Total Pageviews

Showing posts with label Rome. Show all posts
Showing posts with label Rome. Show all posts

Tuesday, May 06, 2014

My Italy Tour, March 2014: Final Part

எனது இத்தாலி பயணம்இறுதிப் பகுதி 6
நாள்: 9
எங்கள் இத்தாலி நாட்டுப் பயணத்தின் கடைசி நாள். காலை ஆறேகால் மணிக்கு வெனிஸிலிருந்து ரோமுக்கு ரயில் டிக்கெட் வாங்கியிருந்தோம். சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடம்தான் என்பதை மீண்டும் மீண்டும் ஹோட்டல் வரவேற்பில் உறுதி செய்துகொண்ட பிறகு காலை ஐந்தரை மணிக்கு மென்மையான குளிருக்கூடே ரயில் நிலையத்துக்கு நடந்தோம். மெல்லிய பனிமூட்டம் இருட்டை அதிகப்படுத்தியிருந்தது. தெருவிளக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக மினிக்கிக் கொண்டிருந்தது. சிறிது தூரம் நடந்தால் ஒரு கேஃப்டேரியா திறந்திருந்தது. சுடச்சுட காஃபி கிடைத்தது. கையில் வாங்கிக்கொண்டு ரயில் நிலையம் வந்து சேர்ந்தோம்.

நாங்கள் பயணம் செய்த ரயில் FRECCIARGENTO என்ற வகுப்பைச் சேர்ந்தது. அதிக பட்சமாக 250 கிலோமீட்டர் வேகத்தில் எந்தவிதமான குலுக்கலுமில்லாமல் பறந்தது. நடுநடுவே பல ரயில்  நிலையங்களில் நிறுத்தம் இருந்தது. ஒன்பதரை மணிக்கு ரோம் வந்து சேர்ந்தது. ரயில் நிலையத்தின் வாசலிலேயே பஸ் நிறுத்தமும் கூட. ரயில் நிலையத்திலேயே ஒரு கடையில் பஸ் டிக்கட் வாங்கிக்கொண்டோம். ஹோட்டல் எதிரிலேயே இருந்த பஸ் நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டோம். ஹோட்டலின் வரவேற்பரையில் எங்கள் சாமான்களை விட்டுவிட்டு, ரோம்  நகரில் விட்டுப்போன இடங்களை சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்.

ஹோட்டலின் பின் பக்கத்தில் ஒரு பத்து  நிமிடம் நடந்தால் மிக விஸ்தாரமான பியாசா நுவோனோ (PIAZZA NUONO) – பெரிய செவ்வக வடிவமான ஒரு கூடம். சுற்றுலாப் பயணிகள் சாரை சாரையாக கூடிக்கொண்டிருந்தனர். மத்தியில் நான்கு முக்கிய நதிகளின் நீரூற்று (FONTANA DEI QUATTRA FIUMI – Fountain of Four Rivers) 1651-ல் பெர்னினி என்ற பிரபல கட்டிடக் கலைஞரால் பத்தாவது இன்னொஸென்ட் போப்பின் அரண்மனக்கு எதிராக வடிவமைக்கப்பட்டது. ஆப்பிரிக்காவின் நைல், யூரோப்பின் டேன்யூப், இந்தியாவின் கங்கை மற்றும் தென் அமெரிக்காவின் பளாட்டா நதிக் கடவுள்களை குறிக்கும் இந்த நீருற்றை சுற்றி சுற்றுலாப் பயணிகளின் கூட்டம்.

 
 
அங்கங்கே கேளிக்கைக்காக மேஜிக் காட்டுபவர்கள். ஒருவர் அந்தரத்தில் யோகாவில் உட்கார்ந்திருந்தார். இன்னொருவரின் தலை கழுத்தைவிட்டு துண்டாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. எப்படி இந்த மேஜிக்கை அவர்கள் செய்திருப்பார்கள் என்று இன்று வரை புரியவில்லை.

அங்கிருந்து இன்னொரு ஐந்து நிமிட தூரத்தில் மிகப் பிரபலமான பேந்தியன். (PANTHEON) எல்லாக் கடவுள்களுக்குமாக கட்டப்பட்ட இந்தக் கோவில் கி.மு 27 – கி.பி 14 காலங்களில் அகஸ்டஸ் என்ற மன்னரின் ஆணையில் முதலில் கட்டப்பட்டு, பிறகு கி.பி 126-ல் ஹேட்ரியான் பேரரசரால் மீண்டும் கட்டப்பட்டது. (இதே போன்ற ஒரு பேந்தியன் கோவிலை அமெரிக்காவில் டென்னிஸி மாநிலத்தின் தலைநகரமான  நேஷ்வில் (NASHVILLE) என்ற இடத்தில் பிரம்மாண்ட வடிவில் கட்டியிருக்கிறார்கள்)
வட்ட வடிவமான இந்தக் கோவிலின் முகப்பில் கிரானைட் கற்களாலான எட்டு தூண்கள் முன் வரிசையிலும், நான்கு நான்காக அதன் பின் பக்கத்தில் இன்னும் எட்டு தூண்களும் தாங்கிக்கொண்டிருக்கின்றன. 142 அடி உயரமுள்ள கான்க்ரீட்டினால் கட்டப்பட்ட வட்ட வடிவமான மேற்கூரையின் மத்தியில் வானம் தெரிகிறார் போல மாதிரி ஒரு வாசல். ஆயிரம் ஆண்டுகளாக இந்தக் கட்டிடம் மிடுக்கோடு இன்றும் நின்று கொண்டிருக்கிறது. இதைப் பார்த்தபின்பு மனதில் ஒரு வருத்தம். நமது தமிழ்நாட்டில் பல ஊர்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் பல கோவில்களைப் சுற்றிப்பார்ப்பதற்கு எத்தனை சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர் என்பதை நினைத்துப் பார்த்தேன். சுற்றுலாவுக்காக நாம் ஒன்றுமே செய்வதில்லையோ என்றுதான் தோன்றுகிறது, நமது பண்டைய கலாச்சாரத்தை, நாகரீகத்தை, கலைவளத்தை வெளிப்படுத்தும் பல விஷயங்களைப் பற்றி நாம் அதிகமாக தெரிந்துவைத்துக் கொள்வதுமில்லை, மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதுமில்லை. முக்கியமாக நமது வீட்டில் குழந்தைகளுக்குச் சொல்வதுமில்லை.  

