Total Pageviews

Monday, December 22, 2014

சங்கீத சீசன் 2014-15: எனது இசைப் பயணத்தின் சாராம்சம்:

நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் எனக்குப் பிடித்ததெல்லாம் சினிமாப் பாட்டுக்கள்தான். அதிலும் முக்கியமாக தமிழில் எம்.எஸ்.விஸ்வனாதன் (மற்றும் டீ.கே.ராமமூர்த்தி) இசையும், வடக்கே சங்கர் ஜெய்கிஷன், ஓ.பி.நய்யார், மதன் மோஹன், லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இசையும் எனக்கு உயிர். கர்னாடக சங்கீதம் என்றால் காத தூரம் ஓடிவிடுவேன். ஆண்டுதோறும் நடக்கும் ராமலிங்க சுவாமி உற்சவம், தியாகராஜ சுவாமி ஆராதனைக்கு என் தாயார் தவறாமல் போய் வருவார். ஆனால், எனக்கு பஜனைப் பாட்டுக்கள், பக்திப் பாடல்கள் தான் கர்னாடக சங்கீதத்தைவிட பிடிக்கும்.

கடந்த சுமார் பத்து ஆண்டுகளாக என்னுடைய இசை ரசனை மாறியிருப்பதை நான் உணர்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக சினிமாப் பாட்டுக்களிலிருந்து விலகி கர்னாடக சங்கீதத்தை ரசிக்கத் தொடங்கியிருக்கிறேன். வரவர சினிமாப் பாடல்களின் தரமும் கீழ் நோக்கிப் போவதாக நம்புகிறேன். வெறும் வாத்தியக் கருவிகளின் ஓசையை மட்டுமே நம்பி இசையமைக்கிறார்கள் என்றும் நம்புகிறேன். டியூன் என்றால் எங்கேயிருக்கிறது என்று தேட வேண்டியிருக்கிறது பல பாடல்களில். அதனாலேயே சினிமா பாட்டுகளிலிருந்து ஒதுங்கத் துவங்கினேன்.
அதே நேரத்தில், பாம்பே ஜெயஸ்ரீ, உன்னி கிருஷ்ணன் அவர்களின் பல கர்னாடக சங்கீதப் பாடல்கள் என்னை ஈர்க்கத் தொடங்கின. பல பாடல்களுக்கு எதையோ ஏங்கி, எதையோ தொலைத்தது போல அழுதிருக்கிறேன். என்னவோ தெரியவில்லை சுதா ரகுனாதன் அவர்களின் பாட்டு இன்னமும் எனக்குப் பிடிப்பதில்லை.

பின்னர் துவங்கியது பல இளைஞர்கள் குரல்களின் ஈர்ப்பு.. பல இளம் பாடகர்கள் கர்னாடக சங்கீதத்தில் பின்னத் தொடங்கினர். அவர்களில் பலர் கர்னாடக இசை மேதைகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்களின் குரல் வளமும், குறைந்த அளவே தெரிந்துகொண்டாலும் அதை சிறப்பாக பாடும் திறமையும் என்னை ஈர்த்தன. இதில் முக்கியமான பங்கு பாடகி/வயலினிஸ்ட் செல்வி அக்கரை சுப்பலக்ஷ்மி அவர்களுக்குச் சேரும்.. குடும்ப நண்பர்கள் என்ற முறையில் வயலின் ஆசிரியர் திரு. அக்கரை சுவாமினாதன் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் குழந்தைகள் சுப்பலக்ஷ்மி, சொர்ணலதா இருவரின் வயலின் இசையில் ஈர்க்கப்பட்டேன். அந்த இருவரும் நன்றாகப்  பாடுவதையும் அவர்களின் சிறு வயதினிலிருந்தே கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். பெரிய இசைக் கலைஞர்களாக வருவார்கள் என்று அன்றே ஆரூடம் சொன்னேன். கர்னாடக சங்கீதத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்ப்பட்டதற்கு செல்வி அக்கரை சுப்பலஷ்மி, சொர்ணலதா அவர்களின் இசை ஒரு முக்கிய காரணம் என்று நம்புகிறேன். என்னுடைய பையனும் அக்கரை சுவாமினாதனுடைய ஆரம்ப கால வயலின் மாணவன்.

