Total Pageviews

Showing posts with label Music. Show all posts
Showing posts with label Music. Show all posts

Friday, May 22, 2015

எனது இசைப் பயணம்: கல்லூரி வாழ்க்கையிலிருந்து இன்னொரு பக்கம்

1968-ல் திருச்சி, செயிண்ட் ஜோஸஃப் கல்லூரியில் சேர்ந்ததைப் பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். தரமான கல்வி, ஆரோக்கியமான மாணவர் விடுதி, ஆரோக்கியமான விடுதி உணவு, மிக அருகிலேயே உச்சிப் பிள்ளையார் மலைக்கோவில் எல்லாமே எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம். இவையெல்லாவற்றையும் விட வனிலா ஐஸ்க்ரீம் தலையில் ஒரு அழகான சிவப்பு நிற செர்ரி பழத்தை வைத்தது போல எனக்குக் கிடைத்த பெரிய பரிசு என்னவென்றால் ‘நியூ ஹாஸ்டலின்’ இசைக் குழுவோடு தொடர்பு.

நியூ ஹாஸ்டலில்’ நான்கு கட்டிடப் பகுதிகளில் எனக்குக் கிடைத்தது ‘டீ ப்ளாக் – மூன்றாம் மாடி’. விடுதியில் சேர்ந்த சில நாட்களிலேயே மாலை வேளைகளில் இனிமையான திரைப்படப் பாடல்களை ‘புல் புல் தாரா’வில் இசைக்கும் ஓசை காற்றில் மிதந்து வந்து என்னை ஈர்த்தது. பள்ளி நாட்களிலேயே திருநெல்வேலியில் எங்கே இன்னிசைக் கச்சேரி நடந்தாலும் அங்கே நான் ‘ஆஜராகி’யிருப்பேன்.  பல வாத்தியக் கருவிகளை கேட்கும் பொழுதெல்லாம் எனது நரம்புகள் துடிக்கும். எனக்கும் எதேனும் ஒரு இசைக்கருவியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தீவிர ஆசை இருந்தது. ஆனால், வீட்டில் வசதி போதாது. எனவே நிராசையுடன்  இசைக் கருவிகளை மற்றவர்கள் வாசிக்கும் பொழுது வாயில் ஈ புகுந்தது தெரியாமல் ரசித்துக்கொண்டிருப்பேன்.

இன்னிசை வந்த மற்ற ‘ப்ளாக்’ திசை நோக்கி ஓடினேன். அங்கு ஒரு அறையில் தங்கியிருந்த மாணவர் ‘புல் புல் தாரா’ வாசித்துக்கொண்டிருந்தார். அவர் அறை வாசலில் நின்றே அவரது வாசிப்பை ரசித்துக்கொண்டிருந்தேன். அவர் அறைக்குள் செல்லத் தயக்கம். வெகு நேரம் வாசலிலேயே நின்று கொண்டிருந்ததைப் பார்த்து என்னை உள்ளே அழைத்தார். ஜெயக்குமார் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். ‘மிக அருமையாக ஒரு தேர்ந்த கலைஞர் போல வாசிக்கிறீர்கள்’ என்று அவரைப் பாராட்டினேன். ‘நியூ ஹாஸ்டலின்’ இசைக் குழுவின் ‘கேப்டன்’ என்றும் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டார். பி.எஸ்.ஸி படித்துக்கொண்டிருந்தார்.  இசையின் மீது எனக்கு இருந்த ஆர்வத்தைப் பற்றியும் என்னால் எந்தக் கருவியையும் கற்றுக்கொள்ள இயலாதது பற்றிய எனது ஆதங்கத்தையும் சொன்னேன். ‘அதற்கென்ன, என்னுடைய புல் புல் தாராவை எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என்றார். இசைத்துறையில் எனக்கு ஒரு  நல்ல நண்பர் கிடைத்துவிட்டார் என்று எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

அதன் பிறகு அடிக்கடி அவரது அறைக்குச் செல்வேன். உரிமையுடன் அவரது புல் புல் தாராவை எடுத்து வாசிக்கப் பழகினேன். நியூ ஹாஸ்டல் இசைக்குழுவின் ஒத்திகைகளுக்கு என்னையும் அழைத்தார். என்னைப் போல் இன்னும் ஒன்றிரண்டு மாணவர்களும் சேர்ந்துகொண்டனர்.

