Total Pageviews

Showing posts with label Total Solar Eclipse. Show all posts
Showing posts with label Total Solar Eclipse. Show all posts

Tuesday, August 22, 2017

21.08.17 இன்றைய நாட்குறிப்பு - சூரிய கிரஹணம்

21.08.17 இன்றைய நாட்குறிப்பு

1918-க்குப் பிறகு அமெரிக்காவில் 12 மானிலங்களில் தெரியும் அளவுக்கு முழு சூரிய கிரஹணம் நிகழ்ந்தது. மற்ற இடங்களில் முழுமையடையாத கிரஹணம் மற்றுமே தெரிந்தது. ஹவாயில் காலையில் சூரிய உதயத்துடன் இந்த கிரஹணம் ஆரம்பித்தது. இந்த சூரிய கிரஹணத்தைப் வேடிக்கை பார்ப்பதற்கு வேலை நாளாக இருந்தும் அமெரிக்காவில் பல இடங்களிலும் கூட்டம். சிகாகோவில் காலை 11.30 அளவில் வெளியே சூரிய அஸ்தமனம் போன்ற இருட்டு தொடங்கி விட்டது. மதியம் 1.19-க்கு முழு கிரஹணம் தெரியும் என்று அறிவித்தார்கள். தொலைக் காட்சிகளில்தான் இதைப் பார்க்க முடிந்தது. பிறைச் சந்திரன் போல தோற்றத்தோடு ஆரம்பித்து, சூரியனை நிலவு முழுவதுமாக மறைத்து பின்னர் ஒரு மோதிரம் போல சூரியனின் விளிம்பு மட்டும் தெரிந்து, பின்னர் பூ இதழ்கள் போல சூரியனைச் சுற்றி ஒளிக் கதிர்கள் பரவி, தலையில் கிரீடம் வைத்தது போல ஒரு தோற்றம் ஒரு சில வினாடிகளே தோன்றி பின்னர் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய ஆரம்பித்து….காணக் கண் கொள்ளாக் காட்சி. ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தும் தவிர்க்க முடியாத காரணங்களினால் வெளியே சென்று சூரிய கிரஹணத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் இன்னமும் தீரவில்லை.

ஜூலை 2, 2019-ல் அமெரிக்காவின் தென் பகுதியிலும், தென் அமெரிக்காவிலும், பசிஃபிக் கடல் பகுதியிலும் மீண்டும் முழு சூரிய கிரஹணம் காணப்படும் என்று அறிகிறேன்.

கடைசியாக இந்தியாவில் முழு சூரிய கிரஹணம் பார்த்தது 1980 ஃபிப்ரவரியில். அப்பொழுது சண்டிகரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரம். ஊரே அடங்கிப் போயிருந்தது. யாரும் – ஈ, காக்கை கூட - பொதுவாக வெளியே காணவில்லை. இப்பொழுதுள்ள விழிப்புணர்வு அப்பொழுது கிடையாது. கிரஹணத்தைப் பற்றிய பல பழங்கால நம்பிக்கைகளுடனேயே மக்கள் (என்னையும் சேர்த்து) வாழ்ந்து வந்த காலம் அது. கிரஹணத்தின் போது எதுவும், தண்ணீர் கூட, சாப்பிடக் கூடாது. கிரஹணம் முடிந்தவுடன் குளித்து பெற்றோர் இல்லாதவர்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும். கிரஹணத்தின் போது பல கேடு விளைவுகள் நடை பெறலாம் என்ற பலத்தை நம்பிக்கை இருந்து வந்தது. (கிரஹணத்தையொட்டிதான் தமிழ் நாட்டில் ஒரு கட்சியின் இரண்டு துண்டுகள் ஒன்றிணைந்தன, இது நல்லதா, கெட்டதா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.)

அதற்கும் முன்பு எப்பொழுது பார்த்தது என்று சரியாக ஞாபகம் இல்லை. சிறு வயதில் ஒரு முறை பார்த்ததாக நினைவு. அப்பொழுதெல்லாம் ஒரு கண்ணாடித் துண்டை எரியும் விளக்கிலிருந்து கிளம்பும் கரியை படிய வைத்து அந்தக் கறுப்புக் கண்ணாடி கொண்டு முழுமையடையாத சூரிய கிரஹணத்தைப் பார்த்த நினைவு இருக்கிறது. அப்பொழுது கூலிங் கிளாசஸ் எல்லாம் எங்களில் யாருக்கும் கிடையாது. பெற்றோர்களும், பெரியவர்களும் கிரஹணத்தின் போது எது செய்யலாம், செய்யக்கூடாது என்பதில் ரொம்பவும் கண்டிப்பாக இருந்தார்கள். அந்த நேரம் பார்த்துதான் அதிகமாக பசிக்கும். ஆனால், சாப்பிட முடியாது.

அடுத்த முழு சூரிய கிரஹணத்தை பார்க்க இருப்பேனா…தெரியாது?