Total Pageviews

Showing posts with label Relationship. Show all posts
Showing posts with label Relationship. Show all posts

Sunday, June 04, 2017

30.05.17 வாழ்க்கையின் ஐந்து பெரிய வருத்தங்கள் ..தொடர்ச்சி

30.05.17 வாழ்க்கையின் ஐந்து பெரிய வருத்தங்கள்

பொதுவாக நமது வருத்தங்களை ஒரு சில வகைகளாகப் பிரிக்கலாம்.

முதலாவது, நாம் ஒரு பொருளை விரும்பியிருப்போம் அல்லது ஏதோ ஒன்றுக்கு ஆசைப்பட்டிருப்போம். அதை அடையவில்லையே என்று வருத்தப்படலாம். அல்லது ஒரு பொருளை வெறுத்திருக்கலாம் அல்லது அதை விரும்பத்தகாதது என்று கருதி ஒதுக்க நினைத்திருக்கலாம். ஆனால், நாம் எதை வெறுத்தோமோ அல்லது ஒதுக்கி வைக்க நினைத்தோமோ அது நம்மோடு விடாமல் ஒட்டிக்கொண்டிருக்கிறதே என்று வருத்தப்படலாம்.

இரண்டாவது, ஒரு காரியத்தைச் செய்திருப்போம். பின்னர் அதன் விளைவுகளை கவனித்த பிறகு அதை ஏண்டா செய்தோம் என்று வருத்தப்படலாம். அல்லது ஏதோ ஒரு காரியத்தை செய்ய விட்டுப்போயிருக்கலாம். அதை செய்திருக்கலாமே என்று வருத்தப்படலாம்.

மூன்றாவது, பல காரியங்களை ஒரு எதிர்பார்ப்போடு செய்திருப்போம். அந்தக் காரியங்கள் நாம் எதிர்பார்த்த பலனை அளிக்காமல் எதிர்மறையாக, நம்மை பலமாகப் பாதிக்குமளவில் முடிந்திருக்குமானால் நமக்கு ஏமாற்றம் மட்டுமல்லாமால் மிகுந்த வருத்தத்தையும் கொடுத்திருக்கும்.

அடுத்ததாக, தெரிந்தோ தெரியாமலோ ஒரு சில பழக்கங்களுக்கு அடிமையாகியிப்போம். அந்தப் பழக்கங்களால் பல தீய பலன்கள் நமக்கு ஏற்பட்டிருக்கலாம். நாம் ஏன் அந்தப் பழக்கங்களுக்கு அடிமையானோம் என்று வருத்தப்படலாம்.

எனக்கு முக்கியமாக தோன்றும் அடுத்த விஷயம் … பலர் இளைய வயதில் காதல் வயப்பட்டிருக்கலாம். தெரிந்தோ தெரியாமலோ ஒரு பெண்ணுடன் ஒரு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டிருக்கலாம். ஆரம்பத்தில், எல்லாம் அண்ணா, தங்கை பாசம் போலத்தான் தோன்றியிருக்கும். நாளாவட்டத்தில் அது காதலாக மலர்ந்திருக்கும். ஒரு நல்ல நட்போடு கூடிய காதல் பல காரணங்களினால் நிறைவேறாமல் போயிருக்கலாம். காதலை கை விட்டிருக்கலாம். அதனால், ஒரு குற்ற உணர்ச்சி ஆழ் மனதில் இருந்து வாட்டிக்கொண்டிருக்கலாம். இருவரும் வெவ்வேறு வழி சென்று அவரவர்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கலாம். காதல் சொல்லி வருவதில்லை. தானாக ஏற்படுவது. இன்று நமது வாழ்க்கை எப்படியிருந்தாலும், அந்த காதலின் இனிய நினைவுகள் நம்மை வாட்டி துன்பத்துக்கு ஆளாக்கலாம். காதலிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அன்று முடியவில்லையே! காதலைத் துறக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அன்று முடியவில்லையே!

இறுதியாக தோன்றுவது … நாம் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அறியாமையால் ஒரு சில காரியங்களைச் செய்திருப்போம். அதனால் பல கெடுதல்கள் ஏற்பட்டிருக்கலாம். நமது அறியாமையை நினைத்து வருத்தப்படலாம்.

இப்படியெல்லாம் அலசும்போது எனக்குத் தோன்றியது … இந்தக் கணம்  நம்முடைய அந்திம நேரமாக இருந்தால்  நம்முடைய மிகப் பெரிய வருத்தங்கள் என்று எவற்றைச் சொல்லலாம்?

1. முதலாவதாக எனக்குத் தோன்றுவது நமது உறவுகளை சரியாக வைத்துக் கொண்டிருக்கலாமே என்பதுதான். உறவுகளால் நாம் எவ்வளவோ காயப்பட்டிருப்போம். இருந்தும் உறவுகளுக்காக எதையும் விட்டுக் கொடுக்கலாம் என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன். நம்முடைய அஹங்காரத்தினால் பல உறவுகளை பல விதமாக சிதைத்திருக்கிறோம். மற்றவர்களைத் தெரிந்தே காயப்படுத்தியிருக்கிறோம். மற்றவர்கள் காயப்பட்டிருப்பது தெரிந்தும் அதைப் பற்றி நாம் கவலை கொண்டதில்லை. பல நேரங்களில்  நாம் காயப்பட்டதின் நினைவாக உறவுகளை வெட்டியிருக்கிறோம். பலரை நம்மால் மன்னிக்க முடிவதில்லை. வெறுப்பும், கோபமும் மேலோங்கி நிற்கிறது. எல்லாமே ‘நான்’ என்ற நினைப்பினால்தான். இந்த எண்ணத்தை விட்டொழிக்க முடிந்ததில்லை. கூடப் பிறந்ததோ என்னவோ? இந்த ‘நான்’ என்ற நினைப்பை கொஞ்சம் தளர்த்தியிருக்கலாமோ? ‘நான்’ என்ற அஹங்காரத்தை விட்டிருக்கலாமே? ஒவ்வொரு நெருங்கிய உறவையும் கூர்ந்து ஆராய்ந்து பார்த்ததில் எவ்வளவு காயப்பட்டிருக்கிறோம், எவ்வளவு காயப்படுத்தியிருக்கிறோம் என்பது தெரிகிறது. இந்தக் கடைசி நேரத்தில் ஒரு சிலரிடமாவது மன்னிப்புக் கோரியிருக்கலாம். அல்லது அவர்கள் நமக்கு ஏற்படுத்தியிருக்கிற காயத்துக்கு மன்னித்து விட்டிருக்கலாம். ஆனால், அவர்களில் சிலர் இன்று இல்லையே, என்ன செய்வது? நாம் அவர்களிடம் எப்படி மன்னிப்பு கோருவது? அவர்களை நாம் மன்னித்து விட்டோம் என்பதை அவர்களுக்கு எப்படிப் புரியவைப்பது?

