‘அமெரிக்கா
வர ஆசைப்படும் அன்பானவர்களே … கொஞ்சம் சிந்தியுங்கள்’ என்று தொடங்கும் முகநூல்
நண்பரின் எழுத்துக்கள் என்னை இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியது. அமெரிக்காவில் மருத்துவ
வசதிகள், மருத்துவதற்கு ஏற்படும் செலவு, போக்குவரத்துக்கு பஸ் வசதி, இந்திய
உணவுகள் கிடைப்பது, ரோட்டில் நடந்து செல்ல முடியாதது, விருப்பம் போல தனியே எங்கும்
செல்ல முடியாதது இப்படி பல இன்னல்களைப் பட்டியலிட்டிருக்கிறார் அந்த நண்பர்.
எந்த
ஒரு இடத்திலும் நமக்குத் தேவையான எல்லா
வசதிகளும் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஒரு சில வசதிகள் இருக்கும். ஒரு சில
அசௌகரியங்களும் இருக்கும். இரண்டும் கலந்தேதான் ஒருவருக்கு எதுவுமே கிடைக்க
முடியும்.
இந்தியா
என்பது சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெரிய நகரங்கள் மட்டுமல்ல. லட்சக்கணக்கான
கிராமப் புறங்களைக் கொண்டது. நகர்
புறங்களில் கிடைக்கும் பல வசதிகள் கிராமப் புறங்களில் கிடைப்பதில்லை. அதற்காக
கிராமவாசிகள் எல்லோரும் நகர் புறத்துக்கு இடம் பெயர்ந்து விடுவதில்லை. உதாரணமாக
நான் வசிக்கும் தென்காசியில் பேர் சொல்லிக்கொள்ளும்படியாக, நவீன சிகிச்சைகள்
கொடுக்கக் கூடிய மருத்துவ மனை என்று ஒன்று கூட கிடையாது. ஏதேனும் எமெர்ஜென்சி என்றால்
அவசரத்துக்கு மருந்தைக் கொடுத்து திருநெல்வேலிக்கோ மதுரைக்கோ அனுப்பி விடுவார்கள்.
பல சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மதுரையிலிருந்தும், திருநெல்வேலியிலிருந்தும் ஒரு
சில மணி நேரங்களுக்காக இங்கே வருகிறார்கள். அவர்கள் வரும் நாளன்று அந்த க்ளினிக்கில் பேய்க்கூட்டம்
கூடியிருக்கும். ஒரு நோயாளிக்கு அதிக
பட்சம் 3 நிமிடங்கள்தான் அந்த சிறப்பு மருத்துவரால் கொடுக்க முடியும். அதில் என்ன
பிரயோஜனம்? அந்த க்ளினிக்கில் ஒரு நாளைக்கு அதிக பட்சமாக 100 டோக்கன்கள் வரை
வழங்குவார்கள். பொதுவாக எந்த சிறப்பு மருத்துவரிடம்
சென்றாலும் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும். அவ்வளவு அதிகமான
நோயாளிகள். அவ்வளவு குறைவான மருத்துவர்கள். தென்காசியைப் போலத்தான் பல கிராமப் புற
ஊர்கள் இருக்கின்றன. பெரிய மருத்துவர்கள் எல்லாம் பெரிய நகரங்களிலேயே தங்கி
விடுகிறார்கள். எந்த தீவிர சிகிச்சைக்கும் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி அல்லது
மதுரைக்குத்தான் ஓட வேண்டியிருக்கிறது. இங்கே என்ன மருத்துவச் செலவு குறைச்சலா? அமெரிக்க
டாலரை ரூபாய்க்கு மாற்றிக் கணக்குப் போட்டால் அங்கே மருத்துவச் செலவு அதிகம் போலவே
தோன்றும். இந்தியாவிலும் பல மருத்துவ மனைகள் பணம் கறப்பதற்காகவே நடத்துவது போலத்
தோன்றுகிறது. இதற்கு நடுவே மனிதாபிமானம் கொண்ட நல்ல பல மருத்துவர்களும் பல
இடங்களிலும் இருக்கிறார்கள்.
இந்தியாவில்
நிலைமை இப்படி இருக்க…
வட
அமெரிக்காவில், சிறப்பு மருத்துவர்களின் அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பது கடினம்
என்பது உண்மைதான். இருந்தும் எமெர்ஜென்சிக்கென்றே பல சிறிய மருத்துவ மனைகள்
இருக்கின்றன. அங்கே நாம் நினைத்த உடனேயே சிறப்பு மருத்துவரைப் பார்க்க முடியாது.