பேந்தியனிலிருந்து நேராக இம்மானுவேல் நினைவு மண்டபத்துக்கு (இன்றைக்கு ஒரு போர் நினைவுச் சின்னமாகத் திகழ்கிறது) நடந்தோம். ஒரு அரை மணி நேர தூரம். பியாஸா வெனிஸியாவுக்கும் கேபிடோலின் குன்றுக்கும் நடுவே அமைந்திருக்கும் இந்த கட்டிடம் ஒன்றிணைக்கப்பட்ட இத்தாலியின் முதல் மன்னரான இரண்டாம் விக்டரின் நினைவாகக் கட்டப்பட்டது. முழுவதும் வெள்ளை சலவைக் கற்களால் கட்டப்பட்ட இந்த அரண்மனையின் முகப்பு மிகமிக பிரம்மாண்டமாக தூரத்திலிருந்தே தெரிகிறது. 440 அடி அகலம் 230 அடி உயரம். 1885-ல் ஜோஸஃப் சக்கோனி என்பவரால் வடிவமைக்கப்பட்டு 1925-ல் மிகச் சிறந்த இத்தாலிய நிபுணர்களால் கட்டி முடிக்கப்பட்டது. புராதன சின்னமான கேபிடோலின் குன்றின் பல இடங்களை இந்த மண்டபம் விழுங்கிவிட்டதாக குறை கூறுபவர்களும் நிறைய உண்டு.  


அதன் பிறகு, கேபிடோலின் ம்யூசியம் பார்ப்பதற்குச் சென்றோம். இன்னும் சற்று தூரம் நடை. மைக்கேல் ஏஞ்செலோவால் 1536-ல் வடிவமைக்கப்பட்ட இந்த சதுரத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 400 ஆண்டுகள் எடுத்திருக்கிறது. கணக்கிலடங்காத அளவுக்கு பழங்காலத்து ரோமர்களின் சிலைகள், சிற்பங்கள், ஓவியங்கள், நகைகள், விலை மதிக்க முடியாத ஆபரணக் கற்களை இங்கே பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு சிலைக்கும், சிற்பத்திற்கும் அருகில் நின்று மணிக்கணக்காக நேரத்தை செலவிடலாம். எல்லாம் நேர்த்தியான சலவைக் கற்கள்.
சில சிற்பங்களின் அருகே செல்ல விடுவதில்லை. சில இடங்களில் ஃபோட்டோ எடுப்பதற்கும் அனுமதியில்லை. ஆனாலும், திருட்டுத்தனமாக எல்லோரும் ஃபோட்டோ எடுக்கிறார்கள். மார்க்கஸ் ஆரேலியஸ் (MARCUS AURELIUS) என்ற பேரரசரின் வெண்கலச் சிலை இங்கு ஒரு முக்கியமான சிலை. இதன் நகலை ம்யூசியத்தின் நுழைவில் வெட்டவெளியில் வைத்திருக்கிறார்கள். பழைய ரோமர்கள் காலத்தின் பல சிற்பங்களை மத விரோத காரணமாக மத்திய காலங்களில் அழித்து விட்டதாகப் படித்தேன்.  கிறிஸ்துவ மதத்தை ரோமர்களின் அங்கீகரிக்கப்பட்ட மதமாக ஏற்றுக்கொண்ட கான்ஸ்டன்டைன் என்ற மன்னரின் சிலை என்று நினைத்து, இந்த மார்க்கஸ் ஆரேலியஸின் சிலையை விட்டு வைத்திருக்கிறார்கள். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலேயே இந்த ம்யூசியத்துக்குள்ளே நடந்து கால்கள் கெஞ்சின.

சிறிது நேரம் அங்கங்கே உட்கார்ந்து ஓய்வெடுத்துக்கொண்டு மீண்டும் ஹோட்டலுக்கு நடந்தோம். நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி ரோம் நகரை மட்டும் பார்ப்பதற்கு ஒரு வாரத்துக்கு மேலேயே பிடிக்கும். ஒரு சில முக்கியமான இடங்களைப் பார்க்க முடியவில்லை.

ஸ்பெயின் படிக்கட்டுகள் (SPANISH STEPS)

ஸிஸ்டைன் சேப்பல் (SISTINE CHAPEL)

பியாஸா டெல் போப்போலோ (PIAZA DEL POPPOLO)

பியாஸா டெல் ரிபப்ளிக்கா (PIAZA DEL REPUBLICA) (பஸ்ஸில் போகும் பொழுது பார்த்ததுதான்)
போர்கீஸ் வில்லா (VILLA BORGHESE AND BORGHESE GARDEN)

புனித ஏஞ்செலோவின் கோட்டை (CASTLE SANT ANGELO)
பல பழமையான கிறிஸ்துவக் கோவில்கள் (BASCILLICA)

முடிந்தால் இன்னொரு முறை இத்தாலிக்கு வரலாம்தான். பத்தாவது நாள் மதியம் பன்னிரண்டு மணிக்கு எங்களுக்கு லண்டன் வழியாக சிகாகோ நகர் செல்வதற்கு விமான டிக்கெட் இருந்தது. நிறைய பணம் செலவழித்து இத்தாலியை ஒரளவு பார்த்து முடித்த திருப்தியோடு விமானம் ஏறினோம்.
முடிவுரை

ஊர் ஊராகச் சுற்றுவதில் எனக்கு மிகவும் விருப்பமுண்டு. இந்தியாவில் என் வேலை நிமித்தமாக பல இடங்களுக்கு மாற்றப்பட்டு ஊர் சுற்றியிருக்கிறேன். இந்தியாவில் பார்க்காத இடங்கள் மிகக் குறைவு. வெளிநாடுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, சுவிட்சர்லாந்து, இப்பொழுது இத்தாலி பார்த்திருக்கிறேன். இன்னும் பல இடங்களுக்கு போக வேண்டும் என்ற ஆசை இருந்துகொண்டே இருக்கிறது. பல இடங்களைப் போய் பார்ப்பதற்கு எனக்கு வசதி ஏற்படுத்திக்கொடுத்த இறைவனுக்கு மிக்க நன்றி. இன்னும் பல இடங்களை தொடர்ந்து பார்ப்பதற்கான ஆரோக்கியத்தையும் வசதியையும் கொடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. எல்லா பெருமையும் இறைவன் ஒருவனுக்கே.

இந்தத் தொடரை முடிப்பதற்கு முன், ஒரு சிறிய குறிப்பு: நான் ஏற்கெனவே சென்று வந்த YELLOW STONE NATIONAL FORESTS/GRAND TITON NATIONAL FORESTS, ALASKA, SWITZERLAND இடங்களைப் பற்றி ஆங்கிலத்தில் என்னுடைய BLOG-ல் எழுதியிருக்கிறேன். வெகு சிலர் மட்டுமே படித்திருக்கிறார்கள். ஆனால், இத்தாலியைப் பற்றி நான் தமிழில் எழுதியதை உலகில் பல இடங்களிலிருந்து, முக்கியமாக அமெரிக்கா, யூரோப், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிலிருந்து மிக அதிக மக்கள் படித்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் எழுதினால் மக்கள் படிப்பதில்லையோ என்று தோன்றுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குச் சொன்னால் எதிர்காலத்தில் எழுதுவதற்கு ஊக்கமாக இருக்கும். கண்டிப்பாக உங்களுடைய கருத்தை எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு

டீ.என்.நீலகண்டன்
www.tnneelakantan.com
 

 

Wednesday, April 09, 2014

எனது இத்தாலி பயணம் பகுதி 2

எனது இத்தாலி பயணம்
நாள் 2

மறுநாள் காலை ஹோட்டலிலேயே செமையான காலை உணவு. (ஹோட்டல் கட்டணத்தில் காலை உணவும் சேர்க்கப்பட்டிருந்தது), ஒன்பது மணிக்கு வீதியில் இறங்கினோம்.