2.  . நம் குழந்தைகளுக்கு ஒரு நல்ல தகப்பனாக இருப்பதற்கு பல விதமாக முயற்சி செய்து வந்திருக்கிறோம். பல தியாகங்களைச் செய்திருக்கிறோம். நமது சக்திக்கு மீறி முயன்றிருக்கிறோம். எல்லாம் அவர்கள் நன்மைக்காகவும் மகிழ்ச்சிக்காகவும். அதே நேரத்தில் நாமும் ஒரு தாய் தந்தையருக்குப் பிறந்தவர்கள் என்பது மட்டும் மறந்து போய் விடுகிறது. நமது மனைவியை, குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு எவ்வளவு முயன்றோமோ அதில் ஒரு சில அளவாவது நமது தாய், தந்தையரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு முயன்றிருக்கலாமே? அவர்களும் நம்முடைய மகிழ்ச்சிக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள்! அவர்களுடைய வயதான காலங்களில் அவர்களுக்கு நாம் துணை கொடுத்திருக்கிறோமா? அவர்களின் தேவைகளை, அற்ப ஆசைகளை நிறைவேற்ற ஏதேனும் செய்திருக்கிறோமா? அவர்கள் மனதில் குறைகளில்லாமல் அல்லது குறைகளைக் குறைக்க ஏதேனும் முயற்சி செய்திருக்கிறோமா? குறைந்த பட்சம் அவர்கள் குறைகளைத் தெரிந்து கொள்ளவாவது முயற்சித்திருக்கிறோமா? அவர்களுக்கு நாம் ஒரு நல்ல பையனாகவோ பெண்ணாகவோ இருந்திருக்கிறோமா? இல்லையே.  

3. ஒவ்வொருவரும் அவரவர் குழந்தைகளை அவரவர்களுக்குத் தெரிந்த மாதிரிதான் வளர்த்து வருகிறார்கள். பலர் குழந்தைகளை அடித்து வளர்த்திருக்கிறார்கள். அடி வாங்கிய அந்தக் குழந்தைகளுக்கு அதனால் என்ன விதமான மனக் காயங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதைப் பற்றி அந்த பெற்றோர் அதிகமாக என்றும் யோசித்ததில்லை. கண்டிப்புடன் வளர்க்கிறோம் என்று சொல்லி நியாயப்படுத்தியிருக்கிறோம். குழந்தைகளைப் புரியவைப்பது மிகவும் கடினம்தான். எல்லா நேரங்களிலும் காரண காரியங்களைச் சொல்லி புரியவைக்க முடியாதுதான். அவ்வளவு பொறுமையும்  நேரமும் நம்மில் பலருக்கு இல்லை. நம் குழந்தைகளை அடித்து வளர்த்தது தவறோ என்ற ஒரு குற்ற உணர்வு இன்று நம்மைத் தாக்குகிறது.

4. அன்பு, பாசம், உதவி என்ற போர்வையில் நெருங்கிய சிலருக்கு ஒரு சில காரியங்களைச் செய்திருப்போம். ஒரு சில நேரம் அவர்கள் கேட்காமலேயே உதவி செய்திருப்போம். அப்பொழுது அதன் பின் விளைவுகளைப் பற்றி அதிகமாக யோசிக்கவில்லை. இன்று யோசித்துப் பார்த்தால் நம்முடைய அன்பினால், பாசத்தினால், உதவியால் எவ்வளவு கெடுதல் செய்திருக்கிறோம் என்று புரிகிறது. அன்று அப்படி செய்திருக்க வேண்டாமோ?

 5. ஆண் ஆதிக்கம் நிறைந்த இந்த உலகில் நம்மில் பலரும் மனைவியை ஒரு பெரிய பொருட்டாக மதித்து வந்ததில்லை. அவர்கள் கருத்துக்கு, ஆசைகளுக்கு, விருப்பங்களுக்கு பெரிய மரியாதை ஒன்றும் செய்ததில்லை. அவர்களை அடக்கியே வைத்திருந்திருக்கிறோம். ஆனால், அவர்களோ வாயில்லாப் பூச்சிகளாக, அமைதியாக, பொறுமையாக நாம் செய்த பல கொடுமைகளை சகித்துக் கொண்டிருக்கிறார்கள். வயதாகும் பொழுதுதான் அவர்களின் அருமை புரிகிறது.  நாம் அவர்களிடம் நடந்துகொண்ட விதத்தை நினைத்து வருத்தப்படுகிறோம்.

எனக்கு முக்கியம் என்று தோன்றிய ஒரு சில விஷயங்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். கண்டிப்பாக எனக்கும் இந்த விஷயங்களில் வருத்தம் உண்டு என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். அதனால்…

அந்திம நேரம் வரைக் காத்திருப்பானேன்… இந்த நிமிடம் முதலே அதற்குப் பரிகாரம் தேடலாமே? நம்மை,  நம் பார்வையை மாற்றிக்கொள்ளலாமே? இப்பொழுதே முயற்சியை தொடங்கி விடலாமே?


நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்…

Friday, March 24, 2017

இந்த வார நாட்க்குறிப்பு 24.03.17: இன்று என் தகப்பனாரின் 44-ஆவது நினைவு தினம்.

இந்த வார நாட்க்குறிப்பு
24.03.17: இன்று என் தகப்பனாரின் 44-ஆவது நினைவு தினம்.

இன்று, என் தகப்பனார், காலம் சென்ற திரு டீ. என். நடராஜன் அவர்களின் 44-ஆவது நினைவு தினம். உடல் நலக் குறைவால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவதிப்பட்டு 1973 ஏப்ரலில் தனது 54-ஆவது வயதில் காலமானார்.

