Total Pageviews

Thursday, January 29, 2015

2014-ல் விளையாட்டுத் துறையில் இந்தியா - இரண்டாம் பகுதி

ஒரு மாற்றத்திற்காக முடிவுரையை முதலில் கொடுத்திருக்கிறேன்.
முடிவுரை

நான் ஏற்கெனவே எழுதியதுபோல், பல விளையாட்டுகளில் நான் மிக அதிக ஆர்வம் காட்டாவிட்டாலும், அவ்வப்பொழுது விளையாட்டு சம்பந்தமான எல்லா செய்திகளையும் படித்துகொண்டுதான் இருந்தேன். 2014 ஆண்டு நிறைவின் பொழுது இந்திய விளையாட்டுத் துறையைப் பற்றி இந்துப் பத்திரிகையில் வந்த சில கட்டுரைகளில் கொடுக்கப்பட்டிருந்த தகவல்கள் விளையாட்டில் நமது நாட்டின் முன்னேற்றத்தைக் கண்டு என்னை பிரமிக்க வைத்தன.  நான் என்னுடைய WHAT, IF OUR DREAMS COMETRUE! என்ற புத்தகத்தில் கற்பனை செய்தது இப்பொழுது நனவாகிக்கொண்டிருக்கிறது என்ற ஒரு மகிழ்ச்சியையும் கொடுத்தது. கண்டிப்பாக என்னுடைய WHAT, IF OUR DREAMS COME TRUE! புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். பின்னர் தெரியும் நான் எழுதியது எவ்வளவு தீர்க்க தரிசனம் என்று. என் வாழ்க்கையில் இப்படி பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

இனி மேலே படியுங்கள்………………………

2014-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு விளையாட்டுத் துறையில் வெற்றி தோல்வி இரண்டுக்கும் நடுவே திண்டாடும் ஊசற்கட்டையைப் போலத்தான் இருந்ததுஅனுபவமிக்க முதிர்ந்த வீரர்கள் மிக சிறப்பாக ஆடி முன்னேற்றம் கண்டார்கள். பல புதிய இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. பெரும்பாலான நேரம் விளையாட்டுத் துறையின் ஊழல்களைப் பற்றிய குற்றச்சாட்டிலேயே கழிந்தது. ஆசிய விளையாட்டுகளிலும், காமன்வெல்த் விளையாட்டுகளிலும் நடந்ததாகக் கூறப்பட்ட பல முறைகேடுகள் தற்காலிகமாக பின் தள்ளப்பட்டன.

கிரிக்கெட்

உலக அளவிலேயே மிக அதிகமாக பணம் கொழிக்கும் கிரிக்கெட் விளையாட்டின் ஐ.பி.எல் பற்றிய ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுற்றி   நீதிமன்ற வழக்குகள், அதைச் சுற்றி பல வதந்திகள், குற்றச்சாட்டுக்கள், நாடகங்கள், துணுக்குச் செய்திகள், ஆதாரம் இருக்கிறதா என்பதைப் பற்றிக் கவலைப்படாத சர்ச்சைகள், தலைவர் என். ஸ்ரீனிவாசனின் வெளியேற்றம், இவையே தினப்படி செய்திகளாக ஆக்கிரமித்திருந்தன.  பெட்டிங் மற்றும் ஸ்பாட் ஃபிக்சிங் ஊழல் குற்றச்சாட்டுகள் இந்திய கிரிக்கெட்டின் பெயரை அதள பாதாளத்துக்கே எடுத்துச் சென்றன. சர்ச்சை இன்னும் தீர்ந்த பாடில்லை.

எல்லாவற்றிற்கும் சிகரமாக கேப்டன் தோனி ஒரு முன்னறிவிப்புமில்லாமல் டெஸ்ட் விளையாட்டுகளிலிருந்து ஓய்வெடுப்பதாக ஒரு அணுகுண்டு செய்தி. இந்த அறிவிப்புக்குப் பின்னால் என்ன நடந்தது என்பது இன்னமும் கேள்விக்குறியாக இருக்கிறது.