இத்தாலிக்கும் இந்தியாவுக்குமிடையே நிறைய ஒற்றுமைகள் உண்டு
.
இத்தாலியின் வரைபடம்
  • இந்தியாவைப் போல், இத்தாலியும் ஒரு தீபகற்ப நாடு. 
  • வடக்கே ஆல்ப்ஸ் மலையின் சிகரங்கள் இத்தாலியை ஃப்ரான்ஸ், சுவிட்ஸர்லாந்து, ஆஸ்ட்ரியா மற்றும் ஸ்லோவேனியா நாடுகளிலிருந்து பிரிக்கிறது. தெற்கே இத்தாலியின் ஒரு பகுதியான சிசிலி என்கிற ஒரு தீவு. (GOD FATHER படம் ஞாபகம் இருக்கலாம்) அதற்கும் தெற்கே பரந்த மத்தியதரைக்கடல். 
  • இத்தாலியின் தலைநகரமான ரோம், சரித்திர காலங்களிலிருந்து புகழ் பெற்றிருந்தது. 
  • இந்தியாவைப் போல் பல உட்பிரிவுகளைக் கொண்ட இத்தாலி பல குறுநில, சிற்றரசர்களால் பல்வேறு காலக்கட்டங்களில் ஆளப்பட்டிருக்கிறது. பல புகழ்பெற்ற சக்கரவர்த்திகள் ரோம சாம்ராஜ்யத்தை ஐரோப்பா முழுவதும் விரிவாக்கியிருக்கிறார்கள். அண்டையிலுள்ள ஐரோப்பாவின் மற்ற பெரிய நாடுகளான ஆஸ்திரியா, ஸ்பெயின், மற்றும் ஃப்ரான்ஸ்  நாடுகள் இத்தாலியின் பல்வேறு பகுதிகளின் மீது படையெடுத்து கைப்பற்றி ஆண்டிருக்கின்றன.. 
  • பல புகழ்பெற்ற தத்துவஞானிகள், கலைஞர்கள், இத்தாலியில் தோன்றியிருக்கிறார்கள். 
  • மிகப் பழமையான கலாசாரம், பண்பாடு, மற்றும் நாகரீகம் தோன்றிய நாடு. 
  • உலகிலேயே மிக அதிக மக்கள் பின்பற்றும் கிறிஸ்துவ மதம் – முக்கியமாக ரோமன் கத்தோலிக்க மதம் - இங்கேதான் வேரூன்றியிருகிறது. உலகிலேயே மிக அதிக வருமானம் கொண்ட வாடிகன் கோவில் ரோமில்தான் அமைந்திருக்கிறது. 
  • லாத்தீன், கிரீக், மற்றும் பல வேறுபட்ட கிளை மொழிகளை மக்கள் பண்டைய காலங்களில் பேசி வந்தாலும், இருபதாம் நூற்றாண்டில் அரசாங்கம் எடுத்துக்கொண்ட பல முயற்சிகளால், ஒருங்கிணைத்த மொழியாக இத்தாலியன் மொழி இன்று பேசப்பட்டு வருகிறது. 
  • பல மன்னர்கள்,, கொடுங்கோலர்கள் கைக்குள் இருந்து வந்த இத்தாலியின் பல்வேறு பிரிவுகள், இரண்டாம் மற்றும் மூன்றாம் சுதந்திர போராட்டங்களுக்குப் பிறகு 1861-ல் இரண்டாவது விக்டர் இம்மானுவேல் மன்னரின் கீழ் ஒரே நாடாக்கப்பட்டது. 
  • 1946, ஜூன் 2-ஆம் தேதி நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பின் முடிவின்படி, மன்னராட்சி, கொடுங்கோல் ஆட்சிகளுக்கு முடிவு கட்டப்பட்டு இத்தாலி ஒரு சுதந்திர குடியரசாக அறிவிக்கப்பட்டது. 
  • இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்நாடு தொழில்மயமாக்கப்பட்டு, ஒரு வளர்ந்த நாடாக,   நேடோ (NATO) அமைப்பின் ஒரு ஸ்தாபக உறுப்பினராகவும்,, ‘செஞ்சென்’ என்றழைக்கப்படுகிற யூரோப்பியன் யூனியனின் ஒரு முக்கிய நபராகவும் திகழ்ந்து வருகிறது. 


இந்த நினைவுகளுடனேயே, புராதன ரோம் நகரை சுற்றிப்பார்க்க ஆரம்பித்தோம். புராதன ரோம் நகரப் பகுதிகள் முழுவதும் பழமையான கட்டிடங்கள், பூமியின் அடியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட அடையாளச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், சிற்பக்கூடங்கள், நீரூற்றுகள், ரோமன் கத்தோலிக் கிறிஸ்துவர்களின் கோவில்கள் (நம்மூரில் மூலைக்கு மூலை பிள்ளையார் கோவில் இருப்பது மாதிரி) மற்றும் போர் நினைவுச் சின்னங்கள் எல்லாம் பல புதிய கட்டிடங்களுக்கு நடுநடுவே பழசும் புதுசுமாக கலந்து அழகாக காணப்படுகிறது. குறிப்பிட்ட நிறுத்தங்களில் எங்கு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் ஏறி இறங்கலாம் என்கிற வசதியுள்ள HOP-ON-HOP-OFF பஸ்ஸில் (ஏற்கெனவே ரிசர்வ் செய்திருந்தேன்) ஒரு முறை எங்கும் இறங்காமல் ரோமில் வலம் வந்தோம். பல குறுகிய தெருக்கள் வழியே இந்த பஸ் போகும்பொழுதும், திரும்பும் பொழுதும் மனது திக், திக்கென்றது.)
 

எங்களுடைய முதல் நிறுத்தம், வாடிகனுக்கு வெளியே.