அவர் காலமான சமயத்தில் நான் டில்லியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் காலாமன செய்தியே எனக்கு சுமார் 5-6 மணி நேரத்துக்குப் பிறகுதான் தந்தி மூலமாகத் தெரிய வந்தது. உடனடியாக விமானம் மூலம் சென்னைக்குப் பறந்து செல்ல பல நண்பர்கள் என்னை விழைந்தனர். வேலை பார்க்கத் தொடங்கி மூன்று வருடங்களே ஆகியிருந்தன. படிப்பதற்கு நான் வாங்கிய கடன், தகப்பனார் உடல் நலக் குறைவினால் முழுச் சம்பளம் இல்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்திருந்த சமயங்களில் குடும்பத்தை நடத்த வாங்கிய கடன், மாதா மாதம் வீட்டுச் செலவுக்குப் பணம் இப்படி என்னுடைய வருமானத்தைச் செலவழித்ததில் என்னுடைய நிதி நிலைமை  நெருக்கடியில் ஓடிக்கொண்டிருந்தது. விமானம் மூலம் சென்னையை அடைந்தாலும் அங்கிருந்து திருநெல்வேலி போய்ச் சேருவதற்கு இன்னொரு பன்னிரண்டு மணி நேரம் ஆகும். அதுவும் டாக்சி வைத்துக் கொண்டால்தான். அதையெல்லாம் கருத்தில் கொண்டு, மனதைக் கல்லாக்கிக் கொண்டு என்னால் இறுதிச் சடங்குகளுக்கு உடனேயே வர முடியாததை வீட்டுக்கு மறு தந்தி மூலம் தெரியப்படுத்தினேன். இறுதிச் சடங்குகள் என் தம்பியை வைத்து நிறைவேறின. நான் அன்றிரவு ஜி. டி. எக்ஸ்ப்ரஸ் பிடித்து சுமார் 40 மணி நேரம் கழித்து சென்னை போய்ச் சேர்ந்து பின்னர் அன்று மாலை மீண்டும் ஒரு பஸ் பிடித்து என் தகப்பனார் இறந்த நான்காம் நாள்தான் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். என் அம்மாவைப் பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது. அவர்களுக்கு அப்பொழுது சுமார் 43 வயதுதான் ஆகியிருக்கும்.  நீண்ட காலம் அவர்கள் விதவையாக கழிக்க வேண்டியிருப்பதை நினைத்து வருந்தினேன். மனதை மீண்டும் கல்லாக்கிக் கொண்டு என் அழுகையை கூடிய வரை மறைத்து மீதமிருந்த குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாரானேன்.

என் தகப்பனாரை நினைவு கூறும் பொழுது முக்கியமாக ஒரு சில விஷயங்கள் எனக்குத் தோன்றின.

முதலாவது … ஆங்கில மொழியின் மீது பற்று. ஆங்கிலப் புத்தகங்கள், செய்தித் தாள்கள் படிப்பது இரண்டும் எனக்கு என் தகப்பனாரிடமிருதுதான் வந்திருக்க வேண்டும்.  நாங்கள் வசித்த பகுதியில் தினமும் ‘தி ஹிந்து’ செய்தித்தாளை பல செலவுகளுக்கிடையேயும் சந்தா கட்டி வாங்கிப் படிப்பார். முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை ஒரு வரி கூட விடாமல் தினமும் படித்து விடுவார். அவர் அந்தக் காலத்து எஃப். ஏ (F.A). பின்னால் வந்த Pre-University-க்கு சமம் என்று நினைவு.) பிற்காலத்தில் ‘தி ஹிந்து’ செய்தித் தாளை இன்றும் கூட (படிக்கப் பிடிக்காவிட்டால் கூட) தொடர்ந்து படித்து வரும் எனக்கு இப்படித்தான் ஒரு ‘படிப் பழக்கம்’ ஏற்பட்டது என்று நினைக்கிறேன்.  

பள்ளியின் ஆங்கிலப் பாடங்களை நான் வீட்டில் படிக்கும் சமயம் என்னை பாடங்களை உரக்கப் படிக்க சொல்வார். அடிக்கடி என்னைத் திருத்துவார். அப்பொழுது எனக்கு எரிச்சலாக இருக்கும். ஆனால், இன்றைக்கும் ஆங்கில மொழியின் மீது எனக்கு அதீதமான காதல் இருப்பதற்கு அன்றைக்கு ஆங்கிலப் பாடங்களை உரக்கப் படிக்கச் சொல்லி அவர் என்னை பல இடங்களில் திருத்தியது ஒரு முக்கியமான காரணமாக இருக்க வேண்டும்.

இரண்டாவது, ஹிந்திப் பாடல்களின் மீதும், ஆங்கில திரைப்படங்களின் மீதும் எனது மோகம் என் தகப்பனாரிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும். அவர் பொதுவாக தமிழ் திரைப்படங்களைப் அதிகம் பார்த்ததாக எனக்கு நினைவில்லை. ஆனால், பல ஆங்கிலப் படங்களைப் பார்த்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும். அன்றைய காலங்களில் 1950-களின் முடிவிலும் 1960-களின் ஆரம்பங்களிலும் திருநெல்வேலியில் வார இறுதியில் மட்டும் காலைக் காட்சி நேரத்தில் ஒரு சில ஹிந்தி மற்றும் ஆங்கிலப் படங்களை திரையிடுவார்கள். அப்படித்தான் லாரல் மற்றும் ஹார்டியின் பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். வெகு சில ஆங்கிலப் படங்களே வழக்கமான காட்சி நேரங்களில் திரையிடுவார்கள். MY FAIR LADY, JERRY LEWIS MOVIES, ALFRED HITCHKOK MOVIES, JAMES BOND MOVIES, CLEOPATRA – இப்படி ஒரு சில படங்கள். ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் என் தகப்பனாருக்கு மிகப் பிடித்த இயக்குனராக இருந்திருக்க வேண்டும். ஹிட்ச்காக்கின் PSYCHO படத்தை மிகவும் விரும்பிப் பார்த்திருக்கிறார். அதைப் பற்றி என்னிடம் விமரிசனமும் செய்திருக்கிறார். பிறகு ஒரு சமயம் அதே ஹிட்ச்காக்கின் BIRDS படம் திரையிடப்பட்ட போது (திருநெல்வேலி பார்வதி தியேட்டர் என்று நினைவு) வீட்டுக்குத் தெரியாமல் நான் அந்தப் படத்தைப் பார்ப்பதற்கு திரையரங்கத்தில் போய் உட்கார்ந்தால் வீட்டுக்குத் தெரியாமல் அவரும் அந்தப் படத்தை பார்ப்பதற்கு வந்திருந்தார். என்னுடைய இருக்கைக்கு முந்தைய வரிசையில் அமர்ந்திருந்தார். இருவருக்கும் ஒரு நிமிட அதிர்ச்சி, ஆச்சரியம். படம் முடிந்த பிறகு இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் சேர்ந்தே வீடு வந்து சேர்ந்தோம்.

