Total Pageviews

Friday, February 05, 2016

திகிலூட்டும் அண்டார்ட்டிக்கா - உண்மைக் கதைகள்: பகுதி 2 E – ஷெக்கெல்ட்டனின் கதை

திகிலூட்டும் அண்டார்ட்டிக்கா - உண்மைக் கதைகள்: பகுதி 2 E – ஷெக்கெல்ட்டனின் கதை

இறுதிப் போராட்டம்

தென் ஜியார்ஜியாவின் கரையைத்தான் அந்த அறுவர் குழு தொட்டார்களேயொழிய இன்னும் 22 மைல்கள் கடந்தால்தான் ஸ்ட்ராம்னெஸ் என்ற வேல் மீன்கள் பிடிக்கும் நிலையத்துக்குப் போய்ச் சேர முடியும்.

அங்கே போய்ச் சேர தென் ஜியார்ஜியா முழுவதும் பரவியிருந்த மலைகளைக் கடக்கவேண்டும். அதுவரை அந்தப் பாதையை யாரும் கடந்ததாக சரித்திரம் கிடையாது. போகும் வழியில் எதுவும் கிடையாது. சவாலுக்கு மேல் சவால்.

மேக்னிஷ்ஷும் வின்செண்டும் மிகவும் பலவீனப்பட்டு களைத்திருந்தனர். அதனால் அவர்களை அங்கேயே மெக்கார்த்தியின் கவனிப்பில் விட்டு விட்டு மற்ற மூவரும்ஷேக்கெல்டன், க்ரீன், மற்றும் வொர்ஸ்லி - அங்கிருந்து ஸ்டெராம்னெஸ்சை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

வழியில் உறைந்த பனி ஆறுகள்உயர்ந்த பனிச் சறுக்குகள், பள்ளத்தாக்குகள், நடு நடுவே பனி வயல்கள்.  4500 அடி உயரத்திலிருந்து பின்னே திரும்பிப் பார்த்தபோது பனிப் போர்வை அவர்களை சூழத்தொடங்கியிருப்பது தெரிந்தது. இரவோ நெருங்கிக்கொண்டிருந்தது. உயரத்திலிருந்து கீழே பாதுகாப்பாக எங்கேனும் சேர வேண்டும். அவர்களிடன் கூடாரம் அமைப்பதற்கான பொருட்கள் ஏதுமில்லை. படுக்கைகளுமில்லை.

பனிபடர்ந்த உயரத்திலிருந்து கீழே 900 அடி சறுக்கினார்கள். அவர்கள் கொண்டு வந்திருந்த அடுப்பு அணையாமல் இருவர் சூழ்ந்து பாதுகாக்க, மூன்றாமவர் சூடான உணவை தயாரித்தார். இப்பொழுது முழுவதும் இருட்டு சூழ்ந்துகொண்டது. தொடர்ந்து நடந்தார்கள். விரைவில் சந்திரன் தென்பட்டான். மீண்டும் மலையேற்றம், உடலில் வலிமையை இருத்திக்கொள்ள இன்னொரு முறை சூடான உணவு.

தூரத்தில் ஒரு தீவு தென்பட்டது. அப்பொழுதுதான் புரிந்தது, தவறான பாதையில் வந்து விட்டோம் என்று. வந்த வழியே மீண்டும் மலைப்பாதைகளில் திரும்பினார்கள்.

காலை 5 மணி. சோர்ந்து போய் ஒருவரையொருவர் குளிருக்காக கட்டிக்கொண்டு அங்கேயே ஒரு பாறையில் அமர்ந்தனர். வொர்ஸ்லியும், க்ரீனும் கொஞ்சம் கண்ணயர்ந்தனர். அதிக நேரம் தூங்கிவிட்டால் பின் யாராலும் ஒரு அடிகூட எடுத்து வைக்கமுடியாது என்பதை உணர்ந்த ஷேக்கெல்ட்டன் ஐந்தே நிமிடங்களில் அவர்களை எழுப்பி விட்டார். மீண்டும் நடைப் பயணம் தொடர்ந்தது.

இன்னும் ஒரே ஒரு மலையிடுக்குதான் பாக்கி. அதை கடந்து விட்டால் ஸ்ட்ராம்னெஸ் போய்ச் சேர்ந்துவிடலாம்.