எனக்கு ஏற்கெனவே மேஜை, கதவு, மரப்பலகை எல்லாவற்றிலும் கையால் கொட்டு போடும் பழக்கம் சிறிய வயதிலிருந்தே இருந்தது. ஒத்திகையின் போது ‘பாங்கோஸ்’ என்ற தோல் கருவியைக் கண்டேன். எடுத்து வாசிக்க வேண்டும் என்று ஆசை. ‘சும்மா, எடுத்து வாசிங்க’ என்று உற்சாகப்படுத்தினார் ஜெயக்குமார். அவ்வளவுதான்.  எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். வெகு விரைவில் நன்றாக பாங்கோஸ் வாசிக்கக் கற்றுக்கொண்டேன். அதே போல், தபேலா வாசிக்கவும் கற்றுக்கொண்டேன். எனக்கே ஆச்சரியம், இவ்வளவு விரைவில் கற்றுக்கொள்ள முடியுமா என்று.

நியூ ஹாஸ்டலின் இசைக் குழுவுக்கு அப்பொழுது முதல் ஒரு புதிய இசைக் கலைஞர் கிடைத்து விட்டார். அப்பொழுது முதல் நான் தான் தபேலா, பாங்கோஸ் மாஸ்டர்.

புல் புல் தாராவில் பல நுணுக்கங்களையும் ஜெயக்குமார் எனக்குக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார்.  ‘ஓரு புல் புல் தாரா வாங்கிடுங்க, நீலகண்டன்,’ என்று ஜெயக்குமார் வலியுறுத்த ஆரம்பித்தார். ‘அடிக்கடி அவர் அறைக்குச் சென்று புல் புல் தாரா வாசிக்கப் பழகுவது அவருக்கு இடைஞ்சலாக இருக்கிறதோ’ என்று மனதில் நெருடல். ஒவ்வொரு ரூபாயையும் கணக்குப் பார்த்து செலவு செய்த எனக்கு ‘முப்பது ரூபாய் செலவு செய்ய வேண்டுமே’ என்று கவலை.

இருந்தும், ஒரு தேர்வுக்குப் பின் கிடைத்த விடுமுறையில் ஊருக்குச் செல்லும்போது மதுரையில் இறங்கிக்கொண்டேன். பாப்ளி பிரதர்ஸ் பிரபலமான நிறுவனம். தரமான இசைக் கருவிகளை விற்று வந்தனர். இன்றும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்று கேள்விப்படுகிறேன்.  அங்கே முப்பது ரூபாய்க்கு நல்ல ஒரு புல் புல் தாரா வாங்கிகொண்டேன். ஒருவார விடுமுறையில் எந்நேரத்திலும் புல் புல் தாராவுடன் உட்கார்ந்திருந்தேன். கைகளின் வேகமும் துல்யமும் பழகப் பழகக் கூடியது. எனக்குத் தாங்க முடியாத பெருமை.

விடுமுறை முடிந்து கல்லூரிக்குத் திரும்பியவுடன் நேரே ஜெயக்குமார் அறைக்கு சென்று அவரிடம்  நான் பழகியதை வாசித்துக் காட்டினேன். பொதுவாக உற்சாகப்படுத்திப் பேசும் ஜெயக்குமார் அன்று என்னவோ நான் வாசித்துக் காட்டியதை ஒரு பொருட்டாகக் கருதியதாகத் தெரியவில்லை. ஒரு மாதிரியாகப் பேசி விட்டார்.  

எனக்கு ‘புஸ்’ என்று ஆகிவிட்டது. என் ‘ஈகோ’ பலமாக அடி வாங்கியது. எனக்கு வீறாப்பு. இன்னும் தீவிரமாக பயிற்சி செய்யத் தொடங்கினேன். என்னுடன் படித்த மற்ற விடுதி நண்பர்கள்  நான் புல் புல் தாராவுடன் எப்பொழுதும் காணப்படுவது பற்றி பல விதமாக கிண்டல் பண்ணத்தொடங்கினார்கள். ‘புல் புல் தாராவை’ கற்றுக்கொண்டுவிட வேண்டும் என்ற ஆசை என்னுள் இன்னும் தீவிரமாகியது.

கொஞ்சம் கொஞ்சமாக ஜெயக்குமாருக்கும் எனக்கும் விரிசல்கள் உண்டாகத் தொடங்கின. எல்லாம் ‘ஈகோ’ சமாச்சாரம்தான். ‘நான் நன்றாக வாசிக்கத் தொடங்கி விட்டேன்’ என்று அவர் பொறாமைப் படுகிறாரோ என்று எனக்கு சந்தேகம், இருந்தும் அவர் அளவுக்கு என்னால் வாசிக்க முடியவில்லையே என்றும் எனக்கு ஆதங்கம்.

