Total Pageviews

Saturday, December 03, 2016

04.12.16 இந்த வார நாட்குறிப்பு

04.12.16 இந்த வார நாட்குறிப்பு

கடந்த வாரத்தில் என்னை பாதித்த இரண்டு விஷயங்களைப் பற்றி ஏற்கெனவே எழுதிவிட்டேன். அதில் முதலாவது திருநெல்வேலியில் சுலோச்சனா முதலியார் பாலத்தைப் பற்றியது. இரண்டாவது உயர்ந்த மதிப்புள்ள ரூபாய் தாள்களை செல்லாததாக்கி விட்டதைப் பற்றியும், கையிலேயே பணமாக வைத்திருந்தால் அதனுடைய நன்மைகளைப் பற்றியுமாகும்.

வழக்கமாக நாங்கள் சென்று வரும் ஆயுர்வேத மருத்துவரிடம் ஒரு நாள் சென்றிருந்தோம். சமீபத்தில் அவர் தன்னுடைய ஒரு சிறிய இடத்தில் பல மூலிகைச் செடிகளையும், பலவிதமான பூச்செடிகளையும் பயிரிடத் தொடங்கியிருப்பதாகச் சொன்னார். இன்றைக்கு மூலிகைச் செடிகள் கிடைப்பது மிகவும் அரிதாகிக் கொண்டிருக்கிறது. அதனால், அலோப்பதி மருந்துகளை விட ஆயுர்வேத மருந்துகளின் விலை மிக அதிகமாக இருக்கிறது. ஏழைகளுக்கு ஆயுர்வேதிக் மருந்து கட்டுப்படியாகாது என்ற நிலை. அவருடைய அந்த நல்ல முயற்சியைப் பாராட்டினோம். நாங்களும் தென்காசிக்கு வந்த புதிதில் இது போன்று ஒரு தோட்டம் அமைக்கவேண்டும் என்ற ஆசையை வைத்திருந்தோம். ஆனால், அன்றே நிலத்துக்கு அதிக விலை கேட்பது போலத் தோன்றியதால் நாங்கள் வாங்கவில்லை.  ஆனால், பத்து ஆண்டுகளில் தென்காசி சுற்றுவட்டாரத்தில் நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. அன்றே வாங்கியிருக்கலாம். இன்று பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலொழிய  நிலம் வாங்க முடியாது என்ற நிலை. அதனாலேயே ஒரு பள்ளி துவக்குகின்ற எங்கள் திட்டமும் கைவிடப்பட்டது.

கடந்த வாரம் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிராமணர் ஒருவரின் சதாபிஷேகத்துக்குச் சென்றிருந்தோம். தெருவை அடைத்து பந்தல் போட்டு, மிகவும் அழகாகப் பந்தலையும் அலங்காரம் செய்து, ஊர் முழுவதையும் அழைத்து அவரது பிள்ளைகளும் பெண்களும் சதாபிஷேகத்தை சிறப்பாக நடத்தினர். அந்தப் பெரியவர் அந்த ஊர் கோவிலிலே வேலை பார்த்தவர் என்பதால் எல்லோரையும் அவருக்கு நன்கு பரிச்சயம். சதாபிஷேகம் முடிந்து சாப்பாட்டுக்கு நீ முந்தி நான் முந்தி என்று கூட்டம். சாப்பாட்டு பந்தியில் பிராமணர், பிராமணர் அல்லாதவர் எல்லோரும் அருகருகேயே அமர்ந்து சாப்பிட்டனர். யாருக்கும் அது ஒரு குறைபாடாகத் தெரியவில்லை. உண்மையான சமத்துவபுரத்தை அங்கே நான் கண்டேன். அடிப்படையில் எல்லோரும் எந்த ஜாதி, மத, இன பேதமில்லாமல்தான் ஒருவருக்கொருவர் பழகி வருகிறார்கள் – அரசியல்வாதிகள் தலையிடாதவரை என்று தோன்றியது.

இங்கே இலஞ்சி – குற்றாலம் ரோட்டில் ‘ஓம் பிரணவ ஆச்ரமம்’ என்ற பெயரில் ஒரு குழந்தைகள் இல்லமும் முதியோர்கள் இல்லமும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதை நடத்தி வரும் திரு விஸ்வனாதன் – ட்ரௌபெட் தம்பதிகள் (ஆம், அந்தப் பெண்மணி ஆஸ்த்ரியா நாட்டைச் சேர்ந்தவர்) மிகச் சிரத்தையுடன் நடத்தி வருகிறார்கள். இருவரும் சத்ய சாயிபாபாவின் பக்தர்கள். எங்கள் வீட்டில் குழந்தைகளின் பிறந்த நாட்கள், எங்கள் பெற்றோரின் திதி நாட்களில் அந்த ஆஸ்ரமத்தில் தங்கியிருப்போருக்கு அன்னதானம் வழங்குவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஊரில் இருந்தால் அந்த தினத்தில் நாங்களும் அங்கேயே சென்று சாப்பிடுவோம். இங்கும் அப்படித்தான். எந்த ஜாதி, மத, இன பேதமில்லாமல் எல்லோரையும் நன்கு கவனித்து வருகிறார்கள். அந்த தம்பதிகளின் தன்னலமற்ற சேவை பாராட்டுக்குரியது.

இந்த வாரம் வங்கியில் பணம் எடுக்கப் போனபோது புதிய ஐநூறு ரூபாய் தாள்கள் கிடைக்கப்பெற்றன. புதிய நோட்டுக்கள் கண்ணுக்கு அழகாக இருந்தாலும் ஒன்றுக்கொன்று ஒட்டிக்கொள்வதால் எண்ணுவதற்கு நேரமாகிறது. பொதுவாக பாரத ஸ்டேட் வங்கியைத் தவிர மற்ற வங்கிகளில் பெரும்பாலும் அதிக கூட்டமோ, வரிசையோ காணவில்லை.

துணி எடுக்க ஒரு கடைக்குப் போயிருந்தோம். ஏனோ என்னுடைய ஒரு டெபிட் கார்டை அந்த மெஷின் ஏற்றுக்கொள்ளவில்லை. நெட்வொர்க் பிரச்சினை என்றார் அந்தக் கடைக்காரர். ‘என்ன சார், பணமே கிடைக்காத இந்த நாட்களில் என்னென்னவோ காரணம் கூறி கார்டை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்களே என்று அவரிடம் கோபப்பட்டுக்கொண்டேன். ஆனால், அவர் கூறிய பதில் என்னை வியக்க வைத்தது. உயர்ந்த மதிப்புள்ள ரூபாய் தாள்களை செல்லுபடியாகாமல் செய்ததை வரவேற்றுப் பேசிய அவர் மெஷின் மூலமாக பணம் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் பல நன்மைகளைப் பற்றி எனக்கு லெக்சர் கொடுத்தார். அதிர்ஷ்டவசமாக என்னுடைய இன்னொரு வங்கியின் டெபிட் கார்டை அந்த மிஷின் ஏற்றுக்கொண்டது. ஒரே வங்கியை முழுவதுமாக நம்பியிருக்கக் கூடாது என்ற நான் ஏற்கெனவே எழுதியிருப்பதை நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மோடி அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக அரசாங்கத்தை ஏய்ப்பவர்களின் கழுத்தில் சுருக்குக் கயிறை இறுக்கிக் கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. கேஸ் சிலிண்டருக்கு, ரேஷன் கார்டுக்கு, வங்கிக் கணக்குக்கு, பொருட்கள் வாங்குவதற்கென்று ஒவ்வொன்றாக ஆதார் கார்டை கட்டாயப்படுத்துகிறது அரசாங்கம். எனக்கு எந்த மானியமோ அல்லது இலவசப் பொருட்களோ கொடுக்க வேண்டாம் என்று எப்பொழுதோ எழுதிக் கொடுத்தாகிவிட்டது. இருந்தாலும் கேஸ் இணைப்புக்கும் என்னுடைய வெள்ளை ஹானர் ரேஷன் கார்டுக்கும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். கேஸ் இணைப்புக்கு இந்த ஃபார்மாலிடியை இந்த வாரம் முடித்தாகிவிட்டது. 

டில்லியில் மாணவர்களின் ஒரு பெரிய கூட்டத்தில் என்.டி. டி.வி புகழ் ஆர்னாப் கோஸ்வாமியின்  கலந்துரையாடலை யூடியூப்பில் பார்த்தேன். இந்தியாவில் என்னென்ன ஊழல்களை மீடியா துணிவுடன் வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்பதைப் பற்றி விரிவாகப் பேசினார். மீடியாவில் வேலை பார்ப்பதற்கு நிறைய துணிவு வேண்டும் என்பதைப் பற்றியும் சொன்னார். மாணவர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்குப் பதிலளித்தார். கூடிய சீக்கிரத்தில் மோடியுடன் ஐக்கியமாகி விடுவார் என்று மீடியாக்கள் எழுதுகின்றன.

தென்காசிக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திலிருக்கும் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வாலி பால் விளையாட்டில் பிராந்திய அளவில் முதலிடம் பெற்றதாகக் கேள்விப்பட்டேன். அதுவும் பல மெட்ரிக்குலேஷன் பள்ளிகளையும் தோற்கடித்து. அதுவும் பள்ளி சீருடை அணிந்தே விளையாடியிருக்கிறார்கள். அவர்களுக்கென்று விளையாடுவதற்கு வசதியான ட்ராக் பேண்ட், டீ ஷர்ட், ஷூ எதுவுமில்லாமல். இதை தற்செயலாக எங்கள் தெருவில் வசிக்கும் அந்தப் பள்ளியின் பி.டி மாஸ்டர் சொல்லக் கேட்டேன். அடுத்த நாளே அந்த விளயாட்டு வீரர்களுக்கு நல்ல ட்ராக் பேண்ட், டீ ஷர்ட் வாங்கிக் கொடுப்பதாக அறிவித்தேன். இந்த ஆண்டுக்கான போட்டிகள் எல்லாம் முடிந்து விட்டதால் அடுத்த ஆண்டுக்கு என்னுடை அறிவிப்பைப் பயன்படுத்திக் கொள்வதாக அந்தப் பள்ளி தீர்மானித்தது. அந்தப் பள்ளியில் காலை அசெம்ப்ளி நேரத்தில் என்னை வரவழைத்து ஒரு சில நிமிடங்கள் பேசச் சொன்னார்கள். எப்பொழுதும் போல மாணவர்களிடையே பேசுவது என்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தையும், புத்தகங்கள் படிப்பதை ஒரு பொழுதுபோக்காக ஆக்கிக்கொள்வதின் அவசியத்தைப் பற்றியும், ஆங்கிலத்தில் பேசுவதற்கு பயிற்சியின்  அவசியத்தைப் பற்றியும் சுருக்கமாக பேசி முடித்தேன். அடுத்த ஆண்டும் இந்தப் பள்ளி மாணவர்கள் வாலி பால் போட்டிகளில் சிறந்து விளங்குவார்கள் என்று நம்புகிறேன். எனக்கு பொருளாதார வளத்தையும் கொடுத்து, நல்ல தர்ம சிந்தனையையும் கொடுத்த ஸ்ரீஅம்மா பகவானுக்கு நன்றி.


                                                                        மீண்டும் சந்திப்போம்

Friday, December 02, 2016

In Defense of holding cash...

சமீபத்தில் இந்தியாவில் அதிக மதிப்புள்ள ரூபாய் தாள்கள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பிற்குப் பிறகு எல்லோரும் வங்கிகளுக்குப் படையெடுத்து வருகிறோம். தொன்று தொட்டு எந்நேரத்திலும் கையில் பணத்தை வைத்துக்கொண்டுதான் நமது கொடுக்கல் வாங்கல்களை நடத்தியிருக்கிறோம். கையில் இருக்கும் பணத்தின் சக்தியே வித்தியாசமானது என்பது உண்மை பல கடைகளில் டெபிட் கார்டு, க்ரெடிட் கார்ட் என்றால் உடனேயே ‘ஒன்று அல்லது ஒன்றரை சதவிகிதம் சார்ஜ் உண்டு’ என்பார்கள். முக்கியமாக தங்க நகைக் கடைகளில். ‘பில் போடணும் சார். விற்பனை வரி 10-12 சதவிகிதம் உண்டு’ என்பார்கள். (அப்படியே நாம் விற்பனை வரி செலுத்த சம்மதித்தால் கூட உண்மையிலேயே  நாம் கொடுக்கும் விற்பனை வரிப் பணம் அரசாங்கத்துப் போய்ச் சேருமா என்பது எனக்கு எப்பொழுதுமே சந்தேகம். ) அல்லது ‘மெஷின் இருக்கு சார். ஆனா, வேலை செய்யறதில்லை’ என்பார்கள்.  ‘கரண்ட் இல்லை சார், மெஷின் வேலை செய்யாது’ என்பார்கள். எப்படி எப்படியெல்லாம் கார்டு வாங்கிக்கொள்வதை தவிர்க்க முடியுமோ அதை கண்டிப்பாக (ஒரு சில பெரிய கடைகளைத் தவிர) முயற்சி செய்வார்கள்.

சரி, காசோலையாக கொடுக்கலாம் என்றால் காசோலை வாங்கிக்கொண்டு பண்டகப் பரிமாற்றம் என்பது நமது சரித்திரத்திலேயே கிடையாது. காசோலையை ஏற்றுக்கொள்வதில் பல சந்தேகங்கள்.

பணமாக பெற்றுக்கொண்டால் கடைக்காரருக்குத் தேவையான அளவு மட்டும் கணக்கில் காட்டிக்கொள்ளலாம். வரி செலுத்துவதை தவிர்க்கலாம்.

பணம் கையில் இருந்தால் பொருள் வாங்குபவர் தைரியமாகப் பேரம் பேசலாம்.  நமது கையிருப்பின் மீது முழு கட்டுப்பாடு நம் கையிலேயே இருக்கும். ரொக்கப் பணத்துக்கு சனி, ஞாயிறு விடுமுறை கிடையாது. வங்கிகளில் கணக்கு வைத்திருப்பதற்கு ‘ஃபோலியோ’ கட்டணம், எஸ்.எம்.எஸ் கட்டணம், ஒரு குறிப்பிட்ட தடவைக்கு மேல் ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கக் கட்டணம் –இது போன்று கட்டணம் பணத்தை கையில் வைத்திருப்பதற்கு கிடையாது.

இருக்கிற பணத்தைப் வங்கிகளில் போட்டால் வங்கி திவாலாகி விடுமோ என்று பயப்படுவது போல கையில் பணத்தை வைத்திருந்தால் பயப்பட வேண்டிய அவசியமில்லை. (திருட்டு பயத்தை வேறு விதத்தில் சமாளித்துக் கொள்ளலாம்)  ஒவ்வொரு வங்கியிலும் ‘டெப்பாசிட் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷனி’லிருந்து டெப்பாசிட் செய்பவரின் பணத்திற்குக் கிடைக்கும் அதிக பட்ச உத்திரவாதம் ஒரு லட்சம் மட்டுமே. எத்தனை வங்கிகளில் கணக்கு வைப்பது?

ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வங்கியிலிருந்து வட்டி கிடைத்தால் வட்டி கொடுக்கும் நேரத்திலேயே வருமான வரியைப் கழித்துக் கொண்டுவிடுவார்கள். அந்த வரியை முறையாக அரசாங்கத்துக்குச் செலுத்தி நமது வருமான வரி நிரந்தரக் கணக்கில் (PERMANENT ACCOUNT NUMBER WITH THE INCOME TAX DEPARTMENT) சேர்த்து விடுவார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. அதிலும் பல குளறுபடிகள். முன்னெல்லாம் ஆண்டுக்கு ஒரு முறைதான் TAX DEDUCTED AT SOURCE CERTIFICATE கொடுப்பார்கள். அதில் தவறிருந்தால் சரி செய்வது பிரம்ம பிரயத்தனம்தான். 26AS என்ற ஒரு ரிப்போர்ட்டில் நமது கணக்கில் எவ்வளவு வரி பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம். ஆனால், வரி பிடித்தம் சான்றிதழுக்கும் 26AS ரிப்போர்ட்டுக்குமிடையே வித்தியாசம் இருந்தால் நமது வரி பிடித்தம் சான்றிதழைப் பற்றி வருமான வரி இலாக்கா கவலைப்படுவதில்லை. 26AS ரிப்போர்ட்டில் எவ்வளவு தொகை காட்டப்பட்டிருக்கிறதோ அதை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு நமக்கு ரீஃபண்டு கொடுப்பார்கள் அல்லது கூடுதல் வரி அபராதத்தோடு கட்டச் சொல்வார்கள். எனக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய பொதுத்துறை வங்கி என்னுடைய டெப்பாசிட்டிலிருந்து பிடித்த வரி விவரமும், எனக்கு கொடுத்த வட்டியிலிருந்து வரி பிடித்தம் பற்றிய சான்றிதழும், 26AS ரிப்போர்ட்டில் காட்டப்பட்டிருக்கும் தொகையும் ஒத்துப் போகவில்லை. அந்த வங்கியின் சேர்மனுக்கு புகார் கொடுத்தும் அந்த வங்கிக் கிளையால் அவர்களது தவறை சரி செய்யமுடியவில்லை. விளைவு வருமான வரி இலாக்காவிலிருந்து எனக்கு திரும்ப வர வேண்டிய ‘ரீஃபண்டு’ தொகை இதுவரை வரவேயில்லை. வெறுத்துப் போய் அந்த வங்கியிலிருந்து என் கணக்கையே முடித்துக் கொண்டேன். வங்கிகள் செய்யும் தவறுக்கு நாம் தான் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. (இவ்வளவுக்கும் நானே ஒரு பொதுத் துறை வங்கியில் உயர் அதிகாரியாக பணி புரிந்திருக்கிறேன்)

ஒரு நடுத்தர மளிகைக் கடைக்காரர் கூட ஒரு நாளைக்கு 20000 ரூபாய்க்கு வியாபாரம் செய்கிறார். ஆண்டிற்கு சுமார் 75 லட்சம். எல்லாம் ரொக்கப் பணமாக. எவ்வளவு வரி கட்டுவார் என்று யோசித்துப் பார்த்தேன். கண்டிப்பாக எதுவும் கட்ட மாட்டார் என்றுதான் தோன்றுகிறது. இப்படி எத்தனை வியாபாரிகள் அரசாங்கத்தை ஏமாற்றுகிறார்கள்? ஆனால் என்னுடை வங்கி டிப்பாசிட்டில் ஒரு பைசாகூட குறைக்காமல் வட்டி கொடுக்கும்பொழுது வரியைப் பிடித்துக்கொள்கிறார்கள். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் வங்கியில் பிராந்திய மேலாளராக பணி புரிந்துகொண்டிருந்த போது ஒரு பெரிய பணக்கார வியாபாரி தன் வியாபாரத்துக்காக சுமார் 30 லட்சம் ரூபாய்க்கான வங்கி உத்திரவாதம் (BANK GUARANTEE) பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள தன் சொத்துக்களை அடமானம் வைப்பதற்கு தயாராக இருந்தார். அவரது வருமான வரி சான்றிதழைப் பார்த்த போது எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. அவரது ஆண்டு வருமானம் 9000 ரூபாயாகக் காட்டப்பட்டிருந்தது. ஆண்டுக்கு 9000 ரூபாய் வருமானமே உள்ள ஒருவருக்கும் சொத்து இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக 30 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள வங்கி உத்திரவாதத்துக்கு எப்படி பரிந்துரைப்பது. அவரது விண்ணப்பத்தை அன்றே நிராகரித்து அவர் கொடுத்த காகிதங்களையெல்லாம் திருப்பிக் கொடுத்து விட்டேன். இப்படித்தான் பல பெரிய வியாபாரிகள் செயல்பட்டு வந்திருக்கிறார்கள். வருமான வரி, விற்பனை வரி, சுங்க வரி, கலால் வரி இவையெல்லாம் கட்டாமல் எப்படி எப்படியெல்லாம் அரசாங்கத்தை ஏய்க்க முடியுமோ அப்படியெல்லாம் பலர் ஏய்த்து வந்திருக்கிறார்கள்.  நிலைமை கொஞ்சம் இப்பொழுது மாறியிருந்தாலும் சாதாராண நடுத்தர அலுவலர்கள் மட்டுமே ஒழுங்காக வரி கட்டி வருகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு அடிக்கடி வருவதுண்டு.

இணையதளம் மூலமாக வங்கிக் கணக்கை நடத்துவது (ON LINE BANKING) வசதியாகத் தான் இருக்கிறது. ஆனால், கம்ப்யூட்டர் செயல்பாடு பற்றியும், வங்கிகளில் அவ்வப்பொழுது அவர்களது வலைதளத்தில் செய்யும் மாற்றங்களுக்கேற்ப அதைப் புரிந்துகொண்டு நமது செயல்பாட்டை மாற்றவும் ஒருவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். COMPUTER LITERACY மிக அவசியம். ஆனால் சிறு நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் இருக்கும் மக்களால் வேக வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்களோடு போட்டி போட்டுக்கொண்டு எப்படி தங்களை மாற்றிக்கொள்ள முடியும் என்பது சந்தேகமே. அதனால் செல்ஃபோன் இயக்கத்தை எப்படி எளிமையாக்கியிருக்கிறார்களோ அதே போல வங்கிக் கணக்குகளையும் ரொக்கப் பணம் பரிவர்த்தனையில்லாமல் ‘ஆன் லைனி’-ல் பரிவர்த்தனை செய்யும்படி எளிதாக்க வேண்டும். இது வரை அதற்கு ஒரு வழியுமில்லை. இல்லையென்றால், இன்னும் குழப்பங்கள் கூடும். கிராமப் புற மக்களுக்கு நிச்சயமாக பல சிரமங்கள் ஏற்படும். இன்றைக்குக் கூட வங்கி ஏ.டி.எம் மெஷின்களில் பணம் எடுப்பதற்கோ போடுவதற்கோ வேறொருவரின் உதவியில்லாமல் எதுவும் செய்யமுடியாமல் தவிக்கிற கிராம மக்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் ஏ. டி. எம்- வாசலில் பணி புரியும் காவலாளிதான் உதவி புரிந்து வருகிறார்.  பல பொது மக்கள் அவரை நம்புகிறார்கள். நம்பிக்கை மற்றும் நாணயம் இன்னும் முழுவதுமாக செத்துவிடவில்லை. இன்றும் கிராமப் புறங்களில் கையெழுத்துப் போடத் தெரியாமல் கை நாட்டு வைத்து பணம் எடுப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது.

வங்கிகளை மட்டும் நம்பியிருந்தால் நமது நாட்டில் இன்றும் கஷ்டம்தான். அதுவும் ஒரே வங்கியை நம்பியிருந்தால் கஷ்டம் இன்னும் அதிகம். ஒருவருக்கு குறைந்தது இரண்டு வங்கியில் கணக்கு வைத்திருப்பது  நல்லது என்று நினைப்பவர்களுள் நானும் ஒருவன். திடீர் திடீரென்று வங்கிகளில் இணையதள வங்கி சேவையில் பல மாற்றங்களைக் கொண்டு வருவார்கள். டெபிட் கார்டை மாற்றுவார்கள். ‘பாச் வேர்டை’ மாற்றச் சொல்வார்கள். ONE TIME PASSWORD என்ற புதிய தலைவலிக்கு உங்கள் செல்ஃபோன் எப்பொழுதும் உங்கள் வசமே இருக்க வேண்டும். தப்பித் தவறி வெளி நாடுகளுக்குச் சென்றுவிட்டால் ‘ஆன் லைனில்’ பல வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துவதில் தடங்கல்கல் ஏற்படும். இப்படி எத்தனையோ…

இதையெல்லாம் பார்க்கும் பொழுது கையிலே பணமாகவே வைத்துக்கொள்வதே சிறந்ததோ என்ற ஒரு நினைப்பும் வருகிறது. பின் எப்படித்தான் ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிப்பது?


ஏதோ, மனதில் பட்டதைக் கொட்டித் தீர்த்துவிட்டேன்…

Wednesday, November 30, 2016

Sulochana Mudaliar Bridge at Tirunelveli across the river Tamirabarani

04.12.16 இந்த வார நாட்குறிப்பு

கடந்த வாரத்தில் ஒரு நாள் திருநெல்வேலிக்கு சென்று வந்தேன். பாளையங்கோட்டை செல்லும் வழியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கும் சுலோச்சன முதலியார் பாலத்தை கடந்து சென்றேன். அன்றோடு (27.11.16) அந்தப் பாலத்துக்கு 174 வயதாகியிருப்பதாக முத்தாலம் குறிச்சி காமராசு அவர்களின் முக நூலில் படித்தேன்.

