Total Pageviews

Friday, September 26, 2014

பகுதி 7: வெற்றிப் பாதைக்கு ஏழு விதமான பெர்ஸனாலிடிகள் 2. திடமான நோக்கமுடைய பெர்ஸனாலிடி………. யின் தொடர்ச்சி

என்னடா, “3-2-1” என்ற யுக்தியைப் பற்றி அடிக்கடி என் கட்டுரையில் எழுதுகிறேனே என்று நீனைக்கிறீர்களா?. அதற்குக் காரணம் இருக்கிறது. 

நமது செயல்பாடுகளில் பெரும்பாலானவை தன்னிச்சையாக  நமது ஒத்துழைப்பு இல்லாமலேயே நடந்து கொண்டிருக்கின்றன. கண்ணை மூடிக்கொண்டு சாப்பிட்டால் கூட, நமது கை உணவை சரியாக வாய்க்குத்தான் எடுத்துக்கொண்டு போகும். நமது மூச்சு, உணவு ஜீரணம், தூக்கம், இரத்த ஓட்டம், மலஜலம் கழிப்பது போன்ற எல்லாமே தானாகவே யாரோ பொருத்தி வைத்த ஒரு ப்ரோகிராமின் படி ஒழுங்காக நடந்துகொண்டிருக்கிறது.
அதே போல மனதின் எண்ணங்களும் நமது ஆழ்மனதில் பதிந்துவிட்ட சில அபிப்பிராயங்கள், சில நினைவுகளின் தாக்கல்கள், வலிகள், காயங்கள், மகிழ்ச்சிகளின் அடிப்படையிலேயே தன்னிச்சையாக அமைகின்றன. அதாவது ஒரு உணர்வுள்ள விழிப்பு நிலையிலிருந்து தோன்றுவதில்லை. கோபம், பயம், தற்காப்பு, பொறாமை, துக்கம் போன்ற பல உணர்ச்சிகள் தாமாகவே, நீங்கள் முயலாமலேயே எழுகின்றன. நீங்கள் கோபப்பட வேண்டும் என்று நினைத்து கோபம் எழுவதில்லை. பயப்பட வேண்டும் என்று நினைத்து பயம் தோன்றுவதில்லை. தானாகவே ஒரு சில விசையின் தூண்டுதலால் எழுகின்றன. ஆழ்மனதில் நம்மை அறியாமலேயெ பல காரணங்களினால் பதிந்துவிட்ட கருத்துக்களின் தூண்டுதலால் எழுகின்றன. ஆழ்மனதில் பதிந்த எண்ணங்களின் வேகத்தை, உறுதியைப் பொருத்து நமது எண்ணங்கள் அமைகின்றன எண்ணங்களின் உறுதியைப் பொறுத்து செயல்கள், எதிர் வினைகள் அமைகின்றன.

ஆழ்மனதில் பதிந்துவிட்ட நினைவுகளின் தாக்கத்தினால் நம்மை அறியாமலேயே ஏற்படும் பயம், தற்காப்பு, கோபம், பொறாமை, துக்கம், எதிர்மறை கருத்துக்கள், எதிர்மறை உள் உரையாடல்கள் போன்ற உணர்ச்சிகளை, விழிப்பு நிலையிலிருந்து மாற்றுவது மிக மிகக் கடினம். முடியாதென்று கூட சொல்லலாம். ஆனால், நம்மை ஆழ் நிலைக்கு எடுத்துக்கொண்டு போய், அந்த நிலையிலிருந்து பல விஷயங்களை ஆராய்ந்து பார்க்கும்பொழுது உண்மை தானாகவே புலப்படுகிறது. அந்த ஆழ்  நிலையிலிருந்து எதிர்மறை எண்ணங்களை மாற்றுவதில் அதிக சிரமம் இருக்காது. இது மனோதத்துவ விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

மூளை வேறு. மனம் வேறு. மூளை மண்டையில் இருக்கிறது. மனம் உடம்பு முழுவதும் வியாபித்திருக்கிறது. ஒவ்வொரு உயிர்அணுவுக்கும் மனம் இருக்கிறது. தியானம் செய்தல், பிரார்த்தனை, ஹிப்னோடிசம், மெஸ்மெரிஸம் போன்ற மனதை வயப்படுத்தும் முறைகள் மூலம் ஆழ்மனதிலிருந்து தோன்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுகொண்டிருக்கிறார்கள்.

சில்வா ஜோஸின் 3-2-1 என்ற பயிற்சி உங்களை ஆழ்மனதுக்கு எடுத்துச்சென்று பல எதிர்மறை எண்ணங்களை நீக்கவும், உறுதிமொழி எடுப்பதற்கும், உங்களையே நீங்கள் மாற்றிக்கொள்ளவும் பயனுள்ளதாக அதை தொடர்ந்து பயின்றவர்கள் கூறுகிறார்கள்.  நானும் தொடர்ந்து பயிற்சி செய்து நல்ல பலனைத் கண்டிருக்கிறேன். அதனால்தான் 3-2-1 என்ற பயிற்சியைப் பற்றி அடிக்கடி சொல்கிறேன். செலவில்லாத ஒரு பயிற்சி. ஏன் செய்து பார்க்கக்கூடாது.

