Total Pageviews

Thursday, August 21, 2014

பருத்தியின் கதை

பருத்தியின் கதை

முன்னுரை

இலை, தழைகளை உடம்பில் சுற்றிக்கொண்டு, காய், கனிகளை பச்சையாக உண்டு காடுகளில் சுற்றித்திரிந்து வந்த மனித குலத்தை இன்றைய நாகரீகத்துக்கு எடுத்து வந்ததில் பருத்தி ஆடைக்கு மிகப்பெரிய பங்குண்டு. பருத்திச் செடிகளிலில் உண்டாகும் விதைகளின் மேற்பாகத்தில் பாதுகாப்பாக மூடியிருக்கும் ஒரு கூட்டில் வளர்ந்திருக்கும் மென்மையான மயிர்கொத்து போன்ற, செல்லுலோஸால் ஆன ஒரு இழைதான் பருத்தி. இயற்கையாகவே இந்த கூடுகள் காற்றில் பறந்தும், மற்றும் பல வழிகளிலும் தன் விதைகளை பரப்பச்செய்யக்கூடிய தன்மையுடையவை. விதவிதமான பருத்திப் பயிர்கள் மிக அதிக அளவில் மெக்சிகோவிலும், ஆஸ்திரேலியாவிலும் மற்றும் ஆஃப்ரிக்காவிலும் காணப்படுகின்றன.

இயற்கையாக கிடைக்கும் இழைகளில் பருத்தி மிக முக்கியமானது. 25 கோடி மக்களின் வயிற்றுப் பிழைப்பை பருத்தித் தொழில் காப்பாற்றி வருகிறது. இன்று உலகம் முழுவதும் 25 மில்லியன் டன் அளவுக்கு (110 மில்லியன் மூட்டைகள்) பருத்தி ஆண்டுதோறும் உற்பத்தியாகிறது. உலகிலேயே மிக அதிகமாக பருத்தியை ஏற்றுமதி செய்யும் நாடு அமெரிக்கா. சைனா தன் உற்பத்தியை உள்நாட்டிலேயே பயன்படுத்திக்கொள்கிறது. ஒரு பருத்தி மூட்டை என்பது 17 கன அடி அளவும் 500 பௌண்ட் எடையும் கொண்டது.

பருத்தியின் சரித்திரம்

எப்பொழுதிலிருந்து பருத்தி பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது என்பது சரியாகத் தெரியவில்லை. மெக்ஸிகோ நாட்டிலுள்ள சில குகைகளை ஆராய்ச்சி செய்யும்பொழுது 7000 ஆண்டுகள் பழமையான, பருத்தியால் செய்யப்பட்ட பொருட்களையும் பருத்தித் துணிகளின் துண்டுகளையும் கண்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் பகுதியில் சிந்து சமவெளி பள்ளத்தாக்கில் சுமார் 3000 ஆண்டுகளூக்கு முன்பேயே பருத்தி உற்பத்தி செய்ததற்கும், பருத்தியிலிருந்து நூலெடுத்து ஆடைகளாகத் தயாரிக்கப்பட்டிருந்ததற்கும் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. அதே காலங்களில் எகிப்து நாட்டில் நைல் பள்ளத்தாக்கில்  பருத்தி ஆடைகள் அணிந்திருந்திருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகளும் கிடைத்திருக்கின்றன. அரபுநாட்டு வியாபாரிகள் பருத்தியை ஐரோப்பாவுக்கு கி.பி 800-களில் எடுத்துச்சென்று விற்றிருக்கிறார்கள். 1492-ல் அமெரிக்காவுக்கு வந்த கொலம்பஸ் பஹாமா தீவுகளில் பருத்தி விளைந்திருப்பதைக் கண்டிருக்கிறார். சுமார் கி.பி 1500-ல் உலகம் முழுவதும் பருத்தியை ஆடைகளுக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். அமெரிக்காவில் 1556-ல் ஃப்ளோரிடாவிலும், 1607-ல் விர்ஜீனியாவிலும் பருத்தியை பயிரிடத் தொடங்கியிருக்கிறார்கள். 1730-ல்  முதன் முதலாக இங்கிலாந்தில் பருத்தியை இயந்திரங்களின் உதவியால்  நூற்றிருக்கிறார்கள்.

1793-ல் அமெரிக்காவில் மஸாச்சுஸெட்ஸ் என்ற இடத்தில் வசித்துவந்த எலி விட்னி என்பவர் பருத்தியை பிரித்தெடுக்கும் ஜின்னிங் இயந்திரத்தை கண்டுபிடித்திருக்கிறார். ஜின்னிங் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பருத்தி உற்பத்தி மிக அதிக அளவில் வளர்ந்தது. பத்து வருடங்களில் அமெரிக்காவின் பருத்தி உற்பத்தி 150000 டாலர் மதிப்பிலிருந்து 8 மில்லியன் டாலர் அளவுக்கு வளர்ந்தது.

பருத்தியின் பயன்கள்

பருத்தியிலிருந்து நெய்யப்பட்ட துணிகளை நாம் பல விதங்களில் சொந்த உபயோகத்திற்கும் தொழிற்சாலைகளின் உயயோகத்திற்கும் பயன்படுத்துகிறோம்.  துணிமணிகள் உற்பத்தியைத் தவிர மீன் வலை, காஃபி வடிகட்டிகள், கூடாரங்கள், வெடிமருந்துகள், காகிதம் போன்ற மற்ற பல தொழில்களிலும் பருத்தி பயன்படுகிறது.

பருத்திப் பயிரின் எல்லா பாகங்களும் ஏதோ ஒரு விதத்தில் பயனுள்ளதாக இருக்கின்றன. முக்கியமாக, பருத்திக் கொட்டையின் நுனியில் வளர்ந்திருக்கும் குறுகிய நீளமேயுள்ள இழைகள் (லின்டுகள்) பிளாஸ்டிக் தயாரிப்பிலும், வெடிமருந்துகள் தயாரிப்பிலும் தேவையான செல்லுலோஸை கொடுக்கிறது. இந்த இழைகள் உயர் ரக காகிதம் தயாரிப்பிலும், மெத்தை, படுக்கை வகைகளிலும் பயன்படுகிறது.

பருத்திக்கொட்டையை பிழிந்தெடுத்து எண்ணெய், மாட்டுத்தீவனம், மீன்களுக்கான உணவு, உமி போன்றவற்றை தயாரிக்கிறார்கள். பருத்திச் செடியின் தண்டு, இலை போன்றவை உரமாகவும் பயன்படுகின்றன.

