Total Pageviews

Friday, March 10, 2017

06.03.17 உறவுகளைப் பற்றி – நாம் விளையாடும் 6 விளையாட்டுக்கள்

06.03.17 உறவுகளைப் பற்றி – நாம் விளையாடும் 6 விளையாட்டுக்கள்

நமது உறவுகள் சீராக இல்லாமல் இருப்பதற்கு முக்கியமான ஒரு காரணம் நமது அஹங்காரமே என்று முன்னால் எழுதியிருந்தேன். அந்த ‘தான்’ என்ற நினைப்புதான் நம்மை மற்றவர்களுடன் பல நேரங்களில் ஒத்துப் போக விட மாட்டேன் என்கிறது. எவரையுமே, எந்தப் பொருளையுமே, எந்தச் சூழ்னிலையையுமே ‘தான்’ என்ற நிலையிலிருந்துதான் சீர் தூக்கிப் பார்க்கிறோம். அதனால், மற்றவர்களின் நிலையை நம்மால் முழுவதுமாக புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் நிலையிலிருந்து அவர்களை புரிந்து கொள்ள மறுக்கிறோம்.

எப்படியோ, நாம் எல்லோரும் (பொதுவாகச் சொல்லப் போனால்) 6 விதமான விளையாட்டுக்களை விளையாடுகிறோம்.
            1.     “நான் சரியாகத்தான் இருக்கிறேன்” (I am okay)
            2.     “நீதான் சரியில்லை” (You are not okay)
           3.     மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்துகிறோம் அல்லது மற்றவர்கள் நம் மீது ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்கிறோம் (We dominate or remain dominated)
           4.     நம்மைப் பற்றி நாமே (தகுதிக்கு மீறி) பறைசாற்றிக் கொள்கிறோம். (We project our image)
     5.     நம்மை, (நம்முடைய எண்ணங்களை, சொற்களை, செயல்களை) தற்காத்துக் கொள்கிறோம். தாங்கிக் கொள்கிறோம். (We defend)
        6.     உண்மையான நம்மை வெளியே தெரிந்து விடாமல் இருக்க முகமூடி போட்டுக்கொள்கிறோம். அதாவது நடிக்கிறோம். (We masquerade)

     (இதை ஸ்ரீஅம்மா பகவானுடன் இருந்த நாட்களில் கற்றுக் கொண்டதுதான்.)

இந்த ஆறு விளையாட்டுக்களையும் நாம் ஏதோ கணக்குப் பண்ணி விளையாடுவதில்லை. தானாகவே, நம்மை அறியாமலேயே நடக்கிறது.

எல்லாமே ‘தான்’ என்ற நினைப்பிலிருந்து உருவானதுதான். பிறந்த குழந்தைக்கு ‘தான்’ என்ற அறிவோ உணர்வோ கிடையாது. சுமார் 1 வயது வரும் பொழுதுதான் அந்த உணர்வு தொடங்குகிறது. வயது ஏற ஏற சுமார் 18 வயது வரை இந்த ‘தான்’ என்ற உணர்வு வளர்ந்து கொண்டே இருக்கிறது. சிறு பிராயத்தில் இந்த ‘தான்’ என்ற உணர்வு இல்லாததால்தான் எவ்வளவு திட்டினாலும், சண்டை பிடித்தாலும், அடித்தாலும் சிறு குழந்தைகள் மீண்டும் மீண்டும் அம்மா, அப்பா, மற்ற பெரியோர்களை நாடுகின்றனர். சற்று நேரத்துக்கு முன்பு அழுதது கூட மறந்து விடும். எவ்வித களங்கமோ, பகையோ, கோபமோ இருக்காது. பழையதை மறந்து வழக்கம் போல சகஜமாக நம்முடன் பழகும். அதே சிறுவன்/சிறுமி சற்று வளர்ந்த பிறகு – 10 – 12 வயது என்று வைத்துக்கொள்ளுங்களேன் – கொஞ்சம் சத்தம் போட்டாலே அதற்கு சுருக்கென்று இருக்கும். எதிர்க்கும். கோபம்   நீடிக்கும். ஏனென்றால், அதன் ‘தான்’ காயப்படுகிறது தெரிந்திருக்கிறது. இன்னும் வளர்ந்து – 15 -18 வயதாகி விட்டால் போதும் – நம்மை எதிர்த்தே பேசும், நம்முடன் சண்டைக்கு வரும். இப்பொழுது அந்த சிறுவன் சிறுமிக்கு தன்னைக் காயப்படுத்தி விட்டனர் என்ற முழு உணர்வு இருக்கும். பெற்றோரைப் பிடிக்காது. நண்பர்களைப் பிடிக்காது. விரோதமாகச் செயல்படுத்தத் தூண்டும். இப்படி பல விதமாக நடந்து கொள்ளும்.

