26.07.18 விஷப் பரிட்சை – பாகம் 5 – இறுதி பாகம்
மாடல் பரிட்சையை எழுதி விட்டு
இறுதித் தேர்வுக்குக் காத்திருக்கும் மாணவனின் நிலையில் இன்று நான் இருக்கிறேன். அடுத்த
ஒரு சில தினங்களில் இதே வேலையை என் பையன் வீட்டில் தொடர வேண்டும். ஏனென்றால், அங்கேயுள்ள
என் பேரனுக்கு ஆகஸ்டு மூன்றாம் வாரம் வரை விடுமுறை. இரண்டாம் பேரனுக்கு ‘டயப்பர்’ மாற்ற
வேண்டியிருக்கும். இன்னும் Play School-க்குப் போகத் தொடங்கவில்லை. நாங்கள் ஏற்கெனவே
ஒத்துக் கொண்டது. அங்கே ஃபீனிக்ஸ் போல் இல்லாமல் எல்லாமே எதிராக இருக்கும். நடுவில்
இந்தியாவுக்கே திரும்ப வேண்டியிருக்கலாம். ஒரு நிச்சயமற்ற காலக் கட்டத்தில் நான் இருக்கிறேன்.
ஃபீனிக்சில் என் பேரன் பேத்தியை
இரண்டு மாதங்களாக வீட்டிலேயே வைத்துக் கொண்டு – அதிலும் ஒரு மாதம் மனைவியில்லாமல் நான்
தனியாகவே – கோடை விடுமுறையைக் கழித்ததில் எனக்கு என்ன கிடைத்தது?
கத்தல், கண்டிப்பு, மிரட்டல்,
கெஞ்சல், தாஜா செய்தல், கதையளப்பு, என்று என்னுடைய அணுகுமுறையை மாற்றி மாற்றி செய்து
வந்ததில் ரத்தக் கொதிப்பு ஏறி ஏறி இறங்கி வந்தது. (I am only saying this
figuratively; not in the physical sense.)
கோடை விடுமுறை நாட்கள் முழுவதும்
குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது இதுதான் முதல் முறை. பள்ளிக்குப் போகும் நாட்களில்
குழந்தைகள் ‘பிசி’யாக இருப்பார்கள். ஒரு சில நிமிடங்களுக்கு மேல் அவர்களுடன் நேரம்
செலவிட முடியாது. மாலை நேரங்களில் மாறி மாறி ஏதேனும் விசேஷ வகுப்புகளுக்கு – நீச்சல்,
டேக் வான் டோ, சாக்கர்/கால் பந்து விளையாட்டு, கீ போர்டு வகுப்புகள் என்று பல – பெற்றோர்கள்
கூட்டிக் கொண்டு போய் விடுவார்கள். திரும்பி வரும் சமயம் அகோரப் பசியில் வருவார்கள்.
முரண்டு பண்ணி சாப்பிடுவார்கள். பின்னர் முரண்டு பண்ணி தூங்கப் போய்விடுவார்கள். வார
இறுதியில், பிறந்த நாள் பார்ட்டி, அல்லது ஏதேனும் ஒரு நண்பர் வீட்டில் கொட்டம், அல்லது
விருந்தினர் இப்படி ஓடிப் போய்விடும். பெற்றோர்கள் வீட்டில் இருக்கும் சமயம் குழந்தைகள்
நம்மை எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள். எல்லா யுத்தமும் சமரசமும் பெற்றோர்களுடன் தான்.
அதனால், இந்தக் கோடை விடுமுறையில்
இரண்டு மாதம் பகல் பொழுது முழுவதும் (மாலை 5 மணி வரை) எங்களுடைய கட்டுப்பாட்டில் குழந்தைகள்
இருந்த பொழுது அவர்களுடன் இன்னும் நெருக்கமாக இருப்பதை நான் உணர்ந்தேன். பல நேரங்களில்
விரக்தியின் உச்சத்துக்கு அவர்கள் என்னை எடுத்துச் சென்றாலும், “எங்களுக்கு கேம்ப்
வேண்டாம், அடுத்த ஆண்டும் கோடை விடுமுறையில் வருவீர்களா,” என்று குழந்தைகள் கேட்டால்
“கண்டிப்பாக வருவேன்,” என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அவர்கள் கேட்க மாட்டார்களா என்று
ஒரு ஏக்கமும் மனதில் நிற்கிறது.