குடும்ப மருத்துவரைப் போன்ற ப்ரைமரி மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே சிறப்பு
மருத்துவரை பொதுவாக பார்க்க முடியும். எமெர்ஜென்சி மருத்துவர் பல இடங்களில் ஒரு
நர்சாகத்தான் இருப்பார். அவர்களுக்கு மருத்துவர்களுக்கு சமமாக மருந்து எழுதிக் கொடுக்க
அதிகாரம் உண்டு. அவர் தேவையென்று கருதினால் வேறொரு மருத்துவருக்கு அவரே ஏற்பாடு
செய்வார். பல நகரங்களில் பெரிய மருத்துவ மனைகள் இருக்கின்றன. இங்கே எப்பொழுது
வேண்டுமானாலும் ஒரு நோயாளி அணுகலாம். ஆனால், ஒரு மருத்துவரிடம் போனால் நோயாளியின்
முழு சரித்திரத்தைத் தெரிந்து கொள்கிறார்கள். ஒரு நோயாளியின் மருத்துவ ரெக்கார்ட்
பத்திரமாக ஆண்டுக்கணக்காக ஒவ்வொரு மருத்துவரிடமும் பாதுகாக்கப்படுகிறது. இங்கு போல
துண்டு சீட்டை எழுதிக் கொடுப்பதில்லை. அங்கே தொட்டால் துடைத்தால் மருத்துவர்களின்
கவனக் குறைவுக்காக நியாயம் கேட்க நீதிமன்றங்களுக்கு மக்கள் போக முடியும் என்பதால்
மருத்துவர்கள் மிகக் கவனமாக நோயாளிகளை கவனிக்கிறார்கள். கவனக் குறைவினால் ஏற்படும்
தவறுகளுக்கு மருத்துவர்கள், மருத்துவ மனைகள் பொறுப்பேற்க வேண்டும். இங்கு போல
தப்பிக்க முடியாது. (சமீபத்தில் எனக்குத் தெரிந்த குடும்பத்தில் மார்பு வலியால்
அவதிப்பட்ட ஒரு முதியவருக்கு இந்தியாவில் ஒரு பெரிய நகரத்தில் ஒரு பெரிய மருத்துவ
மனையில் சுமார் 5-6 லட்ச ரூபாய் செலவு செய்த பிறகு ஊருக்குக் கூட்டிக்கொண்டு வந்த
பிறகு ஏற்பட்ட தொடர் சிக்கலில் இன்னொரு பெரிய ஊரில் இன்னொரு பெரிய மருத்துவ
மனைக்குக் கூட்டிக்கொண்டு போய் இன்னும் 2-3 லட்ச ரூபாய் செலவழிக்க நேரிட்டது. மருத்துவ
மனைக்கு பொறுப்பு என்பது எங்கே இருக்கிறது?
உண்மைதான்.
அமெரிக்காவில் இன்ஷூரன்ஸ் இல்லாமல் மருத்துவம் பார்ப்பது என்பது ஒருவரை
திவாலாவாக்கும் விஷயம்தான். அதனால்தான் அங்கே வேலை பார்க்கும் ஒவ்வொருவரும் தங்கள்
அலுவலகம் மூலமாக க்ரூப் இன்ஷூரன்ஸ் மூலம் தங்களுக்கும், தங்கள் குடும்பத்துக்கும்
முழுக் காப்பீடு செய்துகொள்கிறார்கள். இப்போதைய அமெரிக்க குடியரசு அதிபரின்
‘எல்லோருக்கும் இன்ஷுரன்ஸ்’ திட்டம் பல குறைகள் இருந்தாலும் பல ஏழை குடிமக்களால்
வரவேற்கப்பட்டிருக்கிறது. இன்ஷுரன்ஸ் இருந்து விட்டால் பொதுவாக பயப்பட வேண்டிய
அவசியம் கிடையாது. இருந்தும் சில
நேரங்களில் ஒருவரின் மருத்துவச் செலவை இன்ஷுரன்ஸ் கம்பெனிகள் முழுவதுமாக
ஏற்றுக்கொள்ளாமல் பணம் கட்டச் சொல்லி நோயாளிகளுக்கு பில் அனுப்புகிற பழக்கமும் அங்கே
உண்டு. அது போன்ற நேரங்களில் இன்ஷுரன்ஸ் கம்பெனியுடன் பேச்சு வார்த்தை நடத்தி பில்
தொகையை குறைக்கவும் முடியும்.
