Total Pageviews

Saturday, October 28, 2017

29.10.17 “கேள்விக்கென்ன பதில்”

29.10.17 “கேள்விக்கென்ன பதில்”

தந்தி டீ. வியில் வரும் கேள்விக்கென்ன பதில்” என்ற நிகழ்ச்சியை தொடர்ந்து கூர்ந்து பார்த்து வருபவர்களில் நானும் ஒருவன். பொதுவாக தமிழக அரசியலைச் சுற்றியே பாண்டேயின் நிகழ்ச்சி அமைந்து வருகிறது. அதுதான் இன்றைக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்கிறது.

இதில், சமீப கால நேர்காணல்களில் நான் கவனித்ததில் பாண்டே கொஞ்சம் ‘ஸாஃப்ட்’டாகி விட்டாரோ என்ற ஒரு ஐயமும், மத்திய அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பவர்களை மடக்குவதை ஒரு ‘ஸ்ட்ராட்டஜி’யாக வைத்துக் கொண்டிருக்கிறாரோ என்ற ஐயமும் எனக்கு எழுந்தது. தினத்தந்தியின் ஏதோ ஒரு முக்கிய விழாவுக்கு இந்திய பிரதமர் வரக்கூடும் என்று எங்கேயோ படித்ததாக ஞாபகம். அதன் பிரதிபலிப்போ என்னவோ.

அடுத்தடுத்து மெர்சலைப் பற்றி கேள்விக்கென்ன பதில் நேர்காணல். முதலில் எஸ். ஏ. சந்திரசேகரிடம் மடக்கி மடக்கி கேள்விகள். ரசித்தேன் (தோம்). தொடர்ந்து ஹெச். ராஜாவிடம் அதே  பாணியில் கேள்விகள். முகம் சுளித்தேன் (தோம்). ராஜாவுக்கு பல இடங்களில் கோபம் வருவதும் பதிலுக்கு பாண்டேவுக்கும் கோபம் வருவதும் இருவருடைய ‘டோன்’ கள் மாறுவதில் தெரிந்தது.

எவ்வளவோ பிரச்சினைகள் தமிழகத்தில் இருந்தாலும், அறிவுள்ள, நல்லெண்ணம் கொண்ட நல்ல மருத்துவர்கள், இஞ்ஜினியர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொது நலத் தொண்டர்கள், குடும்பத் தலைவர்கள், தலைவிகள் இருந்தாலும் அரசியலையும், பரபரப்பையும் மட்டுமே நம்பி கேள்விக்கென்ன பதில்” போன்ற நிகழ்ச்சிகளையே எல்லா சேனல்களும் ஒளிபரப்புவது வெறும் வியாபார நோக்கத்திற்காகத்தான். எப்படி இருப்பினும் தந்தி டீ. வியின் டீ. ஆர். பி ரேட்டிங்கை எங்கோ உயரத்துக்குக் கொண்டு போக பாண்டே உதவுகிறார் என்று நன்கு தெரிந்தது.

நானும் பணியிலிருந்து ஓய்வு பெற்றவன் என்ற வகையில் வேண்டிய அளவு நேரம் என் கையில் இருந்தாலும் பொதுவாக நான் டீ. வி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை. தேவையில்லாமல் ரத்த அழுத்தத்தை ஏற்றிக் கொள்ள விரும்பவில்லை. கேள்விக்கென்ன பதில்” போன்ற நிகழ்ச்சிகளைக் கூட விளம்பரங்கள் இல்லாத யூடியூபில்தான் பார்க்கிறேன். டீ. வி முன் உட்கார்வதில்லை.


வருந்தத் தக்கது என்னவென்றால் (எனக்குத் தோன்றியது) படித்தவர்கள் அதிகம் இருப்பதும் தமிழ்நாடுதான். படித்தும் அவர்கள் படித்தது எந்தப் பயனையும் அவர்களுக்குக் கொடுக்கவில்லையோ என்ற ஐயத்தை ஏற்படுத்துவதும் தமிழ்நாடுதான். 