அடுத்த பெர்ஸனாலிடி வகைகளைப் பற்றி இனி பார்ப்போம்…

3.சுயமரியாதையுள்ள பெர்ஸனாலிடி

உங்களைப் பற்றி நீங்கள் என்ன அபிப்பிராயம் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுடைய பெர்ஸனாலிடியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். உங்கள் குறை, நிறைகளுடன் எவ்வளவு தூரம் உங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்பது ஒரு முக்கியமான கேள்வி.

பலர் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் பல போராட்டங்கள். பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாக மிருகங்களிலிருந்து நமக்கு வந்த தற்காப்பு உணர்ச்சி காரணமாக, நம்முடைய உண்மயான தோற்றத்தை மறைத்துக்கொள்ள முகமூடி போட்டுக்கொள்கிறோம். மற்றவர்களைக் குறை கூறுகிறோம். இல்லாத ஒரு உருவத்தை இருப்பதுபோல மற்றவர்களுக்கு காட்டிக்கொள்கிறோம். ‘நான் சரிதான், நீதான் சரியில்லை’ என்று நாடகமாடுகிறோம்.

நம்மை நாமே ஏற்றுக்கொள்வதுமில்லை, நேசிப்பதுமில்லை. நம்மில் பலருக்கு  நம்மையே பிடிப்பதில்லை.  நம் தோற்றத்தை, எண்ணங்களை, குணங்களை, நடையுடை பாவனைகளை, செயல்களை, பழக்க வழக்கங்களை, வெறுக்கிறோம். மாற்ற வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். ஆனால் மாற முடியவில்லை. அதனால் கோபப்படுகிறோம். ஆழ் மனதில் ஏற்பட்ட சில காயங்களின் தாக்குதலினால், ஒரு விதமாக சிந்திக்கவோ, செயல்படவோ பழகிக்கொண்டு விட்டோம். அந்தப் பழக்கத்தை விடவும் முடியவில்லை. மாற்றவும் முடியவில்லை. அதனால் கோபம். அந்தக் கோபத்தை மற்றவர்கள் மீது காட்டுகிறோம். நம்மை விட மேலான நிலையில் இருப்பதாக நாம் நினைக்கும் சிலரை வெறுக்கிறோம்.

நம்மை நாமே வெறுக்கிறோம். நம்மை நாமே மறுக்கிறோம். இதுதான் பலரது உண்மை. ஆனால் வெளியே தெரியாது. காட்டிக்கொள்ளவும் மாட்டோம்.

இருக்கிற நிலையை ஏற்றுக்கொள்வது என்பது மிகவும் முக்கியம். ஏற்றுக்கொண்டால்…  
  • நமது போராட்டம் நின்றுவிடும். 
  • நமது செயல்களால் ஏற்படும் பலன்களுக்கு நாம் பொறுப்பேற்றுக்கொள்ளத் தொடங்கி விடுவோம். 
  • நமது எண்ணங்களை, செயல்களை, ஆராயத் தொடங்கிவிடுவோம். நமது எண்ணங்கள், செயல்கள், பேச்சுக்கள் எப்படி நம்மையும், மற்றவர்களையும் பாதிக்கின்றன என்பது நமக்குப் புரிய வரும். நம் எண்ணங்கள், செயல்கள், பேச்சுக்கள் நமக்கு உதவவில்லை என்பதை உணர்ந்து கொள்வோம். 
  • நம்மை நாமே மாற்றிக்கொள்ள தயாராகி விடுவோம். மற்றவர்கள் மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம்மிடம் இல்லையென்றால், நம்மை நாமே மாற்றிக்கொண்டுவிட்டால் மற்றவர்களுடன் நமக்கு இருக்கும் உறவுமுறை சீரடையத் தொடங்கிவிடும். உதவிகள் தானாகவே, கேட்காமலேயே வரும். 
  • மற்றவர்களுக்கும் நம்மைப் பற்றிய அபிப்பிராயங்கள் மாறத் தொடங்கிவிடும். 
  • நம்மை நாமே மதிக்கத் தொடங்கி விடுவோம். சுய மரியாதை உயரும். நமக்குள் ஒரு பெருமை தோன்றத் தொடங்கும். மகிழ்ச்சி உண்டாகும். 
  • மற்றவர்களைப் பற்றி மதிப்பீடு செய்வதை நிறுத்துவீர்கள். 
  • தன்னுறுதியில் நின்று செயல்படத் தொடங்குவீர்கள்

பாருங்கள் எவ்வளவு நன்மைகள் உண்டாகின்றன. இந்த நிமிடமே உங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கலாமே!

                                                                    தொடரும்…………………..

Thursday, September 18, 2014

Back to Tenkasi: A Progress Report: திரும்பிப் பார்க்கிறேன்.

தென்காசியைப் பற்றி என் வலைப்பதிவில் எழுதியதை பலர் விரும்பிப் படித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இந்தப் பதிவின் மூலமாக வெளி நாடுகளில் வசிக்கும் ஓரிருவரின் நட்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது. கிடைத்து வருகிறது.

ஆகஸ்டில் அமெரிக்காவிலிருந்து தென்காசி திரும்பியவுடன், இங்கு நான் கவனித்ததை எழுதியிருந்தேன். எனக்கு நானே புலம்பிக்கொள்வதற்குப் பதிலாக வலைப்பதிவில் கொட்டித் தீர்த்துவிட்டேன்.

