Total Pageviews

Saturday, July 21, 2018

22.07.18 விஷப் பரிட்சை – பாகம் 1


22.07.18 விஷப் பரிட்சை – பாகம் 1

கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் முகநூலிலிருந்தும் என்னுடைய வலைதளத்திலிருந்தும் நான் காணாமல் போயிருந்தேன். என்ன, உடல் நலம் சரியில்லையா என்று கூட ஒரு சிலர் விசாரித்திருந்தார்கள். நல்ல காலம் அப்படியெல்லாம் இல்லை. நான் காணாமல் போன கதைதான் இந்தப் பதிவு.

விரும்பியோ விரும்பாமலோ அமெரிக்காவின் க்ரீன் கார்டை வாங்கிக் கொண்ட காரணத்தினால் நானும் என் மனைவியும் ஆண்டு தோறும் இங்கே வருவது ஒரு கட்டாயமாகி விட்டது. பொதுவாக குளிர்காலத்தை ஃபீனிக்சிலும் கோடை காலத்தை சிக்காகோவிலும் என்றுதான் கழித்து வந்தோம். ஜூலை – டிசம்பர் பொதுவாக இந்தியாவில்.

ஃபீனிக்ஸ் ஒரு பாலைவன நகரம். பாலைவனத்தைச் சோலைவனமாக மாற்றியிருந்தாலும் 1100F சூட்டில் வானத்துக்கு கூரை போட இவர்களால் முடியவில்லை. ஃபீனிக்சில் பள்ளிகளில் ஒரு பழக்கமென்னவென்றால், ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு சிறிய - ஒரு முழு வாரம் - ப்ரேக் கொடுத்து விடுகிறார்கள். மார்ச்சில் ஸ்ப்ரிங்க் ப்ரேக், அக்டோபரில் ஃபால் ப்ரேக், டிசம்பரில் வின்டர் ப்ரேக். கோடையில் மே கடைசி முதல் ஜூலை கடைசி வரை மட்டும் நீண்ட ப்ரேக் - முழு இரண்டு மாதம்.

சிறிய விடுமுறைகளுக்கு குழந்தைகளின் பெற்றோர்கள் எப்படியோ அங்கே இங்கே கூட்டிக்கொண்டு போயும் மாறி மாறி வீட்டிலிருந்து வேலை பார்த்தும் சமாளித்து விடுகிறார்கள். ஆனால்…

கோடை காலத்தில் ஃபீனிக்சில் என் மகள் வழி பேரன் பேத்தி இருவரும் பள்ளிச் சிறுவர்களுக்காக நடக்கும் முழுநேரக் கோடை காம்புக்குப் போய் விடுகிறார்கள். அவர்கள் அப்பா/அம்மா அலுவலகத்துக்குப் போகும் பொழுது காம்பில் விட்டு விட்டு போவார்கள். திரும்பும் பொழுது கூட்டிக்கொண்டு வந்து விடுவார்கள்.

இந்த காம்புகளில் சிறுவர்களை அவர்கள் வயதுக்கேற்ப பலவிதமாக ஈடுபடுத்தி விடுகிறார்கள். நிறைய கற்றுக் கொடுக்கவும் செய்கிறார்கள். ஆனால், என்னுடைய பேரன் பேத்தியைப் பொருத்த வரை காம்ப் என்றால் போர். ஒவ்வொரு நாளும் முனகிக் கொண்டு மனமில்லாமலே இந்த கோடைக் காம்புக்குப் போய் வந்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த வலியை அவர்கள் பொறுத்துக் கொண்டாக வேண்டும்.

என் பேரன் பேத்தி மேல் இருந்த (கண்மூடித்தனமான) ஒரு பாசத்தில் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு நாங்கள் அவர்கள் கூட நேரத்தை செலவிடுகிறோம். அதனால் கோடை காம்புக்குப் போக வேண்டாம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தேன். குழந்தைகளுக்கு ஏகக் குஷி.

வரப் போகும் அபாயத்தையும் என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பதையும் நான் புரிந்து கொள்ளாமல் கொடுத்த வாக்குறுதி என்னை இரண்டு மாதத்துக்குக் கட்டிப் போட்டு விட்டது.

என்னுடைய குணத்தையும் முழுவதுமாக புரிந்து கொள்ளாமல் குழந்தைகளும் என்னை நம்பி என்னுடன் கோடை நேரத்தை செலவிட ஒத்துக் கொண்டு விட்டனர்.

விஷப் பரிட்சை ஆரம்பித்து விட்டது.

கோடையில் அதிகாலை நேரத்தைத் தவிர எந்த நேரத்திலும் வெளியே போக முடியாது. அனல் பறக்கும். உலர்ந்த பருவனிலை. வீட்டுக்குள்ளேயே அடங்கியிருக்க வேண்டும். 9 மற்றும் 6 வயது கொண்ட ஹைப்பர் ஆக்டிவ் பேரன் பேத்தியை சமாளித்தாக வேண்டும்.

நான் ஒரு ‘பிக் பாஸ்’ சும்மா விடுவேனா? என்ன நடந்தது? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(ஓரு இருநூறு முன்னூறு வார்த்தைகளைக் கூடத் தொடர்ந்து படிப்பதற்கு பலருக்கும் இன்று பொறுமையில்லாததால் இத்துடன் நிறுத்திக் கொண்டு நாளை மீண்டும் தொடர்கிறேன்.)

No comments:

Post a Comment