24.07.2018 விஷப் பரிட்சை – பாகம் 3
விஷப்
பரிட்சை ஆரம்பமாகி விட்டது.
விடுமுறை
ஆரம்பத்தில் ஃபீனிக்ஸில் வெளியே அவ்வளவு கடுமையான சூடில்லை. அதனால் காலை வேளையில் சைக்கிளில்
பக்கத்து ஏரியாக்களில் சுற்றுவது என்று தீர்மானம் செய்தோம். சண்டிக் குதிரைகளுக்கு
வெளியே சுற்ற விருப்பம். அதை சாக்கிட்டாவது காலையில் சீக்கிரம் எழுந்திருந்தால் சரி
என்று முகத்தில் தண்ணீர் தெளிக்காத குறையாக காலை 06.30-க்கு குழந்தைகளை எழுப்பி விட்டு
சைக்கிளில் வெளியே கிளம்பினேன். (விடுமுறையின் போது காலை ஒன்பது - பத்து மணிக்கு முன்னால்
எழுந்திருக்கக் கூடாது என்பது அரசியல் சாசனத்தில் கூறப்படாத சட்டம் என்பது எல்லோருக்கும்
தெரியும்.)
என்
பேரனுடன் தனியாக ஒரு நாளும் அடுத்த நாள் பேத்தியுடனுன் என்றும் ஒரு ஒப்பந்தம்.
கண்டிஷன்:
சீக்கிரம் எழுந்திருந்தால் தான்.
பேத்திக்கு
இன்னமும் சைக்கிள் நன்றாக ஓட்டத் தெரியாது.
அதனால் முதல் இரண்டு மூன்று முறை அவள் சைக்கிள் சீட்டின் பின் பக்கத்தைப் பிடித்துக்
கொண்டு அவளை பெடல் செய்யச் சொல்லி பாலன்ஸ் செய்து கொள்ளக் கற்றுக் கொடுத்தேன். முதுகு
எனக்கு பெண்டு எடுக்கும். பின் அவள் வேகமாக பெடல் செய்தால்தான் பாலன்ஸ் கிடைக்கிறது
என்பதினால் அவள் கூட ஓடத் தொடங்கினேன். எனக்கும் ஓட்டப் பயிற்சி.
70
வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் எனக்கு 6 வயது சிறுமியை சைக்கிளில் பெடல் செய்யச் சொல்லி
சைக்கிள் பின்னால் பி. டி. உஷா போலவா என்னால் ஓட முடியும்? இருந்தும் ஒரு சில நாள்
ஓடினேன். ஒரு நாள் ஓடியதில் முதுகில் கீழ்ப்
பக்கம் நன்றாகப் பிடித்துக் கொண்டது.
ஃபட்…
சைக்கிள்
ஓட்டுவது ஏறக் குறைய அன்றோடு நின்று விட்டது. சூரியனும் காலையிலேயே உக்ரமாகத் தொடங்கி
விட்டான்.
ஒன்பது
மணிக்கு ஸ்லோகம் கிளாஸ் என்று ஒத்துக் கொண்டோம். கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே
இருக்க வேண்டியதுதான். குழந்தைகள் வருவது போல இல்லை. ஞாபகப்படுத்தியாகி விட்டது. பயனில்லை.
அஸ்திரத்தை
உபயோகிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
“இன்னும்
ஐந்து நிமிடங்களில் நீங்கள் வரவில்லையென்றால் மதியம் ஐ-பேட் டைம் கட்,” கோபமாக கத்திய
பிறகு ஒரு வினாடி கூட தாமதிக்காமல் ஓடி வந்தார்கள்.
வினாயகருக்கு
மூன்று ஸ்லோகங்கள், சரஸ்வதிக்கு மூன்று ஸ்லோகங்கள், சிவனுக்கு ஒன்று, சாந்தி மந்திரங்கள்
கூட்டு வழிபாட்டுக்கு மூன்று, மஹாலக்ஷ்மியஷ்டகம், ஆஞ்சனேயர் ஸ்லோகங்கள் என்று படிப்படியாக
வகுப்புகள் ஏறிக் கொண்டே போயின. ஸ்லோகங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னர் மூச்சுப் பயிற்சி,
“ஓம்” –உடன் தியானப் பயிற்சி. ஸ்லோகங்கள் எல்லாமே வாய் வழியாக. எதையும் எழுதிக் கொடுக்கவில்லை.
கேட்டு, திருப்பிச் சொல்லி, மனப்பாடம் செய்ய வேண்டும். நடு நடுவே விஷ்ணு சஹஸ்ர நாமத்தை
பேரன் மனப்பாடம் செய்ய வேண்டும்.
