Total Pageviews

Wednesday, April 09, 2014

எனது இத்தாலி பயணம் பகுதி 2

எனது இத்தாலி பயணம்
நாள் 2

மறுநாள் காலை ஹோட்டலிலேயே செமையான காலை உணவு. (ஹோட்டல் கட்டணத்தில் காலை உணவும் சேர்க்கப்பட்டிருந்தது), ஒன்பது மணிக்கு வீதியில் இறங்கினோம்.

இத்தாலிக்கும் இந்தியாவுக்குமிடையே நிறைய ஒற்றுமைகள் உண்டு
.
இத்தாலியின் வரைபடம்
  • இந்தியாவைப் போல், இத்தாலியும் ஒரு தீபகற்ப நாடு. 
  • வடக்கே ஆல்ப்ஸ் மலையின் சிகரங்கள் இத்தாலியை ஃப்ரான்ஸ், சுவிட்ஸர்லாந்து, ஆஸ்ட்ரியா மற்றும் ஸ்லோவேனியா நாடுகளிலிருந்து பிரிக்கிறது. தெற்கே இத்தாலியின் ஒரு பகுதியான சிசிலி என்கிற ஒரு தீவு. (GOD FATHER படம் ஞாபகம் இருக்கலாம்) அதற்கும் தெற்கே பரந்த மத்தியதரைக்கடல். 
  • இத்தாலியின் தலைநகரமான ரோம், சரித்திர காலங்களிலிருந்து புகழ் பெற்றிருந்தது. 
  • இந்தியாவைப் போல் பல உட்பிரிவுகளைக் கொண்ட இத்தாலி பல குறுநில, சிற்றரசர்களால் பல்வேறு காலக்கட்டங்களில் ஆளப்பட்டிருக்கிறது. பல புகழ்பெற்ற சக்கரவர்த்திகள் ரோம சாம்ராஜ்யத்தை ஐரோப்பா முழுவதும் விரிவாக்கியிருக்கிறார்கள். அண்டையிலுள்ள ஐரோப்பாவின் மற்ற பெரிய நாடுகளான ஆஸ்திரியா, ஸ்பெயின், மற்றும் ஃப்ரான்ஸ்  நாடுகள் இத்தாலியின் பல்வேறு பகுதிகளின் மீது படையெடுத்து கைப்பற்றி ஆண்டிருக்கின்றன.. 
  • பல புகழ்பெற்ற தத்துவஞானிகள், கலைஞர்கள், இத்தாலியில் தோன்றியிருக்கிறார்கள். 
  • மிகப் பழமையான கலாசாரம், பண்பாடு, மற்றும் நாகரீகம் தோன்றிய நாடு. 
  • உலகிலேயே மிக அதிக மக்கள் பின்பற்றும் கிறிஸ்துவ மதம் – முக்கியமாக ரோமன் கத்தோலிக்க மதம் - இங்கேதான் வேரூன்றியிருகிறது. உலகிலேயே மிக அதிக வருமானம் கொண்ட வாடிகன் கோவில் ரோமில்தான் அமைந்திருக்கிறது. 
  • லாத்தீன், கிரீக், மற்றும் பல வேறுபட்ட கிளை மொழிகளை மக்கள் பண்டைய காலங்களில் பேசி வந்தாலும், இருபதாம் நூற்றாண்டில் அரசாங்கம் எடுத்துக்கொண்ட பல முயற்சிகளால், ஒருங்கிணைத்த மொழியாக இத்தாலியன் மொழி இன்று பேசப்பட்டு வருகிறது. 
  • பல மன்னர்கள்,, கொடுங்கோலர்கள் கைக்குள் இருந்து வந்த இத்தாலியின் பல்வேறு பிரிவுகள், இரண்டாம் மற்றும் மூன்றாம் சுதந்திர போராட்டங்களுக்குப் பிறகு 1861-ல் இரண்டாவது விக்டர் இம்மானுவேல் மன்னரின் கீழ் ஒரே நாடாக்கப்பட்டது. 
  • 1946, ஜூன் 2-ஆம் தேதி நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பின் முடிவின்படி, மன்னராட்சி, கொடுங்கோல் ஆட்சிகளுக்கு முடிவு கட்டப்பட்டு இத்தாலி ஒரு சுதந்திர குடியரசாக அறிவிக்கப்பட்டது. 
  • இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்நாடு தொழில்மயமாக்கப்பட்டு, ஒரு வளர்ந்த நாடாக,   நேடோ (NATO) அமைப்பின் ஒரு ஸ்தாபக உறுப்பினராகவும்,, ‘செஞ்சென்’ என்றழைக்கப்படுகிற யூரோப்பியன் யூனியனின் ஒரு முக்கிய நபராகவும் திகழ்ந்து வருகிறது. 


