Total Pageviews

Showing posts with label Personal Memoirs. Show all posts
Showing posts with label Personal Memoirs. Show all posts

Wednesday, August 22, 2018

23.08.18 மீண்டும் அமெரிக்காவுக்கு ‘டாட்டா’


23.08.18 மீண்டும் அமெரிக்காவுக்கு ‘டாட்டா’

சரியாக ஐந்து மாதங்கள் கழித்து இரட்டை மனதோடு அமெரிக்காவிடமிருந்து மீண்டும் விடை பெறுகிறேன். நம் இடத்துக்குத் திரும்புகிறோம் என்பதில் ஒரு பக்கம் மகிழ்ச்சி. அப்படி என்னதான் நம்மூரில் இருக்கிறதோ? சுகமாகக் கழிந்த ஐந்து மாத அமெரிக்க வாழ்க்கையை விட்டுவிட்டுப் போகிறோம் என்பதில் இன்னொரு பக்கம் தவிப்பு. அப்படி என்னதான் அமெரிக்க வாழ்க்கையில் இருக்கிறது?

ஆண்டு தோறும் இதே கேள்விகளுடன் அமெரிக்காவுக்குப் வருகிறோம். அமெரிக்காவிலிருந்து திரும்புகிறோம். சமயத்தில் சலிப்பாகவும் இருக்கிறது. எங்கள் குழந்தைகள் வளர்ந்து வரும் பருவத்தில் அவர்களுக்கு அமெரிக்க கனவை ஊட்டி இருவரையும் அங்கேயே குடியேற வைத்த பின்பு நாங்கள் மட்டும் இந்தியாவிலேயே இருப்போம் என்று எப்படி அடம் பிடிப்பது?

பசுமையான சுற்றுப் புறம். நல்ல பருவனிலை. பிக்கல் பிடுங்கல் இல்லாத நாட்கள். எல்லாவற்றிற்கும் மேலாக சிறு குழந்தைகளுடன் அன்னியோன்னியம். இது அமெரிக்க வாழ்க்கையின் சாராம்சம்.

பிக்கல் பிடுங்கல் எல்லாம் இந்தியாவிலிருந்து வந்ததுதான். ஆக்சிஸ் வங்கியுடன் வங்கிக் கணக்கு சம்பந்தமான போராட்டங்கள், இறுதி நாளுக்கு முன் வருமான வரித் தாக்கலுக்காக பிசியான ஆடிட்டருடன் தொடர்ந்து விரட்டல், தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி சம்பந்தமான உப்புப் பெறாத சின்ன விஷயங்களுக்குத் தேவையில்லாத விளக்கங்கள், இப்படிச் சில.

இதெல்லாவற்றுக்கும் மேலாக ஒன்று மாற்றி ஒன்றாக ரத்த அழுத்தத்தை ஏற்றும் இந்தியாவிலிருந்து வரும் திக், திக் செய்திகள் … அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிடும் அறிக்கைகள் எல்லாம் தினப்படி வாழ்க்கையைப் பாதிப்பதில்லை. இங்கே வாழ்க்கை சீராக ஓடுகிறது. இந்தியாவில் …?

ஒரு பக்கம் தண்ணீர் சூழ்ந்து எல்லாவற்றையும் அழித்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் இன்னமும் வறண்டு கிடக்கிறது.

மோடி நின்றால் குற்றம், நடந்தால் குற்றம், எழுந்தால் குற்றம்… எல்லாவற்றுக்கும் மோடிதான் பதில் சொல்ல வேண்டும்

ஒரு பக்கம் விவசாயிகளும் நடுத்தர மக்களும் தவித்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் வங்கிகளை ஏமாற்றிய பெரிய பண முதலைகள் வெளி நாட்டில் போய் பதுங்கிக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பாராளுமன்றம் ஒரு விவாத மேடையா அல்லது அரசியல் கட்சி மேடையா, குத்துச் சண்டை அரங்கமா என்ற சந்தேகம் பல நேரங்களில் வருகிறது.

பெரும்பான்மை சமூகத்தினர்தான் எல்லாவற்றுக்கும் பயப்பட வேண்டியிருக்கிறது. சிறுபான்மையினரை தொட முடியாது. ஷாக் அடிக்கும்.

தமிழ்நாட்டுக் கோவில்கள் பெரிய சுரண்டல் சுரங்கங்களாகி விட்டன.

பல மானிலங்களில் ஒன்றிரண்டு பெரிய அரசியல் கட்சிகள். ஒன்றிரண்டு சிறிய கட்சிகள். தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்தால் கட்சி. போராட்டங்களுக்காகவே ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன போல.

தமிழகத்தில் எதைத் தொட்டாலும் போராட்டம். தெரியாமல் கூட எந்த ஒரு வளர்ச்சித் திட்டமும் தமிழகத்துக்கு வந்து விடக்கூடாது என்பதில் எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு அரசியல் செய்கிறார்கள்.

தேசிய அளவில் தொலை நோக்குத் திட்டத்துடன் எது செய்தாலும் எதிர்ப்பு. திரு மன்மோகன் சிங் நிதித் துறை அமைச்சராக இருந்த போதே எதிர்த்தவர்கள்தான். இன்று மோடியின் திட்டங்களையும் எதிர்க்கிறார்கள்.

நூற்றுக்கணக்கான கோடிகள் அளவுக்கு பணம் அங்கங்கே பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

அடுக்கிக் கொண்டே போகலாம் போலிருக்கிறது. இது ஒன்றொன்றும் சராசரி மனிதனின் தினப்படி வாழ்க்கையை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது.

அமெரிக்காவிலிருந்து திரும்பும் பொழுது எதை முக்கியமாக தொலைக்கப் போகிறேன்?

எந்த மாற்றமுமில்லாத இயந்திரத் தனமான தினப்படி வாழ்க்கையின் நேரங்களைத் தொலைக்கப் போகிறேன்.

குழந்தைகளோடும் பேரக் குழந்தைகளோடும் இருந்தாலும் ஒரு வெறுமையை, தனிமையை பல நேரங்களில் உணர்ந்ததைத் தொலைத்து விட்டு வரப் போகிறேன். இந்தியாவிலும் நான் ஒரு தீவுதான். இருந்தும் என் தீவுக்கு பலர் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். இந்தத் தீவும் மிதந்து ஊர்ந்து கொண்டேயிருக்கும்.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஒரு தனி மனிதனாக சிறு குழந்தைகளை கவனித்துக் கொண்ட நேரங்களை – இனிமையான நினைவுகளையல்ல – தொலைத்து விட்டு வரப் போகிறேன்.

இறுதியாக, எது எப்படியிருந்தாலும் இந்த முறை என்னுடைய அமெரிக்க விஜயத்தின் போது என் பேரக் குழந்தைகளான சிறு குழந்தைகளை புரிந்துகொள்ள முயற்சி செய்திருக்கிறேன். இதைப் பற்றித் தனியாகத் தான் எழுத வேண்டும்.

இந்தியாவில் காலடி எடுத்து வைக்கும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். வந்தே மாதரம்.


Friday, June 01, 2018

01.06.18 - “ஸாரி…”


சமீபத்தில் ‘தி ஹிந்து’ ஆங்கிலச் செய்தித்தாளில் வந்த ஒரு கட்டுரை என்னை இந்தப் பதிவை எழுதத் தூண்டியது. ஒரு நிறுவனம் ஒரு தவறு நடந்ததை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்பது என்பது சக்தி வாய்ந்த ஒரு ஆயுதம் என்கிறார் இந்தக் கட்டுரையை எழுதியவர்.

உதாரணமாக அவர் சொல்வது, சமீபத்தில் …
  1.     ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெக் அமெரிக்க பாராளுமன்ற கமிட்டியின் முன் வாடிக்கையாளர்கள் தகவல்கள் கசிந்ததுக்கு மன்னிப்பு கேட்டார்.
   2.     2ஜி வழக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட மூன்று உயரதிகாரிகளிடம் ரிலையன்ஸ் நிறுவத்தின் உரிமையாளர் அனில் அம்பானி வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டார்.
  3.     ஒரு ஊழியரை நீக்கும் பொழுது அவரை நடத்திய விதம் மனித நேயமில்லாமல் குரூரமாக இருந்ததாகக் கருதியதால் மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா மன்னிப்புக் கேட்டார்.

இந்த மூன்று உதாரணங்களில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால்,
     1.     இந்த மனிதர்கள் சாதாரண நிலையில் இருப்பவர்கள் அல்ல. பல்லாயிரம் கோடி சொத்துக்களுக்கு உரிமையாளர்கள்.
      2.     மிக மிகப் பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்கள்.
    3.     இவர்கள் மன்னிப்பு கேட்டது காதும் காதும் வைத்தாற் போல ஒரு தனி அறையில் அல்ல. உலகம் முழுவதுக்கும் தெரியும் படியாக வெளிப்படையாக மன்னிப்பு கேட்டனர்.

தவறு நடந்து விட்ட நேரத்தில் மன்னிப்பு கேட்பது என்பது ஒரு மிகப் பெரிய ஆயுதம். எதிராளியை பலவீனப்படுத்தக் கூடியது. சமரச உணர்வுகளை பரப்பக் கூடியது.

யார் சரி, யார் தவறு என்பது முக்கியமில்லை. ஒரு காரியத்தைச் செய்யும் பொழுது அல்லது ஒரு விஷயத்தைப் பேசும் பொழுது மற்றவர் காயப்பட்டு விட்டார் என்று உணர்ந்தவுடனேயே மன்னிப்பு கேட்டு விட்டால், கேட்டவருக்கும் நிம்மதி. காயப்பட்டவருக்கும் நிம்மதி.

