணவு தயார் நிலையில் வைத்திருந்தார்கள். சுண்டல் ஒரு சில வீடுகளில் மட்டும்தான். எல்லோர் வீட்டிலேயும் கொஞ்சமாவது சாப்பிட வேண்டும். வெள்ளி, சனி,  ஞாயிறன்று மாலை ஐந்து முதல் இரவு பத்து வரை ஒவ்வொரு வீடாக சுற்றி வந்தது ஒரு இனிமையான அனுபவம். எல்லா இடங்களிலும் விருந்தாளிகளுக்கு நல்ல வரவேற்பு. எல்லோரிடமும் ஒரு நட்பு உணர்வு. விருந்தோம்பல்.

இரண்டு வீடுகளில் ஒரு விசேஷ பூஜை ஏற்பாட்டுக்குச் சென்றிருந்தோம். இங்கே ‘ஆத்ம வேத கண’ என்ற பெயரில் ஒரு சேவை நிறுவனத்தின் உறுப்பினர்கள் அழைப்பு கொடுத்த வீடுகளுக்குச் சென்று வேதத்தை ஓதுகிறார்கள். வேதம் ஓதுவதில் ஆண், பெண் வித்தியாசம் இல்லை. ஆண், பெண் இரு பாலாருக்கும் வேதம் கற்றுக் கொடுக்கிறார்கள். நன்றாக ஸ்பஷ்டமாக அவர்கள் வேதம் படிப்பதைக் கேட்பதற்கு மனதுக்கு நிறைவாக இருக்கிறது. ஒன்பது இரவுகளை குறிக்கும் விதமாக ஒன்பது சுக்தங்களைப் படிக்கிறார்கள். பூஜையை வீட்டுக்குரியவரை வைத்தே செய்ய வைக்கிறார்கள். சுருக்கமாகவும் இருந்தது. ஒரு நல்ல உணர்வை கொடுப்பதாகவும் இருந்தது. ஒரு சிறிய வீடியோ இணைத்திருக்கிறேன்.


அப்படியாக, இந்த ஆண்டு நவராத்திரி இனிமையாக ஒரு புது அனுபவமாக அமைந்தது. என் மகள், மருமகன், அவர்கள் குழந்தைகளுக்கு நன்றி.

Tuesday, September 26, 2017

26.09.17 என் பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி

26.09.17 என் பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி

என் முகநூல் பக்கம் முழுவதும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் இன்று. நெருங்கிய நண்பர்கள் என்று மட்டுமில்லாமல் முகநூல் நண்பர்களாக இருக்கும் நூற்றுக்கணக்கான நண்பர்களிடமிருந்தும் வாழ்த்துக்கள். இவர்களில் பெரும்பாலானவர்களுடன் எனக்கு நேரடிப் பரிச்சியம் கிடையாது. இருந்தும் அத்தனை வாழ்த்துச் செய்திகள்.

முகநூலில் சேரும் வரை பொதுவாக என்னுடைய பிறந்த நாளைக் கூட பல முறை நான் மறந்து விடுவது உண்டு. அதனால், நானும் பொதுவாக மற்றவர்களின் பிறந்த நாளுக்கு (அதற்கு மட்டுமென்று இல்லை, திருமண ஆண்டு நிறைவு நாள் போன்ற மற்ற தினங்களுக்கும் சேர்த்து) வாழ்த்துச் சொல்ல மறந்து விடுவேன். என் மனைவியின் பிறந்த நாளுக்கே அவளாக என்னிடம் நினைவு படுத்தும் வர பல முறை மறந்திருக்கிறேன். இருந்தும் இத்தனை பிறந்த நாள் வாழ்த்துக்கள் வந்திருப்பது ஒரு வகையில் மனதுக்கு நிறைவு கிடைக்கிறது. முகநூலில் இணைந்திருப்பதில் இது ஒரு நல்ல அனுபவம்.