இந்த நினைவுகளுடனேயே, புராதன ரோம் நகரை சுற்றிப்பார்க்க ஆரம்பித்தோம். புராதன ரோம் நகரப் பகுதிகள் முழுவதும் பழமையான கட்டிடங்கள், பூமியின் அடியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட அடையாளச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், சிற்பக்கூடங்கள், நீரூற்றுகள், ரோமன் கத்தோலிக் கிறிஸ்துவர்களின் கோவில்கள் (நம்மூரில் மூலைக்கு மூலை பிள்ளையார் கோவில் இருப்பது மாதிரி) மற்றும் போர் நினைவுச் சின்னங்கள் எல்லாம் பல புதிய கட்டிடங்களுக்கு நடுநடுவே பழசும் புதுசுமாக கலந்து அழகாக காணப்படுகிறது. குறிப்பிட்ட நிறுத்தங்களில் எங்கு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் ஏறி இறங்கலாம் என்கிற வசதியுள்ள HOP-ON-HOP-OFF பஸ்ஸில் (ஏற்கெனவே ரிசர்வ் செய்திருந்தேன்) ஒரு முறை எங்கும் இறங்காமல் ரோமில் வலம் வந்தோம். பல குறுகிய தெருக்கள் வழியே இந்த பஸ் போகும்பொழுதும், திரும்பும் பொழுதும் மனது திக், திக்கென்றது.)
 

எங்களுடைய முதல் நிறுத்தம், வாடிகனுக்கு வெளியே.

வாடிகன் நகரம், ரோமுக்குள்ளேயே பெரிய மதிற்சுவர்களால் சூழப்பட்ட, ஐ. நா சபையின் உறுப்பினர் அந்தஸ்து பெற்ற ஒரு தனி நாடு. 110 ஏக்கர் பரப்பளவு. மக்கள் தொகை 840. கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தின் தலைவரும், ரோம் நகரின் பிஷப் என்றும் அழைக்கப்படும் போப்பாண்டவரால் ஆளப்படுகிறது. பல நாடுகளிலுள்ள பிஷப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் இவர் வசிக்கும் இடமும் வாடிகன் நகரம்தான். யேசு கிறிஸ்துவினால் அளிக்கப்பட்ட சொர்க்கத்தின் திறவுகோலை வாங்கிக்கொண்ட புனித பீட்டரின் வாரிசுகள்தான் போப்பாண்டவர் என்பவர்கள். புனித பீட்டருக்கு வாட்டிகனனுக்குள்ளேயே மிகப்பெரிய கோவில் கட்டியிருக்கிறார்கள்.
 


அடுத்த நாள் வாடிகன் அருங்காட்சியகம், மற்றும் புனித பீட்டரின் மிகப் பெரிய கோவிலை (VATICAN MUSEUM AND ST.PETER’S CHURCH) சுற்றிப்பார்ப்பதற்கான டிக்கெட்டை நாங்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்ததால், வாடிகனுக்கு வெளியேயுள்ள இடங்களை மட்டும் சுற்றிப்பார்த்துவிட்டு, மீண்டும் HOP ON பஸ் ஏறினோம்.