பருத்திப் பயிருக்குத் தேவையான பருவ நிலை

பருத்திப் பயிருக்கு நீண்டகால, பனியில்லாத, வறண்ட பருவநிலையும், அதிக அளவு சூரிய வெளிச்சமும், சுமாரான மழை நீரும் தேவைப்படுகிறது. விளைவிக்கும் மண் கனமானதாக இருக்க வேண்டும். பொதுவாக வறண்ட, பூமியின் வடக்கிலும் தெற்கிலும் உள்ள வெட்பமண்டலப் பகுதிகள் பருத்தி விளைச்சலுக்கு உகந்தவை. தற்போது மழை குறைவான பகுதிகளில்கூட நீர்ப்பாசன வசதி மூலமாக பருத்தியை உற்பத்தி செய்கிறார்கள். பொதுவாக உப்பையும், வறண்ட பருவநிலைகளையும் பருத்தி தாங்கிக்கொள்வதால், உலர்ந்த, வறண்ட பகுதிகளில் பருத்தி உற்பத்தி செய்வது வழக்கமாகியிருக்கிறது.

பருத்தியை மிக அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகள்: சைனா, இந்தியா, வட அமெரிக்கா, பாகிஸ்தான், பிரேசில். பிற நாடுகள் உஜ்பெகிஸ்தான், ஆஸ்திரேலியா, துருக்கி. மற்றும் துருக்மெனிஸ்தான்.

ஜின்னிங் இயந்திரத்தின் கதை:

பருத்தி தொழிலின் வளர்ச்சியில் ஜின்னிங் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு முக்கியமான கட்டம். பருத்திப் பயிரின் அறுவடைக்குப் பிறகு பருத்தியையும் பருத்திக்கொட்டையையும் பிரிப்பதற்கு இந்த இயந்திரம் உதவுகிறது.  14-ஆம் தேதி மார்ச், 1794-ல் அமெரிக்கத் தொழிற்ப்புரட்சி காலங்களில் எலி விட்னி என்பவர் இதைக் கண்டுபிடித்தார். இந்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டபின் வட அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில் பருத்தித் தொழில் மிக வேகமாக வளர்ந்தது என்றாலும் பருத்தியைப் பொறுக்குவதற்கு மிக அதிகமாக கூலியாட்கள் தேவைப்பட்டதால் அடிமைத் தொழில் தழைப்பதற்கும் காரணமாகியது.  ஜின்னிங் இயந்திரம் பருத்தியின் சரித்திரத்தை மாற்றியமைத்தாலும் அதைக் கண்டுபிடித்த  விட்னி அவரின் கண்டுபிடிப்பால் மிகப் பெரிய லாபம் எதையும் அடையவில்லை. பிற்பாடு ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களால் ஜின்னிங் இயந்திரத்தின் வடிவமும் பயன்பாடும் பல விதங்களில் மாறிவிட்டது. பருத்தியையும் கொட்டையையும் பிரிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த இயந்திரம் பருத்திப் பஞ்சை சுத்தம் செய்வதற்கும் அதைப் பொதிகளாகக் கட்டுவதற்கும்கூட தற்பொழுது பயன்படுகிறது.

பருத்திக்கொட்டை:

பருத்திப் பயிரை ஜின்னிங் இயந்திரத்தைக்கொண்டு அறுவடை செய்யும்பொழுது பருத்திப் பஞ்சை விட பருத்திக்கொட்டை மிக அதிகமாக கிடைக்கிறது. 480 பௌண்டு எடையுள்ள ஒரு பொதியை தயாரிக்கும்பொழுது, சுமார் 700 பௌவுண்ட் எடையுள்ள  பருத்திக்கொட்டை கிடைக்கிறது. 1980-களில்தான் பருத்திக்கொட்டை மிருகங்களுக்கு ஒரு நல்ல தீவனமாகக் கண்டறியப்பட்டது. கொட்டையின் விதையில் புரத சத்தும், அதன் மேல்தோலில் காணப்படும் மெல்லிய முடிபோல இருக்கும் நூலில் ஃபைபர் சத்துக்கான செல்லுலோஸும் கிடைக்கிறது.
பால் உற்பத்தியாளர்கள் பருத்திக்கொட்டையை சத்துள்ள ஒரு மாட்டுத்தீவனமாக பயன்படுத்துகிறார்கள். கொழுப்புச்சத்து மிகுந்த பால் உற்பத்தியும் அதிகமாகிறது.  பருத்திக் கொட்டையை தீவனமாக அப்படியே மற்ற தீவனங்களோடு சேர்த்துக் கொடுத்துவிடலாம்.

பருத்தித் தொழிலின் வளர்ச்சி

18-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நடந்த தொழிற்புரட்சியின் போது, பருத்தி ஏற்றுமதிக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. 1738-ல் இங்கிலாந்தில் பர்மிங்காமைச் சேர்ந்த லூயிஸ் பால் மற்றும் ஜான் வயட் என்ற இருவரும் ஒரு உருளை நூற்பு இயந்திரத்திற்கு காப்புரிமை பட்டயம் பெற்றனர். எலி விட்னி 1793-ல் ஜின்னிங் இயந்திரத்தைக் கண்டுபிடித்த பின்பு பருத்தித் தொழில் மேலும் முன்னேற்றம் கண்டது. இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் நகரம் பருத்தி தொழிலுக்கு மிகப் பிரபலமானது.  லன்காஷேர் நகரம் துணிகள் உற்பத்திக்கு மிகப் பிரபலமானது. இங்கிலாந்தின் கப்பல்கள் மூலமாக அவர்கள் காலனியாட்சியில் இருந்த இந்தியா, மேற்கு ஆப்பிரிக்கா, சைனா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. 1840-வாக்கில் இந்தியாவால், தொழில்மயமாக்கப்பட்ட இங்கிலாந்திற்குத் தேவையான பருத்தியை ஏற்றுமதி செய்யமுடியவில்லை. அமெரிக்காவில் விளைந்த உயர்ரகப் பருத்தியின் போட்டியும் இருந்ததால் இங்கிலாந்தின் வியாபாரிகள் அமெரிக்காவிலும் கரீபியன் தீவுகளிலும் பருத்தித் தோட்டங்களிலிருந்து பருத்தியை நேரடியாக வாங்கத் தொடங்கினர்.

அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது, அமெரிக்காவின் தென் மானிலங்கள் தங்களை அங்கீகரிக்க இங்கிலாந்தை நிர்பந்தப்படுத்துவதற்காக பருத்தி ஏற்றுமதியை தடை செய்தனர். அதனால் இங்கிலாந்தும் ஃப்ரான்ஸும் எகிப்தின் பருத்தியை வாங்கத்தொடங்கினர். மிகப்பெரிய அளவில் முதலீடும் செய்தனர். ஆனால், அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் முடிந்த பிறகு இங்கிலாந்து, ஃப்ரான்சு நாட்டு வியாபாரிகள் எகிப்தின் பருத்தியை கைவிட்டுவிட்டு மீண்டும் விலை குறைவான அமெரிக்க பருத்திக்கு மாறினர். இதனால், 1865-ல் எகிப்து அரசு திவாலானது.