எனக்கு பிறந்த  நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. தெரிவிக்காவிட்டாலும் என்னுடைய நட்பு வட்டத்தில் இருக்கும் முகநூல் அன்பர்களுக்கும் என்னுடைய நன்றி.

வாழ்க்கையில் சிறு பிராயத்திலிருந்து வயது ஏற ஏற நமது தனிமை கூடிக்கொண்டே இருக்கிறது. நட்பு வட்டம் குறுகிக்கொண்டே இருக்கிறது. பல நேரங்களில் நமது வாழ்க்கையைத் தனியாகத்தான் நடத்திச் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்ற உணர்வும் வருகிறது. அறுபது வயது தாண்டிய பிறகு பல நேரங்களில் தனிமை வாட்டுகிறது. எல்லோரும் சூழ்ந்திருந்தால் கூட ஒரு தனிமை உணர்வு அவ்வப்பொழுது தாக்குகிறது. ஒரு நல்ல துணை நண்பர் இல்லையே என்ற ஒரு ஏக்கம் வருகிறது.

ஒரு வகையில் முகநூல் இந்த ஏக்கத்தைக் குறைக்கிறது என்றே நினைக்கிறேன். அதனாலேயே பலர் முகநூலில் மிகவும் ஆழ்ந்து இருக்கிறார்கள் என்றும் நினைக்கிறேன். இன்றைக்கு நானும் அப்படித்தான். என்னுடைய பொழுதுபோக்குக்கு எங்கும் போக வேண்டிய தேவையில்லை. ஒரு நாளைக்கு மூன்று முறை முகநூல் பக்கம் வருகிறேன். பல முகநூல் நண்பர்கள் இடும் பதிவு படிப்பதற்கும், பார்ப்பதற்கும் சுவையாக இருக்கிறது. சில சமயம் எனது சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கிறது. உடன்பட்டோ அல்லது மறுத்தோ கருத்துக் கூறத் தூண்டுகிறது. கூடியவரை அரசியலைப் பற்றியக் கருத்துக்களைக் கூறுவதை தவிர்த்து வருகிறேன்.

அதே சமயம் முறையாக ஒரு எழுத்தாளனாக என்னை மாற்றிக்கொண்டு விட்ட பிறகு ஏதேனும் எழுதினால் அதை உடனே எத்தனை பேர் படிக்கிறார்கள் என்ற ஆர்வமும் கூடுகிறது. நட்பு வட்டத்தில் தங்கள் கருத்துக்களைச் சொன்னால் கொஞ்சம் திருப்தி ஏற்படுகிறது.

ஆனால், இன்று பலரும் எழுதத் தொடங்கி விட்டார்கள். அதுவும் முக்கியமாக முகநூலில் அல்லது வலையில்.  நன்றாகவே எழுதுகிறார்கள். இது இன்டெர்நெட்டினால் வந்த பயன் எல்லாவற்றையும் முழுவதுமாகப் படிப்பதற்குத் தான் நேரம் கிடைப்பது கடினமாக இருக்கிறது.

நான் எழுதியவற்றுக்குக் கருத்துக்கள் தெரிவிக்கும் எல்லா முகநூல் நண்பர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். தொடர்ந்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். நான் எழுதுவதோடு நீங்கள் ஒத்துப் போக வேண்டும் என்ற எந்த கட்டாயமுமில்லை. நான் எழுதுவது உங்களுக்கு ரசிக்காவிட்டாலும் பரவாயில்லை. கண்டிப்பாக உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். அதுதான் என்னைப் போன்ற இளம் எழுத்தாளர்களை இன்னம் எழுத ஊக்குவிக்கிறது.

69-ஐ இன்று கடந்த எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அன்புள்ளங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லிக்கொள்கிறேன். இனி இருக்கும் காலம் வரை வாழ்க்கையைப் பயனுள்ளதாகச் செலவிட இறைவனின் அருள் வேண்டி பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
வணக்கம். வாழ்த்துக்கள்.