வாடிகன் நகரம், ரோமுக்குள்ளேயே பெரிய மதிற்சுவர்களால் சூழப்பட்ட, ஐ. நா சபையின் உறுப்பினர் அந்தஸ்து பெற்ற ஒரு தனி நாடு. 110 ஏக்கர் பரப்பளவு. மக்கள் தொகை 840. கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தின் தலைவரும், ரோம் நகரின் பிஷப் என்றும் அழைக்கப்படும் போப்பாண்டவரால் ஆளப்படுகிறது. பல நாடுகளிலுள்ள பிஷப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் இவர் வசிக்கும் இடமும் வாடிகன் நகரம்தான். யேசு கிறிஸ்துவினால் அளிக்கப்பட்ட சொர்க்கத்தின் திறவுகோலை வாங்கிக்கொண்ட புனித பீட்டரின் வாரிசுகள்தான் போப்பாண்டவர் என்பவர்கள். புனித பீட்டருக்கு வாட்டிகனனுக்குள்ளேயே மிகப்பெரிய கோவில் கட்டியிருக்கிறார்கள்.
 


அடுத்த நாள் வாடிகன் அருங்காட்சியகம், மற்றும் புனித பீட்டரின் மிகப் பெரிய கோவிலை (VATICAN MUSEUM AND ST.PETER’S CHURCH) சுற்றிப்பார்ப்பதற்கான டிக்கெட்டை நாங்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்ததால், வாடிகனுக்கு வெளியேயுள்ள இடங்களை மட்டும் சுற்றிப்பார்த்துவிட்டு, மீண்டும் HOP ON பஸ் ஏறினோம்.

நாங்கள் இறங்கிய அடுத்த முக்கிய இடங்கள்:

  •      பியாசா டெல் கேம்பிடோலியோ (Piazza del Campidoglio)
  •   ரோமன் கலோசியம் (Roman Collosseum) மற்றும் அதைத் தொட்டுள்ள          ரோமன் ஃபோரம் (Roman Forum)

பியாசா டெல் கேம்பிடோலியோ (Piazza del Campidoglio):
கேபிடோல் குன்றின் மீது அமையப்பட்ட இந்த நகர்கூடம் ரு காலத்தில் ரோமர்களின் வழிபாட்டுத்தலமாகவும் இருந்திருக்கிறது. இப்பொழுது காணப்படும் கட்டிடம் 1560-ல், மைக்கேல் ஏஞ்செலோ என்ற புகழ்பெற்ற சிற்பக்கலை வல்லுனரின் எண்ணத்தில் உதயமான கனவின் படி கட்டப்பட்டது. கம்பீரமான ஒரு படிக்கட்டுகளின் வழியாக ஏறினால் மூன்று கட்டிடங்களைக் காணலாம். நடுவில் நிற்பது பளாசோ செனடோரியோ (Palazzo Senatorio)இப்பொழுது ரோம்  நகராட்சி மன்றத்தின் அலுவலகம். இருபுறமும் இருப்பது கேபிடொலின் அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம். இந்த இரண்டு இடங்களையும் முழுவதுமாகப் பார்ப்பதற்கு குறைந்தது இரண்டு மணி நேரம் தேவை என்பதால், இதை இன்னொரு நாள், நாங்கள் ரோம் திரும்பி வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்று திரும்பிவிட்டோம்.
  
ரோமன் கலோசியம் (Roman Collosseum) , அதைத் தொட்டுள்ள ரோமன் ஃபோரம் (Roman Forum), மற்றும் சர்கஸ் மாக்ஸிமஸ் ):

கலோசியம்: கி.பி 70-ல் தொடங்கி 80-ல் முடிக்கப்பட்ட இந்த ரோமன் வெட்டவெளி அரங்கம் (AMPHITHEATRE) வெஸ்வேசியன் என்ற பேரரசராலும், ஃப்ளெவியன் பரம்பரை என்றழைக்கப்படும் அவரது சந்ததியரரான டைட்டஸ் என்பவராலும் கட்டப்பட்டது. ஐம்பது முதல் எண்பதினாயிரம் மக்கள் அமரக்கூடிய இந்த அரங்கத்தில் ஒரு காலத்தில் க்ளேடியேட்டர்கள் (GLADIATOR) என்றழைக்கப்பட்ட அடிமைகள், கூலி வீரர்கள் ஒருவருக்கொருவர் பயங்கரமாக மோதி சண்டை போட்டும், பயங்கர மிருகங்களுடன் போராடியும் பார்வையாளர்களை குஷிப்படுத்தி வந்தனர். பின் வந்த 10-ஆவது 13-ஆவது நூற்றாண்டுகளில் இது ஒரு கோட்டையாகவும், ராணுவ வீரர்களின் உறைவிடமாகவும், சமயத்தில் கிறிஸ்துவ கோவிலாகவும் பயன் படுத்தப்பட்டது. பின்னால் ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவாகவும், மதிப்புள்ள கற்களை கொள்ளையடிப்பவர்களாலும் இந்த இடம் இப்பொழுது சின்னா பின்னமாக சிதைந்து கிடக்கிறது. ஐ. நா. சபையினால், பாதுகாக்கப்படவேண்டிய ஒரு புராதனச் சின்னமாக இன்று கருதப்பட்டு வருகிறது.
 

கலோசியம் உள்ளே சென்று பார்க்க டிக்கெட்டுக்கு க்யூவில் நின்று, பின்பு உள்ளே சுற்றிப் பார்த்து முடிப்பதற்குள்ளேயே நான்கு மணியாகிவிட்டது. அதற்குள், ரோமன் ஃபோரம் பார்ப்பதற்கான அனுமதி நேரம் முடிந்துவிட்டதால் உள்ளே எங்களுக்குப் போக முடியவில்லை. அடுத்த நாள் சீக்கிரமாக இங்கே வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று கருதி மற்ற இடங்களை சுற்ற ஆரம்பித்தோம்.

சர்க்கஸ் மாக்ஸிமஸ்: ஒரு காலத்தில் மிகப் பிரபலமான குதிரைப் பந்தயங்கள், போட்டிகள் நடக்கும் களமாக இருந்த இந்த இடம், இன்று வெறும் புல் முளைத்த ஒரு மைதானமாக காட்சியளிக்கிறது.

அன்று நாங்கள் கற்றுக்கொண்ட முக்கியமான பாடங்கள்:
  •    ரோம் நகரை சுற்றிப் பார்ப்பதற்கு நடைதான் சிறந்தது. HOP ON  பஸ்   எல்லாம் பண விரயம்தான். சரித்திர கால ரோம் என்று      சொல்லப்படும் பகுதிகள் கால் நடையாகவே போய் பார்க்கக்கூடிய  இடங்கள்தான்.
  •  ரோம் நகரை மட்டும் சுற்றிப் பார்ப்பதற்கு தனியாக ஒரு பத்து நாள்  ஒதுக்க வேண்டும். அவ்வளவு இருக்கிறது பார்ப்பதற்கு.
  •  ரோம் நகரின் சரித்திரம் ஓரளவு தெரிந்திருந்தால் இந்த இடங்களை  இன்னும் அதிகமாக ரசித்துப் பாராட்டலாம்.
  •  முக்கியமாக அருங்காட்சியகங்கள் எந்த நாளில் விடுமுறை என்பதை முன் கூட்டியே இன்டெர்னிட்டில் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

 நாள் 3

மூன்றாம் நாள் அதிகாலையிலேயே தயாராகிவிட்டோம். 