அது போல, கீழ்நிலை நடுத்தரக் குடும்பங்களின் வீடுகளில் அன்றைய காலக் கட்டத்தில் ரேடியோ இருப்பது அரிது. ஹிந்தித் திரைப்படப் பாடல்களைக் கேட்பதில் தீவிர விருப்பம் என் தகப்பனாருக்கு இருந்ததால் பல செலவுகளுக்கிடையே நெல்லை சந்திப்பில் நெல்லை லாட்ஜுக்கு அருகேயிருந்த ஒரு ரேடியோ கடையிலிருந்து புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட ஃபிலிப்ஸ் ரேடியோ டிரான்சிஸ்டர் ஒன்றை வாங்கினார். 200 ரூபாய் விலை என்று ஞாபகம். மாதா மாதம் 30 ரூபாய் செலுத்த வேண்டும். செலுத்தத் தவறினால் வீட்டுக்கு வந்து திருப்பி எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். எங்கள் வீட்டில் அன்று முதல் அடிக்கடி ஹிந்திப் பாடல்கள் எங்கள் டிரான்சிஸ்டரில் ஒலிக்கத் தொடங்கின. இரவு பத்து மணிக்கு ஒலிபரப்பப் பட்ட ‘ஜெயமாலா’ என்ற ராணுவ வீரர்களின் நேயர் விருப்பம் நிகழ்ச்சியை விரும்பிக் கேட்பார். அந்தப் பழக்கம் பின்னால் எனக்கும் தொற்றிக் கொண்டது. ‘ஜனக் ஜனக் பாயல் பாஜே’ என்ற ஹிந்திப் படம் அவருக்கு மிகவும் விருப்பமான படம். பல முறை தியேட்டரில் பார்த்திருக்கிறார் என்று நினைக்கிறேன். பல ஹிந்திப் பாடல்களை விசில் மூலமாக இசைப்பார். ஆனால், ஹிந்திப் படங்களைப் போல் தமிழ்ப் படங்களையோ தமிழ்ப் பாட்டுக்களையோ விரும்பிப் பார்த்ததோ கேட்டதோ கிடையாது.

மூன்றாவது, நான் பத்தாவது படித்து மாவட்டதிலேயே மூன்றாமிடம் பெற்ற போது என்னை ‘இந்தியா சிமெண்ட்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் குடும்பத்தில் ஒருவரிடம் கூட்டிச் சென்றார். (திரு. நாராயணன் என்று நினைக்கிறேன்.) தாழையூத்தில் சங்கர் நகரில் அவரது வீடு இருந்தது. அவருடன் என் தகப்பனாருக்கு எப்படி அறிமுகம் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு சங்கர் பாலிடெக்னிக்கில் சேர்வதற்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், என்ன காரணமோ தெரியாது நான் பாலிடெக்னிக்கில் சேரவில்லை. இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று நான் வற்புறுத்தி வந்தேன். பண வசதி அதிகம் தேவைப்படும் என்று தெரிந்தும் நேர்முகத் தேர்வுக்கு என்னை சென்னைக்குக் கூட்டிக்கொண்டு போனார். யாருடைய சிபாரிசும் எனக்கு இருக்கவில்லை. பிற்காலத்தில் சென்னைப் பல்கலையின் பிரபலமான துணை வேந்தராக இருந்த திரு. மணிசுந்தரம் (என்றுதான் நினைக்கிறேன்) அவர்களது தலைமையில்தான் நேர்முகத் தேர்வு நடந்தது என்று ஞாபகம். (தவறாகக் கூட இருக்கலாம்.)  ஆனால், எனக்கு பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு இடம் கிடைக்கவில்லை. எனக்கு மிகப் பெரிய ஏமாற்றம். பாளையங்கோட்டை செயிண்ட் ஜான்ஸ் கல்லூரியில் பி. யூ. சி படிப்பதற்குச் சேர்த்து விட்டார். (கொஞ்சம் முரணாகவும் இருக்கலாம். பி. யூ. சிக்குப் பிறகு பொறியியல் கல்லூரி நேர்முகத் தேர்வுக்குச் சென்றேனா அல்லது பத்தாவது முடித்துப் போனேனா என்று கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.)

அவர் இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னால் நான் விடுமுறையில் வீட்டுக்கு வந்த பொழுது அவர் உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தார். அப்பொழுது ஏதோ பேச்சுக்கு நடுவே என்னிடம் “உன்னுடைய படிப்புக்கு என்னால் அதிகமாக உதவ முடியவில்லையே’ என்று கூறி மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டார். ‘அதைப் பற்றி இப்பொழுது என்ன? எல்லாம் படித்து முடித்தாகி விட்டதே!’ என்று சமாதானப் படுத்த முயற்ச்சித்தேன். எனக்கும் மனது வேதனைப் பட்டது ‘அப்பாவை அதிகமாக காயப்படுத்தி விட்டேனோ’ என்று.

பின்னர், 1998-ல் ஸ்ரீஅம்மா பகவானின் தொடர்பு ஏற்பட்ட பிறகுதான் நான் என் தகப்பனாரோடு கொண்டிருந்த உறவைப் பற்றி தீவிரமாக மனதுக்குள் அலசி ஆராய்ந்து ஆத்மார்த்தமாக என் தகப்பனாரின் ஆத்மாவிடம் என்னுடைய பல தவறுகளுக்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டேன். பிறகுதான் எனக்கே நிம்மதி வந்தது.

அவர், இன்று எந்த உலகத்தில் இருந்தாலும் என்னுடைய குறைகளையும், தவறுகளையும் மன்னித்து மனதில் கொள்ளாமல் என்னையும் என் குடும்பத்தாரையும் வாழ்த்தும் படி பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.


இந்தக் கட்டுரையை என் தகப்பனாருக்கே சமர்ப்பிக்கிறேன். 

Friday, March 10, 2017

06.03.17 உறவுகளைப் பற்றி – நாம் விளையாடும் 6 விளையாட்டுக்கள்

06.03.17 உறவுகளைப் பற்றி – நாம் விளையாடும் 6 விளையாட்டுக்கள்

நமது உறவுகள் சீராக இல்லாமல் இருப்பதற்கு முக்கியமான ஒரு காரணம் நமது அஹங்காரமே என்று முன்னால் எழுதியிருந்தேன். அந்த ‘தான்’ என்ற நினைப்புதான் நம்மை மற்றவர்களுடன் பல நேரங்களில் ஒத்துப் போக விட மாட்டேன் என்கிறது. எவரையுமே, எந்தப் பொருளையுமே, எந்தச் சூழ்னிலையையுமே ‘தான்’ என்ற நிலையிலிருந்துதான் சீர் தூக்கிப் பார்க்கிறோம். அதனால், மற்றவர்களின் நிலையை நம்மால் முழுவதுமாக புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் நிலையிலிருந்து அவர்களை புரிந்து கொள்ள மறுக்கிறோம்.

எப்படியோ, நாம் எல்லோரும் (பொதுவாகச் சொல்லப் போனால்) 6 விதமான விளையாட்டுக்களை விளையாடுகிறோம்.
            1.     “நான் சரியாகத்தான் இருக்கிறேன்” (I am okay)
            2.     “நீதான் சரியில்லை” (You are not okay)
           3.     மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்துகிறோம் அல்லது மற்றவர்கள் நம் மீது ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்கிறோம் (We dominate or remain dominated)
           4.     நம்மைப் பற்றி நாமே (தகுதிக்கு மீறி) பறைசாற்றிக் கொள்கிறோம். (We project our image)
     5.     நம்மை, (நம்முடைய எண்ணங்களை, சொற்களை, செயல்களை) தற்காத்துக் கொள்கிறோம். தாங்கிக் கொள்கிறோம். (We defend)
        6.     உண்மையான நம்மை வெளியே தெரிந்து விடாமல் இருக்க முகமூடி போட்டுக்கொள்கிறோம். அதாவது நடிக்கிறோம். (We masquerade)

     (இதை ஸ்ரீஅம்மா பகவானுடன் இருந்த நாட்களில் கற்றுக் கொண்டதுதான்.)

இந்த ஆறு விளையாட்டுக்களையும் நாம் ஏதோ கணக்குப் பண்ணி விளையாடுவதில்லை. தானாகவே, நம்மை அறியாமலேயே நடக்கிறது.

எல்லாமே ‘தான்’ என்ற நினைப்பிலிருந்து உருவானதுதான். பிறந்த குழந்தைக்கு ‘தான்’ என்ற அறிவோ உணர்வோ கிடையாது. சுமார் 1 வயது வரும் பொழுதுதான் அந்த உணர்வு தொடங்குகிறது. வயது ஏற ஏற சுமார் 18 வயது வரை இந்த ‘தான்’ என்ற உணர்வு வளர்ந்து கொண்டே இருக்கிறது. சிறு பிராயத்தில் இந்த ‘தான்’ என்ற உணர்வு இல்லாததால்தான் எவ்வளவு திட்டினாலும், சண்டை பிடித்தாலும், அடித்தாலும் சிறு குழந்தைகள் மீண்டும் மீண்டும் அம்மா, அப்பா, மற்ற பெரியோர்களை நாடுகின்றனர். சற்று நேரத்துக்கு முன்பு அழுதது கூட மறந்து விடும். எவ்வித களங்கமோ, பகையோ, கோபமோ இருக்காது. பழையதை மறந்து வழக்கம் போல சகஜமாக நம்முடன் பழகும். அதே சிறுவன்/சிறுமி சற்று வளர்ந்த பிறகு – 10 – 12 வயது என்று வைத்துக்கொள்ளுங்களேன் – கொஞ்சம் சத்தம் போட்டாலே அதற்கு சுருக்கென்று இருக்கும். எதிர்க்கும். கோபம்   நீடிக்கும். ஏனென்றால், அதன் ‘தான்’ காயப்படுகிறது தெரிந்திருக்கிறது. இன்னும் வளர்ந்து – 15 -18 வயதாகி விட்டால் போதும் – நம்மை எதிர்த்தே பேசும், நம்முடன் சண்டைக்கு வரும். இப்பொழுது அந்த சிறுவன் சிறுமிக்கு தன்னைக் காயப்படுத்தி விட்டனர் என்ற முழு உணர்வு இருக்கும். பெற்றோரைப் பிடிக்காது. நண்பர்களைப் பிடிக்காது. விரோதமாகச் செயல்படுத்தத் தூண்டும். இப்படி பல விதமாக நடந்து கொள்ளும்.

ஒரு சிறிய கற்பனை உரையாடல் மூலம் இந்த 6 விளையாட்டுக்களைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்:

இரண்டு  நண்பர்கள். ராம் – ஷ்யாம். பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாகப் படித்தவர்கள். ஷ்யாமுக்குத் தெரிவிக்காமல் ராம் ஒரு வேலைக்கு விண்ணப்பம் போட்டு அவனுக்கு வேலையும் கிடைத்து விடுகிறது. அந்தத் தகவலை கொஞ்சம் தாமதமாகவே ஷ்யாமுக்குத் தெரிவிக்கிறான்.
ராம் – “ஷ்யாம், எனக்கு ஓ.என்.ஜி.சி-யிலே இன்ஜினியர் வேலை கிடைச்சுருக்கு.”
ஷ்யாம் – “அப்படியா, நீ அப்ளை பண்றதா சொல்லவேயில்லையே. இவ்வளவு நெருங்கிய நண்பனாயிருந்து என்னடா இப்படி பண்ணிட்ட?”
ராம் – “சொல்லியிருக்கலாம்தான். ஆனால், உனக்குத்தான் வெளியூரிலே போய் வேலை பார்க்கறதுக்குப் பிடிக்கலைன்னு சொல்லியிருக்கியே.”
ஷ்யாம் – “ நீ முன்னமேயே சொல்லியிருந்தா கண்டிப்பாக நானும் அப்ளை பண்ணியிருப்பேன்.  நீ இப்படிப் பண்ணுவேன்னு எதிர்பார்க்க வில்லை.”
ராம் – “சொல்லியிருந்தா நீயே என்னை அப்ளை பண்ண விடாம தடுத்திருப்பாய். உன்னை மீறி என்னால எதுவும் செஞ்சிருக்க முடியாது. இந்த வேலையும் எனக்குக் கிடைச்சிருக்காது.”
ஷ்யாம் –“என்னடா, இப்படிச் சொல்லிட்டே. நான் உன்னோடு ஒரு நல்ல நண்பனாகத்தான் இருந்திருக்கேன். நீதான் என்னை இப்படி காலை வாரி விட்டு விட்டாய்.”
ராம் – “இல்லை. இந்த வேலைக்குச் சேர ஒரு பரிட்சை எழுதணும். அதுலே maths-ம் statistics-ம் தரௌவா தெரிஞ்சிருக்கணும். உனக்குதான் statistics பிடிக்காதே?”
ஷ்யாம் – “ஆதனாலென்ன, நான் முயற்சியாவது பண்ணியிருப்பேனே. நீ உதவி செய்திருக்க மாட்டாயா?”
ராம் – “எப்படிடா முடியும். நானே அதற்காக ஸ்பெஷல் கோச்சிங்க்கு போக வேண்டியிருந்தது.”
ஷ்யாம் – “ஓஹோ, கோச்சிங் வேறயா…அதுவும் எனக்குச் சொல்லவேயில்லை. துரோகி டா நீ?”
ராம் – “எவ்வளவு கஷ்டமான பரீட்சை தெரியுமா. நீ எழுதியிருந்தா பாஸ் பண்றதே ரொம்பக் கஷ்டமாக இருந்திருக்கும், தெரிஞ்சுக்கோ.”
            ஷ்யாம் – “ஓ, என்னுடைய குறையை சுட்டிக் காட்டுகிறாயா?”
            ராம் – “அப்படியில்லை. நான் உண்மையான நிலையைத்தான் சொன்னேன்…நீ ஒண்ணும் கவலைப் படாதே. உனக்கும் நல்ல வேலை கிடைக்கும். நான் உனக்காக ப்ரார்த்திக்கிறேன்.” ( நண்பனை சமாதானப் படுத்த வேண்டிய நிலை)
ஷ்யாம் – (உள்ளுக்குள் மிக வருத்தப் பட்டாலும்) “சரி, சரி… நான் maths-ல் ரொம்ப ஸ்ட்ராங் – போன வாரம்தான் ஒரு கல்லூரியில் என்னை விரிவுரையாளராகச் சேர்த்துக்க தீர்மானிச்சிருக்காங்க. உள்ளூரிலேயே வேலை. நிறைய டியூஷன். கை நிறைய காசு. உனக்குத்தான் தெரியுமே. கணக்கு சொல்லிக்கொடுப்பதற்கு இங்கே சரியான ஆளேயில்லையே…எங்கப்பா எனக்கு கல்யாணத்துக்குப் பெண் கூட பார்த்து வருகிறார். நல்ல பெரிய இடம்…சரி, இதையெல்லாம் உனக்குச் சொல்லி உன் மனசைக் கெடுப்பானேன்…வேலைக்குச் சேரும் போதாவது எங்கிட்ட சொல்லிவிட்டுப் போவாயா?”
ராம் – (மனதுக்குள்) (இவனும்தான் எங்கிட்ட ஓப்பனா சொல்லவேயில்லையே…கல்லுளி மங்கான்) “கண்டிப்பாகடா. சொல்லாம போவேனா!”