இறுதியாக, நான் ஆங்கிலத்தில் எழுதிய LONELY  என்ற நூலைப் படித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த நூலுக்கு நெருங்கிய ஒரு சில நண்பர்களிடமிருந்து நல்ல ரிவியூ கிடைத்திருக்கிறது. இந்த நூல் www.pothi.com என்ற வலையில் கிடைக்கிறது. அச்சு வடிவத்திலும் ஈ-புத்தகமாகவும் கிடைக்கிறது. படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். 

https://pothi.com/pothi/book/ebook-t-n-neelakantan-lonely

https://pothi.com/pothi/book/t-n-neelakantan-m-sc-lonely

Tuesday, August 22, 2017

23.08.17 இன்றைய நாட்குறிப்பு - சிஸ்டம் சரியில்லை

23.08.17 இன்றைய நாட்குறிப்பு

நீட் தேர்வின் அடிப்படையிலேயே இந்த ஆண்டின் மருத்துவப் படிப்புக்கு சேர்க்கை நடக்க வேண்டும் என்பது இறுதியாகி விட்டது. எல்லா மானினலங்களும் இதே போல விலக்கு கேட்பார்கள் என்ற காரணம் காட்டி தமிழக அரசின் அவசரச் சட்டத்தை மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. சரியான முடிவு.

“இங்கே தான் சிஸ்டம் சரியில்லையே” என்று ரஜினிகாந்த் கூறியது திடீரென்று நினைவுக்கு வந்தது.

நாடு முழுவதிலும், முக்கியமாக, தமிழ் நாட்டில் கடந்த காலங்களில் லஞ்சமும் ஊழலும் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தது என்றால் அதற்குக் காரணம் மக்களின் மனப்பான்மை மட்டும்தானா? இல்லையென்றே நினைக்கிறேன். நமது சிஸ்டம் பொதுவாக எங்கேயும் சரியில்லை என்பதும் உண்மைதான். குறைபாடுகள் நிறைந்த சிஸ்டத்தை மக்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். இன்னமும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

திரு. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது பல புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தினாலும் சிஸ்டத்தை சரி செய்ய அதிகம் முயற்சி எடுத்ததாகத் தெரியவில்லை. ஏனென்றால் பலமாக ஷாக் அடிக்கும்.

மோடி அவர்கள் பிரதமரான பிறகு சிஸ்டத்தை சரி செய்வதற்கும் பல முயற்சிகள் எடுத்திருக்கிறார். அதனால், பல இடங்களில் ஷாக் அடிக்கிறது. உதாரணத்துக்கு:
ஜி. எஸ். டி முறையை அறிமுகப்படுத்தியது; அதிக மதிப்புள்ள ரூபாய்த் தாள்களை செல்லாததாக்கியது; ஆதார் எண்ணை பல இடங்களிலும் இணைக்க வற்புறுத்தியது; எல்லா வர்த்தகங்களையும் டிஜிட்டல் முறையில் நடைபெற வழி வகுப்பது … இப்படி ஒரு சில

இன்னும் ஆலோசனையில் இருப்பது: மத்திய மானிலத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது; பட்ஜெட்டை ஒவ்வொரு ஆண்டும் நவம்பருக்கு மாற்றி நிதியாண்டை ஜனவரி – டிசம்பருக்கு மாற்றுவது; அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்படும் நன்கொடைகளை வெளிப்படையாக்குவது … இப்படி ஒரு சில.

எல்லா சிஸ்டத்தையும் ஒரேயடியாக மாற்ற முடியாது. எல்லா சிஸ்டமும் ஓரிரவில் சரியாகாது. ஏன் பல ஆண்டுகள் கூட ஆகலாம். சிஸ்டத்தில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் எல்லாம் சிறந்தது என்றும் சொல்லி விட முடியாது. எல்லாம் பரிட்சை செய்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்த வகையில் வருவதுதான் நீட் தேர்வுகளும். மருத்துவப் படிப்புக்கு எல்லா இடங்களிலும் நடக்கும் ஊழல்கள் எல்லோருக்கும் தெரியும்தான். மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு சிஸ்டத்தை சரி செய்யும் ஒரு முயற்சியே நீட் தேர்வுகள். இதற்கும் குறுக்கு வழி கண்டிப்பாக கண்டு பிடிப்பார்கள்.