ஒரு சிறிய கற்பனை உரையாடல் மூலம் இந்த 6 விளையாட்டுக்களைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்:

இரண்டு  நண்பர்கள். ராம் – ஷ்யாம். பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாகப் படித்தவர்கள். ஷ்யாமுக்குத் தெரிவிக்காமல் ராம் ஒரு வேலைக்கு விண்ணப்பம் போட்டு அவனுக்கு வேலையும் கிடைத்து விடுகிறது. அந்தத் தகவலை கொஞ்சம் தாமதமாகவே ஷ்யாமுக்குத் தெரிவிக்கிறான்.
ராம் – “ஷ்யாம், எனக்கு ஓ.என்.ஜி.சி-யிலே இன்ஜினியர் வேலை கிடைச்சுருக்கு.”
ஷ்யாம் – “அப்படியா, நீ அப்ளை பண்றதா சொல்லவேயில்லையே. இவ்வளவு நெருங்கிய நண்பனாயிருந்து என்னடா இப்படி பண்ணிட்ட?”
ராம் – “சொல்லியிருக்கலாம்தான். ஆனால், உனக்குத்தான் வெளியூரிலே போய் வேலை பார்க்கறதுக்குப் பிடிக்கலைன்னு சொல்லியிருக்கியே.”
ஷ்யாம் – “ நீ முன்னமேயே சொல்லியிருந்தா கண்டிப்பாக நானும் அப்ளை பண்ணியிருப்பேன்.  நீ இப்படிப் பண்ணுவேன்னு எதிர்பார்க்க வில்லை.”
ராம் – “சொல்லியிருந்தா நீயே என்னை அப்ளை பண்ண விடாம தடுத்திருப்பாய். உன்னை மீறி என்னால எதுவும் செஞ்சிருக்க முடியாது. இந்த வேலையும் எனக்குக் கிடைச்சிருக்காது.”
ஷ்யாம் –“என்னடா, இப்படிச் சொல்லிட்டே. நான் உன்னோடு ஒரு நல்ல நண்பனாகத்தான் இருந்திருக்கேன். நீதான் என்னை இப்படி காலை வாரி விட்டு விட்டாய்.”
ராம் – “இல்லை. இந்த வேலைக்குச் சேர ஒரு பரிட்சை எழுதணும். அதுலே maths-ம் statistics-ம் தரௌவா தெரிஞ்சிருக்கணும். உனக்குதான் statistics பிடிக்காதே?”
ஷ்யாம் – “ஆதனாலென்ன, நான் முயற்சியாவது பண்ணியிருப்பேனே. நீ உதவி செய்திருக்க மாட்டாயா?”
ராம் – “எப்படிடா முடியும். நானே அதற்காக ஸ்பெஷல் கோச்சிங்க்கு போக வேண்டியிருந்தது.”
ஷ்யாம் – “ஓஹோ, கோச்சிங் வேறயா…அதுவும் எனக்குச் சொல்லவேயில்லை. துரோகி டா நீ?”
ராம் – “எவ்வளவு கஷ்டமான பரீட்சை தெரியுமா. நீ எழுதியிருந்தா பாஸ் பண்றதே ரொம்பக் கஷ்டமாக இருந்திருக்கும், தெரிஞ்சுக்கோ.”
            ஷ்யாம் – “ஓ, என்னுடைய குறையை சுட்டிக் காட்டுகிறாயா?”
            ராம் – “அப்படியில்லை. நான் உண்மையான நிலையைத்தான் சொன்னேன்…நீ ஒண்ணும் கவலைப் படாதே. உனக்கும் நல்ல வேலை கிடைக்கும். நான் உனக்காக ப்ரார்த்திக்கிறேன்.” ( நண்பனை சமாதானப் படுத்த வேண்டிய நிலை)
ஷ்யாம் – (உள்ளுக்குள் மிக வருத்தப் பட்டாலும்) “சரி, சரி… நான் maths-ல் ரொம்ப ஸ்ட்ராங் – போன வாரம்தான் ஒரு கல்லூரியில் என்னை விரிவுரையாளராகச் சேர்த்துக்க தீர்மானிச்சிருக்காங்க. உள்ளூரிலேயே வேலை. நிறைய டியூஷன். கை நிறைய காசு. உனக்குத்தான் தெரியுமே. கணக்கு சொல்லிக்கொடுப்பதற்கு இங்கே சரியான ஆளேயில்லையே…எங்கப்பா எனக்கு கல்யாணத்துக்குப் பெண் கூட பார்த்து வருகிறார். நல்ல பெரிய இடம்…சரி, இதையெல்லாம் உனக்குச் சொல்லி உன் மனசைக் கெடுப்பானேன்…வேலைக்குச் சேரும் போதாவது எங்கிட்ட சொல்லிவிட்டுப் போவாயா?”
ராம் – (மனதுக்குள்) (இவனும்தான் எங்கிட்ட ஓப்பனா சொல்லவேயில்லையே…கல்லுளி மங்கான்) “கண்டிப்பாகடா. சொல்லாம போவேனா!”

கற்பனை உரையாடலாக இருந்தாலும் இரண்டு நண்பர்கள் கூட தங்கள் தங்கள் நிலையிலிருந்து தங்களை, தங்களின் செயல்களை தற்காத்துக் கொள்கிறார்கள், வேஷம் போடுகிறார்கள், மற்றவரை குறை சொல்கிறார்கள், தங்களையே உயர்த்திப் பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் கவனிக்கலாம்.

கானடாவைச் சேர்ந்த எரிக் பெர்னே என்பவர் மனோதத்துவ முறையில் இதை அணுகி GAMES PEOPLE PLAY என்ற புத்தகத்தில் மிக அருமையாக அலசியிருக்கிறார். இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் பழகும் பொழுது மூன்று விதமான நிலைகளிலிருந்து செயல்படுவதாக அவர் சொல்கிறார். முதலாவது ‘பெற்றோர்’ என்ற ஆதிக்கம் பண்ணும் நிலை. இரண்டாவது ‘முதிர்ந்தவர்’ என்ற ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் நிலை. மூன்றாவது ‘குழந்தை’ என்ற மற்றவரை சார்ந்து நிற்கும், ஏங்கும் நிலை.

