Total Pageviews

Sunday, June 29, 2014

தெரிந்ததும் தெரியாததும்

சமீபத்தில் SEVENELEMENTS THAT CHANGED THE WORLD: AN ADVENTURE OF INGENUITY AND DISCOVERY என்கிற ஆங்கிலப் புத்தகத்தைப் நான் படித்துக் கொண்டிருந்தேன். 12 ஆண்டுகளாக பிரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பெனியில் முதன்மை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த ஜான் ப்ரௌன் என்பவரால் எழுதப்பட்ட இந்த புத்தகம் இரும்பு, கரிமம் (CARBON), தங்கம், வெள்ளி, யுரேனியம், டைட்டானியம் மற்றும் கன்மம் (SILICON) என்ற ஏழு கனிமப்பொருட்கள் உலகையே மாற்றியமைத்தது எப்படி என்பது பற்றி மிக விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார்.

சிறு வயதிலிருந்தே நிறைய புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட நான் பல ஆங்கிலப் புத்தகங்களைப் படித்துப் பார்த்து வியந்திருக்கிறேன். ஏனென்றால், ஒரு புத்தகத்தை எழுதி முடிப்பதற்கு எவ்வளவு ஆராய்ச்சிகள் மேற்கொள்கிறார்கள் என்பது பல ஆங்கிலப் புத்தகங்களின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் பின் இணைப்பைப் பார்த்தாலே தெரியவரும். இப்படி ஆராய்ந்து ஒரு புத்தகத்தை எழுதி முடிப்பதற்கு பல மாதங்கள் ஆகலாம். தமிழில் அப்படி ஒரு புத்தகத்தை எழுதினால் இன்று எத்தனை பேர் படிப்பார்கள் என்பது இன்று ஒரு சவாலான கேள்வி. இன்டெர்னெட்டின் வளர்ச்சியில் ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய எதிர்மறை விளைவு புத்தகம் படிக்கும் பழக்கம் பொதுவாக எல்லா இடங்களிலும் நின்று போய்விட்டதுதான். அதிலும் முக்கியமாக, SOCIAL NETWORKING எனப்படுகிற FACEBOOK, YOUTUBE, போன்ற சமூக வளைதளங்களின் வளர்ச்சிக்குப் பிறகு பஸ் டிக்கட் அளவிற்கு மேல் எழுதினால் யாருக்கும் படிப்பதற்கு பொறுமை இருப்பதில்லை என்று பேச்சு. ஒரு பத்திரிகைக்கு கதை, கட்டுரை எழுதினால் சுமார் 500. 600 வார்த்தைகளுக்கு மேல் வேண்டாம் என்று கூறிவிடுகிறார்கள். படிப்பவர்களுக்கு அதற்கு மேல் கவனம் இருப்பதில்லையாம்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழில் கல்கண்டு என்ற பத்திரிகை வந்து கொண்டிருந்தது. திரு, தமிழ்வாணன் அவர்கள் நடத்தி வந்தார்கள். ஒரு சிறிய சினிமா பாட்டுப் புத்தகம் அளவுதான் இருக்கும். ஆனால், அந்த சிறிய புத்தகத்தில்தான் எத்தனை குட்டிக் குட்டித் தகவல்கள். INTERNET இல்லாத காலக் கட்டத்தில் வெளி நாடுகளில் பிரசுரமாகும் பல பத்திரிகைகள், செய்தித்தாள்களிலிருந்து சுவையான, பயனுள்ள, எல்லோரும் விரும்பக்கூடிய பல தகவல்களை எப்படித்தான் கல்கண்டு பத்திரிகைக்காக திரு.தமிழ்வாணன் அவர்கள் சேகரித்தாரோ, தெரியாது. அதுவும் வாரா, வாரம்.

அதன் பிறகு திரு.சுஜாதா அவர்கள் பல தொடர்கதைகளுக்கிடையே ‘கற்றதும் பெற்றதும்’ என்ற தலைப்பில் பல சுவையான தகவல்களை அவருக்கே உரியதான நகைச்சுவையுடன் எழுதி வந்தார். அதைப் போலவே திரு மதன் அவர்களும் ‘வந்தார்கள, வென்றார்கள்’ போன்ற நல்ல பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். வர, வர, தமிழ் பத்திரிகைகளில் சினிமா சம்பத்தப்பட்ட செய்திகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளிவருகிறது என்ற எண்ணத்தால் பல ஆண்டுகளாக தமிழ் பத்திரிகைகளைப் படிப்பதையும் பொதுவாக நிறுத்தி விட்டேன்.

