Total Pageviews

Tuesday, March 03, 2015

தினமும் ஐந்து பைசா சேமிப்பு: என் கல்லூரி நாட்களிலிருந்து ஒரு பக்கம்

வயது ஏற, ஏற சிறு வயதில் நடந்த சின்ன சின்ன விஷயங்கள்கூட மலரும் நினைவுகளாக மனதில் மலர்ந்து, சில  நேரங்களில் மகிழ்ச்சியையும், சில நேரங்களில் வருத்தத்தையும் கொடுக்கின்றன.

நான் கல்லூரியில் சேர்ந்த புதிது. பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் பி.யூ.சி படிப்பிற்கு சேர்ந்தேன். வீடு திருநெல்வேலி டவுணில், அம்மன் சன்னதிக்கு எதிர்த்தார்போல்.

பல முதன் முதலாக…..

முதன் முதலாக, வேஷ்டி அணியத் தொடங்கினேன். அதுவரை பள்ளியில் வெறும் அரை டிரௌசர் தான்
முதன் முதலாக, தனியாக பஸ்ஸில் ஏறிப் பயணம் செய்யத் தொடங்கினேன்.
முதன் முதலாக, ஆங்கிலத்திலேயே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம்.
முதன் முதலாக, சிறிய வயதிலிருந்தே பழகி வந்த பக்கத்து வீட்டு சுப்பாமணி, திரு.சுப்பிரமணியமாகத் தெரிந்தார். அவர்தான் கல்லூரியில் எனக்கு ஃபிஸிக்ஸ் விரிவுரையாளர்.
முதன் முதலாக, தோள் பையை தூக்கி எறிந்துவிட்டு, கையிலேயே ஒரு சில புத்தகங்களையும், நோட்டுக்களையும் சுமக்கத் தொடங்கினேன்.
முதன் முதலாக மதிய சாப்பாட்டுக்கு ஒரு சம்படம். அதுவரை பள்ளிக்கு ஒரு சிறிய தூக்குதான் – எப்பொழுது திறந்தாலும் மோர் சாதமும் எலுமிச்சை ஊறுகாயோ அல்லது கொத்தமல்லி துவையலோதான் இருக்கும்.
முதன் முதலாக கல்லூரிக்கு அருகிலிருந்த மரியா கேண்டினுக்குத் தனியாகச் சென்று வடை வாங்கி சாப்பிட்டேன். பொதுவாக கல்லூரி மாணவர்கள் பலர் தம்மடிப்பதற்காகவே அங்கே கூடியிருப்பார்கள். பக்கத்திலேயே செயின்ட் சேவியர் கல்லூரி வேறு. வியாபாரம் ஓஹோ என்று நடந்து வந்தது என்று நம்புகிறேன்.
முதன் முதலாக, வாரம் ஒரு முறை  நடக்கும் என்.ஸி.ஸி வகுப்புகளில் கலந்து கொண்டேன். வகுப்புகள் முடிவில் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியிலிருந்த அன்னபூர்ணா ஹோட்டலிலிருந்து வாங்கி வந்த பூரிக் கிழங்கு கிடைக்கும். அதுவரை அதிகமாக பூரிக்கிழங்கு நான் சாப்பிட்டது கிடையாது. எப்பொழுதாவது வீட்டில் அம்மா இல்லாத நாட்களில் நெல்லை சுவாமி சன்னிதிக்கு எதிரே அமைந்திருந்த போத்தி ஹோட்டலிலிருந்து கிழங்கு மட்டும் விலைக்கு வாங்குவார்கள். ஒரு சின்ன பொட்டலத்திற்கு ஆறு பேர் போட்டி வீட்டில். பூரிக்கிழங்குக்காகவே தவறாமல் என்.ஸி.ஸி வகுப்புகளுக்குப் போவேன்.
பஸ்ஸில் தினமும் பயணம் செய்யும் பொழுது என்னை விட வயதில் மிகவும் மூத்த, ஆனால் மிக அழகான ஒரு பெண்மணியை முதன் முதலாக ரசித்துப் பார்க்கத் தொடங்கி சொல்ல முடியாத ஒரு ஏக்கத்தை அனுபவித்திருக்கிறேன்.
முதன் முதலாக, எனது படிப்பிற்காக லோன் ஸ்காலர்ஷிப்புக்கு விண்ணப்பம் கொடுத்தேன்.
முதன் முதலாக, என் ஆயுளுக்கும் நண்பனாக இன்றும் இருக்கும் ஆழ்வானை சந்தித்தேன்.
முதன் முதலாக, தனியாக சினிமாத் தியேட்டர் போவதற்கு அனுமதிக்கப்பட்டேன்.
முதன் முதலாக, எனக்கென்று கையில் பைசா புழங்கத் தொடங்கியது. அதைப் பற்றிச் சொல்லப் போகத்தான் இதை எழுத ஆரம்பித்தேன்.