இதையும் ஒரு கற்பனை உரையாடலின் மூலமாக புரிந்து கொள்ளலாம்:

மனைவி – “என்னங்க...எப்பப் பார்த்தாலும் மொபைல் ஃபோனில் ஏதோ வெட்டியா பார்த்துக்கிட்டே இருக்கீங்க…எனக்கு சுத்தமா பிடிக்கலை…நீங்க பார்க்காத போது அந்த ஃபோனையே தூக்கி விட்டெறிஞ்சிடலாம் போல வருகிறது. (பெற்றோர் – குழந்தை நிலை)
கணவன் – “என்னை என்ன வெட்டியா எல்லாம் செஞ்சுகிட்டிருக்கேன்னு சொல்லிறியா…” (பெற்றோர் நிலை)
மனைவி – “நான் அப்படியா சொன்னேன்…எனக்காக கொஞ்ச நேரம் செலவிடச் சொன்னா…அதுக்காக இப்படிக் கோபப்படுறீங்களே…” (குழந்தை நிலை)
கணவன் – “அதுக்காக, உன் வாய்க்கு வந்த படி பேச முடியுமா?” (பெற்றோர் நிலை)
மனைவி – “அப்படி நான் என்ன சொல்லிவிட்டேன்…சரி, கொஞ்ச   நாட்களுக்கு நான் உங்க கூட பேசவேயில்லை, சரிதானே…உங்க இஷ்டம் போலச் செய்யுங்க…” (குழந்தை நிலை)
கணவன் – “அப்படி இல்லைம்மா… எனக்கு ஆபீசுலே நிறைய ப்ரஷர்…ஏதோ கொஞ்ச நேரம் வாட்ஸாப்பிலே ஃப்ரெண்ட்ஸ் கூட சேட் பண்ண ஒரு ரிலீஃபா இருகேன்னுதான்…அதுக்காக…என் கூட பேச மாட்டேன்…அப்படியெல்லாம் சொல்லாதேடா…” (குழந்தை – முதிர்ந்தவர்)
மனைவி – “நீங்க உங்க ஃப்ரெண்ட்சோட தாராளமா பேசிக்கோங்க…நான் ஒண்ணும் தடை சொல்லலை…ரொம்ப நேரம் அந்த ஃபோனையே பார்த்துக்கிட்டு இருந்தா கண்ணுக்கும் நல்லதில்லையே…அந்தக் கவலைதான் எனக்கு…” (முதிர்ந்தவர் – குழந்தை – பெற்றோர்)


அதாவது பல நேரங்களில் ஒருவருக்கொருவருடன் நமக்கிருக்கும் உறவை பெற்றோர் என்ற ஆதிக்கம் செலுத்தும் நிலையிலிருந்தோ அல்லது மற்றவர்களை நாடியிருக்கும் ஒரு குழந்தையில் நிலையிலிருந்தோ செலுத்துகிறோம். (மனதளவில்) முதிர்ச்சியடைந்த ஒருவரின் நிலையிலிருந்து அணுகும் பொழுது மட்டுமே உறவுகள் பலப்படுத்தப் படுகின்றன. புரிதலும் ஏற்படுகின்றன. ஆனால், இந்த மூன்று நிலைகளிலிருந்தும் தான் பொதுவாக நம் உறவுகளை அணுகுகிறோம். அதனால் நமது உறவு முறைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. 

Sunday, March 05, 2017

05.03.17 நான் பிடித்த புகையும் என்னைப் பிடித்துக்கொண்ட புகையும்

05.03.17 நான் பிடித்த புகையும் என்னைப் பிடித்துக்கொண்ட புகையும்

உயர் நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம். எட்டாவதோ ஒன்பதாவதோ வகுப்பு. ஞாபகமில்லை. தெருவில் என்னுடன் படித்துக் கொண்டிருந்த நெருங்கிய வகுப்பு நண்பன். என்னோடு எப்பொழுதும் ஒட்டுதலாக இருப்பான். ஒரு நாள் நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது துரதிருஷ்ட வசமாக எங்கள் பேச்சு புகை பிடிப்பது பற்றி திரும்பியது.

“நீ புகை பிடித்திருக்கிறாயா?” என்று திடீரென்று கேட்டான். 

“இல்லையே, ஏன்” என்றேன்.

சிறிது இடைவேளைக்குப் பிறகு, “ நீ?...” என் கேள்வி தொங்கி நின்றது.

“பிடித்திருக்கிறேன்…மீண்டும் பிடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது” என்றான். எனக்கு ஒரே அதிர்ச்சி.

அன்று மாலை ரயில் நிலையம் செல்லும் வழியில் திறந்த வயல்வெளிக்குச் சென்றோம். போகும் வழியில் எங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாத ஒரு பெட்டிக் கடையில் இரண்டு ‘சிஸர்ஸ்’ சிகரெட்டும் ஒரு தீப்பெட்டியும் வாங்கிக் கொண்டோம். ஆம், .இரண்டாவது சிகரெட் எனக்காகத் தான். அன்றைய காலத்தில் ‘சிஸர்ஸ்’ தான் பிரபலமான சிகரெட் என்று நம்பிக்கை. வயற்காட்டின் வரப்புகளில் கொஞ்ச தூரம் நடந்து போய் சிகரெட்டை பற்ற வைக்கத் தொடங்கினான். காற்றடித்துக் கொண்டிருந்ததால் பல தீக்குச்சிகள் வீணாகின. ஒரு வழியாக என் நண்பன் தன் சிகரெட்டை பற்ற வைத்து எனக்கும் பற்ற வைத்துக் கொடுத்தான்.

