Total Pageviews

Friday, June 26, 2015

In defense of living in an old age home: முதியோர் இல்லத்தில் வாழ்வது ஒன்றும் குறைச்சலில்லை

சாதாரண நடுத்தர வர்க்கத்தில் பிறந்து, வளரும் பருவத்தில் தட்டுப்பாட்டை மட்டுமே பரவலாக அனுபவித்த எனக்கு வறுமை மிகக் கொடுமையானது என்று அன்றே தோன்றியிருக்கிறது.

வீட்டு வாடகை கொடுப்பதற்கு தாமதமாகியிருக்கும் பொழுது வீட்டு சொந்தக்காரரின் பச்சையான ஏச்சு வார்த்தைகள்,  ஒருவரின் சம்பாத்தியத்தில் ஆறு நபர்கள் சாப்பிட வேண்டிய கட்டாயம் என்ற நிலையில் அன்றாட உணவில் அதிகம் பார்த்த கீரை, வாழைக்காய், பழங்குழம்பு, தண்ணீர் கலந்த மோர், (உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயம் எல்லாம் ஆண்டிற்கு ஒன்றிரண்டு முறைதான்) உடம்பு முடியாத நேரங்களில் பிரபல டாக்டருக்கு பத்து ரூபாய் கொடுக்க வேண்டுமே என்று பயந்து இரண்டு ரூபாய் டாக்டரிமே மருந்து வாங்கிக்கொண்டது, பள்ளியில் ஃபீஸ் கட்டத் தாமதமாகிய போது கூனிக் குறுகியது, இரண்டு பைசாவோ, ஐந்து பைசாவோ ஞாபகமில்லை குச்சி ஐஸ்க்ரீம் தினமும் வாங்க முடியாமால் ஏங்கியது, மேல் நிலைப் பள்ளியில் முதல் நாளன்று யூனிஃபார்ம் போடவில்லை என்பதற்காக அடி வாங்கியது…இப்படி சின்ன சின்ன சமாச்சாரங்கள்.

வறுமை கொடியது. இயலாமை கொடியது. தட்டுப்பாடு கொடியது.

நல்ல வேலையில் அமர்ந்து வசதியாக வாழ வேண்டும் என்று அன்றே உறுதி பூண்டிருக்கிறேன்.

தட்டுப்பாட்டையும், இயலாமையையும் இளம் வயதில் பார்த்துப் பார்த்து மனதுக்குள் இன்னொரு வைராக்கியம். நம் குழந்தைகள் வளரும் பொழுது அவர்களுக்கு வறுமையில்லாத, தட்டுப்பாடில்லாத வாழ்க்கையைக் கொடுக்க வேண்டும். அவர்கள்  படிப்பதற்கு அவர்கள் தலையில் எந்த கடனையும் சுமையாக ஏற்றக் கூடாது. அவர்கள் வாழ்க்கையில் நன்கு படித்து நல்ல வசதியுடன் வாழ எல்லாவிதத்திலும் நான் ஒத்துழைக்க வேண்டும்.

இறைவன் அருளால், எல்லாம் நல்லவிதமாகவே நடந்தது.  நான் படித்து முடித்தவுடனேயே எனக்கு நல்ல வேலை கிடைத்தது. குழந்தைகளும் நன்கு படித்தார்கள். நீண்ட வங்கிப் பணிக்குப் பிறகு வெளி நாட்டில் வேலை பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. குழந்தைகளுக்கும் நல்ல பள்ளி, கல்லூரி வாழ்க்கையைக் கொடுக்க முடிந்தது. அவர்களை வெளி நாட்டுக்கு அனுப்பவேண்டும் என்று தீவிர ஆசை. பொருளாதார ரீதியாக நன்கு வாழ வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை. அந்த வாய்ப்பும் கிடைத்தது. இன்று இரண்டு குழந்தைகளும் அமெரிக்காவில் வேலை பார்க்கிறார்கள். அடிக்கடி அமெரிக்கா சென்று அவர்களுடன் ஒரு சில மாதங்கள் கழித்து வருகிறோம்.