Thursday, October 19, 2017

18.10.2017 டெங்கும் நிலவேம்பு கஷாயமும்

18.10.2017 டெங்கும் நிலவேம்பு கஷாயமும்

தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதால் மாசு படிகிறது என்று சொல்லி அதற்கு சில இடங்களில் தடையும் பல இடங்களில் பட்டாசுகளைத் தவிர்க்கச் சொல்லி அறிவிப்புகளும் அறிவுரைகளும் பலத்த ஓசையுடன் வந்து கொண்டிருந்த நேரத்தில் ஒசைப்படாமல் இன்னொரு பக்கத்தில் ஒரு பெரிய சரவெடியை எடுத்து வீசியிருக்கிறார்கள். நிலவேம்பு கஷாயத்தால் டெங்கு வியாதி குணமாகும் என்பதற்கு விஞ்ஞான ரீதியாக எந்த நிரூபணமுமில்லை என்ற அறிக்கைதான் அந்த வெடி.

இது நாள் வரை ஊடகங்களில் படித்த செய்தியிலிருந்து நான் தெரிந்து கொண்டது டெங்கு வியாதிக்கு அலோப்பத்தியில் சரியான சிகிச்சை கிடைப்பதில்லை என்பதுதான். மேலும் நிலவேம்பு கஷாயம் மூன்று நாள் தொடர்ந்து சாப்பிட்டாலும், பப்பாளி இலையின் சாரைக் குடித்தாலும் டெங்கு பலருக்கு குணமாகியிருக்கிறது என்பதும் ஊடகங்களிலிருந்து தெரிகிறது. எனக்குத் தெரிந்த ஒருவர் கூட பப்பாளி இலைச் சாறு சாப்பிட்ட பின் டெங்குலிருந்து மீண்டிருக்கிறார்.

இன்று ‘தி ஹிந்து’ ஆங்கிலப் பத்திரிகையில் தலையங்கமே எழுதிவிட்டார்கள். விஞ்ஞான ரீதியாக நிரூபணமாகும் வரை நிலவேம்பு கஷாயம் சாப்பிடுவதை அரசாங்கமே ஊக்குவிப்பது சரியாக இருக்காதென்று. பத்திரிகைகளிலும் இதே போன்று செய்திகள்.

எனக்கு என்ன சந்தேகம் என்றால் அலோப்பதி மருத்துவ முறை போல ஆயுர்வேதத்திலோ, சித்தா யுனானி மருத்துவத்திலோ ஆராய்ச்சி அறிக்கைகள் அதிகம் கிடையாது. அவை வழி வழியாக வந்த மருத்துவ முறைகள். இருந்தும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மூலிகைகளைப் பற்றி உண்மையாகத் தெரிந்தவர்கள் வெகு சிலரே என்பது உண்மைதான். இருந்தும் ஆயுர்வேதத்தையும், சித்தா, யுனானி மருத்துவ முறைகளையும் இந்திய அரசாங்கமே அங்கீகரித்திருக்கிறது.

இப்பொழுது திடீரென்று மூலிகை மருந்தான நிலவேம்பு கஷாயத்தைப் பற்றி எதிர்மறையாக அறிக்கைகள் வரவேண்டிய காரணம் என்ன? அது வெறும் ‘நம்பிக்கையில்’ (Faith) சாப்பிடக்கூடிய மருந்து, வெறும் placebo effect என்று சொல்ல வேண்டிய அவசியமென்ன? ஏன் அலோப்பதியில் ப்ளேசிபோ எஃபெக்ட்டில் சிலருக்கு சில வியாதிகள் குணமாவதில்லையா? அல்லது அலோப்பதியில் மருந்து சாப்பிட்டால் டெங்கு சரியாகிவிடும் என்று ஏதேனும் உத்திரவாதம் இருக்கிறதா? அல்லது அலோப்பதியில்தான் டெங்குக்கு உத்திரவாதமான மருந்து இருக்கிறதா?

டெங்குக்கு முறையான சிகிச்சையென்று எதுவுமில்லை, அசெடாமினொஃபென் (டைலினால்) என்ற ஒரு வலி நிவாரண மருந்து மட்டுமே தற்போது கொடுக்கப்படலாம் என்று மேயோ க்ளினிக்கின் வலைப் பதிவு சொல்கிறது. (https://www.mayoclinic.org/diseases-conditions/dengue-fever/diagnosis-treatment/drc-20353084)

போலி மருந்துகளைக் கண்டு ஏமாறக்கூடாதுதான். ஒன்றுமறியாத மக்களை போலி நிலவேம்பு கஷாயம் கொண்டு ஏமாற்றுவது தவறுதான். தண்டிக்க வேண்டியதுதான். இருந்தும் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் டெங்கு பயம் இருக்கும் இந்த நேரத்தில் ஏதோ இன்று பலரும் நம்பும் நிலவேம்புக் கஷாயம் என்ற ஒரு மருந்தைப் பற்றி விஞ்ஞான ரீதியாக முழுவதுமாக விளக்காமல் எதிர்மறையான ஒரு அறிக்கை வருவதற்கான பின்புலம் என்ன?