என்னுடைய அலுவலக வாழ்க்கையில் ஒரு சுவையான அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு வங்கியின் கிளை மேலாளராக பணி புரிந்த போது ஒரு நாள் ஒரு பெண் ஊழியர் என்னுடைய ஏதோ ஒரு உத்தரவை ஏற்றுக்கொள்ள மறுத்து விதண்டாவாதம் பண்ணிய போது எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. பல வாடிக்கையாளர்கள் மற்றும் அலுவலர்கள் முன்னே நீண்ட நேரம் சரமாரியாக அவருடைய தவறை சுட்டிக்காட்டி அந்த ஊழியரை திட்டிவிட்டேன் (scold). கிளையே ஸ்தம்பித்து விட்டது. அதுவரை அப்படி நான் கோபப்பட்டு அவர்கள் பார்த்ததில்லை. என் நிலைக்குத் திரும்பிய போது என்னுடைய அறைக்கு வந்து விட்டேன்.

சிறிது நேரத்துக்குப் பிறகு என்னுடைய அறையில் எல்லா ஊழியர்களும் ஒன்று சேர்ந்து கூடிவிட்டனர். எதற்குக் கூடினார்கள் என்பது எனக்கு உடனேயே புரிந்து விட்டது. அவர்கள் வாய் திறப்பதற்கு முன்னேயே நானே என் தவறை ஒப்புக்கொண்டேன். மன்னிப்பும் கேட்டு விட்டேன். அப்படி பொது மக்கள் முன்னே அவ்வளவு தூரம் கோபத்தில் அந்தப் பெண் ஊழியரை திட்டியிருக்கக்கூடாது என்று நானே ஒத்துக் கொண்டேன். என் மனதிலிருந்து பாரமும் உடனேயே இறங்கி விட்டாற்போல உணர்ந்தேன்.

அவர்கள் எல்லோரும் சேர்ந்தார் போல என்னைப் பற்றி கோஷம் போடப் போகிறார்கள் என்று எதிர்பார்த்த எனக்கு மிகப் பெரிய ஷாக். அவர்களிடமிருந்து எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை. ஊழியர்களின் ஒரு பிரதிநிதி மட்டும் என்னிடம் சொன்னார், “சார், நாங்களும் ரொம்பக் கோபமாகத்தான் உள்ளே வந்தோம். ஆனால், நாங்கள் எங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதற்கு முன்னேயே நீங்கள் எங்களிடம் மன்னிப்புக் கேட்டு எங்களை நிராயுதபாணியாக்கி விட்டீர்களே! நாங்கள் வருகிறோம். தயவு செய்து இது போல ஒரு நிலை எதிர்காலத்தில் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.” இப்படிச் சொல்லிவிட்டு எல்லோரும் அவரவர் இடத்துக்குக் கலைந்து சென்று விட்டனர்.

ஊழியர்கள் ஒட்டு மொத்தமாக என்னிடம் வந்தபோது நான் என்னுடைய செயலை அவர்கள் முன்னே நியாயப்படுத்தவில்லை. அந்த பெண் ஊழியர் செய்த தவறை மீண்டும் சுட்டிக் காட்டவில்லை. என்னுடைய தவறை மனதார ஒப்புக் கொண்டேன். அடுத்தவரின் மனம் புண்பட்டிருக்கிறது எனக்குத் தெரியும். என்னுடைய செயலால், சொல்லால் அடுத்தவர் மனம் புண்பட்டது என்று  உணர்ந்தவுடனேயே நான் மன்னிப்புக் கேட்டுவிட்டேன். அதுதான் முக்கியம்.

அன்றைக்கு நேர்ந்திருக்க வேண்டிய ஒரு பெரிய பூகம்பம் அப்படியே அடங்கிப் போய் விட்டது.

பொதுவாகவே தவறு நேர்ந்த இடத்தில் மன்னிப்புக் கேட்பதை என்றுமே ஒரு வழக்கமாக கொண்டிருக்கிறேன். சிறியவர், பெரியவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்றில்லை.

ஆனால், மன்னிப்பு கேட்பதற்கு பெரிதும் தடையாக இருப்பது நமது ஈகோதான்.


Wednesday, May 30, 2018

22.05.18 என்னை வியக்க வைக்கும் (திகைக்க வைக்கும்?) விஷயங்கள்: 2


 கட்டுப்பாட்டை பிறந்த குழந்தையிலிருந்து முதியோர் வரை யாரும் விரும்புவதில்லை. ஆனால், மற்றவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டும் பொதுவாக எல்லோருக்கும் மேலோங்கி நிற்கிறது. 

    ‘நான் யார் வழியிலும் போக மாட்டேன். ஆனால், என் வழியில் மற்றவர்கள் வர வேண்டும்,’ என்ற நினைப்பு பலருக்கும் இருக்கிறது. குறிப்பாக, பெற்றோர்கள் 

 தங்கள் குழந்தைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருப்பதைத்தான் பொதுவாக விரும்புகிறார்கள். ஆனால், கணவனை மனைவியோ அல்லது மனைவியைக் கணவனோ அல்லது இவர்களை அவர்கள் பெற்றோர்களோ கட்டுப்படுத்துவதை விரும்புவதில்லை. அதுவும் தங்கள் குழந்தைகளுக்கு முன்னாலேயே தனது சுதந்திரத்தை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், அதே சுதந்திரத்தை குழந்தைகளுக்கு கொடுக்க மறுக்கிறார்கள். 

   ஒரு குழந்தை தன் தாய் தந்தையர் என்ன செய்கிறார்கள், எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை கூர்மையாக கவனிக்கிறது என்பதை படித்தவர்களும் வயது முதிர்ந்தவர்களும் கூட புரிந்து கொள்வதில்லை. அல்லது அதை உதாசீனப்படுத்துகிறார்கள். 

     தன் குழந்தை எதை செய்வதை தான் விரும்பவில்லையோ அதை பெற்றோர் செய்யாமலிருத்தல் நல்லது. அல்லது தன் குழந்தை எதை செய்ய வேண்டும் என்று ஒருவர் விரும்புகிறாரோ அதை அந்தப் பெற்றோரும் செய்து காட்டி ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இது ஏன் பல பெற்றோர்களுக்கும் தெரிவதில்லை?

   இதை நான் எழுதுவதால் நான் இது போன்ற தவறை செய்யவில்லை என்று அர்த்தமில்லை. இந்தத் தவறை நானும் செய்திருக்கிறேன். இன்று வருந்துகிறேன்.


Sunday, May 27, 2018

22.05.18 என்னை வியக்க வைக்கும் (திகைக்க வைக்கும்?) விஷயங்கள்:


இந்த உலகம் விந்தையானது. இயற்கையில் நடக்கும் ஒவ்வொன்றும் நம்மை திகைக்க, பிரமிக்க வைக்கக் கூடியது.

பிறப்பு – இறப்பு என்பது என்ன? செடிகளில் எப்படி, பூ பூக்கிறது? ஒரு சிறிய விதை எப்படி ஒரு செடியாகவோ அல்லது மரமாகவோ வளர்கிறது? நமது இருதயமும் நுரையீரலும் எப்படி ஒரு வினாடி கூட ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறது? எங்கிருந்து அதற்கு அந்த சக்தி கிடைக்கிறது? தூங்கும் பொழுது நமக்கு என்ன ஆகிறது? எல்லாமே வியக்கக் கூடியதுதான்.

இதையெல்லாம் விட மனம் என்பது ஒரு படி மேல் பிரமிக்கக் கூடியது. மனம் என்பது மூளையா அல்லது அதற்கு அப்பாற்பட்டதா? மனம் எங்கே இருக்கிறது? அது எப்படி செயல்படுகிறது? எண்ணங்கள் எப்படித் தோன்றுகின்றன?

இப்படிப் பல கேள்விகள்.

‘ஏன், ஏன்’ என்று கேட்கக் கேட்கத்தான் மனிதன் வளர்ந்திருக்கிறான். இயற்கையாக நடக்கும் பல விஷயங்களைப் பார்த்து வியந்து ‘ஏன்?’ என்று கேள்வி கேட்டு, தேடித் தேடி அலைந்து விடைகளை இன்னமும் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறான்.

அப்படி நானும் நான் பார்த்ததை, கேட்டதை, படித்ததைக் கண்டு வியந்து அல்லது திகைத்து எனக்குள்ளேயே இயற்கையாகத் தோன்றிய சில கேள்விகளைப் பற்றி எழுத விரும்புகிறேன். இது போன்ற கேள்விகள் உங்களுக்கும் தோன்றியிருக்கலாம்.  நீங்கள் வியந்ததையும் (திகைத்ததையும்) உங்கள் கருத்துக்களாக எழுதுங்கள்.

அறிவு பூர்வமான கருத்துப் பரிமாற்றமாக இது இருக்கும் என்று நினக்கிறேன். குமாரசாமியைப் பற்றியும், வைகோவைப் பற்றியும்,, விஷாலைப் பற்றியும் நமது சிந்தனை சக்திகளை வீணடிப்பதை விட இது ஆக்க பூர்வமாக இருக்கும் என்று  நம்புகிறேன்.

ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரே ஒரு வியப்பைப் பற்றி மட்டுமே எழுதலாம் என்றிருக்கிறேன். பல வியப்புகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடரும். தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். முக்கியமானது, முக்கியமில்லாதது, முன்னுரிமை பெற்றது என்று இந்தப் பட்டியலில் எதுவுமில்லை. அதனால் முன்னுக்குப் பின் இருக்கலாம். ஆனால், முரணாக இருக்காது. ஆனால், ஒவ்வொன்றும் வித்தியாசமானது.

எனது வியப்புகளின் பட்டியல் இதோ…இன்றைய வியப்பு…

1. தன் குழந்தைகளுக்கு ஒரு நல்ல தகப்பனாக இருக்க வேண்டும் என்று மெனக்கெடும் பல பெற்றோர்கள் ஏன் ஒரு நல்ல பிள்ளையாக தன் தாய் தந்தையருக்கு இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை?


தொடரும்...

Wednesday, December 13, 2017

14.12.17 - இன்றைய சிந்தனை - கஷ்டமும் நஷ்டமும்

14.12.17 இன்றய சிந்தனை

அவ்வப்பொழுது மகிழ்ச்சியான சம்பவங்கள் நடப்பதும் கஷ்ட நஷ்டங்கள் வருவதும் எல்லோருடைய வாழ்க்கையிலும் சகஜமாக நடப்பதுதான். 

ஒரு சில நல்ல காரியங்கள் நமக்கு நடக்கும் பொழுது நாம் யாரும் ‘இது ஏன் எனக்கு வந்து சேர்ந்தது?’ என்று பொதுவாகக் கேட்பதில்லை. எந்த விதத்தில் அதற்கு நாம் தகுதியானோம், அல்லது அதைப் பெற்று மகிழ்வதற்கு நாம் என்ன செய்தோம் என்று யோசிப்பதில்லை.

ஆனால், அதே சமயம் ஒரு பொருளை இழந்து விட்டாலோ – பல சமயம் அது ஒரு சிறிய அற்பப் பொருளாக இருந்தால் கூட – மிகவும் மனம் வருத்தப் படுகிறோம். சமயத்தில் ஒடிந்து போய் விடுகிறோம். பலரை குறை சொல்கிறோம். நம்மையே நொந்து கொள்கிறோம். ஏன், இறைவனிடத்தில் கூடக் குற்றம் காண்கிறோம்.

ஒரு பொருளை இழக்கும் பொழுது அது நம் கையை விட்டுப் போக வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால், போய் விட்டது. விட்டுத் தொலைவோம் என்ற எண்ணம் பொதுவாக வருவதில்லை.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு பத்ரினாத் சென்றிருந்த சமயம் வரும் வழியில் ரிஷிகேசத்தில் ஒரு கடையில் விலை உயர்ந்த ஒருமுக ருத்ராட்சம் ஒன்று வாங்கினேன். அதை எப்பொழுதும் கழுத்தில் அணிந்திருந்தால் அதன் காந்த சக்தியால் பல நோய்கள் நம்மை அணுகாது என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அந்த ருத்ராட்சத்தின் தரத்துக்கு உத்திரவாதமும் அந்த கடைக்காரர் எழுத்து மூலம் கொடுத்திருந்தார்.

ஒரு சில நாட்களுக்கு முன்புதான் திடீரென்று நான் கவனித்தேன். என் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றில் கட்டிய வெள்ளிக் கம்பியிலிருந்து அந்த ருத்ராட்சம் எங்கோ விழுந்து விட்டிருக்கிறது. எப்பொழுது என்று தெரியவில்லை.  அதற்கு ஒன்றிரண்டு நாட்கள் முன்பு வரை அந்த ருத்ராட்சம் கழுத்தில் இருந்ததைப் பார்த்த ஞாபகம் இருந்தது. நான் வழக்கமாக கழட்டி வைக்கும் இடத்திலெல்லாம் தேடிப் பார்த்தேன். அந்த ஒன்றிரண்டு நாட்களுக்கு நான் சென்ற இடங்களிலெல்லாம் கேட்டுப் பார்த்தேன்.

எங்கும் கிடைக்கவில்லை.

திடீரென்று எனக்குத் தோன்றியது. பத்ரினாத்துக்குப் போகும் பொழுது ருத்ராட்சம் வாங்கி அணிய வேண்டும் என்று எந்த நினைப்பும் எனக்குத் தோன்றியதில்லை. எதேச்சையாக வாங்கியதுதான். நவரத்ன கற்கள் வாங்கலாம் என்ற எண்ணத்துடன் அந்தக் கடைக்குப் போன பொழுது சரியான நவரத்ன கல் எதுவும் எங்களுக்குக் கிடைக்காத பொழுது எதேச்சையாக ருத்ராட்சத்தை வாங்கினேன்.

அந்த ருத்ராட்சம் எனக்கு வர வேண்டிய வேளை… வந்தது.

இப்பொழுது என்னை விட்டுப் போக வேண்டிய வேளை. ..போய் விட்டது.
அது என் கழுத்தில் இருக்கும் வரை எனக்கு என்ன நன்மை செய்ய முடியுமோ அதைச் செய்தது. அதனுடன் நான் பிறக்கவில்லை. அதனுடன் நான் போகப் போவதுமில்லை.

இடையில் வந்தது. இடையில் போய் விட்டது. ஒரு ரயில் பயண நண்பர் போல.
‘விடு’ என்று விட்டு விட்டேன். இப்பொழுது மனதில் எந்த சலனமுமில்லை. எந்த சங்கடமுமில்லை.

கடந்த சில வருடங்களில் இது போல ஒரு சில நஷ்டங்களை – பெரியதும் சிறியதுமாக - நான் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஏனோ எனக்கு இதே போல எண்ணங்கள்தான் வந்திருக்கின்றன. பெரிய மன வருத்தம் எதுவும் என்னிடம் தங்கவில்லை. இறைவனுக்கு நன்றி.


(காஞ்சிப் பெரியவருடன் ஒருவருக்கு நேர்ந்த அனுபவத்தைப் பற்றி இன்று முகநூலில் ஒருவர் எழுதியதைப் படித்ததன் தாக்கம் இந்தப் பதிவு.)

Monday, October 09, 2017

08.10.17 நானும் ஹிந்தி திரைப்படப் பாடல்களும்

08.10.17 நானும் ஹிந்தி திரைப்படப் பாடல்களும்
            
     வயதாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இருக்கும் அடையாளங்களில் அடிக்கடி பழைய நிகழ்ச்சிகளையும் அனுபவங்களையும் அசை போடுவதும் ஒன்று என்று நினைக்கிறேன். ஏதேனும் ஒன்று அந்த நினைவுகளை எதிர்பாராமல் தூண்டிவிடும்.
            
                         நேற்று எதேச்சையாக முக நூலில் ஒரு நண்பர் ‘ஆர்ஸு’ என்ற ராஜேந்திரக் குமார் – சாதனா நடித்த படத்திலிருந்து ‘ஹஜி ரூட்கர் அப் கஹான் ஜாயியேகா’ என்ற லதா மங்கேஷ்கரின் பாடலை பதிவு செய்திருந்ததைக் கேட்டு நினைவுகள் ராக்கெட் வேகத்தில் திருநெல்வேலியில் ரத்னா தியேட்டரில் இந்தப் படம் 1965-ல் திரையிடப்பட்ட காலத்தை நோக்கி விரைந்தது.
            
                          அன்றைய காலங்களில் ஒரு சில குறிப்பிட்ட பிரபல ஹிந்திப் படங்கள் மட்டுமே திருநெல்வேலியில் திரையிடப்படும். அது போன்று திரைக்கு வந்த படங்களில் ‘ஆர்ஸூ’-வும் ஒன்று. திரைக்கு வந்த ஹிந்திப் படங்களும் அதிக பட்சம் ஒரு வாரம் ஓடும். ‘ஆர்ஸூ’ படத்தில் எனக்குப் பிடித்த சங்கர் – ஜெய்கிஷன் இசை. ஒரு வாரமே ஓடிய இந்தப் படத்தை நான் (எனது இன்னொரு கல்லூரித் தோழரும் கூட) ஐந்து முறை பார்த்திருக்கிறேன். ஆர்ஸூவில் ஒவ்வொரு பாட்டும் ஹிட். மனதைத் தொடும். கொஞ்சம் காதல் உணர்ச்சி இருந்தால் மனதைப் பிசையும். (இன்று அதே ‘ஹஜீ ரூட்கர்’ என்ற அருமையான பாடலைப் படமாக்கப் பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தால் எவ்வளவு கேவலமாக இருந்திருக்கிறது என்ற நினைப்பு மேலோங்கி நிற்கிறது. நடிகர் நடிகையர் அங்கே இங்கே ஒன்றிரண்டு அடி நகருகிறார்கள். வயலினும் சித்தாரும் ஒலிக்கும் பொழுது பியானோவைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். மேற்குடி மக்களின் தாம்பீக வாழ்க்கை. வாயில் பைப். அவ்வளவு தான்.)
            
                             என் மனம் உடனே ‘பீகி ராத்’ என்ற இன்னொரு ஹிந்திப் படத்துக்குத் தாவியது. இதில் ரோஷன் அவர்களின் இசை. ஒவ்வொரு பாடலும் ஹிட். இதில் இறுதியாக வரும் ‘தில் ஜோ ந கஹ சகா’ என்ற பாடலுக்காகவே திருநெல்வேலி ராயல் தியேட்டரில் ஓடிய ஏழு நாட்களில் ஐந்து முறை பார்த்திருக்கிறேன்.
            