நமது இந்திய கிரிக்கெட் அணி ஆண்டு துவக்கத்தில் நியூசீலாந்துடன்       மோதித் தோற்றதில் உலகத் தர வரிசையில் கீழே இறங்கியது. ஆனால் அதைத் தொடர்ந்து நடந்த ஐபிஎல் போட்டிகளில் முந்தைய தோல்விகள், சறுக்கல்கள் எல்லாம் மறந்து போயின. இருந்தும், ஒரு உயர்மட்ட குழுவின் விசாரணைக்குப் பின், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சக உரிமையாளர் ராஜ் குந்த்ரா, சென்னை சூப்பர் கிங்ஸ்சை சேர்ந்த குருநாத் மெய்யப்பன் (கிரிக்கெட் வாரியத் தலைவர் ஸ்ரீனிவாசனின் மாப்பிள்ளை) போன்ற சில பெரிய தலைகளின் பெயர்கள் குழுவின் அறிக்கையில் இடம் பெற்றபோது இந்திய கிரிக்கெட் வாரியம் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தையே தள்ளிப்போட வேண்டியது.

கிரிக்கெட்டில் ரோகித் சர்மா இலங்கைக்கு எதிராக கல்கத்தாவில் நடந்த ஒரு நாள் போட்டியில் 264 ரன்கள் எடுத்து ஒரே இன்னிங்க்ஸில் மிக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெயரைப் பெற்றார்.  1989-ல் விளையாட ஆரம்பித்த காலத்திலிருந்து இந்த ஆண்டில்தான் சச்சின் டெண்டுல்கர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இதே ஆண்டில் பல முந்தைய பிரபல வெற்றிகரமான வீரர்களின் ஆட்டங்கள் ஒரு முடிவுக்கும் வந்தது. சேவாக், டெண்டுல்கர், யுவராஜ் சிங்,ம் ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், கௌதம் கம்பீர் போன்றவர்கள் இதில் முக்கியமானவர்கள்.

பிரபலமான ஆஸ்த்ரேலியாவை சேர்ந்த 25 வயதே ஆன கிரிக்கெட் வீரரான ஃபிலிப் ஹ்யூஸின் ஆட்டத்தின் நடுவில் வேகப்பந்துக்கு பலியானதைக் கண்டு கிரிக்கெட் உலகம் சோகத்தில் ஆழ்ந்தது .

தெற்கு ஆஃப்பிரிக்கா, நியூசீலாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுடன் நடந்த போட்டிகளிலும், உலக டி-20 போட்டியிலும் தோனியின் தலைமையில் இந்தியா தோற்று இந்தியாவுக்கு வெளியே ஆடும் ஆட்டங்களில் நமக்கு தொடர் தோல்வி என்ற தொடர்கதையை தொடர்ந்தது.

கால் பந்து

2014-ல் கால் பந்து போட்டிகளில் நமது விளையாட்டு பல எல்லைகளை விரிவாக்கியிருக்கிறது. நேர்மறையான பலன்களைத் தரவில்லையென்றாலும் பல புதிய முயற்சிகள் தோன்றியிருக்கின்றன. இந்தியன் சூப்பர் லீக் கால் பந்து விளையாட்டு மிகப் பெரிய வெற்றியைக் கண்டிருக்கிறது. அதுவரை கிரிக்கெட் விளையாட்டு மட்டுமே ரசிகர்களை மைதானத்துக்குக் கவர்ந்திருக்கிறது என்ற பெயரை முறியடித்திருக்கிறது. இருந்தாலும், இரண்டு மாதங்களாக நடந்த சூப்பர் லீக் போட்டிகள் நமது நாட்டை வானுயரத்துக்கு எடுத்துச்செல்லவில்லை என்பது உண்மை. ஆண்களின் தேசிய அணி ஃபிஃபா தர வரிசையில் 171-ஆவது இடத்துக்கு இறங்கியிருக்கிறது என்றாலும் வருங்காலங்களில் கால் பந்து லீக் போட்டிகள் இன்னும் நல்ல பயன்களைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. உலகக் கால் பந்து கோப்பை போட்டிகள் நடந்த ஆண்டில் நாம் சூப்பர் லீக் போட்டிகளைத் தொடங்கியது உலகத்தை நமது பக்கம் திருப்பியிருக்கிறது. கால் பந்து போட்டிகள் பல திசைகளை நோக்கி வளர்ந்து வரும் இன்றைய காலத்தில் இரு நாடுகளுக்கிடையே மட்டும் நடைபெறும் போட்டிகளை கால் பந்து கழகங்களும், மன்றங்களும் ஒரு கவனச்சிதைவாகத்தான் கருதுகின்றனர்

