Total Pageviews

Saturday, August 20, 2016

லடாக் பயணம் - ஆகஸ்டு 2016ஆகஸ்ட் 18, 2016

இந்த ஆண்டு மே/ஜூன் மாதத்தில் ஐரோப்பா பயணம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் வலையில் துழாவிக்கொண்டிருந்தேன். எங்களுக்கு ஜூன் 15-ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி வர டிக்கெட் வாங்கியிருந்தோம். வரும் வழியில் ஓரிரு ஐரோப்பிய நாடுகளைப் பார்க்கவேண்டும் என்று ஆவல். ஆனால், தன்னுடைய முட்டுவலியை காரணம் காட்டியும், பல மாதங்களாக இந்தியாவிலிருந்து வெளியே இருக்கிறோம் என்றும் கூறி என் மனைவி என் ஐரோப்பா பயணக் கனவுக்குத் ‘தடா’ போட்டுவிட்டாள். என்னால் மறுக்க முடியவில்லை. இருந்தும் அவளிடம் பலவிதமாகப் பேசி, இந்தியா வந்த பிறகு இதுவரை நாங்கள் சென்றிராத குஜராத், நேபாளம், கேங்க்டாக் என்ற இந்த மூன்று இடங்களில் ஒரு இடத்தையாவது சுற்றிப்பார்க்க ஒத்துக்கொள்ள வைத்தேன். வலையில் தேடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லடாக் பற்றிய சுற்றுலாப் பயணுத்துக்கான விளம்பரம் ஒன்று என் மின்னஞ்சல் பெட்டியில் விழுந்தது. அந்த விளம்பரத்தைப் படித்த உடனேயே இந்தியாவுக்கு சென்ற பிறகு லடாக்குக்குத்தான் போகப் போகிறோம் என்று எனக்குள் தோன்றியது.  உடனேயே லடாக் பற்றிய முக்கியத் தகவல்களை கமுக்கமாகச் சேகரிக்கத் தொடங்கினேன்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் மூன்று பிரதேசங்களில் ஒரு பிரதேசமான லடாக் மிக அதிக உயரத்திலிருக்கும் ஒரு பாலைவனம். மழை மறைவுப் பகுதியானதினால் இங்கு மழை மிகக் குறைவாகவே பெய்கிறது. அதனால், இங்கு பசுமையான மரம், செடி கொடிகளைக் காண்பதரிது. 9000 அடி முதல் 22000 அடி வரை உயரங்களில் லடாக்கின் பல பகுதிகள் இமயமலையில் அமர்ந்திருக்கின்றன. அதிக உயரம் காரணமாக பிராண வாயு குறைவாகவே கிடைப்பதால் இங்கு தங்கி பழக்கமில்லாத சுற்றுப் பயணிகளுக்கு மூச்சு முட்டல், தலை சுற்றல் போன்ற பல சங்கடங்கள் ஏற்படலாம். சில நேரங்களில் அவை உயிருக்கே கூட ஆபத்து விளைவிக்கக் கூடியது.  பொதுவாக ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் வரை கோடை காலம். அதனால் சுற்றுலாப் பயணிகளும் மிக அதிகமாக அங்கு போகிறார்கள். லடாக்கின் பன்னாட்டு எல்லையில் ஒரு பக்கம் பாகிஸ்தானும் இன்னொரு பக்கம் சீனாவின் ஆதிக்கத்திலிருக்கும் திபெத்தும் இருக்கின்றன.  இங்குள்ள மக்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்களாகவோ அல்லது புத்த மதத்தை தழுவிய திபெத்தியர்களாகவோ இருக்கிறார்கள். இருந்தாலும், பொதுவாக மதப் பிரச்சினைகள் என்று இந்தப் பகுதியில் எதுவுமில்லை என்று கேள்விப்பட்டேன். சுற்றுலாதான் இங்கு முக்கிய தொழில். அதைச் சார்ந்தே இங்குள்ள மக்கள் வாழ்கிறார்கள். அதுவும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்து விடுகிறது.  அதற்குப் பிறகு ஆறு மாதங்களுக்கு அவர்களுக்கு ஓய்வுதான். லே மற்றும் கார்கில் லடாக்கின் இரண்டு முக்கிய நகரங்கள்.  குளிர்காலத்தில் உயரமான பகுதிகளில் பனி விழுகிறது. இந்தப் பகுதியில் எங்கு பார்த்தாலும் இந்திய ராணுவத்தின் அடையாளம் தெரிகிறது. ராணுவ முகாம்கள், பயிற்சிக்கூடங்கள், அணி வகுப்புகள், என்று பல இடங்களில் ராணுவத்தின் ஆதிக்கம் தெரிகிறது. இந்திய ராணுவம் மட்டும் இங்கேயில்லையென்றால் அருகேயுள்ள பாகிஸ்தானும் சீனாவும் இருக்கக்கூடிய சில பகுதிகளைக்கூட அபகரித்து விடுவார்கள். மிக அதிக உயரமுள்ள, அடிக்கடி நிலச்சரிவுகள், பனிச்சரிவுகள் ஏற்படக்கூடிய கடினமான லடாக் பகுதிகளில் இந்தியன் எல்லைப் பாதுகாப்பு ராணுவத்தினர் (Indian Border Road Organisation) மிக அருமையான பாதைகளை அமைத்துப் சிறப்பாக பாதுகாத்து வருகிறார்கள்.  இந்து  (Indus) லே-யின் மேல்பகுதிகளில் ஒரு முக்கியமான ஆறு.  இன்னொன்று ஜன்ஸ்க்கார் ஆறு.  