மருத்துவத் துறையில்  ஏங்கேயோ ஏதோ நடக்கிறது என்கிற ஒரு தோற்றத்தை இன்றைய அறிவிப்புகளும் அறிக்கைகளும் உண்டாக்குகின்றனவோ என்று சந்தேகம் வருகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


Sunday, October 15, 2017

15.10.17 தென்காசியிலிருந்து ஒரு முதல் தகவல் அறிக்கை

15.10.17 தென்காசியிலிருந்து ஒரு முதல் தகவல் அறிக்கை

காலத்தின் கட்டாயத்தால் சுமார் பத்து மாதங்கள் அமெரிக்காவில் ஓட்டிவிட்டு தென்காசிக்குத் திரும்பியவுடன் அன்றாடத் தேவைகளுக்காக மார்க்கெட்டுக்கு விசிட் அடித்ததில் நான் கற்றுக் கொண்டவை இதோ.

அதற்கு முன்…

கடந்த பத்து மாதங்களில் என்னை பாதிக்காதவை என்று பட்டியலிட்டால்.. .
     1.      நவம்பர் 2016-ல் அதிக மதிப்புள்ள ரூபாய் தாள்கள் செல்லாததாகியது
  2.     மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணமடைந்த நாளையொட்டி எங்களுடைய அமெரிக்கப் பயணமே நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டாலும் அதற்குப் பிறகு நடந்த பல சுவாரசியமான திடீர் திருப்பங்கள், திகில்கள், நகைச்சுவைகள் கலந்த பல அரசியல் நாடகங்கள்
     3.     ஜி. எஸ். டி அறிமுகப்படுத்தப் பட்டதால் ஏற்பட்ட பல குழப்பங்கள்
  4.     பல சேவைகளுக்கு ஆதார் இணைப்பு வேண்டுமா, வேண்டாமா என்ற கவலைகள்
   5.     நடிகர் கமலஹாசனும் ரஜினிகாந்த்தும் அரசியலுக்கு வருவார்களா, வர மாட்டார்களா, அவர்கள் வந்து விட்டால் இனி தமிழ்நாட்டில் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து போய்விடுமா – இப்படி மக்களுக்கு கவலைகள் இருக்கிறதோ இல்லையோ, ஊடகங்களுக்கு நிறைய கவலை.
  6.     எல்லா பத்திரிகைகளிலும் எதிரொலித்த கொசு, டெங்கு பற்றிய பயமுறுத்தல்
      7.     நீட் தேர்வு பற்றிய சர்ச்சைகள், போராட்டங்கள்
    8.     திருமதி சசிகலாவை யார் யார் சந்தித்தார்கள் போன்ற சுவாரசியமான தகவல்கள்
    9.     முக்கோண அரசியல் கட்சி இப்பொழுது இரு கோணமாக வளைந்து நிற்பது
    10.  மழையில்லை, தண்ணீரில்லை, மின் வெட்டு, கொசு, குப்பைகள், விலை உயர்வு, ஃபோன் கனெக்ஷன், இன்டெர்னெட் கனெக்ஷன் சரியில்லை, கேபிள் டீ வியில் பல சேனல்கள் சரியாகத் தெரியவில்லை போன்ற புகார்கள்

இப்படி பல. அமெரிக்காவில் கழித்த பத்து மாதங்களில் ஒரு தாயின் வயிற்றில் இன்குபேட்டரில் பாதுகாப்பாக இருப்பது போல எந்தக் கவலையுமற்று இருந்தோம்.

சரி, இங்கே இப்பொழுதுள்ள ரியாலிடி செக்...

