எனது இத்தாலி பயணம்
Collosseum in Rome |
Duomo in Florence |
Pisa tower |
Gondolas in the waters of Venice |
Anacapri near Naples |
நாள் 1
சென்னை
அண்ணா சாலையில் நூறு ரூபாய்க்கு கிடைத்த, பிரபல எழுத்தாளர் டான் ப்ரௌன் எழுதிய “இன்ஃபெர்னோ”
என்கிற கதைப் புத்தகம்தான் நான் வாங்கியதிலேயே மிக விலை உயர்ந்த புத்தகமாக முடிந்தது.
இந்தப் புத்தகம் இத்தாலி நாட்டிலுள்ள ஃப்ளாரன்ஸ் என்கிற பழம்பெருமை வாய்ந்த நகரில்
நடப்பதாக எழுதப்பட்டது. இந்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள அரண்மனைகள், அருங்காட்சியகங்கள்,
தோட்டங்கள், சாலைகள், பாலங்கள் … இதையெல்லாம்
படிக்க, படிக்க, இத்தாலி நாட்டைப் போய் பார்க்க வேண்டும் என்று ஏற்கெனவே என்னுள் மறைந்து
உறங்கிக்கொண்டிருந்த ஆசையை மீண்டும் உசுப்பி எழுப்பிவிட்டது.
பின்
என்ன…..
இன்டெர்னெட்டில்
உட்கார்ந்தேன். இன்டெர்னெட் கண்டுபிடித்தவர்களை கோவில் வைத்துக் கும்பிடவேண்டும். மிகப்
பெரிய வரப் பிரசாதம். இருந்த இடத்தை விட்டு நகராமல் எதை வேண்டுமானாலும் இன்டெர்னெட்டில்
தேடிக் கண்டுபிடித்துக்கொள்ளலாம்.
இன்டெர்னெட்டில்
இத்தாலி நாட்டைப் பற்றியும், அந்த நாட்டு சுற்றுப்பயணங்களைப் பற்றியும் படித்தேன்.
படிக்கப் படிக்க ஆவல் கூடியது. பல இடங்களின் புகைப்படங்கள் என்னை இன்னும் ஈர்த்தன.
எங்களுடைய பையன், பெண் இருவரும் அமெரிக்காவில் வேலை செய்வதால் எப்படியும், மார்ச் மாதத்தில்
அமெரிக்கா செல்வதாக ஒரு திட்டம் எங்களிடம் இருந்தது. தனியாக இத்தாலி மட்டும் போய் வருவதற்கான
விமான டிக்கட்டின் விலைக்கும், இத்தாலி வழியாக அமெரிக்கா சென்று திரும்புவதற்கான டிக்கெட்டின்
விலைக்கும் பத்து பதினையாயிரம் ரூபாய் வித்தியாசம்தான் இருந்தது. அப்பொழுது தோன்றியது
… ‘நாம் ஏன், அமெரிக்கா செல்லும் வழியில் இத்தாலியில் ஒரு சில நாட்கள் தங்கி ஊர்சுற்றிப்
பார்க்கக்கூடாது’ என்று.
பல
வலைப்பிரிவுகளை படித்துப் புரிந்துகொண்டபோது ஒரு பொதுவான ஐடியா மனதில் பதிவானது. இத்தாலியில்
பல இடங்களைப் போய் பார்க்கலாம் என்றாலும், ரோம், நேப்பிள்ஸ், ஃப்ளாரன்ஸ், மற்றும் வெனிஸ்
நகரங்கள் மிகமிக முக்கியமானவை என்று தோன்றியது. எட்டு முதல் பத்து நாட்கள் இருந்தால்
நன்றாகவே சுற்றிப் பார்க்கலாம் என்றும் புரிந்துகொண்டேன். கையில் பைசா இருந்தால் ரோம்
நகரத்தை மட்டுமே எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் சுற்றலாம். இத்தாலியில் செல்லுபடியாகும்
யூரோ என்கிற நாணயம் இன்றைக்கு எண்பத்தியாறு
இந்திய ரூபாய்க்கு சமம். (இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வளவு அதல பாதாளத்தில் இருக்கிறது
என்று வெளிநாடு போகும் பொழுதுதான் தெரியும்)
என்
மனைவியிடம் என்னுடைய இத்தாலி நாட்டுப் பயணக் கனவைப் பற்றிச் சொன்னேன். வழக்கம் போல
ப்ரேக் போட்டாள். வீணே நிறைய பணம் செலவாகும் எதற்கு இந்த யோசனயெல்லாம் என்றாள். ஆனால்
அவளிடம் உள்ள ஒரு நல்ல குணம் என்னவென்றால், நான் ஆசைப்பட்டு செய்யும் எதற்கும் குறுக்கே
நிற்க மாட்டாள். என் கூட துணையும் இருப்பாள். அவளுக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை
வைத்துக்கொள்ள மாட்டாள். இரண்டு, மூன்று முறை இதைப் பிரஸ்தாபித்த பிறகு பயணம் ஒகே ஆனது.