லடாக் பற்றிய தகவல்களை சேகரித்தாகிவிட்டது. இனி எப்படி பயணிப்பது என்பதைப் பற்றி தீர்மானிக்க வேண்டியதுதான். மீண்டும் வலையில் ஒரு சில நாட்கள் தேடினேன். நான் பார்த்ததில் தாமஸ் குக், இந்தியா மற்றும் மேக்மைட்ரிப்.காம் இரண்டின் சுற்றுலாப் பயணத் திட்டம் எனக்குப் பிடித்திருந்தது. இருந்தும் தாமஸ் குக்கின் சுற்றுலாப் பயணத்தையே நான் தேர்ந்தெடுத்தேன். அவர்களின் பயணத் திட்டத்தில் பேன்காங் என்ற இடம் சேர்க்கப்பட்டிருந்தது. பேன்காங்கிலிருக்கும் நீல நிற உப்பு ஏரி மிகப் பிரசித்தமானது என்று படித்திருந்தேன். டில்லியிலிருந்து பயணத்தை தொடங்குவதற்கான முன் பணமும் ஆன்-லைனிலேயே செலுத்திவிட்டேன். டில்லியிலிருந்து லே-க்கு போக வர விமானப் பயணம், தங்குவதற்கு விடுதி, காலை உணவு மற்றும் இரவு சாப்பாடு, மூன்று நாட்களுக்கு மட்டும் மதிய உணவு, விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்குக் கூட்டிச் செல்வது, தினமும் சுற்றுலா செல்வதற்கு டோயோட்டா கார் எல்லாம் பயணக் கட்டணத்தில் அடக்கம்.  8 நாட்கள்/7 இரவுகள் சுற்றுலாப் பயணம். லே, நூப்ரா பள்ளத்தாக்கு, பேன்காங் என்ற மூன்று இடங்களை சுற்றிக்காட்டுவதாக அவர்கள் பயணத் திட்டம் அமைந்திருந்தது.

மிக அதிகமான உயரத்தில் ஏழு நாட்களைக் கழிக்கவேண்டும் என்பது என் மனைவிக்கு  நெருடலாகத்தான் இருந்தது. இருந்தும் என் கூட பல இடங்களுக்கு சுற்றிப் பழக்கப்பட்ட அவளுக்கும் நாளடைவில் சுற்றுலா செல்வது பிடித்துப்போய் விட்டது என்பதால் லடாக் பயணத்துக்கு அவளிடமிருந்து பெரும் எதிர்ப்பு எதுவும் வரவில்லை. ‘இருப்பது ஒரு வாழ்க்கை. உடல் ஆரோக்கியமாக இருக்கும்பொழுதே எல்லா ஊர்களையும் சுற்றிப் பார்த்துவிட வேண்டும்’ என்பது என் கொள்கை.  மேலும் ஊர் சுற்றிப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு. ஒன்றிரண்டு மாதங்கள் எங்கேயும் வெளியே சுற்றிப் பார்க்க கிளம்பவில்லையெனில் என் கால்கள் அரிக்கத்  தொடங்கிவிடும். பல ஊர்களை சுற்றிப் பார்த்ததால் பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.  லடாக்கைப் பற்றிய வேறு சில தகவல்கள் எனக்கும் கொஞ்சம் பீதியைக் கொடுத்ததென்னவோ உண்மைதான். நிலச் சறிவுகள், பனிச் சறிவுகள், மோசமான கரடு முரடான பாதைகள், தொலைபேசி வசதியில்லாமை, எல்லைப் பாதுகாப்பு பிரச்சினைகள், அணுக முடியாத இடங்கள் இப்படிப் பல…  இருந்தும்  பயணத்துக்கான ஆயத்தங்களை செய்யத் தொடங்கினோம்.  