கடந்த இரண்டு நாட்களில் நான் தெரிந்து கொண்டது…
     1.     நாங்கள் வழக்கமாக வாங்கும் பலசரக்குக் கடையில் எந்த மாற்றமுமின்றி முன் போல பணம் பரிமாற்றம் மூலம் மட்டுமே வியாபாரம் நடந்து வருகிறது. டெபிட், கிரெடிட் கார்ட் தேய்ப்பதற்கான வசதி கூட ஏற்படுத்திக் கொள்ளவில்லை. கேட்டால், இந்த ஊருக்கு அதெல்லாம் சரிப்படாது சார் என்றார் கடைக்காரர். எல்லோர் கையிலும் 500 ரூபாய் நோட்டுத் தாள்கள் புரண்டு கொண்டிருக்கிறது. எல்லா சில்லரை வியாபாரிகளும் பொதுவாகப் பணமாகத்தான் வாங்கிக் கொள்கிறார்கள்.
    2.     ஒரு சில மக்களே ஜி. எஸ். டியை வரவேற்கிறார்கள். பெரும்பாலும் பில் இல்லாமல் வரி கொடுக்காமலே பொருட்களை வாங்கிப் பழகி விட்டதால் இன்று வரி போட்டால் ஆத்திரப்படுகிறார்கள். கறுப்புப் பணப் புழக்கத்தை ஊக்குவிக்கும் பழைய முறையே பலருக்கும் பிடித்திருக்கிறது.
  3.     ஒரு தெரிந்த ஆட்டோக்காரர் சொன்னார், ‘எப்ப நோட்டுக்களை செல்லாததாக்கினாங்களோ அப்பதிலிருந்தே எங்க வியாபாரம் படுத்துடிச்சு, சார்’ என்று. ‘ஏன்யா, அதுக்கும் நீ ஆட்டோ ஓட்டுறதுக்கும் என்ன சம்பந்தம்,’ என்று கேட்டால் எனக்கு பொருளாதாரம் சொல்லிக் கொடுக்கிறார்.
     4.     நிலம், வீட்டு மனைகள், வீடுகள் வாங்கி விற்பது படுத்து விட்டது. விலையும் குறைந்திருக்கிறது. வாங்குவதற்கும், விற்பதற்கும் யோசிக்கிறார்கள். கறுப்புப் பணம் இல்லாமல் வாங்குவதும் விற்பதும் இன்றும் முடியாதே. ஒரு வியாபாரி சொன்னது, ‘வெள்ளை சட்டை, கரை வேட்டியோட சுத்தினவங்க எல்லாருடைய கொட்டமும் கொஞ்சம் அடங்கியிருக்கு சார்.’
   5.     இன்னொரு வியாபாரி சொன்னது, ‘சார், முன்னெல்லாம் எங்க கடை முன்னால பில் இல்லாம லாரிகளில் சரக்கு வந்தா ஏதோ பெயருக்கு ஃபைன் போடுவாங்க, கொஞ்சம் கையில பணம் வாங்கிப்பாங்க. அவ்வளவுதான். இப்பல்லாம், பில் இல்லாம பிடிச்சாங்கன்னா, லாரியோட அதிகாரிங்க கொண்டு போயிடறாங்க.’ பில் இல்லாமல் வியாபாரம் செய்வதற்கு இப்பொழுது வியாபாரிகளிடையே கொஞ்சம் பயம் இருக்கிறது.
     6.     நல்ல தரமான அரிசி 10 மாதம் முன்பு கிலோவுக்கு 56 ருபாய் கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தோம். இன்று அதே அரிசி 60 ரூபாய். 8% விலை உயர்வு. பல பொருட்களின் விலையேற்ற இறக்கங்கள் குறிப்பிடும் படியாக இல்லை.
   7.     தினந்தோறும் வீட்டுக்குப் பால் கொடுப்பவர் இப்பொழுது பசும்பால் மட்டுமே கொடுக்கிறார். எருமை வைத்து கட்டுப்படியாவதில்லையாம்.
     8.     பி. எஸ். என். எல் ஊழியர்கள் ஒரே நாளில் என்னுடைய வீட்டு தொலைபேசி, இன்டெர்னெட் வசதியை மீண்டும் ஏற்படுத்திக் கொடுத்து விட்டார்கள். புகாருக்கு உடனே கவனம் கொடுத்த பி. எஸ். என்.எல்-லை பாராட்டியே ஆக வேண்டும். பல தனியார் நிறுவனங்களின் போட்டி இருப்பதால் பொதுவாகவே அவர்களது செயல்களில் வேகம் தெரிகிறது. 4-ஜி சேவையில் ரிலையன்ஸ் ஜியோவுடன் பி. எஸ். என். எல் போட்டி போட்டு 420 ரூபாய்க்கு 90 நாட்களுக்கு சிம் கார்டு கொடுக்கிறார்கள் என்று டீலர் சொல்கிறார்.
    9.     வீட்டுக் குழாயில் தண்ணீர் ஆறு மாதத்துக்கும் மேல் வருவதில்லையாம். மாதா மாதம் குடி நீர் கட்டணம் மட்டும் சரியாக வாங்கிக் கொள்கிறார்கள். நுகர்வோர் கோர்ட்டுக்குப் போக வேண்டியதுதான் என்று நினைக்கிறேன்.
   10.  டெங்குக் காய்ச்சலுக்கென்று வீடு வீடாக நிலவேம்புக் கஷாயம் கொண்டு வந்து கொடுத்தார்கள். மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டுமாம். ஆனால், விடுமுறை என்பதினாலோ என்னவோ நேற்று பஞ்சாயத்து அதிகாரிகளைக் காணோம்.