இந்தியன் சூப்பர் லீகின் வெற்றியிலும் போட்டிகளின் போது தோற்றுவிக்கப்பட்ட ஒரு மாயைத்தோற்றத்திலும் இந்தியாவின் தேசிய அணியின் வீழ்ச்சி புதைக்கப்பட்டு மறக்கப்பட்டு விட்டது. முந்தைய பன்னாட்டு கால் பந்து வீரர்களான அலெஸ்ஸான்டிரோ டெல் பியெரோ, டேவிட் ட்ரெஸ்குவெட், ராபெர்ட் பைர்ஸ், மார்கோ மாட்டெராஸி, லூயிஸ் கார்சியா, மற்றும் நிக்கோலாஸ் அனெல்கா போன்ற வீரர்களின் பங்கேற்பு இந்திய தேசிய அணியை மிகவும் பின்புறம் தள்ளிவிட்டது என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

கோவா அணி அரையிறுதி ஆட்டத்தை அடையாவிட்டாலும் உலகப் புகழ் பெற்ற பிரேசிலைச் சேர்ந்த ஜீகோ அவர்களின் பயிற்சியில் வருங்காலத்தில் நல்ல பயனைப் பெறுவார்கள் என்று நம்புகிறார்கள்.

கல்கத்தாவின் ஆர்னாப் மொண்டல், மொஹம்மத் ரஃபீக் போன்ற வீரர்களை கால் பந்து உலகம் அடையாளம் காணத்தொடங்கியிருக்கிறது. கோல் போட்ட முதல் எட்டு வீரர்களில் இந்தியர்கள் யாருமில்லை என்பது வருத்தமான செய்தி. டில்லியின் ஃப்ரான்சிஸ் ஃபெர்னாண்டஸ், பல்வந்த் சிங், சென்னையின் ஹர்மன் ஜோத் காப்ரா, போன்றவர்கள் உதவியாளர்கள் பட்டியலில் தங்கள் அடையாளத்தை நன்கு பதித்திருக்கிறார்கள். கால் பந்து விளையாட்டில் பல துறைகளில் இந்திய வீரர்கள் முன்னைக் காட்டிலும் பிரகாசித்திருக்கிறார்கள். சிறந்த Emerging Player பரிசைப் பெற்ற 21 வயதான சந்தோஷ் ஜிங்கன், வடகிழக்கு மானிலங்களைச் சேர்ந்த 18 வயதே ஆன ஆலென் தியோரி போன்ற ஒரு சில புதிய இளைஞர்கள் நன்கு விளையாடியிருக்கிறார்கள்.

கால் பந்து ப்ரீமியர் லீக் போட்டிகளின் போது பெயர் பெற்ற பல கால் பந்து வீரர்கள் இந்தியாவின் பல நகரங்களுக்கு குறுக்கும் நெடுக்குமாக பறந்து பறந்து போவார்கள் என்று நாம் யாரும் கற்பனைகூட செய்து பார்த்திருக்க முடியாது.