வருமான வரியை முழுவதுமாக எடுத்து விட வேண்டும் என்ற திரு சுப்பிரமணிய சுவாமியின் கருத்து எனக்கு ஏற்புடையதாக  இருக்கிறது. இந்த வருமான வரிக்கு பயந்துதானே பலரும் அரசை ஏமாற்றுகிறார்கள். வருமான வரித்துறையில் இருப்பவர்களும் ஒன்றும் சத்திய சீலர்கள் இல்லையே. ஒரு பத்து வருடத்துக்கு வருமான வரி கிடையாது என்று அறிவித்து விட்டால் பதுங்கியிருக்கிற பணமெல்லாம் வெளியே வந்து விடும். எவ்வளவோ முன்னேற்றத் திட்டங்களுக்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்தலாமே. இன்றும் அமெரிக்காவில் கூட பல தொழிலாளிகள் தங்களது சேவைக்கு பணமாகவே பெற்றுக் கொள்கிறார்கள். கண்டிப்பாக வரிக் கணக்கில் வராது என்று நினைக்கிறேன். ஆனால், அவர்கள் மொத்த ஜனத்தொகையில் மிக மிக சிறிய பகுதியினர்தான். அதனால் பெரியதாக பாதிப்பு ஏதும் கிடையாது. ஆனால், பில் இல்லாமல் எந்தப் பொருளும் வாங்க முடியாது.

ஜி. எஸ். டி-யை படிப்படியாக எல்லாத் தரப்பு வர்த்தகர்களும் பின்பற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் நாளாவட்டத்தில் வந்து விடும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு வர்த்தகப் பரிவர்த்தனையும் டிஜிட்டல் மயமாக்கி விட்டால் வரியேய்பு செய்வது கஷ்டம்.  வளர்ந்த நாடுகள் போல எந்த வர்த்தகப் பரிவர்த்தனையானாலும் பில் இல்லாமல் செய்ய முடியாது என்ற நிலை இந்தியாவிலும் வர வேண்டும்.


சிஸ்டத்தைப் பற்றி இன்னும் எவ்வளவோ எழுதலாம்தான்…

21.08.17 இன்றைய நாட்குறிப்பு - சூரிய கிரஹணம்

21.08.17 இன்றைய நாட்குறிப்பு

1918-க்குப் பிறகு அமெரிக்காவில் 12 மானிலங்களில் தெரியும் அளவுக்கு முழு சூரிய கிரஹணம் நிகழ்ந்தது. மற்ற இடங்களில் முழுமையடையாத கிரஹணம் மற்றுமே தெரிந்தது. ஹவாயில் காலையில் சூரிய உதயத்துடன் இந்த கிரஹணம் ஆரம்பித்தது. இந்த சூரிய கிரஹணத்தைப் வேடிக்கை பார்ப்பதற்கு வேலை நாளாக இருந்தும் அமெரிக்காவில் பல இடங்களிலும் கூட்டம். சிகாகோவில் காலை 11.30 அளவில் வெளியே சூரிய அஸ்தமனம் போன்ற இருட்டு தொடங்கி விட்டது. மதியம் 1.19-க்கு முழு கிரஹணம் தெரியும் என்று அறிவித்தார்கள். தொலைக் காட்சிகளில்தான் இதைப் பார்க்க முடிந்தது. பிறைச் சந்திரன் போல தோற்றத்தோடு ஆரம்பித்து, சூரியனை நிலவு முழுவதுமாக மறைத்து பின்னர் ஒரு மோதிரம் போல சூரியனின் விளிம்பு மட்டும் தெரிந்து, பின்னர் பூ இதழ்கள் போல சூரியனைச் சுற்றி ஒளிக் கதிர்கள் பரவி, தலையில் கிரீடம் வைத்தது போல ஒரு தோற்றம் ஒரு சில வினாடிகளே தோன்றி பின்னர் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய ஆரம்பித்து….காணக் கண் கொள்ளாக் காட்சி. ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தும் தவிர்க்க முடியாத காரணங்களினால் வெளியே சென்று சூரிய கிரஹணத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் இன்னமும் தீரவில்லை.

ஜூலை 2, 2019-ல் அமெரிக்காவின் தென் பகுதியிலும், தென் அமெரிக்காவிலும், பசிஃபிக் கடல் பகுதியிலும் மீண்டும் முழு சூரிய கிரஹணம் காணப்படும் என்று அறிகிறேன்.

கடைசியாக இந்தியாவில் முழு சூரிய கிரஹணம் பார்த்தது 1980 ஃபிப்ரவரியில். அப்பொழுது சண்டிகரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரம். ஊரே அடங்கிப் போயிருந்தது. யாரும் – ஈ, காக்கை கூட - பொதுவாக வெளியே காணவில்லை. இப்பொழுதுள்ள விழிப்புணர்வு அப்பொழுது கிடையாது. கிரஹணத்தைப் பற்றிய பல பழங்கால நம்பிக்கைகளுடனேயே மக்கள் (என்னையும் சேர்த்து) வாழ்ந்து வந்த காலம் அது. கிரஹணத்தின் போது எதுவும், தண்ணீர் கூட, சாப்பிடக் கூடாது. கிரஹணம் முடிந்தவுடன் குளித்து பெற்றோர் இல்லாதவர்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும். கிரஹணத்தின் போது பல கேடு விளைவுகள் நடை பெறலாம் என்ற பலத்தை நம்பிக்கை இருந்து வந்தது. (கிரஹணத்தையொட்டிதான் தமிழ் நாட்டில் ஒரு கட்சியின் இரண்டு துண்டுகள் ஒன்றிணைந்தன, இது நல்லதா, கெட்டதா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.)

அதற்கும் முன்பு எப்பொழுது பார்த்தது என்று சரியாக ஞாபகம் இல்லை. சிறு வயதில் ஒரு முறை பார்த்ததாக நினைவு. அப்பொழுதெல்லாம் ஒரு கண்ணாடித் துண்டை எரியும் விளக்கிலிருந்து கிளம்பும் கரியை படிய வைத்து அந்தக் கறுப்புக் கண்ணாடி கொண்டு முழுமையடையாத சூரிய கிரஹணத்தைப் பார்த்த நினைவு இருக்கிறது. அப்பொழுது கூலிங் கிளாசஸ் எல்லாம் எங்களில் யாருக்கும் கிடையாது. பெற்றோர்களும், பெரியவர்களும் கிரஹணத்தின் போது எது செய்யலாம், செய்யக்கூடாது என்பதில் ரொம்பவும் கண்டிப்பாக இருந்தார்கள். அந்த நேரம் பார்த்துதான் அதிகமாக பசிக்கும். ஆனால், சாப்பிட முடியாது.

அடுத்த முழு சூரிய கிரஹணத்தை பார்க்க இருப்பேனா…தெரியாது?


Monday, August 21, 2017

21.08.17 கடந்த வார நாட்குறிப்பு

21.08.17 கடந்த வார நாட்குறிப்பு

மீண்டும் தொடர்ந்து முகநூலில் எழுத வேண்டும் என்று ஆவல். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆங்கிலத்தில் இரண்டு பொது அறிவுப் புத்தகங்கள் எழுதுவதில் மூழ்கியிருந்தேன். அதனால் வேறு எதைப் பற்றியும் எழுதத் தோன்றவில்லை.