எங்களுக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது. குழந்தைகளுடன் அமெரிக்காவில் இருக்க வேண்டுமா அல்லது இந்தியாவில் நமக்குப் பிடித்த வாழ்க்கையை தொடர வேண்டுமா என்பது ஒரு முக்கியமான கேள்வி.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு நெருக்கமான வயதான ஒரு உறவினரிடம், ‘எங்களுடன் ஒரு சில மாதங்கள் வந்திருந்து தங்கியிருங்களேன். உங்களுக்கும் பிடித்த ஊர்தானே!’ என்று கேட்டிருக்கிறேன். அதற்கு, ‘வயதானவர்களை வீட்டில் வைத்து மேனேஜ் செய்வது எவ்வளவு கடினமானது என்பது உனக்குத் தெரியாது. அதனால்தான் இப்படி தாராளமாக எங்களை உன்னுடன் வந்திருக்கக் கூப்பிடுகிறாய்/ என்று பதில் கூறியிருக்கிறார். அந்த பதிலின் உண்மையான அர்த்தத்தை இன்று நான் உணருகிறேன். என்னுடன் நெருக்கமான சிலர் தங்களது வயதான அம்மாவையோ அல்லது அப்பாவையோ தங்களுடன் வைத்துக்கொண்டு தங்கள் விருப்பம்போல் எதையும் செய்யமுடியாமல் தவிப்பதைப் பார்த்திருக்கிறேன். மிகவும் அன்போடவே தங்கள் பெற்றோர்களை கவனித்துக்கொள்கிறார்கள். இருந்தும், அவர்கள் அடி மனதில் விருப்பம் போல நாலு இடத்துக்குப் போக முடியவில்லையே, நாலு காரியம் செய்ய முடியவில்லையே என்ற சலிப்பு கண்டிப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நம்மால் அடைய முடியாததை நம் குழந்தைகளாவது அடையவேண்டும் என்று ஆசைப்பட்ட எல்லா ஏழை மற்றும் நடுத்தரப் பெற்றோர்களில் நானும் ஒருவன் தான். நம் குழந்தைகளுக்கும் பல ஆசைகளை வளர்த்து விட்டிருக்கிறோம்.

வயதான பெற்றோர்களை வீட்டில் வைத்து கவனித்துக்கொள்ளும் பாக்கியத்தை நான் பெறவில்லை.  நாங்கள் வசதியாக வாழத் தொடங்கும் முன்னரே அவர்கள்  இறைவனடி சேர்ந்து விட்டார்கள். இறைவன் அருளால், சுதந்திரமாகவே வாழ்ந்து பழகிய எனக்கு, குழந்தைகள் சுதந்திரமாக, நல்ல வசதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் பொழுது அவர்களுடன் தொடர்ந்து வாழ வேண்டுமென்றால் -  அதுவும் வெளி நாட்டில் வாழ்வதென்றால்  -என்னுடைய சுதந்திரத்தை பறிகொடுக்காமல் வாழ முடியுமா என்பது ஒரு முக்கியமான கேள்வி., அங்கே அவர்கள் உதவியில்லாமல் எங்கேயும் போக முடியாது, எதையும் செய்யவும் முடியாது. யாரையும் பார்க்க முடியாது. இந்தியாவிலேயே குழந்தைகள் வேலை பார்த்து வந்தால் கூட அடிக்கடி பணி மாற்றம் நடக்கும். அல்லது நல்ல வேலைக்காக வேறு, வேறு ஊர்களுக்கு இட மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். வெவ்வேறு ஊர்களுக்கு மாற்றலாகிப் போக வேண்டியிருக்கும். பதவி உயர்வு, அடிக்கடி வெளியூர் பயணம், கணவன்-மனைவி இருவருக்கும் வேலை என்று பரபரப்பாக அவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும்.  வயதான பெற்றோர்களை கவனித்துக் கொள்ள வேண்டுமே என்ற கவலையில் அவர்கள் பல தியாகங்களைச் செய்யவேண்டியிருக்கும். பழங்காலங்களில், கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தபோது அதிக சிரமமில்லாமல் இருந்தது. இன்றோ ஒவ்வொருவருக்கும் அவரவர் குடும்பம், அவரவர் வாழ்க்கை. பல சமயம் நமது சுயமான சிந்தனைகளும், கருத்துக்களும் அங்கே எடுபடாது.

போட்டிகள் நிறைந்த உலகம். குழந்தைகளுடன் தொடர்ந்து நாம் இருக்க வேண்டுமென்றால் நமக்கு உடம்பு ஆரோக்கியமாக இருக்கவேண்டும். அவர்களுக்கும், அவர்கள் குழந்தைகளுக்கும் ஏதோவொரு விதத்தில் உதவியாக இருக்கவேண்டும். இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்று நம்புகிறேன். வயதான பெற்றோர்களை குழந்தைகள் கவனித்துக்கொள்வது ஒரு ஆரோக்கியமான சமாச்சாரம்தான். ஆனால், எவ்வளவு நாட்கள்தான் பார்த்துக்கொள்வார்கள்? பல இடங்களில் குழந்தைகளுடனும், மருமகன், மருமகள்களுடனும் கருத்து வேறுபாடு, மனக்கசப்புதான் ஏற்படுகிறது. வயதாக, வயதாக நமக்கும் இனம் புரியாத பல கவலைகள், தனிமைப்படுவது, பாதுகாப்பின்மை போன்ற உணர்ச்சிகள் நம்மை வாட்டுகின்றன. நமது குழந்தைகளிடமும்  நமக்கு எதிர்பார்ப்பு கூடுகிறது. அவர்களுக்கோ அவர்கள் பிரச்சினை. நமது பிரச்சினையை உடனுக்குடன் கவனிக்கவில்லையென்றால் நமக்கும் ரோசம் வருகிறது. பேரக்குழந்தைகளுடன் அவர்கள் சிறியவர்களாக இருக்கும்பொழுது  நாம் நேரத்தை செலவிடும்பொழுது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், அவர்கள் வளர, வளர அவர்களுக்கும் நமது துணை தேவையற்றுப் போகிறது. பாசம் இருக்கலாம். ஆனால், அவர்களின் தேவைகள் மாறத்தொடங்கும் பொழுது நம்மால் ஒன்றும் செய்யமுடிவதில்லை.