ரோமன் ஃபோரம் செல்வதற்கு முந்திய இரவே பஸ் டிக்கட் ஒரு சிகரெட் கடையில் வாங்கி வைத்துக்கொண்டோம். ஆம். பஸ் டிக்கட் பஸ்ஸில் கிடைப்பதில்லை. ஏதேனும் சிகரெட் கடையிலோ, அல்லது  நியூஸ் பேப்பர் கடையிலோதான் விற்கப்படுகிறது. ஒரு டிக்கட் விலை 1.30 யூரோ. ஒண்ணேகால் மணி நேரத்துக்குள் எத்தனை தடவை வேண்டுமானாலும் உபயோகித்துக்கொள்ளலாம். ஒரு நாள் முழுவதும் பயன்படுத்த ஆறு யூரோக்கள். பஸ்ஸில் ஏறியவுடன் பயணிகள் நிற்குமிடத்தில் தொங்கவிடப்பட்ட மிஷினில் பஞ்ச் செய்துகொள்ளவேண்டும். எங்கள் ஹோட்டலின் எதிரிலேயே பஸ் நிறுத்தம். மற்ற பயணிகள் உதவியோடு, ரோம் ஃபோரம் போவதற்கு சரியான  நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டோம். 

கலோசியம் ஒட்டியே உள்ளது ஃபோரம். காலை எட்டு மணிக்கே பார்வையாளர்களுக்கு திறந்துவிட்டார்கள். உள்ளே நிறைய நடக்கவேண்டியிருந்தது. நடக்க, நடக்க அந்த பழங்காலத்து ரோமுக்கே போய்விட்டோம். இணைத்திருக்கும் படங்களிலிருந்தே தெரிந்துகொள்ளுங்கள். ஜூலியஸ் சீசர், அகஸ்டஸ் மற்றும் டிராஜன் பேரரசர்கள் காலத்தில் அவர்கள் பீடமாய் இருந்த இடம் இப்பொழுது எப்படி இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள். ஹாலிவுட்டின் கற்பனையில் இந்த இடம் எப்படி இருந்திருக்கும் என்பதை BENHUR, CLEOPATRA போன்ற பழைய ஆங்கிலப் படங்களை பார்த்திருந்தால் தெரியும்.  

   
                             
          
              

             
முந்திய நாளுடைய HOP ON  பஸ் டிக்கட் 24 மணி நேரத்துக்கு பயன்படுத்தலாம் என்பதால், முதல் ட்ரிப்புக்கு கலோசியம் வெளியே அது வந்து சேரும் நேரத்தை ஏற்கெனவே தெரிந்து வைத்துக்கொண்டிருந்தோம். சரியாக முதல் பஸ்ஸை பிடித்து, வாடிகன் நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டோம். ம்யூசியம் நுழைவு வாயிலருகே ஒரு ரெஸ்டாரண்ட் வாசலில், வாடிகன் டூரின் கைடு எங்களுக்காக காத்திருந்தார்.  நாங்கள் கொஞ்சம் லேட். ம்யூசியம் நுழைவு டிக்கெட், கைடு விவரிப்பதை நாம் வசதியாக கேட்டுக்கொள்ள கையில் ஒரு சின்ன கருவி – TRANSMITTOR RECEIVER – மற்றும் காதில் மாட்டிக்கொள்ள ஹெட் ஃபோன் சகிதமாக வாடிகன் ம்யூசியம் உள்ளே நுழைந்தோம்.

வாடிகன் ம்யூசியம் ஒரு தனி உலகம். எத்தனை எத்தனை வண்ண ஓவியங்கள், பளிங்குக்கல் சிலைகள், வண்ண வண்ண கூரைகள், ஃப்ரெஸ்கோஸ் என்று கூறப்படும் சுவரோடு சுவராகவே வரையப்பட்ட, பிரிக்கமுடியாத ஓவியங்கள் ….. ஒவ்வொன்றுக்கும் முன்னே நின்று மணிக்கணக்கில் நேரம் செலவிடலாம். கைடு மிகப் பொறுமையாக ஒவ்வொன்றையும் விளக்கிக்கொண்டிருந்தாள். கூட்டம் கூட்டமாக பல சுற்றுலாக் கும்பல்கள். கைடுகளை அடையாளம் கண்டுகொள்ள அவர்கள் கையில் ஒரு வண்ணக்கொடி. பல ஓவியங்களின் ஒரிஜினல் தனி அறைகளில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பார்த்ததில் பல, பிற்காலத்தில் பலர் வரைந்த, செதுக்கிய நகல்கள்தான். ஒவ்வொரு நாளும் இருபது முப்பதுனாயிரம் சுற்றுப்பயணிகள் வருகிறார்கள். எங்கு பார்த்தாலும் நம் திருப்பதி கோவில் மாதிரி தலைகள்தான் தெரிந்தன. 
                             
                                                      

                       
       
வாடிகனுக்குள்ளே அமைந்திருக்கும் புனித பீட்டரின் கோவில் (ST.PETER’S BASCILLICA) பிரமிக்கவைக்கும் இன்னொரு அதிசயக் கட்டிடம்.  உலகிலேயே மிகப் பெரிய கோவில்களில் ஒன்று. ரொம்பவும் புனிதமாகக் கருதப்படும் கோவிலும் இதுதான். யேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் மிக மிக முக்கியமானவராக கருதப்பட்டவரும், முதல் போப்பாண்டவருமான புனித பீட்டரின் உடல் இங்கேதான் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. 4-ஆம் நூற்றாண்டில் ஆண்ட மாபெரும் கான்ஸ்டன்டைன் என்ற மன்னர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு கோவிலை அகற்றிவிட்டு, 1506-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி இப்பொழுது காணப்படும் புதிய கோவிலை கட்டத் தொடங்கி 1626-ஆம் ஆண்டு, நவம்பர் 18-ஆம் தேதி முடித்ததாக அறிகிறேன்.  கோவாவில் பாஸ்ஸிலிகா என்றழைக்கப்படும் சில பெரிய கோவில்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், வாடிகனிலுள்ள புனித பீட்டரின் கோவில் மிக மிகப் பெரியது. பார்க்க கொடுத்து வைத்திருக்கவேண்டும். இணைத்திருக்கும் படங்களைப் பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளுங்கள். இந்தக் கோவிலின் உயரம் 452 அடி. கோவிலின் மத்தியிலுள்ள கூரையின் (DOME) விட்டம் சுமார் 137 அடி. கோவிலின் சுவர், கூரை முழுவதும் பிரபல ஓவியர்கள் வரைந்த வண்ண ஓவியங்கள். இந்தக் கோவிலைக் கட்டுவதில் ரஃபேல், மைக்கேல் ஏஞ்செலோ, மற்றும் பெர்னினி போன்ற உலகப் புகழ்பெற்ற கலைஞர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. முக்கியமாக, மைக்கேல் ஏஞ்செலோ 452 அடி உயர கூரையின் உள் பகுதிக்கு வண்ணம் தீட்டும் பொழுது, பதினைந்து வருடங்களுக்கு சாளரங்களில் படுத்துக்கொண்டே வண்ணம் தீட்டினார் என்பதை கற்பனை செய்து பார்க்கும்பொழுது அவர் எவ்வளவு பெரிய கலைஞர் என்ற பிரமிப்பு ஏற்பட்டது.