என் அப்பா எனக்கு ஒவ்வொரு நாளும் ஐம்பது பைசா பஸ் செலவுக்காக கொடுப்பார்.  டவுணில் நைனார் குளக்கரையில் ஒரு பஸ் நிறுத்தம் உண்டு. பொதுவாக வீட்டில் அம்மா சமையல் முடித்து, நாங்கள் சாப்பிட்டு கிளம்புவதற்கு தாமதமாகிவிடும். தினமும் பஸ் நிறுத்தத்திற்கு ஓட்டமும் நடையுமாகத்தான் போக வேண்டியிருக்கும். கையில் சூடான சாப்பாட்டுடன் சம்படம் வேறு. ஒவ்வொரு கையாக மாற்றி மாற்றி வைத்துக்கொண்டு ஓடுவேன். பஸ் சார்ஜ் 22 பைசா என்று ஞாபகம். மாலை திரும்பும் பொழுதும் சுவாமி சன்னதியில் இறங்கிவிடுவேன். அப்படியாக தினமும் 44 பைசா செலவு. ஆறு பைசா மிச்சம். ஐந்து நாட்கள் கல்லூரி சென்று வந்தால் 30 பைசா எனக்கு மிச்சம். இந்த சிறு சேமிப்பை நான் என்ன செய்கிறேன் என்று என் அப்பா கேள்வி கேட்டதில்லை.

கொஞ்சம் பழக்கப்பட்ட பிறகு, காலையில் நைனார் குளத்திலிருந்து பஸ் பிடிப்பதற்குப் பதிலாக, கொஞ்ச  தூரம் கூட நடந்து சென்று  நெல்லை முனிசிபல் அலுவலகம் எதிரில் ஒரு நிறுத்தத்திலிருந்து பஸ் ஏறத் தொடங்கினேன்.  இங்கிருந்து கல்லூரிக்கு 17 பைசாதான் டிக்கெட். இன்னும் ஒரு ஐந்து பைசா மிச்சம். ஆனால், எல்லா நாளும் சாத்தியப்பட்டதில்லை.  மாலை நேரத்தில், கல்லூரி வாசலிலிருந்து பஸ் ஏறுவதற்குப் பதிலாக பாளையங்கோட்டை ஊசிக்கோபுரம் நிறுத்தம் வரை நடந்து சென்று பஸ் பிடிக்கத் தொடங்கினேன். சுமார் ஒன்றரை கிலோமிட்டர் தூரம் இருக்கும் என்று நினைக்கிறேன். இங்கிருந்தும் டவுணுக்கு 17 பைசாதான். அப்படியாக வாரம் குறைந்த பட்சம் 30 பைசாவும் அதிக பட்சம் 60 பைசாவும் எனக்கு மிச்சம். இந்த சிறு சேமிப்பு மிகப் பெரிய உதவியாக இருந்தது. அது எப்படியென்றால்:

என் கையில் எப்பொழுதும் இரண்டு மூன்று ரூபாய் புழக்க்கதில் இருக்கத் தொடங்கியது. முதலாளியானேன். அவ்வப்பொழுது என் அம்மா என்னிடம் அவசர செலவுக்கு கடன் வாங்கிக் கொள்வாள். கறாராகத் திருப்பிக் கொடுத்து விடுவாள். கொஞ்சம் முன்னே பின்னே திரும்ப வரும் அவ்வளவுதான்.

அது வரை, என்னுடைய ஒவ்வொரு செலவுக்கும் என் அப்பா பணம் கொடுக்கும் வரைக் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த நிலைமை மாறி, நான் முன் பணம் போட்டுச் செலவு செய்துகொண்டு, என் அப்பாவிடம் பணம் முன்னே பின்னே வாங்கிக் கொள்வேன். இந்த முறையை என் அப்பாவும் கண்டுகொண்டதில்லை. முதன் முதலாக  நிதிக்கட்டுப்பாட்டிலிருந்து எனக்கு விடுதலை.

இதையெல்லாம் விட முக்கியமாக இருந்தது, விஸ்வனாதன் –ராமமூர்த்தி இரட்டையர்களின் திரையிசையின் மீது எனக்கிருந்த பைத்தியம்தான். (இன்றும் கூட அப்படித்தான்). அன்றைய நாட்களில் பல திரைப்படங்கள் இந்த இரட்டையர்களின் சங்கீதத்தில் பிரபலமானவை. தவறாமல் அவர்கள் இசையமைத்த எல்லா படங்களையும் பார்த்து விடுவேன். (என் அம்மாவுக்கும் அவர்கள் இசை மீது அலாதியான விருப்பம் இருந்தது. நான் மறந்தால்கூட என்னை ஞாபகப்படுத்துவார்கள்.) முக்கியமாக நடிகர் சிவாஜி கணேசன்  நடித்திருந்தால் தவற மாட்டேன். அப்படித் தொடங்கியதுதான் என்னுடைய சினிமாப் பைத்தியம். அதே நேரத்தில் டவுண் தியேட்டர்களில் முதன் முதலாக பல ஆங்கில, இந்திப் படங்களை வெளியிடத் தொடங்கினார்கள். சைக்கோ, பேர்ட்ஸ், கிளியோபாட்ரா, இன்னும் பல ஞாபகம் உடனே வரவில்லை. சினிமாவுக்குத் தரை டிக்கெட் வெறும் முப்பது பைசாதான். வாரம் ஒரு திரைப்படம் என்று பார்க்கத் தொடங்கினேன். ஆனால், பியூசி முடிப்பதற்க்குள் 102 படங்கள் பார்த்ததாக ஒரு ஞாபகம்.

