05.03.17 நான் பிடித்த புகையும் என்னைப் பிடித்துக்கொண்ட
புகையும்
உயர் நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த
காலம். எட்டாவதோ ஒன்பதாவதோ வகுப்பு. ஞாபகமில்லை. தெருவில் என்னுடன் படித்துக் கொண்டிருந்த
நெருங்கிய வகுப்பு நண்பன். என்னோடு எப்பொழுதும் ஒட்டுதலாக இருப்பான். ஒரு நாள் நாங்கள்
பேசிக் கொண்டிருந்த போது துரதிருஷ்ட வசமாக எங்கள் பேச்சு புகை பிடிப்பது பற்றி திரும்பியது.
“நீ புகை பிடித்திருக்கிறாயா?” என்று திடீரென்று
கேட்டான்.
“இல்லையே, ஏன்” என்றேன்.
சிறிது இடைவேளைக்குப் பிறகு, “ நீ?...”
என் கேள்வி தொங்கி நின்றது.
“பிடித்திருக்கிறேன்…மீண்டும் பிடிக்க வேண்டும்
என்று தோன்றுகிறது” என்றான். எனக்கு ஒரே அதிர்ச்சி.
அன்று மாலை ரயில் நிலையம் செல்லும் வழியில்
திறந்த வயல்வெளிக்குச் சென்றோம். போகும் வழியில் எங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாத
ஒரு பெட்டிக் கடையில் இரண்டு ‘சிஸர்ஸ்’ சிகரெட்டும் ஒரு தீப்பெட்டியும் வாங்கிக் கொண்டோம்.
ஆம், .இரண்டாவது சிகரெட் எனக்காகத் தான். அன்றைய காலத்தில் ‘சிஸர்ஸ்’ தான் பிரபலமான
சிகரெட் என்று நம்பிக்கை. வயற்காட்டின் வரப்புகளில் கொஞ்ச தூரம் நடந்து போய் சிகரெட்டை
பற்ற வைக்கத் தொடங்கினான். காற்றடித்துக் கொண்டிருந்ததால் பல தீக்குச்சிகள் வீணாகின.
ஒரு வழியாக என் நண்பன் தன் சிகரெட்டை பற்ற வைத்து எனக்கும் பற்ற வைத்துக் கொடுத்தான்.
ஓரே ஒரு இழுப்புதான் இழுத்திருப்பேன். நெஞ்சு
பற்றிக் கொண்டும் குமட்டிக் கொண்டும் வந்தது. அப்படியே சிகரெட்டை விட்டெறிந்து விட்டேன்.
ஆனால், நண்பன் பல முறை முன்னமேயே முயன்று பார்த்திருப்பான் போல. சிகரெட்டை நன்றாக இழுத்து
இழுத்து ஊதினான். எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அவன் கூடவே வரப்பில் நடந்து சென்றேன்.
புகை பிடிப்பதை ரசிப்பது போல என் முன்னே அவன் அமைதியாகவே சென்றான்.
“எப்படி டா இருக்கு?” என்றேன்.
“ம்.ம். நன்றாக இருக்கிறது…” என்றான். இழுக்க
இழுக்க இன்பம். சிகரெட் தீரும் வரை நடந்தோம். பின்னர் இன்னொரு பெட்டிக் கடைக்குச் சென்று
சூடன் மிட்டாய் கை நிறைய வாங்கி வாயில் போட்டுக் கொண்டு அங்கங்கே சுற்றி விட்டு நிறைய
நேரம் கழித்து வீடு வந்து சேர்ந்தோம். வீட்டில் ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்துக்கொள்ள
மாட்டோம் என்ற நம்பிக்கை இருவருக்குமே இருந்தது.
அதுதான் தூக்கியெறியப்பட்ட புகையோடு என்னுடைய
முதல் நட்பு. அந்த நிகழ்வுக்குப் பிறகு புகை பிடிப்பதைப் பற்றி அவனிடம் நான் பேசுவதேயில்லை.
அவனும் என்னிடம் அதைப் பற்றி பேச மாட்டான். இருவருக்கும் குற்ற உணர்ச்சியாக இருந்திருக்கலாம்.
