இந்த
வார நாட்க்குறிப்பு
24.03.17:
இன்று என் தகப்பனாரின் 44-ஆவது நினைவு தினம்.
இன்று, என் தகப்பனார், காலம் சென்ற திரு
டீ. என். நடராஜன் அவர்களின் 44-ஆவது நினைவு தினம். உடல் நலக் குறைவால் இரண்டு ஆண்டுகளுக்கு
மேல் அவதிப்பட்டு 1973 ஏப்ரலில் தனது 54-ஆவது வயதில் காலமானார்.
அவர் காலமான சமயத்தில் நான் டில்லியில்
வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் காலாமன செய்தியே எனக்கு சுமார் 5-6 மணி நேரத்துக்குப்
பிறகுதான் தந்தி மூலமாகத் தெரிய வந்தது. உடனடியாக விமானம் மூலம் சென்னைக்குப் பறந்து
செல்ல பல நண்பர்கள் என்னை விழைந்தனர். வேலை பார்க்கத் தொடங்கி மூன்று வருடங்களே ஆகியிருந்தன.
படிப்பதற்கு நான் வாங்கிய கடன், தகப்பனார் உடல் நலக் குறைவினால் முழுச் சம்பளம் இல்லாமல்
வீட்டிலேயே ஓய்வெடுத்திருந்த சமயங்களில் குடும்பத்தை நடத்த வாங்கிய கடன், மாதா மாதம்
வீட்டுச் செலவுக்குப் பணம் இப்படி என்னுடைய வருமானத்தைச் செலவழித்ததில் என்னுடைய நிதி
நிலைமை நெருக்கடியில் ஓடிக்கொண்டிருந்தது.
விமானம் மூலம் சென்னையை அடைந்தாலும் அங்கிருந்து திருநெல்வேலி போய்ச் சேருவதற்கு இன்னொரு
பன்னிரண்டு மணி நேரம் ஆகும். அதுவும் டாக்சி வைத்துக் கொண்டால்தான். அதையெல்லாம் கருத்தில்
கொண்டு, மனதைக் கல்லாக்கிக் கொண்டு என்னால் இறுதிச் சடங்குகளுக்கு உடனேயே வர முடியாததை
வீட்டுக்கு மறு தந்தி மூலம் தெரியப்படுத்தினேன். இறுதிச் சடங்குகள் என் தம்பியை வைத்து
நிறைவேறின. நான் அன்றிரவு ஜி. டி. எக்ஸ்ப்ரஸ் பிடித்து சுமார் 40 மணி நேரம் கழித்து
சென்னை போய்ச் சேர்ந்து பின்னர் அன்று மாலை மீண்டும் ஒரு பஸ் பிடித்து என் தகப்பனார்
இறந்த நான்காம் நாள்தான் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். என் அம்மாவைப் பார்ப்பதற்கு
பரிதாபமாக இருந்தது. அவர்களுக்கு அப்பொழுது சுமார் 43 வயதுதான் ஆகியிருக்கும். நீண்ட காலம் அவர்கள் விதவையாக கழிக்க வேண்டியிருப்பதை
நினைத்து வருந்தினேன். மனதை மீண்டும் கல்லாக்கிக் கொண்டு என் அழுகையை கூடிய வரை மறைத்து
மீதமிருந்த குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாரானேன்.
என் தகப்பனாரை நினைவு கூறும் பொழுது முக்கியமாக
ஒரு சில விஷயங்கள் எனக்குத் தோன்றின.
முதலாவது … ஆங்கில மொழியின் மீது பற்று.
ஆங்கிலப் புத்தகங்கள், செய்தித் தாள்கள் படிப்பது இரண்டும் எனக்கு என் தகப்பனாரிடமிருதுதான்
வந்திருக்க வேண்டும். நாங்கள் வசித்த பகுதியில்
தினமும் ‘தி ஹிந்து’ செய்தித்தாளை பல செலவுகளுக்கிடையேயும் சந்தா கட்டி வாங்கிப் படிப்பார்.
முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை ஒரு வரி கூட விடாமல் தினமும் படித்து விடுவார்.
அவர் அந்தக் காலத்து எஃப். ஏ (F.A). பின்னால் வந்த Pre-University-க்கு சமம் என்று
நினைவு.) பிற்காலத்தில் ‘தி ஹிந்து’ செய்தித் தாளை இன்றும் கூட (படிக்கப் பிடிக்காவிட்டால்
கூட) தொடர்ந்து படித்து வரும் எனக்கு இப்படித்தான் ஒரு ‘படிப் பழக்கம்’ ஏற்பட்டது என்று
நினைக்கிறேன்.