ஓரே ஒரு இழுப்புதான் இழுத்திருப்பேன். நெஞ்சு பற்றிக் கொண்டும் குமட்டிக் கொண்டும் வந்தது. அப்படியே சிகரெட்டை விட்டெறிந்து விட்டேன். ஆனால், நண்பன் பல முறை முன்னமேயே முயன்று பார்த்திருப்பான் போல. சிகரெட்டை நன்றாக இழுத்து இழுத்து ஊதினான். எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அவன் கூடவே வரப்பில் நடந்து சென்றேன். புகை பிடிப்பதை ரசிப்பது போல என் முன்னே அவன் அமைதியாகவே சென்றான்.

“எப்படி டா இருக்கு?” என்றேன்.

“ம்.ம். நன்றாக இருக்கிறது…” என்றான். இழுக்க இழுக்க இன்பம். சிகரெட் தீரும் வரை நடந்தோம். பின்னர் இன்னொரு பெட்டிக் கடைக்குச் சென்று சூடன் மிட்டாய் கை நிறைய வாங்கி வாயில் போட்டுக் கொண்டு அங்கங்கே சுற்றி விட்டு நிறைய நேரம் கழித்து வீடு வந்து சேர்ந்தோம். வீட்டில் ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்துக்கொள்ள மாட்டோம் என்ற நம்பிக்கை இருவருக்குமே இருந்தது.

அதுதான் தூக்கியெறியப்பட்ட புகையோடு என்னுடைய முதல் நட்பு. அந்த நிகழ்வுக்குப் பிறகு புகை பிடிப்பதைப் பற்றி அவனிடம் நான் பேசுவதேயில்லை. அவனும் என்னிடம் அதைப் பற்றி பேச மாட்டான். இருவருக்கும் குற்ற உணர்ச்சியாக இருந்திருக்கலாம். நல்ல நண்பர்களாகவே இருந்தோம். பின்பு அவனுடைய தகப்பனார் வேலை மாற்றத்தில் வேறொரு ஊருக்குப் போன பிறகு தொடர்பு விட்டுப் போய் விட்டது. அவன் தொடர்ந்து புகை பிடித்தானா என்று நான் ஒரு பொழுதும் கேட்டுக் கொண்டதில்லை.

படித்து முடித்த பின்னர் ஒரு வங்கியில் வேலைக்கு சேர்ந்தேன். மலைப் பிரதேசத்திலிருந்த ஒரு கிளைக்கு என்னை அனுப்பினார்கள். குளிர் எனக்கு முதன் முதலாக அறிமுகமாகியது. இரவு நேரங்களில் அதிகமாக குளிரும். எப்பொழுதும் ஸ்வெட்டரைப் போட்டுக் கொண்டே எல்லா இடங்களுக்கும் போக வேண்டும். ஒரு லாட்ஜில் தங்கியிருந்தேன். அடிக்கடி மழை வேறு பெய்யத் தொடங்கிவிடும். குளிரும் மழையும் சேர்ந்து இதமாக எதையாவது தேடச் சொல்லும்.

ஒரு நாள் இரவில் மழையும் பெய்து ஓய்ந்து எங்கள் சாப்பாடும் முடித்துவிட்ட நேரம். என்னுடன் வங்கியில் பணி புரிந்த என் வயதொத்த  நான் தங்கியிருந்த லாட்ஜிலேயெ தங்கியிருந்த இன்னொரு ஊழிய நண்பர், “ரொம்பக் குளிராக இருக்கிறது…தாங்க முடியலை…என்ன செய்யறது…” என்று மீண்டும் மீண்டும் என்னிடம் சொல்லிக்கொண்டிருக்க திடீரென்று, “ஓரு சிகரெட் பிடிச்சுப் பார்க்கலாமா? குளிருக்கு இதமாக இருக்கும். எல்லாக் குளிர் பிரதேசங்களிலும் ட்ரிங்க்ஸ் மற்றும் புகை பிடித்தல் இரண்டையும் தானே நம்பியிருக்கிறார்கள்…” என்றான். ஆறேழு ஆண்டுகளுக்கும் மேலாக நான் நினைத்துப் பார்க்காததை அவன் நினைவு படுத்தி விட்டான். “சரி, வா…போகலாம்” என்றேன்.

நாங்கள் தங்கியிருந்த லாட்ஜுக்கு பின் புறம் இருந்த ஒரு கடையில் ஆளுக்கொரு ‘சிஸர்ஸ்’ சிகரெட் வாங்கி பற்ற வைத்துக் கொண்டோம். இந்த முறை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. குளிருக்கு புகைப்பது இதமாக நன்றாகத்தான் இருந்தது. நண்பருக்கும் அப்படியே. இருவரும் அப்படியாக அன்றைய குளிரை புகை பிடித்து விரட்டினோம்.

அதன் பிறகு ஒன்றிரண்டு முறை என்னுடன் வந்து அந்த நண்பரும் புகை பிடித்தார். அதன் பிறகு ‘எனக்குப் பிடிக்கவில்லை. வேண்டாம்.” என்று மறுத்து விட்டார். ஆனால், நான் பிடித்த புகை என்னைப் பிடித்து கொண்டு விட்டது. புகை பிடிப்பதை ஆரம்பத்தில் ரகசியமாகவே வைத்திருந்தோம். நாட்பட நாட்பட அலுவலகத்தில் மற்றவர்களுக்கும் தெரிந்து விட்டது.