என்னுடைய நெருங்கிய உறவினர்களில் அமெரிக்காவில் வாழும் ராஜி பத்மனாபனைப் பற்றி முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். 1996-ல் திருவனந்தபுரத்தில் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக எங்களுடன் ஒரு வருடம் தங்கியிருந்தாள். மிகச் சிறந்த பாடகி. திருவனந்தபுரம் திருமதி சாரதா அவர்கள் ராஜியின் குரு. மிகப் பிரமாதமாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். திருமதி சாரதா அவர்களின் மகன் திரு கிருஷ்ணகுமார் மற்றும் அவர் மனைவி திருமதி பின்னி அவர்கள் இன்று முன்னணிப் பாடகர்களாக இருக்கிறார்கள். ராஜியும் ஒரு பிரபல பாடகியாகியிருக்கலாம். ஆனால், வேலை, குடும்பம் என்று பிஸியாக இருக்கிறாள். ராஜி சென்னையில் எங்களுடன் தங்கிருந்தபோது நாங்கள் ஆழ்வார்பேட்டில் வசித்து வந்தோம். டிசம்பர் மாதம் வந்தால் என் மனைவியின் துணையுடன் தினமும் ஒரு கச்சேரிக்குக் கிளம்பிவிடுவாள். அந்த நாட்களில் என்னிடம் ஒரு ஹார்மோனியப் பெட்டியும் இருந்தது. ஹார்மோனியத்தை வைத்துக்கொண்டு தினமும் இரவு நேரங்களில் கச்சேரி செய்வாள். எங்கள் வீட்டில் எல்லோரும் ராஜியின் ரசிகர்கள். கர்னாடக சங்கீதத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டதற்கு ராஜியும் ஒரு முக்கிய காரணம். அந்த ராஜிக்கு நன்றி.

தொடர்ந்து பல இளைய குரல்களைக் கேட்கத் தொடங்கினேன். ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டிகளைத் தொடர்ந்து பார்த்து வந்ததில் பல புதிய கலைஞர்களைப் பற்றியும் தெரிந்துகொண்டேன். முக்கியமாக ஏசியானெட் டீவியில் மலையாளத்தில் பல இளைஞர்கள் அற்புதமாகப் பாடுவதைக் கூர்ந்து பார்த்திருக்கிறேன்.

பரத் சுந்தர், ஈரோடு அனந்தராமன், ஷோபனா, மஹதி, சின்மயீ, சாயி விக்னேஷ், என்.ஜே.நந்தினி, போன்ற பல இளம் கலைஞர்களின் விசிறியானேன். கூடவே, ராகா டாட் காம், ஹம்மா டாட் காம், போன்ற இணையதளங்களிலிருந்து பல கர்னாடக சங்கீதப் பாடல்களை தொடர்ந்து கேட்கத் தொடங்கினேன். கர்னாடக சங்கீதத்தின்பால் இன்னும் ஈடுபாடு ஏற்பட்டது.

மூத்த மற்றும் வளரும் இசைக்கலைஞர்களின் இசை ஒளிபரப்பையும் டீவியில் தொடர்ந்து பார்க்கத் தொடங்கினேன். அதில் என்னைக் கவர்ந்தவர்களில் முக்கியமானவர்கள் திரு.ராஜேஷ் வைத்யா (வீணை) திரு. அபிஷேக் ரகுராம், திரு. சிக்கில் குருசரண், திரு. ஸ்ரீராம் ;பரசுராம், திரு. சஞ்சய் சுப்பிரமணியன், திரு. விஜய் சிவா, மறைந்த திரு. குன்னக்குடி வைத்யனாதன் (வயலின்), போன்றவர்கள்.

இந்த ஈடுபாட்டின் வெளிப்பாடாக எங்கள் எல்.என்.சேரிடபிள் டிரஸ்ட்டின் மூலமாக பல இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தோம்.

1)   முதன் முதலாக, தென்காசியில் மதுரை திருமதி ரங்கநாயகி சச்சிதானந்தத்தின் கச்சேரியை பிப்ரவரி 2011-ல் ஏற்பாடு செய்தேன். மதுரை ஸ்ரீசத்குரு சங்கீத வித்யாலயாவின் மிருதங்கப் பேராசிரியர் டாக்டர் திரு மதுரை கே.தியாகராஜன் அவர்களின் உதவியோடு இந்த ஏற்பாடு  செய்யப்பட்டது. திருமதி ரங்கநாயகி அவர்கள் சிறந்த பாடகி. திரு தியாகராஜன் அவர்களின் வழிகாட்டுதலில் பல அபூர்வமான பாடல்கள், தாளங்கள் கொண்ட இசையைக் கொடுத்திருக்கிறார்.
2)   தொடர்ந்து ஜூலை 2011-ல் தென்காசி, பாரத் பள்ளியின் மாணவர்களை தயார் செய்து ஒரு இசை நிகழ்ச்சி.
3)   பிறகு 2011 செப்டம்பரில் திருவனந்தபுரத்திலிருந்து டாக்டர் ராஜாராம் வீணை இசைக்க அவரது துணவியார் திருமதி ஹேமா ராஜாராம் பாடினார்.
4)   தொடர்ந்து ஜனவரி, 2012-ல் ‘சக்தி சங்கீத அகாடமி’யின் (மேலகரம், தென்காசி, எல்.என்.சேரிடபிள் டிரஸ்ட்டின் ஓர் அங்கம்) முதலாம் ஆண்டு விழாவின்போது மதுரை டாக்டர் கே.தியாகராஜன் தலைமையில் பஞ்ச தாள லய விஞ்ஞாசா என்ற நூதனமான இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம்.
5)   2012 செப்டம்பரில் நவராத்திரி கொண்டாட்டமாக மீண்டும் ஒரு மாணவர்கள் இசை நிகழ்ச்சி இசையாசிரியர் செல்வி திவ்யா @ சுவர்ணலக்ஷ்மி அவர்கள தலைமையில் நடந்தது.
6)   ஜனவரி 2014-ல் சக்தி சங்கீத அகாடமியின் (எல்.என்.சேரிடபிள் டிரஸ்ட்டின் ஓர் அங்கம்) இரண்டாம் ஆண்டு விழாவின்போது பிரபலமான பாடகிகள் மற்றும் வயலின் சகோதரிகளான செல்வி அக்கரை சுப்பலக்ஷ்மி, சொர்ணலதா அவர்களின் பாட்டுக் கச்சேரி நடந்தது.
7)   மீண்டும் செப்டம்பர் 2014-ல், 16 மாணவர்கள் கொண்ட ஒரு குழுவின் இசைக் கச்சேரி இசையாசிரியர் திரு. வாசிமலை (அரசு இசைக் கல்லூரி, மதுரை) அவர்கள் தலைமையில் நடந்தேறியது.

இதற்கிடையே மிருதங்க வகுப்புகளை நவம்பர் 2011-ல் துவக்கினோம். ஒரு 5 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட மிருதங்க வகுப்புகள் தற்பொழுது சுமார் 30 மாணவர்களுடன் வெற்றி நடை போட்டு வருகிறது. வாய்ப்பாட்டு வகுப்புகளும் தற்பொழுது 17 மாணவர்களுடன் செப்டம்பர் 2014-லிலிருந்து முழு மூச்சாக நடந்து வருகிறது. நடனம், வயலின் வகுப்புகளுக்கும் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.

கடந்த மூன்று வருடங்களா ஒவ்வொரு டிசம்பரிலும் கச்சேரி கேட்பதற்காக சென்னை சென்று வருகிறேன்.  

இந்த வருடம் டிசம்பரில் சென்னையில் நான் ரசித்த இசை/கலை நிகழ்ச்சிகள்:
1.   செல்வி புவனா (பரத நாட்டியம்)
2.   அக்கரை சுப்பலஷ்மி, சொர்ணலதா சகோதரிகள்
3.   செல்வி ஐஸ்வர்யா வித்யா
4.   திருமதி ரங்கநாயகி சச்சிதானந்தன், மதுரை
5.   செல்வி என்.ஜே.நந்தினி
6.   திரு.ராஜேஷ் வைத்யா
7.   திருமதி ஜெயஸ்ரீ ஜெயராமகிருஷ்ணன்
8.   திருமதி ஷோபனா விக்னேஷ் (மஹா நதி)
9.   திருமதி அபர்ணா பாலாஜி (யூ.எஸ்.ஏ)
10.  செல்வன் சாயி விக்னேஷ் (ஏர்டெல் டாப் 10) .

எங்கேயோ ஆரம்பித்து இசைப் பயணம் எங்கேயோ எதையோ தேடிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறது. அது தன் குறிக்கோளை அடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


நன்றி. வணக்கம்.

No comments:

Post a Comment