இருந்தும் இசைக்கழுவில் ஒன்றாகவே செயல்பட்டோம். பல ஒத்திகைகளுக்குப் பிறகு ‘கல்லூரி நாள்’ விழாவின் போது, எங்கள் நியூ ஹாஸ்டலின் இசை நிகழ்ச்சிதான் பலத்த கரகோஷத்தைப் பெற்றது. அப்பொழுதுதான் வெளியிடப்பட்டிருந்த ‘சிவந்த மண்’ என்ற படத்திலிருந்து ‘பட்டத்து ராணி பார்க்கும் பார்வை’ என்ற பாடலை ரேடியோ ஆம்ப்ளிஃபையருடன் இணைக்கப்பட்ட புல் புல் தாராவில் அசாத்தியமாக ஜெயக்குமார் வாசித்தார். பாங்கோசில் நான் இருந்தேன். இன்னொரு மாணவர் (பெயர் மறந்து விட்டது) டிரம்ஸ் வாசித்தார். அந்த ஒரு பாட்டிலேயே எல்லா பாராட்டுக்களைப் பெற்று விட்டோம்.
ஜெயக்குமாருக்கும் எனக்கும் தொடங்கிய விரிசல் இன்னும் அதிகமாகியது. ஒரு முறை எங்களுக்குள் ஏற்பட்ட விவாதத்தில், நான் அவரிடம், “அடுத்த ஆண்டு நான்தான் நியூ ஹாஸ்டலின் இசைக் குழுவுக்குத் தலைமை வகிப்பேன். அப்பொழுது எனக்குக் கீழே குழுவின் ஒரு உறுப்பினராக நீ செயல்படுவாய்,” என்று சவால் விட்டேன்.

இன்னும் வெறித்தனமாக புல் புல் தாராவில் பயிற்சி செய்யத் தொடங்கினேன். படிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் புல் புல் தாராவுடனேயே என் நேரத்தை கழித்தேன்.

இடையில் ஒரு சமயத்தில் தெரிந்தவர்கள் யாரோ ஒருவர் கல்யாணத்தில் ‘ரிசப்சனில்’ சங்கீத நிகழ்ச்சி நடத்துமாறு எங்கள் இசைக் குழுவை அழைத்தார்கள். திருச்சி ‘அப்சரா’ வோ ஏதோ ஹோட்டல். ஒரு மணி நேரம் பல பாடல்களை வாசித்துக் காட்டினோம். நல்ல சாப்பாடு கிடைத்தது.

முதலாம் ஆண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு படிப்புக்குள் நுழைந்தேன்.  ஒரே மாணவரையே மீண்டும் மீண்டும் இசைக் குழுத் தலைவராக நியமிப்பதில்லை என்று பொதுவாக ஹாஸ்டலில் விதியிருந்தது. நான் எதிர்பார்த்தபடியே, அந்த ஆண்டின் இசைக்குழுவின் கேப்டனாக என்னை வார்டன் நியமித்தார். எனக்கு மிகப் பெருமை.

ஜெயக்குமார் வருத்தப் பட்டிருப்பார் என்று தோன்றியது. இரண்டாம் ஆண்டில் எனக்கும் ஜெயக்குமாருக்கும் ‘ஏ ப்ளாக்கில்’ பக்கத்துப் பக்கத்து அறைகளில் இடம் எதேச்சையாக ஒதுக்கினர். அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். எங்களிடையே இசையை மையப்படுத்தி நட்பும் இருந்தது. பொறாமயில் பனிப்போரும் இருந்தது.

இடையில் ஹார்மோனியம் வாசிக்கவும், கொஞ்சம் கொஞ்சம் டிரம்ஸ் வாசிக்கவும் கற்றுக்கொண்டேன். ஹாஸ்டலில் படித்த சீன நண்பர் ஒருவரிடம் கிடார் இருந்தது. விடுமுறையின் போது அவரிடம் கிடாரைக் கேட்டு வாங்கிக்கொண்டேன்.  பத்து நாள் விடுமுறையின் போது எங்கள் வீட்டில் கிடார் ஓசை எப்பொழுதும் கேட்டுக்கொண்டிருந்தது. பயிற்சி செய்ய, செய்ய கிடாரையும் ஓரளவு வாசிக்க முடிந்தது.
ஆனால், எதையும் முறையாக நான் கற்றுக்கொள்ளாததால் பல நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ளாமல் போனேன்.