                           இன்னொரு படத்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமென்றால் அது 1964-ல் வெளி வந்த ராஜ் கபூரின் ‘சங்கம்.’ என் நினைவுப் படி அந்தக் காலத்தில் மிக அதிக நாட்கள் திருநெல்வேலியில்  ஓடிய படம் இது தான். சுமார் ஒரு மாதம் ஓடியது. இந்தப் படத்தையும் அதன் பாட்டுக்களுக்காகவே பல முறை – எத்தனை முறையென்று நினைவில்லை – பார்த்திருக்கிறேன்.

             இந்தப் படம் லக்ஷ்மி தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த போது எனக்கு முக்கியமான தேர்வுகள் கல்லூரியில் ஆரம்பித்திருந்ததாக நினைவு. முதல் தேர்வு ஆங்கிலம். தேர்வுக்கு முந்தின நாள் ஐயப்பனுக்கு விசேஷமான நாள். எங்கள் வீட்டின் பின்புறம் ஒரு ஐயப்பன் கோவில். மாலை மூன்று நான்கு மணிக்கெல்லாம் கோவிலில் விசேஷத்தை முன்னிட்டு ஒலிப்பெருக்கியில் பாடல்கள் ஒலி பரப்பத் தொடங்கி விட்டனர்.

     எனக்கோ பின் புலத்தில் இசை ஓடிக் கொண்டிருந்தால் படிப்பதில் கவனம் செலுத்த முடியாது. பாடல்கள் நிற்பதாகத் தெரியவில்லை. பார்த்தேன். திடீரென்று யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் நேரே லக்ஷ்மி தியேட்டரை நோக்கி நடந்தேன். சங்கம் படம். அந்தக் காலத்து தரை டிக்கெட் – 31 பைசா – கிடைத்தது. அந்த வகுப்பு டிக்கெட்டுக்கு எங்கள் நண்பர்களிடையே வைத்த பெயர் ‘சுண்டல்’. 31 பைசாவை சுண்டிவிட்டு டிக்கெட் வாங்கி ‘தோஸ்த் தோஸ்த் நா ரஹா’ பாடல் வரை படம் பார்த்து விட்டு வீடு வந்து சேர்ந்தேன். பின்பு இரவு 12 மணி வரை தேர்வுக்குப் படித்தேன். அடுத்த நாள் தேர்வும் நன்றாகவே எழுதியிருந்தேன். பொதுவாக பாட சம்பந்தமாக நான் மெத்தனமாக இருக்க மாட்டேன் என்று வீட்டில் தெரியும். அதனால் என்னை எதுவும் குற்றம் சொன்னதில்லை.  இறுதித் தேர்வுக்கு முந்தின நாள் துணிச்சலாக திரைப்படம் பார்த்த மேதாவிகளில் நானும் ஒருத்தன்.

    அது போன்று ‘ராஜ்குமாரி’ என்று ஒரு படம் வந்தது. அதிலும் சங்கர் ஜெய்கிஷன் இசை. (உண்மையில் சங்கரின் இசை). குப்பைப் படம். ஆனாலும், ‘ஆஜா, ஆயே பஹார் தில் ஹை’ என்ற பாட்டுக்காக அந்தப் படத்தைப் பார்த்தேன்.


      திடீரென்று நினைவுகள் அறுந்து விட்டன……..

Friday, April 14, 2017

14.04.17 மாற்றம் - புத்தாண்டின் நினைவு கூர்தல்

14.04.17 மாற்றம்

மாற்றம் ஒன்றுதான் என்றுமே மாறாத ஒன்று.

மாற்றத்தை என்றுமே விரும்புபவன் நான். மாற்றங்களை என்றுமே வரவேற்பவன் நான். என்னால் எதையையுமே தொடர்ச்சியாக வழக்கமாக, இயந்திரத்தனமாக செய்யவோ, ஏற்றுக்கொள்ளவோ முடிவதில்லை. அதனால், என்னால் எதிலும் தொடர்ச்சியான ஈடுபாடு காட்ட முடிந்ததில்லை. இயந்திரத்தனமான வாடிக்கைகளை நான் வெறுக்கிறேன். தவிர்க்க முடியாதா வாடிக்கைகளிலும் கூட மாற்றங்களை அடிக்கடி விரும்புகிறேன். மாற்றங்களைக் கண்டு நான் பயந்ததில்லை. தெரியாதவற்றைக் கண்டு பயந்ததில்லை.

மாற்றங்களை விரும்பி ஏற்றுக்கொண்டதாலேயே பல ஏமாற்றங்களை என்னால் சகித்துக் கொள்ள முடிந்தது. அந்த ஏமாற்றங்களும் மாறும் என்ற நம்பிக்கை இருந்தது. எதுவுமே நிச்சயமில்லை என்பதை நம்புகிறேன். இன்றிருக்கும் நல்ல நிலைமையும் மாறும். மோசமான நிலைமையும் மாறும்.

சில மாற்றங்களை நானே ஏற்படுத்திக் கொள்கிறேன். சில மாற்றங்கள், நான் விரும்பாமல், எதிர்பார்க்காமல் வந்தாலும், ஏற்றுக்கொண்டு அதை விரும்பக் கற்றுக் கொள்கிறேன்.

நேற்றிருந்த மன நிலை இன்றில்லை. இன்றிருப்பது நாளை இருக்கும் என்ற எந்த கட்டாயமுமில்லை.

என்னுள்ளே ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு உயிரணுவும் மாறிக்கொண்டிருக்கிறது. நேற்றைய நான் இன்றில்லை. இன்றைய நான் நாளை இருக்க மாட்டேன். உலகம் விரிந்துகொண்டே இருக்கிறது. நாம் சுழன்று கொண்டே இருக்கிறோம்.  நமது கண்ணுக்குத் தெரிவதில்லை. நிலையாக நிற்பது போல உணர்கிறோம். என்னுள்ளே ஒரு தொடர்ச்சி இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றம்.

விரும்பியோ, விரும்பாமலோ, எதிர்பார்த்தோ, எதிர்பாராமலோ ஏற்பட்ட மாற்றங்களை நான் ஏற்றுக் கொண்டதாலேயே:
            ·         இன்ஜினியரிங் படிக்க விரும்பிய நான் வேதியியலில் முதுகலை பட்டதாரியானேன்.
              ·         வெள்ளித்திரையில் இசையமைப்பாளராக விரும்பிய நான் பட்டப் படிப்புகளில் கவனம் செலுத்தினேன்.
                ·         வேதியியல் படித்த நான், குடும்பச் சூழ்னிலை காரணமாக வங்கிப் பணியில் சேர்ந்தேன்.
              ·         வங்கியில் சுமார் ஒவ்வொரு இரண்டரை ஆண்டுக்கு ஒரு இட மாற்றம் ஏற்பட்டதை விரும்பி ஏற்றுக்கொண்டேன். பல புதிய இடங்கள், புதிய மனிதர்கள், புதிய சூழ்னிலைகள், புதிய சவால்கள், புதிய சங்கடங்கள், புதிய பொறுப்புகள் எல்லாவற்றையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன். என் குழந்தைகள் பள்ளிப் படிப்பு முடிப்பதற்குள் குறைந்தது ஆறேழு பள்ளிகளைப் பார்த்திருப்பார்கள். அதுவும் வெவ்வேறு மூலைகளில்.
           ·         இருபத்தைந்து ஆண்டுகள் அனுபவமுடைய நிரந்தர வருமானம் கொடுத்த வங்கி வேலையை உதறித் தள்ளிவிட்டு நிரந்தரமில்லாத, அபாயங்கள் நிறைந்த பணிகளை  நானாக ஏற்றுக்கொண்டேன்.
               ·         பணம், பணம் என்று அலைந்து கொண்டிருந்த மக்களிடையே பணம் போதும் என்று பணம் கொடுத்துக் கொண்டிருந்த வேலையை விரும்பித் துறந்தேன்.
            ·         சேர்த்த வளத்தோடு பெருநகர்களிலேயே எல்லா வசதிகளோடு வாழும் மன நிலையோடு வாழும் மக்களிடையே – அதுவும் பணி ஓய்வு பெற்ற பிறகு – வாழாமல், பெரு நகரை ஒதுக்கித் தள்ளிவிட்டு ஒரு கிராமப்புறத்து ஊரைத் தேர்ந்தெடுத்தேன்.
        ·         பணி ஓய்வு பெற்ற பின்பு ஈசிச் சேர் வாழ்க்கையை ஒதுக்கி விட்டு பொழுதுபோக்குக் காரியங்களில் மனதைச் செலுத்தாமல் சமூகப் பணிகளில் இயன்ற மட்டும் மனதைச் செலுத்தி வருகிறேன்.
   ·         என்னுடைய பொழுதுபோக்குகளை ஆரோக்கியமாக மாற்றிக்கொண்டிருக்கிறேன். கதைகள், கட்டுரைகள், புத்தகங்கள் எழுதத் தொடங்கினேன். பல ஆண்டுகளாக மறந்திருந்த ஓவியக் கலைக்கு மீண்டும் விஜயம் செய்கிறேன். கர்னாடக சங்கீதத்தை இன்னும் அதிகமாக ரசிக்கக் கற்றுக் கொண்டு வருகிறேன். கீ போர்ட் வாசிக்கப் பழகுகிறேன். இன்னும் அதிகமாக ஊர் சுற்ற விரும்புகிறேன். வித விதமான புத்தங்கங்களை வாசித்துப் பார்க்கிறேன். புதிய, வித்தியாசமான திரைப் படங்களைப் பார்க்கிறேன். புதிய முயற்சிகள் என்ன செய்யலாம் என்று மனதைப் போட்டு அலட்டிக்கொள்கிறேன். இப்படி எனக்குள்ளேயே மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள அன்றாடம் முயற்ச்சிக்கிறேன்.