காலை 6.30 மணிக்கு ஷேக்கெல்ட்டன் ஒரு உயரமான இடத்திலிருந்து கீழே கண்காணித்ததில் ஒரு  நீராவி விசில் சத்தம் கேட்டது போலிருந்தது. காலை வேளைகளில் மீன் பிடிப்பவர்கள எழுப்புவதற்காக அப்படி ஒரு நீராவி விசில் சத்தத்தை எழுப்புவார்கள் என்பது அவருக்குத் தெரியும்.. உடனே ஓடி வொர்ஸ்லியிடமும், க்ரீனிடமும் 7 மணிக்கு மீண்டும் விசில் சத்தத்தை கவனிக்க வேண்டும் என்றார். 7 மணிக்குத்தான் மீன் பிடிப்பவர்கள் வேலைக்கு கிளம்புவார்கள்.

சரியாக 7 மணிக்கு மீண்டும் அந்த நீராவி விசில் சத்தம் கேட்டது. மனிதர்கள் வாழுமிடத்துக்கு வந்து விட்டோம் என்று அந்த மூவருக்கும் ஒரே மகிழ்ச்சி.
2000 அடி உயரத்திலிருந்து  மீண்டும்  நடந்தனர். செங்குத்தான பனிப்பாறைகளில் கயிறுகள் கட்டி இறங்கினர்வேறு சில இடங்களில் சறுக்கி கீழிறங்கினர். பனி சூழ்ந்த மலைகளில் ஏறுவதும், இறங்குவதுமாக பயணம் அப்படி இறுதி நேரத்திலும் அவர்களை வாட்டியதுபல இடங்களில் மலைச் சறிவுகள் அவர்களை ஏமாற்றியிருக்கிறது. பல இடங்களில் பின் வாங்கி மாற்று பாதையில் செல்ல வேண்டியிருந்திருக்கிறது.

மதியம் 1.30 மணிக்கு இறுதியாக ஒரு மலை இடுக்கில் ஏறிய போது 2500 அடி கீழே ஒரு சிறிய மீன் பிடிக்கும் படகு கண்ணில் பட்டது. வேகமாக ஓடினார்கள். கரையோரத்தில் பாய்மரக் கப்பல் ஒன்று கண்ணில் பட்டது. மனிதர்கள் அங்கங்கே நடமாடிக்கொண்டிருந்ததும் தெரிந்தது. மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையும் கண்ணில் பட்டது. அறுவரும் ஒருவருக்கொருவர் கட்டி அணைத்தும், கை கொடுத்தும் சாகசப் பயணத்தை முடிந்து விட்டது போல தங்களைப் பாராட்டிக்கொண்டனர்.

விரைவில் அந்த படகுக்குப் போய் சேர்ந்துவிட வேண்டும். அதற்கு ஒரே வழி மலை வழியே ஓடிக்கொண்டிருந்த ஒரு ஆற்றின் நீரோட்டத்தோடு செல்வதுதான். இடுப்பளவு உறையும் தண்ணீரில்  நடுங்கும் குளிரில் இறங்கி நீந்தினார்கள்.

திடீரென்று ஒரு நீர்வீழ்ச்சியின் இரைச்சல் கேட்டது. அதிலிருந்து தப்பிக்க முடியாது. முப்பது அடி உயர நீர்வீழ்ச்சியில் இரண்டு பக்கமும் பனிப்பாறைகளுக்கு நடுவே செங்குத்தாக விழுவதை தடுக்க முடியாதுஇருந்தும், ஒரு பாறையில் கனமான கயிறைக் கட்டிக்கொண்டு, கயிறைப் பிடித்தவாறே நீர்வீழ்ச்சியில் முதலில் க்ரீனை இறக்கினர். அவர்களில் அவர்தான் அதிக எடையுள்ளவர். கீழே தண்ணீருக்குள் விழுந்தவரை சிறிது நேரம் காணவில்லை. மற்றவர்களுக்குதிக், திக்.’ ஆனால், சிறிது நேரத்திலேயே தண்ணீருக்கு அடியிலிருந்து க்ரீன் வெளியே வந்தார். அப்பாடாஎன்றாகியது. அடுத்ததாக ஷேக்கெல்ட்டனும் அதற்கடுத்து வொர்ஸ்லியும் கீழே இறங்கினர். இறங்குவதற்கு முன் தங்களுடன் கொண்டுவந்திருந்த பயண விவரங்களைக் குறிக்கும் குறிப்புப் புத்தகம், அடுப்பு, எல்லாவற்றையும்  நீர்வீழ்ச்சியில் விட்டெறிந்தனர். கீழே வந்த பிறகு அதிர்ஷ்ட வசமாக  அவை தண்ணீரிலிருந்து திரும்பக் கிடைத்துவிட்டது.   

