Total Pageviews

Sunday, April 27, 2014

My Italy Tour - Part 5: Venice

எனது இத்தாலி பயணம் – பகுதி 5: வெனிஸ்

                                      


நாள் 7

முந்திய இரவே கட்டி வாங்கிக்கொண்ட எங்கள் காலை உணவையும் சுமந்துகொண்டு வெனிஸ் நகரத்தைப் பற்றி பலவிதமான கற்பனைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் அன்று காலை, வெனிஸ் செல்வதற்கு ரயில் ஏறினோம். ஃப்ளோரென்ஸின் அனுபவங்கள் மனதை சந்தோஷப்படுத்தியிருந்தன.

கடல் தண்ணீருக்கு நடுவில் மிதக்கும் வெனிஸ் நகரை முதன் முதலாக திரையில் ராஜ்கபூரின் ‘சங்கம்’ ஹிந்தி படத்தில் பார்த்ததாக ஞாபகம். வெனிஸிலுள்ள கட்டிடங்கள் எல்லாம் எப்பொழுது வேண்டுமானாலும் தண்ணீர் அரக்கனால் மூழ்கடிக்கப்படலாம் என்று பயப்படும் நகரம். கார், சைக்கிள், என்று எதுவும் தெருக்களில் ஓடாத நகரம். இத்தாலியின் வடகிழக்கு பகுதியில், அட்ரியாடிக் கடலின் (ADRIATIC SEA) வளைகுடாவில் (BAY) 118 தீவுகளுக்கிடையே, 177  கால்வாய்களால் பிரிக்கப்பட்டும் 409 பாலங்களால் இணைக்கப்பட்டும் வெனிஷியன் லகூனில் (VENETIAN LAGOON) அமைந்துள்ளது இந்நகரம்.. இத்தாலியின் வெனிடோ என்றழைக்கப்படும் பகுதியின் தலை நகரமும் ஆகும்.

பண்டைய காலங்களில் வெனிஸ் ஒரு குடியரசு நாடாக இருந்தது. கடல் வாணிபத்துக்கும், கப்பல் மாலுமிகளுக்கும் பெயர் பெற்றிருந்தது. 12–13-ஆம் நூற்றாண்டின் உலகப்புகழ் பெற்ற மாலுமியான மார்கோ போலோவுடைய ஊரும் இதுதான்.

தண்ணீரில் அழுகாத ஆல்டர் (ALDER) என்ற மரக்கட்டைகளை ஆழ் துளைகளில் (PILES) செலுத்தி அதன் மீது அஸ்திவாரத்தை நிற்க வைத்து கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார்கள்.. உயர்ந்த கடல் அலைகள் இந்நகரத்தின் பல பகுதிகளில் அடிக்கடி புகுந்து சேதம் விளைவித்திருக்கின்றன.

கி.பி 827-ல், பைசன்டைன் கோமகன் (BYZANTINE DUKE) தன்னுடைய தலைமையிடத்தை ரியால்டோ (RIALTO) என்கிற வெனிசின் ஒரு பகுதிக்கு மாற்றினார். ரோமர்களின் பாணியில் ஏற்படுத்தப்பட்ட சட்டசபைக்கு டோகே (DOGE) என்றழைக்கப்பட்டவர்கள் தலைமையில் வெனிஸின் வாணிபம் தழைத்தோங்கியிருக்கிறது. 1797-ஆம் ஆண்டு மே, 12-ஆம் தேதி ஃப்ரென்ச் பேரரசர் நேபோலியன் போனபார்ட் வெனிசைக் கைப்பற்றிய பின்பு இந்நகரம் ஃப்ரான்ஸ், ஆஸ்திரியா, இத்தாலி இந்த மூன்று நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் மாறி மாறி பந்தாடப்பட்டிருக்கிறது.

மெஸ்த்ரே (MESTRE) என்கிற ரயில் நிலையம்தான் தரைப்பகுதியின் கடைசி நிலையம். அதைத் கடந்தால் கடல் தாண்டி வெனிஸ் நகரத்துக்குள் ரயில் சென்றடைகிறது. ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்து எதிரே தொட்டார்போல் இருந்த கால்வாயைப் (CANAL) பார்த்த பொழுது உடம்பு புல்லரித்தது. நாங்கள் கற்பனை செய்ததற்கும் மேலேயே வெனிஸ் நகரம் முதல் பார்வையிலேயே எங்களை கவர்ந்துவிட்டது.

