Total Pageviews

Tuesday, September 13, 2016

உணவு உற்பத்தியைப் பற்றி

14.09.2016 தேதியிட்ட ஆனந்த விகடனில் “ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி – 13” என்ற ஒரு கட்டுரைத் தொடரின் அந்த வாரப் பகுதியைப் படிக்க நேர்ந்தது. அடிப்படையில், இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல இன்றைய உணவுப் பொருட்களின் நச்சுத் தன்மையைப் பற்றி இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாதென்றே நினைக்கிறேன். ஆனால், கட்டுரையை தந்திருக்கும் விதத்தைப் பற்றியும், அதில் கண்ட சில குறிப்பிட்ட கருத்துரைகளைப் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்ததில் எனக்கு சில மாற்றுக் கருத்துக்கள் தோன்றின. அவற்றைப் பற்றி சொல்ல விரும்புகிறேன்.
விஞ்ஞான வளர்ச்சி என்பது மனிதனின் அறிவு வளர்ச்சி. ஒவ்வொரு பொருளைப் பற்றியும் மனிதனின் அறிவு வளர வளர விஞ்ஞானம் வளர்வதாகக் கொள்கிறோம். அல்லது அறிவியல் வளர்ச்சி என்கிறோம்.
அறிவியல் வளர்ச்சி என்பது இரண்டு பக்கமும் கூர்மையான கத்தியைப் போன்றது. அது எப்படி வேண்டுமானாலும் இயங்கலாம். அதைப் பயன்படுத்துபவர்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சுமார் 50-60 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் எங்கு பார்த்தாலும் பற்றாக்குறைதான் தென்பட்டது. உணவுப் பண்டங்கள், எரிபொருட்கள், தண்ணீர், பால், மருந்து வகைகள், வேலை வாய்ப்புகள், இப்படி எதை எடுத்தாலும் தட்டுப்பாடுதான். பள்ளி நாட்களில் நான் நேரில் கண்டு அனுபவித்திருக்கிறேன். உணவு விடுதிகளைக் கூட வாரத்தில் ஒரு நாள் மூடி விடுவார்கள். எல்லாவற்றிற்கும் ரேஷன் கடைக்கு அலைய வேண்டியிருக்கும். ரேஷன் கொடுக்கும் தினத்தில் வீட்டிலுள்ள பெண்மணிகளுக்கும், வயதானவர்களுக்கும் வேறு எந்த வேலையும் செய்யமுடியாது. ரேஷன் கடைகளில் அவ்வளவு கூட்டம் இருக்கும்.
மக்கள் தொகையோ பெருகிக்கொண்டே இருந்தது. குடும்பக் கட்டுப்பாடெல்லாம் கிடையாது. அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவுமில்லை. தொத்து வியாதி என்பது சர்வ சகஜம். காலரா, வாந்தி பேதி, சிற்றம்மைக்கு பல உயிர்கள் பலியாயிருக்கின்றன. அரசாங்கத்திடமோ நிதி வசதி குறைவு. ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தது. பல நாடுகளிடம் கையேந்தி நின்றிருக்கிறோம். அங்கே உண்ண முடியாத உணவுப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்து பொது மக்களுக்கு இலவசமாக வினியோகம் செய்திருக்கிறோம். பசி, பட்டினி என்பது ரொம்ப சர்வ சாதாரணம். எல்லா ஊர்களிலும் எந்த பொது இடங்களிலும் நூற்றுக் கணக்கான ஏழைகள் பிச்சை எடுக்கும் அவலத்தைப் பார்த்திருக்கிறோம். ஏழ்மை தலைவிரித்தாடியிருக்கிறது.
முக்கியமாக, உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு மிகப் பெரிய பூதாகரமான பிரச்சினையாக இருந்தது. பட்டினியை விரட்டியடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் அரசாங்கம் இருந்தது. உணவு உற்பத்தியை பெருக்கியே ஆக வேண்டும் என்ற நிலை. ஜப்பான் போன்ற நாடுகளில் ஒரு ஏக்கருக்கு கிடைக்கும் பயிரில் கால் பங்குகூட நமது நிலத்தில் விளையவில்லை. வளர்ந்த நாடுகளில் மாடுகள் கொடுக்கும் பாலில் மிகச் சிறிய பங்கையே நமது மாடுகள் கொடுத்து வந்தன. மாடுகளையும், ஏரையும், சாணியையும் மட்டுமே நம்பியிருந்த நம்மால் எல்லா மக்களுக்கும் தேவையான அளவு உணவையோ பாலையோ கொடுக்க முடியவில்லை.