அபிஷேக் பச்சன், ரண்பீர் கபூர் போன்ற பிரபல திரைப்பட நடிகர்கள், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி மற்றும் பல உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்கள், ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்திய சூப்பர் லீக் போட்டிகளில் இணைந்துகொண்டதால் அவர்களது விசிறிகளின் ஆதரவும் இந்த போட்டிகளுக்குக் கிடைத்தது. .

எட்டு அணிகள் விளையாடிய இந்திய சூப்பர் லீக் போட்டிகள்தான் உலகிலேயே மிக அதிகமான பார்வையாளர்கள் நேரில் கண்டு களித்த லீக் போட்டிகள். சராசரியாக 24537 பேர் ஒவ்வொரு போட்டியையும் கண்டு களித்திருக்கிறார்கள் என்று செய்தித்தாள்களில் படித்திருக்கிறேன்.. அதே சமயம் நமது உள்ளூர் ஐ.லீக் போட்டிகளுக்கு கல்கத்தா மற்றும் கோவா மையங்களைத் தவிர மற்ற மையங்களில் ஒரு சில ஆயிரம் பார்வையாளர்கள் கூட வருவதில்லை. இந்த இந்தியன் கால் பந்து சூப்பர் லீக் நிலைத்து நிற்குமா, இந்தியாவில் பெரிய லீகாக உருவாகுமா போன்ற கேள்விகளுக்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

2017-ல் நடக்கவிருக்கும் 17-வயதுக்குட்பட்ட விளையாட்டு வீரர்களின் கால் பந்து போட்டிகளுக்கு தனியுரிமை (FRANCHISE) கிடைத்திருப்பது ஒரு ஆறுதல்.

உலகத் தர வரிசையில் 156-ஆவது இடத்தில் இருந்த இந்தியா 2014 ஜனவரியில் சூப்பர் லீக் போட்டிகளின் தொடக்கத்தில் 15 இடங்கள் கீழிறங்கி 171-ஆவது இடத்தை அடைந்த போது பயிற்சியாளராக இருந்த டச்சுக்காரரான விம் கோவெர்மான்ஸ் வெறுத்துப்போய் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார்நெதர்லாந்துக்காரரான ராப் பான் என்பவரும் டெக்னிகல் டைரக்டர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். இந்திய அணியின் வீழ்ச்சிக்கு பாக்கிஸ்தானிடம் தோற்றதை ஒரு முக்கிய காரணமாக கருதுகிறார்கள்.

மகளிர் அணியும், ஜூனியர் அணியும் ஓரளவு நன்றாக விளையாடி நமது பெயரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

டென்னிஸ்

டென்னிஸ் விளையாட்டைப் பொறுத்த வரை, நமது இந்திய விளையாட்டு வீரர்களான அமிர்தராஜ் சகோதரர்கள், கிருஷ்ணன் பரம்பரையினர், பேஸ், மஹேஷ் பூபதி, சானியா மிர்ஸா போன்றவர்களை விட ஜான் போர்க், பீட் சாம்ப்ராஸ், மெக்கென்ரோ, ஸ்டெஃபி கிராஃப் போன்ற வெளி நாட்டு வீரர்களையே நமது நாட்டில் அதிகமாக நினைவில் வைத்துக் கொண்டாடுகிறோம்.

பொதுவாக, இந்திய டென்னிஸ் வெற்றி தோல்விகளை ஒன்றாகவே கலந்து இந்த ஆண்டில் கண்டிருக்கிறது.

செர்பியா நாட்டுக்கெதிராக டேவிஸ் கோப்பை விளையாட்டில் சானியா மிர்ஸா ஆட்டமும், வளரும் வீரர்களான ராம்குமார் ராமனாதன், அங்கிதா ராய்னா போன்றவர்களின் திறமை வெளிப்பாடும் ஒரு நல்ல மாறுதல்.

