Total Pageviews

Sunday, August 31, 2014

BACK TO TENKASI: மீண்டும் தென்காசியில்

குழந்தைகளை  நிறைய படிக்கவைக்க வேண்டும், வேலைக்கு அமெரிக்காவுக்கு அனுப்பவேண்டும் என்று கனவு கண்ட பல பெற்றோர்களில் நாங்களும் ஒருவர். தற்பொழுது கடந்த பதினான்கு ஆண்டுகளாக இரண்டு குழந்தைகளுமே அமெரிக்காவில். நாங்கள் இங்கொரு காலும் அங்கொரு காலுமாக ஓட்டிக்கொண்டிருக்கிறோம். ஆகாயவிமானங்கள் லாபகராமாக ஓடுவதற்கு ஆண்டுதோறும் அமெரிக்கா செல்ல டிக்கெட் வாங்கி எங்களாலான உதவியை செய்து வருகிறோம். அங்கே இருக்கும்பொழுது இந்தியா, தென்காசி நினைப்புதான். எப்படா தென்காசி திரும்பப்போகிறோம் என்று துடிப்பு, நமக்காகக் இங்கே ஏதோ காத்துக்கொண்டிருப்பதுபோல.

இந்த ஆண்டும் மார்ச் மாதம் இத்தாலியில் ஒரு பத்து நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா சென்ற நாங்கள், இருபத்தி நாலு மணி நேரமும் ஒரே மாதிரி 74 டிகிரி ஃபாரன்ஹீட் சூட்டில் இருந்துவிட்டு 23-ஆம் தேதி, சனிக்கிழமை சென்னையில் இறங்கியவுடன் முதலில் தேடியது எங்களுடைய கைக்குட்டையைத்தான், முகத்திலும் கழுத்திலுமுள்ள வேர்வையையும் அழுக்கையும் துடைப்பதற்கு. அன்று மாலையே சென்னையைவிட்டு தென்காசிக்கு ஓடி வந்துவிட்டோம். சென்னை பிடிக்காமல்தான் சென்னையிலுள்ள தனி வீட்டை வாடகைக்குக் கொடுத்துவிட்டு, தென்காசியில் ஒரு வாடகை வீட்டை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பிடித்தோம்.

தென்காசி எவ்வளவோ மாறியிருக்கிறது. இல்லை வளர்ந்திருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவார்கள்.  இங்கு வந்த பின் ஒரு வார இடைவேளையில்  நாங்கள் பார்த்ததில் என்னென்ன மாறியிருக்கிறது என்று யோசித்தேன்      