இயற்கை தானாக படைத்த  உணவை மட்டும் மனிதன் சாப்பிட்டு வந்த காலம் என்றோ மறைந்துவிட்டது. ஆதி காலத்தில் மனிதன் வெறும் வேட்டைக்காரனாகத்தான் இருந்தான். ஆனால், அவனது அறிவும், விழிப்புணர்வும் வளர்ந்து விவசாயம் செய்யக் கற்றுக்கொண்ட போது, காட்டை அழித்துதான் உணவை உற்பத்தி செய்ய முடிந்தது. உணவு படைக்கப்பட்ட காலம் போய் உற்பத்தி செய்யும் காலம் அப்பொழுதே தோன்றி விட்டது.
உணவு உற்பத்தியை பெருக்க காலம் காலமாக மனிதன் பல வழிகளில் முயன்று இருக்கிறான். 17-18-ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு தொழில் நுட்பம் வெகு வேகமாக வளரத்தொடங்கிய போது பல புதிய இயந்திரங்கள், வேதிப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு விவசாயத்தில் உற்பத்தி பெருகத் தொடங்கியது.  ஒரு நிலப் பகுதியின் அடிப்படை வேதியத் தன்மையை அறிவியல் மூலமாகத் தெரிந்துகொண்டு அதற்குத் தகுந்தாற்போல இயந்திரங்களையும் வேதிப் பொருட்களையும் பயன்படுத்தத் தொடங்கினார்கள். அந்த கண்டுபிடிப்புகள் நம் நாட்டுக்கு வெகு தாமதமாகவே வந்து சேர்ந்தன. பழமையில் ஊறியிருந்த மக்கள் தொடக்கத்தில் இந்த மாற்றங்களை ஏற்க பல ஆண்டுகள் பிடித்தது. பஞ்சாப், ஹரியானா போன்ற ஒன்றிரண்டு மானிலங்கள் மட்டும் நவீன விவசாய முறைகளை துணிச்சலுடன் முயற்சி செய்து பார்த்து வெற்றி கண்டனர். பசுமைப் புரட்சி துவங்கியது. உணவுத் தட்டுப்பாடு குறையத் தொடங்கியது.
அதே நேரத்தில் குஜராத்தில் ஆனந்த் என்ற ஊரில் பால் உற்பத்தியை கூட்டுறவு முறையில் பெருக்கி வினியோகம் செய்யும் முறையை குரியன் என்பவர் துணிச்சலுடன் அறிமுகம் செய்து வெற்றி கண்டார். வெண்மைப் புரட்சியும் துவங்கியது.  எந்நேரத்திலும் பால்  கிடைக்கத் தொடங்கியது.
இந்த முன்னேற்றங்கள் எல்லாவற்றிலும் நன்மை தீமை இரண்டும் கலந்தே இருந்தன. விஷயம் தெரிந்தவர்களுக்கு இது தெரியும். இருந்தும், உற்பத்தி பெருக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது நம் நாடு. எவ்வளவு காலம்தான் மற்ற நாடுகளின் கதவுகளைப் போய் தட்டிக்கொண்டிருப்பது. அதுவும் ஒரு வகையில் யாசகம் தானே!
ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு கட்டத்தில் சில இக்கட்டான சூழ்னிலையில் சிக்கித் தவிக்கும்பொழுது எடுக்கும் முடிவுகளின் விளைவுகள் பலவாறாக இருக்கும். அதன் நன்மை தீமைகளை நாம் அனுபவித்தேயாக வேண்டும். அதிலிருந்து தப்ப முடியாது.
விவசாயத்தில் மட்டும்தானா நச்சுத்தன்மை கூடி விட்டது?  எல்லாவற்றிற்கும் வியாபாரிகளைப் பழிப்பானேன்?
விகடனில் இந்தக் கட்டுரையை எழுதியவர் பழங்காலம் போல நடந்தோ அல்லது மாட்டு வண்டியிலோவா ஒவ்வொரு இடத்துக்கும் செல்கிறார். வாகனங்கள் எவ்வளவு பெருகி விட்டன. எவ்வளவு கரியமில வாயுவை நாம் உட்கொள்கிறோம்!