நாங்கள் இறங்கிய அடுத்த முக்கிய இடங்கள்:

  •      பியாசா டெல் கேம்பிடோலியோ (Piazza del Campidoglio)
  •   ரோமன் கலோசியம் (Roman Collosseum) மற்றும் அதைத் தொட்டுள்ள          ரோமன் ஃபோரம் (Roman Forum)

பியாசா டெல் கேம்பிடோலியோ (Piazza del Campidoglio):
கேபிடோல் குன்றின் மீது அமையப்பட்ட இந்த நகர்கூடம் ரு காலத்தில் ரோமர்களின் வழிபாட்டுத்தலமாகவும் இருந்திருக்கிறது. இப்பொழுது காணப்படும் கட்டிடம் 1560-ல், மைக்கேல் ஏஞ்செலோ என்ற புகழ்பெற்ற சிற்பக்கலை வல்லுனரின் எண்ணத்தில் உதயமான கனவின் படி கட்டப்பட்டது. கம்பீரமான ஒரு படிக்கட்டுகளின் வழியாக ஏறினால் மூன்று கட்டிடங்களைக் காணலாம். நடுவில் நிற்பது பளாசோ செனடோரியோ (Palazzo Senatorio)இப்பொழுது ரோம்  நகராட்சி மன்றத்தின் அலுவலகம். இருபுறமும் இருப்பது கேபிடொலின் அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம். இந்த இரண்டு இடங்களையும் முழுவதுமாகப் பார்ப்பதற்கு குறைந்தது இரண்டு மணி நேரம் தேவை என்பதால், இதை இன்னொரு நாள், நாங்கள் ரோம் திரும்பி வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்று திரும்பிவிட்டோம்.
  
ரோமன் கலோசியம் (Roman Collosseum) , அதைத் தொட்டுள்ள ரோமன் ஃபோரம் (Roman Forum), மற்றும் சர்கஸ் மாக்ஸிமஸ் ):

கலோசியம்: கி.பி 70-ல் தொடங்கி 80-ல் முடிக்கப்பட்ட இந்த ரோமன் வெட்டவெளி அரங்கம் (AMPHITHEATRE) வெஸ்வேசியன் என்ற பேரரசராலும், ஃப்ளெவியன் பரம்பரை என்றழைக்கப்படும் அவரது சந்ததியரரான டைட்டஸ் என்பவராலும் கட்டப்பட்டது. ஐம்பது முதல் எண்பதினாயிரம் மக்கள் அமரக்கூடிய இந்த அரங்கத்தில் ஒரு காலத்தில் க்ளேடியேட்டர்கள் (GLADIATOR) என்றழைக்கப்பட்ட அடிமைகள், கூலி வீரர்கள் ஒருவருக்கொருவர் பயங்கரமாக மோதி சண்டை போட்டும், பயங்கர மிருகங்களுடன் போராடியும் பார்வையாளர்களை குஷிப்படுத்தி வந்தனர். பின் வந்த 10-ஆவது 13-ஆவது நூற்றாண்டுகளில் இது ஒரு கோட்டையாகவும், ராணுவ வீரர்களின் உறைவிடமாகவும், சமயத்தில் கிறிஸ்துவ கோவிலாகவும் பயன் படுத்தப்பட்டது. பின்னால் ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவாகவும், மதிப்புள்ள கற்களை கொள்ளையடிப்பவர்களாலும் இந்த இடம் இப்பொழுது சின்னா பின்னமாக சிதைந்து கிடக்கிறது. ஐ. நா. சபையினால், பாதுகாக்கப்படவேண்டிய ஒரு புராதனச் சின்னமாக இன்று கருதப்பட்டு வருகிறது.
 