அதன் பிறகு என்னால் புகை பிடிக்கும் பழக்கத்தை விட முடியவில்லை. பல இடங்களுக்கு மாற்றலாகிப் போய்க் கொண்டிருந்தேன். தனிமையில் இருந்தேன். புகை துணை கொடுத்தது. ஆரம்பத்தில், சாப்பாட்டுக்கு பிறகு மட்டுமே புகை பிடித்தேன். அதாவது ஒரு நாளைக்கு இரண்டு அல்லது அதிக பட்சம் மூன்று சிகரெட்டுகள்.

பின்பு வட இந்தியாவுக்கு மாற்றலாகிச் சென்ற பிறகு பொறுப்புகள் கூடக் கூட வேலைப் பளு அதிகமாகவே என்னுடைய புகைப் பழக்கமும் அதிகமாகியது. ஒரு சமயத்தில் ஒரு நாளைக்கு இருபது சிகரெட்டுக்கள் வரை கூட பிடித்துக் கொண்டிருந்தேன்.

நான் புகை பிடிப்பதை என் மனைவி, குழந்தைகளிடமிருந்து என்றும் மறைத்ததில்லை. பழக்கத்தை விடவும் முடியவில்லை. முக்கியமாக அலுவலகத்தில் மன அழுத்தம் அதிகமாகும் பொழுதெல்லாம் அதிகமாக புகை பிடித்திருக்கிறேன்.

பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு 1986-ல் ஒரு முறை காந்தி ஜெயந்தி தினத்தன்று ‘புகை பிடிப்பதில்லை’ என்று எனக்கு நானே தீர்மானித்து ஒரு ஆறு மாதம் வரை புகை பிடிக்காமல் இருந்தேன். அந்த நாட்களில் வடகிழக்கு மானிலங்களில் வேலை பார்த்து வந்தேன். என்னைச் சுற்றி பலரும் புகை பிடிப்பவர்களாக இருந்தும் ஆறு மாதம் தாக்குப் பிடித்தேன். புகை பிடிக்க வேண்டும் என்று உந்துதல் அடிக்கடி வரும். எப்படியோ கட்டுப்படுத்தி சமாளித்தேன். ஆனால், மீண்டும் அந்த சனியன் என்னை எப்படியோ பிடித்துக் கொண்டுவிட்டது.

புகை பிடிப்பது தொடர்ந்தது. ரசித்துப் பிடித்ததை விட மன அழுத்தத்தில் பிடித்தது தான் அதிகம். என்னை அறியாமலேயே என் கை சிகரெட்டை பையிலிருந்து எடுத்து விடும்.

பின்னர் 1999-ல் என்னுடைய நெருங்கிய ஒருவருக்கு ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டது. அவரை அந்தப் பிரச்சினையிலிருந்து மீட்க வேண்டிய நிலையில் நான் இருந்தேன். சிக்கலான பிரச்சினை. அந்த சமயம் நான் ஸ்ரீஅம்மா பகவானிடம் அறிமுகமாகியிருந்தேன். அன்று அவர்களிடன் நான் அந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டேன். அதற்கு கைமாறாக புகை பிடிப்பதை விட்டு விடுகிறேன் என்றும் உறுதி பூண்டேன். அந்தப் பிரச்சினைக்காக என்னால் என்ன செய்ய முடியுமோ செய்தேன். மிகவும் டென்ஷனான ஒரு நாளை எப்படியோ கழித்தேன். அடுத்த நாள் ஒரே ஒரு முறை புகை பிடித்தேன். பாதி பிடித்துக் கொண்டிருக்கும் பொழுதே மனசாட்சி உறுத்தவே, கையிலிருந்த சிகரெட் பெட்டியை விட்டெறிந்தேன். அதுதான் நான் கடைசியாக பிடித்த சிகரெட். அன்று முதல் சிகரெட்டை நான் தொட்டதில்லை. எந்தப் பிரச்சினை தீர்வதற்க்காக புகை பிடிப்பதை நிறுத்தினேனோ அதுவும் ஒன்றிரண்டு நாட்களில் அப்போதைக்கு வலுவிழந்து விட்டது பெரிய நிம்மதியைக் கொடுத்தது.

விட்டது சனியன்.

27 ஆண்டுகள் புகை பிடித்திருக்கிறேன். அதை விட்ட பிறகு ‘மீண்டும் ஒரு முறை புகை பிடித்துப் பார்க்கலாமே’ என்ற எண்ணம் கூட இதுவரை எனக்கு வந்ததில்லை. புகைப்பதை விட்ட பிறகு பக்கத்தில் ஒருவர் புகை பிடித்தாலே எனக்குக் குமட்டிக்கொண்டு வருகிறது.