பேனா கொண்டு மரங்களை அழித்து தயாரிக்கப்பட்ட காகிதத்தில் கை வலிக்க இன்று எத்தனை பேர் எழுதுகிறார்கள். ஒரு கணினியிலோ, அல்லது மடிக் கணினியிலோ அல்லது அலை பேசியிலோதானே எதையும் எழுதுகிறோம் அல்லது குறித்துக்கொள்கிறோம். பயன்படுத்த முடியாத லட்சக் கணக்கான கணினிகளை தூக்கி விட்டெறிந்து விடுகிறோம். அதில் நச்சுத் தன்மை கொண்ட வாயுக்கள் அடங்கிய எண்ணற்ற உதிரிப் பாகங்கள் எவ்வளவு கேடு விளைவிக்கக் கூடும் என்பதை நாம் எங்கே முழுவதுமாக புரிந்து கொண்டிருக்கிறோம்?
ஆஹா, விண்வெளியை வென்றுவிட்டோம் என்று பீத்திக்கொள்கிறோம். இப்பொழுது நம் பூமியில் பல கழிவுகளை அழிக்க முடியாமல் திண்டாடுவதைப் போல இன்று விண்வெளியில் ஆயிரக்கணக்கான விண்கலங்கள் வெடித்துச் சிதறியோ அல்லது பயனற்றுப் போயோ வானத்தில் கழிவாகச் சுற்றிக்கொண்டிருக்கின்றன. இவைகளால் எவ்வளவு கேடு வரக்கூடும் என்று நாம் இன்னும் உணர்ந்துகொள்ளவில்லை. அதற்காக விமானத்தில் பறக்காமல் இருக்க முடியுமா அல்லது செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பாமல்தான் இருக்க முடியுமா?
நூறு ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை மக்கள் நடத்தினார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம்தான். ஆனால் எல்லோரும் ஆரோக்கியமாகத்தான் இருந்தார்கள் என்பது சர்ச்சைக்குரிய விஷயம் என்றே நினைக்கிறேன். ஆரோக்கியமாக இருந்திருந்தால் ஏன் அவர்களது சராசரி ஆயுட்காலம் 50-60 வயதோடு நின்று விட்டது? இன்று இந்தியாவில் ஒரு நபரின்  சராசரி வயது 60-70க்கு மேல். இங்கிலாந்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு முதியோருக்கு அரசாங்கம் கொடுக்கவேண்டிய பென்ஷன் பணத்துக்கு அரசாங்கத்திடம் நிதி வசதியில்லை என்று செய்தி வந்தது. அதனால் வேலையிலிருந்து ஓய்வு பெறும் வயது வரம்பு அங்கே கூட்டப்பட்டது. அந்த நிலை இன்னும் கொஞ்ச ஆண்டுகளில் நம நாட்டுக்கும் வரலாம். அப்பொழுது என்ன செய்வது? சராசரி வயதைக் குறைக்க முடியுமா?
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இறுதியில், நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அறிவியலின் முன்னேற்றத்தை தடுத்து  நிறுத்த முடியாது. கட்டுப்படுத்தவும் முடியாது. முன்னைவிட இன்னும் வேகமாகத்தான் முன்னேறிக்கொண்டிருக்கும். பின்  நோக்கிச் செல்வது ஒரு தீர்வாக முடியாது. முறையாக இன்னும் ஆராய்ச்சி செய்து இந்த அறிவியல் வளர்ச்சியால் ஏற்படும் நச்சுத்தன்மையை எப்படிப் போக்குவது என்பதைக் கண்டுபிடிப்பதுதான் தீர்வாக முடியும். உதாரணத்துக்கு, மின்சார உற்பத்திக்காக செலவிடப்படும் எரிபொருளை சேமிப்பதற்கு இன்னும் அதி தீவிரமாக ஆராய்ச்சி செய்து இயற்கையாக கிடைக்கும் காற்றிலிருந்து, கடல் அலைகளிலிருந்து குறைந்த செலவில் மின்சாரம் தயாரிப்பது எப்படி என்று கண்டு பிடிக்கலாம். அதற்காக, எல்லோரும் பழங்காலம் போல வீட்டில் எண்ணை விளக்கு ஏற்றுங்கள் என்று கூற முடியாது.
ஒரு நதியின் ஓட்டத்தை நாம் கட்டுப்படுத்தவோ, தடுத்து நிறுத்தவோ முடியாது. அப்படிச் செய்தால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். அறிவியல் வளர்ச்சியும் அப்படித்தான்.


No comments:

Post a Comment