இன்னும் ஆறு மாதம் ஓட்டியாக வேண்டும். பல உருப்படியான திட்டங்களோடு வந்திருக்கிறேன். நவம்பர் 14-ஆம் தேதி அரசுப் பள்ளிகளுக்காக ஒரு வினாடி-வினா போட்டியும், நவம்பர் 18-ஆம் தேதி மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்காக இன்னொரு வினாடி-வினா போட்டியும் எங்கள் அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்திருக்கிறோம். இன்னும் சில திட்டங்கள் மனதில் உள்ளன. இறைவன் அருளால் நிறைவேறும் என்ற நம்பிக்கையிருக்கிறது.

வாழ்க தென்காசி, வளர்க தமிழகம். ஜெய் ஹிந்த்!


Monday, October 09, 2017

10.10.17 மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நாமும் ஒரு கருவியாக இருத்தல்

மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நாமும் ஒரு கருவியாக இருத்தல் ஒரு உயர்ந்த குணம் என்பதை எல்லோரும் சொல்வார்கள். ஆனால், நம் எல்லோராலும் அப்படி இருக்க முடிகிறதா? இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. நானும் பல முறை முயன்று பார்த்திருக்கிறேன். என்னாலும் முடியவில்லை. ஏன் என்று ஆராய்ந்து பார்த்து வருகிறேன்.

முதலில் நான் மகிழ்ச்சியாக இருந்தால்தான் என்னாலும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்படியாக இருக்க முடியும். நானே ஏதோ ஒரு வித வருத்தத்தில், ஏமாற்றத்தில், மன அழுத்தத்தில், குற்ற உணர்ச்சியில் இருந்தால் என்னால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும். அவ்வப்பொழுது வரும் கொஞ்சம் மகிழ்ச்சியை நான் குறிப்பிடவில்லை. வருத்தமும் அப்படித்தானே! அவ்வப்பொழுது வரும், போகும். அதை நாம் ஒப்புக் கொள்வதில்லை. மூழ்கி விடுகிறோம்.

நான் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது மற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் ஒரு கருவியாக இருப்பதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. அந்த நேரங்களில் மற்றவர்கள் மகிழ்ச்சிக்காக நான் முயன்று எதையும் செய்யத் தேவையில்லை. என்னுடைய சொல்லும், செயலும் மற்றவர்களுக்குத் தானாகவே மகிழ்ச்சியைக் கொடுப்பதாக இருக்கும்.

ஆனால், நானே ஏதோ ஒரு காரணத்துக்காக வருத்தமாக இருந்தால் அந்த நேரத்தில் என்னுடைய சொல்லும் செயலும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க முடியாது. பல நேரங்களில் அவர்களுக்கும் வருத்தத்தைத் தான் கொடுக்கும்.

அதனால் நான் மகிழ்ச்சியாக இருப்பது மிக முக்கியம். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது? நான் செய்யக்கூடியது எல்லாமே எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமா? நேற்று எனக்குப் பிடித்த ஒரு பாட்டை கேட்டேன். மகிழ்ச்சியாக இருந்தது. இன்றும் அதே பாட்டைக் கேட்டால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்குமா? தெரியாது. இது ஒரு பிரச்சினை.