பள்ளியின் ஆங்கிலப் பாடங்களை நான் வீட்டில்
படிக்கும் சமயம் என்னை பாடங்களை உரக்கப் படிக்க சொல்வார். அடிக்கடி என்னைத் திருத்துவார்.
அப்பொழுது எனக்கு எரிச்சலாக இருக்கும். ஆனால், இன்றைக்கும் ஆங்கில மொழியின் மீது எனக்கு
அதீதமான காதல் இருப்பதற்கு அன்றைக்கு ஆங்கிலப் பாடங்களை உரக்கப் படிக்கச் சொல்லி அவர்
என்னை பல இடங்களில் திருத்தியது ஒரு முக்கியமான காரணமாக இருக்க வேண்டும்.
இரண்டாவது, ஹிந்திப் பாடல்களின் மீதும்,
ஆங்கில திரைப்படங்களின் மீதும் எனது மோகம் என் தகப்பனாரிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும்.
அவர் பொதுவாக தமிழ் திரைப்படங்களைப் அதிகம் பார்த்ததாக எனக்கு நினைவில்லை. ஆனால், பல
ஆங்கிலப் படங்களைப் பார்த்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும். அன்றைய காலங்களில்
1950-களின் முடிவிலும் 1960-களின் ஆரம்பங்களிலும் திருநெல்வேலியில் வார இறுதியில் மட்டும்
காலைக் காட்சி நேரத்தில் ஒரு சில ஹிந்தி மற்றும் ஆங்கிலப் படங்களை திரையிடுவார்கள்.
அப்படித்தான் லாரல் மற்றும் ஹார்டியின் பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். வெகு சில
ஆங்கிலப் படங்களே வழக்கமான காட்சி நேரங்களில் திரையிடுவார்கள். MY FAIR LADY,
JERRY LEWIS MOVIES, ALFRED HITCHKOK MOVIES, JAMES BOND MOVIES, CLEOPATRA – இப்படி
ஒரு சில படங்கள். ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் என் தகப்பனாருக்கு மிகப் பிடித்த இயக்குனராக
இருந்திருக்க வேண்டும். ஹிட்ச்காக்கின் PSYCHO படத்தை மிகவும் விரும்பிப் பார்த்திருக்கிறார்.
அதைப் பற்றி என்னிடம் விமரிசனமும் செய்திருக்கிறார். பிறகு ஒரு சமயம் அதே ஹிட்ச்காக்கின்
BIRDS படம் திரையிடப்பட்ட போது (திருநெல்வேலி பார்வதி தியேட்டர் என்று நினைவு) வீட்டுக்குத்
தெரியாமல் நான் அந்தப் படத்தைப் பார்ப்பதற்கு திரையரங்கத்தில் போய் உட்கார்ந்தால் வீட்டுக்குத்
தெரியாமல் அவரும் அந்தப் படத்தை பார்ப்பதற்கு வந்திருந்தார். என்னுடைய இருக்கைக்கு
முந்தைய வரிசையில் அமர்ந்திருந்தார். இருவருக்கும் ஒரு நிமிட அதிர்ச்சி, ஆச்சரியம்.
படம் முடிந்த பிறகு இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் சேர்ந்தே வீடு வந்து
சேர்ந்தோம்.
அது போல, கீழ்நிலை நடுத்தரக் குடும்பங்களின்
வீடுகளில் அன்றைய காலக் கட்டத்தில் ரேடியோ இருப்பது அரிது. ஹிந்தித் திரைப்படப் பாடல்களைக்
கேட்பதில் தீவிர விருப்பம் என் தகப்பனாருக்கு இருந்ததால் பல செலவுகளுக்கிடையே நெல்லை
சந்திப்பில் நெல்லை லாட்ஜுக்கு அருகேயிருந்த ஒரு ரேடியோ கடையிலிருந்து புதியதாக அறிமுகம்
செய்யப்பட்ட ஃபிலிப்ஸ் ரேடியோ டிரான்சிஸ்டர் ஒன்றை வாங்கினார். 200 ரூபாய் விலை என்று
ஞாபகம். மாதா மாதம் 30 ரூபாய் செலுத்த வேண்டும். செலுத்தத் தவறினால் வீட்டுக்கு வந்து
திருப்பி எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். எங்கள் வீட்டில் அன்று முதல் அடிக்கடி
ஹிந்திப் பாடல்கள் எங்கள் டிரான்சிஸ்டரில் ஒலிக்கத் தொடங்கின. இரவு பத்து மணிக்கு ஒலிபரப்பப்
பட்ட ‘ஜெயமாலா’ என்ற ராணுவ வீரர்களின் நேயர் விருப்பம் நிகழ்ச்சியை விரும்பிக் கேட்பார்.