அதே நேரத்தில், இந்தியாவில் பருத்தியின் உற்பத்தியை பன்மடங்கு உயர்த்துவதற்கான ஏற்பாடுகளையும் இங்கிலாந்து செய்தது. மேலும் இந்தியாவிலேயே பருத்தி துணி தயாரிப்பதை தடை செய்தும் வரிகளைக் கூட்டியும் இந்தியா அதிக அளவில் துணி உற்பத்தி செய்யமுடியாத ஒரு நிலையைத் தோற்றுவித்தது.  இந்தியாவிலிருந்து இழைகளை இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்று லன்காஷயரில் துணியாக்கி மீண்டும் இந்தியாவுக்கே அதிக லாபத்தில் விற்றது. இதை மஹாத்மா காந்தி கடுமையாக எதிர்த்துப் போராடினார்.

அமெரிக்காவிலோ, தென்மானிலங்களில் அடிமைகளை வேலைவாங்கி உற்பத்தி செய்த பருத்தி வட மானிலங்களில் இருந்த வியாபாரிகளை கொழுத்த பணக்காரர்களாக்கியது. 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இயந்திரமயமாக்குதலால் பருத்தித் தொழிலில் வேலைவாய்ப்புக்கள் வேகமாக வீழ்ந்தன. இன்றும் அமெரிக்காவின் தென் மானிலங்கள் உலகளவில் மிகப் பெரிய ஏற்றுமதி மையங்களாக இருக்கின்றன. உலகளவில் அமெரிக்காவின் நீள வகையான பருத்திதான் விற்பனையில் முன்னணியில் நிற்கிறது.

பூச்சிக்கொல்லி:

உலகிலேயே மிக அதிகமாக, பூச்சிகளுக்கு அடிமையாகும் பயிர்களில் பருத்தியும் ஒன்று. ஏழை நாடுகளில், விவரம் அறியாமல் மிக அதிகமாக பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதின் எதிர் விளைவுகளில் ஒன்று: பல இடங்களில் உணவுப்பொருட்கள் மீதும் இந்த மருந்துகள் அடிக்கப்பட்டு அதை உட்கொண்டவர்கள் துர்மரணம் எய்தது முக்கியமானது. இதைத் தவிர குழந்தை பிறப்பிலே ஏற்படும் பல கோளாறுகளும் விஷம் கலந்த உணவு உண்பதால் ஏற்படும் பிற தீவிர விளைவுகளும் அடங்கும். பருத்திக்கு இயற்கை உரங்களையும் பயன்படுத்தலாம்தான். ஆனால், பயிரடப்படும் நிலம் குறைந்தது மூன்று வருடங்களுக்கு எந்தவிதமான ரசாயனப் பொருட்களும் பயன்படுத்தாத இடமாக இருக்க வேண்டும். இந்த மூன்று வருடங்களில் உற்பத்தி 50 சதவிகிதமாவது குறைந்துவிடும். மேலும் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விளையும் பருத்திக்கு கிடைக்கும் 20 சதவிகித உயர் விலையும் கிடைக்காது.

பி.டி.பருத்தி:

பருத்திச் செடியை பல பூச்சிகள் எளிதாகத் தாக்க முடிவதால் பொதுவாக பூச்சிக்கொல்லிகள், செயற்கை உரங்கள், களைக்கொல்லிகளை மிக அதிகமாக பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைத் வெகுவாகத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது (மரபணு மாற்றப்பட்ட) ஜி.எம் பருத்தி என்று கூறுகிறார்கள். மரபணு ‘கோடிங்’ முறையில் இயற்கையாகவே தன் திசுக்களில் பூச்சிக்கொல்லியை உற்பத்தி செய்துகொள்ளும் தன்மை பி.டி.பருத்திக்கு உண்டு. இதனால், பெரும்பாலான பகுதிகளில் பருத்தியைத் தாக்கும் ஆர்லேபிடொப்டெரான் என்ற பூச்சி கொல்லப்படுகிறது. இருந்தும், சில பூச்சிகளுக்கு இன்னும் மருந்து பயன்படுத்தவேண்டியிருக்கிறது.

இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியின் உற்பத்தி 2002-ல் 50000 ஹெக்டேராக இருந்தது. 2011-ல் 10.6 மில்லியன் ஹெக்டேராக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் பருத்தி 12.1 மில்லியன் ஹெக்டேரில் வளர்க்கப்படுகிறது (2011) இதனால் மிக அதிகமான  நிலப்பரப்பில் ஜி.எம்.பருத்தி உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது.   இதனால் பருத்தி விளைவிக்கும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம், லாபம், உற்பத்தி எல்லாமே உயர்ந்திருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. 
பருத்தித் தொழிலுக்குப் போட்டி:
1890-களில் ரேயான் இழையை உருவாக்கும் முறை ஃப்ரான்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இயற்கையாகக் கிடைக்கும் செல்லுலோஸிலிருந்து ரேயான் எடுக்கப்படுகிறது. ரேயான் செயற்கை இழையல்ல. ஆனால், இதை தயாரிக்க ஒரு விரிவான செயல்முறை தேவைப்படுகிறது. ரேயான் இழையைத் தொடர்ந்து செயற்கையாக ரசாயனப் பொருட்களிலிருந்து இழை தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 1924-ல் அசிடேட் இழை அறிமுகப்படுத்தப்பட்டது. 1936-ல் டியூபோன்ட்  என்ற அமெரிக்க நிறுவனம் பெட்ரோலிய ரசாயனப் பொருட்களிலிருந்து நைலான் இழையைத் தயாரிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது. 1944-ல் அக்ரைலிக் இழையையும் அறிமுகப்படுத்தியது.  1950-களில் பாலியெஸ்டரும் அறிமுகப்படுத்தப்பட்டபோது பருத்தி ஆடைகளுக்கு கடுமையான போட்டி ஏற்ப்பட்டது.   1960-களுக்குப் பிறகு பாலியெஸ்டரின் பயன்பாடு மிகப் பரவலாகி பருத்தி ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு மிகப் பெரும் சவாலாக இருந்தது. நிகாராகுவா போன்ற மத்திய அமெரிக்க நாடுகள் மிகப் பெரிய பொருளாதார சிக்கலில் மூழ்கின. பருத்தி உற்பத்தியில் முதலீடு செய்தவர்களைக் காப்பாற்றும் பொருட்டும், பருத்தி பயன்பாட்டை மேம்படுத்தும் பொருட்டும் பருத்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு திட்டம் அமெரிக்காவில் பருத்தி உற்பத்தியாளர்களால் துவங்கப்பட்டது.  இந்த முயற்சியால் அமெரிக்கா உயர்ரக பருத்தி இழை உற்பத்தியில் இன்றும் முன்னணியில் நிற்கிறது. 