தென்காசி பெரிய கோவிலைச் சுற்றியிருக்கும் ரதவீதிகளில் மூன்றில் மட்டும் சிமெண்ட் ரோடு ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பு போட்டார்கள். பல இடங்களில் சிமென்ட்டுக்கு பதிலாக கற்கள்தான் தெரிகின்றன. தெற்கு ரதவீதி இன்னும் குண்டும் குழியுமாக இருக்கிறது என்று எழுதினேன். தினமலர் செய்தித்தாளிலும் இதைப் பற்றி எழுதியிருந்தார்கள். என்ன ஆச்சரியம்!. இந்த வாரத்தில் மீதிப் பகுதிக்கும் மடமடவென்று தார் ரோடு போட்டுவிட்டார்கள். ஆஹா, வலையில் நாம் எழுதியதற்கு இப்படி ஒரு நல்ல பலனா என்று யோசித்தேன். பிறகு தான் தெரிந்தது. உள்ளாட்சித் இடைத் தேர்தல்கள் செப்டம்பர் பதினெட்டாம் தேதி நடைபெறப் போகிறது என்று, அதனால்தான் இவ்வளவு அவசரம் அவசரமாக ரோடு போட்டிருக்கிறார்கள். அதனால், அடிக்கடி ஏதேனும் தேர்தல்கள் நடப்பதும் ஒரு வகையில் நல்லதுதான்.. இல்லையென்றால் எப்படி இருக்குமோ தெரியாது.

இரண்டாவதாக, குற்றாலத்தில் அருவியில் குளிக்கப் போயிருந்தேன். தண்ணீர் மிதமாகவே இருந்தது. சுற்றியுள்ள இடமும் முன்னைவிட சுத்தமாகவே இருந்தது. ஒன்றிரண்டு பேர் மட்டும், இன்னமும் சோப்புத் தேய்த்துக் குளிக்கிறார்கள். அரசாங்கம், நீதி மன்றம் என்ன செய்தால் என்ன. மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி இல்லையென்றால், மக்கள் ஒழுங்காக இல்லையென்றால் என்ன செய்ய முடியும். கிராமப்புறத்து மக்களுக்கு நகர்புற, நவீன வசதிகளும் வேண்டியிருக்கிறது. ஊறிப்போன அவர்களுடைய பழைய மனப்பான்மையையும் மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை 

இதற்கு இன்னொரு உதாரணம். தென்காசியில் ஒரு டிராஃபிக் சிக்னல் அருகே நின்று பார்த்தால், கொசுப்படை போல சாரை சாரையாக இரண்டு சக்கர மோட்டார் வாகனங்கள். பயமுறுத்துகின்றன. யாரும் மிதி சைக்கிள் பயன்படுத்துவதில்லை. பல இடங்களுக்கு சீக்கிரம் போய் சேருவதற்கு வாகன வசதி தேவைதான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், இந்த வாகனங்களை ஓட்டுவதற்கு லைசன்சு கொடுப்பதற்கு முன்னால், விதி முறைகளைப் பற்றி சரியாகச் சொல்லிக்கொடுக்கிறார்களா என்று தெரியாது. விதி முறைகளைப் பின்பற்றுகிறார்களா என்பதை சரி பார்ப்பதும் கிடையாது என்பது கண்கூடாகத் தெரிகிறது. ஓரிரு இடங்களில் காவல்காரர் வெறும் பார்வையாளராகத்தான் நிற்கிறார். அவராலும் ஒன்றும் செய்யமுடியவில்லை. மக்கள் விதிமுறைகளை காற்றில் விட்டுவிடத் தீர்மானித்துவிட்டால், யார்தான் என்ன செய்யமுடியும். இருபது அடி நீளமுள்ள இரும்புக் கம்பிகளை, பி.வி.சி பைப்புகளை சர்வ சாதாரணமாக காவல்காரர் முன்னமேயே மோட்டர் சைக்கிளில் பின் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் எடுத்துச் செல்கிறார்கள். ஒரு சிறிய தவறு போதும், பெரிய விபத்து நடப்பதற்கு. மோட்டர் சைக்கிளை இஷ்டத்துக்கு எங்கு வேண்டுமானாலும் நிறுத்துவார்கள். நாம் எதுவும் கேட்டுவிடக்கூடாது.

“திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதினார். அது ஒழுக்கத்துக்கும், விதி முறைகளை பின்பற்றுவதற்கும், நேர்மையாக இருப்பதற்கும் கூட, பொருந்தும். ‘மக்களாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் எதையும் திருத்த முடியாது’ என்று பாடிக்கொள்ள வேண்டியதுதான்.

மூன்றாவதாக, பத்து பன்னிரண்டு வயதுள்ள பல சிறுவர்கள் கூட பல சிறிய ரோடுகளில் ஸ்கூட்டர், மோட்டர் பைக் ஓட்டுகிறர்கள். ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் சொல்லிக்கொடுக்க வேண்டிய பெற்றோர்களே இந்த விதி மீறலுக்கு உறு துணையாகவும் இருக்கிறார்கள் என்பது மிகவும் வருந்தத்தக்கது நமது சிறுவர்களும் இளைஞர்களும் கெட்டுப்போவதற்கு பெற்றோர்களே காரணமாக இருக்கலாமா?.