     மாற்றம், மாற்றம், மாற்றம். தொடர்ந்து மாற்றங்களைத் தேடிப் போகிறேன். அதனால் எதிலிலுமே முழுமை அடைய முடிவதில்லை. எல்லாம் அரை குறையாக நிற்கிறது. ஒன்றில் ஈடுபட்டிருக்கும் பொழுதே மற்றொன்றில் என்னை அறியாமல் மனம் சென்று விடுகிறது. (படிக்கும் காலங்களிலேயே கூட பத்து நிமிடம் படித்தால் பத்து நிமிடம் பாட்டுப் பாடும் பழக்கம் கொண்டவன் நான்.)

       இருந்தும், சிலவற்றை என்னால் மாற்ற முடியவில்லை…உதாரணத்துக்கு…
    o   நான் சாப்பிடும் தட்டில் நான் மட்டும்தான் சாப்பிட வேண்டும்.  நான் சாப்பிட உட்காரும் இடம் பொதுவாக மாறுவதில்லை.
  o   என்னுடைய உடையை வேறு யாரும் அணிந்துகொள்ள நான் அனுமதித்தில்லை அதுபோல மற்றவர்களின் ஆடைகளை நான் ஏற்றுக்கொண்டதுமில்லை.
   o   விஸ்வனாதன் – ராமமூர்த்தி இசையை விரும்பிக் கேட்பதில் இன்றும் மாற்றமில்லை.
   o   அமெரிக்காவிலும் இந்திய உணவையே விரும்பிச் சாப்பிடுவதை என்னால் மாற்ற முடியவில்லை.
     o   அடிக்கடி கோபம் கொள்வதை இன்னும் மாற்ற முடியவில்லை.
     o   இன்னமும் தனிமையை விரும்புவதை மாற்ற முடியவில்லை.

      ஹேவிளம்பி புதிய தமிழ் ஆண்டில் நுழையும் இந்த நேரத்தில்:
  §  என் குழந்தைகளும், இளைஞர்களும், வயதில் சிறியவர்களாக இருந்தாலும் பல விதங்களில் அறிவிலும், மனதிலும் என்னை விட முதிர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள விரும்புகிறேன். என்னுடை ‘தான்’ என்ற நினைப்பு தடை செய்யாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பிரார்த்திக்கிறேன். முயற்சி செய்கிறேன்.
 §  எல்லோரிடமும் எந்த நிபந்தனையுமில்லாமல் அன்பு செலுத்த வேண்டுமென்று விரும்புகிறேன். பிரார்த்திக்கிறேன். முயற்சி செய்கிறேன்.
 §  யாரையும் எந்தக் காரணம் கொண்டும் வெறுக்கக் கூடாதென்று விரும்புகிறேன். பிரார்த்திக்கிறேன். முயற்சி செய்கிறேன்.
   §  எல்லோரையும் அவரவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். பிரார்த்திக்கிறேன். முயற்சி செய்கிறேன்.
  §  எல்லா சூழ்னிலைகளையும், எல்லா அனுவங்களயும் – நல்லது, கெட்டது என்று பாகுபடுத்திப் பார்க்காமல் – அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். பிரார்த்திக்கிறேன். முயற்சி செய்கிறேன்.
  §   நான் வாழ்கின்ற ஒவ்வொரு கணமும் – எவ்வவளவு சிறியதோ, பெரியதோ – ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும், வளமாகவும், பயனுள்ளதாகவும், சக்தி நிறைந்ததாகவும், இளமையாகவும், வெற்றியுடைதாகவும் இருக்க விரும்புகிறேன். பிரார்த்திக்கிறேன். முயற்சி செய்கிறேன்.

நன்றி. வணக்கம். புத்தாண்டு நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்.



Wednesday, March 29, 2017

இந்த வார நாட்க்குறிப்பு: 26.03.17 பத்திரிகைகள் ஏன் இப்படி இருக்கின்றன?

இந்த வார நாட்க்குறிப்பு: 26.03.17 பத்திரிகைகள் ஏன் இப்படி இருக்கின்றன?

திடீரென்று இந்த விஷயம் ஏன் ஞாபகத்துக்கு வந்ததென்று தெரியவில்லை.

1960-களில் பல குடும்பங்களில் வார, மாதப் பத்திரிகைகள் தொடர்ச்சியாக படிக்கும் பழக்கம் இருந்து வந்தது. ஆனந்த விகடன், குமுதம், கல்கி, கலை மகள், கல்கண்டு, குங்குமம், (பின்பு) சாவி, பொம்மை, பேசும் படம், …இப்படிப் பல. அந்தப் பத்திரிகைகளில் தொடர்கதைகள் மிகவும் பிரபலமாக இருந்தன. பல எழுத்தாளர்கள் பிரபலமாவதற்கு அந்தப் பத்திரிகைகள் உதவியாக இருந்திருக்கின்றன. பத்திரிகைகளும் பெருகின. திரு. கல்கி, அகிலன், நா. பார்த்தசாரதி, பாலசுப்பிரமணியன், சா. விஸ்வனாதன், பின்னர் சுஜாதா, ரா. கி. ரங்கராஜன், ஜாவர் சீதாராமன் அதற்கும் பின்னர் இந்துமதி, சிவசங்கரி…இப்படிப் பலரின் தொடர் கதைகள் வழக்கமாக ஒன்று மாற்றி ஒன்றாக பல பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டு வந்தன. அந்தத் தொடர் கதைகள் வாசகர்களிடையே மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வந்தன. (ஏதேனும் முக்கியமான பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்) எல்லாப் பத்திரிகைகளிலும் பல சிறு கதைகள் படிப்பதற்கு சுவாரசியமாக இருந்தன. சித்திரக் கதைகள் இருந்தன. பயணக் கட்டுரைகள் இருந்தன. ஒவ்வொரு ஆண்டும் வெளி வரும் தீபாவளி மலருக்கு பலர் ஆவலுடன் ஏங்கி நின்றனர்.

ஆனால், எல்லாக் குடும்பங்களாலும் எல்லா பத்திரிகைகளையும் விலை கொடுத்து வாங்கிப் படிக்க முடியாத நிலை. பெரும்பாலான குடும்பங்கள் நடுத்தர வர்க்கம். அதனால் ஒரு சில தனி மனிதர்கள் எல்லாப் பத்திரிகைகளையும் –தேவைக்கேற்ற படி - ஒன்றிரண்டு பிரதிகளை விலைக்கு வாங்கி வைத்து பல வீடுகளுக்கு மாதச் சந்தாவாக ரூபாய் பத்தோ இருபதோ வாங்கிக் கொண்டு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு படிப்பதற்கு வாடகைக்குக் கொடுப்பார்கள். அந்த வியாபார முறை மிகவும் பிரபலமாக இருந்தது. சிறுவர் முதல் வயதில் முதியவர்கள் வரை எல்லா வர்க்கத்தினரும் படிக்கும் படியாக பொதுவாக எல்லாப் பத்திரிகைகளிலும் ஏதேனும் விஷயம் இருக்கும். ஏதேனும் ஒன்றிரண்டு சினிமாச் செய்திகள்தான் அவற்றில் காணப்படும். சினிமாச் செய்திகள் படிக்க வேண்டுமென்றால் பொம்மை, பேசும் படம் போன்ற அதற்கென்று தனிப்பட்ட பத்திரிகைகளை வாங்கிப் படிக்க வேண்டியதுதான். பத்திரிகைகளில் வரும் தொடர்கதையை பத்திரமாக பிரித்தெடுத்து சேர்த்து வைத்து ‘பைண்ட்’ பண்ணி வைப்பார்கள் பல வீடுகளில்.

இன்றைக்கும் சிறிய ஊர்களில் இந்த வியாபார முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கேள்வி.

பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் மிகவும் பரவலாக இருந்தது.

பின்னர் ஒரு சமயத்தில், மக்களின் சினிமா மோகம் அதிகரிக்கத் தொடங்கவே பத்திரிகைகளும் தங்கள் பாணியை மாற்றிக் கொள்ளத் தொடங்கின. அதில், குமுதம் பத்திரிகை முன்னோடியாக இருந்தது என்று நினைக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக சினிமா பற்றிய செய்திகள் அதிக பக்கங்களை ஆட்கொளத் தொடங்கின.

பின்னர் வந்தது தொலைக்காட்சி. பத்திரிகைகள் படிக்கும் பழக்கமும் தொலைய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் தூர்தர்ஷன் மட்டுமே இருந்தது. வேறு வழியில்லாமல் மக்கள் புத்தகங்களையும், பத்திரிகைகளையும் மறந்து தொல்லைப் பெட்டியின் முன்னே மணிக் கணக்காக நேரத்தை செலவிடுவதை தொடங்கினார்கள். பின்னர் 1990-களின் ஆரம்பத்தில் போட்டிக்கு பல தனியார் தொலைக்காட்சி சேனல்களை அனுமதித்தார்கள். பத்திரிகைகள் படிப்பது நின்றதோடல்லாமல் மாணாக்கர்கள் பாடம் படிப்பதும் நிற்கத் தொடங்கின. கவனம் சிதறத் தொடங்கியது. தனியார் தொலைக் காட்சியின் மோகத்தில் பாடத்தை கோட்டை விட்ட கதை எங்கள் வீட்டிலேயே நடந்திருக்கிறது.

பின்னர் வந்தது கம்ப்யூட்டரும், செல்ஃபோனும்.