  
  
எங்களது வாடிகன் பயணம் மதியம் சுமார் இரண்டு மணிக்கு முடிந்தது. நடந்து நடந்து கால்கள் கெஞ்சின. 

நான்கு மணிக்கு ரோமிலிருந்து நேப்பிள்ஸ் செல்ல எங்களுக்கு ரயில் டிக்கெட் ரிசெர்வ் செய்திருந்ததால் நாங்கள் உடனே ஒரு டாக்ஸி பிடித்துக்கொண்டு (மீட்டர் டாக்ஸியா என்று உறுதி செய்துகொண்டு டாக்ஸியில் ஏறுவது  நல்லது என்பதைத் தெரிந்தும் தவறான ஒரு டாக்ஸியில் ஏறிக் கொஞ்சம் ஏமாந்துகொண்டோம். டாக்ஸி ஓட்டிய பெண்மணி வாய் ஓயாமல் யாருடனேயோ – காதலருடனாக இருக்கவேண்டும் என்று எனது அனுமானம் – பேசிக்கொண்டே வண்டி ஓட்டினாள். கோபம், கெஞ்சல், வற்புறுத்தல், மிரட்டல் எல்லா தொனியும் அவள் பேச்சில் தெரிந்தது.) ஹோட்டல் வந்து சேர்ந்து, மீண்டும் இன்னொரு டாக்ஸி ஹோட்டல் மூலமாக ஏற்பாடு செய்து ‘ரோம் சென்ட்ராலே’ ரயில் நிலையம் வந்து சேர்ந்தோம். (இத்தாலி மொழியில் எல்லா வார்த்தைகளுக்கு ஒரு ‘ஆ’ ‘ஏ’ சேர்த்துக்கொள்ளவேண்டும் போலிருக்கிறது).

இத்தாலியில் எங்களது முதல் ரயில் பயணம்.  நவீன மயமான ரயில் நிலையம். பாதாளத்தில் மெட்ரோ ரயில் ஓடியது. ரோம் நகருக்கு மீண்டும் வருவதாக சொல்லி விடைபெற்றுக்கொண்டோம்.
                                                                    …                                                          தொடரும்



Sunday, April 06, 2014

My Italy Tour - March 2014


எனது இத்தாலி பயணம்
Collosseum in Rome

Duomo in Florence
Pisa tower
Gondolas in the waters of Venice
Anacapri near Naples
 
நாள் 1

சென்னை அண்ணா சாலையில் நூறு ரூபாய்க்கு கிடைத்த, பிரபல எழுத்தாளர் டான் ப்ரௌன் எழுதிய “இன்ஃபெர்னோ” என்கிற கதைப் புத்தகம்தான் நான் வாங்கியதிலேயே மிக விலை உயர்ந்த புத்தகமாக முடிந்தது. இந்தப் புத்தகம் இத்தாலி நாட்டிலுள்ள ஃப்ளாரன்ஸ் என்கிற பழம்பெருமை வாய்ந்த நகரில் நடப்பதாக எழுதப்பட்டது. இந்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள அரண்மனைகள், அருங்காட்சியகங்கள், தோட்டங்கள், சாலைகள், பாலங்கள்  … இதையெல்லாம் படிக்க, படிக்க, இத்தாலி நாட்டைப் போய் பார்க்க வேண்டும் என்று ஏற்கெனவே என்னுள் மறைந்து உறங்கிக்கொண்டிருந்த ஆசையை மீண்டும் உசுப்பி எழுப்பிவிட்டது.

பின் என்ன…..

இன்டெர்னெட்டில் உட்கார்ந்தேன். இன்டெர்னெட் கண்டுபிடித்தவர்களை கோவில் வைத்துக் கும்பிடவேண்டும். மிகப் பெரிய வரப் பிரசாதம். இருந்த இடத்தை விட்டு நகராமல் எதை வேண்டுமானாலும் இன்டெர்னெட்டில் தேடிக் கண்டுபிடித்துக்கொள்ளலாம்.  

இன்டெர்னெட்டில் இத்தாலி நாட்டைப் பற்றியும், அந்த நாட்டு சுற்றுப்பயணங்களைப் பற்றியும் படித்தேன். படிக்கப் படிக்க ஆவல் கூடியது. பல இடங்களின் புகைப்படங்கள் என்னை இன்னும் ஈர்த்தன. எங்களுடைய பையன், பெண் இருவரும் அமெரிக்காவில் வேலை செய்வதால் எப்படியும், மார்ச் மாதத்தில் அமெரிக்கா செல்வதாக ஒரு திட்டம் எங்களிடம் இருந்தது. தனியாக இத்தாலி மட்டும் போய் வருவதற்கான விமான டிக்கட்டின் விலைக்கும், இத்தாலி வழியாக அமெரிக்கா சென்று திரும்புவதற்கான டிக்கெட்டின் விலைக்கும் பத்து பதினையாயிரம் ரூபாய் வித்தியாசம்தான் இருந்தது. அப்பொழுது தோன்றியது … ‘நாம் ஏன், அமெரிக்கா செல்லும் வழியில் இத்தாலியில் ஒரு சில நாட்கள் தங்கி ஊர்சுற்றிப் பார்க்கக்கூடாது’ என்று.  