நல்ல நண்பர்களாகவே இருந்தோம். பின்பு அவனுடைய தகப்பனார் வேலை மாற்றத்தில் வேறொரு ஊருக்குப்
போன பிறகு தொடர்பு விட்டுப் போய் விட்டது. அவன் தொடர்ந்து புகை பிடித்தானா என்று நான்
ஒரு பொழுதும் கேட்டுக் கொண்டதில்லை.
படித்து முடித்த பின்னர் ஒரு வங்கியில்
வேலைக்கு சேர்ந்தேன். மலைப் பிரதேசத்திலிருந்த ஒரு கிளைக்கு என்னை அனுப்பினார்கள்.
குளிர் எனக்கு முதன் முதலாக அறிமுகமாகியது. இரவு நேரங்களில் அதிகமாக குளிரும். எப்பொழுதும்
ஸ்வெட்டரைப் போட்டுக் கொண்டே எல்லா இடங்களுக்கும் போக வேண்டும். ஒரு லாட்ஜில் தங்கியிருந்தேன்.
அடிக்கடி மழை வேறு பெய்யத் தொடங்கிவிடும். குளிரும் மழையும் சேர்ந்து இதமாக எதையாவது
தேடச் சொல்லும்.
ஒரு நாள் இரவில் மழையும் பெய்து ஓய்ந்து
எங்கள் சாப்பாடும் முடித்துவிட்ட நேரம். என்னுடன் வங்கியில் பணி புரிந்த என் வயதொத்த நான் தங்கியிருந்த லாட்ஜிலேயெ தங்கியிருந்த இன்னொரு
ஊழிய நண்பர், “ரொம்பக் குளிராக இருக்கிறது…தாங்க முடியலை…என்ன செய்யறது…” என்று மீண்டும்
மீண்டும் என்னிடம் சொல்லிக்கொண்டிருக்க திடீரென்று, “ஓரு சிகரெட் பிடிச்சுப் பார்க்கலாமா?
குளிருக்கு இதமாக இருக்கும். எல்லாக் குளிர் பிரதேசங்களிலும் ட்ரிங்க்ஸ் மற்றும் புகை
பிடித்தல் இரண்டையும் தானே நம்பியிருக்கிறார்கள்…” என்றான். ஆறேழு ஆண்டுகளுக்கும் மேலாக
நான் நினைத்துப் பார்க்காததை அவன் நினைவு படுத்தி விட்டான். “சரி, வா…போகலாம்” என்றேன்.
நாங்கள் தங்கியிருந்த லாட்ஜுக்கு பின் புறம்
இருந்த ஒரு கடையில் ஆளுக்கொரு ‘சிஸர்ஸ்’ சிகரெட் வாங்கி பற்ற வைத்துக் கொண்டோம். இந்த
முறை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. குளிருக்கு புகைப்பது இதமாக நன்றாகத்தான் இருந்தது.
நண்பருக்கும் அப்படியே. இருவரும் அப்படியாக அன்றைய குளிரை புகை பிடித்து விரட்டினோம்.
அதன் பிறகு ஒன்றிரண்டு முறை என்னுடன் வந்து
அந்த நண்பரும் புகை பிடித்தார். அதன் பிறகு ‘எனக்குப் பிடிக்கவில்லை. வேண்டாம்.” என்று
மறுத்து விட்டார். ஆனால், நான் பிடித்த புகை என்னைப் பிடித்து கொண்டு விட்டது. புகை
பிடிப்பதை ஆரம்பத்தில் ரகசியமாகவே வைத்திருந்தோம். நாட்பட நாட்பட அலுவலகத்தில் மற்றவர்களுக்கும்
தெரிந்து விட்டது.
அதன் பிறகு என்னால் புகை பிடிக்கும் பழக்கத்தை
விட முடியவில்லை. பல இடங்களுக்கு மாற்றலாகிப் போய்க் கொண்டிருந்தேன். தனிமையில் இருந்தேன்.