உலகச் சந்தையில் இன்று பருத்தி:

பருத்தி வியாபாரம் ஊடகச் சந்தையில் ஒரு முக்கியமான வியாபாரப் பொருள்.  உலகளவில் பருத்தி ஒரு முக்கியமான விளைபொருளாக இருந்தும். வளரும் நாடுகளிலுள்ள பருத்தி உற்பத்தியாளர்களுக்கு தகுந்த விலை கிடைப்பதில்லை, மற்ற வளர்ந்த நாடுகளுடன் போட்டியும் போடமுடிவதில்லை என்ற குறை பரவலாக இருக்கிறது. இதனால் அமெரிக்காவுக்கும் மற்ற பல நாடுகளுக்கும் பன்னாட்டு விவாதம் அடிக்கடி ஏற்ப்படுகிறது. இதில் முக்கியமானது அமெரிக்காவுக்கும் பிரேசிலுக்கும் இடையே ஏற்பட்ட விவாதம்,  

2002 செப்டம்பர் 27 அன்று, அமெரிக்கா அதன் பருத்தி உற்பத்தியாளர்களுக்கு கொடுக்கும் மானியங்களையும், சலுகைககளையும் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று பிரேசில்  நாடு உலக வர்த்தக நிறுவனத்திடம் (WTO)  முறையிட்டது.  2004, செப்டம்பர் 8 அன்று, அமெரிக்கா தன்னுடைய சலுகைகளை பின்வாங்கிக்கொள்ள வேண்டும் என்று இந்தப் பிரச்சினையை பரிசீலித்த குழு தீர்மானித்தது. அதே நேரத்தில்,  அமெரிக்காவின் வியாபார உத்திகளை கண்டித்த பெனின், புர்கினா ஃபாசோ, சட், மாலி என்ற நான்கு மிகப் பின்தங்கிய நாடுகள் 2003-ல் நடந்த உலக வர்த்தக பேச்சுவார்த்தைகளில் பருத்தி உற்பத்தியை பாதுகாக்கும் ஒரு முனைப்பை அறிமுகப்படுத்தினர்.

பல வளரும் நாடுகளில் பருத்தியை கைகளாலேயே பறிக்கும் முறை தொடர்ந்து வருகிறது.  அதனால், பருத்தி உற்பத்தியில் சிறார்களைப் பயன்படுத்துவது பற்றியும், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளைப் பற்றியும் சில வளரும், பின் தங்கிய நாடுகளை மற்ற நாடுகள் குறை கூறுகின்றன.  இதில் முக்கியமானது உஜ்பெகிஸ்தான் பற்றிய ஒரு குற்றச்சாட்டு. உஜ்பெகிஸ்தான் மிக அதிக அளவில் பருத்தி ஏற்றுமதி செய்யும் ஒரு நாடு. இங்கு பருத்தி சேகரிப்பதற்காக பெரியவர்கள் சிறியவர்கள் என்று பாகுபாடில்லாமல் பலரையும் அதிபர் இஸ்லாம் கரிமோவ் அரசு பலவந்தமாக ஈடுபடுத்தி வருவதாகவும், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தும் பள்ளி ஆசிரியர்களையும், மாணவர்களையும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களையும் இப்படி பத்து லட்சத்துக்கும் மேலான மக்களை பருத்திக் காடுகளில் குறிப்பிட்ட அளவு இலக்கை எட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவதாகவும், உலக நாடுகள் குற்றம் சாட்டுக்கின்றனர். மேலும் பருத்தி ஏற்றுமதியால் கிடைக்கும் லாபத்தை அரசே பயன்படுத்திக்கொள்வதாகவும் மக்களுக்காக அது எதையும் செய்வதில்லை என்றும் குற்றச்சாட்டு. இந்தப் போக்கை எதிர்த்து ஒரு பெரிய கையெழுத்து வேட்டையே உலகளவில் நடந்து கொண்டிருக்கிறது.
பருத்திப் பயிர் பொதுவாக உப்பை ஏற்றுக்கொள்வதால், நீர்ப்பாசன முறைகளில் பல முறைகேடுகள் நடப்பதாகவும் அதனால் உஜ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் பாலைவனப் பகுதிகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது..

பருத்தி விதைப்பது, அறுவடை, நூற்பு
பொதுவாக நான்கு வகையான பருத்திச் செடிகள் உண்டு:

1.    மத்திய அமெரிக்கா, கரீபியன் மற்றும் தெற்கு ஃப்ளோரிடா (அமெரிக்கா)வில்   காணப்படும் மேல் நிலத்தில் வளரும் பருத்தி..உலக உற்பத்தியில் இது 90    சதவிகிதம்.)
2.    கூடுதலான நீளமுள்ள இழைகள் கொண்ட பருத்தி. வெட்பமண்டல பகுதிகளான தென் அமெரிக்காவில் காணப்படுகிறது (உலக உற்பத்தியில் 8 சதவிகிதம்)
3.    மரமாக வளரும் பருத்திச் செடிகள் இந்தியாவிலும் பாக்கிஸ்தானிலும் காணப்படுகிறது (2 சதவிகிதத்திற்கும் குறைவு)
4.    தெற்கு ஆப்பிரிக்காவிலும் அரபு நாடுகளிலும் காணப்படும் ஒரு வகை பருத்தி ((2 சதவிகிதத்திற்கும் குறைவு)

பழைய பருத்தி வகைகள் 1900-க்கு முன்பு அதிகமாக பயன்படுத்தப்பட்டன. வெள்ளை, காவி, ஊதா, மற்றும் பச்சை நிறங்களில் பொதுவாக பருத்தி தோன்றினாலும் மரபியல் மாறுதல்களால் வெள்ளைப் பருத்தி பாதிக்கப்படலாம் என்ற பயத்தினால் பருத்தி பயிரிடும் இடங்களை பிரித்து வைக்கிறார்கள்.  

விதைப் பஞ்சை சரியாகப் பாதுகாக்க வேண்டும். மழை காலங்களில் ஈரப்பசை அதிகமானால் பஞ்சின் தரம் குறையும், நிறம் மாறும், அழுகவும் செய்யும். காற்று அதிகமானால் விதைப் பிரிவுகளிலிருந்து பஞ்சை விரியவைக்கும்.  விரிந்த பஞ்சிலிருந்து குறைவான லின்ட்டும், விதைகளுமே கிடைக்கும்.