ஒவ்வொரு நாளும் ஐம்பதினாயிரம் சுற்றுலாப் பயணிகளுக்கு மேல் இந்நகரத்துக்கு வருகிறார்கள். நவநாகரீகத்துக்கு பெயர்பெற்ற இந்த ஊருக்கு வந்து விலையுயர்ந்த விடுதிகளில் தங்கி,  நேரத்தை போக்குவது என்பது பல பெரிய பணக்காரர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு.

வெனிஸ் நகரில் கலை, நாட்டியம், நாடகம், இலக்கியம் வளர்ந்திருக்கிறது  ஷேக்ஸ்பியரின் ‘MERCHANT OF VENICE’ பிரபல நாடகம் ஞாபகம் இருக்கலாம்.

நாங்கள் முன்பதிவு செய்திருந்த ஹோட்டல் மற்ற இடங்களைப்போலவே மிக அருகாமையிலேயே இருந்தது. செக்-இன் செய்யக்கூடிய நேரம் 12 மணிக்கு மேல்தான் என்பதால், எங்களுடைய சாமான்களை ஹோட்டல் வரவேற்பிலேயே விட்டுவிட்டு ஊர்சுற்றக் கிளம்பிவிட்டோம். இந்த ஹோட்டலில் லிஃப்ட் கிடையாது என்பதால், முதல் மாடியிலேயே அறை ஒதுக்கச் சொல்லி கேட்டுக்கொண்டோம்.

ஹோட்டலின் எதிரிலேயே சிறிய கால்வாய் (CANAL). கால்வாயின் எதிர்புறத்தில் படகு நிற்கும் நிறுத்தம். பயணிகளையும், சரக்குகளையும் ஏற்றிச்செல்லும் படகுகள் அடிக்கடி குறுக்கே போய்கொண்டிருந்தன. ஊருக்குள் சுருக்கமாக எங்கு போக வேண்டுமானாலும் படகுதான், இல்லையென்றால் விறு, விறுவென்று பல குறுகிய தெருக்களுக்கூடே நடக்கவேண்டியதுதான். அங்கங்கே கால்வாயில் பஸ் நிறுத்தம் போல் படகு நிறுத்தங்கள் இருக்கின்றன. ஒரு முறை பயணிப்பதற்கு எட்டு யூரோக்கள். ஒரு நாள் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பயணிக்க பதினெட்டு யூரோக்கள். புனித மார்க்க்கின் சதுரம் (ST.MARK SQUARE) வெனிஸில் மிக முக்கியமான இடம். அங்கே செல்வதற்கு அருகிலுள்ள நியூஸ் பேப்பர் கடையில் டிக்கட் வாங்கிக்கொண்டோம். . ஆனால் யாரும் எங்களிடம் டிக்கெட் இருக்கிறதா என்று பரிசோதிக்கவில்லை.

கோண்டோலா (GONDOLA) இந்த ஊர் படகின் பழமையான பெயர். இந்த கோண்டோலாவில் ஒரு அரை மணி நேரம் படகோட்டி பாடிக்கொண்டே உங்களை அழைத்துப் போவதற்கு ஐம்பது யூரோக்களுக்கும் மேலேயே வாங்கிக்கொள்கிறார்.

சிறிய கால்வாய் வழியே சிறிது தூரம் சென்ற பிறகு, திருப்பிப்போட்ட S வடிவம் கொண்ட, நான்கு மைல் நீளமுள்ள பெரிய கால்வாயில் (GRAND CANAL) படகு நுழைந்தது. இரு புறமும் கட்டிடங்கள், விடுதிகள், அலுவலகங்கள், நடைபாதைகள். 


முக்கியமாக, வளைவான நுழைவாயில்களைக் (ARCHES) கொண்ட ஃபோன்டாகோ வீடுகளைப் (FONTACO HOUSES) பற்றிச் சொல்லவேண்டும். இவை வியாபாரிகளின் வீடுகளாகவும் தங்கள் சரக்குகளை பத்திரப்படுத்தி வைக்கும் கிடங்குகளாகவும் கட்டப்பட்டிருக்கின்றன. முன் வாசலில் படகிலிருந்தது சரக்குகளை இறக்குவதற்கு வசதியாக போர்ட்டிகோ அமைந்திருக்கிறது. இவைகளைத் தவிர, பதினைந்தாம் நூற்றாண்டின் அழகான பல அரண்மனைகள். 

படகு பயணம்  இனிமையாகவே இருந்தது. ஒரு மணி நேரத்துக்கு  பெரிய கால்வாயை சுற்றிப் பார்க்கும் டூர்களுக்கு ஐம்பது யூரோக்களுக்கு மேல் கட்டணம். அதற்கு தேவையில்லாமல் போனது.