இணையதளத்தில் இப்பொழுது WIKIPEDIA ஒரு பிரபலமான பக்கம். BRITANNICA ENCYCLOPEDIA என்கிற புத்தகத் தொகுப்பு எல்லாவிதமான தகவல்களையும் சமீப காலம் வரை கொடுத்துக்கொண்டிருந்தது. ஒரு தொகுப்பு மட்டுமே ஒரு புத்தக அலமாரி முழுவதையுமே எடுத்துக்கொண்டுவிடும். ஆனால், இந்த WIKIPEDIA பிரபலமான பிறகு ஒருவருக்கு எந்த தகவல் தேவையானாலும் இந்த இணையதளப் பக்கத்திலேயே உடனேயே பார்த்து தெரிந்துகொள்ளலாம். உங்களிடம் ஒரு தகவல் இருந்தால் அதைப் பற்றியும் இந்த WIKIPEDIA–வில் எழுதலாம் அல்லது வேறு யாரேனும் எழுதியிருந்தால் அதில் உங்கள் தகவலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

மீண்டும் விஷயத்துக்கு வருவோம்.

SEVEN ELEMENTS THAT CHANGED THE WORLD என்கிற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கும் பொழுது இப்படி பல விஷயங்களை சேகரித்து எழுத வேண்டும் என்ற எனக்குள் அடங்கிக் கிடந்த ஆசை மீண்டும் உயிர் பெற்றெழுந்தது. இரும்பைப் பற்றி எழுதும் பொழுது திரு ஆண்ட்ரூ கார்னெகி என்ற அமெரிக்க இரும்புத் தொழிலதிபரைப் பற்றி ஆசிரியர் ஜான் ப்ரௌன் எழுதிய தகவல்களைப் படித்தபொழுது, மனதுள் தீர்மானம் பண்ணிக்கொண்டேன் ‘தெரிந்ததும் தெரியாததும்’ என்கிற தலைப்பில் நானும் பல தெரிந்த விஷயங்களைப் பற்றிய தெரியாத தகவல்களைச் சேகரித்து எழுத வேண்டும் என்று. முயற்சி செய்து பார்க்கிறேன். பலரும் படிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இந்த தகவல்கள் பொதுவாக எல்லோருக்கும் பயன்படும் என்றாலும், மாணவர்களுக்கு மிகவும் பயன்படும் என்று நம்புகிறேன். இன்று தகவல்களின் உலகம். நிறைய தகவல்களைத் தெரிந்துகொள்ளும் பொழுது நமக்கும் ஆராய்ச்சியில் ஈடுபாடு உண்டாகும். ஆக்கபூர்வமான சிந்தனைகள் மனதை நிரப்பி நமக்கும் எதையாவது சாதிக்கவேண்டும் என்ற எண்ணமும் உறுதியும் உண்டாகும்.

திருநெல்வேலி டவுண் கீழ ரதவீதியில் இருந்த சிவஞான முனிவர் நூலகத்திலும், காய்கறி மார்க்கெட்டுக்கு மேல் மாடியில் இருந்த பொது நூலகத்திலும் நான் மாணவனாக இருந்த 1955 – 1967 காலங்களில் மணிக்கணக்காக நூலகம் மூடும் வரை மாலை நேரத்தை நான் செலவிட்டிருக்கிறென். புத்தகம் படிப்பதில் சந்தானம் என்கிற என்னுடைய ஜூனியர் மாணவர்  நண்பர் எனக்குப் போட்டியாளர். ஆர். வி. சுப்ரமணியம் என்ற இன்னொரு சீனியர் மாணவர் எனக்கு புத்தகம் படிப்பதில் வழிகாட்டி. (இவர் பிற்காலத்தில் ஒரு உயர்ந்த I.P.S அதிகாரியாக தமிழ் நாட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.) அன்று நிறையப் படித்தது எனக்கு இன்றும் வாழ்க்கையில் பெரிய ஊன்றுகோலாக இருக்கிறது.

எனது எழுத்துக்களை மாணவர்களுக்கு எப்படி கொண்டு சேர்ப்பது என்பதுதான் தெரியவில்லை. அந்தப் பொறுப்பை என்னுடைய குறுகிய வாசகர் வட்டத்திடமே விட்டு விடுகிறேன். இனி, இது உங்கள் குழந்தை. அதன் வளர்ச்சி உங்கள் கையில் இருக்கிறது.

“தெரிந்ததும் தெரியாததும்’ தொடர் கட்டுரைகளின் முதல் கட்டுரை திரு. ஆண்ட்ரூ கார்னெகி பற்றியதாகவே இருக்கட்டும்.


                                            .....மீண்டும் சந்திக்கலாம்.

No comments:

Post a Comment