மரபு வழியாக பயிரிடுபவர்கள், பருத்தி அறுவடையான பின்பு செடியின் தண்டை வெட்டியெடுத்து துண்டு துண்டாக்கிவிடுவார்கள். நிலத்துக்கு அடியிலிருக்கும் பகுதிகளை புரட்டியெடுத்துவிடுவார்கள். சில இடங்களில் தண்டை அப்படியே விட்டுவிடுவார்கள். கோடைகாலத்துக்கு முன்புள்ள இளவேனிற்காலத்தில் பல முறைகளில் பயிரிடுவார்கள். உழுதும், உழாமலும் விதைக்கக்கூடிய முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. பயிரிட்ட இரண்டு மாதங்களில் பருத்திச் செடிகளில் பூப்பூக்கத் தொடங்குகிறது. இன்னும் மூன்று வாரங்களில் பூ மலரத் தொடங்குகிறது. இதழ்கள் வெள்ளை நிறத்திலிருந்து மஞ்சள், பின்பு ஊதா, இறுதியில் கருஞ்சிவப்பு நிறத்துக்கு மாறுகிறது. இன்னும் மூன்று நாட்களுக்குப் பிறகு இந்தப் பூக்கள் கருகி கீழே விழத்தொடங்குகின்றன. பச்சை நிறத்தில் பருத்திக் குமிழ்கள் வெளியே தெரிகின்றன. இந்தக் குமிழுக்குள்ளே ஈரப்பசையோடு கூடிய பஞ்சு வளரத்தொடங்கி வெளியே தெரிகின்றன. இந்தக் குமிழ்கள் பழுக்கத் தொடங்கிய பிறகு, காவி நிறத்துக்கு மாறுகிறது. சூரிய வெளிச்சத்தில் இந்த பஞ்சு இன்னும் விரிந்துகொடுத்து விதைப் பஞ்சு முழுவதுமாக வெடித்து பஞ்சு வெளியே வருகிறது. வளர்ந்த நாடுகளில் இயந்திரங்களின் மூலமாக அறுவடை செய்கின்றனர். அறுவடை செய்யப்பட்ட பருத்தி ஜின்னிங் இயந்திரம் மூலம் பருத்திப் பஞ்சாகவும், கொட்டையாகவும் தனித்தனியே பிரித்தெடுக்கப்பட்டு வெவ்வேரு செயல்முறைகள் மூலம்  நூலாகவோ, துணியாகவோ, தீவனமாகவோ, எண்ணெயாகவோ மாற்றப்படுகிறது.

முடிவுரை

பருத்தி சம்பந்தப்பட்ட தொழில் இன்றைய உலகில் முன்னணியில்  நிற்கும் ஒரு தொழிலாக விளங்கி வருகிறது. கோடிக்கணக்கான ஆட்களுக்கு வேலை வாய்ப்புகளை கொடுத்திருக்கிறது அமெரிக்காவில் மட்டுமே 120 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள (ஒரு பில்லியன் என்பது இந்திய ரூபாய்க்கு 6000 கோடி) பருத்தி வியாபாரம் நடந்திருக்கிறது.

பருத்தியின் உற்பத்தியை பெருக்குவதற்கும், பருத்தியின் நலத்தை பாதுகாக்கவும், பருத்தி உற்பத்தி செய்யும் மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தரமான பருத்தியை எல்லா இடங்களுக்கும் கொண்டுபோய் சேர்ப்பதற்கும் ஆராய்ச்சிகள் இன்னும் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன.


Tuesday, August 19, 2014

பெர்ஸனாலிடி வளர்ச்சி பற்றி: பகுதி 6C: வெற்றிப் பாதைக்கு ஏழு வகையான பெர்ஸனாலிடிகள்

மாணவர் உலகம் என்ற மாதப் பத்திரிகையில் நான் எழுதி வெளியிடப்பட்ட கட்டுரைத் தொடரின் அடுத்த பகுதி:

பகுதி 6C: வெற்றிப் பாதைக்கு ஏழு வகையான  பெர்ஸனாலிடிகள்

பெர்ஸனாலிடிகள் பல  வகைப்பட்டாலும் நமது ஆய்வுக்கு ஏழு வகையான பெர்ஸனாலிடிகளை, ஏழு படிகளாக நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதில் முதலாவதாக வரும் விவரமறிந்த, அறிவுடைய பெர்ஸனாலிடி யின் தொடர்ச்சி………………………….

குறிக்கோள்கள் வைத்துக்கொள்வதினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும், பெரும்பாலானாவர்கள் குறிக்கோள்களை ஏன் நிச்சயித்துக் கொள்வதில்லை என்பதைப் பற்றியும், குறிக்கோள்களை எப்படி நிச்சயித்துக் கொள்வது என்பதையும், நமது குறிக்கோள்கள் S.M.A.R.T குறிக்கோள்களாக இருக்க வேண்டும் என்பதையும் முந்தின இதழ்களில் பார்த்தோம். இனி……

S.M.A.R.T குறிக்கோள்கள் என்பது என்ன?

S IMPLE, S PECIFIC – சிக்கலற்றது, எளிமையானது, குறிப்பிடக்கூடியது

உதாரணத்திற்கு, நிறைய படிக்க வேண்டும் என்று மட்டும் விருப்பப்பட்டால் அது தெளிவில்லாத ஒரு இலக்கு.  ‘நிறைய’ ‘பெரிய’ என்பதையெல்லாம் வரையறுக்க முடியாதது. ஒருவருக்கு ‘நிறைய’ ‘பெரிய’ என்பது இன்னொருவருக்கு ‘குறைவாக,’ ‘சிறியதாக’ இருக்கலாம். ஐ.ஐ.டியில் படித்து ஒரு முதுநிலை இன்ஜினியர் பட்டதாரியாக வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது குறிப்பிடக்கூடியது. அதே போல,  நிறைய சம்பாதிக்க வேண்டும், ஒரு டாக்டராகவோ அல்லது வழக்கறிஞராகவோ வரலாம் என்று  நினைத்தால் அது சிக்கலானது, தெளிவில்லாதது. குறிப்பிட முடியாதது. சட்டப் படிப்பு படித்து, உயர்நீதி மன்றத்தில் ஒரு நீதிபதியாக என்னுடைய நாற்பது வயதுக்குள் உயர்ந்துவிட வேண்டும் என்று விருப்பப்பட்டால் அது தெளிவானது, வரையறுக்கக் கூடியது, எளிமையானது.

M EASURABLE – அளக்கக்கூடியது

உதாரணத்திற்கு, ஒரு பெரிய பணக்காரனாக வேண்டும் என்று நினைத்தால் அது அளக்க முடியாதது. ஒரு லட்ச ரூபாய் சேமிக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். ஆனால், ஆறு மாதத்தில் நாற்பதினாயிரம்தான் சேர்த்திருக்கிறேன். அதனால், மீதமிருக்கும் ஆறு மாதத்தில் இன்னும் கொஞ்சம் செலவைக் குறைத்து ஒரு லட்சம் ரூபாய் சேமிப்பு என்ற இலக்கை அடைந்து விடுவேன் என்று நினைத்தால் அது அளக்கக் கூடிய ஒரு இலக்காக இருக்கும்.