பல நிறுத்தங்களைத் தாண்டி, புனித மார்க்கின் சதுரத்தில் இருந்த படகுத்துறையில் இறங்கிக்கொண்டோம். பெரிய கால்வாயின் எதிர்புறத்தில் பனிமூட்டத்துக்கிடையே பிரம்மாண்டமாக தோற்றமளித்தது தூரத்திலிருந்த புனித மேரியின் கோவில் (SANTA MARIA Della SALUTE).

புனித மார்க்கின் சதுரம் சுற்றுலாப் பயணிகள் ஒட்டு மொத்தமாக கூடும் ஒரு பெரிய கூடம். பியாஸா சேன் மார்கோ (PIAZAA SAN MARCO) என்று இத்தாலியில் அழைக்கிறார்கள். மத்தியில் புனித மார்க்கின் கோவில் (BASCILLICA என்கிற CHURCH). 

முன் பக்கத்தின் மூன்று புறங்களிலும் பெரிய வளைவுகளுடன் கூடிய நுழைவாயில்களைக்கொண்ட உயர்ந்த கட்டிடங்கள். கோவிலின்  நுழைவாயிலின் மேற்கூரையில் இருந்த நான்கு குதிரைகள் சரித்திரப் புகழ்பெற்ற அடையாளங்கள்.  

கோவிலின் ஒரு புறம் பிரபலமான மணிக்கூண்டு.


எதிர்புறத்தின் ஒரு பக்கத்தில் புனித மார்க்கின் கோவிலின் கம்பெனைல் (ST.MARK CHURCH’S COMPANILE) என்றழைக்கப்படும் உயர்ந்த கோபுரம். அங்கங்கே உணவு விடுதிகள். அவற்றின் முன்னே அழகான வர்ணங்களில் வெட்ட வெளியில் இடப்பட்டிருந்த இருக்கைகள். இன்னொரு பக்கம் இசைக்குழுக்கள் பல வாத்தியங்களில் இன்னிசையை இலவசமாக வழங்கிக்கொண்டிருந்தன.

 
 

வெண் புறாக்கள் இங்கும் அங்குமாக சுற்றுலாப் பயணிகள் அளித்த பல உணவுகளுக்காக பறந்து திரிந்துகொண்டிருந்தன. இன்னொரு உலகத்துக்கே வந்தது போல் இருந்தது.

முரானோ, புரானோ மற்றும் டார்செலோ (MURANO, BURANO AND TORCELLO) என்ற மூன்று தீவுகளைச் அடுத்த நாள் படகில் சுற்றிப் பார்ப்பதற்காக நாங்கள் முன்பதிவு செய்திருந்தோம். ஆனால், அடுத்த நாள் படகோட்டிகள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிந்தோம். அதனால், அந்த பயணத்தையும் அன்றே முடித்துவிடலாம் என்ற எண்ணத்துடன் அருகிலுள்ள அலிலாகுனா (ALILAGUNA) என்ற படகுத்துறைக்கு சென்று எங்கள் டிக்கெட்டை மாற்றிக்கொண்டோம். மதியம் இரண்டு மணிக்கு அந்த சுற்றுலா கிளம்புவதாக கூறினார்.

நாற்பத்தைந்து நிமிட படகுப் பயணத்துக்குப் பின் எங்கள் படகு ஒன்றரை மைல் தூரத்திலிருந்த முரானோ என்ற தீவில் நின்றது. வண்ண வண்ண வேலைப்பாடுகள்  கொண்ட கண்ணாடி பொருட்கள் தயாரிக்கும் பல தொழிற்சாலைகள் நிறைந்தது இந்த தீவு. அப்படி ஒரு தொழிற்சாலைக்கு எங்களை அழைத்துக் கொண்டு போனார்கள். கால்களைத் தூக்கிக்கொண்டு நிற்கிற ஒரு குதிரையை கிறிஸ்டல் கண்ணாடியில் ஐந்து நிமிடத்தில் செய்துகாட்டினார்கள். விற்பனைக்கு பார்வைக்காக வைத்திருந்த கண்ணாடிப் பொருட்களெல்லாம் எக்கச்சக்க விலை.
 



அடுத்ததாக டார்செலோ என்ற இயற்கையாக அழகான தீவுக்கு அழைத்துப் போனார்கள். கொஞ்ச தூரம் நடந்து சென்றால் ஒரு பழைய சர்ச். அதை சுற்றியுள்ள இடங்களைப் பார்த்தோம்.