 • வந்திறங்கிய மூன்று நான்கு நாட்களுக்கு வெயில் மதிய நேரத்தில் கொளுத்தியெடுத்தது. குற்றாலத்தில் சீசன் ஏறக்குறைய முடிந்துவிட்டதாகச் சொன்னார்கள். எங்கு பார்த்தாலும் வாகனங்கள். தென்காசி-குற்றால நெடுஞ்சாலையில் நடக்க முடியவில்லை. பல வாகனங்கள் இந்தச் சாலையை சோழவரம் ரேஸ் கோர்ஸாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு சக்கர மோட்டார் வாகனங்களுக்கு எந்த அடிப்படை விதிமுறைகளும் கிடையாது. வண்டியின் வேகம் குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். எதிரே வரும் வண்டிக்காரர்தான் பார்த்துப் போய்க்கொள்ள வேண்டும். நடைபாதையைக்கூட (அப்படி ஒன்று இருந்தால்) விட்டு வைப்பதில்லை.
 • தென்காசி பெரிய கோவிலைச் சுற்றி நான்கு ரத வீதிகளிலும் ஒரே வாகனங்கள் மயம். நடப்பதற்கும் நிற்பதற்கும் இடமில்லை. மூன்று ரத வீதிகளில் ஒரு ஆண்டுக்கு முன்னேதான் சிமெண்ட் ரோடு போட்டார்கள். இப்பொழுது பல இடங்களில் குழிகள். எப்படி என்று தெரியவில்லை. இருக்கக்கூடிய சின்னச்சின்ன இடங்களில் பல புதிய ஷோரூம்கள். எல்லாம் துணிக்கடைகள், டி.வி, நகைக் கடைகள். பணப்புழக்கத்திற்கு குறைவில்லை போலும். யானைப் பாலம் சந்திப்பில் சந்திரனில் உள்ள குழிகள் போல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான குழிகளை பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள். எது எதெற்கெல்லாமோஆண்டு விழா கொண்டாடுகிறார்கள். இந்தக் குழிகளுக்கும் கொண்டாடலாமே? இதைப் பாதுகாத்த அதிகாரிகளுக்கும், நகர சபை வார்டு கௌன்சிலர்களுக்கும், தலைவருக்கும், தற்போதைய சட்டசபை உறுப்பினருக்கும் விழா எடுத்து கௌரவிக்கலாமே? இவ்வளவுக்கும், எதிரிலேயே பழைய சட்டசபை உறுப்பினர் நிதியில் கட்டிய ஒரு பொதுக் கட்டிடம் வேறு. மூன்று ரதவீதிகளுக்கு சிமெண்டு ரோடு அமைத்த நகரசபைக்கு, தெற்கு மாசி மீது என்ன கோபமோ தெரியவில்லை. அதை மட்டும் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்கள். தென்காசி மக்களுடைய பொறுமைக்கும் ஒரு விழா எடுக்கலாம்.
 • ரயில்வே மேம்பாலம் ஒரு அசுர மலைப்பாம்பு போல பயமுறுத்துகிறது. பாலத்தில் ஏறும், இறங்கும் இடங்களில், இரண்டு சக்கிர வாகனங்களை எந்தப் பக்கம் வேண்டுமானாலும் ஓட்டிக்கொண்டு போகலாம். யாரும் கேள்வி கேட்க முடியாது. ரயில் நிலையத்திலிருந்து மேம்பாலம் முடியும் பெட்ரோல் பங்க் பக்கம் காரை ஓட்டிக்கொண்டு வந்தால், ஓட்டுபவருக்கு குறைந்தது நான்கு கண்கள் வேண்டும். எந்தப் பக்கத்திலிருந்து மோட்டர் சைக்கிள் வருமென்று சொல்ல முடியாது. மேம்பாலத்தில் போட்ட விளக்குகள் வேலை செய்யவில்லை என்று தினமலர் பேப்பரில் போட்டிருந்தார்கள். ஒரு ஆண்டுகூட நிறைந்திருக்காது என்று நினைக்கிறேன். ரயில் நிலையத்துக்கு சென்றடையும் பாலத்துக்கு மிக அருகே பாதையை, ஒரு புராதனச் சின்னமாக அறிவிக்கலாம். நம்மை ஒரு நூறு ஆண்டுகளுக்கு பின்நோக்கி எடுத்துச் செல்லும். அவ்வளவு குழிகள். ரயில் நிலையமோ புத்தம் புதியதாக மிக அருமையாக இருக்கிறது. இந்தப் பாதை மட்டும் என்ன பாவம் செய்தது என்று தெரியவில்லை.
 • புராதனச் சின்னங்களாகச் சேர்க்க தகுதி பெற்ற இன்னொரு பாதை மின்னகரிலிருந்து இலஞ்சி குமாரர் கோவில் செல்கிறது. ஒரு பாதை புதியதாகப் போட்டால் ஒரு வருடம் கூடத் தாக்குப்பிடிக்கக்கூடியதாக இல்லாமல் எப்படி செய்வது என்பதை நமது காண்டிராக்டர்களையும், இந்த வேலையை மேற்பார்வையிட்ட அதிகாரிகளிடமும்தான் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். முனைவர் பட்டத்துக்கு ஒரு ஆய்வுத் தலைப்பாகக்கூட இந்த விஷயத்தை எடுத்துக்கொள்ளலாம். இப்படி இன்னும் சில பாதைகள் ஒரு வருடத்துக்குள்ளேயே காலி. பழி மழை மேலே.
 • சென்னையில் ஆட்டோக்காரர்கள் எல்லாம் திருந்தி வருவதாகச் செய்தி. மீட்டர் போட்டுதான் ஓட்டுகிறார்கள் என்றும் கேள்வி. அவர்கள் விட்ட பழக்கம் இப்பொழுது தென்காசி போன்ற சின்ன நகரங்களுக்குப் பரவிவிட்டது போல. சென்னையிலிருந்து திரும்பி தென்காசியில் பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு ஆட்டோக்காரர் வாய் கூசாமல் எழுபது எண்பது ரூபாய் கேட்டார். ஓட்டுபவருக்கு ஒரு அலட்சியம் வேறு. மரியாதையில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.