அதே போல, கணக்குப் பாடத்தை தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி செய்து பார்த்து அடுத்த அரை இறுதித் தேர்வில் 75 சதவிகித மத்ப்பெண்கள் வாங்குவதற்கு முயற்சி செய்வேன் என்று தீர்மானித்தால் அது அளக்கக் கூடியது.

A CHIEVABLE, A TTAINABLE  – அடையக்கூடியது,

உயரம் தாண்டும் போட்டியில் பதினெட்டடி உயரத்தை எந்தத் துணையுமில்லாமல் தாண்டும் வீரனாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டால் அது முடியாத காரியமாக இருக்கலாம். ‘கடந்த ஆண்டு நடந்த விளையாட்டு தினப் போட்டிகளில், மிக அதிகமாக ஆறு அடி உயரத்தை ஒரு மாணவன் தாண்டியிருக்கிறான். என்னால் இதுவரை ஐந்தடி உயரத்தை மட்டுமே தாண்ட முடிந்திருக்கிறது. இன்னும் முயற்சி செய்தால் கடந்த ஆண்டின் சாதனைய என்னால் முறியடிக்க முடியும். என்று நம்பினால் அது அடையக்கூடியதாக இருக்கும்.

R EASONABLE, R EALISTIC -  நியாயமானது, நிகழக்கூடியது

உதாரணத்திற்கு, இதுவரை கணக்குப் பாடத்தில் ஐம்பது மார்க்குகளைக் கூடத் தாண்டாத ஒரு மாணவன் அடுத்த தேர்வில் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது முடியக்கூடியதாக இருக்கலாம், ஆனால், அந்த மாணவனைப் பொருத்தவரை அது நியாயமானதாக இருக்காது. விரைவிலேயே அந்த மாணவனுக்கு விரக்தி ஏற்பட்டுவிடும். நாம் நிச்சயிக்கும் இலக்கு சற்று கடுமையாக முயற்சித்தால் அடையக்கூடியதாக, நியாயமானதாக, நமக்கு அறைகூறுவதாக, இருக்க வேண்டும்.

T ESTABLE AGAINST TIME, T ANGIBLE  -  நேரக்கட்டுப்பாட்டுக்குள் அடங்கக்கூடியது,  திட்பமானது, தொட்டுணரக்கூடியது

நன்றாக முயற்சி செய்து ஒரு பெரிய உத்தியோகத்தில் சேர்ந்துவிடுவேன் என்று நினைப்பது சரியான இலக்காக இருக்காது. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் பொருளியலில் முதுநிலை பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேறி, I.A.S அதிகாரியாக வருவதற்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்வதற்கான வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி பெற்று அந்த தேர்வுகளிலும் வெற்றி பெறுவேன் என்பது திட்பமானது, நேரக்கட்டுப்பாட்டுக்குள் அடங்கக்கூடியது. 

சரி, குறிக்கோளை நிச்சயித்தாகிவிட்டது. அடுத்தது என்ன?

உங்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். SWOT ஆராய்ச்சி செய்து உங்களின் வலிமைகள், பலவீனங்கள், உங்களுக்குள்ள வாய்ப்புகள், எதிர்நோக்கியிருக்கும் சவால்கள், அச்சுறுத்தல்கள் இவற்றை புரிந்து கொள்ளுங்கள். இந்த புரிந்துகொள்ளுதல் உங்கள் குறிக்கோளை நோக்கி திட்டமிடுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.  

எப்படி குறிக்கோளை அடையப் போகிறோம் என்பது பற்றி திட்டமிடுவது மிக அவசியம். குறிக்கோளை அடைவதற்கு என்னென்ன செய்யவேண்டும், என்ன தகுதிகள் தேவை, அதில் நம்மிடம் இருப்பது எது, இல்லாதது எது, மேலும் என்னென்ன தகுதிகளை சேர்த்துக்கொண்டால் வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும், நமது குறைபாடுகளை எப்படிக் களைவது அல்லது அவற்றின் விளைவுகளை எப்படிக் கட்டுப்படுத்துவது, யார் யாருடைய உதவி நமக்கு தேவைப்படும், எவ்வளவு நேரம் எடுக்கும் இப்படி பல விதமாக யோசித்துத் திட்டமிட வேண்டும்.

சரி,  குறிக்கோளை நிச்சயித்து விட்டால் மட்டும் போதுமா?

                                                                                                                                                                                                                                                                                       தொடரும்………..

Thursday, August 14, 2014

CLASSIC SINGER TENKASI 2013-14; Singing Competition in Tenkasi, Tirunelveli District, Tamil Nadu

CLASSIC SINGER TENKASI 2013-14: Singing Competition in Tenkasi, Tirunelveli District, Tamil Nadu was a pioneering effort by our L.N.Charitable Trust, Melagaram, Tenkasi and was received well.

What thought of as a small effort, received its big bang when more than 250 students of Class 6,7 and 8 from all schools within Tenkasi Education District took part in the first selection round in November, 2013. After five selection rounds, we selected 24 students to contest in the Quarter Finals held on 29th December, 2013. 16 of them moved to Semi Finals held on 4th January, 2014. Eight qualified to contest in the Finals held on Saturday, the 11th January, 2014.

The winners were:

First: Master H.Balasubramanian, Bharath Montessori Matric.Higher Secondary School, Ilanji

Second: Miss.Parameswari, S.R.M. Government Girls Higher Secondary School, Shencottai

Third: Master Harish from Bharath Montessori Matric Higher Secondary School, Ilanji.

The winner was awarded the title: CLASSIC SINGER TENKASI 2014 besides a cash prize of Rs.10000. The first and second runner-ups received cash awards of Rs.5000 and Rs.2000 respectively.

The highlight of the finals was the presence of Smt.Dr.Latha Varma, Principal, Sri Sathguru College of Music, Madurai and the internationally acclaimed carnatic music vocalists and violinists Sow. Akkarai S.Subhalakshmi and Akkarai S.Sornalatha. We thank them for their presence and support.

The remaining following five contestants received a consolation award of Rs.500 each:

Miss. Saraswathi, Manjammal Government Girls Higher Secondary School, Tenkasi

Miss. Sumathi, Siva Saraswathi Higher Secondary School, Aykudi

Miss.Vaishnavi Jeyalakshmi, S.R.M. Government Girls Hr.Sec.School, Shencottai

Miss. Jumana, St.Joseph's Matriculation Higher Secondary School, Shencottai

Miss.Harini, Bharath Montessori Matric Hr.Sec.School, Ilanji

We congratulate all the winners and their parents.

We thank all our friends, relatives, sponsors, parents, students, volunteers, judges and the media for their support to the program.

We thank Sri Lakshmana Perumal for organizing the orchestra for the quarter, semi and finals competition.

The entire program was telecast by Mayuri T.V and we thank them.

The Tenkasi-Shencottai Public Library Vasagar Vattam co-sponsored the program and we thank them for their unstinted support.