அதற்கும் அடுத்ததாக புரானோ என்ற தீவு. இங்கு லேஸ் ஒர்க்ஸ் (LACE WORK) என்ற நுண்ணிய கைவேலைப்பாடுகள் கொண்ட துணிமணிகள், ஆடைகள், மேசை விரிப்பு கள், சுவரில் தொங்கவிடப்படும் துணிகள், திரைகள் போன்றவற்றை தயாரிக்கிறார்கள்.  ஒவ்வொன்றும் யானை விலை, குதிரை விலைதான்.



மாலை ஆறு மணிக்கு மீண்டும் அலிலாகுனா படகுத்துறைக்கு திரும்பினோம். பல சந்து பொந்துகளின் வழியாக நடந்து மீண்டும் எங்கள் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். இந்த குறுகிய சந்து பொந்துகளைத்தான் ரோடு என்றழைக்கிறார்கள். வழியில் பளிச் பளிச்சென்று விளக்கொளியில் ஜொலித்த கடைகளை பராக்கு பார்த்துக்கொண்டே வந்தோம். வீதியோரக் கடைகளில் பழங்கள், காய்கறிகள் தாராளமாக ஃப்ரெஷ்ஷாகக் கிடைக்கின்றன. சுற்றுலாப் பயணிகளுக்காக கடைகளை இரவு தாமதமாகத்தான் மூடுகிறார்கள். இரவு நேரத்தில் வெனிஸ் நகரம் இன்னும் அழகாக இருந்தது. அங்கங்கே பல சிறிய ரெஸ்டாரென்டுகளில் சாண்ட்விச், காஃப்பி விலை குறைவாக கிடைக்கிறது. வெஜிடேரியன்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

மனதுக்கு ரம்மியமான இந்த ஊரில் ஒரு சிறிய இடம் கிடைத்தால், இங்கேயே தங்கிவிடலாம் என்றுகூட தோன்றியது. சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஸ்காட்லாந்து சென்ற போதும் இது போன்ற எண்ணம் எங்களுக்கு தோன்றியது. . ஆனால், உலகத்திலேயே நிலத்தின் மதிப்பு மிக மிக அதிகமாக உள்ள நகரங்களில் வெனிஸும் ஒன்று என்பதனால், நிச்சயமாக கிடைக்காது என்ற நம்பிக்கையில் என் மனைவியும் கொஞ்சம் தயக்கத்துடன் ஒத்துக்கொண்டாள்.    
நாள் 8
இன்று, காலை மீண்டும் புனித மார்க்கின் சதுரத்திற்கு நடந்து போனோம். புனித மார்க்கின் கோவில், அதன் மேல்மாடி, புனித மார்க்கின் கோபுர உச்சி இவைகளைப் பார்த்தோம்.

புனித மார்க்கின் கோவில், கிழக்கு ரோமர்களின் பேரரசு என்றறியப்பட்ட இரண்டாம் முதல் எட்டாம் நூற்றாண்டின் பைஸாண்டின் சாம்ராஜ்யத்தின் (BYZANTINE KINGDOM) (அதன் தலைநகரம் கான்ஸ்டாண்டினோபிள், துருக்கியின் இன்றைய இஸ்தான்புல்.) கட்டிடக்கலையின் அமைப்பில் கட்டப்பட்டது. இந்தக் கோவிலின் வடிவமைப்புக்காகவும், தங்க நிற மொசைக் கற்களாலான உள் கூரைகளுக்காகவும் இந்தக் கோவில் வெனிஸின் பொற்கோவிலாக கருதப்பட்டு வருகிறது.



இந்தக் கோவிலையொட்டி இடதுபுறத்தில், வெனிஸ் நகரின் டோகேயின் அரண்மணை. (DOGE’S PALACE) DOGE என்பவர் நகரத்தை பரிபாலிக்கும் மாஜிஸ்ட்ரேட் பதவிபோல. இப்பொழுது இந்தக் கட்டிடம் ஒரு அருங்காட்சியகம். சுமார் கி.பி 828-ல், வெனிஸின் வியாபாரிகளால், யேசுவின் 70 சீடர்களில் முக்கியமான ஒரு சீடரான மார்க்கின் அடையாளங்கள் எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து திருடப்பட்டு வெனிஸுக்கு கொண்டு வரப்பட்ட சமயத்தில் இந்த கோவில் முதன் முதலாகக் 832-ல் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், 976-ல் நடந்த இன்னொரு எழுச்சியின்போது இந்தக் கோவில் எரிக்கப்பட்டு தரை மட்டமாக்கப்பட்டது. பின்னர், மீண்டும் அதே இடத்தில் 1073-வாக்கில் இப்பொழுது காணப்படும் கோவில் கட்டப்பட்டது. 1204-ல், கான்ஸ்டாண்டினோபிள் கொள்ளையடிக்கப்பட்டபொழுது நான்கு உலோகக் குதிரைகளின் சிலைகளை அங்கிருந்து கொண்டுவந்து 1254-ல் புனித மார்க்கின் கோவில் மேற்கூரையில் வைத்தனர். பின்னர், 1797-ல், நேபோலியன் வெனிஸைக் கைப்பற்றியபோது, இந்த குதிரைகள் இங்கிருந்து ஃப்ரான்ஸ் நாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டு, 1815-ல் மீண்டும் வெனிஸுக்கு திருப்பப்பட்டன.