யூ. எஸ். திறந்தவெளி கலப்பு இரட்டையர் விளையாட்டில் சானியா மிர்ஸாவின் வெற்றியும், ஆசிய விளையாட்டுகளில் வெற்றியும் உள்ளூர் விளையாட்டுகளில் யூகி பாம்ப்ரி, சோம்தேவ் தேவ்வர்மன் மற்றும் சாகேத் மைனேனி போன்றவர்களின் வளர்ச்சியும் பெரிய ஆறுதல்.

பெண்கள் போட்டியில் சானிய மிர்சா தனது மூன்றாவது ஆண்-பெண் கலந்த இரட்டையர் போட்டிகளில் கிராண்டு ஸ்லாம் பட்டத்தைப் பெற்றார். ஆண்கள் விளையாட்டில் டென்னிசுக்கு இன்னமும் லியாண்டர் பேஸ்ஸை நம்பியே இருக்க வேண்டியிருக்கிறது.

 ஐந்து சாலெஞ்சர் டென்னிஸ் டோர்னமெண்ட் போட்டிகளை முதன் முறையாக வரவேற்றது ஒரு நல்ல அறிகுறி. இருந்தாலும் ஸ்பான்ஸர்கள் இல்லாத காரணத்தால் ஆரம்ப நிலை போட்டிகளுக்கு ஆதரவு சரிந்து விட்டது.

மகேஷ் பூபதி ஓய்வெடுத்த மாதிரிதான். ஆனால், அவரும் விஜய் அமிர்தராஜும் தங்களுக்கிடையேயுள்ள போட்டியின் விளைவாக டென்னிஸ் விளையாட்டில் மிகப் பெரிய ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆண்டின் இறுதி வாக்கில், மகேஷ் பூபதியின் ப்ரீமியர் டென்னிஸ் லீக் மற்றும் விஜய் அமிர்தராஜின் சேம்பியன்ஸ் டென்னிஸ் லீக் இரண்டும் உலக டென்னிஸ் அரங்கில் இந்திய வீரர்கள் கால் பதிக்க உதவும் என்று நம்புகிறார்கள். மகேஷ் பூபதி இந்திய ப்ரிமியர் டென்னிஸ் லீக் என்ற அமைப்பின் கீழ் ரோஜர் ஃபெடரர், ஜோகோவிச் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களை இந்தியாவுக்கு வரவழைத்து விளையாட வைத்து இந்திய டென்னிஸ் ரசிகர்களை மகிழ்வித்தார். ஆனால் அமிர்தராஜின் டென்னிஸ் அமைப்பு மிக அதிகமாக இந்திய வீரர்களையே பயன்படுத்தியது. நட்சத்திர அந்தஸ்து இல்லாவிட்டாலும் ராம்குமார் ராமனாதன் போன்ற புதிய இளம் வீரர்களை நாட்டுக்கு அடையாளம் காட்டியிருக்கிறது.

இந்திய ஹாக்கி

2014-ல் இந்திய ஹாக்கி புனர் ஜன்மம் போல ஒரு வழியாக மீண்டும் எழத் தொடங்கியிருக்கிறது. தென் கொரியாவிலுள்ள இன்சியானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் 16 ஆண்டுகள் வறட்சிக்குப் பிறகு மீண்டும் தங்கத்தைக் கைப்பற்றியது. 2016-ல் ரியோவில் நடைபெறப்போகும் ஒலிம்பிக்சில் விளையாட நேரடித் தகுதியையும் அடைந்தது பெரிய சமாச்சாரம். இதைத் தவிர, உலக சாம்பியன்களான ஆஸ்திரேலியாவை அவர்கள் மண்ணிலேயே தோற்கடித்தது மிகப்பெரிய சரித்திரம். மாறி மாறி பல போட்டிகளில் இந்திய அணி ஹாக்கியில் நல்ல ஒரு பெயரை பதித்திருக்கிறது. தரவரிசையில் மேல் நிலையில் இருக்கும் நான்கு அணிகளான ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம் அணிகளை தோற்கடித்தது இன்னொரு பெருமையான விஷயம்.  