பல விதமான கருவிகளை பொருத்திய நல்ல படகுகளுடன் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கிளம்பிய அவர்களது ஆய்வுப் பயணம் மிகுந்த இன்னல்களுடன், வெற்று வயிற்றோடு ஆனாலும் உயிர் பிழைத்து முடிவடைந்தது.

வேல் மீன் பிடிக்கும் நிலையம் ஒன்றரை மைல் தூரமே இருந்தது. தங்களின் தோற்றத்தை அங்கு செல்லுமுன் சரி செய்துகொள்ளலாம் என்று நினைத்தனர்.  இருந்தும் சிக்கலடைந்த நீள தாடி, மீசை, தலைமுடி, ஒரு ஆண்டுக்கு மேல் துவைக்காத கிழிந்த, அழுக்கடைந்த உடைகளை வைத்துக்கொண்டு அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.  

மே 20, 1916 மதியம் 3 மணிக்கு ஸ்ட்ரோம்னெஸ் வேல் மீன் பிடிக்கும் நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர்.  இரண்டு சிறுவர்களை அவர்கள் சந்தித்தார்கள். மேலதிகாரி எங்கே இருக்கிறார் என்று அந்த சிறுவர்களிடன் ஷேக்கெல்ட்டன் கேட்டார். ஆனால் அந்த சிறுவர்கள் பதில் சொல்லாமல் ஒரே குதியாக குதித்து அங்கிருந்து ஓடிவிட்டனர்.  அவர்களைப் பின் தொடர்ந்து படகுத்துறைக்கு அருகே இருந்த ஒரு வீட்டில் மேலதிகாரியை பற்றி விசாரித்தனர்.

சொரையில் என்ற மேலதிகாரி வெளியே வந்தார். ஷேக்கெல்ட்டனும் சொரையிலும் ஒருவரையொருவர் உற்றுப் பார்த்துக்கொண்டனர்.

“என்னைத் தெரியவில்லையா?” என்று ஷெக்கெல்ட்டன் அவரிடம் கேட்டார்.

 சொரையிலுக்கு கேட்ட குரலாக இருந்தது.

‘ஏன் பெயர் ஷேக்கெல்ட்டன்’ என்று தன்னை மீண்டும் அறிமுகப்படுத்திக்கொண்டார்.  உடனேயே ஷேக்கெல்ட்டனை அடையாளம் கண்டுகொண்ட சொரையில் அவரை உடனேயே வீட்டுக்குள் அழைத்தார்.

சொரையில் வீட்டிலேயே குளித்து, சவரம் செய்துகொண்டு, சாப்பிட்டு நன்கு தூங்கினர்.

பின்பு வொர்ஸ்லி மட்டும் இன்னொரு படகில்  தென் ஜியார்ஜியாவில் கிங் ஹாக்கன் குடாவில் தங்கிவிட்ட  மற்ற மூவரை காப்பாற்ற கிளம்பினார். திரும்பும் வழியில் பலத்த பேய்க் காற்று, புயலை சந்திக்க நேர்ந்தது. அந்தப் புயல் மட்டும் ஒரு நாள் முன்னதாக வந்திருந்தால் ஸ்ட்ராம்னெஸ்ஸை கடக்க வந்த குழுவின் எல்லாருமே காப்பாற்றப்படாமலேயே இறந்து போயிருப்பார்கள்.  எலிஃபென்ட் தீவில் தங்கிய மீதமுள்ளவர்களின் கதியும் அதேதான் ஆகியிருக்கும்.

ஷேக்கெல்ட்டன் ஸ்ட்ரோம்னெஸ்ஸிலேயே தங்கி எலிஃபென்ட் தீவில் தங்கியவர்களை எப்படி பாதுகாப்பாக மீட்பது என்பதைப் பற்றி திட்டமிட்டு கொண்டிருந்தார்.  