கற்பனை உரையாடலாக இருந்தாலும் இரண்டு நண்பர்கள் கூட தங்கள் தங்கள் நிலையிலிருந்து தங்களை, தங்களின் செயல்களை தற்காத்துக் கொள்கிறார்கள், வேஷம் போடுகிறார்கள், மற்றவரை குறை சொல்கிறார்கள், தங்களையே உயர்த்திப் பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் கவனிக்கலாம்.

கானடாவைச் சேர்ந்த எரிக் பெர்னே என்பவர் மனோதத்துவ முறையில் இதை அணுகி GAMES PEOPLE PLAY என்ற புத்தகத்தில் மிக அருமையாக அலசியிருக்கிறார். இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் பழகும் பொழுது மூன்று விதமான நிலைகளிலிருந்து செயல்படுவதாக அவர் சொல்கிறார். முதலாவது ‘பெற்றோர்’ என்ற ஆதிக்கம் பண்ணும் நிலை. இரண்டாவது ‘முதிர்ந்தவர்’ என்ற ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் நிலை. மூன்றாவது ‘குழந்தை’ என்ற மற்றவரை சார்ந்து நிற்கும், ஏங்கும் நிலை.

இதையும் ஒரு கற்பனை உரையாடலின் மூலமாக புரிந்து கொள்ளலாம்:

மனைவி – “என்னங்க...எப்பப் பார்த்தாலும் மொபைல் ஃபோனில் ஏதோ வெட்டியா பார்த்துக்கிட்டே இருக்கீங்க…எனக்கு சுத்தமா பிடிக்கலை…நீங்க பார்க்காத போது அந்த ஃபோனையே தூக்கி விட்டெறிஞ்சிடலாம் போல வருகிறது. (பெற்றோர் – குழந்தை நிலை)
கணவன் – “என்னை என்ன வெட்டியா எல்லாம் செஞ்சுகிட்டிருக்கேன்னு சொல்லிறியா…” (பெற்றோர் நிலை)
மனைவி – “நான் அப்படியா சொன்னேன்…எனக்காக கொஞ்ச நேரம் செலவிடச் சொன்னா…அதுக்காக இப்படிக் கோபப்படுறீங்களே…” (குழந்தை நிலை)
கணவன் – “அதுக்காக, உன் வாய்க்கு வந்த படி பேச முடியுமா?” (பெற்றோர் நிலை)
மனைவி – “அப்படி நான் என்ன சொல்லிவிட்டேன்…சரி, கொஞ்ச   நாட்களுக்கு நான் உங்க கூட பேசவேயில்லை, சரிதானே…உங்க இஷ்டம் போலச் செய்யுங்க…” (குழந்தை நிலை)
கணவன் – “அப்படி இல்லைம்மா… எனக்கு ஆபீசுலே நிறைய ப்ரஷர்…ஏதோ கொஞ்ச நேரம் வாட்ஸாப்பிலே ஃப்ரெண்ட்ஸ் கூட சேட் பண்ண ஒரு ரிலீஃபா இருகேன்னுதான்…அதுக்காக…என் கூட பேச மாட்டேன்…அப்படியெல்லாம் சொல்லாதேடா…” (குழந்தை – முதிர்ந்தவர்)
மனைவி – “நீங்க உங்க ஃப்ரெண்ட்சோட தாராளமா பேசிக்கோங்க…நான் ஒண்ணும் தடை சொல்லலை…ரொம்ப நேரம் அந்த ஃபோனையே பார்த்துக்கிட்டு இருந்தா கண்ணுக்கும் நல்லதில்லையே…அந்தக் கவலைதான் எனக்கு…” (முதிர்ந்தவர் – குழந்தை – பெற்றோர்)


அதாவது பல நேரங்களில் ஒருவருக்கொருவருடன் நமக்கிருக்கும் உறவை பெற்றோர் என்ற ஆதிக்கம் செலுத்தும் நிலையிலிருந்தோ அல்லது மற்றவர்களை நாடியிருக்கும் ஒரு குழந்தையில் நிலையிலிருந்தோ செலுத்துகிறோம். (மனதளவில்) முதிர்ச்சியடைந்த ஒருவரின் நிலையிலிருந்து அணுகும் பொழுது மட்டுமே உறவுகள் பலப்படுத்தப் படுகின்றன. புரிதலும் ஏற்படுகின்றன. ஆனால், இந்த மூன்று நிலைகளிலிருந்தும் தான் பொதுவாக நம் உறவுகளை அணுகுகிறோம். அதனால் நமது உறவு முறைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. 

Monday, February 27, 2017

What I found in my laptop: உறவுகளைப் பற்றி

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது கண்ணில் பட்டது. கொஞ்சம் சரி செய்து கீழே கொடுத்திருக்கிறேன். உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். நன்றி வணக்கம். 