 • ஆட்டோவெல்லாம் கட்டுப்படியாகாது என்பதனாலோ என்னவோ, மோட்டர் சைக்கிளையே ஒரு டெம்போ வண்டி போல பயன்படுத்த மக்கள் பழகிக்கொண்டுவிட்டார்கள் என்று நினைக்கிறேன். பெரிய பெரிய  நீளமான இரும்புக் கம்பிகள், குழாய்கள் எல்லாமே மோட்டார் சைக்கிளில் பின் பக்கமாக உட்கார்ந்திருப்பவர்கள் வெகு லாவகமாக தோளில் சுமந்துகொண்டு செல்கிறார்கள்.
 • தென்காசி-குற்றாலம் சாலையில் இன்னமும் மாடுகளை அதன் இஷ்டம் போல மேய்ப்பதற்கு கூட்டிக்கொண்டு போகிறார்கள். மேய்ப்பவர் பின்னால் எங்கேயோ வந்துகொண்டிருப்பார். வாகனங்கள் ஓட்டுபவர்கள் எப்படியோ இந்த மாடுகள் மீது மோதிவிடாமல் ஓட்டிச்சென்று விடுகிறார்கள். நமது ஓட்டுனர்களுக்கும் ஒரு பாராட்டு விழா எடுக்கலாம்.
 • தென்காசியில் நாங்கள் வசிக்கும் பகுதி வெறிச்சோடிக் கிடக்கிறது. பல இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்னை, பங்களூரு என்று போய்விட்டார்கள். சிலர் மேற்படிப்பிற்காக வேறு ஊர்களுக்குப் போய்விட்டார்கள். நாங்கள் வந்த புதிதில் (2006-07) இந்தத் தெரு எப்பொழுதும் கலகலவென்றிருக்கும். பல சிறுவர்களும், சிறுமிகளும் மாலையில் தெருவில் விளையாடிக்கொண்டிருப்பார்கள். நாங்கள் இங்கு வந்ததிலிருந்து இந்த இளைஞர்கள்தான் எங்களுக்கு நண்பர்களாகவும் பக்கபலமாகவும் இருந்தார்கள். இப்பொழுது ஒரு கையொடிந்தது போலத் தோன்றுகிறது. மற்ற சிறுவர்கள் இருக்குமிடம் தெரியவில்லை. வினாயகர் சதுர்த்திக்கு எல்லோரும் வந்திருக்கிறார்கள். அவர்களை மீண்டும் பார்த்துப் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே சமயம், அவர்களும். அவரவர்கள் வாழ்க்கையில் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் மனதுக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது.
 • இன்னுமொரு CBSE  பள்ளி திறந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். மகிழ்ச்சி. கல்விக்கு மிகப் பெரிய முக்கியமான ஒரு நகரமாக தென்காசியும் அதன் சுற்று வட்டாரமும் வளர்ந்து வருவது ஒரு நல்ல சேதிதான். அறிவையும் திறமைகளையும் வளர்க்கச் சொல்லிக்கொடுக்கும் அதே நேரத்தில் குழந்தைகளுடைய மனப்பான்மையையும் சரியாக வளர்க்க இந்தப் பள்ளிகள் உதவி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
 • வடை சுடும் கடைகள் அமோகமாக விற்பனை செய்து வருகின்றன. வினாயகா மெஸ்ஸில் எல்லா உணவுக்கும் விலையை தாராளமாகக் கூட்டி விட்டார்கள். என்ன செய்வது? ஆறு மாதம் கழித்து  நான் சாப்பாட்டுக்கு பச்சரிசி வாங்கப் போனால், நல்ல அரிசி கிலோவுக்கு ஐம்பத்தேழு ரூபாய் விலை சொல்கிறார் கடைக்காரர். ஒரு பெரிய நோட்டு எடுத்துக்கொண்டு போனால் ஒரு சிறிய பையில் காய்கறி வாங்கிக்கொண்டு வர முடிகிறது. அதுவும் இரண்டு நாட்களுக்குத்தான் வருகிறது.
 • இரண்டு மூன்று அரசு அலுவலகங்களுக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரசு அதிகாரிகள் உதவும் தன்மையோடு நன்றாகவே நடந்துகொண்டார்கள்.
 • ஒரு பொது நல வழக்கில் உயர்நீதி மன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்புக்குப் பிறகு, குற்றால அருவிகள் சுற்றியுள்ள பகுதிகள் முன்னைவிட சுத்தமாக இருப்பதாகப் பேச்சு. இன்னும் போய் பார்க்க முடியவில்லை.
 • தென்காசி வளர்ந்து வரும் வியாபரத்தலமாகவும் கல்வி மையமாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. விரைவில் ஒரு மாவட்டத் தலைமையகமாக மாறக்கூடும் என்று பேச்சு. விளை நிலங்கள் எல்லாம் கட்டிடங்களுக்காக விற்பனயாகிக் கொண்டிருக்கின்றன. ஆண்டு முழுவதும் வீசிக்கொண்டிருந்த காற்றைக் காணோம். (கடந்த இரண்டு நாட்களாக மழை. அதனால் குளுகுளுவென்றிருக்கிறது) பல பசுமையான இடங்களையும் காணோம்.  

எப்படியிருந்தாலும்,………………………..


தென்காசி தென்காசிதான். குற்றாலம் குற்றாலம்தான், செங்கோட்டை செங்கோட்டைதான். தென்காசியே உன்னை நான் நேசிக்கிறேன். ஆராதிக்கிறேன். மீண்டும் இங்கு திரும்பி வந்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சிதான். அவலங்களும் வாழ்க்கையில் ஒரு பகுதிதான் என்பதை ஏற்றுக்கொண்டு உன் அழகை மட்டும் பார்த்து வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக்கொண்டு வருகிறேன். எங்களுக்கு ஒரு இடம் கொடுத்ததற்கு நன்றி.

No comments:

Post a Comment