போச்சு… எல்லாமே போச்சு.

பத்திரிகைகளில் வரும் கதைகள் பஸ் டிக்கட் அளவுக்கு குறுத்துப் போயின. சினிமாக்களும், விளம்பரங்களும் பத்திரிகைகளை முழுமையாக ஆக்ரமித்துக் கொள்ளத் தொடங்கின. காலை எழுந்ததும் பல் கூட துலக்காமல் செல் ஃபோனில் எஸ்.எம்.எஸ் தகவல் பரிமாற்றங்களில் சிறுவர்களும், இளைஞர்களும் ஈடுபடத் தொடங்கினர்.

பின்னர் வந்தது Social Networking வலைத் தளங்கள். Orkut, Facebook, Twitter…இன்னும் எத்தனையோ…எல்லோரும் பித்து பிடித்து அலைகிறார்கள். வயது வித்தியாசம் இதில் எதுவும் கிடையாது.

பத்திரிகைகள், புத்தங்கள், செய்தித் தாள்கள் இதையெல்லாம் படிப்பது பழமை விரும்பிகளுக்கு மட்டுமே என்றாகி விட்டது. ஆனால், இன்று வருகின்ற பல பத்திரிகைகளில் பெரும்பாலும் சினிமா சம்பந்தமான செய்திகள் அதிகமாக காணப்படுகின்றன. கிசு கிசுக்களும், செய்தி என்ற பெயரில் விலாசம் தெரியாத நிருபர்களின் கருத்துக்கள், கவர்ச்சிகரமான புகைப்படங்கள் … இவைகள் தான் அதிகம் காணப்படுகின்றன. சிறு கதைகள், தொடர் கதைகள் அபூர்வம். நீளமாக எழுதினால் யாரும் படிப்பதில்லை. எல்லாமே ஒன்றிரண்டு வரிகளில் சொல்லி விட வேண்டியிருக்கிறது.

பல பத்திரிகைகள் இணையதளத்திலும் – சில இலவசமாகவும், சில சந்தா கட்ட வேண்டியதாகவும் – கிடைக்கின்றன. எது தேவையோ அதை மட்டும் படித்தால் போதும். புத்தகங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு பத்திரிகையை கையில் எடுத்தால் அதிக பட்சம் பத்து நிமிடங்களில் பார்த்து முடித்து விடலாம். பாதிப் பக்கங்களில் விளம்பரங்கள்தான் இருக்கின்றன. மக்களும் ‘பிசி’யாக இருக்கின்றனர். இருந்தும் புதிது புதிதாக பத்திரிகைகள் வருகின்றன. பல பத்திரிகைகளில் வரும் கட்டுரைகளைப் படித்துப் பார்த்தால் மேலெழுந்தவாரியாக எழுதியது போலத் தோன்றுகிறது. மக்கள் கையில் பணப் புழக்கம் அதிகமாக இருக்கிறது. எப்பொழுதும் பறந்து கொண்டிருக்கிறார்கள். தரமான பத்திரிகை (அப்படி இருந்தால்) படிப்பதற்கு எங்கே நேரம்?


காலம் மாறுகிறது. இந்த நிலையும் மாறும். நம்புகிறேன். பத்திரிகைகள் எல்லாமே மோசம் என்று நான் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அங்கங்கே நல்ல தரமான பயனுள்ள கதை, கட்டுரைகள் இன்றும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. உதாரணத்துக்கு, நெல்லையிலிருந்து வெளி வரும் தினமலர் வாரமலரையும், சிறுவர் மலரையும் அடிக்கடிப் படித்திருக்கிறேன். ஓரளவு நன்றாகவே இருக்கிறது.

Sunday, March 05, 2017

05.03.17 நான் பிடித்த புகையும் என்னைப் பிடித்துக்கொண்ட புகையும்

05.03.17 நான் பிடித்த புகையும் என்னைப் பிடித்துக்கொண்ட புகையும்

உயர் நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம். எட்டாவதோ ஒன்பதாவதோ வகுப்பு. ஞாபகமில்லை. தெருவில் என்னுடன் படித்துக் கொண்டிருந்த நெருங்கிய வகுப்பு நண்பன். என்னோடு எப்பொழுதும் ஒட்டுதலாக இருப்பான். ஒரு நாள் நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது துரதிருஷ்ட வசமாக எங்கள் பேச்சு புகை பிடிப்பது பற்றி திரும்பியது.

“நீ புகை பிடித்திருக்கிறாயா?” என்று திடீரென்று கேட்டான். 

“இல்லையே, ஏன்” என்றேன்.

சிறிது இடைவேளைக்குப் பிறகு, “ நீ?...” என் கேள்வி தொங்கி நின்றது.

“பிடித்திருக்கிறேன்…மீண்டும் பிடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது” என்றான். எனக்கு ஒரே அதிர்ச்சி.

அன்று மாலை ரயில் நிலையம் செல்லும் வழியில் திறந்த வயல்வெளிக்குச் சென்றோம். போகும் வழியில் எங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாத ஒரு பெட்டிக் கடையில் இரண்டு ‘சிஸர்ஸ்’ சிகரெட்டும் ஒரு தீப்பெட்டியும் வாங்கிக் கொண்டோம். ஆம், .இரண்டாவது சிகரெட் எனக்காகத் தான். அன்றைய காலத்தில் ‘சிஸர்ஸ்’ தான் பிரபலமான சிகரெட் என்று நம்பிக்கை. வயற்காட்டின் வரப்புகளில் கொஞ்ச தூரம் நடந்து போய் சிகரெட்டை பற்ற வைக்கத் தொடங்கினான். காற்றடித்துக் கொண்டிருந்ததால் பல தீக்குச்சிகள் வீணாகின. ஒரு வழியாக என் நண்பன் தன் சிகரெட்டை பற்ற வைத்து எனக்கும் பற்ற வைத்துக் கொடுத்தான்.

ஓரே ஒரு இழுப்புதான் இழுத்திருப்பேன். நெஞ்சு பற்றிக் கொண்டும் குமட்டிக் கொண்டும் வந்தது. அப்படியே சிகரெட்டை விட்டெறிந்து விட்டேன். ஆனால், நண்பன் பல முறை முன்னமேயே முயன்று பார்த்திருப்பான் போல. சிகரெட்டை நன்றாக இழுத்து இழுத்து ஊதினான். எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அவன் கூடவே வரப்பில் நடந்து சென்றேன். புகை பிடிப்பதை ரசிப்பது போல என் முன்னே அவன் அமைதியாகவே சென்றான்.

“எப்படி டா இருக்கு?” என்றேன்.

“ம்.ம். நன்றாக இருக்கிறது…” என்றான். இழுக்க இழுக்க இன்பம். சிகரெட் தீரும் வரை நடந்தோம். பின்னர் இன்னொரு பெட்டிக் கடைக்குச் சென்று சூடன் மிட்டாய் கை நிறைய வாங்கி வாயில் போட்டுக் கொண்டு அங்கங்கே சுற்றி விட்டு நிறைய நேரம் கழித்து வீடு வந்து சேர்ந்தோம். வீட்டில் ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்துக்கொள்ள மாட்டோம் என்ற நம்பிக்கை இருவருக்குமே இருந்தது.

அதுதான் தூக்கியெறியப்பட்ட புகையோடு என்னுடைய முதல் நட்பு. அந்த நிகழ்வுக்குப் பிறகு புகை பிடிப்பதைப் பற்றி அவனிடம் நான் பேசுவதேயில்லை. அவனும் என்னிடம் அதைப் பற்றி பேச மாட்டான். இருவருக்கும் குற்ற உணர்ச்சியாக இருந்திருக்கலாம். நல்ல நண்பர்களாகவே இருந்தோம். பின்பு அவனுடைய தகப்பனார் வேலை மாற்றத்தில் வேறொரு ஊருக்குப் போன பிறகு தொடர்பு விட்டுப் போய் விட்டது. அவன் தொடர்ந்து புகை பிடித்தானா என்று நான் ஒரு பொழுதும் கேட்டுக் கொண்டதில்லை.

படித்து முடித்த பின்னர் ஒரு வங்கியில் வேலைக்கு சேர்ந்தேன். மலைப் பிரதேசத்திலிருந்த ஒரு கிளைக்கு என்னை அனுப்பினார்கள். குளிர் எனக்கு முதன் முதலாக அறிமுகமாகியது. இரவு நேரங்களில் அதிகமாக குளிரும். எப்பொழுதும் ஸ்வெட்டரைப் போட்டுக் கொண்டே எல்லா இடங்களுக்கும் போக வேண்டும். ஒரு லாட்ஜில் தங்கியிருந்தேன். அடிக்கடி மழை வேறு பெய்யத் தொடங்கிவிடும். குளிரும் மழையும் சேர்ந்து இதமாக எதையாவது தேடச் சொல்லும்.

ஒரு நாள் இரவில் மழையும் பெய்து ஓய்ந்து எங்கள் சாப்பாடும் முடித்துவிட்ட நேரம். என்னுடன் வங்கியில் பணி புரிந்த என் வயதொத்த  நான் தங்கியிருந்த லாட்ஜிலேயெ தங்கியிருந்த இன்னொரு ஊழிய நண்பர், “ரொம்பக் குளிராக இருக்கிறது…தாங்க முடியலை…என்ன செய்யறது…” என்று மீண்டும் மீண்டும் என்னிடம் சொல்லிக்கொண்டிருக்க திடீரென்று, “ஓரு சிகரெட் பிடிச்சுப் பார்க்கலாமா? குளிருக்கு இதமாக இருக்கும். எல்லாக் குளிர் பிரதேசங்களிலும் ட்ரிங்க்ஸ் மற்றும் புகை பிடித்தல் இரண்டையும் தானே நம்பியிருக்கிறார்கள்…” என்றான். ஆறேழு ஆண்டுகளுக்கும் மேலாக நான் நினைத்துப் பார்க்காததை அவன் நினைவு படுத்தி விட்டான். “சரி, வா…போகலாம்” என்றேன்.