ஒரு
சில வெளிநாடுகளை சுற்றிப் பார்க்கும் அதிர்ஷ்டம் எங்களுக்கு இருந்தது. இதுவரை அமெரிக்கா,
இங்கிலாந்து ஸ்காட்லாந்து, சுவிட்சர்லாந்து போன்ற இடங்களுக்கு போயிருக்கிறோம். எல்லா
இடங்களுக்கும் பொதுவாக எந்த குருப் டூரிலும் போனது கிடையாது. தனியாகவே திட்டமிட்டு
போய் வந்திருக்கிறோம். நம் இஷ்டம் போல் சுற்றலாம்.
எதில் அதிக ஆர்வம் இருக்கிறதோ அல்லது எது நம்மை அதிகமாக ஈர்க்கிறதோ அங்கே அதிக நேரம்
செலவிடலாம். ஆனால், பயணத்துக்கு தயார் செய்ய நிறைய நேரம் பிடிக்கும். செலவும் குறையும்.
இது என் பெண்ணிடமிருந்து நான் கற்றுக்கொண்டது. ‘ஃப்ரீக்’ என்று எங்களைப் பற்றி கமெண்ட்
அடித்திருக்கிறார்கள்.
அப்படியாக,
இத்தாலி நாட்டிற்கு சுற்றுப்பயணம் போவதற்கு 2014, ஜனவரி முடிவிலிருந்தே திட்டமிட ஆரம்பித்தேன்.
மார்ச் மாதம் இத்தாலியில் குளிர்காலம் முடிவடைய வெண்டிய காலம். அதனால், பருவ நிலையும்
சாதகமாக இருக்கும் என்று படித்தேன். சுற்றுலாக்கூட்டமும் குறைவாக இருக்கும் என்றும்
நம்பினேன்.
www.tripadvisor.com, ஹோட்டல்களைப்
பற்றி விலாவாரியாச் சொல்கிறது. www.bookings.com என்ற இணையதளத்தின் மூலம் நாங்கள் தங்கவேண்டிய எல்லா நகரங்களுக்கும் ஹோட்டல்
ரிஸெர்வேஷன் முடிந்தது, இத்தாலியில் ரயில், பஸ், டிராம் போக்குவரத்து மிகவும் வசதியாகவே
இருப்பதாகப் படித்தேன். அதனால் போக வேண்டிய நகரங்களுக்கு ரயிலிலேயே பயணம் செய்யலாம்
என்று முடிவு செய்தேன். www.italiarail.com என்ற இணையதளத்தில் எல்லா விவரங்களும் கிடைத்தன.
www.viator.com, www.vaticantoursonline.com, போன்ற
இணையதளங்கள் மூலமாக சுற்றுலா இடங்களுக்கு முன்பதிவும் இன்டெர்னெட்டில் முடிந்து விட்டது.
ஹோட்டல்கள் எல்லாமே ரயில் நிலையங்களுக்கு அருகாமலேயே நடந்து போகக்கூடிய தூரத்தில் இருக்குமாறு
பார்த்துக்கொண்டேன். டிராவல் ஏஜென்ட் மூலமாக யூரோப்பியன் யுனியனின் விசாவும் வந்துவிட்டது.
யூ.ஏ.ஈ எக்ஸேஞ்ச் மூலமாக யூரோ கரென்ஸியும் டிராவலெர்ஸ் செக்கும் வாங்கிக்கொண்டாகி விட்டது.
யூரோ டிராவலெர்ஸ் செக் எவ்வளவு வீண் என்பது இத்தாலி நாடு போன பின்புதான் தெரியவந்தது.