பல பெரிய நகரங்களில் வாழ்ந்துவிட்டு, பிடிக்காமல் தென்காசியைத் தேடி ஓடி வந்திருக்கும். ஒரு நண்பர் முன்பு என்னிடம் சொல்லியிருக்கிறார் “சார், இதையெல்லாம் மனசுல போட்டுக்காம, பொருட்படுத்தாம இருந்தாத்தான் நம்மால நிம்மதியா இருக்க முடியும்.” சரியான வார்த்தை. என்னுடைய ரத்த அழுத்தம் கொஞ்சம் அதிகமாகவே இருப்பதாக சென்ற வாரம் டாக்டரைப் பார்த்தபோது கூறினார். பல விஷயங்களை மனதில் போட்டுக்கொள்வதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

Saturday, September 13, 2014

நவராத்திரி சிறப்பு கர்னாடக சங்கீத இசை மேளா



இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்குவிக்கும்  நோக்கத்தோடு எங்கள் எல்.என்.சேரிடபிள் டிரஸ்ட், மேலகரம், தென்காசி பல நிகழ்ச்சிகளை, போட்டிகளை நடத்தி வருகிறது. வருகிற நவராத்திரியின் போது சிறப்பு நிகழ்ச்சியாக மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கர்னாடக சங்கீத நிகழ்ச்சி நடக்க இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதற்காக கடந்த ஒரு மாதமாக 15 குழந்தைகளுக்கு ஒரு இசை ஆசிரியரின் உதவியோடு பயிற்சி கொடுத்து வருகிறோம். எங்கள் முயற்சியால் சுமார் 30 மாணவர்கள் தென்காசியில் மிருதங்கம் பயின்று வருகிறார்கள். எங்களின் எல்லா முயற்சிகளிலும் சிறுவர், சிறுமியர்கள் மிக உற்சாகத்துடன் பங்கேற்று வருகின்றனர். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக எங்கள் மிருதங்க மாணவர்களே ஒரு சில பாட்டுகளுக்கு மிருதங்கம் வாசிக்கப் போகிறார்கள். குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், எங்கள் முயற்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

டீ.என்.நீலகண்டன்

Thursday, September 11, 2014

பெர்ஸனாலிடி வளர்ச்சி: பகுதி 7A: வெற்றிப் பாதைக்கு ஏழு விதமான பெர்ஸனாலிடிகள்

2. திடமான நோக்கமுடைய பெர்ஸனாலிடி

குறிக்கோள் மட்டும் இருந்தால் போதுமா? போதாது. அதை நிறைவேற்றும் உறுதியான, திடமான நோக்கமும் வேண்டும். குறுகிய காலத்திலேயே குறிக்கோளை காற்றில் விட்டுவிட்டால் எப்படி?

இந்தக் குறிக்கோளை அடைவதற்கு எனக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது. என்னால் அடையமுடியும் என்கிற தீவிர நம்பிக்கை வேண்டும்

முதலில் நமது குறிக்கோளை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நமது குறிக்கோளை கொட்டை எழுத்தில் எழுதிவைத்து தினமும் நம் கண் முன்னே படும்படியாக வைத்திருக்க வேண்டும். குறிக்கோளை அடைவதினால் ஏற்படப்போகும் நன்மைகளைப் பற்றியும், உங்களுக்கு  ஏற்படும் மனத் திருப்தியைப் பற்றியும், சந்தோஷத்தைப் பற்றியும், பெருமையைப் பற்றியும் மீண்டும் மீண்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். குறிக்கோள்கள் நிறைவேறிவிட்டதாகவே கற்பனை செய்து பார்க்க வேண்டும்.

“3-2-1” என்கிற பயிற்ச்சியை இதற்கு நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஆழ்ந்த நிலைக்குப் போய் உங்கள் குறிக்கோள்கள் நிறைவேறி விட்டதாகவே கற்பனை செய்து பார்த்து அதில் கிடைக்கும் நிம்மதியை, சந்தோஷத்தை அனுபவியுங்கள். இது மிகவும் முக்கியமான பயிற்சி. பலரின் கற்பனைகளில் உதித்ததுதான் ஆகாய விமானம், தொலைபேசி, ராக்கெட், இன்டெர்னெட்…எல்லாமே.
·    
  •        உங்கள் குறிக்கோளின் மீது உங்களுடைய தீராத காதல், 
  •    அதை அடைய உங்களுக்கு தகுதி இருக்கிறது, உங்களால் முடியும் என்ற நம்பிக்கை, 
  •       அது நடந்து முடிந்துவிடும் என்ற உங்களது எதிர்பார்ப்பு

இந்த மூன்றும்தான் உங்கள் வெற்றிக்கு அடிகோல். இந்த மூன்றும்தான் உங்களுக்கு சுய நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும், சுய மரியாதையையும் உண்டாக்குகிறது.

“ஒரு மனிதனுக்கும் வாழ்க்கையில் அவன் அடைய விருப்பப்படும் பொருளுக்கும் நடுவே நிற்பது என்னவென்றால் முயற்சி செய்வதற்கான அவனுடை மனத்திண்மையும் விருப்பப்பட்டதை அடைவோம் என்கிற தீவிர விசுவாசமும்தான்.” என்று வெற்றிகண்ட ரிச்சர்ட் எம் தேவோஸ் என்ற அமெரிக்க தொழிலதிபர் கூறியிருக்கிறார்.

அடுத்த படி, உங்கள் குறிக்கோளை அடைவதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்று திட்டமிடுவது. இதை பெரியவர்களிடமும், பெற்றோர்களிடமும், அந்தந்த துறையில் சிறந்து விளங்குபவர்களிடமும், ஆசிரியர்களிடமும், உற்ற நண்பர்களிடமும் கலந்தாலோசித்தும் தீர்மானிக்கலாம்.