நான் பள்ளியிலும், கல்லூரியிலும் படித்த காலத்தில் அந்தப் பாலம் வழியாக பல முறை நடந்து சென்றிருக்கிறேன்.  நாங்கள் வசித்தது திருநெல்வேலி டவுணில். என் அப்பாவும் பெரியப்பாவும் பாலத்தின் ஒரு புறம் கொக்கிரகுளம் பகுதியில் அமைந்திருந்த நீதிமன்றத்தில் எழுத்தர்களாக (க்ளெர்க்காக) வேலை பார்த்து வந்தார்கள். (இப்பொழுது அந்த வளாகம் பாளையங்கோட்டைக்கு மாற்ற்ப்பட்டு விட்டது) ஒரு சில ஆண்டுகளில் அவர்கள் இருக்கையும் எதிரெதிரேயே இருந்தது. ஒரு சில நாட்களில் என் அப்பாவுக்கு சாப்பாடு எடுத்துகொண்டு போவேன்.  நீதிமன்ற வளாகத்தில் ஒரு கேன்டீன் உண்டு. என் பெரியப்பா பெரும்பாலும் அங்கேதான் மதிய உணவைக் கழித்துக்கொள்வார். நான் எப்பொழுது போனாலும் அந்த கேன்டீனிலிருந்து வடை, அல்வா, ரவா கேசரி வாங்கிக் கொடுப்பார். அதற்காகவே அங்கே பல முறை சென்றிருக்கிறேன். கேன்டீனிலிருந்து சுவையான உணவு தயாராகிக் கொண்டிருக்கும் நறுமணம் காற்றில் எப்பொழுதும் மிதந்து கொண்டிருக்கும். கலெக்டர் அலுவலகமும் அந்த பகுதியிலேயே அமைந்திருந்தது. ஆற்றுப் பாலத்தைக் கடக்கும் பொழுது தூரத்தில் பனிமூட்டங்களுக்கூடே ரயில் பாலத்தையும் பார்க்கலாம்.

ஆற்றின் கரை கொக்கிரகுளம் பகுதியில் பெரிய மேடாக உயர்ந்து நிற்கும். பக்கவாட்டில் ஓங்கி வளர்ந்த மரங்கள். பார்ப்பதற்கு அருமையாகவும், குளுமையாகவும் இருக்கும். பரந்தவெளியில் குளிர்ந்த காற்று எப்பொழுதும் சிலு சிலுவென்று வீசிக்கொண்டிருக்கும். ஆற்றின் மறுபுறம் (இன்றும் போல) அன்றும் பன்றிகளின் கூட்டம் சுற்றிக்கொண்டிருக்கும். அதற்கு நடுவே எருமை மாட்டை குளிப்பாட்டிக் கொண்டிருப்பார்கள். பல வண்ணான்கள் துணி துவைத்துக் கொண்டிருப்பார்கள். இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒரு சிலர் ஆற்றில் குளித்துக்கொண்டும் இருப்பார்கள். இப்படி என் எண்ணங்கள் அந்தப் பாலத்தைக் கடந்து செல்லும்பொழுது வேகமாக ஓடிக்கொண்டிருந்தன.

என்னுடைய இந்த நினைவுகளையே என்னுடைய “WHAT, IF OUR DREAMS COME TRUE! AN UNCOMMON MEETINGWITH LORD SIVA”  என்ற நாவலில் கதையின் கதாநாயகன் அந்த ஆற்றுப்பாலத்தை கடந்து வரும்பொழுது அனுபவித்ததாக எழுதியிருந்தேன். அந்தப் புத்தகத்திலிருக்கும் பகுதியை கீழே கொடுத்திருக்கிறேன். நீங்களும் படித்து ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Chapter 35

As I stepped out of the District Collector’s office, I remembered Ambalam, the mendicant at Papanasam who shared with me the gory stories about the flash floods in the river Tamirabarani. My accidental meeting him eventually led to my long stay at Papanasam for seven years and we ended up, eventually, building water dams, to prevent flash floods in those hilly Podhigai regions. 

As I walked along the raised banks of the river Tamirabarani at Kokkirakulam where the District Collector’s office was housed in Tirunelveli, I passed by the offices and courts of the district and sessions judges. A cool wind was blowing crisscrossing the river, carrying with it a pleasant aroma from the court canteens that prepared very delicious halwa and vadai. From the elevations, I looked at the serene river below, flowing down quietly. I had heard that the river Tamirabarani never dried up in its history. At the far end behind me, I could see the silhouette of the railway bridge and a train passing over. Thanks to the British, India today had railways, bridges, and canals. On the other bank of the river, several pigs were scavenging for food even while dhobis were busy washing clothes beating them on small rocks. Buffaloes and bullocks were getting a cool bath in the river alongside the people. I walked along the more-than-half-a-century-old Sulochana Mudaliar bridge across Tamirabarani. I remembered someone telling me that several decades back, the philanthropist Sulochana Mudaliar built this bridge, entirely out of his personal wealth, to help villagers cross the river. The bridge was made of stones, brick and mortar and had stood firm over the years. Later, when the government wanted to lay a new wider bridge across the river, they couldn’t break any of the then existing structures. So they had to change their plan and the design and be satisfied with just widening the already existing bridge, by erecting additional pillars to support them. I reached the central bus stand at Tirunelveli Junction and took a bus to Papanasam where I went straight to my Lord’s temple.


என்னுடைய “WHAT, IF OUR DREAMS COME TRUE! AN UNCOMMON MEETING WITH LORD SIVA” நாவலைக் கண்டிப்பாக படித்துப் பாருங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக பிடிக்கும். இந்தப் புத்தகம் www.pothi.com என்ற வலைதளத்தில் கிடைக்கும். விலை கொஞ்சம் அதிகம்தான். குறைக்க முடியவில்லை. ஏனென்றால் PRINT ON DEMAND என்ற அச்சடிக்கும் முறையில் ஒவ்வொரு புத்தகமாகக் கூட அச்சடித்துக் கொடுக்கிறார்கள். ஆஃப்செட்டில் அச்சடிக்கப்படுவதில்லை.

Tuesday, November 22, 2016

20.11.2016 இந்த வார நாட்குறிப்பு

20.11.2016 இந்த வார நாட்குறிப்பு



கடந்த வாரம் முழுவதும் எங்கே திரும்பினாலும் பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்கள் செல்லுபடியாகாததின் தாக்கத்தைப் பற்றியே இருந்தது. பல இடங்களில் சகஜ நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிக் கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது. சராசரி மக்களுக்கு ஒரு வாரத்துக்கு எவ்வளவு பணம் தேவைப்படுமோ அந்த அளவு பணம் பொதுவாக கிடைத்துக் கொண்டிருந்தது என்றுதான் தோன்றுகிறது. அடிமட்ட மக்களுக்கு அதுவும் கிராமப் புற மக்களுக்கு, அதிலும் குறிப்பாக வங்கிகளின் சேவையை அதிகமாக பயன்படுத்தாதவர்களுக்கு சில சங்கடங்கள் இருந்திருக்கின்றன என்று நினைக்கிறேன். இந்த வகையைச் சேர்ந்த மக்களை வங்கிச் சேவைக்குள் கொண்டு வரவேண்டும் (inclusive banking) என்ற அரசாங்கத்தின் அடிப்படை எண்ணம் மோடி ஆட்சி வந்த பிறகு எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுது தூங்கியவர்கள் இப்பொழுது அவஸ்தைப் படுகிறார்கள். அரசாங்கத்தின் பல நடவடிக்கைகளால் பாதிக்கப்படுபவர்கள் இந்த அடிமட்ட ஏழை மக்கள் தான்.

இருந்தும், பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்கள் செல்லுபடியாகாது என்ற மோடியின் அறிவிப்பிற்குப் பிறகு பொதுவாக எந்த வங்கியிலும் ரகளை நடக்கவில்லை. (பல அரசியல் கட்சிகள் முயன்று வருகின்றன போலத் தோன்றுகிறது) ஒரு சில சங்கடங்களுக்கிடையே பெரும்பாலான மக்கள் கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டு சமாளிக்கத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. இருந்தாலும், கீழ்மட்ட மக்களிடையே கொஞ்சம் தேவையில்லாத பீதி இருப்பதும் தெரிகிறது. பெரும்பாலான தொலைக்காட்சிகள் எதிர்மறையாக கருத்துக்களையே பரப்பி வருவதாகத் தெரிகிறது.

தங்கள் வங்கிக் கணக்குகளை பதுக்கல்காரர்களுக்கு வாடகைக்கு கொடுத்த பல சாமானிய மக்கள் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் பணப் பரிமாற்றத்துக்கு விரல்களில் மை வைக்க ஆரம்பித்த பிறகு பல வங்கிகளில் நீள வரிசைகள் மறைந்துவிட்டன.

வட இந்தியாவில்தான் அதிகமான எதிர்ப்புகள் இருப்பது போலத் தோன்றுகிறது. அங்கேதான் படிக்காதவர்கள் அதிகம் இருக்கிறார்கள் போலும். முக்கியமாக பின் தங்கிய மானிலங்களான உ.பி, பிஹார் போன்ற இடங்களில். அங்கேதான் படிக்காதவர்களையும், ஏழைகளையும் வைத்து அரசியல் செய்வது இந்தியா சுதந்திரம் அடைந்த நாட்களிலிருந்து வழக்கமாகத் தொடர்ந்து வருகிறது.

அதிக மதிப்புள்ள ரூபாய் தாள்கள் செல்லுபடியாகாமல் போனதிலிருந்து பல எதிர்க் கட்சிகளுக்கு ஏழை பாழைகள் மீது அதீதமாக கருணை பொங்கி வழிகிறது. பா.ஜ.க அரசாங்கத்தை அடி, அடியென்று அடிப்பதற்கு இன்னொரு ஆயுதம் அவர்கள் கையில் கிடைத்திருக்கிறது. வழக்கம் போல நாடாளுமன்றம் செயல்படாமல் செய்திருக்கின்றனர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்த பொழுதும் எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க பாராளுமன்றத்தை வேறு பல காரணங்களுக்காக ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. இனி எதிர்காலத்திலும் இந்தக் கலாச்சாரம் தொடரும் என்று  நம்புவோமாக.

இவ்வளவு ரகளையிலும் பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ரொம்பவும் அடக்கி வாசித்து வருகிறார். ஓரளவு நேர்மையாக ஆட்சி நடத்த வேண்டும் என்று முனைபவர்களில் அவரும் ஒருவர் என்று நான் நம்புகிறேன். துணிச்சலாக மதுவிலக்கை அமல் படுத்தியிருக்கிறார். ஆனால், லாலுக் கட்சியுடன் கூட்டணிதான் நெருடலாக இருக்கிறது.

மதுரை ரயில் நிலையத்தில் தென்காசி வருவதற்கு நான் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது எனக்கு முன்னே நின்றிருந்துவர் பழைய ஒரு 500 ரூபாய்த் தாளைக் கொடுத்து விருதுநகருக்கு ஒரு டிக்கட் கேட்டார். டிக்கெட் பத்து ரூபாய்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். டிக்கெட் கௌண்டரில் இருந்த பெண்மணி எந்த எதிர்ப்பும் சொல்லாமல் டிக்கெட்டையும் கொடுத்து மீதிப் பணத்தையும் நூறும் பத்துமாகக் கொடுத்தார்.  விருதுநகருக்கு டிக்கெட் வாங்கியவர் கண்டிப்பாக விருதுநகருக்கு பயணப்பட்டிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். யாருக்கு உதவி செய்யவோ அல்லது கமிஷனுக்காகவோ 500 ரூபாயை மாற்றிக் கொடுத்திருக்கிறார் என்று நம்புகிறேன்.

ஆங்கிலத்தில் நான் எழுதி வெளியிட்ட “THE PATH” என்ற கதைப் புத்தகத்தின் முதல் பிரதி www.pothi.com-லிருந்து என் கைக்கு வந்து சேர்ந்தது. புத்தகத்தின் அட்டை மிக நன்றாக வந்திருந்தது பற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தென்காசி சுந்தரம் பிரஸ் ப்ரகாஷ் அவர்களுக்கு மீண்டும் நன்றி. THE PATH நூலை நீங்களும்தான் படித்துப் பாருங்களேன்.

                                                            … மீண்டும் சந்திக்கலாம்.



Sunday, November 13, 2016

13.11.16 இந்த வார நாட்குறிப்பு

13.11.16 இந்த வார நாட்குறிப்பு

கடந்த வாரத்தில் இரண்டு பெரிய பூகம்பங்கள் வெடித்ததில் வேறெதுவும் மனதில் ஓடாமல் வாரம் கழிந்தது. எல்லோருக்கும் தெரிந்த விஷயங்களானாலும் அதைப் பற்றியும் கொஞ்சம் எழுத வேண்டியிருக்கிறது.
முதலாவது, 500 மற்றும் 1000 ரூபாய்த் தாள்கள் அன்றிரவு 12 மணிக்கு மேல் செல்லுபடியாகாது என்ற பிரதமர் மோடியின் 8-ஆம் தேதி புதன் கிழமை இரவு 8 மணி அறிவிப்பு. அன்று நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகளை உலகம் முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம். அந்தச் செய்தியையே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார் மோடி அவர்கள். இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகள். கணக்கில் வராத 500 மற்றும் 1000 ரூபாய்த் தாள்களாக பதுக்கி வைத்திருந்த பண முதலைகள் அன்றிரவு 12 மணிக்குள் எப்படி தங்களிடம் உள்ள தாள்களை மாற்றுவது என்று புதுப் புது உத்திகளைத் தேடிக் கொண்டிருந்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 9—ஆம் தேதி (இந்திய நேரம்) வெளி வந்த பொழுது டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றது பலருக்கு இரண்டாவது அதிர்ச்சி. அவரை எதிர்த்து நின்ற ஹிலாரிக்கு ஆஃப்ரிக்கன்-அமெரிக்கர்கள், மெக்சிகர்கள், அமெரிக்க பெண்மணிகள், வேற்று நாடுகளிலிருந்து அமெரிக்கா குடிபுகுந்தவர்கள், இப்படி பலருடைய ஆதரவு மட்டுமில்லாமல் வெளியுறவுச் செயலராகப் ஒபாமாவின் கீழ் 4—ஆண்டுகள் பணி புரிந்த அனுபவம் வேறு. இவையெல்லாவற்றையும் மீறி அரசியலில் நேரடி அனுபவம் எதுவுமில்லாத ட்ரம்ப் வெற்றி பெற்றது அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலக அளவில் பலரை உலுக்கியது.

பிரதமரின் அறிவிப்பு பற்றி வேறொருவர் மூலம் கேள்விப்பட்டு முழு விவரம் தெரிந்துகொள்வதற்கு தொலைக்காட்சிப் பெட்டியை ஆன் செய்தேன். பிரதமரின் உரை முடிந்த பிறகு எல்லா சேனல்களிலும் அவர் அறிவிப்பைப் பற்றிய செய்திகளும் அதைச் சார்ந்த விவாதங்களும் தான் ஓடிக்கொண்டிருந்தன.  

நான் முக்கியமாக குறிப்பிட்டு சொல்ல விரும்பியது புதிய தலைமுறையின் ரங்கராஜ் பாண்டேயின் கருத்தரங்கத்தைப் பற்றி. பிரதமரின் அறிவிப்பின் முக்கியமான பகுதிகளை அவர் மீண்டும் மீண்டும் வலியுறித்தி சொன்னாலும் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய விதம் மொத்தத்தில் எதிர்மறையாக இருப்பது போலவே தோன்றியது.

பிரதமரே தன்னுடைய உரையில் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை புழக்கத்திலிருந்து நீக்குவதால் தற்காலிகமாக பல இடைஞ்சல்கள் சாதாரண மக்களுக்கு நேரலாம், இருந்தாலும் பொதுவான நாட்டு நன்மையை உத்தேசித்து மக்கள் அதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். சாதாரண பொது மக்களை நிச்சயம் பாதிக்கும் என்று தெரிந்தும் பொது மக்கள் பாராட்டாத அப்படிப்பட்ட ஒரு முடிவை பொதுவான நாட்டு நலன்களுக்காக – முக்கியமாக இந்தியாவில் கறுப்புப் பணம் ஒழிய வேண்டும் என்ற நோக்கத்தோடு - துணிந்து மோடி எடுத்திருக்கிறார். ஒரு உண்மையான தலைவர் தன் தொண்டர்கள் விரும்பும், பாராட்டும் முடிவுகளை மட்டும் எடுக்காமல் அவர்களுக்கு எது நல்லதோ அந்த முடிவை அவர்கள் விரும்பாவிட்டாலும் எடுப்பார். அப்படித்தான் மோடியும் செயல்பட்டிருக்கிறார்.

ஆனால், பல்வேறு இடங்களில் தேடித் தேடி மக்களின் பிரச்சினைகளை திரும்பத் திரும்பக் காட்டிக் கொண்டிருந்தது வேண்டுமென்று எதிர்மறையான கருத்துக்களை உருவாக்குவதற்காகவே காட்டியது போல இருந்தது. அதே போல அடுத்த இரண்டு நாட்களிலும் பொதுமக்கள் எல்லோரும் அவதிப்படுவது போலவே மீண்டும் மீண்டும் காட்டிக்கொண்டிருந்தார்கள்.

நான் கேள்விப்பட்ட வரையிலும் பல இடங்களில் பொது மக்கள் மோடியின் அறிவிப்பை பல கஷ்டங்களிடையே சரியான முறையில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.  வங்கிகளிலும் எந்தப் பிரச்சினையும் செய்யாமல்  நெடு நேரம் காத்திருந்து வங்கிகளோடு ஒத்துழைத்திருக்கிறார்கள். வங்கியில் பணி புரிபவர்களும் வங்கிக்கு வந்திருந்த எல்லாரையும் நல்ல முறையில் கவனித்து முடிந்த அளவு உதவி செய்திருக்கிறார்கள். அதையெல்லாம் தொலைக்காட்சியில் காட்டவில்லை. எப்படிக் காட்டுவார்கள்? இந்த தொலைக்காட்சி சேனல்கள் எல்லாமே பல பெரிய பண முதலைகளுக்குச் சொந்தமானதுதானே.

மோடி அரசின் முடிவால் நிச்சயமாக பலருக்கு கஷ்டங்கள் இருந்திருக்கும் என்பதையும் நான் நம்புகிறேன். மறுக்க முடியாது. ஏனென்றால் எனக்கே கஷ்டம் இருந்திருக்கிறது. 

சென்னையில் கடந்த ஆண்டு வெள்ளம் வந்தபோது எவ்வளவு மக்கள் அவஸ்தைப் பட்டார்கள் என்பதை நேரடியாகப் பார்த்திருக்கிறேன். தமிழக அரசு இரண்டு நாட்களுக்கு எங்கேயோ போய் ஒளிந்துகொண்டதை எத்தனை பேர் இன்னும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? அந்த சமயம் சென்னையை சுற்றி மின்சாரம் கிடையாது. தண்ணீர் கிடையாது. போக்குவரத்து கிடையாது. பால் கிடையாது. எத்தனையோ கஷ்டங்களை மக்கள் பார்த்திருக்கிறார்கள்.

1991-ல் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பணம் கொடுக்க நமது நாட்டில் அன்னியச் செலவாணி இல்லை. அப்பொழுது இருந்த பிரதமர் சந்திரசேகர் அரசாங்கமும் (ரிசர்வ் வங்கியின் கவர்னர் திரு. வெங்கிடரமணனும்) துணிந்து இந்தியாவிலிருந்த தங்கத்தை இங்கிலாந்திலும், சுவிட்சர்லாந்திலும் அடகு வைக்க முடிவெடுத்தது நமது நாடு திவாலாகாமல் காப்பாற்றியது. ஆனால், தங்கத்தை அடகு வைத்தபோது இதே போலத்தான் நாட்டு மக்கள் (பல அறிவு ஜீவிகள் என்று படிக்கவும்) ‘தங்கத்தை அடகு வைப்பதா?’ என்று கொதித்தெழுந்தனர்.

மோடியின் அறிவிப்புக்குப் பிறகு பல இடங்களில் சாதாரண பொதுமக்கள் பீதியடைந்திருக்கிறார்கள் என்பது போலத்தான் தோன்றியது. பிரதமரின் அறிவிப்பு வந்த உடனேயே எல்லோரும் இரவு ஒன்பது – பத்து மணிக்கு மேல் பெட்ரோல் பங்க்குகளுக்கு கூட்டம் கூட்டமாக விரைந்திருக்கிறார்கள்.  குழந்தைக்கு இரவு ஒன்பது மணிக்கு மேல் பால் வாங்க முடியவில்லை என்று ஒரு சில தாய்மார்களின் அழுகை. சாப்பாட்டுக்கு கையில் இருக்கும் 500 ரூபாய்த் தாளைப் பயன்படுத்த முடியவில்லை என்று பலருக்கு கோபம், இப்படிப் பலரின் எதிர்மறை வெளிப்பாட்டையே மாறி மாறிக் காட்டிக்கொண்டிருந்தார்கள். அந்த நிகழ்ச்சிகளின்  நோக்கமே எதிர்மறையாக இருந்தது போலத் தோன்றியது. பணத்தை பதுக்கி வைத்திருந்த பலர் நகைக் கடைகளுக்கு ஓடி இரவு 12 மணி வரை பல நகைக் கடைகள் திறந்திருந்ததை எந்தச் சேனலும் காட்டியதாகத் தெரியவில்லை. எப்படிக் காட்டுவார்கள்?

பொறுப்புள்ள செய்தி நிறுவனமாக இருந்திருந்தால் பிரதமரின் அறிவிப்பின் நல்ல அம்சங்களை, அதன் நோக்கத்தை, அதனால் ஏற்படக்கூடிய நல்ல மாற்றங்களைப் பற்றி பாசிடிவ்வாகவும் காட்டியிருக்கலாம். என்று எனக்குத் தோன்றியது.

9-ஆம் தேதி புதன் கிழமை காலை 9;15 மணிக்கு பங்குச் சந்தை நிலவரத்தைத் தெரிந்துகொள்வதற்காக கம்யூட்டரை திறந்து வைத்துக்கொண்டு ‘திக் திக்’ என்று காத்திருந்தேன். எதிர்பார்த்தது படி மார்க்கெட் விழுந்தது. மும்பை பங்குச் சந்தை 1600 புள்ளிகள் விழுந்தது. கம்ப்யூட்டர் திரை முழுவதும் ரண களமாக சிவப்பு  நிறத்தை காட்டிக்கொண்டிருந்தது. வைத்த கண் மாறாமல் ஒரு அரை மணி நேரம் பார்த்திருந்தேன்.  நான் எதிர்பார்த்தது போல பல பங்குகள் மீண்டும் ஏறத் தொடங்கின. 9.15க்கு நான் ஒரு லட்சம் ரூபாய் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தால் அந்த அரை மணி நேரத்தில் 20-லிருந்து 25-ஆயிரம் ரூபாய் லாபம் பார்த்திருக்கலாம். என்ன செய்வது 9.15-க்கு அந்த தைரியம் வரவில்லையே!

கம்ப்யூட்டர் திரை இப்பொழுது ND TV-யில் அமெரிக்க அதிபர் தேர்தலைப் பற்றிய ப்ரணாய் ராயின் கணிப்பு மற்றும் கருத்தரங்கத்துக்குத் தாவியது. ஹிலாரிக்கும் ட்ரம்புக்கும் இடையே ஓட்டு எண்ணிக்கை இடைவெளி முப்பதுக்கும் மேல் என்ற அளவில் ஓடிக்கொண்டிருந்தது. அந்த இடைவெளி குறையாமல் கூடிக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் ட்ரம்ப் 248 எண்ணைத் தொட்டுவிட்டார். சரி, இனிமேல் மீதமிருக்கக்கூடிய எல்லா இடங்களிலும் ஹிலாரி வென்றாலொழிய அதிபர் கனவை அவர் மறந்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தேன். இன்னும் ஒரு அரை மணி நேரம் கழித்து கம்ப்யூட்டர் திரையைப் பார்த்தால் ட்ரம்ப் 270-இலக்கைத் தாண்டியிருந்தார். அவருடன் சேர்ந்து துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட பென்ஸ் வெற்றி முழக்கம் செய்துகொண்டிருந்தார். ஒரு சில நிமிடங்களில் ட்ரம்ப் அவருடைய பரிவாரங்களுடன் (முக்கிய ஆதரவாளர்களும் பின் தொடர) மேடைக்கு வந்து ஒரு ராஜ நடை போட்டார். இந்த முறை அமெரிக்க தேர்தலில் 231 மில்லியன் வாக்காளர்களில் 133 மில்லியன் வாக்காளர்களே (அதாவது 57.6% சதவிகிதம்) தங்கள் ஓட்டை பதிவு செய்திருந்தனர்.  மீதி வாக்காளர்கள் எங்கே போனார்கள்? அவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள்? அவர்களுக்கு என்ன இரண்டு போட்டியாளர்களையும் பிடிக்கவில்லையா? ஓட்டு சதவிகிதம் கூடியிருந்தால் முடிவு எப்படி இருந்திருக்கும்? ஓட்டு பதிவு செய்தவர்களின் விகிதம் இந்தியாவை விட மிகக் குறைவு. இவ்வளவுக்கும் அங்கே அதிபர் தேர்தலுக்கு சுமார் 46 மில்லியன் வாக்காளர்கள் தங்கள் விருப்பத்தை தேர்தலுக்கு முன்னேயே பதிவு செய்திருந்தனர்.