We also thank the management, teachers, staff and volunteers of Bharat Montessori Matric Hr.Sec.School for providing their auditorium and other facilities for conducting the program.

Our thanks to Sri Shajahan from Madurai 'Hello F.M.' for agreeing to be a judge for the finals. 

We thank SAKTHY audio systems for the excellent audio arrangement.

Importantly, we thank Sri Dr. Madurai K.Thiagarajan, Asst Professor, Mridangam, Sri Sathguru College of Music, Madurai and Mrs.Kanthimathi and Mr.Mohana Krishnan of Bharath Montessori Matric Hr.Sec.School for their continuous support to all our efforts.

We thank everyone else, whether their names are mentioned here or not for their support.

Watch the abridged video of the finals of the program.

https://www.youtube.com/watch?v=w2oyWu7pGlM

T N Neelakantan
www.tnneelakantan.com

Tuesday, August 12, 2014

பெர்ஸனாலிடியை வளர்த்துக்கொள்வது எப்படி? பகுதி 6 B வெற்றிப் பாதைக்கு ஏழு வகையான பெர்ஸனாலிடிகள்

மாணவ்ர் உலகம் என்ற மாதப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட என்னுடைய கட்டுரையின் தொடர்ச்சி.......................

பெர்ஸனாலிடிகளை பல விதமாக மனோதத்துவ நிபுணர்கள் வகைப்படுத்தியிருக்கிறார்கள் என்றாலும் நமது ஆய்வுக்கு ஏழு வகையான பெர்ஸனாலிடிகளை, ஏழு படிகளாக நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதில் முதலாவதாக வரும் விவரமறிந்த, அறிவுடைய பெர்ஸனாலிடி யின் தொடர்ச்சி………………………….

ஒரு நாடோடியாக இல்லாமல் ஒரு பயணியாக இருப்பதின் முக்கியத்துவத்தையும், குறிக்கோள் வைத்துக்கொள்வதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும், பெரும்பாலானாவர்கள் குறிக்கோள்களை ஏன் நிச்சயித்துக் கொள்வதில்லை என்பதைப் பற்றியும் சென்ற இதழில் பார்த்தோம். இனி……

குறிக்கோள்களை எப்படி தெரிந்து கொள்வது? எப்படி நிச்சயித்துக் கொள்வது?

ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால், மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதுதான் எல்லோருக்கும் இருக்கும் ஒரே குறிக்கோள். மகிழ்ச்சியாக இருப்பதற்காக நாம் பல விதங்களில் முயற்சி செய்கிறோம். பல காரியங்களைச் செய்கிறோம். பல பொருட்களை அடைய முயற்சிக்கிறோம்.

சுருக்கமாகச் சொல்லப் போனால், மகிழ்ச்சியடைவதற்க்காக உங்கள் மனதில் தோன்றும் ஆழ்ந்த விருப்பங்கள்தான் உங்களுடைய அடிப்படையான குறிக்கோள்கள். இந்த ஆழ்ந்த விருப்பங்கள்தான் பொதுவாக உங்களுடைய நெடுங்காலக் குறிக்கோள்களாக அமையும்.

இந்த ஆழ்ந்த விருப்பங்களை அடைவதற்கு பல படிகளைக் கடந்து போகவேண்டியிருக்கும். அந்த வெவ்வேறு படிகள் உங்களுடைய இடைக்கால குறிக்கோள்களாகவோ அல்லது குறுகிய காலக் குறிகோள்களாகவோ அமையும்.

உங்களுடைய ஆழ்ந்த விருப்பங்கள் என்ன என்று கண்டறிய வேண்டும்.
சில நிமிடங்கள் கண்ணை மூடி, உங்களை அமைதிப்படுத்திக்கொண்டு உங்களுடைய விருப்பங்கள் என்னென்ன என்பதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். நன்றாக யோசித்துப் பார்த்த பின், கண்களைத் திறந்து மட மடவென்று ஒரு காகிதத்தில் உங்கள் விருப்பங்களை பட்டியலிடுங்கள்.
இந்தப் பட்டியலை மீண்டும் மீண்டும் நன்றாக படித்துப் பாருங்கள்.

மீண்டும் கண்ணை மூடி, உங்களை அமைதிப்படுத்தி இந்தப் பட்டியலைப் பற்றி அசை போடுங்கள். விரைவில், இந்தப் பட்டியலில் நீங்கள் குறிப்பிட்ட ஆசைகளில் எது இன்றியமையாதது, எது நிச்சயமாக உங்களுக்கு மகிழ்ச்சியளிப்பது, எது முழு திருப்தியளிப்பது, எது ஆழமானது, எது தீவிரமானது என்பதைப் பற்றி அலசிப் பாருங்கள். அதுதான் உங்களுடைய நீண்டகால குறிக்கோள். அது ஒன்றாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்டதாகவோ இருக்கலாம்.

ஒரு பள்ளியில் நான் இந்த வகுப்பு  நடத்தியபோது, ஒரு மாணவி மட்டும் இருபத்தைந்து ஆசைகளை பற்றிக் குறிப்பிட்டிருந்தாள். ஆனால், தீவிரமாக ஆழ் நிலையில் ஆராய்ந்து பார்த்தபொழுது அதில் இரண்டு விருப்பங்களே அவளுடைய இதயத்திற்கு மிக மிக  நெருங்கியது என்பதைக் கண்டுபிடித்ததாகக் கூறினாள்.

அடுத்ததாக, இந்த நீண்ட கால குறிக்கோளை அடைவதற்கு என்னென்ன படிகளைத் தாண்ட வேண்டியிருக்கும் என்பதை இதே போல் ஆராய்ந்து பார்த்து இன்று என்ன செய்யவேண்டும், இந்த வாரம் என்ன செய்ய வேண்டும், இந்த மாதம் என்ன செய்ய வேண்டும், இந்த ஆண்டு என்ன செய்ய வேண்டும் என்று பல வகைகளாக சிறிய சிறிய குறிக்கோள்களாகப் பிரித்துக்கொள்ளுங்கள்.

அப்படியாக உங்களுடைய நீண்ட கால, இடைக்கால, குறுகிய காலக் குறிக்கோள்களை நிச்சயித்துக்கொள்ளுங்கள்.

உங்கள் குறிக்கோள்கள் எப்படியிருக்க வேண்டும்?

ஆங்கிலத்தில் S. M. A. R. T.  GOALS - ஆக இருக்க வேண்டும் என்பார்கள். அதாவது:
S IMPLE, S PECIFIC – சிக்கலற்றது, எளிமையானது, குறிப்பிடக்கூடியது
M EASURABLE – அளக்கக்கூடியது
A CHIEVABLE, A TTAINABLE  – அடையக்கூடியது,
R EASONABLE, R EALISTIC -  நியாயமானது, நிகழக்கூடியது
T ESTABLE AGAINST TIME, T ANGIBLE  

S.M.A.R.T  குறிக்கோள்களைப் பற்றி இன்னும் விவரமாக அடுத்த இதழில் காண்போம்.
                                                            தொடரும் ………………………………….