எல்லாவற்றிற்கும்
மேலாக அங்கே ஒருவருக்கு கிடைக்கும் மருத்துவம் மிக உயர் தரமாக இருப்பதினால்தான்
நம் நாட்டிலுள்ள வசதி படைத்தவர்கள் (பல முக்கிய அரசியல் வாதிகளும் இதில் அடங்கும்)
மருத்துவத்துக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் என்று பறக்கிறார்கள். ஏன்,
அவர்களெல்லாம் இந்தியாவிலேயே தங்களைக் குணப்படுத்திக் கொள்ளலாமே? ஏன்
தயங்குகிறார்கள்.
அமெரிக்கா
வந்திறங்கிய பல இளைஞர்களையும் தம்பதிகளையும் கண்டிருக்கிறேன். இந்தியாவிலிருக்கும்
பொழுது சோம்பேறியாக, ஹோட்டல் சாப்பாட்டையே நம்பியிருந்த பல இளைஞர்களும் மாணவ
மாணவிகளும் கூட அங்கே போனவுடன் சொந்தமாக சமையல் செய்யவும் வீட்டு வேலை செய்யவும்
கற்றுக்கொண்டு விடுகிறார்கள். திருமணமான இளைஞர்கள் தங்கள் மனைவிக்கு வீட்டு
வேலையில் உதவி செய்கிறார்கள். அவ்வப்பொழுது வெளியேயும் (இங்கே போல)
சாப்பிடுகிறார்கள். இங்கே பர்கர், பிட்சா சாப்பிடுவது பலரிடையே பீத்திக் கொள்ளும்
சமாச்சாரம். அங்கே அது சிக்கனமாக வயிற்றை கழுவும் சமாச்சாரம்
அமெரிக்காவில்
போக்குவரத்துக்கு பல இடங்களில் பஸ் வசதியில்லை என்பது என்னவோ உண்மைதான். ட்ராஃபிக்
ஜாம் என்பது இந்தியாவிலும் மற்றும் எல்லா நாடுகளிலும் பெரிய நகரங்களில் காணப்படுவதுதான்.
அமெரிக்காவில் மட்டும் என்றில்லை. இங்கே பங்களூரில், சென்னையில், மும்பையில்,
டில்லியில் என்ன வாழ்கிறது? அமெரிக்காவில் ட்ராஃபிக் எப்பொழுதும் சீரோடு சென்று
கொண்டிருக்கும். அங்கே காணப்படும் ‘லேன் டிஸ்சிப்ளின்’ மற்றும் ஓட்டுனர்
டிஸ்சிப்ளின் என்பது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிகவும் பாராட்டப் பட வேண்டிய
விஷயம். இங்கே போல தாறு மாறாக அங்கே வண்டி ஓட்ட முடியாது. இங்கே போல லைசென்ஸ்
இல்லாமல் வண்டி ஓட்ட முடியாது. விதிமுறையை மீறினால் விதிப்படி வெளிப்படையான
அபராதம். அமெரிக்க அதிபரின் குழந்தைகள் கூடத் தப்பிக்க முடியாது. இங்கே போல
காவல்காரரிடம் பல்லிளிக்க வேண்டியதில்லை.
சாலைகளின்
தரம் மிக நன்றாக இருக்கிறது அமெரிக்காவில். ஒரு முறை டென்வர் நகருக்கருகே 14000
அடி உயரத்திலிருக்கும் ஒரு சுற்றுலாத் தலத்துக்குப் போயிருந்தோம். 14000 அடி உயரம்
வரை நேர்த்தியான பாதை. கார் வழுக்கிக்
கொண்டு செல்கிறது. சின்னஞ்சிறு கிராமங்களில் கூட பாதைகள் நன்றாகப் போட்டிருக்கிறார்கள். இங்கேயோ எங்கு
பார்த்தாலும் சந்திரனில் இருக்கும் க்ரேட்டர்கள் போல பள்ள மேடுகள். சமீபத்தில்
சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், மதுரை ஊர்களுக்கு காரில் சென்று வந்த
அனுபவத்தை மறக்க முடியாது. முதல் கியர், இரண்டாம் கியருக்கு காரை மாற்றி மாற்றி ஓட்டி
என் கை கால்களில் நோவு இன்னும் போகவில்லை.