எல்லாமே அந்த தினப்படி ஐந்து பைசா சேமிப்பில் நடந்ததுதான். அன்று அது ஒரு பெரிய தொகை.

பியூசி இறுதித் தேர்வின் பொழுதுதான் சங்கம் ஹிந்தித் திரைப்படம் திருநெல்வெலி லக்ஷ்மி தியேட்டரில் (இப்பொழுது பெயர் மாறி விட்டது) வெளியிட்டார்கள். ஒரு முப்பது நாட்கள் தியேட்டரில் ஓடியது என்று ஞாபகம். இரண்டு தடவைதான் தியேட்டரில் படம் பார்த்தேன். மற்ற நாட்களிலெல்லாம், தினமும் தியேட்டர் வாசலில் நின்றுகொண்டு கடைசிப் பாட்டு முடியும்வரை எல்லா பாட்டுக்களையும் கேட்டுக்கொண்டிருப்பேன். என்னை தினமும் தியேட்டர் வாசலில் காணலாம். அப்படித்தான் சங்கர் ஜெய்கிஷன் இசைக்கும் அடிமையானேன். தினமும் இரவில் 10 மணிக்கு ராணுவ வீரர்களுக்காக ஒலிபரப்பப்பட்ட ஜெயமாலா நிகழ்ச்சியை தினமும் கேட்பேன். பியூசி இறுதித் தேர்வு தொடங்கியது. ஆங்கிலப் பரிட்சைக்கு முந்தைய தினம். எங்கள் வீட்டிற்குப் பின்புறம் ஒரு சாஸ்தா கோவில் இருந்தது. (இன்னமும் இருக்கிறது). அங்கு கோடைகால பூஜை என்ற பெயரில் மாலை நான்கு மணிக்கெல்லாம் ஒலிபெருக்கி வைத்து பாட்டு போட்டு அலற விட்டார்கள். நிறுத்துவதாகத் தெரியவில்லை. மணி ஐந்தே முக்கால். பாடம் படிக்க முடியவில்லை. பாட்டின் தொல்லை. பார்த்தேன். புத்தகத்தை மூட்டை கட்டிவிட்டு, ‘இப்பொ  வரேன்’ என்று வீட்டில் சொல்லிவிட்டு லக்ஷ்மி தியேட்டருக்கு ஓடினேன். ஆறு மணிக்கு சங்கம் படம் ஆரம்பித்துவிடும். நீளமான படம். படத்துக்கு இரண்டு இடைவேளை வேறு. ஜாலியாக படம் பார்த்தேன். ‘தோஸ்த், தோஸ்த் நா ரஹா’ பாட்டு முடிந்ததும் எழுந்து வந்து விட்டேன். இரவு இரண்டு மணி வரை மண்ணெண்ணெய் விளக்கில் படித்தேன். மின்சார விளக்குப் போட்டால் வீட்டில் இருக்கிற ஒரே அறையில் படுத்திருந்த எல்லோருமே விழித்துக்கொண்டு விடுவார்கள். அடுத்த நாள் ஆங்கிலப் பரிட்சையை நன்றாகவேதான் எழுதியிருந்தேன்.

நானா இப்படி இருந்தேன் என்று பல  நேரங்களில் யோசித்துப் பார்க்கிறேன்.


 ……. மலரும் நினைவுகளைத் தொடரலாம் என்று ஒரு எண்ணம்…. பார்க்கலாம்.

1 comment:

  1. உனது கட்டுரைகுழந்தைகளுக்குமிகவும் தேவை

    இன்குஒருசில குழந்தைகளை பார்க்கிறேன்

    சேமிப்பு , ஒத்துழைப்பு ஆகியவை எப்பொழுது தேவை
    என்பதை அழகாக எடுத்து கா ட்டியிருக்கிறது

    அறிவை வளர்த்தும் ரசனை மிகவும் தேவை
    என்பதும் நன்று விளக்கபட்டிருக்கிறது

    அவசியம் நல்ல பதில் தென்காசி குழந்தைகள்
    எழுதுவார்கள் என்று நம்புகிறேன்

    வாழ்த்துக்கள்

    பத்மநாபன்

    மிக்க நன்றி, பத்மனாபன்.

    ReplyDelete