அடுத்ததாக, திண்ணத்தில் வழுவாமல் உறுதியான நடவடிக்கை எடுக்கத் தீர்மானிப்பது. தினமும் அதிகாலை நேரத்தில் எழுந்தவுடன் இந்த உறுதியை 3-2-1 பயிற்சி செய்து ஆழ்நிலையிலிருந்து எடுப்பது நல்ல பயனைத் தரும்.

அடுத்ததாக வருவது, திட்டத்தை செயல்படுத்துவது. திட்டமிட்டபடி செயலாற்றுவது.  நடவடிக்கைகள் எடுப்பது. செயல்களில்லாமல் பலன்களில்லை. இது கலி காலம். ஒவ்வொரு செயலுக்கும் கண்டிப்பாக பலன் உண்டு. அதை அனுபவித்தேயாக வேண்டும்.
செயல்கள் எப்படி இருக்கவேண்டும்?
  •          ஆக்க பூர்வமாகவும்,
  •         தொடர்ச்சியாகவும்,
  •         விடா முயற்சியுடன் கூடியதாகவும்,
  •         கொள்கை மாறாததாகவும் இருக்க வேண்டும்.

எதிர்பாராத தடங்கல்கள், சவால்கள் வரலாம். திட்டத்தை திருத்திக்கொள்ள, மாற்றிக்கொள்ள நேரிடலாம். பின்னடைவுகள் நேரிடலாம். இடையூறுகளைக் கண்டு மனம் தளரலாம். இதையெல்லாம் மீறி நமது செயல்களை, முயற்சிகளைத் தொடர வேண்டும். முடிவின் மீது நம்பிக்கை வைத்தால் எதுவுமே தடங்கலாகத் தெரியாது. இதற்கும் 3-2-1 பயிற்சியைச் செய்யலாம்.

உங்கள் கனவு நனவாகும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து கனவு காணுங்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நீங்கள் நினைத்தது நடந்து முடித்துவிட்டதாகவே கனவு காணுங்கள். நிச்சயம் வெற்றி உண்டாகும்.
இதில் ஒரு முக்கியமான விஷயம் உண்டு.

எவ்வளவுதான் நமது விருப்பங்களின் மீது தீவிரப் பற்றுதலுடன், நாம் விடாமுயற்சி செய்தாலும் நம் கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி எல்லாவற்றையும் ஏதோ ஒரு நியதிப்படி நடத்திக் கொண்டிருக்கிறது. என்பதையும், அந்த சக்தியை மீறி எதுவும் நடக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். அந்த அருள் நமக்கு கண்டிப்பாக வேண்டும். 
அந்த அருள் இல்லாமல் வெற்றியில்லை.

அந்த அருளை எளிதாகப் பெறுவது எப்படி?

அதற்கு, முக்கியமான வழி உங்கள் பெற்றோர்களின் ஆசிகளைப் பெறுவதுதான்.. பெற்றோர்களிடம் உங்களுக்கு கோபமோ, வருத்தமோ, காயமோ, குற்ற உணர்ச்சியோ இருக்கக்கூடாது. அதேபோல உங்கள் பெற்றோருக்கும் உங்கள் மேல் எந்தக் கோபமோ, வருத்தமோ, காயமோ குற்ற உணர்ச்சியோ இருக்கக்கூடாது. இது மிகவும் முக்கியமானது. எதாக இருந்தாலும் உங்கள் பெற்றோரை மன்னித்துவிட வேண்டும். அதே போல, யாருடைய தவறாக இருந்தாலும் உங்கள் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுவிடவேண்டும். அவர்கள் மனம் புண்படக்கூடாது. அவர்கள் ஆசியுடனேயே நீங்கள் எதையும் செய்ய வேண்டும். அவர்களை மீறி செய்யக்கூடாது. அவர்கள் தான் நமக்கு இந்த வாழ்வை கொடுத்தவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

3-2-1 பயிற்சியில் உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ள சில மாதிரி வாசகங்கள்:

“ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் (என்னுடை நிலைமை முன்னேறிக் கொண்டிருக்கிறது) அல்லது (என் வாழ்க்கையில், என் முயற்சியில் முன்னேறிக்கொண்டிருக்கிறேன்).”

“என்னால் செய்ய முடியாதது என்று எதுவுமில்லை. இன்னொருவரால் செய்ய முடியும் என்றால், அந்தக் காரியத்தை என்னாலும் செய்யமுடியும்.”

“என் விருப்பங்களுக்கு நான் தகுதியானவன். என் விருப்பங்கள் கண்டிப்பாக நிறைவேறும். அதற்காக நான் விடா முயற்சியுடன் உழைக்கவும், என் தகுதிகளையும், திறமைகளையும், ஆற்றல்களையும், அறிவையும், வளர்த்துக்கொள்ள எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளவும் தயாராக இருக்கிறேன். என் முயற்சிகள் நல்ல பலனைத் தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”

“எனக்கு என்னுடைய குறிக்கோள் மிக முக்கியமானது. அதை அடைய எந்த தியாகத்தையும் நான் செய்யத் தயாராக இருக்கிறேன்.”

“மற்றவர்களின் எதிர்மறைக் கருத்துக்கள் என்னை பாதிப்பதில்லை. என் குறிக்கோளில் நான் உறுதியாக நிற்கிறேன்.”