எந்த ஒரு காரியமும் எல்லா நேரங்களிலும் எனக்கு மகிழ்ச்சி கொடுக்கும் என்று எந்த உத்திரவாதமும் கிடையாது. என்னுடைய மகிழ்ச்சி பல விஷயங்களைப் பொறுத்திருக்கிறது. நேரம், இடம், சூழல், மனம் இப்படி பல விஷயங்கள் நமது மகிழ்ச்சியைத் தீர்மானிக்கின்றன.

அப்படியானால், என்னால் எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருக்க முடியாதா?

முடியும்.

எப்படி?

நானே அந்த மகிழ்ச்சியாக இருந்தால்…அது எனக்குத் தெரிந்திருந்தால்…
ஒரு விளக்கொளிக்கு தான் ஒளி வீசுகிறோம் என்ற நினைப்பு இருக்குமா? அந்த ஒளி விளக்கு தான் தான் என்ற விழிப்புணர்வு வேண்டும். அந்த விழிப்புணர்வு எப்பொழுது வரும்? தானாகவே வருமா அல்லது நாம் அதைத் தேட வேண்டுமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


(ஸ்ரீ ஆதி சங்கரர் எழுதிய நிர்வாண ஷட்கம் பாடலை சமீபத்தில் இன்னொருவர் பாடக் கேட்டு, மனம் லயித்து ஈர்ர்க்கப்படு ‘சிதானந்த ரூப சிவோஹம் சிவோஹம்’ என்ற அந்தப் பாடலையும் அதன் அர்த்தத்தையும் கற்றுக்கொண்டு வருகிறேன். தினமும் ஒரு முறையாவது அந்தப் பாடலைக் கேட்டு விடுவேன். அதனுடைய தாக்கம் தான் இந்தப் பதிவு.)

08.10.17 நானும் ஹிந்தி திரைப்படப் பாடல்களும்

08.10.17 நானும் ஹிந்தி திரைப்படப் பாடல்களும்
            
     வயதாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இருக்கும் அடையாளங்களில் அடிக்கடி பழைய நிகழ்ச்சிகளையும் அனுபவங்களையும் அசை போடுவதும் ஒன்று என்று நினைக்கிறேன். ஏதேனும் ஒன்று அந்த நினைவுகளை எதிர்பாராமல் தூண்டிவிடும்.
            
                         நேற்று எதேச்சையாக முக நூலில் ஒரு நண்பர் ‘ஆர்ஸு’ என்ற ராஜேந்திரக் குமார் – சாதனா நடித்த படத்திலிருந்து ‘ஹஜி ரூட்கர் அப் கஹான் ஜாயியேகா’ என்ற லதா மங்கேஷ்கரின் பாடலை பதிவு செய்திருந்ததைக் கேட்டு நினைவுகள் ராக்கெட் வேகத்தில் திருநெல்வேலியில் ரத்னா தியேட்டரில் இந்தப் படம் 1965-ல் திரையிடப்பட்ட காலத்தை நோக்கி விரைந்தது.
            
                          அன்றைய காலங்களில் ஒரு சில குறிப்பிட்ட பிரபல ஹிந்திப் படங்கள் மட்டுமே திருநெல்வேலியில் திரையிடப்படும். அது போன்று திரைக்கு வந்த படங்களில் ‘ஆர்ஸூ’-வும் ஒன்று. திரைக்கு வந்த ஹிந்திப் படங்களும் அதிக பட்சம் ஒரு வாரம் ஓடும். ‘ஆர்ஸூ’ படத்தில் எனக்குப் பிடித்த சங்கர் – ஜெய்கிஷன் இசை. ஒரு வாரமே ஓடிய இந்தப் படத்தை நான் (எனது இன்னொரு கல்லூரித் தோழரும் கூட) ஐந்து முறை பார்த்திருக்கிறேன். ஆர்ஸூவில் ஒவ்வொரு பாட்டும் ஹிட். மனதைத் தொடும். கொஞ்சம் காதல் உணர்ச்சி இருந்தால் மனதைப் பிசையும். (இன்று அதே ‘ஹஜீ ரூட்கர்’ என்ற அருமையான பாடலைப் படமாக்கப் பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தால் எவ்வளவு கேவலமாக இருந்திருக்கிறது என்ற நினைப்பு மேலோங்கி நிற்கிறது. நடிகர் நடிகையர் அங்கே இங்கே ஒன்றிரண்டு அடி நகருகிறார்கள். வயலினும் சித்தாரும் ஒலிக்கும் பொழுது பியானோவைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். மேற்குடி மக்களின் தாம்பீக வாழ்க்கை. வாயில் பைப். அவ்வளவு தான்.)
            