Thursday, August 07, 2014

பெர்ஸனாலிடியை வளர்த்துக்கொள்வது எப்படி? பகுதி 6 A வெற்றிப் பாதைக்கு ஏழு வகையான பெர்ஸனாலிடிகள்

மாணவர் உலகம் என்ற மாதப் பத்திரிகையில் நான் எழுதி வெளியிட்ட கட்டுரைத் தொடரின் அடுத்த பகுதி.

பெர்ஸனாலிடிகளை பல விதமாக மனோதத்துவ நிபுணர்கள் வகைப்படுத்தியிருக்கிறார்கள் என்றாலும் நமது ஆய்வுக்கு ஏழு வகையான பெர்ஸனாலிடிகளை, ஏழு படிகளாக நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதில் முதலாவது…….


1.விவரமறிந்த, அறிவுடைய பெர்ஸனாலிடி:

நீங்கள் ஒரு பயணியா அல்லது நாடோடியா?

நீங்கள் இப்பொழுது எங்கே இருக்கிறீர்கள்? எங்கே போகவேண்டும்? எப்படிப் போகப் போகிறீர்கள்? எந்தப் பாதை? போகுமிடத்திற்கு என்னென்ன வேண்டும்? எப்படித் தயார் செய்துகொள்ளப் போகிறீர்கள்? உங்களிடம் இருப்பது என்ன? இல்லாதது என்ன?  நீங்கள் போகுமிடம் எப்படிப்பட்ட இடம்? அபாயகரமானதா? சவால்கள் நிறைந்ததா? அங்கே போவதனால் உங்களுக்கு என்ன நன்மை தீமைகள் நடக்கக் கூடும்? போகும் பாதை கடுமையானதா? உங்களுக்கு வசதிப்படுமா?

நீங்கள் ஒரு பயணியாக இருந்தால் கண்டிப்பாக மேலே சொன்னது போன்ற கேள்விகள் உங்களூக்கு எழும். அதற்குப் பதில் தெரிந்துகொண்டு தயார் நிலையில் பயணத்தில் இறங்குவீர்கள்.

ஒரு நாடோடியாக, எந்த குறிப்பிட்ட நோக்கமும் இல்லாமல் அலைந்து திரிபவராக இருந்தால் இந்தக் கேள்விகள் உங்களுக்கு எழாது.

நமது வாழ்க்கையும் இப்படித்தான்.  நாம் ஒரு நாடோடியாக இருந்தால், எதை அடைய வேண்டுமென்று  தெரியவில்லையென்றால் அல்லது அதில் குழப்பம் இருந்தால், அல்லது இப்பொழுது எப்படியிருக்கிறோம் என்பதைப் பற்றி ஒரு பிரஞ்ஞை இல்லையென்றால் வாழ்க்கை தாறுமாறாகப் போய்கொண்டிருக்கும்.

நாம் எங்கேயிருக்கிறோம், நாம் அடைய வேண்டிய இலக்கு என்ன என்று தெரிந்திருப்பது மிகவும் அவசியம். இலக்கே இல்லாதவர்க்கு வெற்றி தோல்வி ஏது? வாழ்க்கையில் வருத்தப்படுவதற்கும் என்ன இருக்கிறது. ஆனால், பொதுவாக குறிக்கோளே இல்லாமல் காலத்தை ஓட்டுபவர்கள் இறுதியில் வருத்தப்பட்டவர்களாக முடிவார்கள். நல்ல சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டோமே என்று புலம்பிக்கொள்வார்கள். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்? குறிக்கோளே இல்லாமல் புலன்கள் செல்கிற வழியிலேயே சென்றுவிட்டு பின்பு வருத்தப்படுவானேன்?

நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஒரு குறிக்கோள் வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

குறிக்கோள் வைத்துக்கொள்வதனால் ஏற்படும் நன்மைகள்:
  • .       வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படும் 
  •    திட்டமிடுவதற்கு வசதியாக இருக்கும் 
  •   போகின்ற பாதையை ஒரு சவாலாகத்தான் எடுத்துக்கொள்வோம். கடினமானதாகக் கருத மாட்டோம்.

  • குறிக்கோளை நோக்கிச் செல்லும் பயணம் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகிறது. 
  • தேவையில்லாத கவனச் சிதைவுகளை தவிர்க்கலாம். 
  • உங்களுடைய சுய மரியாதை உயரும்  
  • குறிக்கோள்களை தொடும்பொழுது முழுமையடைந்த ஒரு உணர்வு ஏற்படும்.  
  • குறிக்கோளை அடைந்த பின்னே கிடைக்கும் மகிழ்ச்சியை வேறெதற்கும் ஒப்பிட முடியாது.

ஆனால், பெரும்பாலானாவர்கள் குறிக்கோள்களை நிச்சயித்துக் கொள்வதில்லை. ஏன்?
  1. பயம்தான் முக்கியமான காரணம். இப்பொழுது இருக்குமிடத்திலுள்ள சௌகரியங்களைத் துறக்க வேண்டியிருக்குமோ என்று பயம். தெரியாததைப் பற்றிய ஒரு பயம். எதிர்காலத்தைப் பற்றிய பயம். குறிக்கோளை அடைவதில் ஒரு வேளை தோல்விடைந்து விடுவோமோ என்று பயம். ஒரு வேளை தோற்றுவிட்டால் மானபங்கம் ஏற்படுமே என்று பயம். இப்படி பல விதமாக பயப்பட்டு குறிக்கோளை நிச்சயித்துக் கொள்வதைத் தவிர்க்கிறோம் அல்லது தள்ளிப் போடுகிறோம்.
  2. நமது குறிக்கோள் என்னவென்றே தெரியாததினால் பலர் குறிக்கோளை நிச்சயித்துக் கொள்வதில்லை. தெரியாததைப் பற்றி எப்படி நிச்சயம் செய்துகொள்வது?
  3. குறிக்கோளை எப்படி நிச்சயிப்பது என்று தெரியவில்லை. யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. இதற்கென்று யாரும் வகுப்புகளை நடத்துவதில்லை.
  4. நேரமின்மை, உற்சாகமின்மை, ஊக்கமின்மை, கடந்த காலத்தில் நேர்ந்த தோல்விகளால் ஏற்பட்ட விரக்தி
  5. மெத்தனம், சோம்பேறித்தனம், சந்தேகம்
  6. மற்றவர்களின் எதிர்மறை கருத்துக்கள்…. இப்படிப் பல காரணங்களைக் கூறலாம்.

                                                                                                                          ………………….. தொடரும்