பெரிய
பேரிடர் என்றிருந்தாலொழிய அங்கே மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்கிறது. பொதுவாக
எந்த வீட்டிலும் போர் கிணறு போட்டதாகக் கிடையாது. எல்லோருக்கும் அரசாங்கமே தண்ணீர்
கொடுக்கிறது. பணம் வாங்கிக் கொள்கிறார்கள். இலவசம் என்பது நம் நாட்டில்தான். அங்கே
எதுவும் இலவசம் கிடையாது. அதனால், மக்கள் உழைத்தாக வேண்டும். வேலையிலிருப்பவர்கள்
குறைந்தது 67 வயது வரை வேலை செய்தாக வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் கால்களில் நிற்கப்
பழகிக் கொள்ளவேண்டும். ஒரு நபர் 16 வயது எட்டிவிட்டால் அவரைக் காப்பாற்றும்
பொறுப்பு பெற்றோர்களுக்குக் கிடையாது. அந்த நபர் சுயமாக தன்னை காப்பாற்றிக் கொள்ள
வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கும் ஒரு பொறுப்பும் வரும். அதே போல எண்பது
வயதடைந்த பல முதியவர்கள் கூட தானே காரை ஓட்டிக்கொண்டு போய் தனக்கு வேண்டிய வேலைகளை
முடித்துக் கொள்ள வேண்டியதுதான். இதனாலெல்லாம் குடும்பத்தின் மீது அவர்களுக்கு தனி
அன்பு கிடையாது என்று அர்த்தமில்லை. அந்த அன்பை அவர்கள் வெளிப்படுத்தும் விதம்
வித்தியாசமானது. அவ்வளவுதான். விவாகரத்து வாங்கிக் கொண்ட பல தம்பதிகள்
விவாகரத்துக்குப் பிறகு ஒருவருக்கொருவர்
நட்புடன் பழகி வருகிறார்கள். (நான் ஏற்கெனவே சொன்னது போல இந்த மாதிரி
சுதந்திரங்களிலும் பல எதிர்மறை விளைவுகள் அங்கே ஏற்படுகின்றன என்பதும் உண்மைதான்)
அமெரிக்கா
செல்பவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
முதலாவது
வகை அமெரிக்காவை ஓய்வுக்காகவும் சுற்றிப் பார்க்கவும் செல்பவர்கள். பொதுவாக இந்த
வகையைச் சேர்ந்தவர்கள் கொஞ்சம் வசதி படைத்தவர்களாக இருப்பார்கள். அவர்களைப் பற்றி
அதிகம் கவலையில்லை.
இரண்டாவது
வகை வேலைக்காக அங்கே செல்பவர்கள். அல்லது அங்கேயே படித்து முடித்துவிட்டு வேலை
பார்ப்பவர்கள். இவர்களின் நாட்கள் பொதுவாக பிசியாகவே ஓடிக்கொண்டிருக்கும் – சனி,
ஞாயிறு நீங்கலாக. இங்கேயிருந்து போகும் இந்தியர்கள் பொதுவாக நல்ல வசதிகளை
அனுபவித்து சந்தோஷமாகவே வாழ்கிறார்கள்.
மூன்றாவது
வகை அங்கேயே தங்கிவிட்டவர்களின் பெற்றோர்கள். இவர்கள் அடிக்கடி தங்கள்
பிள்ளைகளுடன் சில மாதங்களைக் கழிப்பதற்காக அமெரிக்கா செல்பவர்கள். பெரும்பாலோர்
சுற்றுலாப் பயணிகள் வகைதான். ஆறு மாதம் அதிக பட்சம் அங்கே தங்கியிருக்கலாம். ஒரு
சில சொந்தக் காரணங்களுக்காக ‘க்ரீன்
கார்ட்’ அல்லது அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே வசிக்கும் ஒரு சிலர் அமெரிக்காவில்
தங்கியிருப்பது பற்றி அதிகக் குறை பட்டுக்கொள்ள முடியாது. அது அவர்கள் எடுத்த
முடிவு. இங்கேயிருந்து அடிக்கடி தங்கள் பிள்ளைகளுடன் ஒரு சில மாதங்களைக்
கழிப்பதற்காக அமெரிக்கா செல்லும் பெற்றோர்கள் பாடுதான் கொஞ்சம் திண்டாட்டம் போலத்
தோன்றுகிறது. அவர்களுக்கு ஏற்படும் பொதுவான சில சிரமங்களைத்தான் ஒரு பெரிய
பிரச்சினை போல எழுதிவிடுகிறோம்.