இறுதி மீட்பு முயற்சி

பின்பு மே 23, 1916 அன்று ஷேக்கெல்ட்டன், வொர்ஸ்லி மற்றும் க்ரீன் மூவரும் குளிர் காலத்தில் பயன்படுத்துவதற்காக வைத்திருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த  ‘சதர்ன் ஸ்கைஎன்ற மீன் பிடிக்கும் படகில் மீதியிருந்த 22 பேரை காப்பாற்ற  நம்பிக்கையுடன் எலிஃபென்ட் தீவை நோக்கிச் சென்றனர்.

போகும் வழியில் எலிஃபென்ட் தீவுக்கு அறுபது மைல்களுக்கு முன்னே பனிப்பாறைகள் மீண்டும் அவர்களை மேலே செல்லவிடாமல் தடுத்ததால் ஃபாக்லாந்து தீவுக்கு படகைத் திருப்பினர். அங்கே உருகுவே நாட்டு அரசுதவியுடன் இன்னொரு டிராலர் வகைப் படகைப் பெற்றுக்கொண்டு கிளம்பினர். அதுவும் பனிப்பாறைகளில் போக முடியவில்லை.

பின்பு தெற்கு சிலி பகுதியிலிருந்த புண்டா ஏரெனஸ் என்ற இடத்துக்குச் சென்றனர். அங்கே இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களும் சிலி நாட்டைச் சேர்ந்தவர்களும் இன்னொரு பலமான படகை வாடகைக்கு அமர்த்திக்கொள்ள அவர்களுக்கு ஆயிரத்தைநூறு பவுண்ட் பணம் நன்கொடையாக கொடுத்தனர்.

எலிஃபென்ட் தீவுக்கு சுமார் நூறு மைல் வடக்கே அந்தப் படகின் துணை இன்ஜின் பழுதடைந்து உடைந்து விட்டது. மூன்று முறை முயன்றும் அவர்களால் எலிஃபென்ட் தீவுக்கு போக முடியவில்லை.

இருந்தும் ஷேக்கெல்ட்டன் மனம் தளரவில்லை.

சிலி நாட்டு அரசாங்கத்துடன் பேசினார். சிலி அரசாங்கம் லூயிஸ் அல்பெர்ட்டோ பர்டோ என்ற மாலுமியின் தலைமையில்யெல்ச்சோ’ என்ற நீராவிப் படகை கொடுத்து உதவினர். அந்த நீராவிப் படகு எலிஃபென்ட் தீவை நெருங்கியது.

ஆகஸ்ட் 30, 1916

அந்தத் தீவில் இருந்தவர்களுக்கோ மதிய உணவு நேரம்.   தலை கீழாகக் கவிழ்த்துப் போட்டு கூடாரமாக்கிக் கொண்ட படகுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர்.  அவர்களில் ஒருவரான மார்ஸ்டன் என்பவர் வெளியே வந்த போதுயெல்ச்சோ படகை கண்டுவிட்டார். ‘படகு வந்து விட்டது, படகு வந்து விட்டதுஎன்று கத்தி வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தார். அவர் கத்தியதைக் கேட்ட, ஒரு சிலர் உணவு தயாராகிவிட்டதை அறிவிப்பதற்குத்தான் மார்ஸ்டன் அறை கூவுகிறார் என்று நினைத்து கூடாரத்திலிருந்து வெளியே வந்தனர். மார்ஸ்டன், ‘படகு, படகுஎன்று மீண்டும் மீண்டும் கத்துவதை தெளிவாக கேட்டபோது மற்ற எல்லோரும் கூட ஒரே சமயத்தில் கூடாரத்தை விட்டு வெளியே வர முயற்சித்ததில்  நெரிசலில் கூடாரத்தின் துணிகள் கிழிந்து விட்டன.  

அந்தப் படகுக்கு தாங்கள் இருப்பதை தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக கூடாரத்தின் எல்லாத் துணிகளையும் கிழித்தெடுத்து கடைசியாக இருந்த ஒரு டின் எண்ணையில் அவற்றை முக்கியெடுத்து தீ வைத்துக் கொளுத்தினர்.