நான் எழுதி வெளியிட்ட புத்தகங்களை அறிமுகம் செய்வதற்காக இந்த வாரத்தில் ஒரு நாள்  ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தேன். ஒரு புத்தகத்தின் விலை நூறு ரூபாய் என்று நிச்சயித்திருந்தேன். இந்த ஆண்டு இது வரை சுமார் 15 பள்ளிகளில் என்னுடைய புத்தகத்தை 100 ருபாய் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.  பள்ளி மாணவர்களின் பயனுக்காக வாங்கும்பொழுது சுமார் 30 சதவிகிதம் விலையைக் குறைத்துக் கொடுத்து வருகிறேன். ஆனால், நான் சென்ற பள்ளியின் முதல்வர் என்னுடன் என் புத்தகத்தை வாங்குவதற்கு விலையில் பேரம் பேசினார். எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. நான் தீர்மானமாக அந்த பள்ளி முதல்வரிடம் கூறினேன், “பள்ளிகளுக்கு என்னுடைய புத்தகத்தை இலவசமாக அன்பளிப்பாக கொடுப்பதில்லை. எல்லா பள்ளிகளிலும் 100 ரூபாய் விலை கொடுத்தே வாங்கிக்கொண்டிருக்கின்றனர். எல்லா முதல்வர்களிடமும் நான் சொல்லியிருக்கிறேன். என் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். என் புத்தகம் உங்கள் எதிர்பார்ப்புக்கு வரவில்லையென்றால் நீங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன், புத்தகத்தை நீங்களே வைத்துக்கொள்ளலாம் என்று. அதையே உங்களுக்கும் சொல்கிறேன்.” அப்படிச் சொன்ன பிறகும் அந்த முதல்வர் என்னுடைய மூன்று புத்தகங்களுக்கும் 250 ரூபாய் தருவதாகச் சொல்லிப் பேரம் பேசினார். நான் இறுதியாகச் சொன்னேன், “மன்னிக்க வேண்டும், என்னுடைய புத்தகத்தை விற்பதற்காக நான் பேரம் பேச விரும்பவில்லை,” என்று. அடுத்த இரண்டு நிமிடங்களில் அந்தப் பள்ளியை விட்டு வெளியேறி விட்டேன். ஒரு தொழில் வல்லுனரின் புத்தகத்தை வாங்கிக்கொள்வதற்கு இப்படியும் ஒரு பள்ளியில் பேரம் பேசுவார்களா என்று எனக்கே வெட்கமாக இருந்தது. ஒரு தொழில் வல்லுனருக்குரிய மரியாதையை அவருக்கு எப்பொழுதும் கொடுக்க வேண்டும், அவருடன் பேரம் பேசக்கூடாது என்று நினைப்பவன் நான். யாருடன் கணக்கு வழக்கு நான் வைத்துக்கொள்ளக்கூடாது என்று இந்த நிகழ்வு முன் கூட்டியே காட்டிக் கொடுத்ததற்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன்.


                                    …அடுத்த வாரம் மீண்டும் சந்திக்கலாம்.

Saturday, November 05, 2016

06.11.16 இந்த வார நாட்குறிப்பு

06.11.16 இந்த வார நாட்குறிப்பு

கடந்த வாரத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நிகழ்வுகள் எதுவுமில்லை.

சிறு கதைகள் அடங்கிய ஒரு புதிய புத்தகம் தமிழில் எழுத வேண்டும் என்பது இந்த வாரத்தின் தீர்மானம். என் சிறு வயதிலிருந்தே துப்பறியும் கதைகளையும், வீர சாகசங்களைப் பற்றிய கதைகளையும் மிகவும் ரசித்துப் படித்திருக்கிறேன். தேவனின் ‘துப்பறியும் சாம்பு’, தமிழ்வாணனின் ‘துப்பறியும் சங்கர்லால்’ ஜாவர் சீதாராமனின் ‘உடல், பொருள், ஆனந்தி’, வீர விஜயன் என்ற தொடர் சித்திரக் கதை (எழுதியவர் பெயர் ஞாபகமில்லை). பின்னர் ஆங்கிலத்தில் ஏர்ல் ஸ்டேன்லி கார்டனர் எழுதிய பெரி மேசன் நாவல்கள், ஆர்தர் கானன் டாயில் எழுதிய ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள், சாண்டில்யனின் பல சரித்திரக் கதைகள், கல்கியின் பொன்னியின் செல்வன் இப்படி எத்தனையோ கதைப் புத்தகங்களைப் படித்து ‘நானும் இது போல ஒரு கதாசிரியராக முடியுமா’ என்று ஏங்கியது உண்டு. இன்று ஆகியிருக்கிறேன். இது வரை மூன்று சிறு கதைப் புத்தகங்களையும், இரண்டு முழு நீளக் கதைப் பத்தகங்களையும், பொது அறிவுக்கான ஒரு புத்தகத்தையும் எழுதி வெளியிட்டிருக்கிறேன்.

ஆனால், இது வரை நான் எழுதி வெளியிட்டதெல்லாம் ஆங்கிலத்தில்தான். தமிழிலும் என்னால் எழுத முடியும் என்று நம்புகிறேன். ‘கூட்டணி’ என்ற தலைப்பில் ஒரு முழு நீள கதையை எழுதி வைத்திருக்கிறேன். இதை எழுதி ஒரு பத்து ஆண்டுகளாகியிருக்கும். அரசியலைப் பற்றியது. ஒரு நல்ல நோக்கத்தோடு இரண்டு எதிரிகள் கூட்டணி ஆட்சி அமைத்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து எழுதியிருக்கிறேன். இதில் பல புதுமையான  நிகழ்வுகள் நடப்பதாகவும் எழுதியிருந்தேன். வெளியிட ஏனோ தைரியம் வரவில்லை. பல சர்ச்சைகளை உண்டாக்கலாம் என்று ஒரு பயம்.  நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்த ஒரு சில பகுதிகள் இன்று உண்மையாகவே நடந்தேறியிருக்கின்றன போலத் தோன்றுகிறது. எந்தவித சர்ச்சைக்கும் இடம் கொடாமல் இன்று ஒரு எழுத்தாளன் பார்த்து எழுத வேண்டியிருக்கிறது. ‘ஏதோ, கற்பனைக் கதை தானே’ என்று ஊடகங்களும், அரசியல்வாதிகளும் விட்டு விடுவதில்லை.

நேற்று அமெரிக்காவில் நடந்ததாக ஒரு செய்தி படித்தேன். இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் களம் மிகவும் சூடாகி என்றும் இல்லாத அளவு தனிப்பட்ட முறையில் எதிர்த்து நிற்கும் வேட்பாளரைப் பற்றி கேவலமான பேச்சுக்கள், குற்றச்சாட்டுக்கள் என்று போய்க்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஒபாமா ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அதில் கலந்து கொண்ட ராணுவ உடையணிந்த ஒருவர் குடியரசுக் கட்சியின் கொடியைத் தூக்கிப் பிடித்துக் காட்டியிருக்கிறார். உடனேயே கூட்டத்தில் எல்லோரும் அவரைத் திட்டி கோஷங்களை எழுப்பியிருக்கின்றனர். (நம்மூராக இருந்தால் அவருக்கு உதை விழுந்திருக்கும்) கூட்டத்தில் ஒரே அமளி. ஒபாமாவால் பேச முடியவில்லை.

கோபம் கொண்ட ஒபாமா தன் குரலை எழுப்பி கூட்டத்தை கடிந்துகொண்டு இப்படிச் சொல்லியிருக்கிறார்: “நீங்கள் கோஷம் எழுப்புவதை நிறுத்திவிட்டு நான் சொல்வதைக் கொஞ்சம் அமைதியாகக் கேளுங்கள். முதலாவதாக, இங்கே குடியரசுக் கட்சியின் கொடியை பிடித்துக்கொண்டிருப்பவர் ஒரு வயோதிகர். அவர் தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அவ்வளவுதான். வேறு எதுவும் செய்துவிடவில்லை. அவரைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவருடைய வயதுக்கு நாம் மரியாதை காட்ட வேண்டும்.

இரண்டாவதாக, நாம் ஒரு சுதந்திர அமெரிக்காவில் வாழ்கிறோம். இங்கே ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்தை வெளியிட சுதந்திரம் இருக்கிறது. அந்த முதியவர் தன் கருத்தை ஒரு கொடியைத் தூக்கிக் காட்டி வெளிப்படுத்தியிருக்கிறார். அவ்வளவே.

மூன்றாவதாக அவர் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவர் அமெரிக்கா நாட்டுக்காக போராடிய வீரர். அவரை நாம் மதிக்க வேண்டும்.

கடைசியாக,  நீங்கள் எல்லோரும் வெறுமனே கோஷம் போடுவதை நிறுத்தி விட்டு (ஜனநாயகக் கட்சிக்கு) ஓட்டுப் போடுங்கள்.”

இப்படி ஒபாமா பேசி முடித்த போது பலத்த கரகோஷம். ஒபாமா ஒரு நல்ல தலைவர். அவர் பேசியது போல இங்கே எத்தனை அரசியல்வாதிகளால் பேச முடியும்? அது மட்டுமல்லாமல் சமயோஜிதமாக இக்கட்டான ஒரு சூழ்நிலையை தன் கட்சிக்கு சாதகமாக தன் சகிப்புத் தன்மையை வெளிக்காட்டி மாற்றிக்கொண்டார்.

அதே சமயம், ‘உன்னுடைய சுதந்திரத்தின் எல்லை என் மூக்கு  நுனி வரைதான்’ என்றும் நம்புவர்கள் அமெரிக்கர்கள்.

இங்கே எவ்வளவு தூரம் நமது கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தலாம் என்பது எனக்கு புரியாததால் என் கதையை பத்திரமாக சிறையில் அடைத்துவிட்டேன். இன்று நாட்டில், முக்கியமாக, தமிழ் நாட்டில் நடக்கும் பல அவலங்களைப் பார்த்து மனதில் வருத்தப்பட்டுக்கொள்ளத்தான் முடிகிறது. வெறும் பார்வையாளனாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது.

இன்னொரு கதைப் புத்தகம். “நான்கு பாதைகள்” என்ற தலைப்பில். இதுவும் எழுதி ஒரு பத்து ஆண்டுகள் இருக்கும். தமிழ் எழுத்துக்கள் கம்ப்யூட்டரில் அதிகமாக கிடைக்காத நாட்களில் ஒரு நண்பர் கொடுத்த ஏதோ  ஒரு எழுத்தைப் பயன்படுத்தி எழுதி முடித்திருந்தேன். ஆனால், என் கம்ப்யூட்டரை மாற்றிய பின்பு ஏனோ அந்த எழுத்தை பயன்படுத்த முடியவில்லை. இரண்டு, மூன்று கம்ப்யூட்டர்கள் மாற்றியதில் அந்த கதையின் ஃபைல் திறக்க முடியாமற் போயிற்று. கஷ்டப்பட்டு பாதி வரை எழுதி முடித்தது வீணாகப் போய்விட்டது. இன்றும் எனக்கு தமிழ் தட்டெழுத்து தெரியாததால், ‘அழகி’ என்ற ஒரு எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தியே எழுதி வருகிறேன்.

இப்பொழுது நான் எழுதத் தொடங்கிய ‘துப்பறியும் சங்கர்’ என்ற சிறு கதைகளின் தொகுப்பு ஒரு பள்ளி மாணவனைப் பற்றியது. சங்கர் ஒரு காவல் அதிகாரியின் மகன். பள்ளியில் படிக்கும்  நாட்களிலேயே துப்புத் துலக்குவது அவனது பொழுதுபோக்கு. இதை மையமாகக் கொண்டு என்னுடைய முதல் ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பில் ஒரு துப்பறியும் கதை எழுதியிருந்தேன். அந்தக் கதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதைப் போன்று தமிழிலும் தொடரலாமே என்ற நினைப்பில் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறேன். எழுதி முடிக்க நேரமாகலாம். அவ்வப்பொழுது எனது இணையதளத்தில் வெளியிடுகிறேன். படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.  நீங்கள் உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தால்தான் என்னுடைய எழுத்துக்களை அவ்வப்பொழுது சரி  செய்துகொள்ளவும் முடியும்.


மீண்டும் அடுத்த வாரம் சந்திக்கலாம்.