அவர்களுக்கு
தங்கள் குழந்தைகள் வேலைக்குச் சென்ற பிறகு வீட்டில் தனியே போரடித்துக்கொண்டு
உட்கார்ந்திருக்க வேண்டும். அவர்கள் இஷ்டம் போல எங்கும் போக முடியாது. அவர்கள்
குழந்தைகள் வார விடுமுறை நாட்களிலோ அல்லது மாலை வேளையிலோ எங்கேயோ கூட்டிச்
சென்றால்தான் உண்டு. ஆரம்ப நாட்களில் பல
இடங்களுக்குச் சுற்றிப் பார்க்கக் கூட்டிக்கொண்டு போகும்பொழுது அங்கே வாழ்க்கை
சுவாரசியமாகத்தான் இருக்கும். பல இடங்களைப் பார்த்து முடித்துவிட்ட பிறகோ அல்லது
பிள்ளைப் பேறு போன்ற நிகழ்வுகள் ஏற்பட்ட பிறகோ வெளியே போவது குறைந்து போகும். அந்த
நேரங்களில் வயதானவர்களுக்கு போரடிக்கத் துவங்கலாம். என்ன செய்வது அதுவும் ஒரு
காலத்தின் கட்டாயம்தான். அந்த மாதிரி நேரங்களில் வயதானவர்கள் தங்களை ஆரோக்கியமான நல்ல
பொழுது போக்குகளில் ஈடுபடுத்திக்கொண்டால் வாழ்க்கை போரடிக்காமல் போகும். இங்கேயோ
வயதான பல பெரியவர்கள் தங்கள் வயதான நாட்களை தொலைக்காட்சி பெட்டி முன்பு அமர்ந்தோ
அல்லது மற்ற வயதானவர்களுடன் வெட்டிப் பேச்சு பேசியோதான் பொழுதைக் கழிக்கின்றனர்
என்று தோன்றுகிறது.
கடந்த
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் குழந்தைகளை அமெரிக்காவுக்கு அனுப்பிவிட
வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள்தான் இங்கே மிக அதிகம் என்பது என் எண்ணம். ஒரு
சிலருக்கு அந்த எண்ணம் நடந்தேறியிருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு நடந்தேறவில்லை.
இந்தியாவில் இவ்வளவு வசதிகள் கூடியும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை
அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா என்று மேல் நாடுகளுக்கு அனுப்புவதையே
விரும்புகிறார்கள். அதில் அவர்களுக்கு மிகவும் பெருமையும் கூட. வாய்ப்பு
கிடைத்தால் எல்லா இளைஞர்களும் அமெரிக்கா சென்று ஒரு சில ஆண்டுகளுக்காகவாவது வேலை
பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள்தான். வெளியே காட்டிக்கொள்ளாமல்
இருக்கலாம். அல்லது அங்கே போக முடியாத சில நிர்பந்தங்கள் இருக்கலாம்.
மற்றபடி
அமெரிக்க வாழ்க்கை, இந்திய வாழ்க்கை எல்லாவற்றிலும் குறை, நிறைகள்
இருக்கின்றன. எல்லா வசதிகளையும், எல்லா நேரங்களிலும்
நாம் எதிர்பார்க்க முடியாதுதான். என்ன செய்வது. உலகம் தட்டையாகி விட்டது. மக்கள்
எல்லா இடங்களிலும் சென்று வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
கடந்த
16 ஆண்டுகளில் பல முறை அமெரிக்கா சென்று
அங்கேயே ஆறு மாதங்கள் வரை தங்கி வந்திருக்கிறேன் என்ற அனுபவத்தில் இந்தக்
கருத்துக்களை எழுதியிருக்கிறேன். அமெரிக்காவில் வசிக்கும் நம் குழந்தைகளில்
பெரும்பான்மையோர் நாம் அவர்களுடன் தங்கியிருப்பதையே விரும்புகிறார்கள். அவர்கள்
சுதந்திரத்தில் அதிகமாக மூக்கை நுழைக்காமல் முடிந்தவரை அவர்களுக்கு உதவியாக இருந்துவிட்டு
போவோமே! என்ன நஷ்டம்!
No comments:
Post a Comment