காமன்வெல்த் விளையாட்டுகளில் வெள்ளியும், சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிகளில் நான்காவது இடத்தையும் பெற்று வெற்றி பெற்றது மிகப் பெரிய திருப்பம். உலக லீக் இறுதிப்போட்டியில் ஆறாவது இடத்தைப் பெற்றது. பெண்கள் அணி வெண்கலம் பதக்கத்தைப் பெற்றது.

ஆண்டு முடிவில் தகுந்த சன்மானம் இல்லாமையையும், விளையாட்டு சம்பந்தப்பட்ட விஷயங்களில் போதிய சுதந்திரம் இல்லாமையையும் காரணம் காட்டி இந்திய தேசிய கோச் டெர்ரி வால்ஷின் ராஜினாமா ஒரு கசப்பான முடிவு.

மொத்தத்தில் 2014 இந்திய ஹாக்கி விளையாட்டுக்கு ஒரு பெருமையான ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும்.

மல்யுத்தம்/குத்துச் சண்டை

மல்யுத்தத்தில் (wrestling) ஒலிம்பிக்ஸ் வீரர்களான சுசில் குமார் மற்றும் யோகேஷ்வர் தத் இருவரும் தங்களது ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்டியிருக்கின்றனர். 28 ஆண்டுகளாக நீடித்த வறட்சியை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் யோகேஷ்வர் தங்க மெடல் பெற்று போக்கினார். குத்துச்சண்டையில் காமன்வெல்த் விளையாட்டுகளில் நான்கு வெள்ளி, ஒரு வெண்கலம் பதக்கம் கிடைத்தன. வெளியே பதவிச் சண்டை தொடர்ந்து போட்டியின் மதிப்பைக் குறைத்து வருகிறது. பன்னாட்டு பாக்சிங் அசோசியேஷன் அமைப்பின் கீழ் இந்தியா மீண்டும் “பாக்சிங் இந்தியாஅமைப்பின் மூலம் வர இயன்றது ஒரு சமாதானம்.

பூப்பந்து

பூப்பந்து விளையாட்டிலும் எட்டு தனிப்பட்ட பட்டங்களைப் பெற்று பன்னாட்டு அரங்கில் தங்கள் முத்திரையை நமது வீரர்கள் பதித்திருக்கின்றனர். செய்னா நேஹ்வால், கே.ஸ்ரீகாந்த், பி.வி சிந்து போன்றவர்கள் மிக சிறப்பாக ஆடி இது வரை காணாத வெற்றிகளைக் கண்டு நாட்டிற்கு நற்பெயரை ஈட்டுத் தந்தனர்.

செஸ்

உலக செஸ் சாம்பியன் போட்டியில் சாம்பியன் பதவியை விஸ்வனாதன் ஆனந்த் பெற முடியாதது ஒரு பெரிய ஏமாற்றம்தான். அவரை விட வயதில் மிக இளையவரான மாக்னஸ் கார்ல்சனிடம் இந்த முறையும் தோற்றுப் போனார்.

மற்ற முக்கியமான விளையாட்டுக்கள்

திரு என்.ராமச்சந்திரன் அவர்களை புதிய தேர்தல்கள் மூலமாக இந்திய ஒலிம்பிக் அசோசியேஷனின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்த பின்னர், ஒரு வழியாக பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டி இந்தியா மீது சுமத்தப்பட்ட தடையை பிப்ரவரி மாதத்தில் விலக்கிக்கொண்டது

காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுகளில் நமது இந்திய விளையாட்டு வீரர்கள் புண்ணுக்கு மருந்து போட்டது போல் சிறப்பாக விளையாடி பதக்கங்கள் பெற்றனர். முக்கியமாக குத்துச் சண்டையில் இரட்டையர்களான சுசில் குமார் மற்றும் யோகேஷ்வர் தத், கைத்துப்பாக்கியில் ஜிது ராய் மற்றும் குத்துச் சண்டையில் எம்.சி.மேரி கோம் குறிப்பிடத்தக்கவர்களானார்கள்.