Saturday, October 29, 2016

30.10.2016 இந்த வார நாட்குறிப்பு

30.10.2016 இந்த வார நாட்குறிப்பு

கடந்த வாரம் மதுரையிலிருந்து தென்காசிக்கு திரும்பியாகிவிட்டது. என்னதான் மைத்துனர் வீட்டில் வசதியாக இரண்டு வாரங்களைக் கழித்திருந்தாலும் நம் வீட்டிற்கே திரும்பி வருவதில் ஒரு மகிழ்ச்சிதான். தென்காசி வீட்டில் உள்ள தண்ணீர் நிலவரம் தெரிந்ததுதான். அதனால் தென்காசி வந்து சேர்ந்த திங்கட் கிழமையன்றே கிணற்றில் தண்ணீர் இறைப்பதற்கு ஒரு வாளியும் கயிறும் வாங்கி விட்டேன். சுமார் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து எடுக்க வேண்டிய நிலை. மோட்டரிலிருந்து கிணற்றுக்குப் போகும் குழாய் கிணற்றில் தண்ணீரை சற்றே தொட்டுக்கொண்டிருந்தது. ‘ஏலேலோ ஐலசா’ பாடிக்கொண்டு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைப்பது இந்த வாரம் முழுவதும் உற்சாகமாகவே இருந்தது. கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து இறைத்து தலையில் கொட்டிக்கொள்வது அதை விட இன்னும் ஆனந்தமாகவே இருந்தது. புதன் கிழமை மாலை வேளையில் ஒரு 45 நிமிடங்கள் மழை கொட்டித் தீர்த்தது. ‘ஆஹா, இனி மழை தொடர்ந்து பெய்யும்’ என்ற எங்கள் எதிர்பார்ப்புக்கு பெரிய ஏமாற்றம் தான்.

நான் எழுதிய THE PATH என்ற கதைப் புத்தகம் கடந்த வாரம் சுகப் பிரசவமானது. சுமார் பத்து மாதங்கள் ஆயின இதை எழுதி, சரி பார்த்து, மீண்டும் சரி பார்த்து, அட்டை தயார் செய்து பிரசுரிக்க. www.pothi.com என்ற இணையதளப் பிரசுரத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. முதல் பிரதிக்கும் ஆர்டர் கொடுத்துவிட்டேன். ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் ஒரு பாதையை தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு சிலருக்கு அந்தப் பாதை சுமுகமாக அமைந்து விடுகிறது. ஒரு சிலருக்கு அந்தப் பாதையை தேர்ந்தெடுக்க உதவி கிடைக்கிறது. பலர் தங்கள் பாதையிலிருந்து வழுவி தாறுமாறாகப் போகிறார்கள். ஒரு சில சம்பவங்கள் அவர்களை மீண்டும் ஒரு நல்ல பாதைக்குக் கொண்டு வருகின்றன. ஒரு சிலருக்கு பாதை தவறியிருக்கிறது என்பதை உணராமலேயே பல இன்னல்களோடு வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி எத்தனையோ வகைகள். 

The Path   கதைப் புத்தகத்தில் சாமி, ராசன், மற்றும் கோட்டி என்ற மூன்று அப்பாவியான கிராமத்து இளைஞர்களின் வாழ்வில் கமலா டீச்சர் என்ற  நல்லாசிரியர் குறுக்கிட நேர்கிறது. அதற்குப் பிறகு அவர்கள் வாழ்க்கையே மாறி விடுகிறது. எப்படி அந்த மூன்று பேரும் முதன் முதலில் சந்தித்துக் கொண்டார்கள், எப்படி கமலா டீச்சர் அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிட நேர்ந்தது, எப்படி அவர்கள் பாதை உருவானது, எப்படித் தடம் புரண்டது, பின்பு எப்படி கமலா டீச்சரின் நல்லெண்ணங்களால் அவர்கள் மீண்டும் தங்கள் பாதைக்குத் திரும்பினார்கள் என்பதைப் பற்றிய கதை. இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். புத்தகம் வாங்க வேண்டிய இடம் www.pothi.com

            நம் எல்லோருக்கும் ஒரு குரு அவசியம் தேவைப்படுகிறது. ஒரு சிலருக்கு இயற்கையாகவே குரு அமைந்துவிடுகிறார். குரு இல்லாமையால் பலர் பல இடங்களுக்கு அலைந்து அல்லல் பட்டு, அடிபட்டு இறுதியில் ஒரு குருவின் உதவியால் மீண்டுவிடுகிறார்கள். என் வாழ்க்கையிலும் எனக்கு அப்படி ஒரு குரு என்னுடைய 48-ஆவது வயதில்தான் கிடைத்தார். அதற்கு முன்பு கிடைத்திருந்தால் வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பேன். ஆனால், எப்பொழுது அமைய வேண்டுமோ அப்பொழுது ஒரு குரு அமைகிறார். நான் தயார் நிலையில்லாத நேரத்தில் ஒரு குரு தோன்றியிருந்தால் நான் ஏற்றுக்கொள்ளாமலும் போயிருக்கலாம் என்பதை எனக்கு என் குருவின் உதவியாளர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். ஒரு சீடன் தயார் நிலையிலிருக்கும் பொழுது தானாகவே ஒரு குருவும் தோன்றி விடுகிறார் என்பது வாசகம். இதில் நிறைய உண்மை இருப்பதாக இப்பொழுது நான் உணர்கிறேன். எனக்கும் என் குரு மூலமாக ஒரு சரியான பாதை 48 வயதான பிறகே தோன்றியிருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால், இந்தப் பாதைக்கு வருவதற்கு 48 ஆண்டுகள் பல இடங்களுக்கு சுற்ற வேண்டியிருந்திருக்கிறது என்பதையும் உணர்கிறேன். ‘பாதை’ என்ற விவாதத்துக்குரிய ஒரு விஷயம் எனக்கு மிகவும் பிடித்தமானது. இந்த நூலை எழுதி முடிப்பதற்கு எனக்கு ‘அந்தர்யாமினாக’ இருந்து உதவிய என் குருவுக்கு நன்றி. என் புத்தகத்துக்கு அருமையான ஒரு அட்டையை தயார் செய்து கொடுத்த தென்காசி சுந்தரம் பிரஸ் உரிமையாளரின் மகன் திரு. பிரகாஷுக்கு நன்றி.

நான் எழுதி முடித்த மூன்றாவது சிறு கதைகளின் தொகுப்பு நூலும் அடுத்த கல்வியாண்டிற்காக ஒரு பள்ளியில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். என்னை ஊக்குவிக்கும் அந்த பாரத் மாண்டிசோரி பள்ளி முதல்வர் திருமதி காந்திமதி மற்றும் தாளாளர் திரு. மோகனகிருஷ்ணன் அவர்களுக்கும் மிக்க நன்றி. இந்தப் புத்தகமும் இந்த வாரம் அச்சேறிக்கொண்டிருக்கிறது என்பதில் மிகவும் மகிழ்ச்சி.

கடந்த வார இறுதியில் தீபாவளித் திருநாள் விமரிசையாக எல்லா இடங்களிலும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பொதுவாக இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தில் வெடிகளின் சத்தம் கொஞ்சம் குறைவாகவே கேட்கப்பட்டது. எங்கள் தெரு தீபாவளியன்று காலைக்குப் பிறகும் சுத்தமாகவே அதிக குப்பையில்லாமல் காணப்பட்டது. ஆனால், மாலையில் நிலைமை முழுவதுமாக மாறிவிட்டது. இப்பொழுதெல்லாம், காலையில் சீக்கிரமாக எழுந்திருந்து தீபாவளியைக் கொண்டாடுவதை விட மாலையில் கொண்டாடுவதுதான் சௌகரியமாக இருக்கிறது போல.

‘என்றிலிருந்து தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பது என்ற பழக்கம் தோன்றியது’ என்ற கேள்வி திடீரென்று எனக்குத் தோன்றியது. கிருஷ்ணர் நரகாசுரனை வதைத்ததாகக் கூறப்படும் நாட்களிலிருந்து இருக்க முடியாது என்பது என் தீவிரமான நம்பிக்கை. வெடிமருந்துகள் சீனாவில்தான் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன என்று ஆராய்ச்சிகள் கூறியிருக்கின்றன.  கி. மு. 200-ஆம் ஆண்டில் வெறும் மூங்கில் குழாய்களை தொடர்ந்து சூடுபடுத்தும் பொழுது அவை வெடித்து சிதறுவதைப் பார்த்திருக்கிறார்கள்.  துப்பாக்கிக் குண்டு மருந்து (Gun Powder) பின்னால் சுமார் 9-ஆம் நூற்றாண்டில்தான் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதனால் தீபாவளியன்று வெடிகளை வெடிப்பது என்பது பழமையான பழக்கமில்லை என்றே தோன்றுகிறது. தீபாவளி என்பது விளக்கேற்றி வைத்து லட்சுமிக்கு ஆராதனை செய்யும் ஒரு பண்டிகையாகவே இருந்திருக்கிறது. அதுவும் பெரும்பாலும் குஜராத் போன்ற வட பகுதிகளில்தான். மொகலாயர்களின் காலத்துக்கு முன்பு தீபாவளியையொட்டி பட்டாசுகள் வெடிப்பதைப் பற்றி எந்தத் தகவலுமில்லை. ஔரங்கசீப்பின் காலத்தில் தீபாவளியின் போது விளக்குகளை ஏற்றி வைப்பதற்குக்கூட தடையிருந்திருக்கிறது.

அப்படியென்றால் பட்டாசு வெடிப்பது எப்பொழுது தொடங்கியது. இணையதளத்தில் தேடிப் பார்த்ததில் எனக்குக் கிடைத்த சுவையான தகவல் என்னவென்றால், தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது என்பது சிவகாசியைச் சேர்ந்த திரு ஐயா நாடார் அவர்களின் நேர்த்தியான வியாபார உத்திதான் என்பது. 1920-களில் கல்கத்தாவுக்குச் சென்று தீக்குச்சி தயாரிப்பதைக் கற்றுக்கொண்ட திரு ஐயா நாடார் அவர்கள் சிவகாசி திரும்பி வந்து இங்கேயும் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் மூலமாக தீக்குச்சி தயாரிக்கும் தொழிற்சாலையைத் துவக்கியிருக்கிறார். பின்னால் வெடி மருந்துகள் தயாரிப்பதற்கு தனது தொழிலை விரிவுபடுத்தியிருக்கிறார். அந்தக் காலக் கட்டத்துக்குப் பிறகே பட்டாசு தயாரிக்கப்பட்டு தீபாவளியைக் கொண்டாடுவதற்கு பட்டாசுகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. 1940-களில் அவரும் அவரின் சகோதரரும் தொடங்கிய ‘அணில்’ மற்றும் ‘ஸ்டாண்டேர்ட்’ பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகள்தான் இந்தியாவில் முதன் முறையாக பட்டாசுத் தொழிற்சாலையாக இருக்கவேண்டும். 1940-க்குப் பின்புதான் பட்டாசு தீபாவளியின் ஒரு முக்கிய அங்கமாகியிருக்கிறது.

தீபாவளியைக் கொண்டாடுவதிலும் பல நுண்ணிய கலாச்சார மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றவோ என்றும் தோன்றுகிறது. ஆல் இந்தியா ரேடியோ பிரபலமான அன்றைய காலத்தில் காலை 5 மணிக்கெல்லாம் ரேடியோவில் நாதஸ்வர இசையக் கேட்பது பல வீடுகளில் பழக்கமானது. 1940-களில் பட்டாசு வெடிப்பது துவங்கியது போல 1960-களில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், மற்றும் எம்.ஜி.ஆர் நடித்து தீபாவளியன்று வெளியிடப்பட்ட  படங்களை அன்றே பார்த்து விடுவது என்ற ஒரு புதுக் கலாச்சாரம் துவங்கியிருக்கிறது. தீபாவளியன்று காலை 7 மணிக்கு ஒரு ஷோ தியேட்டர்களில் ஓடும். படம் பார்ப்பதற்கு தியேட்டரில் சுவர் ஏறிக் குதித்து டிக்கெட் வாங்க வேண்டியிருக்கும். நானும் ஒன்றிரண்டு படங்களை அப்படிப் பார்த்திருக்கிறேன்.

1980-களில் தொலைக்காட்சிப் பெட்டி எல்லா இடங்களுக்கும் வந்த பிறகு காலை பட்டாசு வெடித்த பிறகு தொலைக்காட்சிப் பெட்டியில் நிச்சயமாக நடக்கும் பட்டி மன்றத்தையும் அதைத் தொடர்ந்து சினிமா சம்பந்தமான பல நிகழ்ச்சிகளையும் இருந்த இடத்தை விட்டு அசையாமல் பார்க்கும் கலாச்சாரம் தோன்றியது.