நியூ ஹாஸ்டல் இசைக் குழு தலைவருக்கு ஒரு சில விசேஷ சலுகைகள் இருந்தன. விடுதியில் தினமும் தேர்வு நாட்களைத் தவிர மற்ற நாட்களில் மாலை சுமார் நாலரை முதல் ஆறு மணி வரை விருப்ப நேரம். கட்டுப்பாடு கிடையாது. சில மாணவர்கள் விளையாடிக்கொண்டிருப்பார்கள். சிலர் அரட்டையடிப்பார்கள் ஹாஸ்டலின் கேளிக்கை பொழுதுபோக்கு அறையிலிருந்து திரையிசை ஒலிப்பெருக்கியில் ஒலித்துக்கொண்டிருக்கும். இசைத்தட்டுக்களை வாங்கும் முன்னுரிமை விடுதியின் இசைக்குழுத் தலைவருக்கு உண்டு. திருச்சி பெரியகடை வீதியில் இசைத்தட்டுகள் விற்கும் ஒரு கடை உண்டு. அங்கு போய் இசைத்தட்டுக்கள் வாங்கிக்கொள்ளலாம். உதவி வார்டனிடம் முன் கூட்டியே சொல்லிவிட வேண்டும்.

இசைக்குழுவின் தலைவன் என்ற முறையில் எனக்கும் அந்த சலுகை இருந்தது. அந்த நாட்களில் பொதுவாக திரையிசையில் மெல்லிசை மன்னர்களான விஸ்வனாதன் – ராமமூர்த்தி இசை மட்டுமே எனக்குப் பிடிக்கும். இன்னொரு புகழ்பெற்ற கலைஞரான கே.வி.மகாதேவனின் இசை அவ்வளவாகப் பிடிக்காது. நான் எம்.எஸ்.சி படித்துக்கொண்டிருந்த நேரத்தில் பல திரைப்படங்கள் சிவாஜி கணேசன் நடித்து விஸ்வனாதன் இசையில் வெளிவந்தன. அதனால் சிவாஜிப் படப் பாடல்களின் இசைத் தட்டுக்களையே அதிகமாக விரும்பி நான் வாங்கினேன். ஆனால், மற்ற மாணவர்கள் நடுவில் எம்.ஜி.ஆர் தான் மிகவும் பிரபலமானவராக இருந்தார். அவருடைய படங்களுக்கு அதே காலத்தில் கே.வி.மகாதேவன் இசையில் வந்த படங்களே அதிகம். அந்தப் படங்களின் இசைத் தட்டுக்களை நான் வாங்காமல் விட்டு விட்டேன்.

ஒரு மாலையில் நடராஜன் என்ற மாணவன் என்னிடம் பலமாக சண்டைக்கு வந்தான். அவன் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகன். நான் இசைத் தட்டுக்கள் வாங்குவதில் பாரபட்சமாக  நடந்து கொள்வதாகவும் எம்.ஜி.ஆர் படப் பாடல்களை வாங்குவதில்லை என்றும் குற்றம் சாட்டினான். நானும் அவனிடம் காரசாரமாக பதில் கூறினேன். எங்களுக்குள்ளே வாக்குவாதம் தொடர்ந்ததன் எதிரொலி விடுதியின் உதவி வார்டன் வரை சென்றது. வேறு சில மாணவர்களும் நடராஜனைப் போலவே என்னைப் பற்றி உதவி வார்டனிடம் குறை கூறினர். வேறு வழியில்லாமல் ஒரு சில எம்.ஜி.ஆர் படப் பாடல் இசைத் தட்டுக்களையும் விருப்பமில்லாமல் வாங்கினேன். அன்று முதல் நானும் நடராஜனும் எலியும் பூனையையும் போல அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வோம். அவர் என்னுடைய அறைக்கு அருகிலேயே தங்கியிருந்தது சண்டை போடுவதற்கும் வசதியாக இருந்தது.  

