27.07.18 என்னால் ஏன் சுருக்கமாக எழுத முடிவதில்லை!
ஒரு தன்னிலை விளக்கம்
“விஷப் பரிட்சை” என்ற தலைப்பில்
கோடைகால பள்ளி விடுமுறை நாட்களில் என் பேரன் பேத்தியுடன் ஃபீனிக்சில் நான் கழித்த இரண்டு
மாதங்களைப் பற்றி 5 பாகங்களாக நேற்றோடு எழுதி முடித்திருந்தேன்.
என்னுடைய பதிவு வழக்கத்துக்கும்
மேலாக பலருடைய கவனத்தையும் கருத்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்றிருந்தது. ஒரே
ஒருவர் மட்டும் பதிவு நன்றாக இருந்ததாகவும் ஆனால் மிக நீளமாக இருந்ததாகவும் கருத்து
தெரிவித்திருந்தார். அவர்களுடைய கருத்துக்கு நன்றி.
“இந்த ஆண்டு இரண்டு மாத பள்ளி
கோடை விடுமுறை காலத்தில் பேரன் பேத்தியை நான் கவனித்துக் கொள்கிறேன், அதனால் வழக்கமாக
நடக்கும் கோடை கேம்புக்கு அவர்கள் போக வேண்டாம், விடுமுறையை சந்தோஷமாக வீட்டிலேயே கழிக்கட்டும்
என்று நான் சொல்லி விட்டதால் மே கடைசி முதல் ஜூலை கடைசி வரை நாங்கள் ஃபீனிக்ஸில் குழந்தைகளுடன்
இருந்தோம். நேரத்தை கொஞ்சம் பயனுள்ளதாக செலவழிக்கட்டுமே என்று அவர்களுக்கு தமிழ் எழுதவும்
வாசிக்கவும் கற்றுக் கொடுத்தேன். பல ஸ்லோகங்களைக் கற்றுக் கொடுத்தேன். தினமும் கீபோர்டு
பயிற்சி செய்ய வைத்தேன். அவர்கள் பல வகைகளில் முரண்டு பண்ணினாலும் மிகவும் கண்டிப்போடு
இவற்றையெல்லாம் செய்ய வைத்தேன். இப்பொழுது ஓரளவு தமிழ் எழுதவும் படிக்கவும் கற்றுக்
கொண்டிருக்கிறார்கள். பல ஸ்லோகங்களை மனப்பாடமாகச் சொல்கிறார்கள். இப்பொழுது கோடை விடுமுறை
முடிந்து விட்டது. பள்ளிக்குச் செல்லத் தொடங்கி விட்டார்கள். இதே பணியை இன்னும் மூன்று
வாரங்களுக்கு என் பையன் வீட்டு பேரக் குழந்தைகளுக்கும் நான் செய்ய வேண்டியிருக்கிறது.”
இவ்வளவுதான் நான் 5 பகுதிகளாக
விலாவாரியாக எழுதியதன் சாராம்சம்.
103 வார்த்தைகளில் எழுதி முடிக்க
வேண்டியதை நான் ஐந்து பாகங்களாக சில ஆயிரம் வார்த்தைகளில் எழுதி முடித்திருக்கிறேன்.
என்னுடைய பதிவை இந்த 103 வார்த்தைகளில்
எழுதியிருந்தால் எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது.
இன்டெர்னெட் தயவினால் இன்று
பலரும் பத்திரிகையாளராக மாறியிருக்கியிருக்கிறார்கள்.
ஆனால், பதிவாக எழுதுபவர்களில்
– எழுத்தாளர்களில் – இரண்டு வகை. ஒரு சிலர் ரத்தினச் சுருக்கமாக தாங்கள் எழுத வந்ததை
ஒரு சில வரிகளில் சொல்லி முடித்து விடுவார்கள். இன்னும் சிலர், விலாவாரியாக எழுதுவார்கள்.
சுருக்கமாக எழுதுபவர்களின்
எழுத்துக்கள் சப்பென்று முடிவதுமுண்டு. விலாவாரியாக எழுதுபவர்களின் எழுத்துக்கள் சலிப்பை
உண்டாக்குவதுமுண்டு.
என்னுடைய எழுத்துக்கள் சப்பென்று
இருக்கிறதா அல்லது சலிப்புட்டுகின்றதா என்பதை வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.
சிறிய வயதிலிருந்தே நாவல்களையும்
– தமிழிலும், ஆங்கிலத்திலும் - தமிழ் பத்திரிகைகளில் வெளி வந்த தொடர்கதைகளையும் மிகவும்
விரும்பிப் படித்தவன் நான். ஒரு சிறிய நூற்கண்டை வைத்துக் கொண்டு முழ நீளச் சேலையை
உருவாக்கியவர்களை விரும்பிப் படித்திருக்கிறேன். என்னை அறியாமலேயே என்னுள் சிறு கதைகளை
விட நீண்ட கதைகளை, தொடர் கதைகளை விரும்பியிருக்கிறேன் என்று தோன்றுகிறது.