புகை துணை கொடுத்தது. ஆரம்பத்தில், சாப்பாட்டுக்கு பிறகு மட்டுமே புகை பிடித்தேன்.
அதாவது ஒரு நாளைக்கு இரண்டு அல்லது அதிக பட்சம் மூன்று சிகரெட்டுகள்.
பின்பு வட இந்தியாவுக்கு மாற்றலாகிச் சென்ற
பிறகு பொறுப்புகள் கூடக் கூட வேலைப் பளு அதிகமாகவே என்னுடைய புகைப் பழக்கமும் அதிகமாகியது.
ஒரு சமயத்தில் ஒரு நாளைக்கு இருபது சிகரெட்டுக்கள் வரை கூட பிடித்துக் கொண்டிருந்தேன்.
நான் புகை பிடிப்பதை என் மனைவி, குழந்தைகளிடமிருந்து
என்றும் மறைத்ததில்லை. பழக்கத்தை விடவும் முடியவில்லை. முக்கியமாக அலுவலகத்தில் மன
அழுத்தம் அதிகமாகும் பொழுதெல்லாம் அதிகமாக புகை பிடித்திருக்கிறேன்.
பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு 1986-ல் ஒரு
முறை காந்தி ஜெயந்தி தினத்தன்று ‘புகை பிடிப்பதில்லை’ என்று எனக்கு நானே தீர்மானித்து
ஒரு ஆறு மாதம் வரை புகை பிடிக்காமல் இருந்தேன். அந்த நாட்களில் வடகிழக்கு மானிலங்களில்
வேலை பார்த்து வந்தேன். என்னைச் சுற்றி பலரும் புகை பிடிப்பவர்களாக இருந்தும் ஆறு மாதம்
தாக்குப் பிடித்தேன். புகை பிடிக்க வேண்டும் என்று உந்துதல் அடிக்கடி வரும். எப்படியோ
கட்டுப்படுத்தி சமாளித்தேன். ஆனால், மீண்டும் அந்த சனியன் என்னை எப்படியோ பிடித்துக்
கொண்டுவிட்டது.
புகை பிடிப்பது தொடர்ந்தது. ரசித்துப் பிடித்ததை
விட மன அழுத்தத்தில் பிடித்தது தான் அதிகம். என்னை அறியாமலேயே என் கை சிகரெட்டை பையிலிருந்து
எடுத்து விடும்.
பின்னர் 1999-ல் என்னுடைய நெருங்கிய ஒருவருக்கு
ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டது. அவரை அந்தப் பிரச்சினையிலிருந்து மீட்க வேண்டிய நிலையில்
நான் இருந்தேன். சிக்கலான பிரச்சினை. அந்த சமயம் நான் ஸ்ரீஅம்மா பகவானிடம் அறிமுகமாகியிருந்தேன்.
அன்று அவர்களிடன் நான் அந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு மனதுக்குள் பிரார்த்தித்துக்
கொண்டேன். அதற்கு கைமாறாக புகை பிடிப்பதை விட்டு விடுகிறேன் என்றும் உறுதி பூண்டேன்.
அந்தப் பிரச்சினைக்காக என்னால் என்ன செய்ய முடியுமோ செய்தேன். மிகவும் டென்ஷனான ஒரு
நாளை எப்படியோ கழித்தேன். அடுத்த நாள் ஒரே ஒரு முறை புகை பிடித்தேன். பாதி பிடித்துக்
கொண்டிருக்கும் பொழுதே மனசாட்சி உறுத்தவே, கையிலிருந்த சிகரெட் பெட்டியை விட்டெறிந்தேன்.
அதுதான் நான் கடைசியாக பிடித்த சிகரெட். அன்று முதல் சிகரெட்டை நான் தொட்டதில்லை. எந்தப்
பிரச்சினை தீர்வதற்க்காக புகை பிடிப்பதை நிறுத்தினேனோ அதுவும் ஒன்றிரண்டு நாட்களில்
அப்போதைக்கு வலுவிழந்து விட்டது பெரிய நிம்மதியைக் கொடுத்தது.
விட்டது சனியன்.