‘தடைகளை தடங்கல்களாக எடுத்துக்கொள்ளாமல், சவாலாக ஏற்று அந்த தடைகளை நீக்குவதற்கான வழி முறைகளை எப்பொழுதும் தேடிக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.”

“எனக்கு ………… ….…… பற்றிய பயம் இருந்தது. ஆனால், பயம் என்பது நிஜம் அல்ல. உண்மை எனக்கு விளங்கிக்கொண்டிருக்கிறது. அதனால், அந்த பயம் என்னை விட்டு விலகிப் போய்க்கொண்டிருக்கிறது.”

எல்லா வாசகங்களும் நிகழ்காலத்தில் இருப்பது அவசியம். (எதிர்காலம் என்பது நமது கற்பனையில்தான் இருக்கிறது. நிகழ்காலம் என்பது மட்டும்தான் நிஜம்.)

இந்தப் பயிற்சியை நான் நடத்தும் பெர்ஸனாலிடி வகுப்புகளில் மாணாக்கர்களுக்கு நடத்திக் காட்டியிருக்கிறேன். நல்ல பலனைத் தந்திருப்பதாக பலர் என்னிடம் கூறியிருக்கிறார்கள். நீங்களும்தான் முயற்சி செய்து பாருங்களேன்………………….

(என்னடா, “3-2-1” என்ற யுக்தியைப் பற்றி அடிக்கடி என் கட்டுரையில் எழுதுகிறேனே என்று நீனைக்கிறீர்களா?. அதற்குக் காரணம் இருக்கிறது. அடுத்த பகுதியில் பார்க்கலாம்.)

                                                                                                                                       தொடரும்………….

Sunday, August 31, 2014

BACK TO TENKASI: மீண்டும் தென்காசியில்

குழந்தைகளை  நிறைய படிக்கவைக்க வேண்டும், வேலைக்கு அமெரிக்காவுக்கு அனுப்பவேண்டும் என்று கனவு கண்ட பல பெற்றோர்களில் நாங்களும் ஒருவர். தற்பொழுது கடந்த பதினான்கு ஆண்டுகளாக இரண்டு குழந்தைகளுமே அமெரிக்காவில். நாங்கள் இங்கொரு காலும் அங்கொரு காலுமாக ஓட்டிக்கொண்டிருக்கிறோம். ஆகாயவிமானங்கள் லாபகராமாக ஓடுவதற்கு ஆண்டுதோறும் அமெரிக்கா செல்ல டிக்கெட் வாங்கி எங்களாலான உதவியை செய்து வருகிறோம். அங்கே இருக்கும்பொழுது இந்தியா, தென்காசி நினைப்புதான். எப்படா தென்காசி திரும்பப்போகிறோம் என்று துடிப்பு, நமக்காகக் இங்கே ஏதோ காத்துக்கொண்டிருப்பதுபோல.

இந்த ஆண்டும் மார்ச் மாதம் இத்தாலியில் ஒரு பத்து நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா சென்ற நாங்கள், இருபத்தி நாலு மணி நேரமும் ஒரே மாதிரி 74 டிகிரி ஃபாரன்ஹீட் சூட்டில் இருந்துவிட்டு 23-ஆம் தேதி, சனிக்கிழமை சென்னையில் இறங்கியவுடன் முதலில் தேடியது எங்களுடைய கைக்குட்டையைத்தான், முகத்திலும் கழுத்திலுமுள்ள வேர்வையையும் அழுக்கையும் துடைப்பதற்கு. அன்று மாலையே சென்னையைவிட்டு தென்காசிக்கு ஓடி வந்துவிட்டோம். சென்னை பிடிக்காமல்தான் சென்னையிலுள்ள தனி வீட்டை வாடகைக்குக் கொடுத்துவிட்டு, தென்காசியில் ஒரு வாடகை வீட்டை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பிடித்தோம்.

தென்காசி எவ்வளவோ மாறியிருக்கிறது. இல்லை வளர்ந்திருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவார்கள்.  இங்கு வந்த பின் ஒரு வார இடைவேளையில்  நாங்கள் பார்த்ததில் என்னென்ன மாறியிருக்கிறது என்று யோசித்தேன்      