டார்ச் லைட், குடை, இருமல், காய்ச்சல், முதுகு வலி, வாயு, அமிலத்தன்மை, வயிற்றுப்போக்கு,  போன்ற எல்லாவிதமான சாதாரண நோய்களுக்கான மருந்துகள், முக்கியமாக அதிக உயரத்தில் தங்கி பழக்கமில்லாவதற்களுக்கு ஏற்படும் மூச்சு முட்டல் போன்ற தொந்திரவுகளுக்கு டயோமேக்ஸ் என்ற மருந்து, குளிர் ஆடைகள், நொறுக்குத் தீனிக்கு வேண்டிய தின்பண்டங்கள், இப்படி இத்யாதிகள்… அதிலும் முக்கியமாக போஸ்ட் பெய்ட் செல்போன் கண்டிப்பாகத் தேவை. ப்ரீ பெய்ட் செல்ஃபோன் காஷ்மீர் பிரதேசத்தில் வேலை செய்யாது. இருப்பதில் பி.எஸ்.என்.எல் ஒன்றுதான் உருப்படியாக வேலை செய்யும் என்றும் கேள்வி.  

தாமஸ் குக் இந்தியா கொஞ்சம் மக்கர் செய்தார்கள். பயணத்துக்குத் தேவையான டிக்கெட், ஹோட்டல் புக்கிங் விவரங்கள், பயணம் செல்லவேண்டிய இடங்களைப் பற்றிய தகவல்கள் இவற்றையெல்லாம் பயணுத்துக்கு மூன்று நாட்கள் முன்புதான் கொடுக்க முடியும் என்று அடம் பிடித்தார்கள். ‘ஐயா, நான் தமிழ்நாட்டில் ஒரு மூலையிலிருந்து ரெயில் மார்க்கமாக டில்லி சென்றடைவதற்கான டிக்கெட் வாங்கியிருக்கிறேன். உங்களுடைய ‘மூன்று நாள் முன்பு’ என்கிற திட்டம் எனக்க்கு ஒத்து வராது என்றும், பயணத்தைப் பற்றிய சரியான விவரங்கள் கைக்கு வராமல் தென்காசியிலிருந்து நான் கிளம்ப மாட்டேன் என்றும் மீண்டும் மிண்டும் டோல் ஃப்ரீ நம்பரில் கூப்பிட்டு கத்திய பிறகு ஒரு வழியாக நான் கிளம்புவதற்கு ஒரு நாள் முன்பு எல்லா விவரங்களையும் எனக்கு அனுப்பி வைத்தார்கள். தென்காசியிலிருந்து சென்னை, சென்னையிலிருந்து டில்லி என்று மூன்று இரவுகள் ரயிலில் பயணம் செய்தோம். ஆகாய விமானத்தில் டில்லிக்குச் செல்வதை நான் விரும்பவில்லை. என்னிடம் நேரம் இருக்கிறது. அவசரமாக டில்லியில் போய் இறங்கவேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் எனக்கு இல்லை. அதைத்தவிர சாவகாசமாக் புத்தகங்களைப் படித்துக்கொண்டும், ஏதோ ஒன்றை கொறித்துக்கொண்டும், தூங்கிக்கொண்டும் ரயிலில் பயணிப்பது போல விமானத்தில் வசதி கிடையாது.

ஆகஸ்ட் 6-ஆம் தேதி காலையில் டில்லி சென்றடைந்து கரோல்பாக்கில் ஐ.ஆர்.சி.டி.சி அங்கீகாரம் பெற்ற ஒரு ‘ஓயோ’ (OYO) ஹோட்டலில் தங்கிவிட்டு, 7-ஆம் தேதி லே செல்வதற்கு காலை 4.30 மணிக்கு டில்லி விமான நிலையத்தை அடைந்தோம். சமீப காலங்களில் நாங்கள் பயணித்த பல இடங்களை விட மிக அதிக எதிர்பார்ப்புடன் லடாக் செல்வதற்கு விமானத்துக்கு காத்திருந்தோம்.

மிக அருமையான, மறக்க முடியாத சுற்றுலாப் பயணம்.  

பயணக் கட்டுரையை முழுவதும் படிக்க நீங்கள் இன்னும் ஒன்றிரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டும். மன்னிக்கவும்,

தொடரும்.


                                                

No comments:

Post a Comment