நாம் தனியாகவே வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்று நினைத்தாலும் எத்தனை ஆண்டுகள்தான் ஓட்டமுடியும்? பல வயதான பெற்றோர்கள் குழந்தைகளுடன் சென்று வாழப் பிடிக்காமல் தனியாக அவர்கள் ஊரிலேயே வாழும்பொழுதும் பல பிரச்சினைகள். அவர்களுக்கு உடல் நலம் குன்றிவிட்டால் எத்தனை முறை குழந்தைகளால் வந்து, வந்து பார்க்க முடியும். எனக்குத் தெரிந்து ஒரு சில வயதானவர்களும் அவர்கள் குழந்தைகளும்  இது காரணமாக சிரமப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

இன்றைய மருத்துவ உலகமோ, மனிதர்களின் வாழ்நாளைக் கூட்டிக்கொண்டு போவதில் வென்றிருக்கின்றன. மூன்று முறை ‘பை பாஸ்’ சர்ஜரி பண்ணிக்கொண்டவர்கள் கூட எண்பது எண்பத்தைந்து வயது வரை வாழ்கிறார்கள். ஆனால், அவர்கள் வாழ்க்கை எப்படிப் பட்டது? பெரும்பாலும் ஈஸிச்சேர் வாழ்க்கைதான். நாள் முழுவதும் பல்வேறு மாத்திரை மருந்துகள். காலையில் வெறும் வயிற்றில், சாப்பாட்டுக்கு முன்பு, சாப்பிடும்போது, சாப்பாட்டுக்குப் பின், தூங்குவதற்கு முன்பு என்று பல வகை மாத்திரை மருந்துகள்.

என்னைப் போன்ற பெற்றோர்கள் பின் என்னதான் செய்யலாம்?

என்னைப் பொறுத்தவரை உடல் நலம் நன்றாக இருக்கும்பொழுதே ஏதேனும் ஒரு முதியோர் இல்லத்துடன்  நம்மை இணைத்துக்கொள்ளலாம். உடலால், மனதால், புத்தியால், பணத்தால் இயன்ற உதவியை அந்த முதியோர் இல்லத்தில் இருக்கும் மற்ற முதியவர்களுக்குச் செய்யலாம். அருகிலிருக்கும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு நமக்குத் தெரிந்ததை சொல்லிக்கொடுக்கலாம். பண வசதியிருந்தால் நாம் தங்கியிருக்கும் முதியோர் இல்லத்தில் பண வசதியில்லாத இன்னொரு முதியவரை கவனிக்கும் செலவை ஏற்றுக்கொள்ளலாம். பல முதியோர் இல்லங்களில்  நன்றாகச் சமையல் செய்பவர்கள் கிடைப்பதில்லை. சமையல் தெரிந்திருந்தால் மற்றவர்களுக்குச் சமைத்துக் கொடுக்கலாம். காய்கறிகள் நறுக்கிக் கொடுக்கலாம். வசதியிருந்தால் ஒரு காரும் டிரைவரும் வைத்துக்கொள்ளலாம். மற்ற முதியவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அவர்களை நாலு இடங்களுக்குக் கூட்டிப்போகலாம். நம்மிடம் பணமில்லையென்றால், நம் குழந்தைகளிடம் கேட்டு வாங்கிக் கொள்ளலாமே! அவர்கள் முடியாதென்றா சொல்லப் போகிறார்கள்.  நமது குழந்தைகளும் சுதந்திரமாக அவர்கள் விருப்பம் போல மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே! நம்மை யாரோ  நன்றாகப் பராமரிக்கிறார்கள் என்று அவர்களுக்கும் நிம்மதியாக இருக்கும். இதில் தவறு என்ன இருக்கிறது?
மாறிவிட்ட இந்த உலகில் வயதான பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கையை தன்மானத்தோடு தங்கள் விருப்பப்படி எந்தவித கட்டாயமும் இல்லாமல் முதியோர் இல்லத்தில் வாழ்வதில் எந்தக் கேவலமும் இல்லை என்பது என் கருத்து. மனதைப் பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். அவசியமும் கூட.


என்னைப் பொறுத்தவரை முதியோர் இல்லத்தில் மகிழ்ச்சியாக வாழ என்னை தயார் படுத்திக்கொண்டுள்ளேன். என் குழந்தைகள் நல்ல குழந்தைகள். அவர்களுக்கும் எந்தத் தயக்கமும் இருக்கக்கூடாதென்று நம்புகிறேன். 

No comments:

Post a Comment