  • வந்திறங்கிய மூன்று நான்கு நாட்களுக்கு வெயில் மதிய நேரத்தில் கொளுத்தியெடுத்தது. குற்றாலத்தில் சீசன் ஏறக்குறைய முடிந்துவிட்டதாகச் சொன்னார்கள். எங்கு பார்த்தாலும் வாகனங்கள். தென்காசி-குற்றால நெடுஞ்சாலையில் நடக்க முடியவில்லை. பல வாகனங்கள் இந்தச் சாலையை சோழவரம் ரேஸ் கோர்ஸாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு சக்கர மோட்டார் வாகனங்களுக்கு எந்த அடிப்படை விதிமுறைகளும் கிடையாது. வண்டியின் வேகம் குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். எதிரே வரும் வண்டிக்காரர்தான் பார்த்துப் போய்க்கொள்ள வேண்டும். நடைபாதையைக்கூட (அப்படி ஒன்று இருந்தால்) விட்டு வைப்பதில்லை.
  • தென்காசி பெரிய கோவிலைச் சுற்றி நான்கு ரத வீதிகளிலும் ஒரே வாகனங்கள் மயம். நடப்பதற்கும் நிற்பதற்கும் இடமில்லை. மூன்று ரத வீதிகளில் ஒரு ஆண்டுக்கு முன்னேதான் சிமெண்ட் ரோடு போட்டார்கள். இப்பொழுது பல இடங்களில் குழிகள். எப்படி என்று தெரியவில்லை. இருக்கக்கூடிய சின்னச்சின்ன இடங்களில் பல புதிய ஷோரூம்கள். எல்லாம் துணிக்கடைகள், டி.வி, நகைக் கடைகள். பணப்புழக்கத்திற்கு குறைவில்லை போலும். யானைப் பாலம் சந்திப்பில் சந்திரனில் உள்ள குழிகள் போல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான குழிகளை பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள். எது எதெற்கெல்லாமோஆண்டு விழா கொண்டாடுகிறார்கள். இந்தக் குழிகளுக்கும் கொண்டாடலாமே? இதைப் பாதுகாத்த அதிகாரிகளுக்கும், நகர சபை வார்டு கௌன்சிலர்களுக்கும், தலைவருக்கும், தற்போதைய சட்டசபை உறுப்பினருக்கும் விழா எடுத்து கௌரவிக்கலாமே? இவ்வளவுக்கும், எதிரிலேயே பழைய சட்டசபை உறுப்பினர் நிதியில் கட்டிய ஒரு பொதுக் கட்டிடம் வேறு. மூன்று ரதவீதிகளுக்கு சிமெண்டு ரோடு அமைத்த நகரசபைக்கு, தெற்கு மாசி மீது என்ன கோபமோ தெரியவில்லை. அதை மட்டும் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்கள். தென்காசி மக்களுடைய பொறுமைக்கும் ஒரு விழா எடுக்கலாம்.
  • ரயில்வே மேம்பாலம் ஒரு அசுர மலைப்பாம்பு போல பயமுறுத்துகிறது. பாலத்தில் ஏறும், இறங்கும் இடங்களில், இரண்டு சக்கிர வாகனங்களை எந்தப் பக்கம் வேண்டுமானாலும் ஓட்டிக்கொண்டு போகலாம். யாரும் கேள்வி கேட்க முடியாது. ரயில் நிலையத்திலிருந்து மேம்பாலம் முடியும் பெட்ரோல் பங்க் பக்கம் காரை ஓட்டிக்கொண்டு வந்தால், ஓட்டுபவருக்கு குறைந்தது நான்கு கண்கள் வேண்டும். எந்தப் பக்கத்திலிருந்து மோட்டர் சைக்கிள் வருமென்று சொல்ல முடியாது. மேம்பாலத்தில் போட்ட விளக்குகள் வேலை செய்யவில்லை என்று தினமலர் பேப்பரில் போட்டிருந்தார்கள். ஒரு ஆண்டுகூட நிறைந்திருக்காது என்று நினைக்கிறேன். ரயில் நிலையத்துக்கு சென்றடையும் பாலத்துக்கு மிக அருகே பாதையை, ஒரு புராதனச் சின்னமாக அறிவிக்கலாம். நம்மை ஒரு நூறு ஆண்டுகளுக்கு பின்நோக்கி எடுத்துச் செல்லும். அவ்வளவு குழிகள். ரயில் நிலையமோ புத்தம் புதியதாக மிக அருமையாக இருக்கிறது. இந்தப் பாதை மட்டும் என்ன பாவம் செய்தது என்று தெரியவில்லை.
  • புராதனச் சின்னங்களாகச் சேர்க்க தகுதி பெற்ற இன்னொரு பாதை மின்னகரிலிருந்து இலஞ்சி குமாரர் கோவில் செல்கிறது. ஒரு பாதை புதியதாகப் போட்டால் ஒரு வருடம் கூடத் தாக்குப்பிடிக்கக்கூடியதாக இல்லாமல் எப்படி செய்வது என்பதை நமது காண்டிராக்டர்களையும், இந்த வேலையை மேற்பார்வையிட்ட அதிகாரிகளிடமும்தான் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். முனைவர் பட்டத்துக்கு ஒரு ஆய்வுத் தலைப்பாகக்கூட இந்த விஷயத்தை எடுத்துக்கொள்ளலாம். இப்படி இன்னும் சில பாதைகள் ஒரு வருடத்துக்குள்ளேயே காலி. பழி மழை மேலே.
  • சென்னையில் ஆட்டோக்காரர்கள் எல்லாம் திருந்தி வருவதாகச் செய்தி. மீட்டர் போட்டுதான் ஓட்டுகிறார்கள் என்றும் கேள்வி. அவர்கள் விட்ட பழக்கம் இப்பொழுது தென்காசி போன்ற சின்ன நகரங்களுக்குப் பரவிவிட்டது போல. சென்னையிலிருந்து திரும்பி தென்காசியில் பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு ஆட்டோக்காரர் வாய் கூசாமல் எழுபது எண்பது ரூபாய் கேட்டார். ஓட்டுபவருக்கு ஒரு அலட்சியம் வேறு. மரியாதையில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.