நாங்கள் தங்கியிருந்த லாட்ஜுக்கு பின் புறம் இருந்த ஒரு கடையில் ஆளுக்கொரு ‘சிஸர்ஸ்’ சிகரெட் வாங்கி பற்ற வைத்துக் கொண்டோம். இந்த முறை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. குளிருக்கு புகைப்பது இதமாக நன்றாகத்தான் இருந்தது. நண்பருக்கும் அப்படியே. இருவரும் அப்படியாக அன்றைய குளிரை புகை பிடித்து விரட்டினோம்.

அதன் பிறகு ஒன்றிரண்டு முறை என்னுடன் வந்து அந்த நண்பரும் புகை பிடித்தார். அதன் பிறகு ‘எனக்குப் பிடிக்கவில்லை. வேண்டாம்.” என்று மறுத்து விட்டார். ஆனால், நான் பிடித்த புகை என்னைப் பிடித்து கொண்டு விட்டது. புகை பிடிப்பதை ஆரம்பத்தில் ரகசியமாகவே வைத்திருந்தோம். நாட்பட நாட்பட அலுவலகத்தில் மற்றவர்களுக்கும் தெரிந்து விட்டது.

அதன் பிறகு என்னால் புகை பிடிக்கும் பழக்கத்தை விட முடியவில்லை. பல இடங்களுக்கு மாற்றலாகிப் போய்க் கொண்டிருந்தேன். தனிமையில் இருந்தேன். புகை துணை கொடுத்தது. ஆரம்பத்தில், சாப்பாட்டுக்கு பிறகு மட்டுமே புகை பிடித்தேன். அதாவது ஒரு நாளைக்கு இரண்டு அல்லது அதிக பட்சம் மூன்று சிகரெட்டுகள்.

பின்பு வட இந்தியாவுக்கு மாற்றலாகிச் சென்ற பிறகு பொறுப்புகள் கூடக் கூட வேலைப் பளு அதிகமாகவே என்னுடைய புகைப் பழக்கமும் அதிகமாகியது. ஒரு சமயத்தில் ஒரு நாளைக்கு இருபது சிகரெட்டுக்கள் வரை கூட பிடித்துக் கொண்டிருந்தேன்.

நான் புகை பிடிப்பதை என் மனைவி, குழந்தைகளிடமிருந்து என்றும் மறைத்ததில்லை. பழக்கத்தை விடவும் முடியவில்லை. முக்கியமாக அலுவலகத்தில் மன அழுத்தம் அதிகமாகும் பொழுதெல்லாம் அதிகமாக புகை பிடித்திருக்கிறேன்.

பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு 1986-ல் ஒரு முறை காந்தி ஜெயந்தி தினத்தன்று ‘புகை பிடிப்பதில்லை’ என்று எனக்கு நானே தீர்மானித்து ஒரு ஆறு மாதம் வரை புகை பிடிக்காமல் இருந்தேன். அந்த நாட்களில் வடகிழக்கு மானிலங்களில் வேலை பார்த்து வந்தேன். என்னைச் சுற்றி பலரும் புகை பிடிப்பவர்களாக இருந்தும் ஆறு மாதம் தாக்குப் பிடித்தேன். புகை பிடிக்க வேண்டும் என்று உந்துதல் அடிக்கடி வரும். எப்படியோ கட்டுப்படுத்தி சமாளித்தேன். ஆனால், மீண்டும் அந்த சனியன் என்னை எப்படியோ பிடித்துக் கொண்டுவிட்டது.

புகை பிடிப்பது தொடர்ந்தது. ரசித்துப் பிடித்ததை விட மன அழுத்தத்தில் பிடித்தது தான் அதிகம். என்னை அறியாமலேயே என் கை சிகரெட்டை பையிலிருந்து எடுத்து விடும்.

பின்னர் 1999-ல் என்னுடைய நெருங்கிய ஒருவருக்கு ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டது. அவரை அந்தப் பிரச்சினையிலிருந்து மீட்க வேண்டிய நிலையில் நான் இருந்தேன். சிக்கலான பிரச்சினை. அந்த சமயம் நான் ஸ்ரீஅம்மா பகவானிடம் அறிமுகமாகியிருந்தேன். அன்று அவர்களிடன் நான் அந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டேன். அதற்கு கைமாறாக புகை பிடிப்பதை விட்டு விடுகிறேன் என்றும் உறுதி பூண்டேன். அந்தப் பிரச்சினைக்காக என்னால் என்ன செய்ய முடியுமோ செய்தேன். மிகவும் டென்ஷனான ஒரு நாளை எப்படியோ கழித்தேன். அடுத்த நாள் ஒரே ஒரு முறை புகை பிடித்தேன். பாதி பிடித்துக் கொண்டிருக்கும் பொழுதே மனசாட்சி உறுத்தவே, கையிலிருந்த சிகரெட் பெட்டியை விட்டெறிந்தேன். அதுதான் நான் கடைசியாக பிடித்த சிகரெட். அன்று முதல் சிகரெட்டை நான் தொட்டதில்லை. எந்தப் பிரச்சினை தீர்வதற்க்காக புகை பிடிப்பதை நிறுத்தினேனோ அதுவும் ஒன்றிரண்டு நாட்களில் அப்போதைக்கு வலுவிழந்து விட்டது பெரிய நிம்மதியைக் கொடுத்தது.

விட்டது சனியன்.

27 ஆண்டுகள் புகை பிடித்திருக்கிறேன். அதை விட்ட பிறகு ‘மீண்டும் ஒரு முறை புகை பிடித்துப் பார்க்கலாமே’ என்ற எண்ணம் கூட இதுவரை எனக்கு வந்ததில்லை. புகைப்பதை விட்ட பிறகு பக்கத்தில் ஒருவர் புகை பிடித்தாலே எனக்குக் குமட்டிக்கொண்டு வருகிறது.

புகை பிடித்து வந்த நாட்களில் அடிக்கடி என் மனைவி ‘இது வேண்டாமே’ என்று கூறியிருக்கிறாள். இப்பொழுது நினைத்துப் பார்த்து மனம் குறுகியிருக்கிறேன். என்னையே நான் வெறுத்திருக்கிறேன். ‘என்னை எப்படி 27 ஆண்டுகள் சகித்துக் கொண்டாய்?’ என்று என் மனைவியிடம் அடிக்கடி கேட்டிருக்கிறேன். ‘என்னை புகை பிடிப்பதிலிருந்து தடுத்து நிறுத்தியிருக்கலாமே?’ என்று ஒன்றிரண்டு முறை கேட்ட பொழுது ‘ஆமாம், தடுக்க முயற்சித்திருந்தால் மட்டும் நீங்கள் என்ன உடனே கேட்டு விடவா போகிறீர்கள்?’ என்று சொல்லிவிட்டாள்.

உண்மைதான். புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான பின்பு மனைவியோ அல்லது வீட்டில் வேறொருவரோ நம்மைத் தடுப்பதற்கு முயற்ச்சித்திருந்தால் எனக்குக் கோபமும் ஆத்திரமும்தான் வந்திருக்கும். என்ன செய்வது? புகை பிடிப்பதும், குடிப்பதும் அப்படிப்பட்ட ஒரு அரக்கன். அந்த அரக்கனிடம் மாட்டிக்கொண்டு நாம் அடிமையாகி விட்டால் மீண்டு வருவது கடினம்.

‘புகை பிடிக்காதீர்கள்’ என்று மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் அருகதை எனக்குக் கிடையாது. ஆனால், நல்ல வேளையாக நான் சரியான நேரத்தில் அதை விட்டு விட்டேன் என்றே தோன்றுகிறது. அதனுடைய தீய விளைவுகளிலிருந்து ஒரு சில சிறிய காயங்களுடன் தப்பித்து விட்டேன்.

இறைவனுக்கு நன்றி. என்னை சரியான பாதையில் திருப்புவதற்க்காகவே அந்த நெருங்கியவருக்கு ஒரு சிக்கலான பிரச்சினை தோன்றியதோ என்னவோ? என்னுடன் இணைந்த கர்மாவுக்காக (KARMA DUE TO BONDAGE/COLLECTIVE KARMA) என்னைக் காப்பாற்றுவதற்காக அவரும் அந்தச் சிக்கலால் துன்பப்பட்டிருக்கிறார். அவர் இன்று உயிருடன் இல்லை. அவர் ஆத்மா சாந்தியடைவதாக.


கடவுள் அவ்வப்பொழுது நம்மை சரியான பாதையில் திருப்புவதற்கு சிறு சிறு கற்களை வீசுகிறார். வேறு பல விதங்களிலும் முயல்கிறார். நாம்தான் பல சமயம் அந்த அடையாளங்களை கவனிப்பதில்லை.