அதைப் யூரோ பணமாக்க 14 முதல் 20 சதவிகிதம் கட்டணமாக கழித்துக்கொள்கிறார்கள். யூரோப்
சுற்றிப் பார்க்க செல்ல நினைப்பவர்கள் இதை கவனத்தில் கொள்ளவும்.
www.maps.google.com இணையதளத்தின் மூலம் நாங்கள் தங்க இருக்கும்
ஹோட்டல்களின் முகப்பு வரை பார்க்க முடிந்தது. ஒவ்வொரு இடத்திலும் என்ன பார்க்கலாம், நாம் தங்கியிருக்கும் இடத்திலிருந்து பார்க்கவேண்டிய
இடங்கள் எவ்வளவு தூரம், எப்படி அங்கு செல்வது, பஸ்/ரயில்/மெட்ரோ/ரயில்/நடை வசதி எப்படி,
எவ்வளவு செலவாகும், போன்ற எல்லா விவரங்களும் இன்டெர்னெட்டில் கிடைக்கின்றன. ஹோட்டல்களுக்கு
ஈ-மெயில் செய்து விவரங்களை உறுதி செய்துகொண்டேன். முக்கியமாக இந்தியன் ரெஸ்டாரண்ட்ஸ்
எங்கெங்கே இருக்கின்றன என்பதையும் தெரிந்துவைத்துக்கொண்டேன்.
இனி
கிளம்பவேண்டியதுதான் பாக்கி.
மார்ச்
11-ஆம் தேதி காலை 4 மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலமாக எங்கள் பயணம் தொடங்கியது.
லண்டன் எங்களது முதல் நிறுத்தம். சுமார் பத்து மணி நேரப் பயணம். சென்னையில் விமான நிலையத்தில்
செக்-இன் செய்யும்பொழுது கௌண்டரில் இருந்தவர் இங்கிலாந்துக்கான TRANSIT VISA எங்கே
என்றார். நாங்கள்தான் இங்கிலாந்து நாட்டுக்குள்ளே
போகப்போவதில்லையே. TRANSIT VISA எதற்கு என்றேன். அவர், பின் யாருடனுடனோ தொலைபேசியில்
தொடர்புகொண்டு வெகு நேரம் பேசிய பிறகு, ஒரு வழியாக BOARDING PASS-ஐ கொடுத்தார். (சுற்றுலா
பயணிகள் டிக்கெட் வாங்கும்பொழுது சற்று கவனமாக, அவர்கள் போகவேண்டிய இடத்திற்கு இன்னொரு
நாடு வழியாக போவதாக இருந்தால் TRANSIT VISA
தேவையா என்று சரி பார்த்துக்கொள்ளவும்.) வழியில் விமானத்தில் ‘வருத்தப்படாத
வாலிபர் சங்கம்’ படத்தை பார்த்தேன். இந்தியாவில் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. இன்றைய
சினிமாக்களில் குடிப்பதையும், புகைபிடிப்பதையும் ஒரு ஹீரோத்தனமாக்கிவிட்டார்கள்.
லண்டனில்
இரண்டு மணி நேரம் இடைவேளைக்குப் பிறகு, ரோம் நகருக்கு அடுத்த விமானம். இரண்டரை மணி
நேரம் பயணம். ரோம் செல்வதற்கு தலையை சுற்றி மூக்கைத் தொட்டதுபோல் இருந்தது. அதே நாள்,
மாலை 4.10 அளவில் எங்கள் விமானம் ரோம் நகரின் ஃஃப்யூமிஸினா விமான நிலையத்தைத் தொட்டது.
தேசியப்பற்றை கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, வெளிநாடுகளிலுள்ள விமான நிலையங்களைப் பார்க்கும்பொழுது,
நம்மூர் சென்னை விமான நிலையம் ஒன்றுமேயில்லை என்று தோன்றியது. டில்லி கொஞ்சம் பரவாயில்லை.
ரோம்
விமான நிலையத்தில் இமிக்ரேஷன் பரிசோதனை மிக விரைவாக முடிந்துவிட்டது. எங்களது பயணப்பெட்டிகளும்
வந்து விட்டன. ஆனால், அதைத் தள்ளி செல்வதற்கு டிராலி இலவசம் கிடையாது. இரண்டு யூரோ நாணயம் மிஷினுக்கு ஊட்டவேண்டும். இது ரொம்ப அநியாயம்
என்று தோன்றியது. இந்தியாவுக்கு, முக்கியமாக தமிழ் நாட்டுக்கு வெளியே இலவசம் என்றால்
என்ன விலை என்ற கேள்விதான்.