பல வலைப்பிரிவுகளை படித்துப் புரிந்துகொண்டபோது ஒரு பொதுவான ஐடியா மனதில் பதிவானது. இத்தாலியில் பல இடங்களைப் போய் பார்க்கலாம் என்றாலும், ரோம், நேப்பிள்ஸ், ஃப்ளாரன்ஸ், மற்றும் வெனிஸ் நகரங்கள் மிகமிக முக்கியமானவை என்று தோன்றியது. எட்டு முதல் பத்து நாட்கள் இருந்தால் நன்றாகவே சுற்றிப் பார்க்கலாம் என்றும் புரிந்துகொண்டேன். கையில் பைசா இருந்தால் ரோம் நகரத்தை மட்டுமே எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் சுற்றலாம். இத்தாலியில் செல்லுபடியாகும் யூரோ என்கிற  நாணயம் இன்றைக்கு எண்பத்தியாறு இந்திய ரூபாய்க்கு சமம். (இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வளவு அதல பாதாளத்தில் இருக்கிறது என்று வெளிநாடு போகும் பொழுதுதான் தெரியும்)

என் மனைவியிடம் என்னுடைய இத்தாலி நாட்டுப் பயணக் கனவைப் பற்றிச் சொன்னேன். வழக்கம் போல ப்ரேக் போட்டாள். வீணே நிறைய பணம் செலவாகும் எதற்கு இந்த யோசனயெல்லாம் என்றாள். ஆனால் அவளிடம் உள்ள ஒரு நல்ல குணம் என்னவென்றால், நான் ஆசைப்பட்டு செய்யும் எதற்கும் குறுக்கே நிற்க மாட்டாள். என் கூட துணையும் இருப்பாள். அவளுக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை வைத்துக்கொள்ள மாட்டாள். இரண்டு, மூன்று முறை இதைப் பிரஸ்தாபித்த பிறகு பயணம் ஒகே ஆனது.

ஒரு சில வெளிநாடுகளை சுற்றிப் பார்க்கும் அதிர்ஷ்டம் எங்களுக்கு இருந்தது. இதுவரை அமெரிக்கா, இங்கிலாந்து ஸ்காட்லாந்து, சுவிட்சர்லாந்து போன்ற இடங்களுக்கு போயிருக்கிறோம். எல்லா இடங்களுக்கும் பொதுவாக எந்த குருப் டூரிலும் போனது கிடையாது. தனியாகவே திட்டமிட்டு போய் வந்திருக்கிறோம்.  நம் இஷ்டம் போல் சுற்றலாம். எதில் அதிக ஆர்வம் இருக்கிறதோ அல்லது எது நம்மை அதிகமாக ஈர்க்கிறதோ அங்கே அதிக நேரம் செலவிடலாம். ஆனால், பயணத்துக்கு தயார் செய்ய நிறைய நேரம் பிடிக்கும். செலவும் குறையும். இது என் பெண்ணிடமிருந்து நான் கற்றுக்கொண்டது. ‘ஃப்ரீக்’ என்று எங்களைப் பற்றி கமெண்ட் அடித்திருக்கிறார்கள்.

அப்படியாக, இத்தாலி நாட்டிற்கு சுற்றுப்பயணம் போவதற்கு 2014, ஜனவரி முடிவிலிருந்தே திட்டமிட ஆரம்பித்தேன். மார்ச் மாதம் இத்தாலியில் குளிர்காலம் முடிவடைய வெண்டிய காலம். அதனால், பருவ நிலையும் சாதகமாக இருக்கும் என்று படித்தேன். சுற்றுலாக்கூட்டமும் குறைவாக இருக்கும் என்றும் நம்பினேன்.

www.tripadvisor.com, ஹோட்டல்களைப் பற்றி விலாவாரியாச் சொல்கிறது. www.bookings.com என்ற இணையதளத்தின் மூலம்  நாங்கள் தங்கவேண்டிய எல்லா நகரங்களுக்கும் ஹோட்டல் ரிஸெர்வேஷன் முடிந்தது, இத்தாலியில் ரயில், பஸ், டிராம் போக்குவரத்து மிகவும் வசதியாகவே இருப்பதாகப் படித்தேன். அதனால் போக வேண்டிய நகரங்களுக்கு ரயிலிலேயே பயணம் செய்யலாம் என்று முடிவு செய்தேன். www.italiarail.com என்ற இணையதளத்தில் எல்லா விவரங்களும் கிடைத்தன. www.viator.com, www.vaticantoursonline.com, போன்ற இணையதளங்கள் மூலமாக சுற்றுலா இடங்களுக்கு முன்பதிவும் இன்டெர்னெட்டில் முடிந்து விட்டது. ஹோட்டல்கள் எல்லாமே ரயில் நிலையங்களுக்கு அருகாமலேயே நடந்து போகக்கூடிய தூரத்தில் இருக்குமாறு பார்த்துக்கொண்டேன். டிராவல் ஏஜென்ட் மூலமாக யூரோப்பியன் யுனியனின் விசாவும் வந்துவிட்டது. யூ.ஏ.ஈ எக்ஸேஞ்ச் மூலமாக யூரோ கரென்ஸியும் டிராவலெர்ஸ் செக்கும் வாங்கிக்கொண்டாகி விட்டது. யூரோ டிராவலெர்ஸ் செக் எவ்வளவு வீண் என்பது இத்தாலி நாடு போன பின்புதான் தெரியவந்தது. அதைப் யூரோ பணமாக்க 14 முதல் 20 சதவிகிதம் கட்டணமாக கழித்துக்கொள்கிறார்கள். யூரோப் சுற்றிப் பார்க்க செல்ல நினைப்பவர்கள் இதை கவனத்தில் கொள்ளவும்.

www.maps.google.com இணையதளத்தின் மூலம் நாங்கள் தங்க இருக்கும் ஹோட்டல்களின் முகப்பு வரை பார்க்க முடிந்தது. ஒவ்வொரு இடத்திலும் என்ன பார்க்கலாம்,  நாம் தங்கியிருக்கும் இடத்திலிருந்து பார்க்கவேண்டிய இடங்கள் எவ்வளவு தூரம், எப்படி அங்கு செல்வது, பஸ்/ரயில்/மெட்ரோ/ரயில்/நடை வசதி எப்படி, எவ்வளவு செலவாகும், போன்ற எல்லா விவரங்களும் இன்டெர்னெட்டில் கிடைக்கின்றன. ஹோட்டல்களுக்கு ஈ-மெயில் செய்து விவரங்களை உறுதி செய்துகொண்டேன். முக்கியமாக இந்தியன் ரெஸ்டாரண்ட்ஸ் எங்கெங்கே இருக்கின்றன என்பதையும் தெரிந்துவைத்துக்கொண்டேன்.

இனி கிளம்பவேண்டியதுதான் பாக்கி.

மார்ச் 11-ஆம் தேதி காலை 4 மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலமாக எங்கள் பயணம் தொடங்கியது. லண்டன் எங்களது முதல் நிறுத்தம். சுமார் பத்து மணி நேரப் பயணம். சென்னையில் விமான நிலையத்தில் செக்-இன் செய்யும்பொழுது கௌண்டரில் இருந்தவர் இங்கிலாந்துக்கான TRANSIT VISA எங்கே என்றார்.  நாங்கள்தான் இங்கிலாந்து நாட்டுக்குள்ளே போகப்போவதில்லையே. TRANSIT VISA எதற்கு என்றேன். அவர், பின் யாருடனுடனோ தொலைபேசியில் தொடர்புகொண்டு வெகு நேரம் பேசிய பிறகு, ஒரு வழியாக BOARDING PASS-ஐ கொடுத்தார். (சுற்றுலா பயணிகள் டிக்கெட் வாங்கும்பொழுது சற்று கவனமாக, அவர்கள் போகவேண்டிய இடத்திற்கு இன்னொரு நாடு வழியாக போவதாக இருந்தால் TRANSIT VISA  தேவையா என்று சரி பார்த்துக்கொள்ளவும்.) வழியில் விமானத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை பார்த்தேன். இந்தியாவில் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. இன்றைய சினிமாக்களில் குடிப்பதையும், புகைபிடிப்பதையும் ஒரு ஹீரோத்தனமாக்கிவிட்டார்கள்.