நான் முறையாக எழுத்தாளனான போது
என்னுடைய முதல் முயற்சி ஆங்கிலத்தில் ஒரு சிறுகதைப் புத்தகமே. SHORT STORIES FOR
YOUNG READERS – BOOK 1 ஆங்கிலத்தில் 7 கதைகளைக் கொண்டது. ஒவ்வொரு கதையும் சுமார் 1500-2000
வார்த்தைகளுக்குள் அடங்கியது. ஒரு சில பள்ளிகளில் இந்தப் புத்தகத்தையும் என்னுடைய இன்னும்
இரண்டு சிறு கதைப் புத்தகங்களையும் பள்ளி மாணவர்களுக்காக வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், என்னுடைய இயல்பான அணுகுமுறை
என்னை விட்டுப் போகவில்லை. என்னுடைய இரண்டாவது முயற்சி சுமார் 400 பக்கங்கள் கொண்ட
ஒரு ஆங்கில நாவல்: WHAT IF OUR DREAMS COME TRUE! AN UNCOMMON MEETING WITH LORD
SIVA.
இப்படி சிறு கதைகளையும் நீண்ட
கதைகளையும் மாறி மாறி முயற்சி செய்து வருகிறேன்.
இன்னொரு விஷயம்.
நான் விரும்பிப் படிக்கும்
பல எழுத்தாளர்கள் தங்கள் கதைகளில் பல புதிய தகவல்களைக் கொடுத்து எழுதியிருப்பார்கள்.
வர்ணனைகள் நிறைய இருக்கும். உதாரணத்துக்கு, ஒருவர் எக்மோர் ரயில் நிலையத்திற்குள் நுழைவதை
எழுதினால் அந்த ரயில் நிலையத்தைப் பற்றி, அங்கே வேலை பார்ப்பவர்களைப் பற்றி, ரயில்
பெட்டிகளைப் பற்றி, பயணிகளைப் பற்றி, ஒருவர் நுழையும் நேரத்தில் ரயில் நிலையத்தில்
நிலைமை எப்படி இருந்தது, இப்படிப் பல உண்மையான தகவல்களை எழுதியிருப்பார்.
அதே சமயத்தில் தமிழில் ஒரு
சில கதாசிரியர்கள் இதே எக்மோர் ரயில் நிலையத்தைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமலேயே
‘சென்னை எக்மோரிலிருந்து ஜோலார்பேட்டைக்கு ரயில் கிளம்பத் தயாராக இருந்தது,’ என்று
கூட எழுதியிருக்கிறார்கள். இன்னும் சிலர் ஒரு சிலவற்றைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமலேயே
ஏதோ நேரிலேயேப் பார்த்தது போல கதை விட்டிருப்பார்கள். இப்படிப் பட்ட எழுத்தாளர்களை
நான் விரும்பியதில்லை.
பல ஆங்கில எழுத்தாளர்கள் நிறைய
ஆராய்ச்சிகள் செய்து தங்கள் கதைகளை, கட்டுரைகளை, புத்தகங்களை எழுதுகிறார்கள். பல நுண்ணியத்
தகவல்களைத் திரட்டிக் கொடுத்திருப்பார்கள். அந்தத் தகவல்களை நான் விரும்பிப் படிப்பேன்.
புத்தகத்தைச் சீக்கிரமாக படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக பலரைப் போல அந்தப் பகுதிகளை
விட்டுவிட்டு படிக்க மாட்டேன். அவர்கள் எழுதியதைப் படிக்கும் பொழுது என்னுள்ளே அவர்கள்
விவரித்ததைப் போலவே ஒரு வீடியோ ஒடிக்கொண்டிருக்கும். ஏதோ நானே நேரில் பார்ப்பது போல.
இந்த பாதிப்பு என்னையும் என்
எழுத்துக்களில் தாக்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். முடிந்த அளவு என்னுடைய எழுத்துக்களைச்
சுருக்குவதற்கு முயற்சி செய்தாலும் அதை ‘precis writing’ போல எழுதுவது எனக்குப் பிடிக்காது.
ஓரு சில தகவல்களைச் சேர்த்தால் சுவாரசியமாக இருக்கும் என்று நான் நினைத்து சேர்ப்பதுண்டு.
அப்படித்தான் என்னுடைய WHAT IF OUR DREAMS COME TRUE! AN UNCOMMON MEETING WITH
LORD SIVA புத்தகத்தை எழுதி முடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக் கொண்டேன். நானே நேராகப் போய் பல சிறிய ஊர்களைப் பார்த்து தகவல்களைத்
திரட்டி எழுதியிருந்தேன்.
என்னுடைய ஆத்ம திருப்திக்காகத்தான்
எழுதி வருகிறேன். வியாபார அணுகுமுறை தெரியாது. தெரிந்திருந்தால் என்னுடைய புத்தகங்கள்
இன்று லட்சக்கணக்கான பிரதிகள் விற்றிருக்கும். என்னுடைய எழுத்துக்களின் மீது எனக்கு
இருக்கும் நம்பிக்கையினால் இப்படிச் சொல்கிறேன். அகம்பாவாத்தினால் அல்ல. என்னுடைய புத்தகங்களை
ஒரு சிலரே படித்திருந்தாலும் என் எழுத்துக்களை மிகவும் பாராட்டியிருக்கிறார்கள்.
எப்படி இருந்தும் என் முக நூல்
பதிவுகளையும் என்னுடைய இணையதளத்தின் பதிவுகளையும் என் நூல்களையும் படித்தவர்களுக்கும்
கருத்து சொன்னவர்களுக்கும் மீண்டும் நன்றி சொல்கிறேன்.
வணக்கம்.
டீ. என். நீலகண்டன்