கிரிக்கெட்டில் கிடைத்த கெட்ட பெயரை ஓரளவு ஈடுகட்டும் வழியாக கிளாஸ்கோ, ஸ்காட்லாந்தில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள்   நல்ல பெயரை சம்பாதித்துக்கொடுத்தார்கள். ஐந்தாவது இடத்தையும் 15 தங்கங்களையும் சேர்த்து 64 பதக்கங்களையும் வென்று நம் பெயரை ஓரளவு காப்பாற்றினார்கள். ஆசியா விளையாட்டுகளிலும் 11 தங்கப் பதக்கங்களையும் சேர்த்து 57 பதக்கங்கள் வென்று முதல் 10- நாடுகளின் வரிசையில் இடம் பிடித்தது. .

மற்ற முக்கியமான வீரர்கள் அபினவ் பிந்திரா, ககன் நாரங், மனவ்ஜித் சிங் சாந்து மற்றும் இளைய வீரர்களான அயோனிகா பால், அபூர்வி சண்டேலா, மொஹம்மது ஆசாப் போன்றவர்கள். பங்கஜ் அத்வானி தனது உலகப் பட்டங்களின் பட்டியலை 8-லிருந்து 12-ஆக நீட்டி தனக்கு பெருமை சேர்த்துக்கொண்டார்.

உலகக் கோப்பையில் சரித்திரம் படைத்த ஒரு தங்க மெடல், கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் ஒரு உலக சாதனை, உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு வெள்ளிப் பதக்கம், ஆசிய விளையாட்டுகளில் ஒரு வெள்ளிப் பதக்கம்இப்படி பல கடுமையான போட்டிகளில் வெற்றி பெற்று கைத்துப்பாக்கியில் 2016-ல் ரியோ டி ஜெனிரோவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக்சில் ஜித்து ராய் இடம் பிடித்துவிட்டார்.

உடற் பயிற்சி விளையாட்டுகளில், காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப்  போட்டிகளில் சுமாரான வெற்றியே நமக்குக்  கிடைத்தது. வளர்ந்து வரும் பெண் விரரான தூதி சந்துக்கு அனுமதிக்கப்பட்ட ஆண் மரபு ஹார்மோன்களுக்கும் மேலாக இருப்பதாகக் காரணம் காட்டி விளையாட்டிலிருந்து தடை செய்யப்பட்டிருப்பது ஒரு சோகச் செய்தி

வில் வித்தையில் ஆசிய விளையாட்டுகளில் இதுவரை காணாத வெற்றிஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம். அபிஷேக் வர்மா தனிப்பட்டை முறையில் வெள்ளியும், அணிக்காக தங்கமும் பெற்றது முக்கியமானது.

பளு தூக்குதலில் புதியதாக மாற்றியமைக்கப்பட்ட இந்திய பளுதூக்குவோர் ஃபெடெரேஷன் 
அமைப்பின் கீழ் நமது வீரர்கள் ஓரளவு வெற்றி கண்டிருக்கிறார்கள்காமன்வெல்த் போட்டிகளிலில் 12 மெடல்களைப் பெற்றார்கள்.

ஸ்குவாஷ் விளையாட்டில் காமன்வெல்த்திலும் ஆசிய விளையாட்டிலும் ஒரு தங்கம், பெற்று 2014- விட இந்த ஆட்டத்திற்கு சிறந்த ஆண்டு இருந்ததில்லை என்ற புகழைக் கொடுத்தது. பெரிய வீரர்களான தீபிகா பலிக்கல், ஜோஷ்ணா சின்னப்பா, சௌரவ் கோஷல் எப்பொழுதும் போல சிறப்பான ஆட்டத்தைக் காட்டினார்கள். ஹரிந்தர் பால் சந்து போன்ற இளம் வீரர்களைப் பார்ப்பதற்கும் பெருமையாக இருக்கிறது.

                                                                                                                                                                ,,,,,,,முற்றும்