பொழுது போக்குக்கு முன்னெல்லாம் தமிழ் திரைப் படங்களையும், ஆங்கிலத் தொடர்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், கடந்த சில மாதங்களாக தமிழக மற்றும் தேசிய அரசியல்வாதிகளும் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களும் திரைப் படங்களைத் தோற்கடித்து நமக்கு கேளிக்கை பொழுதுபோக்குக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், ஒரு நாளைக்கு மூன்று முறை செய்தி சுருக்கங்களைப் பார்த்து விடுவேன். அரசியல் பற்றி நிறைய எழுதலாம். கமலஹாசன் சொல்வது போல நானெல்லாம் எப்பொழுதோ அரசியலுக்கு வந்தாகி விட்டது. வெளிப்படையாக கருத்துக்களை எழுதுவதும் பேசுவதுமில்லை. அவ்வளவுதான்.

பொதுவாக, எல்லா வாரமும் ரங்கராஜ் பாண்டேயின் ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சியைப் பார்த்து விடுவேன். பல அரசியல்வாதிகள் பாண்டேயின் கிடுக்கிப் பிடி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் உளறுவதும். சமாளிப்பதும், வழிவதும் நல்ல கேளிக்கையாக இருக்கிறது. ஆனால், என்னவோ கமலஹாசனுடனும், பார்த்திபனுடனும் பேசும் பொழுது மட்டும் பாண்டே ரொம்பவும் பவ்யமாகவே நடந்து கொண்டார். அதே போல, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன் பேசும் பொழுது பாண்டேயின் ஆங்கிலப் புலமை பொங்கி வழிந்து கொண்டிருந்தது. இருந்தும் பாண்டே அடக்கியே வாசித்தார். அவர் பேசும் தமிழில் ல, ழ, ள- வை பிழிந்தெடுக்கிறார்.

எனக்குப் பிடித்த இந்த ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சியை ஏனோ நேற்று (20.08.17) முதல் யூடியூபிலிருந்து அமெரிக்காவுக்கு கிடைக்காமல் செய்து விட்டார்கள். எனக்கு மிகவும் வருத்தம். இந்தியத் தொலைக்காட்சிகளை இங்கே பார்க்கும் வசதியை எனக்கு நான் ஏற்படுத்திக்கொள்ளவில்லை.
அதே போல பான்டேயின் மக்கள் அரங்கம் (தந்தி டீ.வி) நிகழ்ச்சியையும் யூடியூபில் பார்த்து விடுவேன். இதையும் நிறுத்திவிடுவார்களோ என்னவோ?
கருத்தரங்கம் என்ற பெயரில் ஆங்கிலம் மற்றும் தமிழ் தொலைக்காட்சிகளில் காட்டப்படும் காட்டுக் கூப்பாடுகளை நான் பார்ப்பதில்லை. அதுதான், முக்கியமாக க்ளிப்பிங்களை முக நூலில் பலர் பதிவு செய்து விடுகிறார்களே!

ஒரு விசேஷ நாள் வந்து விட்டால் போதும். எல்லாத் தொலைக்காட்சிகளிலும் ஒரு பட்டி மன்றத்தை வைத்து விடுகிறார்கள். அரங்கம் நிறைந்து வழிகிறது எல்லா பட்டி மன்றங்களிலும். அல்லது நிரம்பி வழிவது போல காட்டுகிறார்களா என்று  தெரியவில்லை. இந்த பட்டி மன்றங்களில் நடுவர்கள் படுத்தும் பாடு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. நடு நடுவில் புகுந்து அவர்கள் செய்யும் வியாக்கானம் தாங்க முடியவில்லை. இந்தப் பழக்கம் எப்பொழுதிலிருந்து என்று புரியவில்லை. ஆனால், எல்லோரும் காமெடியாகப் பேச வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

ஐஃபோன் கையடக்கமாக இருப்பதால் அடிக்கடி முகநூல் பார்ப்பதற்கு வசதியாக  இருக்கிறது. இப்பொழுது முகநூலில் மிகவும் பாப்புலராக இருப்பது ‘ஸ்மூல்’ என்ற செயலிதான் என்று நினைக்கிறேன். பல பாடக பாடகிகள் நன்றாகவே பாடுகிறார்கள். பழைய எம். எஸ். வி பாடல்களானால் கேட்பேன். மற்ற பாடல்களை கேட்பதற்கு ஏனோ மனம் நாடுவதில்லை.