26.02.17 
உறவுகளைப் பற்றி

நீ யார்?”
நான் ராமசாமி
அது உன் பெயர். நீ யார்?”
நான் சந்திரசேகரின் பையன்.”
நீ யார்?”
கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. “நான் சுந்தரம் அவர்களின் பேரன்.”
நீ யார்?”
விஜயின் சகோதரன்.”
நீ யார்?”
நான் யாரென்று எப்படி புரியவைப்பது. “நான் ஒரு மாணவன்.”
நீ யார்?”
மீண்டும் குழப்புகிறாரே? “நான் திருநெல்வேலியைச் சேர்ந்தவன்.”
நீ யார்?”
நான் ஒரு இந்தியன்.”
நீ யார்?”
நான் ஒரு தமிழன்,”
இப்பொழுது உங்களிடம் பதில் சொல்லிக்கொண்டிருப்பவன்,”
ஒரு ஆண்

இப்படிப் பல பதில்களைக் கூறிக்கொண்டே போகலாம்.

வேறொரு நபரோடு, அல்லது ஒரு கூட்டத்தோடு, அல்லது ஒரு தொழிலோடு, அல்லது வேறொன்றோடு நம்மை உறவு (தொடர்பு) படுத்திக்கொள்ளாமல் நம்மால் நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள முடியாது. வேறொன்றும் இல்லையென்றால் நான் யார் என்று எனக்கே தெரியாது. நான் இன்னாருடைய மகன், இன்னாருடைய கணவன். இன்னாருடைய சகோதரி. இன்னாருடைய மாமாஒரு தமிழ்நாட்டுக்காரன்ஒரு சென்னைவாசி. லயோலா கல்லூரியின் மாணவன். விப்ரோ கம்பெனியில் வேலை பார்ப்பவன். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

முயற்சி செய்து பாருங்கள். உங்களை எப்படி மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொள்வீர்களென்று.

சிறிய ஆனால் மகத்தான இந்த உண்மையை எனக்கு ஒரு மகான் உணர்த்தினார். அது வரை நான் இதைப் பற்றி யோசித்தது கிடையாதுபெரும்பான்மையானவர்கள் என்னைப் போலத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

உறவுகள் இருக்கும் வரைதான் நான் இருக்கிறேன். உறவுகள் இல்லையென்றால் நானில்லை. தொடர்பு இருக்கும் வரைதான் உறவுகள் நீடிக்கும். சார்ந்தே தோன்றியிருக்கிறோம். சார்ந்தே மறைகிறோம். Everything in this world is dependently arising and dependently ceasing.

நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முயற்சிப்பதில்லை. தெரிந்து கொண்டிருந்தால் நமது உறவுகள் வித்தியாசமாக இருந்திருக்கும். நாம் நடந்து கொள்ளும் முறையும் வித்தியாசமாக இருந்திருக்கும்.

உறவுமுறைகள்தான் நமது வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. இந்த உலகத்தில் எல்லாமே மற்றொன்றை சார்ந்திருக்கின்றன.

"வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிசையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.
கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்.
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்." என்று பாடியிருக்கிறார் பாரதியார். நாம் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்பதையே அவர் உணர்த்தியிருக்கிறார்.

ஒரு சமுதாயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவர் விவசாயி. கஷ்டமோ நஷ்டமோ நிலத்தில் கஷ்டப்பட்டு உழைத்து பயிரிடுகிறார். பயிர் விளைந்தவுடன், தனது தேவைக்கு மேலான விளைச்சலை சந்தைக்கு எடுத்துச் செல்கிறார். அங்கே ஒரு வியாபாரி இவருடன் பேரம் பேசி ஒரு விலைக்கு அந்த விளைச்சலை வாங்கிக் கொள்கிறார். அலுவலகம் போய் வரும் இன்னொருவர் அந்த விளைச்சலை தனது வீட்டிற்காக வாங்கிக் கொண்டு போகிறார். அவருடைய மனைவி அந்த விளைச்சலை உணவாக சமைக்கிறார். குடும்பத்தில் எல்லோரும் சாப்பிடுகிறார்கள். குப்பை சேருகிறது - உள்ளேயும் வெளியேயும். நகராட்சியிலிருந்து குப்பை அள்ள மற்றொருவர் வருகிறார். குப்பையை எங்கேயோ கொண்டு கொட்டுகிறார். நாட்பட நாட்பட அந்த குப்பை உரமாகிறது. அந்த உரத்திலிருந்து சத்தை எடுத்துக்கொண்டு வேறொரு செடி வளர்கிறது. மரமாகிறது. பூ பூக்கிறது. காய் காய்க்கிறது. காய் மீண்டும் உணவாகிறது. பூவை வேறொருவர் பறிக்கிறார். அதை கோவிலில் கொண்டு போய் சேர்க்கிறார். ஒரு அர்ச்சகர் அந்த பூவைக்கொண்டு ஆண்டவனுக்கு அர்ச்சனை செய்கிறார். அந்த ஆண்டவன் மகிழ்ந்து பக்தனுக்கு நல்லது செய்கிறார். இப்படி எல்லாமே ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எல்லோருமே விவசாயிகளாகவே, அல்லது வணிகர்களாகவே அல்லது அலுவலகம் செல்வோர்களாகவே,  ஆண்களாகவே அல்லது பெண்களாகவே இருந்தால் எப்படி இருக்கும்?

அல்லது இந்த பூமி முழுவதும் கடலாக இருந்தால் எப்படி இருக்கும்? அல்லது நாம் சுவாசிக்கும் காற்றில் பிராணவாயு மட்டுமே இருந்தால் எப்படி இருக்கும்? அல்லது இந்த பிரபஞ்சத்தில் நமது பூமி மட்டுமே இருந்தால் எப்படி இருக்கும்?

நமக்கு உணவு தேவைப்படுகிறது. உணவு(உற்பத்தி)க்கு மழை, வெயில் தேவை. மழைக்கு மேகங்கள் தேவை, மேகங்களுக்கு நீர் தேவை. வெயிலுக்கு சூரியன் தேவை. குழந்தைக்கு அம்மா தேவை. அம்மாவுக்கும்  குழந்தை தேவை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த படைப்பில் எல்லாமே ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கின்றன. உறவு கொண்டிருக்கின்றன. ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.

இப்படி ஒன்றோடொன்று சார்ந்திருக்கிற உறவுகளை நாம் எப்படி வைத்திருக்கிறோம் என்று கொஞ்சம் பார்த்தால்........?