கலோசியம் உள்ளே சென்று பார்க்க டிக்கெட்டுக்கு க்யூவில் நின்று, பின்பு உள்ளே சுற்றிப் பார்த்து முடிப்பதற்குள்ளேயே நான்கு மணியாகிவிட்டது. அதற்குள், ரோமன் ஃபோரம் பார்ப்பதற்கான அனுமதி நேரம் முடிந்துவிட்டதால் உள்ளே எங்களுக்குப் போக முடியவில்லை. அடுத்த நாள் சீக்கிரமாக இங்கே வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று கருதி மற்ற இடங்களை சுற்ற ஆரம்பித்தோம்.

சர்க்கஸ் மாக்ஸிமஸ்: ஒரு காலத்தில் மிகப் பிரபலமான குதிரைப் பந்தயங்கள், போட்டிகள் நடக்கும் களமாக இருந்த இந்த இடம், இன்று வெறும் புல் முளைத்த ஒரு மைதானமாக காட்சியளிக்கிறது.

அன்று நாங்கள் கற்றுக்கொண்ட முக்கியமான பாடங்கள்:
  •    ரோம் நகரை சுற்றிப் பார்ப்பதற்கு நடைதான் சிறந்தது. HOP ON  பஸ்   எல்லாம் பண விரயம்தான். சரித்திர கால ரோம் என்று      சொல்லப்படும் பகுதிகள் கால் நடையாகவே போய் பார்க்கக்கூடிய  இடங்கள்தான்.
  •  ரோம் நகரை மட்டும் சுற்றிப் பார்ப்பதற்கு தனியாக ஒரு பத்து நாள்  ஒதுக்க வேண்டும். அவ்வளவு இருக்கிறது பார்ப்பதற்கு.
  •  ரோம் நகரின் சரித்திரம் ஓரளவு தெரிந்திருந்தால் இந்த இடங்களை  இன்னும் அதிகமாக ரசித்துப் பாராட்டலாம்.
  •  முக்கியமாக அருங்காட்சியகங்கள் எந்த நாளில் விடுமுறை என்பதை முன் கூட்டியே இன்டெர்னிட்டில் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

 நாள் 3

மூன்றாம் நாள் அதிகாலையிலேயே தயாராகிவிட்டோம். 

ரோமன் ஃபோரம் செல்வதற்கு முந்திய இரவே பஸ் டிக்கட் ஒரு சிகரெட் கடையில் வாங்கி வைத்துக்கொண்டோம். ஆம். பஸ் டிக்கட் பஸ்ஸில் கிடைப்பதில்லை. ஏதேனும் சிகரெட் கடையிலோ, அல்லது  நியூஸ் பேப்பர் கடையிலோதான் விற்கப்படுகிறது. ஒரு டிக்கட் விலை 1.30 யூரோ. ஒண்ணேகால் மணி நேரத்துக்குள் எத்தனை தடவை வேண்டுமானாலும் உபயோகித்துக்கொள்ளலாம். ஒரு நாள் முழுவதும் பயன்படுத்த ஆறு யூரோக்கள். பஸ்ஸில் ஏறியவுடன் பயணிகள் நிற்குமிடத்தில் தொங்கவிடப்பட்ட மிஷினில் பஞ்ச் செய்துகொள்ளவேண்டும். எங்கள் ஹோட்டலின் எதிரிலேயே பஸ் நிறுத்தம். மற்ற பயணிகள் உதவியோடு, ரோம் ஃபோரம் போவதற்கு சரியான  நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டோம். 

கலோசியம் ஒட்டியே உள்ளது ஃபோரம். காலை எட்டு மணிக்கே பார்வையாளர்களுக்கு திறந்துவிட்டார்கள். உள்ளே நிறைய நடக்கவேண்டியிருந்தது. நடக்க, நடக்க அந்த பழங்காலத்து ரோமுக்கே போய்விட்டோம். இணைத்திருக்கும் படங்களிலிருந்தே தெரிந்துகொள்ளுங்கள். ஜூலியஸ் சீசர், அகஸ்டஸ் மற்றும் டிராஜன் பேரரசர்கள் காலத்தில் அவர்கள் பீடமாய் இருந்த இடம் இப்பொழுது எப்படி இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள். ஹாலிவுட்டின் கற்பனையில் இந்த இடம் எப்படி இருந்திருக்கும் என்பதை BENHUR, CLEOPATRA போன்ற பழைய ஆங்கிலப் படங்களை பார்த்திருந்தால் தெரியும்.  

   
                             
          
              

             
முந்திய நாளுடைய HOP ON  பஸ் டிக்கட் 24 மணி நேரத்துக்கு பயன்படுத்தலாம் என்பதால், முதல் ட்ரிப்புக்கு கலோசியம் வெளியே அது வந்து சேரும் நேரத்தை ஏற்கெனவே தெரிந்து வைத்துக்கொண்டிருந்தோம். சரியாக முதல் பஸ்ஸை பிடித்து, வாடிகன் நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டோம். ம்யூசியம் நுழைவு வாயிலருகே ஒரு ரெஸ்டாரண்ட் வாசலில், வாடிகன் டூரின் கைடு எங்களுக்காக காத்திருந்தார்.  நாங்கள் கொஞ்சம் லேட். ம்யூசியம் நுழைவு டிக்கெட், கைடு விவரிப்பதை நாம் வசதியாக கேட்டுக்கொள்ள கையில் ஒரு சின்ன கருவி – TRANSMITTOR RECEIVER – மற்றும் காதில் மாட்டிக்கொள்ள ஹெட் ஃபோன் சகிதமாக வாடிகன் ம்யூசியம் உள்ளே நுழைந்தோம்.

வாடிகன் ம்யூசியம் ஒரு தனி உலகம். எத்தனை எத்தனை வண்ண ஓவியங்கள், பளிங்குக்கல் சிலைகள், வண்ண வண்ண கூரைகள், ஃப்ரெஸ்கோஸ் என்று கூறப்படும் சுவரோடு சுவராகவே வரையப்பட்ட, பிரிக்கமுடியாத ஓவியங்கள் ….. ஒவ்வொன்றுக்கும் முன்னே நின்று மணிக்கணக்கில் நேரம் செலவிடலாம். கைடு மிகப் பொறுமையாக ஒவ்வொன்றையும் விளக்கிக்கொண்டிருந்தாள். கூட்டம் கூட்டமாக பல சுற்றுலாக் கும்பல்கள். கைடுகளை அடையாளம் கண்டுகொள்ள அவர்கள் கையில் ஒரு வண்ணக்கொடி. பல ஓவியங்களின் ஒரிஜினல் தனி அறைகளில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பார்த்ததில் பல, பிற்காலத்தில் பலர் வரைந்த, செதுக்கிய நகல்கள்தான். ஒவ்வொரு நாளும் இருபது முப்பதுனாயிரம் சுற்றுப்பயணிகள் வருகிறார்கள். எங்கு பார்த்தாலும் நம் திருப்பதி கோவில் மாதிரி தலைகள்தான் தெரிந்தன. 
                             
                                                      

                       
       