                             என் மனம் உடனே ‘பீகி ராத்’ என்ற இன்னொரு ஹிந்திப் படத்துக்குத் தாவியது. இதில் ரோஷன் அவர்களின் இசை. ஒவ்வொரு பாடலும் ஹிட். இதில் இறுதியாக வரும் ‘தில் ஜோ ந கஹ சகா’ என்ற பாடலுக்காகவே திருநெல்வேலி ராயல் தியேட்டரில் ஓடிய ஏழு நாட்களில் ஐந்து முறை பார்த்திருக்கிறேன்.
            
                           இன்னொரு படத்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமென்றால் அது 1964-ல் வெளி வந்த ராஜ் கபூரின் ‘சங்கம்.’ என் நினைவுப் படி அந்தக் காலத்தில் மிக அதிக நாட்கள் திருநெல்வேலியில்  ஓடிய படம் இது தான். சுமார் ஒரு மாதம் ஓடியது. இந்தப் படத்தையும் அதன் பாட்டுக்களுக்காகவே பல முறை – எத்தனை முறையென்று நினைவில்லை – பார்த்திருக்கிறேன்.

             இந்தப் படம் லக்ஷ்மி தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த போது எனக்கு முக்கியமான தேர்வுகள் கல்லூரியில் ஆரம்பித்திருந்ததாக நினைவு. முதல் தேர்வு ஆங்கிலம். தேர்வுக்கு முந்தின நாள் ஐயப்பனுக்கு விசேஷமான நாள். எங்கள் வீட்டின் பின்புறம் ஒரு ஐயப்பன் கோவில். மாலை மூன்று நான்கு மணிக்கெல்லாம் கோவிலில் விசேஷத்தை முன்னிட்டு ஒலிப்பெருக்கியில் பாடல்கள் ஒலி பரப்பத் தொடங்கி விட்டனர்.

     எனக்கோ பின் புலத்தில் இசை ஓடிக் கொண்டிருந்தால் படிப்பதில் கவனம் செலுத்த முடியாது. பாடல்கள் நிற்பதாகத் தெரியவில்லை. பார்த்தேன். திடீரென்று யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் நேரே லக்ஷ்மி தியேட்டரை நோக்கி நடந்தேன். சங்கம் படம். அந்தக் காலத்து தரை டிக்கெட் – 31 பைசா – கிடைத்தது. அந்த வகுப்பு டிக்கெட்டுக்கு எங்கள் நண்பர்களிடையே வைத்த பெயர் ‘சுண்டல்’. 31 பைசாவை சுண்டிவிட்டு டிக்கெட் வாங்கி ‘தோஸ்த் தோஸ்த் நா ரஹா’ பாடல் வரை படம் பார்த்து விட்டு வீடு வந்து சேர்ந்தேன். பின்பு இரவு 12 மணி வரை தேர்வுக்குப் படித்தேன். அடுத்த நாள் தேர்வும் நன்றாகவே எழுதியிருந்தேன். பொதுவாக பாட சம்பந்தமாக நான் மெத்தனமாக இருக்க மாட்டேன் என்று வீட்டில் தெரியும். அதனால் என்னை எதுவும் குற்றம் சொன்னதில்லை.  இறுதித் தேர்வுக்கு முந்தின நாள் துணிச்சலாக திரைப்படம் பார்த்த மேதாவிகளில் நானும் ஒருத்தன்.

    அது போன்று ‘ராஜ்குமாரி’ என்று ஒரு படம் வந்தது. அதிலும் சங்கர் ஜெய்கிஷன் இசை. (உண்மையில் சங்கரின் இசை). குப்பைப் படம். ஆனாலும், ‘ஆஜா, ஆயே பஹார் தில் ஹை’ என்ற பாட்டுக்காக அந்தப் படத்தைப் பார்த்தேன்.


      திடீரென்று நினைவுகள் அறுந்து விட்டன……..