புகை பிடித்து வந்த நாட்களில் அடிக்கடி என் மனைவி ‘இது வேண்டாமே’ என்று கூறியிருக்கிறாள். இப்பொழுது நினைத்துப் பார்த்து மனம் குறுகியிருக்கிறேன். என்னையே நான் வெறுத்திருக்கிறேன். ‘என்னை எப்படி 27 ஆண்டுகள் சகித்துக் கொண்டாய்?’ என்று என் மனைவியிடம் அடிக்கடி கேட்டிருக்கிறேன். ‘என்னை புகை பிடிப்பதிலிருந்து தடுத்து நிறுத்தியிருக்கலாமே?’ என்று ஒன்றிரண்டு முறை கேட்ட பொழுது ‘ஆமாம், தடுக்க முயற்சித்திருந்தால் மட்டும் நீங்கள் என்ன உடனே கேட்டு விடவா போகிறீர்கள்?’ என்று சொல்லிவிட்டாள்.

உண்மைதான். புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான பின்பு மனைவியோ அல்லது வீட்டில் வேறொருவரோ நம்மைத் தடுப்பதற்கு முயற்ச்சித்திருந்தால் எனக்குக் கோபமும் ஆத்திரமும்தான் வந்திருக்கும். என்ன செய்வது? புகை பிடிப்பதும், குடிப்பதும் அப்படிப்பட்ட ஒரு அரக்கன். அந்த அரக்கனிடம் மாட்டிக்கொண்டு நாம் அடிமையாகி விட்டால் மீண்டு வருவது கடினம்.

‘புகை பிடிக்காதீர்கள்’ என்று மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் அருகதை எனக்குக் கிடையாது. ஆனால், நல்ல வேளையாக நான் சரியான நேரத்தில் அதை விட்டு விட்டேன் என்றே தோன்றுகிறது. அதனுடைய தீய விளைவுகளிலிருந்து ஒரு சில சிறிய காயங்களுடன் தப்பித்து விட்டேன்.

இறைவனுக்கு நன்றி. என்னை சரியான பாதையில் திருப்புவதற்க்காகவே அந்த நெருங்கியவருக்கு ஒரு சிக்கலான பிரச்சினை தோன்றியதோ என்னவோ? என்னுடன் இணைந்த கர்மாவுக்காக (KARMA DUE TO BONDAGE/COLLECTIVE KARMA) என்னைக் காப்பாற்றுவதற்காக அவரும் அந்தச் சிக்கலால் துன்பப்பட்டிருக்கிறார். அவர் இன்று உயிருடன் இல்லை. அவர் ஆத்மா சாந்தியடைவதாக.


கடவுள் அவ்வப்பொழுது நம்மை சரியான பாதையில் திருப்புவதற்கு சிறு சிறு கற்களை வீசுகிறார். வேறு பல விதங்களிலும் முயல்கிறார். நாம்தான் பல சமயம் அந்த அடையாளங்களை கவனிப்பதில்லை.

Monday, February 27, 2017

What I found in my laptop: உறவுகளைப் பற்றி

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது கண்ணில் பட்டது. கொஞ்சம் சரி செய்து கீழே கொடுத்திருக்கிறேன். உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். நன்றி வணக்கம். 

26.02.17 
உறவுகளைப் பற்றி

“நீ யார்?”
“நான் ராமசாமி”
“அது உன் பெயர். நீ யார்?”
“நான் சந்திரசேகரின் பையன்.”
“நீ யார்?”
கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. “நான் சுந்தரம் அவர்களின் பேரன்.”
“நீ யார்?”
“விஜயின் சகோதரன்.”
“நீ யார்?”
நான் யாரென்று எப்படி புரியவைப்பது. “நான் ஒரு மாணவன்.”
“நீ யார்?”
மீண்டும் குழப்புகிறாரே? “நான் திருநெல்வேலியைச் சேர்ந்தவன்.”
“நீ யார்?”
“நான் ஒரு இந்தியன்.”
“நீ யார்?”
“நான் ஒரு தமிழன்,”
“இப்பொழுது உங்களிடம் பதில் சொல்லிக்கொண்டிருப்பவன்,”
“ஒரு ஆண்”

இப்படிப் பல பதில்களைக் கூறிக்கொண்டே போகலாம்.

வேறொரு நபரோடு, அல்லது ஒரு கூட்டத்தோடு, அல்லது ஒரு தொழிலோடு, அல்லது வேறொன்றோடு நம்மை உறவு (தொடர்பு) படுத்திக்கொள்ளாமல் நம்மால் நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள முடியாது. வேறொன்றும் இல்லையென்றால் நான் யார் என்று எனக்கே தெரியாது. நான் இன்னாருடைய மகன், இன்னாருடைய கணவன். இன்னாருடைய சகோதரி. இன்னாருடைய மாமா.  ஒரு தமிழ்நாட்டுக்காரன்.  ஒரு சென்னைவாசி. லயோலா கல்லூரியின் மாணவன். விப்ரோ கம்பெனியில் வேலை பார்ப்பவன். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

முயற்சி செய்து பாருங்கள். உங்களை எப்படி மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொள்வீர்களென்று.

சிறிய ஆனால் மகத்தான இந்த உண்மையை எனக்கு ஒரு மகான் உணர்த்தினார். அது வரை நான் இதைப் பற்றி யோசித்தது கிடையாது.  பெரும்பான்மையானவர்கள் என்னைப் போலத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

உறவுகள் இருக்கும் வரைதான் நான் இருக்கிறேன். உறவுகள் இல்லையென்றால் நானில்லை. தொடர்பு இருக்கும் வரைதான் உறவுகள் நீடிக்கும். சார்ந்தே தோன்றியிருக்கிறோம். சார்ந்தே மறைகிறோம். Everything in this world is dependently arising and dependently ceasing.

நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முயற்சிப்பதில்லை. தெரிந்து கொண்டிருந்தால் நமது உறவுகள் வித்தியாசமாக இருந்திருக்கும். நாம் நடந்து கொள்ளும் முறையும் வித்தியாசமாக இருந்திருக்கும்.

உறவுமுறைகள்தான் நமது வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. இந்த உலகத்தில் எல்லாமே மற்றொன்றை சார்ந்திருக்கின்றன.

"வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிசையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.
கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்.
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்." என்று பாடியிருக்கிறார் பாரதியார். நாம் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்பதையே அவர் உணர்த்தியிருக்கிறார்.

ஒரு சமுதாயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவர் விவசாயி. கஷ்டமோ நஷ்டமோ நிலத்தில் கஷ்டப்பட்டு உழைத்து பயிரிடுகிறார். பயிர் விளைந்தவுடன், தனது தேவைக்கு மேலான விளைச்சலை சந்தைக்கு எடுத்துச் செல்கிறார். அங்கே ஒரு வியாபாரி இவருடன் பேரம் பேசி ஒரு விலைக்கு அந்த விளைச்சலை வாங்கிக் கொள்கிறார். அலுவலகம் போய் வரும் இன்னொருவர் அந்த விளைச்சலை தனது வீட்டிற்காக வாங்கிக் கொண்டு போகிறார். அவருடைய மனைவி அந்த விளைச்சலை உணவாக சமைக்கிறார். குடும்பத்தில் எல்லோரும் சாப்பிடுகிறார்கள். குப்பை சேருகிறது - உள்ளேயும் வெளியேயும். நகராட்சியிலிருந்து குப்பை அள்ள மற்றொருவர் வருகிறார். குப்பையை எங்கேயோ கொண்டு கொட்டுகிறார். நாட்பட நாட்பட அந்த குப்பை உரமாகிறது. அந்த உரத்திலிருந்து சத்தை எடுத்துக்கொண்டு வேறொரு செடி வளர்கிறது. மரமாகிறது. பூ பூக்கிறது. காய் காய்க்கிறது. காய் மீண்டும் உணவாகிறது. பூவை வேறொருவர் பறிக்கிறார். அதை கோவிலில் கொண்டு போய் சேர்க்கிறார். ஒரு அர்ச்சகர் அந்த பூவைக்கொண்டு ஆண்டவனுக்கு அர்ச்சனை செய்கிறார். அந்த ஆண்டவன் மகிழ்ந்து பக்தனுக்கு நல்லது செய்கிறார். இப்படி எல்லாமே ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எல்லோருமே விவசாயிகளாகவே, அல்லது வணிகர்களாகவே அல்லது அலுவலகம் செல்வோர்களாகவே,  ஆண்களாகவே அல்லது பெண்களாகவே இருந்தால் எப்படி இருக்கும்?

அல்லது இந்த பூமி முழுவதும் கடலாக இருந்தால் எப்படி இருக்கும்? அல்லது நாம் சுவாசிக்கும் காற்றில் பிராணவாயு மட்டுமே இருந்தால் எப்படி இருக்கும்? அல்லது இந்த பிரபஞ்சத்தில் நமது பூமி மட்டுமே இருந்தால் எப்படி இருக்கும்?

நமக்கு உணவு தேவைப்படுகிறது. உணவு(உற்பத்தி)க்கு மழை, வெயில் தேவை. மழைக்கு மேகங்கள் தேவை, மேகங்களுக்கு நீர் தேவை. வெயிலுக்கு சூரியன் தேவை. குழந்தைக்கு அம்மா தேவை. அம்மாவுக்கும்  குழந்தை தேவை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த படைப்பில் எல்லாமே ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கின்றன. உறவு கொண்டிருக்கின்றன. ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.

இப்படி ஒன்றோடொன்று சார்ந்திருக்கிற உறவுகளை நாம் எப்படி வைத்திருக்கிறோம் என்று கொஞ்சம் பார்த்தால்........?

பல உறவுகளில் விரிசல்கள். ஓட்டைகள். காயங்கள், உடைசல்கள். பெரும்பாலும் நம்மால் பிறரை சகித்துக்கொள்ள முடியவில்லை. நமது அஹங்காரம் மேலோங்கி நிற்கிறது. 'நான்' என்ற நினைப்பு பல உறவுகளை பிரித்து விடுகிறது. மற்றவர்களை நம்மால் அப்படியே ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மற்றவர்கள் நடந்து கொள்வதில்லை என்ற எண்ணமும் நம்மை ஏன் மற்றவர்கள் புரிந்து கொள்வதில்லை என்ற எண்ணமுமே மேலோங்கி நிற்கின்றன. மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நம்மை மாற்றிக்கொள்ளவும் முடிவதில்லை. பல உறவுகளில் சண்டை, சச்சரவு, அதையும் மீறி பகை. நம்பிக்கையின்மை, பொறாமை, குறை கூறுதல்  நிறைந்திருக்கின்றன. நம்மால் ஏன் மற்றவர்களுடன் - நமது மிக நெருங்கிய உறவுகளுடன் கூட - ஒத்துப் போக முடிவதில்லை.

பல உறவுகளில் சகிப்புத்தன்மை என்கிற பெயரில் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டும் இருக்கிறோம். ஒன்று நாம் காயப்பட்டவர்களாக இருக்கிறோம் (victim) அல்லது தியாகிகளாகிவிடுகிறோம் (martyr).