27 ஆண்டுகள் புகை பிடித்திருக்கிறேன். அதை
விட்ட பிறகு ‘மீண்டும் ஒரு முறை புகை பிடித்துப் பார்க்கலாமே’ என்ற எண்ணம் கூட இதுவரை
எனக்கு வந்ததில்லை. புகைப்பதை விட்ட பிறகு பக்கத்தில் ஒருவர் புகை பிடித்தாலே எனக்குக்
குமட்டிக்கொண்டு வருகிறது.
புகை பிடித்து வந்த நாட்களில் அடிக்கடி
என் மனைவி ‘இது வேண்டாமே’ என்று கூறியிருக்கிறாள். இப்பொழுது நினைத்துப் பார்த்து மனம்
குறுகியிருக்கிறேன். என்னையே நான் வெறுத்திருக்கிறேன். ‘என்னை எப்படி 27 ஆண்டுகள் சகித்துக்
கொண்டாய்?’ என்று என் மனைவியிடம் அடிக்கடி கேட்டிருக்கிறேன். ‘என்னை புகை பிடிப்பதிலிருந்து
தடுத்து நிறுத்தியிருக்கலாமே?’ என்று ஒன்றிரண்டு முறை கேட்ட பொழுது ‘ஆமாம், தடுக்க
முயற்சித்திருந்தால் மட்டும் நீங்கள் என்ன உடனே கேட்டு விடவா போகிறீர்கள்?’ என்று சொல்லிவிட்டாள்.
உண்மைதான். புகை பிடிக்கும் பழக்கத்துக்கு
அடிமையான பின்பு மனைவியோ அல்லது வீட்டில் வேறொருவரோ நம்மைத் தடுப்பதற்கு முயற்ச்சித்திருந்தால்
எனக்குக் கோபமும் ஆத்திரமும்தான் வந்திருக்கும். என்ன செய்வது? புகை பிடிப்பதும், குடிப்பதும்
அப்படிப்பட்ட ஒரு அரக்கன். அந்த அரக்கனிடம் மாட்டிக்கொண்டு நாம் அடிமையாகி விட்டால்
மீண்டு வருவது கடினம்.
‘புகை பிடிக்காதீர்கள்’ என்று மற்றவர்களுக்கு
அறிவுரை கூறும் அருகதை எனக்குக் கிடையாது. ஆனால், நல்ல வேளையாக நான் சரியான நேரத்தில்
அதை விட்டு விட்டேன் என்றே தோன்றுகிறது. அதனுடைய தீய விளைவுகளிலிருந்து ஒரு சில சிறிய
காயங்களுடன் தப்பித்து விட்டேன்.
இறைவனுக்கு நன்றி. என்னை சரியான பாதையில்
திருப்புவதற்க்காகவே அந்த நெருங்கியவருக்கு ஒரு சிக்கலான பிரச்சினை தோன்றியதோ என்னவோ?
என்னுடன் இணைந்த கர்மாவுக்காக (KARMA DUE TO BONDAGE/COLLECTIVE KARMA) என்னைக் காப்பாற்றுவதற்காக
அவரும் அந்தச் சிக்கலால் துன்பப்பட்டிருக்கிறார். அவர் இன்று உயிருடன் இல்லை. அவர்
ஆத்மா சாந்தியடைவதாக.
கடவுள் அவ்வப்பொழுது நம்மை சரியான பாதையில்
திருப்புவதற்கு சிறு சிறு கற்களை வீசுகிறார். வேறு பல விதங்களிலும் முயல்கிறார். நாம்தான்
பல சமயம் அந்த அடையாளங்களை கவனிப்பதில்லை.
Nice testimony.God has saved you from the evil.Praise God!
ReplyDeleteரொம்ப அழகாக எழுதப்பட்டுள்ளது ... வெறும் புகையை பற்றி மட்டும் எழுதாமல் ஒரு வலுவான சிந்தனை போக்குடன் தொடர்பு படுத்தி அழகுற கூடுதல் குறைவுகளை அலசி எழுதிஇருக்கிறீர்கள்
ReplyDelete