இப்பொழுது காணப்படும் 323 அடி உயரமுள்ள புனித மார்க்கின் கோபுரம் (ST.MARK’S COMPANILE) 1902-ல் இடிந்து விழுந்தது. பின்பு 1912-ல் புதுப்பிக்கப்பட்டது. மேலே செல்வதற்கு லிஃப்ட் வைத்திருக்கிறார்கள். உச்சியில் ஒரு சிறிய தளத்தில் ஐந்து ராட்சச மணிகளை தொங்கவிட்டிருக்கிறார்கள்.
  


கீழிறங்கிய பின்பு, சிறிது நேரம் என் மனைவி அந்த சதுரத்தில் பறந்து கொண்டிருந்த புறாக்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். ரொம்ப தைரியம் தான்.


பின்பு, நாங்கள் புனித மேரியின் கோவிலுக்குப் (SANTA MARIA della SALUTE) போவதற்கு நடக்கத் தொடங்கினோம். கால்வாயின் குறுக்கே நடக்க முடிந்தால் ஒரு ஐந்து நிமிட தூரம்தான். மீண்டும் பல சிறிய சந்து பொந்துகளின் வழியாக ஒரு முக்கால் மணி நேரம் நடந்து –– அக்காடேமியா பாலத்தை (PONTE ACCADEMIA) கடந்து - புனித மேரியின் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். (இந்தப் பாலத்தில் பிரபலமான இத்தாலியின் பூட்டுக்களை விற்றுக்கொண்டிருந்தார்கள்.

பெரிய கால்வாய்க்கும், கடல்பகுதிக்கும் நடுவே ஒரு கை விரல் போலத் தோற்றமளிக்கும் ஒரு சிறிய நிலப்பகுதியில் அமைந்திருக்கிறது 1630-ல் ப்ளேக் (PLAGUE) என்ற கொடிய வியாதி வெனிஸை தாக்கியபோது, உடல் நலத்தைப் பேணிக்காக்கும் மேரி மாதாவுக்கு கோவில் கட்டுவதாக மக்கள் பிரார்த்தனை செய்தார்கள். அதன் பலனாக கட்டப்பட்டது இந்தக்  கோள வடிவம் கொண்ட கோவில். இந்தக் கோவிலின் மேற்கூரை (DOME) பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் அளவுக்கு தூரத்திலிருந்தே வானத்தில் தெரிகிறது.
                  





பிறகு, அந்த விரலின் முனையில் போய் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தோம். இரண்டு பக்கமும் ஆழமான கடல். எந்தவித பாதுகாப்பும் இல்லாத இந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகளை எப்படித்தான் அனுமதிக்கிறார்களோ தெரியவில்லை.

மீண்டும் திரும்பி நடந்தோம். வெனிஸின் இன்னொரு முக்கியமான இடம் ரியால்டோ பாலம், ரியால்டோ மார்க்கெட். வெனிஸில் பெரிய கால்வாயின் குறுக்கேயுள்ள நான்கு முக்கியமான பாலங்களில் இதுவும் ஒன்று. வாணிபத்துக்கு ரியால்டோ மார்க்கெட் ஒரு முக்கியமான இடம்.








பல சிறிய சிறிய சந்துகளினூடே நடந்தால் கணக்கிலடங்காத அளவுக்கு கடைகள். பல கட்டிடங்களின் வெளிச்சுவர்கள் இடிந்து காணப்பட்டன. ஆனால், உள்ளே கடைகளோ நவநாகரீக வசதிகளுடன் இருந்தது. முரானோ தீவில் தயாரிக்கப்பட்ட கண்ணாடி கைவினைப் பொருட்களின் கடைகள் அனேகம். ஜன்னல்களூடே தெரிந்த பொருட்களையெல்லாம் கண்ணாலேயே வாங்கிக்கொண்டு களைத்துப்போய் இரவு நேரத்தில் விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.

அடுத்த நாள் அதிகாலை 6.15-க்கு எங்களுக்கு மீண்டும் ரோம் செல்வதற்கு ரயில் டிக்கெட் இருந்தது.

தொடரும் ………………………………….. 

No comments:

Post a Comment