லண்டனில் இரண்டு மணி நேரம் இடைவேளைக்குப் பிறகு, ரோம் நகருக்கு அடுத்த விமானம். இரண்டரை மணி நேரம் பயணம். ரோம் செல்வதற்கு தலையை சுற்றி மூக்கைத் தொட்டதுபோல் இருந்தது. அதே நாள், மாலை 4.10 அளவில் எங்கள் விமானம் ரோம் நகரின் ஃஃப்யூமிஸினா விமான நிலையத்தைத் தொட்டது. தேசியப்பற்றை கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, வெளிநாடுகளிலுள்ள விமான நிலையங்களைப் பார்க்கும்பொழுது, நம்மூர் சென்னை விமான நிலையம் ஒன்றுமேயில்லை என்று தோன்றியது. டில்லி கொஞ்சம் பரவாயில்லை.

ரோம் விமான நிலையத்தில் இமிக்ரேஷன் பரிசோதனை மிக விரைவாக முடிந்துவிட்டது. எங்களது பயணப்பெட்டிகளும் வந்து விட்டன. ஆனால், அதைத் தள்ளி செல்வதற்கு டிராலி இலவசம் கிடையாது. இரண்டு யூரோ  நாணயம் மிஷினுக்கு ஊட்டவேண்டும். இது ரொம்ப அநியாயம் என்று தோன்றியது. இந்தியாவுக்கு, முக்கியமாக தமிழ் நாட்டுக்கு வெளியே இலவசம் என்றால் என்ன விலை என்ற கேள்விதான்.

விமான நிலையத்தில் டிராலிகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தின் அருகிலேயே நாணயம் மாற்றும் மிஷின் இருந்தது. எல்லாம் மிஷின் மயம்தான். வளர்ந்த வெளிநாடுகளுக்குப் போவதென்றால், கம்ப்யூட்டர் மிஷின்களை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றி கவலைப்படக்கூடாது. பத்து யூரோ நோட்டை உள்ளே விழுங்கிவிட்டு நாணயம் வெளியே வராவிட்டால் என்ன செய்வது என்று ஒரு பயம். அப்படி எதுவும் நடக்கவில்லை. ஐந்து, இரண்டு-யூரோ நாணயங்களை கடகடவென்று கக்கியது.

எங்கள் பயணப்பெட்டிகளோடு வெளியே வரும்பொழுது உள்ளுக்குள் இன்னொரு நடுக்கம் இருந்தது. முப்பது கிலோமீட்டர் தூரம். பெட்டிகளோடு மெட்ரோ ரயிலில் செல்வது கடினம் என்பதால் இன்டெர்னெட் மூலமாக ஹோட்டல் செல்வதற்கு டாக்ஸி ஏற்பாடு செய்திருந்தேன். டிரைவர் விமான நிலையத்தின் வரவேற்பு பகுதியில் காத்திருப்பார் என்று ஈ-மெயில் வந்திருந்தது. அவர் வராவிட்டால், மாற்று ஏற்பாடு எப்படி செய்வதென்று பார்த்து வைத்துக்கொள்ள மறந்து விட்டேன். ஆனால், ஒரு அட்டையில் எங்கள் பெயரை சரியாக எழுதி வைத்திருந்து எங்களுக்காக அவர் காத்திருந்தார். ஒரு அரை மணி நேரத்தில் ஹோட்டல் சென்றடைந்தோம்.

மாலை மணி 6.00. ஹோட்டல் அறையில் எங்கள் சாமான்களை இறக்கி வைத்தபின்பு, இரவு சாப்பாட்டிற்காக வெளியே சென்றோம். பல சுற்றுலா பயணிகள் கூடுமிடமான, மனதைக் கவரும் ட்ரெவி நீரூற்று (TREVI FOUNTAIN) ஹோட்டல் எதிரே ஒரு சிறிய சந்து வழியாக ஐந்து நிமிடத்தில் நடந்துபோய் செல்லும் தூரத்திலேயே இருந்தது. சந்து முழுவதும், நமது சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு போன்று கடைகள். தெரு முனையில் எலெக்ட்ரானிக் சங்கீதக் கருவிகளை வைத்து சிலர் இசைத்துக்கொண்டும், பாடிக்கொண்டும் இருந்தனர். (ஒருவிதமான ஹைடெக் கையேந்துதல் என்றுதான் நினைக்கிறேன்.)

இரவு நேரத்தில், TREVI FOUNTAIN மின்விளக்கு ஒளியில் ஜொலித்தது. பல முறை புகைப்படங்களில் பார்த்த நீரூற்றை நேரில் கண்டபொழுது ரொம்ப த்ரில்லிங்காக இருந்தது. நீரூற்றை சுற்றி சுற்றுலாக் கும்பல் குவிந்திருந்தது. நிற்க, உட்கார இடமில்லை. பலர் நீரூற்றின் அருகில் போய் திரும்பி நின்றுகொண்டு நாணயங்களை நீரூற்றில் விட்டெறிந்துகொண்டிருந்தார்கள். அப்படி செய்தால், ரோமுக்கு மீண்டும் வருவோம் என்றொரு நம்பிக்கையாம்.


இரவு உணவை பீஸ்ஸா, ஸ்பகட்டியோடு முடித்துக்கொண்டு, பக்கத்திலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிலிருந்து பிரெட், ஜூஸ், தயிரும், ஒரு பழக்கடையிலிருந்து பழங்களும் வாங்கிக்கொண்டு ஹோட்டல் அறைக்கு திரும்பினோம். இத்தாலியில் நாங்கள் இருந்த எல்லா நாட்களிலும் சென்னை, கிராண்ட் ஸ்வீட்ஸிலிருந்து வாங்கிச்சென்ற தக்காளித்தொக்குதான் ரொம்பவும் கைகொடுத்தது.

அடுத்த நாள் அதிகாலையில் ஊர் சுற்றிப் பார்க்க கிளம்பவேண்டும் என்பதனால் சீக்கிரமாக படுத்துவிட்டோம்..                                                    .  ……………………………… தொடரும்


Do you like this blog? If so, you may also like to see my other blogs on my other travels:
July, 2013:Trip to Alaska