பலர் எங்கெல்லாமோ தேடிப் பிடித்து செய்திகளையும், வீடியோக்களையும் முக நூலில் பதிவிடுகிறார்கள். சமூக வலை என்பது எவ்வளவு வீச்சு உள்ளது என்பது நன்கு புரிகிறது.

தேசிய பங்குச் சந்தை பத்தாயிரத்தைத் தொட்டுவிட்டு இப்பொழுது பல நாட்களாக ஊசலாடிக்கொண்டிருக்கிறது. கை வைப்பதற்குப் பயமாக இருக்கிறது. முன்னே அடி வாங்கியது நன்றாக நினைவிருக்கிறது.

ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று பக்கத்திலிருந்த ஆஞ்சனேயர் கோவிலில் சத்சங்கத்தில் ஒரு பஜனைப் பாடலை  நான் பாடியது மனதுக்கு நிறைவாக இருந்தது.


நாளை மீண்டும் எழுத முயற்சிக்கிறேன். வணக்கம்.

Friday, June 30, 2017

30.06.17: Personal Diary: Risk Taking – Story of Elon Musk

29.06.17: Risk Taking – Story of Elon Musk

‘Risk Taking’ is defined as the act or fact of doing something that involves danger or risk in order to achieve a goal. So, it is about taking a risk to achieve a goal, not just for the thrill of it - which might fall under adventure. Risk taking doesn’t necessarily mean doing things haphazardly, without applying one’s mind.

Generally, most people are averse to taking risks primarily because of fear; fear of losing something valuable, fear of the unknown, fear of failure, etc. It can also be due to our wanting the mental comfort of guarantee of the results or security. Or, for lack of self-confidence and inappropriate perception about one’s capabilities.

However, history has proved time and again that the successful people had always taken risks towards what they wanted to achieve in their life. They have learnt lessons from their failures. Also, for most people, success doesn’t just fall on one’s laps; they have to go for it – which might involve risks.

Some of the consequences of not taking risks are:
·         Unforeseen missed opportunities
·         We would never be able to overcome our sense of fear – whatever that be
·         Compromising on what one could want or what one could have achieved
·         Losing an opportunity to learn from our actions
·         Loss of self-confidence

I have marveled at some of the successful personalities for their ability to take risks. Of course, theirs were calculated risks, weighing the risk-reward relationship. To gain something, one also has to forego something. No pain – no gain.   That is why, whenever I come across information about such personalities, I make it a point to learn more about them and write about them. Knowing about them becomes my inspiration too.

In retrospect, I wondered whether I was a risk taker. Of course, yes. I took several small, but significant, risky decisions. I have gambled about the choices before me several times, and every time, they became life-changing decisions. To name only a few…

I ventured into my post graduation studies with just five hundred rupees in my bank account, not even speculating what I would do for the second month’s hostel expenses.

I ventured to forego my passion for science and became a banker, an area totally alien to me.

I agreed willingly to every workplace transfer between north and south of India and worked with people of different languages, cultures, and attitude. Calculated risk-taking used to be a part of my work culture. I had made mistakes and learnt valuable lessons from them.

I consciously gave up a lucrative banking career in search of opportunities in the wilderness of private sector, and then, consciously chose to work in an environment which offered no guaranteed regular income, that too, in a foreign land.

Having lived in many big and metropolitan cities and having been used to the best of comforts of life, I chose to live in a village environment for my retired days.

Every time, there was a hard choice to make.

Period.

Coming back to successful personalities, earlier I wrote about Richard Branson, his commercial ventures, philosophies, and successes. Here is another story I liked, about Elon Musk, known for his ventures into space exploration and developing solar power systems and electric cars. He is ranked 21st in the Forbes list of the World’s Most Powerful People.

Read on about Elon Musk, in the next part….