  • ஆட்டோவெல்லாம் கட்டுப்படியாகாது என்பதனாலோ என்னவோ, மோட்டர் சைக்கிளையே ஒரு டெம்போ வண்டி போல பயன்படுத்த மக்கள் பழகிக்கொண்டுவிட்டார்கள் என்று நினைக்கிறேன். பெரிய பெரிய  நீளமான இரும்புக் கம்பிகள், குழாய்கள் எல்லாமே மோட்டார் சைக்கிளில் பின் பக்கமாக உட்கார்ந்திருப்பவர்கள் வெகு லாவகமாக தோளில் சுமந்துகொண்டு செல்கிறார்கள்.
  • தென்காசி-குற்றாலம் சாலையில் இன்னமும் மாடுகளை அதன் இஷ்டம் போல மேய்ப்பதற்கு கூட்டிக்கொண்டு போகிறார்கள். மேய்ப்பவர் பின்னால் எங்கேயோ வந்துகொண்டிருப்பார். வாகனங்கள் ஓட்டுபவர்கள் எப்படியோ இந்த மாடுகள் மீது மோதிவிடாமல் ஓட்டிச்சென்று விடுகிறார்கள். நமது ஓட்டுனர்களுக்கும் ஒரு பாராட்டு விழா எடுக்கலாம்.
  • தென்காசியில் நாங்கள் வசிக்கும் பகுதி வெறிச்சோடிக் கிடக்கிறது. பல இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்னை, பங்களூரு என்று போய்விட்டார்கள். சிலர் மேற்படிப்பிற்காக வேறு ஊர்களுக்குப் போய்விட்டார்கள். நாங்கள் வந்த புதிதில் (2006-07) இந்தத் தெரு எப்பொழுதும் கலகலவென்றிருக்கும். பல சிறுவர்களும், சிறுமிகளும் மாலையில் தெருவில் விளையாடிக்கொண்டிருப்பார்கள். நாங்கள் இங்கு வந்ததிலிருந்து இந்த இளைஞர்கள்தான் எங்களுக்கு நண்பர்களாகவும் பக்கபலமாகவும் இருந்தார்கள். இப்பொழுது ஒரு கையொடிந்தது போலத் தோன்றுகிறது. மற்ற சிறுவர்கள் இருக்குமிடம் தெரியவில்லை. வினாயகர் சதுர்த்திக்கு எல்லோரும் வந்திருக்கிறார்கள். அவர்களை மீண்டும் பார்த்துப் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே சமயம், அவர்களும். அவரவர்கள் வாழ்க்கையில் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் மனதுக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது.
  • இன்னுமொரு CBSE  பள்ளி திறந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். மகிழ்ச்சி. கல்விக்கு மிகப் பெரிய முக்கியமான ஒரு நகரமாக தென்காசியும் அதன் சுற்று வட்டாரமும் வளர்ந்து வருவது ஒரு நல்ல சேதிதான். அறிவையும் திறமைகளையும் வளர்க்கச் சொல்லிக்கொடுக்கும் அதே நேரத்தில் குழந்தைகளுடைய மனப்பான்மையையும் சரியாக வளர்க்க இந்தப் பள்ளிகள் உதவி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
  • வடை சுடும் கடைகள் அமோகமாக விற்பனை செய்து வருகின்றன. வினாயகா மெஸ்ஸில் எல்லா உணவுக்கும் விலையை தாராளமாகக் கூட்டி விட்டார்கள். என்ன செய்வது? ஆறு மாதம் கழித்து  நான் சாப்பாட்டுக்கு பச்சரிசி வாங்கப் போனால், நல்ல அரிசி கிலோவுக்கு ஐம்பத்தேழு ரூபாய் விலை சொல்கிறார் கடைக்காரர். ஒரு பெரிய நோட்டு எடுத்துக்கொண்டு போனால் ஒரு சிறிய பையில் காய்கறி வாங்கிக்கொண்டு வர முடிகிறது. அதுவும் இரண்டு நாட்களுக்குத்தான் வருகிறது.
  • இரண்டு மூன்று அரசு அலுவலகங்களுக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரசு அதிகாரிகள் உதவும் தன்மையோடு நன்றாகவே நடந்துகொண்டார்கள்.
  • ஒரு பொது நல வழக்கில் உயர்நீதி மன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்புக்குப் பிறகு, குற்றால அருவிகள் சுற்றியுள்ள பகுதிகள் முன்னைவிட சுத்தமாக இருப்பதாகப் பேச்சு. இன்னும் போய் பார்க்க முடியவில்லை.
  • தென்காசி வளர்ந்து வரும் வியாபரத்தலமாகவும் கல்வி மையமாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. விரைவில் ஒரு மாவட்டத் தலைமையகமாக மாறக்கூடும் என்று பேச்சு. விளை நிலங்கள் எல்லாம் கட்டிடங்களுக்காக விற்பனயாகிக் கொண்டிருக்கின்றன. ஆண்டு முழுவதும் வீசிக்கொண்டிருந்த காற்றைக் காணோம். (கடந்த இரண்டு நாட்களாக மழை. அதனால் குளுகுளுவென்றிருக்கிறது) பல பசுமையான இடங்களையும் காணோம்.  

எப்படியிருந்தாலும்,………………………..


தென்காசி தென்காசிதான். குற்றாலம் குற்றாலம்தான், செங்கோட்டை செங்கோட்டைதான். தென்காசியே உன்னை நான் நேசிக்கிறேன். ஆராதிக்கிறேன். மீண்டும் இங்கு திரும்பி வந்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சிதான். அவலங்களும் வாழ்க்கையில் ஒரு பகுதிதான் என்பதை ஏற்றுக்கொண்டு உன் அழகை மட்டும் பார்த்து வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக்கொண்டு வருகிறேன். எங்களுக்கு ஒரு இடம் கொடுத்ததற்கு நன்றி.