“இன்னும்
எவ்வளவு நேரம் ஸ்லோக கிளாஸ் நடக்கும்,” பேரனும் பேத்தியும் கடிகாரத்தைப் பார்த்துக்
கொண்டே இருப்பார்கள்.
“நான்
எப்பொ முடிப்பேனோ அப்ப தான்,” என்னுடைய கண்டிப்பான பதில்.
“தா..த்…தா,”
பெரிய முனகல் இரண்டு பேரிடமிருந்தும் ஒரே சமயத்தில் வரும். கோபத்தில் அவர்கள் கண்கள்
சிவக்கும்.
“மூச்…
மத்தியானம் ஐ-பேட் வேண்டுமா, வேண்டாமா?”
அமைதியாகி
விடுவார்கள்.
அடிக்கடி
தர்ம யுத்தம் நடக்கும். ஸ்லோகங்கள் சொல்லும் பொழுது மட்டும் அவர்கள் குரல் உள்ளேயே
போய் விடும். “சத்தம் போட்டுச் சொல்லுங்க,” என்று நான் கத்த வேண்டியிருக்கும். என்னை
நக்கல் செய்வதற்காகவே அவர்கள் வேண்டுமென்றே அடித் தொண்டையிலிருந்து கத்திச் சொல்வார்கள்.
தீடீரென்று
ஒருத்தரைப் பார்த்து ஒருத்தர் சிரிப்பார்கள். அடுத்த சில நிமிடங்களுக்கு அவர்களை கட்டுப்
படுத்த முடியாது.
எங்கள்
வகுப்புகளில் நவ சுவையும் அடங்கியிருக்கும். முனகல், அழுகை, கத்தல், சிரிப்பு, கோபம்,
எரிச்சல், நையாண்டி, கெஞ்சல், மிரட்டல்…
“விருப்பமில்லா
விட்டால் இன்றோடு ஸ்லோகக் கிளாசை நிறுத்தி விடுகிறேன்.”
“நோ…
தாத்தா … we want to learn…”
இல்லையென்றால்,
தாத்தா ‘சம்மர் கேம்பு’க்கு அனுப்பி விட்டால் என்ன செய்வது என்ற பயம் அவர்கள் மனதின்
அடித்தளத்தில் இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
மனிதன்
இரண்டு காரணங்களுக்காகத்தான் நல்லவனாக இருக்க முயற்சி செய்கிறான். ஒன்று நல்ல பலன்களை
எதிர்பார்த்து. இரண்டு. தண்டனைக்குப் பயந்து. ஆனால், நடைமுறையில் தண்டனைக்குப் பயந்து
தான் நம்மில் பெரும்பாலோர் நல்லவனாக இருக்க முயற்சிக்கிறோம் என்பது நிதர்சனமான உண்மை.
ஸ்ரீ தயானந்த் சுவாவிகளின் ‘தர்மத்தின் மதிப்புதான் என்ன?’ என்ற புத்தகத்தைப் படித்தால்
தெரியும்.
இந்தக்
கண்டிஷனிங்கை சிறு வயதிலிருந்தே பெற்றோர்களும், முதியவர்களும் (என்னையும் சேர்த்து)
வளர்த்து விடுகிறார்கள். சரியாக நடந்து கொள்ளவில்லையென்றால் சாமி கண்ணைக் குத்தும்.
இப்படிச் சொல்லித் தானே நாம் சிறுவர்களை வளர்க்கிறோம். கட்டுப்படுத்துகிறோம்.
எனக்கு
முற்றிலும் பிடிக்காத விஷயம் இது. ஆனால், நடைமுறையில் இதுதான் வொர்க் ஔட் ஆகிறது என்பதும்
கசப்பான உண்மை.
இப்படி
பல போராட்டங்களுக்குப் பிறகு குழந்தைகள் இன்று அந்த ஸ்லோகங்கள் எல்லாவற்றையும் மனப்பாடமாக
கூடியவரை ஸ்பஷ்டமாகச் சொல்கிறார்கள். என்னுடைய வித்யா கர்வம் என்னை சந்தோஷப்பட வைக்கிறது.
Does
it mean, the end justifies the means? I just received the book titled” POSITIVE DISCIPLINE By JANE NELSEN Ed. D from Amazon. Let me see what she says!
அவ்வளவு
சீக்கிரம் என்னுடைய அனுபவங்களை எழுதி முடித்து விட முடியுமா? அடுத்தது தமிழ் கிளாஸ்.
இன்னும்
நாளை தொடரும்…
“நாளையாவது
முடித்து விடுவீர்களா?” என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.
“
நான் எப்ப முடிப்பேனோ அப்பதான்” – அதே பதில்தான் உங்களுக்கும்.
No comments:
Post a Comment