Total Pageviews

Thursday, August 07, 2014

பெர்ஸனாலிடியை வளர்த்துக்கொள்வது எப்படி? பகுதி 6 A வெற்றிப் பாதைக்கு ஏழு வகையான பெர்ஸனாலிடிகள்

மாணவர் உலகம் என்ற மாதப் பத்திரிகையில் நான் எழுதி வெளியிட்ட கட்டுரைத் தொடரின் அடுத்த பகுதி.

பெர்ஸனாலிடிகளை பல விதமாக மனோதத்துவ நிபுணர்கள் வகைப்படுத்தியிருக்கிறார்கள் என்றாலும் நமது ஆய்வுக்கு ஏழு வகையான பெர்ஸனாலிடிகளை, ஏழு படிகளாக நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதில் முதலாவது…….


1.விவரமறிந்த, அறிவுடைய பெர்ஸனாலிடி:

நீங்கள் ஒரு பயணியா அல்லது நாடோடியா?

நீங்கள் இப்பொழுது எங்கே இருக்கிறீர்கள்? எங்கே போகவேண்டும்? எப்படிப் போகப் போகிறீர்கள்? எந்தப் பாதை? போகுமிடத்திற்கு என்னென்ன வேண்டும்? எப்படித் தயார் செய்துகொள்ளப் போகிறீர்கள்? உங்களிடம் இருப்பது என்ன? இல்லாதது என்ன?  நீங்கள் போகுமிடம் எப்படிப்பட்ட இடம்? அபாயகரமானதா? சவால்கள் நிறைந்ததா? அங்கே போவதனால் உங்களுக்கு என்ன நன்மை தீமைகள் நடக்கக் கூடும்? போகும் பாதை கடுமையானதா? உங்களுக்கு வசதிப்படுமா?

நீங்கள் ஒரு பயணியாக இருந்தால் கண்டிப்பாக மேலே சொன்னது போன்ற கேள்விகள் உங்களூக்கு எழும். அதற்குப் பதில் தெரிந்துகொண்டு தயார் நிலையில் பயணத்தில் இறங்குவீர்கள்.

ஒரு நாடோடியாக, எந்த குறிப்பிட்ட நோக்கமும் இல்லாமல் அலைந்து திரிபவராக இருந்தால் இந்தக் கேள்விகள் உங்களுக்கு எழாது.

நமது வாழ்க்கையும் இப்படித்தான்.  நாம் ஒரு நாடோடியாக இருந்தால், எதை அடைய வேண்டுமென்று  தெரியவில்லையென்றால் அல்லது அதில் குழப்பம் இருந்தால், அல்லது இப்பொழுது எப்படியிருக்கிறோம் என்பதைப் பற்றி ஒரு பிரஞ்ஞை இல்லையென்றால் வாழ்க்கை தாறுமாறாகப் போய்கொண்டிருக்கும்.

நாம் எங்கேயிருக்கிறோம், நாம் அடைய வேண்டிய இலக்கு என்ன என்று தெரிந்திருப்பது மிகவும் அவசியம். இலக்கே இல்லாதவர்க்கு வெற்றி தோல்வி ஏது? வாழ்க்கையில் வருத்தப்படுவதற்கும் என்ன இருக்கிறது. ஆனால், பொதுவாக குறிக்கோளே இல்லாமல் காலத்தை ஓட்டுபவர்கள் இறுதியில் வருத்தப்பட்டவர்களாக முடிவார்கள். நல்ல சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டோமே என்று புலம்பிக்கொள்வார்கள். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்? குறிக்கோளே இல்லாமல் புலன்கள் செல்கிற வழியிலேயே சென்றுவிட்டு பின்பு வருத்தப்படுவானேன்?

நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஒரு குறிக்கோள் வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

குறிக்கோள் வைத்துக்கொள்வதனால் ஏற்படும் நன்மைகள்:
  • .       வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படும் 
  •    திட்டமிடுவதற்கு வசதியாக இருக்கும் 
  •   போகின்ற பாதையை ஒரு சவாலாகத்தான் எடுத்துக்கொள்வோம். கடினமானதாகக் கருத மாட்டோம்.

  • குறிக்கோளை நோக்கிச் செல்லும் பயணம் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகிறது. 
  • தேவையில்லாத கவனச் சிதைவுகளை தவிர்க்கலாம். 
  • உங்களுடைய சுய மரியாதை உயரும்  
  • குறிக்கோள்களை தொடும்பொழுது முழுமையடைந்த ஒரு உணர்வு ஏற்படும்.  
  • குறிக்கோளை அடைந்த பின்னே கிடைக்கும் மகிழ்ச்சியை வேறெதற்கும் ஒப்பிட முடியாது.

ஆனால், பெரும்பாலானாவர்கள் குறிக்கோள்களை நிச்சயித்துக் கொள்வதில்லை. ஏன்?
  1. பயம்தான் முக்கியமான காரணம். இப்பொழுது இருக்குமிடத்திலுள்ள சௌகரியங்களைத் துறக்க வேண்டியிருக்குமோ என்று பயம். தெரியாததைப் பற்றிய ஒரு பயம். எதிர்காலத்தைப் பற்றிய பயம். குறிக்கோளை அடைவதில் ஒரு வேளை தோல்விடைந்து விடுவோமோ என்று பயம். ஒரு வேளை தோற்றுவிட்டால் மானபங்கம் ஏற்படுமே என்று பயம். இப்படி பல விதமாக பயப்பட்டு குறிக்கோளை நிச்சயித்துக் கொள்வதைத் தவிர்க்கிறோம் அல்லது தள்ளிப் போடுகிறோம்.
  2. நமது குறிக்கோள் என்னவென்றே தெரியாததினால் பலர் குறிக்கோளை நிச்சயித்துக் கொள்வதில்லை. தெரியாததைப் பற்றி எப்படி நிச்சயம் செய்துகொள்வது?
  3. குறிக்கோளை எப்படி நிச்சயிப்பது என்று தெரியவில்லை. யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. இதற்கென்று யாரும் வகுப்புகளை நடத்துவதில்லை.
  4. நேரமின்மை, உற்சாகமின்மை, ஊக்கமின்மை, கடந்த காலத்தில் நேர்ந்த தோல்விகளால் ஏற்பட்ட விரக்தி
  5. மெத்தனம், சோம்பேறித்தனம், சந்தேகம்
  6. மற்றவர்களின் எதிர்மறை கருத்துக்கள்…. இப்படிப் பல காரணங்களைக் கூறலாம்.

                                                                                                                          ………………….. தொடரும்


No comments:

Post a Comment