படகு கரைக்கு வந்ததும், ஃப்ரான்க் வொயில்ட் ஷேக்கெல்ட்டனை கீழே இறங்கி வந்து அதுவரை தாங்கள் எப்படி அத்தனை நாட்களையும் கழித்தோம் என்பதைக் காட்டுவதற்கு அழைத்தார். ஆனால், எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட ஷேக்கெல்ட்டன் அவர்களை பாதுகாப்பாக மீட்டுச் செல்வதிலேயே குறியாக இருந்ததால் உடனேயே கிளம்பவேண்டும் என்று கூறி மறுத்து விட்டார். பருவனிலை எப்பொழுது எப்படி மாறுமோ தெரியாது. எந்த நேரத்தில் எந்த இக்கட்டு வருமோ தெரியாது.

ஒரு மணி நேரத்தில் எல்லோரும் ஷேக்கெல்ட்டன் கொண்டு வந்த படகில் ஏறிக்கொண்டனர். படகு வடக்கு நோக்கி நகரத் தொடங்கியது.

எலிஃபென்ட் தீவில் வொயில்ட் தலைமையில் தங்க நேர்ந்தவர்கள் அக்டோபர் 1914 முதல் ஆகஸ்ட் 1916 வரை வெளி உலகத்தைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் எப்படியோ உயிர் வாழ்ந்திருக்கிறார்கள்.

அந்தத் தீவில் 137 நாட்கள் எப்படியோ உயிர் பிழைத்திருக்கிறார்கள்.
ஷேக்கெல்ட்டன் அவர்களை அந்த தீவில் விட்டுச் சென்று 128 நாட்கள் ஆகியிருக்கின்றன.

அதிசயம் என்னவென்றால் ஷேக்கெல்ட்டன் குழுவினரில் 28 பேரில்  ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை. அவர்களின்என்டியூரன்ஸ்’ கப்பல் கடலுக்குள் போய் விட்டது. ‘ஜேம்ஸ் கெயிர்ட்’ படகு மட்டும் பின்னால் இங்கிலாந்துக்கு திரும்பக் கொண்டு வரப்பட்டது. இன்றும் லண்டனில்டல்விச்கல்லூரியில் பார்வைக்காக வைத்திருக்கிறார்கள். ஜேம்ஸ் கெயிர்ட் சொசைட்டி என்ற பெயரில் ஷேக்கெல்ட்டன் நினைவாக இன்றும் செயல்பட்டு வருகிறது.

ஷேக்கெல்ட்டனின் முடிவு

1921-ல், ஷேக்கெல்ட்டனை மீண்டும் அண்டார்ட்டிக்கா பயணத்துக்கு அழைத்தார்கள். 2000 மைல் நீளமான கடற்கரையின் வரைபடங்கள் தயாரிப்பதற்காகவும், பருவ நிலை மற்றும் புவியியல் ஆராய்ச்சிக்காகவும் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

ஷேக்கெல்ட்டனுக்கு 47 வயதுதான். இருந்தும் இந்தப் பயணத்தின் போதுக்வெஸ்ட்கப்பல் தளத்தில் தெற்கு ஜியார்ஜியாவின் கிங் எட்வர்ட் கோவ் என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பொழுது மாரடைப்பால் இறந்து போனார். அங்கேயே அவரது உடலும் புதைக்கபட்டது. 1928-ல் ஸ்காட்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்ட க்ரானைட் கல்லால் அவர் புதைக்கப்பட்ட இடத்தில் தலைக்கல் அமைக்கப்படது. பல விஞ்ஞானிகள் இன்றும் அவரது நினவுச் சின்னத்தை பார்வையிட வந்துகொண்டிருக்கின்றனர்.

முடிவுரை

ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும், பயங்கரமான இக்கட்டான நிலைகளிலும் மனவலிமையுடன் எப்படிப் போராடி வெற்றி பெற முடியும் என்பதற்கும், துணிகரமான வீர சாகசத்துக்கும் ஷேக்கெல்டன் ஒரு முன்மாதிரியாக சரித்திரத்தில் நிற்கிறார்

சரித்திரப் புகழ் பெற்ற ஷேக்கெல்ட்டனின் அண்டார்ட்டிக்கா பயணம் நடந்து 2016 ஆண்டோடு 100 ஆண்டுகள் ஆகிறது. இந்தக் கட்டுரையை ஷேக்கெல்ட்டனுக்கும் அவருடன் பயணித்த 22 வீரர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு மிகவும் உதவியாக இருந்த வலைப் பதிவுகளுக்கு நன்றி.

ஆதாரம்:


முந்தைய பகுதிகளுக்குச் செல்ல: