Total Pageviews

Wednesday, December 03, 2014

இரு மாறுபட்ட அனுபவங்கள்

எனக்கு காது கேட்கும் திறன் குறைவாக இருந்ததால்  ஹியரின் எய்ட் (Hearing Aid) வைத்துக்கொள்ள சென்னை பூந்தமல்லி ஹைரோடிலுள்ள ஒரு பிரபல காது, மூக்கு, மற்றும் தொண்டை நிபுணரின் மருத்துவ மனையை தென்காசியிலிருந்து தொடர்பு கொண்டபோது வெள்ளிக்கிழமை காலை எட்டரை மணிக்கு வரச்சொன்னார்கள்.  

ஒரு தனியார் பேருந்தில் அவசரமாக டிக்கெட் வாங்கிக்கொண்டு தென்காசியிலிருந்து வியாழன் மாலை ஆறு மணிக்குக் கிளம்பி சென்னை வந்தபோது காலை ஏழேகால் மணி. வழியில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பார்சல் லோடு அதிகமாக ஏற்றிக்கொண்தில் ஒரு முக்கால் மணி நேரம் வீணானது. அதிக லோடு ஏற்றியதாலோ என்னவோ பேருந்தும் மெதுவாகவே ஊர்ந்தது.  சென்னையில் அவசர அவசரமாக குளித்து ஒரு ஆட்டோ பிடித்து காலை நேர சென்னையின் டிராஃப்பிக்கின் ஊடே பறந்து சென்றேன். மருத்துவ மனை இருக்கும் சாலை ஒரு வழிப்பாதை. இருக்குமிடமோ தெரியவில்லை. உத்தேசமாக கொடுக்கப்பட்ட ஒரு லக்கை மனதில் வைத்துக்கொண்டு விரைந்தேன்.

மணி 8.40. மருத்துவ மனையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மருத்துவ மனையை என் செல் ஃபோனில் தொடர்பு கொண்டேன். வெகு நேரம் மணி அடித்தது. யாரும் எடுக்கவில்லை. ஆட்டோக்காரர் ‘’ஒரு வழிப் பாதை, இடத்தை தவற விட்டால் இன்னும் பெரிய சுற்று சுற்றவேண்டும்என்று. எரிச்சல் பட்டுக்கொண்டார். ஒரு வழியாக மருத்துவ மனையைக் கண்டுபிடித்தோம்.

வரவேற்பில் உட்கார்ந்திருந்தவர்கள் மிக இறுக்கமாக இருப்பது போலத் தோன்றியது. யாரிடமும் ஒரு சிறிய புன்முறுவல் கூட இல்லை. வரவேற்பில் அப்படி ஒன்றும் கூட்டம் இன்னும்  சேரவில்லை. ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண்மணியிடம், ‘காலை எட்டரை மணிக்கு என்னை வரச்சொல்லி விட்டு, மருத்துவ மனையை எட்டு நாற்பதுக்குக்கூட தொடர்பு கொள்ள முடியவில்லையே, ஏன்என்று குறை பட்டுக்கொண்டேன். அந்தப் பெண்மணி பொறுப்பில்லாமல் ஏதோ ஒரு பதிலைக் கூறினாள்.

ஒரு ஜூனியர் டாக்டர் என்னிடம் விவரங்களைக் கேட்டுக்கொண்டார். நான் சர்க்கரை நோய் உள்ளவன் என்பதால் என்னுடைய பழைய ரிப்போர்ட்டுகளையெல்லாம் எடுத்துக் காட்டினேன். எல்லாம் பார்த்து விட்டு, விட்டுப்போன பல ரத்தப் பரிசோதனை, காது, மூக்கு எக்ஸ்ரே, ஆடியோகிராம் பரிசோதனை எல்லாவற்றிற்கும் எழுதிக்கொடுத்தார். சுமார் இரண்டாயிரத்து முன்னூறு ரூபாய்க்கு பில்.

எல்லா பரிசோதனைகளையும் முடித்த பின்பு பெரிய டாக்டரைப் பார்க்க என்னைக் கூப்பிட்டார்கள். மிகவும் பிஸியான டாக்டர் என்றுதான் தோன்றியது. ஜூனியர் டாக்டர் பரிசோதித்துப் பார்த்தது போலவே இவரும் காது, மூக்கு, தொண்டையை பரிசோதனை செய்தார். என்னுடைய எக்ஸ்ரே படங்களை திரையில் ஒரு நர்ஸ் மாட்டினார். எல்லாம் இரண்டு, மூன்று நிமிடங்கள்தான். “உங்களுக்கு HEARING AID பொருத்த வேண்டும். மருந்தினால் உங்கள் குறையை சரி செய்ய முடியாது. மேல் மாடியிலுள்ள HEARING AID டிவிஷனில் போய் பேசிவிட்டு வாருங்கள்.’. என்றார். என்னுடைய பல ரிப்போர்ட்டுகள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

இவ்வளவு செலவு செய்து வெகு தொலைவிலிருந்து வந்த எனக்கு மிகப் பெரிய ஏமாற்றம். ஒரு ஜூனியர் டாக்டரிடம் அனுப்பியிருந்தால் கூட பரிசோதனை ரிப்போர்ட்டுகள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி கொஞ்சமாவது சொல்லியிருப்பார் என்று நம்புகிறேன். சீனியர் டாக்டர் அறையிலிருந்து நான் வெளியே வருவதற்குள்ளேயே இன்னொரு நோயாளியை உள்ளே உட்கார வைத்து விட்டார்கள்.

பிரபலமான ஒரு மருத்துவ மனையில் ஓரு சீனியர் டாக்டருக்கு ஒரு நோயாளியுடன் ஒரு ஐந்து பத்து நிமிடங்கள் கூடப் பேச நேரமில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயமாகத் தோன்றியது. எதற்காக இத்தனை சோதனைகள் செய்தார்கள் என்று எனக்குப் புரியவைக்கவில்லை. சென்னையில் பல இடங்களில் ஆடியோகிராம் பரிசோதனை மட்டும் குறைந்த செலவில் அல்லது செலவில்லாமல் செய்து கொடுக்கிறார்கள். இன்னொரு ஜூனியர் டாக்டர் வைட்டமின் மருந்துகளை எழுதிக்கொடுத்தாள். ஆனால், HEARING AID டிவிஷனில் இருந்த ஆடியாலோஜிஸ்ட் என்னுடைய ஆடியோகிராம் ரிப்போர்ட் என்ன சொல்கிறது என்பதை விவரமாக எடுத்துரைத்தாள். அவளுக்கு நன்றி சொன்னேன். அவர் ஒருவர் தான் ஒரு நோயாளியை மதித்து புன்சிரிப்புடன் தனது வேலையை முழுமையாக செய்தாள் என்று தோன்றியது.

அமெரிக்காவுக்கு பல முறை போய் வந்திருக்கிறேன். அங்கே எங்கு சென்றாலும்கடையோ, மருத்துவ மனையோ, - வாடிக்கையாளர்களைக் கையாளும் விதமே தனி. எப்பொழுதும் அவர்கள் முகத்தில் ஒரு புன் சிரிப்பு, வாடிக்கையாளரை நிதானப்படுத்துவது, அவரது நலனை விசாரிப்பது என்பதெல்லாம் உண்மையில் அனுபவித்துப் பார்க்க வேண்டும். இங்கு நமது ஊரில் டாக்டர்களுக்கு நோயாளிகளைக் கவனிப்பதற்கு நேரமில்லை. எனக்குத் தெரிந்து தென்காசியில் கூட வெளியூரிலிருந்து பல மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைக்கு வருகிறார்கள். மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் குறைந்தது நூறு நோயாளிகளைப் பார்க்கிறார்கள். ஒரு நோயாளிக்கு ஒன்றிலிருந்து இரண்டு நிமிடம்தான்.

முடிவில் எனக்கு மிஞ்சியது ஏமாற்றமும், வருத்தமும் தான். அதனால் HEARING AID அந்த மருத்துவ மனையில் வாங்கக்கூடாது என்று தீர்மானித்துவிட்டேன். மேலும் விலையுயர்ந்த மாடல்களை மட்டுமே அவர்கள் விற்பார்கள் போல. விலையைக் கேட்டால் ஷாக் அடிக்கும். மிக சிறப்பாக விளக்கிச் சொன்ன அந்த ஆடியாலோஜிஸ்ட் என்னை மன்னிக்கட்டும்.

அதே நாளில் என் கண்பார்வை பரிசோதனையும் செய்துகொள்வதற்கு மாலை நாலு மணிக்கு வளசரவாக்கத்திலுள்ள இன்னொரு பிரபல கண் மருத்துவ மனைக்குச் சென்றேன்.

இங்கே எல்லாம் முற்றிலும் வேறுபாடு. சீருடையணிந்த பணிப்பெண்கள் வரவேற்புப் பகுதியில்புன்சிரிப்புடன் வரவேற்றுமூத்த குடிமக்களுக்கு இங்கு முதல் மருத்துவப் பரிசோதனை இலவசமாக அளிக்கிறோம்என்று கூறினார். வரவேற்பில் பதிவு செய்துகொண்டு முடிவில் மருத்துவரைப் பார்த்து விட்டு வெளியே வரும் வரை, ராஜ உபசாரம்தான். இடையில்உங்களுக்கு காஃப்பி வேண்டுமா?” என்று கூட இன்னொரு பணிப்பெண் கேட்டாள். படிப்பதற்கு கண்ணாடிக்காக பரிசோதனை செய்த பொழுது பரிசோதித்த நிபுணர் கொடுத்த சீட்டுடன் எனக்கு உடன்பாடில்லை என்பதால் ஒரு பெரிய டாக்டரே மீண்டும் என்னை பரிசோதித்தார். மருத்துவ மனையை விட்டு வெளியே வரும்பொழுது ஒரு பணிப்பெண்ணிடம்உங்களுக்கு மிக அதிகமான ஊதியம் இருப்பதற்கு வாய்ப்பில்லை. இருந்தும் நீங்களெல்லாம் இவ்வளவு பணிவாக நோயாளிகளுக்கு பணி செய்கிறீர்களே, எப்படி?” என்று கேட்டேன். அவர்கள் சிரித்துக் கொண்டார்கள். சீனியர் டாக்டரிடமும், அந்தப் பணிபெண்ணிடமும் என்னுடைய பாராட்டுதலைத் தெரிவித்து விட்டு மிக மகிழ்ச்சியுடன் வெளியே வந்தேன். என் புதிய கண்ணாடிக்கும் அந்த மருத்துவ மனையிலேயே அமைந்திருந்த கடையில் ஆர்டரும் கொடுத்து விட்டேன்.


ஒரே நாளில் இரண்டு முற்றிலும் மாறுபட்ட அனுபவங்கள். ருத்துவ மனைகள் எவ்வளவு வேறுபடுகின்றன.

No comments:

Post a Comment