அந்த ஆண்டு ஹாஸ்டல் தினத்தன்று என் தலைமையில் இசை நிகழ்ச்சி. ஒரு மாதம் முன்னமேயே ஒத்திகையை தொடங்கி விட்டோம். ஹாஸ்டலின் எல்லைக்கருகே ‘கேன்டீன்’ கட்டிடத்தில் ஒத்திகை நடந்தது. அதற்கு விசேஷ அனுமதியுண்டு. ஒத்திகையின் போது தினமும் சூடான பால், பிஸ்கெட், கேக் கிடைக்கும்.  நிகழ்ச்சியின் தொடக்கமாக என் கற்பனையில் உதித்த ஒரு ‘டியூனை’ புல் புல் தாராவில் வாசித்தேன். எவ்வளவோ மறுத்தும் ஜெயக்குமார் ஹார்மோனியம் வாசித்தார். இரண்டும் ஒத்துப் போகவில்லை.  நிறைய ஒத்திகை பார்த்திருந்தும் சரியாக வரவில்லையே என்று எனக்கு உள்ளுக்குள் மிகவும் வருத்தம். அப்பொழுது காட்டிக்கொள்ளவில்லை. பாலசுப்பிரமணியன் என்று மாணவன் பெயர் ஞாபகம். புதியதாக சேர்ந்திருந்தார். நன்றாகப் பாடக்கூடியவர். எங்களுடைய எஸ்.பி. பி என்று அழைப்போம். அவரும் அன்றைய நாட்களில் பிரபலமான எஸ்.பி.பியின் ‘ஆயிரம் நிலவே வா’ பாடலை நன்றாகப் பயிற்சி செய்திருந்தார். தபேலாவில் நான்.  பலமான அப்ளாஸ். நிகழ்ச்சி முடிந்தவுடன் உதவி வார்டனிடம் பணம் பெற்றுக்கொண்டு மெயின் கார்ட் கேட்டுக்கருகே ‘மாடர்ன் ஹோட்டலில்’ இசைக்குழுவுக்கு பார்ட்டி. எங்கள் இஷ்டத்துக்கு சாப்பிட்டோம்.

பிறகு தேர்வுகள் நெருங்கிவிட்டன. இசைக்குழுவை மூட்டை கட்டி வைத்துவிட்டு படிப்பதில் கவனம் செலுத்தினோம். அப்படியாக என் இசைப் பயணத்தின் ஒரு முக்கிய கட்டமாக செயிண்ட் ஜோசஃப் கல்லூரியின் இரண்டு ஆண்டு வாழ்க்கை அமைந்தது மறக்க முடியாதது.

முக்கிய பின் குறிப்பு:
   1) என்னுடன் வலுவாக சண்டை போட்ட பொள்ளாச்சிக்காரரான மாணவன் நடராஜன்தான்  என்னுடைய படிப்பு முடிந்து தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருந்த இக்கட்டான தருணத்தில் எனக்கு நூறு ரூபாய் பணம் தானாகவே கொடுத்து உதவினார். நான் இன்னும் அவருக்கு அந்த நூறு ரூபாயைத் திருப்பிக் கொடுக்கவில்லை. ஏனென்றால் அவர் தன்னுடைய விலாசத்தைக் கொடுக்கவில்லை. எங்கள் படிப்பும் முடிந்து பிரிந்து விட்டோம். அவர் எங்கிருந்தாலும் வாழ்க. மிக்க நன்றி.
       2) இளமைப் பருவத்தில் வீறாப்புகளுடன் ஈகோ காரணமாக பலருடன் சண்டை போட்டதை இன்றும் நினைத்தால் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. தேவையில்லாமல் ஈகோவை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த ஈகோதான் எனக்கு என் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தந்திருக்கிறது. அதே ஈகோதான் பல உறவுகளையும் அழித்திருக்கிறது. ஈகோவைத்தான் இன்னமும் விட முடியவில்லை. ஜெயக்குமார் நண்பர் இன்று எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. எங்கிருந்தாலும் என்னை மன்னிக்கட்டும்.

      3) படிப்பு முடிந்து வேலைக்குச் சேர்ந்த பிறகு புல் புல் தாரா என்னுடன் பல ஆண்டுகள் பயணம் செய்திருக்கிறது. ஆனால், கல்லூரி நாட்களில் கிடைத்த உற்சாகம் என்ன காரணத்தினாலோ பிறகு எந்த நேரத்திலும் கிடைக்கவில்லை. இசைப் பயிற்சியையும் தொடர முடியவில்லை. ஆனால், என்னால் எதையும் சாதித்துக் காட்ட முடியும் என்பதை என் கல்லூரி வாழ்க்கை எனக்குக் காட்டியிருக்கிறது. வாழ்க்கைக்கு நன்றி.
**********************************************************************

   இது சம்பந்தமான என்னுடைய மற்ற கட்டுரைகளைப் படிக்க:       

  

        Remembering old MSV songs: 'Naan Kavingyanum illai'

         About my interests: Part I Music