வாடிகனுக்குள்ளே அமைந்திருக்கும் புனித பீட்டரின் கோவில் (ST.PETER’S BASCILLICA) பிரமிக்கவைக்கும் இன்னொரு அதிசயக் கட்டிடம்.  உலகிலேயே மிகப் பெரிய கோவில்களில் ஒன்று. ரொம்பவும் புனிதமாகக் கருதப்படும் கோவிலும் இதுதான். யேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் மிக மிக முக்கியமானவராக கருதப்பட்டவரும், முதல் போப்பாண்டவருமான புனித பீட்டரின் உடல் இங்கேதான் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. 4-ஆம் நூற்றாண்டில் ஆண்ட மாபெரும் கான்ஸ்டன்டைன் என்ற மன்னர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு கோவிலை அகற்றிவிட்டு, 1506-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி இப்பொழுது காணப்படும் புதிய கோவிலை கட்டத் தொடங்கி 1626-ஆம் ஆண்டு, நவம்பர் 18-ஆம் தேதி முடித்ததாக அறிகிறேன்.  கோவாவில் பாஸ்ஸிலிகா என்றழைக்கப்படும் சில பெரிய கோவில்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், வாடிகனிலுள்ள புனித பீட்டரின் கோவில் மிக மிகப் பெரியது. பார்க்க கொடுத்து வைத்திருக்கவேண்டும். இணைத்திருக்கும் படங்களைப் பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளுங்கள். இந்தக் கோவிலின் உயரம் 452 அடி. கோவிலின் மத்தியிலுள்ள கூரையின் (DOME) விட்டம் சுமார் 137 அடி. கோவிலின் சுவர், கூரை முழுவதும் பிரபல ஓவியர்கள் வரைந்த வண்ண ஓவியங்கள். இந்தக் கோவிலைக் கட்டுவதில் ரஃபேல், மைக்கேல் ஏஞ்செலோ, மற்றும் பெர்னினி போன்ற உலகப் புகழ்பெற்ற கலைஞர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. முக்கியமாக, மைக்கேல் ஏஞ்செலோ 452 அடி உயர கூரையின் உள் பகுதிக்கு வண்ணம் தீட்டும் பொழுது, பதினைந்து வருடங்களுக்கு சாளரங்களில் படுத்துக்கொண்டே வண்ணம் தீட்டினார் என்பதை கற்பனை செய்து பார்க்கும்பொழுது அவர் எவ்வளவு பெரிய கலைஞர் என்ற பிரமிப்பு ஏற்பட்டது.


  
  
எங்களது வாடிகன் பயணம் மதியம் சுமார் இரண்டு மணிக்கு முடிந்தது. நடந்து நடந்து கால்கள் கெஞ்சின. 

நான்கு மணிக்கு ரோமிலிருந்து நேப்பிள்ஸ் செல்ல எங்களுக்கு ரயில் டிக்கெட் ரிசெர்வ் செய்திருந்ததால் நாங்கள் உடனே ஒரு டாக்ஸி பிடித்துக்கொண்டு (மீட்டர் டாக்ஸியா என்று உறுதி செய்துகொண்டு டாக்ஸியில் ஏறுவது  நல்லது என்பதைத் தெரிந்தும் தவறான ஒரு டாக்ஸியில் ஏறிக் கொஞ்சம் ஏமாந்துகொண்டோம். டாக்ஸி ஓட்டிய பெண்மணி வாய் ஓயாமல் யாருடனேயோ – காதலருடனாக இருக்கவேண்டும் என்று எனது அனுமானம் – பேசிக்கொண்டே வண்டி ஓட்டினாள். கோபம், கெஞ்சல், வற்புறுத்தல், மிரட்டல் எல்லா தொனியும் அவள் பேச்சில் தெரிந்தது.) ஹோட்டல் வந்து சேர்ந்து, மீண்டும் இன்னொரு டாக்ஸி ஹோட்டல் மூலமாக ஏற்பாடு செய்து ‘ரோம் சென்ட்ராலே’ ரயில் நிலையம் வந்து சேர்ந்தோம். (இத்தாலி மொழியில் எல்லா வார்த்தைகளுக்கு ஒரு ‘ஆ’ ‘ஏ’ சேர்த்துக்கொள்ளவேண்டும் போலிருக்கிறது).

இத்தாலியில் எங்களது முதல் ரயில் பயணம்.  நவீன மயமான ரயில் நிலையம். பாதாளத்தில் மெட்ரோ ரயில் ஓடியது. ரோம் நகருக்கு மீண்டும் வருவதாக சொல்லி விடைபெற்றுக்கொண்டோம்.
                                                                    …                                                          தொடரும்



No comments:

Post a Comment