அந்தப் பழக்கம் பின்னால் எனக்கும் தொற்றிக் கொண்டது. ‘ஜனக் ஜனக் பாயல் பாஜே’ என்ற ஹிந்திப்
படம் அவருக்கு மிகவும் விருப்பமான படம். பல முறை தியேட்டரில் பார்த்திருக்கிறார் என்று
நினைக்கிறேன். பல ஹிந்திப் பாடல்களை விசில் மூலமாக இசைப்பார். ஆனால், ஹிந்திப் படங்களைப்
போல் தமிழ்ப் படங்களையோ தமிழ்ப் பாட்டுக்களையோ விரும்பிப் பார்த்ததோ கேட்டதோ கிடையாது.
மூன்றாவது, நான் பத்தாவது படித்து மாவட்டதிலேயே
மூன்றாமிடம் பெற்ற போது என்னை ‘இந்தியா சிமெண்ட்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் குடும்பத்தில்
ஒருவரிடம் கூட்டிச் சென்றார். (திரு. நாராயணன் என்று நினைக்கிறேன்.) தாழையூத்தில் சங்கர்
நகரில் அவரது வீடு இருந்தது. அவருடன் என் தகப்பனாருக்கு எப்படி அறிமுகம் என்பதெல்லாம்
எனக்குத் தெரியாது. எனக்கு சங்கர் பாலிடெக்னிக்கில் சேர்வதற்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
ஆனால், என்ன காரணமோ தெரியாது நான் பாலிடெக்னிக்கில் சேரவில்லை. இன்ஜினியரிங் படிக்க
வேண்டும் என்று நான் வற்புறுத்தி வந்தேன். பண வசதி அதிகம் தேவைப்படும் என்று தெரிந்தும்
நேர்முகத் தேர்வுக்கு என்னை சென்னைக்குக் கூட்டிக்கொண்டு போனார். யாருடைய சிபாரிசும்
எனக்கு இருக்கவில்லை. பிற்காலத்தில் சென்னைப் பல்கலையின் பிரபலமான துணை வேந்தராக இருந்த
திரு. மணிசுந்தரம் (என்றுதான் நினைக்கிறேன்) அவர்களது தலைமையில்தான் நேர்முகத் தேர்வு
நடந்தது என்று ஞாபகம். (தவறாகக் கூட இருக்கலாம்.)
ஆனால், எனக்கு பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு இடம் கிடைக்கவில்லை. எனக்கு
மிகப் பெரிய ஏமாற்றம். பாளையங்கோட்டை செயிண்ட் ஜான்ஸ் கல்லூரியில் பி. யூ. சி படிப்பதற்குச்
சேர்த்து விட்டார். (கொஞ்சம் முரணாகவும் இருக்கலாம். பி. யூ. சிக்குப் பிறகு பொறியியல்
கல்லூரி நேர்முகத் தேர்வுக்குச் சென்றேனா அல்லது பத்தாவது முடித்துப் போனேனா என்று
கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.)
அவர் இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னால்
நான் விடுமுறையில் வீட்டுக்கு வந்த பொழுது அவர் உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையாக
இருந்தார். அப்பொழுது ஏதோ பேச்சுக்கு நடுவே என்னிடம் “உன்னுடைய படிப்புக்கு என்னால்
அதிகமாக உதவ முடியவில்லையே’ என்று கூறி மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டார். ‘அதைப் பற்றி
இப்பொழுது என்ன? எல்லாம் படித்து முடித்தாகி விட்டதே!’ என்று சமாதானப் படுத்த முயற்ச்சித்தேன்.
எனக்கும் மனது வேதனைப் பட்டது ‘அப்பாவை அதிகமாக காயப்படுத்தி விட்டேனோ’ என்று.
பின்னர், 1998-ல் ஸ்ரீஅம்மா பகவானின்
தொடர்பு ஏற்பட்ட பிறகுதான் நான் என் தகப்பனாரோடு கொண்டிருந்த உறவைப் பற்றி தீவிரமாக
மனதுக்குள் அலசி ஆராய்ந்து ஆத்மார்த்தமாக என் தகப்பனாரின் ஆத்மாவிடம் என்னுடைய பல தவறுகளுக்காக
மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டேன். பிறகுதான் எனக்கே நிம்மதி வந்தது.
அவர், இன்று எந்த உலகத்தில் இருந்தாலும்
என்னுடைய குறைகளையும், தவறுகளையும் மன்னித்து மனதில் கொள்ளாமல் என்னையும் என் குடும்பத்தாரையும்
வாழ்த்தும் படி பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.
இந்தக் கட்டுரையை என் தகப்பனாருக்கே சமர்ப்பிக்கிறேன்.
No comments:
Post a Comment