விமான
நிலையத்தில் டிராலிகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தின் அருகிலேயே நாணயம் மாற்றும் மிஷின்
இருந்தது. எல்லாம் மிஷின் மயம்தான். வளர்ந்த வெளிநாடுகளுக்குப் போவதென்றால், கம்ப்யூட்டர்
மிஷின்களை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றி கவலைப்படக்கூடாது. பத்து யூரோ நோட்டை
உள்ளே விழுங்கிவிட்டு நாணயம் வெளியே வராவிட்டால் என்ன செய்வது என்று ஒரு பயம். அப்படி
எதுவும் நடக்கவில்லை. ஐந்து, இரண்டு-யூரோ நாணயங்களை கடகடவென்று கக்கியது.
எங்கள்
பயணப்பெட்டிகளோடு வெளியே வரும்பொழுது உள்ளுக்குள் இன்னொரு நடுக்கம் இருந்தது. முப்பது
கிலோமீட்டர் தூரம். பெட்டிகளோடு மெட்ரோ ரயிலில் செல்வது கடினம் என்பதால் இன்டெர்னெட்
மூலமாக ஹோட்டல் செல்வதற்கு டாக்ஸி ஏற்பாடு செய்திருந்தேன். டிரைவர் விமான நிலையத்தின்
வரவேற்பு பகுதியில் காத்திருப்பார் என்று ஈ-மெயில் வந்திருந்தது. அவர் வராவிட்டால்,
மாற்று ஏற்பாடு எப்படி செய்வதென்று பார்த்து வைத்துக்கொள்ள மறந்து விட்டேன். ஆனால்,
ஒரு அட்டையில் எங்கள் பெயரை சரியாக எழுதி வைத்திருந்து எங்களுக்காக அவர் காத்திருந்தார்.
ஒரு அரை மணி நேரத்தில் ஹோட்டல் சென்றடைந்தோம்.
மாலை
மணி 6.00. ஹோட்டல் அறையில் எங்கள் சாமான்களை இறக்கி
வைத்தபின்பு, இரவு சாப்பாட்டிற்காக வெளியே சென்றோம். பல சுற்றுலா பயணிகள் கூடுமிடமான,
மனதைக் கவரும் ட்ரெவி நீரூற்று (TREVI FOUNTAIN) ஹோட்டல் எதிரே ஒரு சிறிய சந்து வழியாக
ஐந்து நிமிடத்தில் நடந்துபோய் செல்லும் தூரத்திலேயே இருந்தது. சந்து முழுவதும், நமது
சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு போன்று கடைகள். தெரு முனையில் எலெக்ட்ரானிக் சங்கீதக்
கருவிகளை வைத்து சிலர் இசைத்துக்கொண்டும், பாடிக்கொண்டும் இருந்தனர். (ஒருவிதமான ஹைடெக்
கையேந்துதல் என்றுதான் நினைக்கிறேன்.)
இரவு
நேரத்தில், TREVI FOUNTAIN மின்விளக்கு ஒளியில் ஜொலித்தது. பல முறை புகைப்படங்களில்
பார்த்த நீரூற்றை நேரில் கண்டபொழுது ரொம்ப த்ரில்லிங்காக இருந்தது. நீரூற்றை சுற்றி
சுற்றுலாக் கும்பல் குவிந்திருந்தது. நிற்க, உட்கார இடமில்லை. பலர் நீரூற்றின் அருகில்
போய் திரும்பி நின்றுகொண்டு நாணயங்களை நீரூற்றில் விட்டெறிந்துகொண்டிருந்தார்கள். அப்படி
செய்தால், ரோமுக்கு மீண்டும் வருவோம் என்றொரு நம்பிக்கையாம்.
இரவு
உணவை பீஸ்ஸா, ஸ்பகட்டியோடு முடித்துக்கொண்டு, பக்கத்திலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிலிருந்து
பிரெட், ஜூஸ், தயிரும், ஒரு பழக்கடையிலிருந்து பழங்களும் வாங்கிக்கொண்டு ஹோட்டல் அறைக்கு
திரும்பினோம். இத்தாலியில் நாங்கள் இருந்த எல்லா நாட்களிலும் சென்னை, கிராண்ட் ஸ்வீட்ஸிலிருந்து
வாங்கிச்சென்ற தக்காளித்தொக்குதான் ரொம்பவும் கைகொடுத்தது.
அடுத்த
நாள் அதிகாலையில் ஊர் சுற்றிப் பார்க்க கிளம்பவேண்டும் என்பதனால் சீக்கிரமாக படுத்துவிட்டோம்.. . ……………………………… தொடரும்
Do you like this blog? If so, you may also like to see my other blogs on my other travels:
July, 2013:Trip to Alaska
No comments:
Post a Comment