பல உறவுகளில் விரிசல்கள். ஓட்டைகள். காயங்கள், உடைசல்கள். பெரும்பாலும் நம்மால் பிறரை சகித்துக்கொள்ள முடியவில்லை. நமது அஹங்காரம் மேலோங்கி நிற்கிறது. 'நான்' என்ற நினைப்பு பல உறவுகளை பிரித்து விடுகிறது. மற்றவர்களை நம்மால் அப்படியே ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மற்றவர்கள் நடந்து கொள்வதில்லை என்ற எண்ணமும் நம்மை ஏன் மற்றவர்கள் புரிந்து கொள்வதில்லை என்ற எண்ணமுமே மேலோங்கி நிற்கின்றன. மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நம்மை மாற்றிக்கொள்ளவும் முடிவதில்லை. பல உறவுகளில் சண்டை, சச்சரவு, அதையும் மீறி பகை. நம்பிக்கையின்மை, பொறாமை, குறை கூறுதல்  நிறைந்திருக்கின்றன. நம்மால் ஏன் மற்றவர்களுடன் - நமது மிக நெருங்கிய உறவுகளுடன் கூட - ஒத்துப் போக முடிவதில்லை.

பல உறவுகளில் சகிப்புத்தன்மை என்கிற பெயரில் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டும் இருக்கிறோம். ஒன்று நாம் காயப்பட்டவர்களாக இருக்கிறோம் (victim) அல்லது தியாகிகளாகிவிடுகிறோம் (martyr).

கணவன்மனைவி, அப்பாஅம்மா, குழந்தைகள், சகோதர சகோதரிகள், தாத்தாபாட்டி, பேரன்பேத்தி இப்படி நமது நெருங்கிய உறவுகளில் கூட நமக்கு பல குறைகள் இருக்கின்றன. இந்த குறுகிய வட்டத்திற்குள் கூட நல்ல உறவு கொண்டிருப்போரின் எண்ணிக்கை மிகக் குறைவு.

மற்றவரை புரிந்து கொள்ளும் முயற்சி பலருக்கும் குறைவாகவே காணப்படுகிறது. மற்றவர்களின் நிலையில் நம்மை நிறுத்தி யோசிப்பதென்பது மிக அரிதாக இருக்கிறது. நமது நிலையிலிருந்தே எல்லாவற்றையும் எடை போடுகிறோம்.

ஒரு உதாரணத்திற்கு: பல வீடுகளில் கணவனுக்கு  அலுவலகத்திலும் மனைவிக்கு அடுப்படியிலும் கடுமையாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இருவருமே அவரவர்கள் இடத்தில் வேலை செய்தால்தான் அடுத்தவர் சௌகரியமாக இருக்க முடியும். இருவருடைய வேலையிலும் கஷ்டங்கள் இருக்கின்றன. எதுவுமே எளிதான சமாச்சாரம் இல்லை. மாலையில் வீடு திரும்பிய கணவனுக்கு சற்று ஓய்வு தேவைப்படுகிறது. நாள் முழுவதும் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மனைவிக்கு மாலையிலாவது கொஞ்சம் வெளியே போனால் தேவலை என்று தோன்றுகிறது. இரண்டு முரண்பட்ட எதிர்பார்ப்புகளிலிருந்து இருவருமே மீள முடிவதில்லை.

வசதியில்லாத ஒரு தம்பி. தனிக்கட்டை. கூடப்பிறந்தவர்கள் மூன்று நான்கு பேர்கள். தம்பியின் வயதான காலத்தில் அவரை யார் கவனிப்பது? அவரை கவனித்துக் கொள்வதால் தனக்கு என்ன லாபம் என்று பல குடும்பங்களில் கணக்கு போடுகிறார்கள்.
               
பெற்றோர்கள் என்னை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்ற ஆதங்கம் பல குழந்தைகளுக்கும் வயதான காலத்தில் பிள்ளைகள் தன்னை சரியாக கவனிக்கவில்லை என்ற ஆதங்கம் பல பெற்றோர்களுக்கும் இருக்கிறது.

குறைகள் இல்லாத உறவு முறைகளை எங்கே காண முடிகிறது. பல உறவுகள் தள்ளி நின்று அழகு பார்த்துக்கொள்ளும் வரை சரியாகத்தான் இருக்கிறது. கிட்ட வந்தால் பிரச்சினைதான்

உறவு முறைகளில் நாம் எல்லோரும் காணத் துடிப்பது அன்பு மட்டுமே. ஆனால், நாம் பொதுவாக காண்பதென்னவோ மிஞ்சியிருக்கும் காயங்கள், ரணங்கள், குற்ற உணர்ச்சிகள், பொறாமை, கோபங்கள், குறைகள், போன்றவை தான். இந்த உணர்ச்சிகளெல்லாம் இல்லாமலேயே நம்மை அந்த கடவுள் படைத்திருக்க முடியாதா? முடியாது என்று சொன்னால் கடவுளுக்கு அவ்வளவுதான் சக்தி என்று ஆகி விடும். முடியும் என்று சொன்னால், அவர் ஏன் அப்படி செய்யவில்லை என்ற கேள்வி எழும். இந்த உணர்ச்சிகளெல்லாம் இயற்கையானதுதானா? இயற்கையாக இருந்தால் மாற்ற முடியாதா?

உணர்ச்சி பூர்வமாகவும் சரி, உடல் ரீதியாகவும் சரி நமக்குத் துணை, தொடர்பு, சார்ந்திருத்தல் தேவைப் படுகிறது. அந்த துணைக்காக, தொடர்புக்காகத்தான் பல விதமாக ஏங்குகிறோம், பல காரியங்களைச் செய்கிறோம். இந்த தேவைகளே உறவை உருவாக்குகின்றன. உறுதிப் படுத்துகின்றன.

அன்பு, பாசம் என்பது ஒரு புறமிருந்தாலும் அதற்கும் கீழே ஒவ்வொருவரின் தேவை அடி மனதிலிருந்து வேலை செய்கிறது. பொதுவாக, வெகு சிலரைத் தவிர எதிர்பார்ப்புகளில்லாத   நிபந்தனைகளில்லாத அன்பையோ, பாசத்தையோ கொடுக்க முடிவதில்லை. It looks almost impossible to give or receive unconditional love to or from anyone. We all have expectations from our love, though many are subtle and unstated.

இந்த சார்ந்திருக்கும் நிலை தொடரும் வரை உறவுகள் விரிவதில்லை. சார்ந்திருக்கும் தேவை எங்கே அற்றுப் போய் விடுகிறதோ அங்கே உறவுகள் நீடிப்பதில்லை. சார்ந்திருப்பதில் ஒரு தனி சுகம் இருக்கிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளை உறுதி படுத்திக்கொள்வதற்காக எதையும் தியாகம் செய்யலாம் என்றே தோன்றுகிறது. ஆனால், என் அஹங்காரம் தடுக்கிறதே? என்ன செய்வது?