அடுத்த இருபது முப்பது ஆண்டுகளில் மீண்டும் ஒரு கலாச்சார மாற்றம். அங்கொன்றும் இங்கொன்றுமாக தங்கள் பொருட்களை தள்ளுபடி செய்து விற்று வந்த வியாபாரிகள் தீபாவளி, பொங்கலுக்கும் அந்தத் தள்ளுபடியை விரிவுபடுத்தி வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்றோ, தீபாவளி மற்றும் பொங்கலுக்கு முன்னே எல்லாமே தள்ளுபடி மற்றும் ‘ஆஃபர்’ வியாபாரம்தான். இதில் ஆன்-லைனில் வியாபாரம் மற்றவர்களைத் தூக்கி சாப்பிட்டுவிடும் ரகம். தீபாவளி சமயத்தில் ஈ-மெயில் பெட்டியைத் திறந்தால் கன்னா பின்னாவென்று விளம்பர மெயில்கள். தீபாவளிக்கு ‘கங்கா ஸ்னானம்’ ஆகி விட்டதா, என்ன புடவை வாங்கினாய் என்று கேட்ட காலம் போய் எந்தக் கடையில் அல்லது எந்த இணையதளத்தில் என்ன பொருட்கள் வாங்கினாய் என்று கேட்கும் காலமாக மாறி விட்டது. பட்டாசுக்கு செலவிடப்பட்ட பணம் இன்று மொபைல் ஃபோன், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சமையலறைப் பொருட்கள் வாங்குவதற்கான சீசனாக மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் விளம்பரம்தான். இன்றோ, பக்கத்து ஊர்களுக்கும் நாடுகளுக்கும் தீபாவளி விடுமுறையை கழிக்க குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பறக்கத் துவங்கியிருக்கிறார்கள். என்ன சொல்வது?

            நான் பொதுவாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை என்று சொல்லியிருக்கிறேன். இருந்தும் அவ்வப்பொழுது வேறு எந்த வேலையும் செய்யப் பிடிக்காத ஒரு சில நேரங்களில் தொலைக்காட்சிப் பெட்டியில் சேனல்களை ஓட்டிப் பார்த்திருக்கிறேன். அதிக பட்சம் 5 நிமிடங்கள் சுற்றிவிட்டு பெட்டியை அணைத்து விடுவேன். இந்த தீபாவளியன்று மதிய நேரம். சாப்பிடுவதற்கு முன்னால் அதே போல ரிமோட்டை சுழற்றியதில் 1964-ல் வெளி வந்த ‘காதலிக்க நேரமில்லை’ படம் ஓடிக்கொண்டிருந்தது. பார்க்க வேண்டும் என்று தோன்றியது. பல நாட்களுக்குப் பிறகு மனம் விட்டு சிரித்து ஒரு படத்தைப் பார்த்த திருப்தி ஏற்பட்டது. என்ன அருமையான விரசமில்லாத காமெடி, நடிப்பு, துடிப்பான நடிகர்கள், துடிப்பான பாட்டுக்கள். நான் பார்க்க ஆரம்பித்த பிறகு சீர்காழி கோவிந்தராஜனின் பின்னணிப் பாட்டில் ‘காதலிக்க நேரமில்லை,’ பி. பீ. ஸ்ரீனிவாஸ் – சுசீலா வின் ‘நாளாம் நாளாம் திரு நாளாம்’ மற்றும் ஜேசுதாஸ் – சுசீலா பின்னணியில் ‘நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா..’ மூன்றின் படக்காட்சிகள் என் நரம்புகளைத் துள்ள வைத்தன. பாலையாவின் நடிப்பு – இனி இப்படி ஒரு நடிகரைப் பார்க்க முடியுமா? இந்தப் படமும் 1964-ல் தீபாவளியன்றுதான் வெளியிடப்பட்டது என்று ஞாபகம். பல படங்களை முதல் நாளில் முதல் ஷோவில் பார்த்திருந்தும் இந்தப் படத்தை முதல் நாள் பார்க்கவில்லை. ஆனால், என்னுடை பால்ய நண்பன் எஸ்.ஜி.எஸ் போய் பார்த்துவிட்டு வந்து என்னை பயங்கரமாக உசுப்பேத்தி விட்டான். இருந்தும் என்னுடைய ஞாபகப்படி இந்தப் படத்தை ஏனோ 10-15 நாட்கள் கழித்தே நான் பார்த்தேன். பிறகு தியேட்டரிலிருந்து இந்தப் படத்தை தூக்குவதற்குள் ஒரு 5-6 முறை பார்த்திருப்பேன். பாதிப் படமேயானாலும் நேற்று மீண்டும் பார்த்ததில் ஒரு பெரும் மகிழ்ச்சி. (நான் ஒரு சினிமா ரசிகன். அதிலும் எம்.எஸ்.வி – டீ.கே.ஆரின் இசைக்கு அடிமை என்பதை நினைவில் கொள்ளவும்.)

அப்படியாக இந்த வாரம் இனிதே முடிந்தது.

மீண்டும் அடுத்த வாரம் தொடரலாம்.

Friday, October 28, 2016

அமெரிக்கா வர ஆசைப்படும் அன்பானவர்களே … கொஞ்சம் சிந்தியுங்கள்’

‘அமெரிக்கா வர ஆசைப்படும் அன்பானவர்களே … கொஞ்சம் சிந்தியுங்கள்’ என்று தொடங்கும் முகநூல் நண்பரின் எழுத்துக்கள் என்னை இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியது. அமெரிக்காவில் மருத்துவ வசதிகள், மருத்துவதற்கு ஏற்படும் செலவு, போக்குவரத்துக்கு பஸ் வசதி, இந்திய உணவுகள் கிடைப்பது, ரோட்டில் நடந்து செல்ல முடியாதது, விருப்பம் போல தனியே எங்கும் செல்ல முடியாதது இப்படி பல இன்னல்களைப் பட்டியலிட்டிருக்கிறார் அந்த நண்பர்.

எந்த ஒரு இடத்திலும்  நமக்குத் தேவையான எல்லா வசதிகளும் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஒரு சில வசதிகள் இருக்கும். ஒரு சில அசௌகரியங்களும் இருக்கும். இரண்டும் கலந்தேதான் ஒருவருக்கு எதுவுமே கிடைக்க முடியும்.

இந்தியா என்பது சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெரிய நகரங்கள் மட்டுமல்ல. லட்சக்கணக்கான கிராமப் புறங்களைக் கொண்டது.  நகர் புறங்களில் கிடைக்கும் பல வசதிகள் கிராமப் புறங்களில் கிடைப்பதில்லை. அதற்காக கிராமவாசிகள் எல்லோரும் நகர் புறத்துக்கு இடம் பெயர்ந்து விடுவதில்லை. உதாரணமாக நான் வசிக்கும் தென்காசியில் பேர் சொல்லிக்கொள்ளும்படியாக, நவீன சிகிச்சைகள் கொடுக்கக் கூடிய மருத்துவ மனை என்று ஒன்று கூட கிடையாது. ஏதேனும் எமெர்ஜென்சி என்றால் அவசரத்துக்கு மருந்தைக் கொடுத்து திருநெல்வேலிக்கோ மதுரைக்கோ அனுப்பி விடுவார்கள். பல சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மதுரையிலிருந்தும், திருநெல்வேலியிலிருந்தும் ஒரு சில மணி நேரங்களுக்காக இங்கே வருகிறார்கள். அவர்கள் வரும்  நாளன்று அந்த க்ளினிக்கில் பேய்க்கூட்டம் கூடியிருக்கும். ஒரு  நோயாளிக்கு அதிக பட்சம் 3 நிமிடங்கள்தான் அந்த சிறப்பு மருத்துவரால் கொடுக்க முடியும். அதில் என்ன பிரயோஜனம்? அந்த க்ளினிக்கில் ஒரு நாளைக்கு அதிக பட்சமாக 100 டோக்கன்கள் வரை வழங்குவார்கள்.  பொதுவாக எந்த சிறப்பு மருத்துவரிடம் சென்றாலும் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும். அவ்வளவு அதிகமான நோயாளிகள். அவ்வளவு குறைவான மருத்துவர்கள். தென்காசியைப் போலத்தான் பல கிராமப் புற ஊர்கள் இருக்கின்றன. பெரிய மருத்துவர்கள் எல்லாம் பெரிய நகரங்களிலேயே தங்கி விடுகிறார்கள். எந்த தீவிர சிகிச்சைக்கும் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி அல்லது மதுரைக்குத்தான் ஓட வேண்டியிருக்கிறது. இங்கே என்ன மருத்துவச் செலவு குறைச்சலா? அமெரிக்க டாலரை ரூபாய்க்கு மாற்றிக் கணக்குப் போட்டால் அங்கே மருத்துவச் செலவு அதிகம் போலவே தோன்றும். இந்தியாவிலும் பல மருத்துவ மனைகள் பணம் கறப்பதற்காகவே நடத்துவது போலத் தோன்றுகிறது. இதற்கு நடுவே மனிதாபிமானம் கொண்ட நல்ல பல மருத்துவர்களும் பல இடங்களிலும் இருக்கிறார்கள்.

இந்தியாவில் நிலைமை இப்படி இருக்க…

வட அமெரிக்காவில், சிறப்பு மருத்துவர்களின் அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பது கடினம் என்பது உண்மைதான். இருந்தும் எமெர்ஜென்சிக்கென்றே பல சிறிய மருத்துவ மனைகள் இருக்கின்றன. அங்கே நாம் நினைத்த உடனேயே சிறப்பு மருத்துவரைப் பார்க்க முடியாது. குடும்ப மருத்துவரைப் போன்ற ப்ரைமரி மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே சிறப்பு மருத்துவரை பொதுவாக பார்க்க முடியும். எமெர்ஜென்சி மருத்துவர் பல இடங்களில் ஒரு நர்சாகத்தான் இருப்பார். அவர்களுக்கு மருத்துவர்களுக்கு சமமாக மருந்து எழுதிக் கொடுக்க அதிகாரம் உண்டு. அவர் தேவையென்று கருதினால் வேறொரு மருத்துவருக்கு அவரே ஏற்பாடு செய்வார். பல நகரங்களில் பெரிய மருத்துவ மனைகள் இருக்கின்றன. இங்கே எப்பொழுது வேண்டுமானாலும் ஒரு நோயாளி அணுகலாம். ஆனால், ஒரு மருத்துவரிடம் போனால் நோயாளியின் முழு சரித்திரத்தைத் தெரிந்து கொள்கிறார்கள். ஒரு நோயாளியின் மருத்துவ ரெக்கார்ட் பத்திரமாக ஆண்டுக்கணக்காக ஒவ்வொரு மருத்துவரிடமும் பாதுகாக்கப்படுகிறது. இங்கு போல துண்டு சீட்டை எழுதிக் கொடுப்பதில்லை. அங்கே தொட்டால் துடைத்தால் மருத்துவர்களின் கவனக் குறைவுக்காக நியாயம் கேட்க நீதிமன்றங்களுக்கு மக்கள் போக முடியும் என்பதால் மருத்துவர்கள் மிகக் கவனமாக நோயாளிகளை கவனிக்கிறார்கள். கவனக் குறைவினால் ஏற்படும் தவறுகளுக்கு மருத்துவர்கள், மருத்துவ மனைகள் பொறுப்பேற்க வேண்டும். இங்கு போல தப்பிக்க முடியாது. (சமீபத்தில் எனக்குத் தெரிந்த குடும்பத்தில் மார்பு வலியால் அவதிப்பட்ட ஒரு முதியவருக்கு இந்தியாவில் ஒரு பெரிய நகரத்தில் ஒரு பெரிய மருத்துவ மனையில் சுமார் 5-6 லட்ச ரூபாய் செலவு செய்த பிறகு ஊருக்குக் கூட்டிக்கொண்டு வந்த பிறகு ஏற்பட்ட தொடர் சிக்கலில் இன்னொரு பெரிய ஊரில் இன்னொரு பெரிய மருத்துவ மனைக்குக் கூட்டிக்கொண்டு போய் இன்னும் 2-3 லட்ச ரூபாய் செலவழிக்க நேரிட்டது. மருத்துவ மனைக்கு பொறுப்பு என்பது எங்கே இருக்கிறது?

உண்மைதான். அமெரிக்காவில் இன்ஷூரன்ஸ் இல்லாமல் மருத்துவம் பார்ப்பது என்பது ஒருவரை திவாலாவாக்கும் விஷயம்தான். அதனால்தான் அங்கே வேலை பார்க்கும் ஒவ்வொருவரும் தங்கள் அலுவலகம் மூலமாக க்ரூப் இன்ஷூரன்ஸ் மூலம் தங்களுக்கும், தங்கள் குடும்பத்துக்கும் முழுக் காப்பீடு செய்துகொள்கிறார்கள். இப்போதைய அமெரிக்க குடியரசு அதிபரின் ‘எல்லோருக்கும் இன்ஷுரன்ஸ்’ திட்டம் பல குறைகள் இருந்தாலும் பல ஏழை குடிமக்களால் வரவேற்கப்பட்டிருக்கிறது. இன்ஷுரன்ஸ் இருந்து விட்டால் பொதுவாக பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது.  இருந்தும் சில நேரங்களில் ஒருவரின் மருத்துவச் செலவை இன்ஷுரன்ஸ் கம்பெனிகள் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளாமல் பணம் கட்டச் சொல்லி நோயாளிகளுக்கு பில் அனுப்புகிற பழக்கமும் அங்கே உண்டு. அது போன்ற நேரங்களில் இன்ஷுரன்ஸ் கம்பெனியுடன் பேச்சு வார்த்தை நடத்தி பில் தொகையை குறைக்கவும் முடியும்.