கணவன் – மனைவி, அப்பா – அம்மா, குழந்தைகள், சகோதர சகோதரிகள், தாத்தா – பாட்டி, பேரன் – பேத்தி இப்படி நமது நெருங்கிய உறவுகளில் கூட நமக்கு பல குறைகள் இருக்கின்றன. இந்த குறுகிய வட்டத்திற்குள் கூட நல்ல உறவு கொண்டிருப்போரின் எண்ணிக்கை மிகக் குறைவு.

மற்றவரை புரிந்து கொள்ளும் முயற்சி பலருக்கும் குறைவாகவே காணப்படுகிறது. மற்றவர்களின் நிலையில் நம்மை நிறுத்தி யோசிப்பதென்பது மிக அரிதாக இருக்கிறது. நமது நிலையிலிருந்தே எல்லாவற்றையும் எடை போடுகிறோம்.

ஒரு உதாரணத்திற்கு: பல வீடுகளில் கணவனுக்கு  அலுவலகத்திலும் மனைவிக்கு அடுப்படியிலும் கடுமையாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இருவருமே அவரவர்கள் இடத்தில் வேலை செய்தால்தான் அடுத்தவர் சௌகரியமாக இருக்க முடியும். இருவருடைய வேலையிலும் கஷ்டங்கள் இருக்கின்றன. எதுவுமே எளிதான சமாச்சாரம் இல்லை. மாலையில் வீடு திரும்பிய கணவனுக்கு சற்று ஓய்வு தேவைப்படுகிறது. நாள் முழுவதும் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மனைவிக்கு மாலையிலாவது கொஞ்சம் வெளியே போனால் தேவலை என்று தோன்றுகிறது. இரண்டு முரண்பட்ட எதிர்பார்ப்புகளிலிருந்து இருவருமே மீள முடிவதில்லை.

வசதியில்லாத ஒரு தம்பி. தனிக்கட்டை. கூடப்பிறந்தவர்கள் மூன்று நான்கு பேர்கள். தம்பியின் வயதான காலத்தில் அவரை யார் கவனிப்பது? அவரை கவனித்துக் கொள்வதால் தனக்கு என்ன லாபம் என்று பல குடும்பங்களில் கணக்கு போடுகிறார்கள்.
               
பெற்றோர்கள் என்னை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்ற ஆதங்கம் பல குழந்தைகளுக்கும் வயதான காலத்தில் பிள்ளைகள் தன்னை சரியாக கவனிக்கவில்லை என்ற ஆதங்கம் பல பெற்றோர்களுக்கும் இருக்கிறது.

குறைகள் இல்லாத உறவு முறைகளை எங்கே காண முடிகிறது. பல உறவுகள் தள்ளி நின்று அழகு பார்த்துக்கொள்ளும் வரை சரியாகத்தான் இருக்கிறது. கிட்ட வந்தால் பிரச்சினைதான். 

உறவு முறைகளில் நாம் எல்லோரும் காணத் துடிப்பது அன்பு மட்டுமே. ஆனால், நாம் பொதுவாக காண்பதென்னவோ மிஞ்சியிருக்கும் காயங்கள், ரணங்கள், குற்ற உணர்ச்சிகள், பொறாமை, கோபங்கள், குறைகள், போன்றவை தான். இந்த உணர்ச்சிகளெல்லாம் இல்லாமலேயே நம்மை அந்த கடவுள் படைத்திருக்க முடியாதா? முடியாது என்று சொன்னால் கடவுளுக்கு அவ்வளவுதான் சக்தி என்று ஆகி விடும். முடியும் என்று சொன்னால், அவர் ஏன் அப்படி செய்யவில்லை என்ற கேள்வி எழும். இந்த உணர்ச்சிகளெல்லாம் இயற்கையானதுதானா? இயற்கையாக இருந்தால் மாற்ற முடியாதா?

உணர்ச்சி பூர்வமாகவும் சரி, உடல் ரீதியாகவும் சரி நமக்குத் துணை, தொடர்பு, சார்ந்திருத்தல் தேவைப் படுகிறது. அந்த துணைக்காக, தொடர்புக்காகத்தான் பல விதமாக ஏங்குகிறோம், பல காரியங்களைச் செய்கிறோம். இந்த தேவைகளே உறவை உருவாக்குகின்றன. உறுதிப் படுத்துகின்றன.

அன்பு, பாசம் என்பது ஒரு புறமிருந்தாலும் அதற்கும் கீழே ஒவ்வொருவரின் தேவை அடி மனதிலிருந்து வேலை செய்கிறது. பொதுவாக, வெகு சிலரைத் தவிர எதிர்பார்ப்புகளில்லாத   நிபந்தனைகளில்லாத அன்பையோ, பாசத்தையோ கொடுக்க முடிவதில்லை. It looks almost impossible to give or receive unconditional love to or from anyone. We all have expectations from our love, though many are subtle and unstated.

இந்த சார்ந்திருக்கும் நிலை தொடரும் வரை உறவுகள் விரிவதில்லை. சார்ந்திருக்கும் தேவை எங்கே அற்றுப் போய் விடுகிறதோ அங்கே உறவுகள் நீடிப்பதில்லை. சார்ந்திருப்பதில் ஒரு தனி சுகம் இருக்கிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளை உறுதி படுத்திக்கொள்வதற்காக எதையும் தியாகம் செய்யலாம் என்றே தோன்றுகிறது. ஆனால், என் அஹங்காரம் தடுக்கிறதே? என்ன செய்வது?