Sunday, February 12, 2017

12.02.17 ஆன்மீக மலரும் நினைவுகள் - பகுதி 1

12.02.17 ஆன்மீக மலரும் நினைவுகள் - பகுதி 1

நேற்று மாலை எதேச்சையாக ‘ஓம் ஜெயஜகதீச ஹரே’ என்ற ஆரத்தி பாடலை என் பேத்தியுடன் சேர்ந்து பாட நேர்ந்தது. ஐந்து வயதேயான தமிழ் அறியாத அந்தப் பெண் மழலைத் தமிழில் என்னுடன் சேர்ந்து பாடத் தொடங்க அதைத் தொடர்ந்து ‘சதா மந்த ஹாசம்’ என்ற ஸ்ரீஅம்மா பகவான் சத்சங்கத்தில் நான் அடிக்கடி விரும்பிப் பாடும் பாடலைத் கண்ணை மூடி பாடிக்கொண்டிருந்தேன். என்னை அறியாமல் என் கண்களில் நீர் சுரந்து கொண்டிருந்தது. என் ஞாபகங்கள் என்னை பழைய நாட்களுக்கு இழுத்துச் சென்றது.

1978-79 என்று ஞாபகம். சென்னையில் வங்கியின் பிரதானக் கிளை ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்த நேரம். ஒரு நாள் வங்கி வாடிக்கையாளர் ஒருவரை முதன் முதலாக சந்திக்க நேர்ந்தது. அவருடைய கடன் கணக்கு சம்பந்தமான சில சிக்கல்களைப் பற்றி பேச்சு வார்த்தைகள் முடிந்த பின்னர் கிளம்பும் பொழுது அவர் எதேச்சையாக என்னிடம் கேட்டார், “நாளை பாபா அவர்கள் சென்னைக்கு வருகிறார்கள். அவரை தரிசனம் செய்ய உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா?” என்று. பகவான் சத்ய சாயிபாபா சென்னை வருகிறார் என்ற அளவில் செய்தித்தாள்களில் படித்திருந்தேனே தவிர அவரைத் தரிசிப்பது பற்றி நான் ஆலோசித்தது இல்லை. சென்னை சத்ய சாயி கமிட்டியில் தான் ஒரு முக்கிய அதிகாரி என்றும் பாபாவை தரிசனம் செய்ய  நான் வருவதென்றால் எனக்காக முன் வரிசையில் அமர்வதற்கு அவரால் ஏற்பாடு செய்து தர முடியும் என்றும் பின்பு அவரே கூறினார். நானும் வருவதற்கு சம்மதித்தேன்.

சொன்னபடி, அப்பொழுதிருந்த சென்னை ஆபட்ஸ்பரி மண்டபத்தில் நான் மதியம் ஆஜரானேன். அன்று விடுமுறை நாள். அதனால் கூட்டம் எக்கச் சக்கம். இந்தக் கூட்டத்தில் எப்படி நான் உள்ளே போக முடியும் என்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே அந்த வாடிக்கையாளர் என்னை முகப்பிலேயே அடையாளம் கண்டு கொண்டார். என்னை மட மடவென்று உள்ளே கூட்டிக்கொண்டு போய் முதல் வரிசையில் பத்து பதினைந்து பேரில் என்னை அமர்த்தினார். என் மனைவி பெண்கள் வரிசையில் அமர்ந்து கொண்டாள். “பாபா கிண்டியில் ஒரு நிகழ்ச்சிக்கு முதலில் செல்கிறார். அது முடிந்து இங்கே வருவார். இங்கே பஜனை நடந்து கொண்டிருக்கும். அமர்ந்து ரசித்துக் கொண்டிருங்கள். எனக்கு இன்னும் பலரை சந்திக்க வேண்டியிருப்பதால் என்னைத் தேட வேண்டாம். நானே பின்னர் உங்களை சந்திக்கிறேன்,” என்று கூறி விடை பெற்றுக் கொண்டார்.

சிறிது நேரத்திலெல்லாம் பஜனை தொடங்கி விட்டது. பஜனைக் குழுவின் பாடகர்கள், இசைக் கருவிகளை இசைப்பவர்கள் என்று ஒரு சிறிய கூட்டம் எனது வலது பக்கத்தில் அமர்ந்து கொண்டிருந்தது. மண்டபத்தில் ஆயிரத்துக்கும் மேலான பக்தர்கள் அமர்ந்திருந்தனர். பஜனை தொடங்கியவுடன் மண்டபத்தில் எல்லோரும் அமைதியாயினர்.

ஒரு தியான ஸ்லோகத்தோடு பஜனையை கணீரெனத் தொடங்கிய ஒரு பெண்மணி ‘கஜவதனா கஜானனா’ என்ற பாடலை உச்சஸ்தாயியில் பாட ஓரு நிமிடம் நான் ஸ்தம்பித்து  நிமிர்ந்து உட்கார்ந்தேன். அப்படியொரு இனிமையான, சுண்டி இழுக்கக்கூடிய ஒரு குரலை முதன் முதலாக நேராகக் கேட்ட பொழுது எனக்கு மயிர் சிலிர்த்தது. என்னை அறியாமல் என் கண்களில் நீர் முட்டியது. தொடர்ந்து பல பஜனைப் பாடல்கள். நான் கண்களை மூடி பாடல்களைக் கேட்கத் தொடங்கினேன். ஒவ்வொரு பாடலுக்கு என் கண்களிலிருந்து கண்ணீர் முட்டிக்கொண்டு கொட்டத் தொடங்கியது.

இடையில் மேடையிலிருந்து ஒரு அறிவிப்பு. பாபா அவர்கள் கிண்டி நிகழ்ச்சிக்கு வந்து சேர்ந்து விட்டார். அது முடிந்ததும் நேரே ஆபட்ஸ்பரிக்குத் தான் வரப் போகிறார். அது வரை பஜனைகள் தொடரும் என்று.

பஜனை தொடர்ந்தது. முதன் முறையாக பஜனைப் பாட்டுகளில் என்னை இழந்தேன். சிறு வயதில் எங்கள் தெருவிலிருந்த பஜனை மடத்தில் மார்கழி மாத பஜனைக்கு விளையாட்டாக சென்று வந்திருக்கிறேன். திரு முருகதாஸ் அவர்களின் பஜனை கேட்டிருக்கிறேன். டீ.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பக்திப் பாடல்களை விரும்பிக் கேட்டிருக்கிறேன். அவை எதிலிலுமே இல்லாத ஒரு ஈர்ப்பு, ஈடுபாடு அன்று நான் கேட்ட பாபா பஜனையில் இருந்தது. என்னவென்று குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. ஆனால், தொடர்ந்து ஒன்றரை மணி நேரத்துக்கு பஜனை நடந்து கொண்டிருந்தது. நேரம் கடந்து கொண்டிருப்பதை நான் கவனிக்கவில்லை. என் கவனம் முழுவதும் பாட்டிலிலேயே இருந்தது. தொடர்ந்து நான் உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தேன். கண்களிலிருந்து நீர் என்னால் அடக்க முடியாமல் கொட்டிக் கொண்டிருந்தது. பாபாவைப் பற்றியெல்லாம் கூட நான் யோசிக்கவில்லை.

மீண்டும் ஒரு அறிவிப்பு. பாபா அவர்கள் அன்றைக்கு ஆபட்ஸ்பரி வருவது ரத்தாகிவிட்டது. கிண்டியிலேயே அதிக தாமதமாகி விட்டதால் அவரால் வர இயலவில்லை என்று.
பஜனையும் அடுத்த ஒன்றிரண்டு பாடல்களுடன் நிறைவு செய்யப்பட்டது. ஆயிரத்துக்கும் மேலாக கூடியிருந்த அந்தக் கூட்டம் எந்த அமளியுமில்லாமல் அமைதியாக வெளியேறியது. யாருக்கேனும் பாபா வரவில்லையே என்ற ஏமாற்றம் இருந்திருந்தால் கூட அதை யாரும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

வெகு நேரத்திற்குப் பிறகு கண்களைத் திறந்து நானும் அமைதியாக வெளியேறினேன். என் நண்பரைக் கூடத் தேடவில்லை. மனைவியிடமும் அதிகமாக பேசவில்லை. மனதில் ஏதோ இனம் புரியாத ஒரு உணர்ச்சி. சோகம் என்றும் சொல்லலாம். பஜனைப் பாடல்களோடு பாடல்களாக உள்ளுக்குள்ளே அழுதிருக்கிறேன். ஏன் என்று எனக்குப் புரியவில்லை. பாபா வரவில்லையே என்ற ஏமாற்றமோ வருத்தமோ எனக்கு ஏற்படவில்லை.

அதற்குப் பிறகு பல ஞாயிற்றுக் கிழமைகளில் ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்த பாபாவின் சுந்தரம் கோவிலுக்குப் போய் கூட்டத்தோடு கூட்டமாக பஜனையைக் கேட்டு வருவேன். சரியான நேரத்துக்கு துவக்குவார்கள். சரியான நேரத்துக்கு முடித்து விடுவார்கள்.

ஆனால், 1980-ல் வட இந்தியாவுக்கு மாற்றலாகிப் போன பின்பு பாபா இயக்கத்துடன் எனக்கு ஏற்பட்ட ஒரு பிணைப்பு அறுந்து விட்டது. ஆனால், பாபா பஜனையில் எனக்கு ஏற்பட்ட உணர்வு பூர்வமான அனுபவம் பின்பு ஸ்ரீஅம்மா பகவான் இயக்கத்தில் மீண்டும் கிடைத்தது. அப்பொழுதுதான் ஒரு தெய்வீக சக்தியுடன் எனக்கு ஒரு பிணைப்பு இருப்பதை முதன் முதலில் உணர்ந்து கொண்டேன்.

            
             அதைப் பற்றி அடுத்த பகுதியில் எழுதுகிறேன்…