எல்லாவற்றிற்கும் மேலாக அங்கே ஒருவருக்கு கிடைக்கும் மருத்துவம் மிக உயர் தரமாக இருப்பதினால்தான் நம் நாட்டிலுள்ள வசதி படைத்தவர்கள் (பல முக்கிய அரசியல் வாதிகளும் இதில் அடங்கும்) மருத்துவத்துக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் என்று பறக்கிறார்கள். ஏன், அவர்களெல்லாம் இந்தியாவிலேயே தங்களைக் குணப்படுத்திக் கொள்ளலாமே? ஏன் தயங்குகிறார்கள்.

அமெரிக்கா வந்திறங்கிய பல இளைஞர்களையும் தம்பதிகளையும் கண்டிருக்கிறேன். இந்தியாவிலிருக்கும் பொழுது சோம்பேறியாக, ஹோட்டல் சாப்பாட்டையே நம்பியிருந்த பல இளைஞர்களும் மாணவ மாணவிகளும் கூட அங்கே போனவுடன் சொந்தமாக சமையல் செய்யவும் வீட்டு வேலை செய்யவும் கற்றுக்கொண்டு விடுகிறார்கள். திருமணமான இளைஞர்கள் தங்கள் மனைவிக்கு வீட்டு வேலையில் உதவி செய்கிறார்கள். அவ்வப்பொழுது வெளியேயும் (இங்கே போல) சாப்பிடுகிறார்கள். இங்கே பர்கர், பிட்சா சாப்பிடுவது பலரிடையே பீத்திக் கொள்ளும் சமாச்சாரம். அங்கே அது சிக்கனமாக வயிற்றை கழுவும் சமாச்சாரம்

அமெரிக்காவில் போக்குவரத்துக்கு பல இடங்களில் பஸ் வசதியில்லை என்பது என்னவோ உண்மைதான். ட்ராஃபிக் ஜாம் என்பது இந்தியாவிலும் மற்றும் எல்லா  நாடுகளிலும் பெரிய நகரங்களில் காணப்படுவதுதான். அமெரிக்காவில் மட்டும் என்றில்லை. இங்கே பங்களூரில், சென்னையில், மும்பையில், டில்லியில் என்ன வாழ்கிறது? அமெரிக்காவில் ட்ராஃபிக் எப்பொழுதும் சீரோடு சென்று கொண்டிருக்கும். அங்கே காணப்படும் ‘லேன் டிஸ்சிப்ளின்’ மற்றும் ஓட்டுனர் டிஸ்சிப்ளின் என்பது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிகவும் பாராட்டப் பட வேண்டிய விஷயம். இங்கே போல தாறு மாறாக அங்கே வண்டி ஓட்ட முடியாது. இங்கே போல லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்ட முடியாது. விதிமுறையை மீறினால் விதிப்படி வெளிப்படையான அபராதம். அமெரிக்க அதிபரின் குழந்தைகள் கூடத் தப்பிக்க முடியாது. இங்கே போல காவல்காரரிடம் பல்லிளிக்க வேண்டியதில்லை.

சாலைகளின் தரம் மிக நன்றாக இருக்கிறது அமெரிக்காவில். ஒரு முறை டென்வர் நகருக்கருகே 14000 அடி உயரத்திலிருக்கும் ஒரு சுற்றுலாத் தலத்துக்குப் போயிருந்தோம். 14000 அடி உயரம் வரை நேர்த்தியான பாதை.  கார் வழுக்கிக் கொண்டு செல்கிறது. சின்னஞ்சிறு கிராமங்களில் கூட பாதைகள்  நன்றாகப் போட்டிருக்கிறார்கள். இங்கேயோ எங்கு பார்த்தாலும் சந்திரனில் இருக்கும் க்ரேட்டர்கள் போல பள்ள மேடுகள். சமீபத்தில் சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், மதுரை ஊர்களுக்கு காரில் சென்று வந்த அனுபவத்தை மறக்க முடியாது. முதல் கியர், இரண்டாம் கியருக்கு காரை மாற்றி மாற்றி ஓட்டி என் கை கால்களில் நோவு இன்னும் போகவில்லை.

பெரிய பேரிடர் என்றிருந்தாலொழிய அங்கே மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்கிறது. பொதுவாக எந்த வீட்டிலும் போர் கிணறு போட்டதாகக் கிடையாது. எல்லோருக்கும் அரசாங்கமே தண்ணீர் கொடுக்கிறது. பணம் வாங்கிக் கொள்கிறார்கள். இலவசம் என்பது நம் நாட்டில்தான். அங்கே எதுவும் இலவசம் கிடையாது. அதனால், மக்கள் உழைத்தாக வேண்டும். வேலையிலிருப்பவர்கள் குறைந்தது 67 வயது வரை வேலை செய்தாக வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் கால்களில் நிற்கப் பழகிக் கொள்ளவேண்டும். ஒரு நபர் 16 வயது எட்டிவிட்டால் அவரைக் காப்பாற்றும் பொறுப்பு பெற்றோர்களுக்குக் கிடையாது. அந்த நபர் சுயமாக தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கும் ஒரு பொறுப்பும் வரும். அதே போல எண்பது வயதடைந்த பல முதியவர்கள் கூட தானே காரை ஓட்டிக்கொண்டு போய் தனக்கு வேண்டிய வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டியதுதான். இதனாலெல்லாம் குடும்பத்தின் மீது அவர்களுக்கு தனி அன்பு கிடையாது என்று அர்த்தமில்லை. அந்த அன்பை அவர்கள் வெளிப்படுத்தும் விதம் வித்தியாசமானது. அவ்வளவுதான். விவாகரத்து வாங்கிக் கொண்ட பல தம்பதிகள் விவாகரத்துக்குப் பிறகு ஒருவருக்கொருவர்   நட்புடன் பழகி வருகிறார்கள். (நான் ஏற்கெனவே சொன்னது போல இந்த மாதிரி சுதந்திரங்களிலும் பல எதிர்மறை விளைவுகள் அங்கே ஏற்படுகின்றன என்பதும் உண்மைதான்)

அமெரிக்கா செல்பவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

முதலாவது வகை அமெரிக்காவை ஓய்வுக்காகவும் சுற்றிப் பார்க்கவும் செல்பவர்கள். பொதுவாக இந்த வகையைச் சேர்ந்தவர்கள் கொஞ்சம் வசதி படைத்தவர்களாக இருப்பார்கள். அவர்களைப் பற்றி அதிகம் கவலையில்லை.

இரண்டாவது வகை வேலைக்காக அங்கே செல்பவர்கள். அல்லது அங்கேயே படித்து முடித்துவிட்டு வேலை பார்ப்பவர்கள். இவர்களின் நாட்கள் பொதுவாக பிசியாகவே ஓடிக்கொண்டிருக்கும் – சனி, ஞாயிறு நீங்கலாக. இங்கேயிருந்து போகும் இந்தியர்கள் பொதுவாக நல்ல வசதிகளை அனுபவித்து சந்தோஷமாகவே வாழ்கிறார்கள்.

மூன்றாவது வகை அங்கேயே தங்கிவிட்டவர்களின் பெற்றோர்கள். இவர்கள் அடிக்கடி தங்கள் பிள்ளைகளுடன் சில மாதங்களைக் கழிப்பதற்காக அமெரிக்கா செல்பவர்கள். பெரும்பாலோர் சுற்றுலாப் பயணிகள் வகைதான். ஆறு மாதம் அதிக பட்சம் அங்கே தங்கியிருக்கலாம். ஒரு சில  சொந்தக் காரணங்களுக்காக ‘க்ரீன் கார்ட்’ அல்லது அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே வசிக்கும் ஒரு சிலர் அமெரிக்காவில் தங்கியிருப்பது பற்றி அதிகக் குறை பட்டுக்கொள்ள முடியாது. அது அவர்கள் எடுத்த முடிவு. இங்கேயிருந்து அடிக்கடி தங்கள் பிள்ளைகளுடன் ஒரு சில மாதங்களைக் கழிப்பதற்காக அமெரிக்கா செல்லும் பெற்றோர்கள் பாடுதான் கொஞ்சம் திண்டாட்டம் போலத் தோன்றுகிறது. அவர்களுக்கு ஏற்படும் பொதுவான சில சிரமங்களைத்தான் ஒரு பெரிய பிரச்சினை போல எழுதிவிடுகிறோம்.

அவர்களுக்கு தங்கள் குழந்தைகள் வேலைக்குச் சென்ற பிறகு வீட்டில் தனியே போரடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும். அவர்கள் இஷ்டம் போல எங்கும் போக முடியாது. அவர்கள் குழந்தைகள் வார விடுமுறை நாட்களிலோ அல்லது மாலை வேளையிலோ எங்கேயோ கூட்டிச் சென்றால்தான் உண்டு.  ஆரம்ப நாட்களில் பல இடங்களுக்குச் சுற்றிப் பார்க்கக் கூட்டிக்கொண்டு போகும்பொழுது அங்கே வாழ்க்கை சுவாரசியமாகத்தான் இருக்கும். பல இடங்களைப் பார்த்து முடித்துவிட்ட பிறகோ அல்லது பிள்ளைப் பேறு போன்ற நிகழ்வுகள் ஏற்பட்ட பிறகோ வெளியே போவது குறைந்து போகும். அந்த நேரங்களில் வயதானவர்களுக்கு போரடிக்கத் துவங்கலாம். என்ன செய்வது அதுவும் ஒரு காலத்தின் கட்டாயம்தான். அந்த மாதிரி நேரங்களில் வயதானவர்கள் தங்களை ஆரோக்கியமான நல்ல பொழுது போக்குகளில் ஈடுபடுத்திக்கொண்டால் வாழ்க்கை போரடிக்காமல் போகும். இங்கேயோ வயதான பல பெரியவர்கள் தங்கள் வயதான நாட்களை தொலைக்காட்சி பெட்டி முன்பு அமர்ந்தோ அல்லது மற்ற வயதானவர்களுடன் வெட்டிப் பேச்சு பேசியோதான் பொழுதைக் கழிக்கின்றனர் என்று தோன்றுகிறது. 

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் குழந்தைகளை அமெரிக்காவுக்கு அனுப்பிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள்தான் இங்கே மிக அதிகம் என்பது என் எண்ணம். ஒரு சிலருக்கு அந்த எண்ணம் நடந்தேறியிருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு நடந்தேறவில்லை. இந்தியாவில் இவ்வளவு வசதிகள் கூடியும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா என்று மேல் நாடுகளுக்கு அனுப்புவதையே விரும்புகிறார்கள். அதில் அவர்களுக்கு மிகவும் பெருமையும் கூட. வாய்ப்பு கிடைத்தால் எல்லா இளைஞர்களும் அமெரிக்கா சென்று ஒரு சில ஆண்டுகளுக்காகவாவது வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள்தான். வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்கலாம். அல்லது அங்கே போக முடியாத சில நிர்பந்தங்கள் இருக்கலாம்.

மற்றபடி அமெரிக்க வாழ்க்கை, இந்திய வாழ்க்கை எல்லாவற்றிலும் குறை, நிறைகள் இருக்கின்றன.  எல்லா வசதிகளையும், எல்லா நேரங்களிலும் நாம் எதிர்பார்க்க முடியாதுதான். என்ன செய்வது. உலகம் தட்டையாகி விட்டது. மக்கள் எல்லா இடங்களிலும் சென்று வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். 

கடந்த 16  ஆண்டுகளில் பல முறை அமெரிக்கா சென்று அங்கேயே ஆறு மாதங்கள் வரை தங்கி வந்திருக்கிறேன் என்ற அனுபவத்தில் இந்தக் கருத்துக்களை எழுதியிருக்கிறேன். அமெரிக்காவில் வசிக்கும் நம் குழந்தைகளில் பெரும்பான்மையோர் நாம் அவர்களுடன் தங்கியிருப்பதையே விரும்புகிறார்கள். அவர்கள் சுதந்திரத்தில் அதிகமாக மூக்கை நுழைக்காமல் முடிந்தவரை அவர்களுக்கு உதவியாக இருந்துவிட்டு போவோமே! என்ன நஷ்டம்!