குழந்தைகள் மென்மையானவர்கள்,
எளிதில் காயப்படக் கூடியவர்கள், நெளிந்து கொடுப்பவர்கள், எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல்
மறந்து விடுபவர்கள், வன்மம் அற்றவர்கள், பெரியவர்களை நம்பி இருப்பவர்கள். அவர்களை மென்மையாகத்
தான் அணுக வேண்டும். இதை நான் இன்னமும் கற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவு.
என்னைப் பற்றி அவர்கள் என்ன
நினைக்கிறார்கள்? தெரியவில்லை. அவர்களுக்கு கோடை கேம்புக்கு போகக் கூடாது. அது மட்டும்
தான் குறிக்கோள்.
இந்தக் கோடை விடுமுறையை அவர்கள்
விருப்பப்படி விட்டிருக்க வேண்டுமோ, அவர்களை இப்படி ஆட்டிப் படைத்திருக்க வேண்டாமோ,
நான் மிகக் குரூரமாக, கடுமையாக இருந்திருக்க வேண்டாமோ என்றெல்லாம் மனதில் தோன்றுகிறது.
நான் ஒரு சர்வாதிகாரி என்பதை
எனக்கு அவர்கள் மீண்டும் மீண்டும் காட்டிக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் மீது எனக்கிருந்த
பாசத்தை அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்களா, தெரியாது.
வளரும் பருவத்தில் தான் ஒரு
சில புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும், நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ள
முடியும், அதனால்தான் கண்டிப்பாக இருந்திருக்கிறேன் என்பதை அவர்களுக்குச் சொல்லிக்
காட்டியும் புரிந்து கொண்டிருப்பார்களா என்று தெரியவில்லை. விளையாட்டுத் தனமாகவே இருக்கிறார்கள்.
நாளா வட்டத்தில் மாறுவார்கள் என்று நம்புகிறேன்.
அடிப்படையில் குழந்தைகள் எல்லோருமே
நல்லவர்கள். ஏன், நான் கூட என் குழந்தைப் பருவத்துக்கு முடிந்தால் போக விருப்பப்படுகிறேன்.
ஒரு குழந்தையாகவே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் நினைக்கிறேன். என்
உள்ளேயும் ஒரு குழந்தை இருக்கிறது. நானும் பல நேரங்களில் குழந்தைத்தனமாக நடந்து கொண்டிருக்கிறேன்.
குழந்தை வளர்ப்பு பற்றிய பல
புத்தகங்களை நான் படித்து எனக்கென்று ஒரு சில கருத்துக்களையும் வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.
அந்த கர்வம் எனக்கு இருக்கிறது.
ஆனால், நடைமுறை என்று வரும்
பொழுது நான் எப்படி வளர்க்கப் பட்டேனோ, எந்த கண்டிஷன்களுக்கு பழக்கப்படுத்தப்பட்டேனோ
அப்படியே மனதளவில் வளர்ந்த பிறகும் நடந்து கொள்கிறேன். சிறு வயதிலிருந்து – என் பெற்றோர்கள்,
முதியவர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பள்ளியின் ஆசிரியர்கள், நான் கற்ற கல்வி,
மற்றவர்கள் என்னை நோக்கிய விதம், - இப்படி எல்லோருமே என்னை பாதித்திருக்கிறார்கள்.
என்னுடைய இன்றைய பெர்சனாலிடியை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தப் பாதிப்பில் உருவானவன்
தான் இன்றைய ‘நான்.’ ஆனால், சிறு வயதில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை.
நான் மாறவேயில்லை.
வயதில் பெரியவன் என்ற முறையில்
நானும் சிறுவர்களை அது போன்ற கண்டிஷன்களுக்கு தள்ளக் கூடாதல்லவா?
நான் யார் என்பதைக் காட்டிய
கண்ணாடி இந்த சிறு குழந்தைகள். என்னை நான் அறிந்து கொள்ள உதவிய கருவிகள்.
இந்த என்னுடைய ‘நானை’ நான்
விரும்பவில்லை. வெறுக்கிறேன். மாற வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த என்னுடைய ‘நானி’லிருந்து
விடுபட வேண்டும். அதுதான் என் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டும். அஹங்காரத்திலிருந்து
விடுபட வேண்டும். எப்படி என்றுதான் புரியவில்லை. இறையருளாலேயே இந்த மாற்றம் வரும் என்றும்
நம்புகிறேன்.
நான் இதுவரை 5 பாகங்களாக என்
அனுபவங்களை எழுதியதைப் பொறுமையாக படித்தவர்களுக்கும், தங்கள் கருத்துக்களை தெரிவித்தவர்களுக்கும்
நன்றி. இறைவன் எல்லோரையும் காப்பானாக.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment